இங்கு வழங்கப்பட்ட ஏழு விரிவுரைகளும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் தொல்சீர் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு மைல்கல்லைக் குறிக்கின்றன.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFIஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய முதல் சர்வதேச கருத்தரங்கு, ஜனவரி 3 முதல் 10, 1998 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைகால பள்ளியில் வழங்கப்பட்டது.
இந்த விரிவுரைகளுக்கு வழிகாட்டும் மைய முன்மாதிரியாக இருந்தது என்னவென்றால், அன்றைய எரியும் பிரச்சினைகளுக்கு ஒரு பதில் - வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஆழமான பொருளாதார நெருக்கடி, சமூகத்தின் கலாச்சார மட்டத்தின் வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் அரசியல் முடக்கம் ஆகியவற்றை ஆராய்வதோடும்,20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மூலோபாய படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதோடும் பிணைக்கப்பட்டிருந்ததாகும்.
ICFI இன் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ரஷ்ய மார்க்சிச வரலாற்றாசிரியர் பேராசிரியர் வாடிம் ரோகோவின் ஆகியோரால் எட்டு நாட்களுக்கு மேலாக வழங்கப்பட்ட விரிவுரைகள் நீடித்த தத்துவார்த்த வேலைகளின் தயாரிப்பு மட்டுமல்ல. அவை ஆர்வத்தை தூண்டுபவை, நுண்ணறிவானவை,உண்மையை வெளிக்கொணர்பவை மற்றும் சிந்தனையைத் தூண்டுபவை.
ஒவ்வொரு விளக்கவுரையும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் தேசியவாத இயக்கங்களின் பாரிய காட்டிக்கொடுப்புகளுக்கு மாற்றீடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது: லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் மேற்கொள்ளப்பட்ட உண்மையான மார்க்சிசத்திற்கான போராட்டமாகும்.
மார்க்சிசத்தின் வருகையுடன், மனிதனுக்கும் அவனது சொந்த வரலாறுக்குமான தொடர்பு ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளானது. மனிதன் அவனது சிந்தனையையும் சமூகப்பொருளாதார வரையறைகளில் அவனது நடவடிக்கைகளையும் நனவுபூர்வமாக விளங்கப்படுத்துவதற்கும், மற்றும், அவ்விதத்தில், சங்கிலி தொடர் போன்ற வரலாற்று காரண காரியத்திற்குள் அவனது சொந்த நடவடிக்கையை துல்லியமாக கண்டறிவதற்கும் தகைமையை பெற்றான்.
1890 களில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி நபராக இருந்த எட்வார்ட் பேர்ன்ஸ்டைன், முதலாளித்துவம் சரிவு அல்லது சமூக பேரழிவிற்கு வழிவகுக்கவில்லை என்றும், தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கத்தால் மாற்றப்படுவதற்குப் பதிலாக, படிப்படியாக சீர்திருத்தப்படலாம் என்றும் வாதிட்டார். சீர்திருத்தம் மற்றும் புரட்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவாதம் 100 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சோவியத் யூனியனுக்கும் இவ்வரசுகளுக்குமிடையே அவற்றின் தோற்றம் தொடர்பான முக்கிய வித்தியாசம் இருந்தது. சோவியத் யூனியன் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் உருவாக்கப்பட்டது. இது பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டது. கிழக்கைரோப்பிய நாடுகள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு நேரடித் தலையீடும் இல்லாததோடு தொழிலாள வர்க்கம் மோசமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்குள் தோன்றின.
தொழிலாள வர்க்கத்தின் நனவான பங்கேற்பு இல்லாமல் சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க முடியும், ஒரு தொழிலாளர் அரசு நிறுவப்பட்ட முடியும் என்பதற்கான உறுதிப்பாடாக, சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதையாக காஸ்ட்ரோயிசம் முன்வைக்கப்பட்டது, அவர்களில் சிலர் இன்னும் முன்வைக்கின்றனர்.
தொழிற்சங்கங்கள் 'தொழிலாளர் அமைப்புகள்' தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?” என்பதே ஆகும்.