அத்தியாயம் 1
கட்சித் தலைமுறைகளின் பிரச்சினை
மாஸ்கோவில் நடைபெற்ற விவாதங்களின்போது ஏற்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றில், கட்சி ஜனநாயகம் பற்றிய பிரச்சினை தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகள்,தனிப்பட்ட தாக்குதல்கள் முதலியவை தொடர்பான விவாதங்களால் சிக்கலடைவதாக புகார்கூறப்பட்டது. இந்த புகார் ஒரு சிறிய மனத்தளவிலான குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவுகள் என்ற இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகும். கட்சி உறுப்பினர்கள் பற்றி ஆராயாமல்,கட்சி ஜனநாயகத்தின் பிரச்சனையைப்பற்றி தற்போது வலியுறுத்துவது சமூகப் பார்வை நிலைப்பாட்டிலிருந்தும், வயது, அரசியல் நிலைப்பாடு போன்றவற்றில் இருந்து பார்த்தாலும் இப்பிரச்சனையை வெற்றிடத்தில் கரைப்பது போலாகிவிடும். முதலாவதாக கட்சியின் ஜனநாயக பிரச்சினையே தலைமுறைகளுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றிய பிரச்சினை பற்றி எழுந்தது தற்செயலானது அல்ல. அது எமது கட்சியின் முழு வளர்ச்சியின் தர்க்கரீதியான விளைவாகும். அதன் வரலாறு முறையாக நான்கு காலகட்டங்களாக பிரிக்கப்படலாம்:
A) வரலாற்றில் ஒரே ஒரு தடவை நடந்துள்ள, அக்டோபருக்கான தயாரிப்பிற்கு முந்தைய 25ஆண்டுகள்;
B) அக்டோபர்;
C) அக்டோபரைத் தொடர்ந்த காலகட்டம்; மற்றும்
D) புதிய பாதை, அதாவது, இப்பொழுது நாம் நுழைந்துகொண்டிருக்கும் காலம்
அக்டோபருக்கு முந்தைய காலமானது, பெரும் செழிப்பையும், பன்முகச் சிக்கலையும், கடந்துவந்த காலத்தில் மாறுபட்ட கட்டங்களை கொண்டிருந்தபோதிலும்கூட, அது ஒரு தயாரிப்புக்காலம் மட்டும் தான் என்பது இப்பொழுது உணரப்பட்டுள்ளது. தத்துவத்தையும் கட்சியின் அமைப்பையும், அதன் அங்கத்துவர்களையும் பற்றியும் பரிசோதித்துக் கொள்வதை அக்டோபர் சாத்தியமாக்கியது. அக்டோபர் என்று கூறும்போது, அதிகாரத்திற்கான போராட்டத்தின் மிகக் கடுமையான காலகட்டம் என்று நாம் அறிகிறோம்; இது ஏறத்தாழ லெனினுடைய "ஏப்ரல் ஆய்வுரைகள்" [1] காலத்தில் தொடங்கி அரச இயந்திரத்தை உண்மையில் கைப்பற்றியதில் முடிந்தது. ஒரு சில மாதங்கள்தான் இது நீடித்திருந்தபோதிலும், பல ஆண்டுகளாலும், தசாப்தங்களாலும் அளவிடப்படும் தயாரிப்பு காலத்தினை விட உள்ளடக்கத்தில் இது முக்கியத்துவம் குறைந்தது அன்று. கட்சியின் முக்கிய கடந்தகாலத்தை பற்றி மிகப் பிரத்தியேகமான முறையில் (தன்மையில்), உண்மையான மதிப்பீட்டை செய்ய அக்டோபர் நமக்குக் கொடுத்ததோடு மட்டுமின்றி, அதுவே வருங்கால அனுபவத்திற்கு ஓர் மூல ஊற்றுமானது. அக்டோபருக்கு ஊடாகத்தான் அக்டோபருக்கு முந்தைய கட்சி முதல் தடவையாக தன்னுடைய உண்மையான தகுதியை மதிப்பீடு செய்ய முடிந்தது.
அதிகாரத்தை வெற்றிகொண்டதை தொடர்ந்து ஒரு விரைவானதும் மற்றும் அசாதாரணமானது எனக்கூடக் கூறக்கூடிய வளர்ச்சியை கட்சி அடைந்தது. கட்சி ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல், குறைந்த நனவுடைய தொழிலாளர்களை மட்டும் அல்லாமல், அதன் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்ட சில கூறுபாடுகளைக்கூட, அதிகாரிகள், தம் தொழில் முன்னேற்றத்தை நாட்டமாக கொண்டவர்களையும் மற்றும் அரசியலில் தங்கி பிழைப்பவர்களையும் ஈர்த்தது. இந்த பெரும் குழப்ப காலத்தில், கட்சி தன்னுடைய போல்ஷிவிக் தன்மையை, அக்டோபரில் பரிசோதனைக்குட்பட்டிருந்த பழைய காப்பாளர்களின் (Old Guard) உட்சர்வாதிகாரத்தினால்தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. அநேகமாக அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும், புதிய உறுப்பினர்களால் சவாலுக்குட்படுத்தப்படாமல் பழைய தலைமுறை தலைமை ஏற்கப்பட்டிருந்தது; தொழிலாள வர்க்க உறுப்பினர்களால் மட்டுமல்லாமல், அந்நியமான பிரிவுகள் கூட இதில் அடங்கும். அதிகாரத்தில் உயரவேண்டும் என்று கருதியவர்கள், இந்த பணிந்து நிற்கும் வகையை பயன்படுத்துவதானது கட்சியில் தங்களுடைய நிலைப்பாட்டை நிறுவிக்கொள்ள சிறந்ததாக நினைத்தனர். ஆனால் அவர்கள் தப்புக்கணக்குத்தான் போட்டனர். மிகக்கடுமையான முறையில் அதன் சொந்த அணிகளில் களையெடுப்பு செய்ததன் மூலம் கட்சி அத்தகையவர்களை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டது. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது: ஆனால் அதன் நனவு பெருகியது. தானே சோதித்துப்பார்த்துக் கொள்ளல் என்றும்கூட சொல்லலாம், இந்த களையெடுத்தல், அக்டோபருக்கு பிந்தைய கட்சியை முதல் முதலாக அரை மில்லியன் மக்களால் கூட்டாக தலைமை தாங்குவதை உணரவைத்து, அதன் பணி வெறுமே பழைய காப்பாளர்களால் வழிநடத்தப்படுதல் என்றுமட்டுமில்லாமல், கொள்கை பிரச்சினைகளின் அடிப்படைகளை ஆராய்ந்து தானே முடிவெடுக்கும் தன்மையையும் உடையது என்று உணர்த்தியது. இந்த அர்த்தத்தில் களையெடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய காலகட்டம், கட்சியின் வாழ்வில் இப்பொழுது வெளிப்படுத்தப்படும் ஆழமான மாற்றத்திற்கு தயார்செய்தலாக இருந்தன, அவ்வாறு இருந்ததால், அம்மாற்றம் வரலாற்றில் "ஒரு புதிய பாதை" என்ற பெயரில் அழைக்கப்படக்கூடும்
ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயம் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்: இப்பொழுதுள்ள கருத்து வேறுபாடுகள், இடர்பாடுகள் ஆகியவற்றின் சாரம்சம் "செயலாளர்கள்" சிலவற்றில் தமக்குமீறிய முறையில் நடந்துள்ளனர், அவர்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற உண்மையில் அல்ல; மாறாக கட்சியே முழுமையாக ஓர் உயர்ந்த வரலாற்றுக் கட்டத்தை நோக்கி செல்லவுள்ளது. கம்யூனிஸ்டுகளின் பெரும்பாலானவர்கள் தலைவர்களுக்கு கிட்டத்தட்ட கூறுவது என்னவென்றால்: "அக்டோபருக்கு முந்தைய அனுபவத்தை தோழர்களாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள்; அது எங்களில் பெரும்பாலானோருக்கு கிடையாது; ஆனால் உங்கள் தலைமையின் கீழ் அக்டோபருக்கு பின்னர் நாங்கள் மிகப்பாரிய அனுபவத்தை பெற்றுள்ளோம்; அது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பெருகி வருகிறது. நாங்கள் உங்களால் வழிநடத்தப்படுவதை விரும்புகிறோம் என்பது மட்டுமில்லாமல் உங்களுடன் சேர்ந்து வர்க்கத்தின் தலைமையில் பங்கு பெறவும் விரும்புகிறோம். கட்சி உறுப்பினர்களுடைய உரிமை என்பதால் மட்டும் நாங்கள் அதை விரும்பவில்லை; தொழிலாள வர்க்கம் முழுவதற்குமே அது முற்றுமுழுதாக அவசியம் என்பதால் விரும்புகிறோம். எங்களுடைய ஓரளவு அனுபவம் இல்லாவிடின், --இந்த அனுபவம் தலைமை மட்டத்தில் கருத்திற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது எங்களாலேயே கட்சியின் வாழ்க்கையிலும் அறிமுகப்படுத்தப்படவேண்டும், முன்னணிக் கட்சி அமைப்பானது அதிகாரத்துவ முறையில் வளர்ந்துகொண்டிருக்கிறது, கீழ்மட்ட அணியிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் கட்சியில் இல்லாதவர்களை எதிர்கொள்ளும்போது கருத்தியல் ரீதியாக போதியளவு ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறோம் என எங்களாலேயே உணரமுடியவில்லை." நான் குறிப்பிட்டபடி தற்போதைய மாற்றம் இதற்கு முந்தைய ஒட்டுமொத்த பரிணாமத்தின் விளைவாகும். முதல் பார்வையில் புலப்படாவிட்டாலும், நீண்டகாலமாகவே கட்சியின் வாழ்வினதும், நனவினதும் மூலக்கூற்று இயக்கப்போக்கு (Molecular Processes) நீண்டகால தயாரிப்பில் இருந்து வருகின்றன. சந்தை நெருக்கடி விமர்சனரீதியான சிந்தனைக்கு வலுவான ஊக்கத்தை கொடுத்தது. ஜேர்மனியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய அணுகுமுறை கட்சிக்கு ஒரு அதிர்வை கொடுத்தது. சரியாக இந்தக் கணத்தில்தான் அது கட்சி குறிப்பிடத்தக்க இரு தட்டுக்களாக வாழ்வது, அதாவது இரு அடுக்குகள் இருப்பது வெளிப்பட்டது: ஒன்று தீர்மானங்களை முடிவெடுக்கும் மேல் அடுக்கு, மற்றையது அத்தீர்மானங்களை மட்டும் அறிந்துகொள்ளும் கீழ்த்தட்டு என்பவையே அவை. ஆயினும்கூட, கட்சி உள்ளமைப்பு பற்றிய விமர்சனரீதியான மீள்பார்வை, ஜேர்மனியில் உடனடி பலப்பரீட்சையில் என்ன நிகழுமோ என்ற கவலைமிகுந்த எதிர்பார்ப்பால் ஒத்திப்போடப்பட்டது. அந்த பலப்பரீட்சை விஷயங்களின் சக்தியால் தாமதப்படும் என்று ஆனபின்னர், கட்சி "புதிய பாதை" பிரச்சினையை அன்றாட நிகழ்ச்சிநிரலில் சேர்க்க வேண்டியதாயிற்று.
வரலாற்றில் அடிக்கடி நிகழ்வதுபோல், இந்த கடைசி மாதங்களில்தான் "பழைய பாதை" மிகவும் எதிர்மாறான சகித்துக்கொள்ளமுடியாத தனித்தன்மைகளை துல்லியமாக வெளிக்காட்டியது: கட்சி உட்குழுவாதம், அதிகாரத்துவ சுயதிருப்தி, கட்சியினரின் உணர்வுகளை, கருத்துக்களையும், தேவைகளையும் முற்றிலும் புறக்கணித்தல் என்பவையே அவை. அதிகாரத்துவ எதிர்ப்பு தன்மையில் இருந்து, அது ஆரம்பத்தில் இருந்தே உள்கட்சி ஆட்சி அமைப்பு பற்றிய முக்கிய விமர்சனரீதியான மீள்பார்வையை அன்றாட நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவதற்கான தொடக்க முயற்சியை ஒரு விரோதப்போக்குடைய வன்முறையால் நிராகரித்தது. இதன் பொருள் அமைப்பு முற்றிலும் அதிகாரத்துவ கூறுபாடுகளேயே கொண்டிருந்தது என்றோ அல்லது உறுதியான, திருத்தமுடியாத அதிகாரத்துவத்தினரை கொண்டிருந்ததோ என்று ஆகாது. அப்படிப்பட்ட தன்மை இல்லை! இந்த முக்கிய காலகட்டத்தின் பொருளை அவர்கள் நன்கு உணர்ந்து பெரும்பான்மையான அமைப்பினருக்கு பிழைகளை எப்படி கைவிடவேண்டும் என்பதை தொழிலாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதை நன்கு படித்துக்கொள்வதற்கான நிலையை அவர்களுக்கு உருவாக்கும். அப்பொழுதைய நெருக்கடியில் இத்தகைய கருத்தியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான மறுகுழுவமைவு, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் கீழ்மட்ட அணியினருக்கும் அமைப்பிற்கும் ஆரோக்கியமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். ஆனால் பிந்தையவற்றில் தற்போதைய நெருக்கடியின் நுழைவாயிலில் அதிகாரத்துவம் மிகக்கூடுதலான, ஆபத்து தரக்கூடிய வளர்ச்சியடைந்துள்ளதாக தோன்றுகின்றது. அதுதான் கட்சியினுள் தற்போதைய கருத்தியல் மறுகுழுவமைவு நியாயமான அச்சங்களை விளைவிக்கும் தன்மையை கொண்ட கூர்மையான பண்பை கொடுக்கிறது.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் அமைப்பில் அதிகாரத்துவமயமாக்கல், குழுக்களின் மற்றும் செயலாளர்களின் அதிக அதிகாரம், என்று குறிப்பிடுதலே மத்திய, உள்ளூர் அமைப்புக்களில் இருந்த "பழைய பாதை"யின் பொறுப்பான பிரதிநிதிகளால் தோள்களை குலுக்கி அல்லது கோபமான மறுப்பு என்ற வகையில் எதிர்கொள்ளப்பட்டது என்று கூறுவது போதும். பதவி நியமனம் ஒரு அமைப்பு முறையாகிவிட்டதா? முற்றிலும் கற்பனையானது! சம்பிரதாயவாதம், அதிகாரத்துவவாதம்? வெறும் புனையுரைகள், எதிர்ப்புக் கூறுதலில் களிப்படையவேண்டும் என்பதற்காக எழுந்துள்ள எதிர்ப்பு, என்றல்லாம் கூறப்பட்டது. இந்த தோழர்கள், எவ்வளவு உண்மையாக இருந்தாலும், தாங்கள் பிரதிபலிக்கும் அதிகாரத்துவ ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. அடிமட்ட தொண்டர்களின் அழுத்தத்தின்பேரில்தான், சிறிது சிறிதாக தாங்கள் அதிகாரத்துவத்தின் வெளிப்பாடுகளாக உள்ளோம் என்பதை அறியத் தலைப்பட்டனர்; ஆனால் அதுவும் கூட அமைப்பின் வெளி எல்லையில், ஏதோ ஒரு சில மாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் நடைமுறையின் நேர்கோட்டில் இருந்து சற்றி விலகிய முறையில் அவ்வாறு இருக்கலாம் என்று கருதினர். அவர்களை பொறுத்தவரையில், அதிகாரத்துவம் என்பது போர்க்காலத்தின் மிச்சசொச்சமாகும். அதாவது மறைந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒரு நிகழ்வுப்போக்கு, அது அவ்வளவு விரைவில் இன்னும் மறையவில்லை என்று கருதினர். விஷயங்களை இவ்வாறு அணுகுவதும், இந்த விளக்கமும் எவ்வளவு தவறானவை என்பதைக்கூறத் தேவையில்லை. அதிகாரத்துவம் சில மாகாண அமைப்புக்களில் உள்ள தற்செயலான போக்கு அல்ல; அது ஒரு பொது நிகழ்வுப்போக்காகத்தான் இருந்தது. அது ஒன்றும் மத்திய அமைப்பிற்கு வட்டாரத்தில் இருந்து மாவட்ட அமைப்பு மூலம் பரவி வரவில்லை; மாறாக மத்திய அமைப்பில் இருந்து மாவட்ட அமைப்பு மூலம் வட்டாரங்களுக்கு பரவியதாகும். அது ஒன்றும் போர்க்காலத்தின் "மிச்சசொச்சம்" அல்ல; கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுசேர்ந்திருந்த நிர்வாக நடைமுறை வழிவகைகள் கட்சிக்கு மாற்றப்பட்டதின் விளைவுதான் அது. சில நேரங்களில் அது மிகைப்படுத்தப்பட்ட வடிவங்களாக கருதப்பட்டாலும், சமாதானகாலத்தில் வளர்ந்துள்ள அதிகாரத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது போர்க்காலத்தில் இருந்த அதிகாரத்துவம் சிறுவரின் விளையாட்டு போலத்தான் இருந்தது; ஆனால் அமைப்போ, கட்சியின் தத்துவார்த்த வளர்ச்சி இருந்தபோதிலும்கூட, கட்சிக்காக சிந்தித்து முடிவெடுக்கும் வழக்கத்தைத்தான் பிடிவாதமாகக் கொண்டது.
எனவே கொள்கை நிலைப்பாட்டின்படி மத்திய குழு ஏகமனதாக கட்சி அமைப்பு பற்றிய தீர்மானம் ஒன்றை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்றது; இதை கட்சி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட முடிவுகளின் ஆழ்ந்த பொருளை, வெறுமனே செயலாளர்களாலும் குழுக்களாலும் வெகுஜனங்களுக்கு "எளிமை" மற்றும் கூடுதலான "கவனத்தை" காட்டுவதற்காக அமைதிப்படுத்துவதாக நினைப்பது சரியாகாது; அதேபோல் அமைப்பின் தன்மையில் சில தொழில்துணுக்க மாற்றங்கள் தேவை எனக் கோருவதுபோலும் நினைக்கப்படக்கூடாது. மத்திய குழுவின் தீர்மானம் "ஒரு புதிய பாதை" பற்றிப் பேசுகிறது; இது பொருளற்றதும் அல்ல. கட்சி, வளர்ச்சியின் ஒரு புதிய பகுதியில் நுழைவதற்கு தயாராகின்றது. இது ஒன்றும் சிலர் நாம் நம்பவேண்டும் என்று கருதவதற்காக அவர்கள் கூறும் அமைப்பின் போல்ஷிவிக் கொள்கைகளை உடைத்தல் என்னும் பிரச்சினை அல்ல; மாறாக கட்சியின் வளர்ச்சியில் புதிய கட்டத்திற்கு இந்த நிபந்தனைகளை சேர்க்க வேண்டும் என்பதாகும். பழைய காரியாளர்களுக்கும் அக்டோபருக்கு பின்னர் கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் இடையே ஆரோக்கியமான உறவுகளை தொடக்கும் முக்கிய பிரச்சினை ஆகும்.
கோட்பாட்டு தயாரிப்பு, புரட்சிகர உறுதிப்பாடு, அரசியல் அனுபவம் ஆகியவை கட்சியின் அடிப்படை அரசியல் மூலதனத்தை பிரதிபலிக்கின்றன; முதலில் இவற்றை முக்கியமாக கொண்டுள்ளவர்கள் கட்சியில் உள்ள பழைய காரியாளர்களாவர். ஆனால் மறுபுறத்தில் கட்சி என்பது அடிப்படையில் ஒரு ஜனநாயக அமைப்பு ஆகும்; அதாவது கூட்டாக, தான் செல்லும் பாதையை நிர்ணயிக்க அதன் அனைத்து உறுப்பினர்களின் சிந்தனையையும் விருப்பத்தையும் கருத்திற்கொள்ளும். அக்டோபருக்கு பிந்தைய உடனடிக்காலத்தில் இருந்த சிக்கல் வாய்ந்த நிலையில், பழைய தலைமுறை சேகரித்திருந்த அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தி கட்சி சரியான பாதையில் செல்லக்கூடியதாக இருந்தது என்பது முற்றிலும் தெளிவாகும்; மேலும் அத்தலைமுறையின் பிரதிநிதிகளுக்கு அமைப்பில் மிக முக்கியமான பொறுப்புக்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
மறுபுறத்தில், இத்தகைய நிலைமையின் விளைவுக்கு காரணம், கட்சித் தலைமை பங்கை வகித்துக்கொண்டு நிர்வாக பிரச்சினைகளில் ஆழ்ந்துபோகும்போது, தானே சிந்தித்து முடிவெடுக்கும் பழக்கமுடைய பழைய தலைமுறை அவ்விதமே கட்சிக்காக இன்னமும் தொடர்ந்து செய்துவருகிறது. கம்யூனிச வெகுஜனங்களுக்கு முற்றிலும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, கற்பிக்கும் வகைகளில் அரசியல் வாழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அது முன்னிறுத்துகிறது; அதாவது அடிப்படை அரசியல் பயிற்சி வகுப்புக்கள், உறுப்பினர்களின் அறிவுக்கூர்மை பற்றி தேர்வு, கட்சிப் பள்ளிகள், போன்றவை முன்வைக்கப்படுகின்றன. இதையொட்டித்தான் அமைப்பின் அதிகாரத்துவம், அதன் உட்குழுவாதம், அதன் பிரத்தியேகமான உள்வாழ்வு, சுருங்கக்கூறின் பழைய பாதையின் எதிர்மறை பகுதியின் ஆழ்ந்த தன்மைகள் அனைத்தும் வெளிப்படுகின்றன. இரு அடுக்குகளில் கட்சி வாழ்கிறது என்ற உண்மையில் பல ஆபத்துக்களும் உள்ளடங்கியுள்ளன; இதைப்பற்றி பழைய, இளைய உறுப்பினர்கள் என என்னுடைய கடிதத்தில் நான் எழுதியுள்ளேன். "இளைய" என்று குறிப்பிடும்போது நான் மாணவர்களை மட்டும் குறிப்பிடாமல், அக்டோபருக்கு பின்னர் கட்சிக்கு வந்த முழுத்தலைமுறையினர் அனைவரையும், முக்கியமாக தொழிற்சாலை குழுக்களில் இருந்து வருபவர்களையும் கூறுகிறேன். இந்த திருப்தியற்ற நிலை, அதிகரித்தளவில் கட்சியில் எப்படி வெளிப்பட்டது? பெரும்பான்மையான அதன் உறுப்பினர்கள் உணர்வது அல்லது கூறுவது யாதெனில்: "நன்றாகவோ, சரியற்ற முறையிலோ சிந்திப்பது, முடிவு எடுப்பது ஒரு புறம் இருக்க, அது சிந்திக்கிறது, முடிவு எடுப்பது என்பது அடிக்கடி நமக்காக, ஆனால் எம்மை சேர்க்காமல் செய்கிறது. ஒரு பொருளை புரிந்துகொள்ள நாம் தவறினாலும், சந்தேகங்களை கொண்டாலும், ஒரு மறுப்போ, விமர்சனத்தையோ தெரிவித்தாலும், நாம் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒழுங்கிற்கு கொண்டுவரப்படுகிறோம், பல நேரமும் நாம் குழப்புகின்றோம் என்ற குற்றம் சாட்டப்படுகிறோம் அல்லது குழுக்களை அமைக்க விரும்புகிறவர்கள் என்று கூறப்படுகிறோம். உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நாம் கட்சியை போற்றுகிறோம், எந்த தியாகத்தையும் அதற்காக செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் கருத்துக்களை உருவாக்குவதிலும், நடவடிக்கையின் திசையை தீர்மானிப்பதிலும் தீவிரமாக, உணர்வுபூர்வமாக பங்கு பெற விரும்புகிறோம்." இத்தகைய மனநிலையின் முதல் வெளிப்பாடுகள் முன்னணி அமைப்பினரால் உணரப்படாமல் கடக்கப்பட்டுவிடுகின்றன; அது இதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை; அதுதான் கட்சிக்குள்ளேயே கட்சி-எதிர் குழுக்கள் வளர்வதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். அவர்களுடைய முக்கியத்துவம், மிகைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான்; ஆனால் அதற்காக அவர்களுடைய பொருளுரையின் கருத்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டியதில்லை; அக்கருத்துக்கள் நமக்கு ஓர் எச்சரிக்கை போல் அமைய வேண்டும்.
வரலாற்று பொதுக் காரணங்கள் மற்றும் எமது தவறுகளின் விளைவாக பழைய பாதையில் இருக்கும் முக்கிய ஆபத்தானது, கட்சி அமைப்பில் முன்னணி காரியாளர்களாக உள்ள சில ஆயிரம் பேரை கட்சியின் எஞ்சிய வெகுஜனங்களுக்கு எதிராக நிறுத்தும் போக்கை உருவாக்கியுள்ளது; ஏனெனில் முந்தையவர்கள் பிந்தையவரை வெறுமே சொல்வதை செய்ய வேண்டியவர்கள்தான் என்ற கருத்தை கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட முறை தொடர்ந்து நீடித்தால், நீண்டகால அடிப்படையில் கட்சியின் இரு பிரிவுகளிலும் அதாவது கட்சியின் இளைஞர்கள் மற்றும் முன்னணி காரியாளர்கள் என்று இரு வெவ்வேறு கோடியிலுள்ள பிரிவினிடையேயும் ஒரு சீரழிவை ஏற்படுத்தும் நிலை வந்துவிடும். கட்சியில் தொழிலாளவர்க்க அடித்தளம் என்பதை பொறுத்தவரையில், ஆலைகளில் இருக்கும் பிரிவுகள், மாணவர் பிரிவுகள் போன்றவற்றில் இந்த ஆபத்தின் தன்மை தெளிவாகத்தான் உள்ளது. கட்சியின் பொதுப்பணியில் தீவிரமாக பங்கு இல்லை, கட்சியை பற்றிய கேள்விகளுக்கு தங்களுக்கு சரியான நேரத்தில் விடைவருவதில்லை என்று உணர்ந்துள்ள நிலையில், பல கம்யூனிஸ்டுகள் சுதந்திரமான கட்சி நடவடிக்கைக்கு மாற்றாக குழுக்கள் மற்றும் கன்னைகள் வடிவத்தில் காண முற்படுகின்றனர். இந்த விதத்தில்தான் நாம் "தொழிலாளர்கள் குழு" [2] போன்ற குழுக்களின் முக்கியத்துவத்தின் அடையாளம் பற்றி துல்லியமாக பேசுகிறோம்.
மறுமுனையில், கட்சியின் ஆட்சிஅமைப்பில் நீண்ட காலமாக இருப்பவர்கள் கட்சியினுள் அதிகாரத்துவவாதத்தை அடையாளப்படுத்தும் ஆபத்தும் குறைவானது அல்ல. மத்திய குழுவில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிகாரத்துவாதத்தின் குற்றச்சாட்டு துல்லியமாக கட்சியின் தொண்டர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது என்று, காணவிரும்பாதது, புரிந்துகொள்ளாதது, எள்ளிநகையாடத்தக்கதாக, மதிப்பற்ற மற்றும் தலையை மண்ணுக்குள் புதைத்துகொண்டு இருக்கும் அரசியலாக இருக்கும். உயர்நிலை நடைமுறையில் இருந்து தனிமைப்பட்ட ஒதுங்கிய செயற்பாடுகள் பற்றிய பிரச்சினை அல்ல இது; அமைப்பின் பொதுக் கொள்கை, அதன் அதிகாரத்துவ போக்கு பற்றிய துல்லியமான பிரச்சினைதான் இது. அதிகாரத்துவம் தன்னகத்திலேயே சீரழிவை சந்திக்கும் ஆபத்தை கொண்டுள்ளதா இல்லையா? இதை மறுப்பவர்கள் குருடர்களாகத்தான் இருக்க வேண்டும். அதன் நீண்டகால வளர்ச்சியில், அதிகாரத்துவமயமாக்கல் தலைவர்களை வெகுஜனங்களிடமிருந்து பிரித்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; தங்களுடைய கவனத்தை நிர்வாகப் பிரச்சினைகள் பற்றி, பதவி நியமனங்கள், இடமாறுதல்கள், தங்கள் சுற்றுவட்டத்தை குறுக்கிக் கொள்ளும் நிலை, தங்களுடைய புரட்சிகர உணர்வை வலுவிழக்கச் செய்தல், அதாவது பழைய காப்பாளர்களின் குறைந்த பட்சம் கணிசமானவர்களிடையே கிட்டத்தட்ட சந்தர்ப்பவாத சீரழிவை தூண்டுதலைத்தான் ஏற்படுத்தும். அத்தகைய வழிவகை மிக மெதுவாக, கிட்டத்தட்ட புலனாகாத முறையில் வளர்ந்த போதிலும், இறுதியில் திடீரென்று வெளிப்படுத்திக் கொள்ளும். புறநிலையான மார்க்சிச முன்கணிப்பை அடிப்படையாக கொண்டுள்ள இந்த எச்சரிக்கையை, "ஏற்கத்தகாத செயல்பாடு", "தாக்குதல்".... என்றெல்லாம் கூறுவதற்கு அதிகாரத்துவத்தினரின் திமிர்த்தனத்தையும் இயல்பையும்தான் கொண்டிருக்கவேண்டும்.
ஆனால், உண்மையிலேயே, அத்தகைய சீரழிவு நேரக்கூடிய ஆபத்து பெரிதாக உள்ளதா? இந்த ஆபத்தை அறிந்துள்ளது அல்லது உணர்ந்துள்ளது என்ற உண்மையும் அதை ஆற்றலுடன் எதிர்கொள்ளுகிறது என்பதும், அதுதான் மத்தியக்குழு தீர்மானம் இயற்றுவதற்கு முக்கிய காரணம், இதன் ஆழ்ந்த துடிப்பிற்கு சாட்சியாக இருக்கிறது; மேலும் அப்படி எதிர்கொள்ளுதல் என்பதே அதிகாரத்துவ விஷத்திற்கு எதிராக அதனிடம் மாற்று கொடுக்கும் திறனுடைய செயற்பாடு உள்ளது என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றது. அங்குதான் ஒரு புரட்சிகர கட்சி தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்பதற்கான முக்கிய உறுதிமொழி உள்ளது. ஆனால் பழைய பாதை தன்னை தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யும், கட்டுப்பாட்டை இறுக்கும், செயற்கையான முறையை தேர்ந்தெடுக்கும், மிரட்டும், சுருங்கக்கூறின் கட்சியின் மீது நம்பிக்கையற்ற வகையில் செயல்படும் என்றால், காரியாளர்களின் குறிப்பிடத்தக்க பிரிவினர் சீரழிவை நோக்கிச் செல்லும் ஆபத்து தவிர்க்க முடியாமல் பெருகித்தான் போகும்.
கட்சி முற்றிலும் கடந்த கால இருப்புக்களில் மட்டும் உயிர்த்திருக்க முடியாது. கடந்த காலம் நிகழ்காலத்தை தயாரித்து கொடுத்துள்ளது என்பது போதுமானது. ஆனால் நிகழ்காலமும் கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் கடந்த கால உயர்வு நிலைக்கேற்ப விளங்கி, எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தின் பணியானது, கட்சி செயல்பாட்டின் மையத்தை வெகுஜனங்களை நோக்கி மாற்றவேண்டும் என்பதாகும்.
ஆனால் இந்த மைய ஈர்ப்புத்தானத்தை மாற்றுதல் என்பது ஒரே நேரத்தில், ஒரே பாய்ச்சலில் சாதிக்க முடியாதது ஆகும்; கட்சி பழைய தலைமுறையை "ஆவண காப்பகத்தில்" இருத்திவிட்டு, உடனடியாக ஒரு புதிய வாழ்வை தொடங்க முடியாது. அத்தகைய மடைத்தனமான மக்களை திருப்தி செய்யும் வாதங்கள் பற்றி நேரத்தை செலவழிப்பது வீணேயாகும். பழைய தலைமுறையை ஆவணக்காப்பகத்தில் இருத்திவிட வேண்டும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமாகும். இந்த பழைய தலைமுறை தன்னுடைய தகவமைவை மாற்றிக்கொண்டு, அதன் அடித்தளத்தில் தன்னுடைய விஞ்சிய செல்வாக்கை கட்சியின் சுதந்திர செயல்பாட்டின் முழுமைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் வகையில் உறுதியளிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை ஆகும். "புதிய பாதை" என்பது ஏதோ ஒரு உத்தித்தந்திரம், இராஜதந்திர ரீதியான தாக்குதல், தற்காலிக சலுகை என்றெல்லாம் நினைக்காமல், கட்சியின் அரசியல் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம் என்றே கட்டாயம் கருதவேண்டும். அந்த விதத்தில், கட்சியை வழிநடத்தும் தலைமுறையும், முழுமையாக கட்சியும் மிகப்பெரிய நலன்களை பெற்றுக்கொள்ளும்
அத்தியாயம் 2
கட்சியின் சமூகச் சேர்க்கை
கட்சியின் உள்நெருக்கடி, தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. பரந்த வரலாற்று அர்த்தத்தில் இதற்கான தீர்வு கட்சியின் சமூக சேர்க்கையினால் நிர்ணயிக்கப்படுகிறது; எல்லாவற்றிற்கும் மேலாக, அது கொண்டுள்ள தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தினதும், தொழிற்சாலை குழுக்களின் விஷேட முக்கியத்துவத்தால் தீர்மானிக்கப்படுகின்றது.
அதிகாரத்தை கைப்பற்றியபின் தொழிலாள வர்க்கத்தின் முதல் கவனம் அரசு எந்திரம் ஒன்றை (இராணுவம், பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அமைப்புக்கள், போன்றவை உட்பட) தோற்றுவிக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் அரசாங்கம், கூட்டுறவு ஏனைய அமைப்புகளுடன் தொழிலாளர்கள் பங்கு பெறுதல் என்பது தொழிற்சாலை குழுக்களை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும், கட்சியில் தொழிலாள வர்க்க அடித்தளத்தை கொண்டிருந்த அல்லது கொண்டிராத நிலையில் அதிகாரிகளின் மிகஅதிகளவிலான அதிகரிப்பையும் குறிப்பாக காட்டியது. இதுதான் நிலைமையில் இருந்த முரண்பாடாகும். இதை தவிர்க்கும் வழி கணிசமான பொருளாதார முன்னேற்றத்தை காணுதல் என்பதாகும்; தொழிற்துறை வாழ்வில் வலுவான உந்துதல் ஏற்படுத்தப்பட்டு, கட்சிக்குள் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை கொண்டுவருதலும் ஆகும்.
இந்த அடிப்படை போக்கு எந்த வேகத்தில் நடக்கும், எத்தகைய ஏற்ற இறக்கப் போக்குகள் மூலம் அது கடந்து வரும்? அதைப் பற்றி இப்பொழுது முன்கணிப்பது கடினமாகும். எமது தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில், தொழிலாளர்களில் மிக அதிக அளவினர் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தேவையாகும். ஆனால் கட்சியில் உறுப்பினர்களின் கூட்டு தீவிர மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும் (எடுத்துக்காட்டாக, கட்சியின் மூன்றில் இரு மடங்கை தொழிற்சாலை குழுக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்). இது மிக மெதுவாக ஏற்படும்; அதுவும் குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டபின்தான் நடைபெறும். எப்படியும், ஒரு நீண்ட காலத்தை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்; அதில் மிக அனுபவமுடைய, கட்சியின் செயல்களில் தீவிரமாக இருப்பவர்கள் (தொழிலாளவர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் உட்பட இயல்பாகவே), அரசாங்கம், தொழிற்சங்கம், கூட்டுறவு, கட்சி அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகிப்பர். இந்த நிலையே ஒரு ஆபத்தை உட்குறிப்பாக கொண்டுள்ளது; ஏனெனில் இதுதான் அதிகாரத்துவ வாதத்தின் மூலங்களில் ஒன்றாகும்.
கட்சியில் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பு, இன்றியமையாமல் மகத்தான இடத்தை கொண்டுள்ளது; அது தொடர்ந்து அவ்வாறுதான் இருக்கும். எமது தொழிலாளர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்விக்கூடங்கள் ஆகியவற்றை கட்டமைப்பதில், புதிதாக வரும் அறிவுஜீவிகளில் கூடிய விகிதத்தினர் கம்யூனிஸ்டுகளாக இருக்கும்; அத்தகைய நிலையில் இளைய தொழிலாள வர்க்க பிரிவினரை நாம் ஆலைகளில் இருந்து பிரிக்கிறோம் -- இது அவர்களுடைய கல்விகற்கும் காலத்திற்கு மட்டுமில்லாமல், அவர்களுடைய முழு வாழ்நாளிற்கும்தான். உயர்கல்வி நிலையங்களை கடந்த தொழிலாள வர்க்க இளைஞர்கள், அநேகமாக அனைவருமே, தொழிற்துறை, அரசாங்கம், கட்சி அமைப்புகளில் அமர்த்தப்படுவர். இதுதான் கட்சியின் உள் சமநிலையை, அதன் அடிப்படை குழுவான தொழிற்சாலை குழுக்களுக்கு பாதிப்பானவகையில் அழிப்பிற்கு உள்ளாக்கும் இரண்டாம் காரணியாகும்.
ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளவர்க்கத்தை சேர்ந்தவரா, புத்திஜீவியா அல்லது வேறுவகை பின்னணியை சேர்ந்தவரா என்ற பிரச்சினை அது வெளிப்படையாகவே ஒரு மிகமுக்கியத்துவம் உடையதாகும். புரட்சியை அடுத்த உடனடிக்காலக்கட்டத்தில், அக்டோபருக்கு முன் ஒருவர் என்ன பதவி வகித்தார் என்பதும் தீர்மானகரமானதாக இருந்தது. ஏனெனில் தொழிலாளர்களை குறிப்பிட்ட சோவியத் செயற்பாட்டிற்கு அனுப்புதல் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தது. இப்பொழுது இந்த விடயத்தில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய குழுக்களின் தலைவர்களோ அல்லது பிராந்திய ஆணையாளர்களோ(7), அவர்களுடைய சமூக மூலங்கள் எப்படி இருந்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட பிறப்பிடம் எப்படி இருந்தபோதிலும், குறிப்பிட்ட சமூக பிரிவைத்தான் பிரதிபலிப்பர். இந்த ஆறு ஆண்டுகளில் சோவியத் ஆட்சியில் ஓரளவு உறுதியான சமூகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே இப்பொழுதும் ஒப்புமையில் இன்னும் வரக்கூடிய ஓரளவு நீண்ட காலத்திற்கும், சிறந்த பயிற்சி பெற்ற கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதித்துவத்தை கொண்ட கட்சியின் பெரும்பகுதி, உள்ளாட்சி, இராணுவம், பொருளாதாரம் என்ற அமைப்புகளில் நிர்வாகம், மேலாண்மை என்னும் வேறுபட்ட பிரிவுகளுள் உள் இழுக்கப்பட்டுவிடும்; முக்கியமான மற்றொரு பகுதி அதன் கல்விகற்றலில் ஈடுபட்டுள்ளது; மூன்றாம் பகுதி நாடு முழுவதும் சிதறி நின்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது; நான்காம் பகுதி (இப்பொழுது இது கட்சி உறுப்பினர்களில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது) உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டுள்ளது. கட்சி அமைப்பின் (Party Apparatus) அதிகரிப்பும் மற்றும் இவ் அதிகரிப்புடன் ஒன்றிணைந்த அதிகாரத்துவமயமாக்கலும், அமைப்புடன் பிணைந்துள்ள தொழிற்சாலை பிரிவுகளினால் உருவாக்கப்படவில்லை, மாறாக இது கட்சி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அரசாங்க அமைப்புகளான நிர்வாகம், பொருளாதார மேலாண்மை, இராணுவக்கட்டுப்பாடு, கல்வி ஆகியவற்றின் மூலம் செய்யப்படுகின்றது என்பது தெளிவு. வேறுவிதமாகக் கூறினால், அதிகாரத்துவத்தின் மூலாதாரம், கட்சியில் சக்திகளின் அதிகரித்துவரும் ஒருமுகப்படுத்த கவனம் அரசாங்க நிறுவனங்கள், அமைப்புகளின் மீது செலுத்தப்படுவதும் மற்றும் தொழிற்துறையில் வளர்ச்சி மெதுவாக இருப்பதிலும் தங்கியுள்ளது. இந்த அடிப்படை உண்மைகள், போக்குகள் ஆகியவற்றால், நாம் பழைய காரியாளர்களின் அதிகாரத்துவ சீரழிவின் ஆபத்து பற்றி முற்றிலும் தெரிந்திருக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த புரட்சிக்கர கல்விக்கூடத்தை பின்பற்றினர் என்பதால் தத்துவார்த்த(கருத்தியல்) ஏழ்மைத்தனம், சந்தர்ப்பவாத சீரழிவு ஆகியவற்றில் இருந்து வரும் அனைத்து ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்த்து நிற்கும் திறன் உடையவர் என்று நினைப்பது மடைத்தனமான கருத்தாகும். இல்லை! வரலாறு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது; ஆனால் மனிதர்கள் நனவுபூர்வமாக வரலாற்றை உருவாக்குவதில்லை; தங்கள் வரலாற்றைக்கூட அவர்கள் அவ்விதம் உருவாக்குவதில்லை. இறுதி ஆய்வில், இப்பிரச்சினை இரண்டு பெரும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளால் தீர்வு காணப்படும்: ஐரோப்பாவில் புரட்சியின் போக்கு, மற்றும் எமது பொருளாதார வளர்ச்சியின் விரைவுத்தன்மை ஆகியவையே அவை. ஆனால் அழிவுகரமான வழியில் இவை அனைத்திற்கும் இந்த புறந¤லைக் காரணிகளை பொறுப்பாக்குவது பெரும் தவறாகும்; கடந்த காலத்தில் இருந்து அளிப்பாக பெறப்பட்ட அகநிலையான தீவிரவாதம் அனைத்திற்கும் பாதுகாப்பளிக்கும் என்று கருதுவதுபோல்தான் இந்த நினைப்பும் இருக்கும். ஒரேவித புரட்சிகர சூழ்நிலையில், ஒரே மாதிரியான சர்வதேச சூழ்நிலையில், கட்சி சீர்குலையும் போக்குகளை தடுப்பதில் உள்ள தீவிரமான தன்மையும் அல்லது குறைவான தன்மையும் எந்த அளவிற்கு இந்த ஆபத்துக்களை பற்றி அது அதிகமான அல்லது குறைந்த உணர்மையை (நனவை) கொண்டிருக்கிறது மற்றும் எவ்வளவு தீவிரமாக அதற்கு எதிராக போராடுகின்றது அல்லது குறைவான தீவிரத்துடன் போராடுகின்றது என்பதை பொறுத்தே இது அமையும்.
கட்சியின் சமூக சேர்க்கையில் உள்ள பன்முகத்தன்மை பழைய பாதையில் இருக்கும் எதிர்மறையானபகுதிகளை பெரிதும் வலுவிழக்கச் செய்வதற்கு மாறாக, மிகத்தீவிரமான வகையில் மோசமடையச் செய்கின்றது என்பது தெளிவு. நிர்வாகவாதத்தின் மீதான வெற்றிக்கும், அதிகாரிகளின் சாதி உணர்விற்கு ஜனநாயகமுறைதான் ஒரே வழி. வேறு வழி இல்லை, இருக்க முடியாது. "அமைதியை" தக்கவைத்துக் கொள்வதன் மூலம் கட்சி அதிகாரத்துவம், ஒவ்வொன்றையும் தனித்தனியாக்கி அனைவருடைய ஒற்றுமையையும் குலைப்பதுடன், வெவ்வேறுவகையில் தொழிற்சாலை பிரிவுகள், தொழில்துறை தொழிலாளர்கள், இராணுவத்தினர், மாணவ இளைஞர்கள் என அனைவருக்கும் சமமாக தாக்குதலை கொடுக்கிறது.
அதிகாரத்துவவாத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் பிந்தைய பிரிவுதான் (மாணவர்) உத்வேகத்துடன் எதிர்கொள்ளுகிறது. மாணவர்களை அதிகாரத்துவவாத்திற்கு எதிராக போரிட லெனின் அழைப்பு விட்டததற்கு காரணமில்லாமல் இல்லை. அதன் சமூக சேர்க்கை, தொடர்புகள் இவற்றினால், மாணவ இளைஞர்கள் கட்சியின் அனைத்து சமூக குழுக்களை பிரதிபலிப்பதுடன், அவற்றின் உளப்பாங்களையும் பிரதிபலிக்கின்றனர். அதன் இளமைத் தன்மையும், துடிப்புடன் நிலைமையை எதிர்கொள்ளும் தன்மையும் அதற்கு இத்தகைய உளப்பாங்கைக் கொள்ளுவதற்கு ஒரு துடிப்பைக் கொடுக்கின்றன. பயிலும் இளைஞர் என்னும் முறையில், அது விளக்கவும், பொதுமைப்படுத்திப் பார்க்கவும் முயல்கிறது. இதன்பொருட்டு அதன் அனைத்து செயல்கள் உணர்வுகள் எப்பொழுதும் ஆரோக்கியமான போக்குகளையே கொண்டவை என்று கூறிவிட முடியாது. அப்படி இருக்குமேயானால், ஓரிரு விஷயங்களை அது குறிப்பாகக் காட்டும்: கட்சியில் அனைத்துமே நன்றாக நடந்துகொண்டிருக்கின்றன அல்லது இளைஞர்கள் கட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. ஆனால் இரண்டுமே உண்மையில்லை. கொள்கையளவில் ஆலைப்பிரிவுகள்தாம் எமது தளமே தவிர கல்விக் கூடங்கள் அல்ல. ஆனால் இளைஞர்கள் எமது வெப்பமானி போல் இருக்கிறார்கள் என்று கூறுவதன் அர்த்தம் அவர்களின் அரசியல் வெளிப்பாட்டிற்கு நாங்கள் ஒரு முக்கியம் அல்லாத ஆனால் ஒரு தோற்றப்பாட்டை காட்டும் மதிப்பையே வழங்குகின்றோம். ஒரு வெப்பமானி வானிலையை உருவாக்குவதில்லை; அதன் செயல் வானிலையை பதிவு செய்வதுதான். அரசியல் வானிலை என்பது வர்க்கங்களின் ஆழ்ந்த தன்மையால் உருவாக்கப்படுகின்றதுடன், எத்துறைகளில் அவ்வர்க்கங்கள் நெருக்கமான தொடர்பை கொள்ளுகின்றனவோ அங்குதான் அது உருவாக்கப்படுகின்றது. தொழிற்சாலைக்குழுக்கள் கட்சிக்கும் தொழிற்துறையின் தொழிலாளவர்க்கத்திற்கும் இடையே நேரடியான உடனடி இணைப்பை ஏற்படுத்துகின்றன; அது நமக்கு மிக முக்கியமானது ஆகும். கிராமப்புற குழுக்கள் சற்றே பலமற்ற தொடர்பை விவசாயிகளுடன் ஏற்படுத்துகின்றன. இராணுவ குழுக்களின் மூலம்தான், அதுவும் விஷேட சூழ்நிலையின் கீழ் இருப்பதால், நாம் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அனைத்து சோவியத் சமூகத்தின் அடுக்குகளில் இருந்தும், பிரிவுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ இளைஞர்களை பொறுத்தவரையில், அது எமது சிறப்பு நலன்கள், குறைகள் இவற்றின் கலந்த அமைப்புத் தன்மையை பிரதிபலிப்பதுடன், அதன் உணர்வுகளுக்கு பெரும் கவனம் கொடுக்காமல் போவது பெரும் மடத்தனமாகிவிடும். மேலும் எமது மாணவர்களில் கணிசமான பகுதி கம்யூனிஸ்டுகளாக இருப்பதால், இளைஞர்களை பொறுத்தவரையில் அது மிகக் கணிசமான முறையில் புரட்சிகர அனுபவம் ஆகும். "அதிகாரத்துவ அமைப்பினரில்" தீவிரக்கருத்து உடையவர்கள் இளைஞர்களை தாழ்த்தி மதிப்பிடும் வகையில் பெரும் தவறினை செய்கின்றனர். நம்மையை நாம் சோதித்துக் கொள்ளுவதற்கு இளஞர்கள் ஒரு வழிவகையாவர்; நமக்கு பதிலாக செயலாற்றக் கூடியவர்கள்; ஏனெனில் வருங்காலம் அவர்களுக்குத்தான் உரியது.
ஆனால் நாம் அரச செயல்களில் கொண்டுள்ள பங்கின் விளைவாக கட்சியில் ஒருவருக்கொருவரிடம் இருந்து பிரிந்து இருக்கும் குழுக்களின் பன்முகத்தன்மை பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். கட்சியின் அதிகாரத்துவவாதம் என்பது ஏதோ முந்தைய ஆட்சியில் இருந்த எச்சசொச்சமோ, அல்லது மறைந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு போக்கோ அல்ல என்று நாம் கூறினோம், மீண்டும் கூறுகிறோம். மாறாக, அடிப்படையில் இது ஒரு புதிய நிகழ்வுப்போக்காகும்; புதிய பணிகளில் இருந்து, புதிய செயல்களில் இருந்து, புதிய இடர்பாடுகளில் இருந்து, கட்சியின் புதிய தவறுகளில் இருந்து விளைவதாகும்.
தொழிலாள வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தை சோவியத் அரசின் மூலம் அடைகிறது. தொழிலாள வர்க்கத்தின் முன்னணிக் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது; அதன் விளைவாக அத்தகைய அரசின் முன்னணியில் உள்ளது. இப்பொழுது பிரச்சினையின் முழுமையானது, இந்த தலைமையை அதிகாரத்துவ சீரழிவுக்கு உள்ளாக்காமல் அரச அதிகாரத்துவ அமைப்பினுள் கலைந்துவிடாமல் உருவாக்கிக் கொள்வதே. கம்யூனிஸ்டுகள் கட்சிக்குள்ளும், அரசு, அரசாங்க அமைப்பினுள்ளும், பலவிதமான குழுக்களில் அடையாளம் காணப்படுகின்றனர். அரசாங்க அமைப்பினுள் படிமுறை ரீதியாக அவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்கும் நிலை உள்ளதுடன், அத்துடன் அவர்கள் கட்சியில் இல்லாத வெகுஜனங்களுடன் தனிப்பட்ட, சிக்கல் வாய்ந்த பரஸ்பரமான ஒரு தொடர்பிலும் உள்ளனர். கட்சியில் அவர்கள் அனைவரும் சமமாகத்தான் உள்ளனர்; அதாவது கட்சியில் அடிப்படை செயற்பாட்டு முறைகள், பணிகள் நிர்ணயிக்கப்படுதல் இவற்றை பொறுத்தவரையில் சமம்தான். வேலையில் அமர்ந்துள்ள கம்யூனிஸ்டுகள் தொழிற்சாலை குழுக்கள், ஒரு பகுதியாக இருந்து, நிர்வாகங்கள், அறக்கட்டளைகள், கூட்டு வணிகங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கின்றனர் என்பதோடு மக்களின் பொருளாதார குழுக்களிலும் தலைமை வகிக்கின்றனர். பொருளாதாரத்தின்மீது கட்சியின் செயற்பாடு, பொருளாதார நிர்வாகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடைய எண்ணங்கள், அனுபவங்கள், கருத்துக்கள் போன்றவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எமது கட்சியின் இன்றியமையாத, ஒப்புமையில்லாத மேன்மை என்னவெனில், ஒவ்வொரு கட்டத்திலும் தொழிற்துறையை ஒரு கம்யூனிஸ்ட் இயந்திர இயக்குபவர், கம்யூனிஸ்ட் சிறப்பு வல்லுனர், கம்யூனிஸ்ட் இயக்குனர், கம்யூனிஸ்ட் வணிகர் என்ற கண் கொண்டு நோக்ககூடியதாக இருப்பதுடன், ஒன்றோடொன்று நலன் பயக்கும் துறைகளில் தொழிலாளர்களின் அனுபவங்களை திரட்டி, அவற்றில் இருந்து முடிவுகளை மேற்கொண்டு, அவ்விதத்தில் பொதுப் பொருளாதாரத்தின் இயக்கத்தை நிர்ணயிப்பதுடன் மற்றும் ஒவ்வொரு துறையையும் குறிப்பாக கவனம் செலுத்தி செல்லவும் முடியும்.
அத்தகைய தலைமை கட்சிக்குள் துடிப்புடன் செயல்படும் ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் அடையமுடியும் என்பது தெளிவு. இதற்கு மாறாக, "அமைப்பின்" வழிவகைகள் முன்னுரிமை பெறுமேயானால், கட்சியின் தலைமை அதன் நிர்வாக அமைப்புக்களுக்கு (குழுக்கள், பெரும் மன்றம், செயலாளர் போன்றவற்றிற்கு) இடத்தை கொடுத்து விடும். இத்தகைய ஆட்சி உறுதி அடையும்போது அனைத்து விவகாரங்களும் ஒரு சிறிய குழுவின் கைகளில் குவிப்பை அடையும்; சில சமயம் ஒரு செயலாளர் மட்டுமே அதிகாரத்தை கொள்ளுவார்; அவர் நியமித்தல், நீக்குதல், உத்தரவுகள் வழங்குதல், தண்டனை கொடுத்தல் என்று அனைத்தையும் செய்வார்.
தலைமையில் அத்தகைய சீரழிவு தோன்றினால், கட்சியின் முக்கிய மேன்மை, அதன் பன்முக கூட்டு அனுபவம் ஆகியவை பின்னணிக்கு தள்ளப்பட்டுவிடும். தலைமை என்பது முற்றிலும் அமைப்புரீதியான தன்மையைத்தான் கொண்டு, அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்து குறுக்கீடுகள் புரியவும் சீரழிவையடையும் கட்சி அமைப்பு கூடுதலான முறையில் சோவியத் அமைப்பின் பணிகளுள் நுழையும், தன்னுடைய அன்றாட வாழ்விற்காக வகைசெய்து கொள்ளும் என்பதுடன், தானே தன்னை செல்வாக்கிற்குட்படுத்தி கொண்டு மரங்களை காணுமே அன்றி கானகத்தை காணாது. கட்சி அமைப்பு கூட்டாக எப்பொழுதும் பரந்த அனுபவத்தை கொண்டதாக இருந்து, அரச அமைப்பு ஒரு விருப்புமிக்க அமைப்பாக இருக்குமானால், இதே கருத்தை தனிப்பட்ட நபர்கள் என்ற முறையில் பதவியில் இருப்பவர்களை பற்றி கூறமுடியாது. உண்மையில் ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் பெயரினால் கட்சிக்கு தேவையான அனைத்து அறிவு, திறமை ஆகியவற்றை தன்னிடத்திலே கொண்டிருப்பார் என்று சொன்னால், அது சிறுபிள்ளைத்தனமாகிவிடும். உண்மையில் அவர் தனக்கு என்று ஒரு துணைக் கருவியை, அதிகாரத்துவ பிரிவுகள், தகவல் கொடுக்கும் அதிகார கருவி என ஏற்படுத்திக் கொண்டு அக்கருவியின் துணையுடன் சோவியத் அமைப்புடன் நெருக்கமாகிறார்; பின்னர் கட்சியின் வாழ்விலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளுகிறார். ஒரு புகழ்பெற்ற ஜேர்மனிய பழமொழி கூறுவதுபோல்: "நீங்கள் மற்றவர்களை அசைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், யதார்த்தத்தில் நீங்கள்தான் அசைகிறீர்கள்."
சோவியத் அரசின் முழு அன்றாட அதிகாரத்துவ நடவடிக்கையும் இவ்வாறு கட்சி அமைப்பினுள் ஊடுருவி அதற்குள் அதிகாரத்துவவாதத்தை நுழைத்துவிடுகிறது. கட்சி கூட்டாக தன்னுடைய தலைமையை உணர்வதில்லை; ஏனெனில் அது அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தலைமை சரியாக இயங்கும் இடங்களிலும் கூட, அதிருப்தி அல்லது விளங்கிக்கொள்ளாத தன்மை ஆகியவை இருக்கும். ஆனால் பயனற்ற விவகாரங்களில் நொருங்கி விடுவதை தவிர்த்து, முறையாகவும் அறிவுரீதியாகவும் கூட்டுத் தன்மையை செயல்படுத்தினால் அன்றி, இந்த தலைமை தன்னையே சரியான வகையில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் அதிகாரத்துவவாதம் கட்சியின் உள் ஒன்றிணைப்பை அழிப்பதுமட்டும் அல்லாமல், கட்சியால் அரசாங்க அமைப்பின் மீது செலுத்த வேண்டிய தேவையான அதிகாரத்தையும் வலுவிழக்க செய்துவிடுகின்றது. இதுவே சோவியத் அரசுடனான உறவுகள் பற்றி, கட்சியின் தலைமை தாங்கும் பங்கு பற்றி உரத்த குரலில் கூவுபவர்களுடைய கவனம் மற்றும் புரிந்துகொள்ளலிருந்து முற்றிலும் தப்பி விடுகிறது.
அத்தியாயம் 3
குழுக்களும் உட்பிரிவுகளின் உருவாக்கமும்
கட்சியில் இருக்கும் குழுக்கள், உட்பிரிவுகள் பற்றிய பிரச்சினை விவாதத்தில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. இயல்பாக இது கொண்டுள்ள முக்கியத்துவத்தினாலும், மிகவும் தீவிரமான தன்மையாலும், மிகத் தெளிவான முறையில் இதை அணுக வேண்டியுள்ளது. ஆயினும் கூட இப்பிரச்சினை மிக தவறான முறையில் எழுப்பப்பட்டுள்ளது. நாட்டிலேயே நம் கட்சி ஒன்றுதான் உள்ளது, சர்வாதிகாரகாலத்தில் வேறுவிதமாகவும் இருக்கமுடியாது. தொழிலாள வர்க்கம், விவசாயிகள், அரசாங்க அமைப்பு, அதன் உறுப்பினர் ஆகியவற்றின் பலவித தேவைகள் நம் கட்சியின் மீது வினைபுரிகின்றன. இதன் ஊடகத்தின் மூலம் அவை அரசியல் வெளிப்பாட்டைக்காண முற்படுகின்றன. நம்முடைய சகாப்தத்தில் இயல்பாக உள்ள இடர்பாடுகளும் முரண்பாடுகளும், பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு அடுக்குகளில் காணப்படும் தற்காலிக முரண்பட்டதன்மை, அல்லது முழுப்பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் கொண்டுள்ள முரண்பாடுகள் ஆகியவை தொழிலாளர், விவசாயிகள் குழுக்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் மாணவ இளைஞர் ஊடகம் மூலம் கட்சிக்குள் அழுத்தத்தை கொடுக்கின்றன. கருத்துக்களில் சிறு வேறுபாடுகள், பார்வையில் மாறுபட்ட தன்மை என்ற தற்காலிக வேறுபாடுகள் கூட ஒரு மாறுபட்ட சமூக நலன்களுக்காக தொலைவிலிருந்து அழுத்தத்தை வெளிப்படுத்தக்கூடும்; குறிப்பிட்ட நிலைமைகளில் இவை உறுதியான குழுக்களாக மாற்றம் பெறக் கூடும்; பிந்தையவை உடனடியாகவோ பிந்தியோ ஒழுங்கமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் வடிவமைப்பைப் பெற்று தங்களைக் கட்சியின் எஞ்சிய பிரிவுக்கு தமது எதிர்ப்புத்தன்மையைக் காட்டிக் கொண்டு, அதன் விளைவாக கூடுதலான வெளிஅழுத்தத்திற்கு உள்ளாகலாம். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வாழ்வின் திசையை ஒருமுனைப்படுத்த கடமைப்பட்டுள்ள சகாப்தத்தில் உட்கட்சி குழுக்களின் இயங்கியலாகும்.
இதில் இருந்து தொடர்வது என்ன? உட்பிரிவுகள் (கன்னைகள்) தேவையற்றவை என்றால், நிரந்தரமான குழுக்கள் ஏதும் இருக்கக் கூடாது; நிரந்தரக்குழுக்கள் வேண்டாம் என்றால், தற்காலிகக் குழுக்களும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்; இறுதியாக தற்காலிகக் குழுக்களும் வேண்டாம் என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது; ஏனென்றால் எங்கெல்லாம் இருவிதக் கருத்துக்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் மக்கள் தவிர்க்க முடியாமல் குழுக்களாக கூடுகின்றனர். ஆனால் அரை மில்லியன் மக்களை கொண்டுள்ள கட்சியில், மிகச் சிக்கல் வாய்ந்த, வேதனை நிறைந்த சூழ்நிலையில் நாட்டை முன்னடத்திக் கொண்டிருக்கும் கட்சியில், எவ்வாறு கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியும்?
இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடித்தளமாக கொண்டுள்ள நிலைமையின் கட்சியில் உள்ள அடிப்படை முரண்பாடாகும். இந்த முரண்பாடு முற்றிலும் வழமையான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தவிர்க்கப்படமுடியாததாகும். கடந்த காலத்தில் இருந்தது போலவே இருக்கும் என்ற உத்தரவாதத்தில் மத்தியக் குழுவின் தீர்மானத்திற்கு வாக்களித்த "பழைய பாதையின்" ஆதரவாளர்கள் பின்வருமாறு காரணம் காட்ட முயலுகின்றனர்: 'பாருங்கள், அமைப்பின் மூடி சிறிதளவுகூட திறக்கப்படக்கூடவில்லை, ஏற்கனவே பலவிதக் குழுக்களை கொண்ட அனைத்துவிதப் போக்குகளும் கட்சியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன, இந்த மூடி, நன்கு மூடப்பட்டு பாத்திரம் நன்கு மூடி முத்திரையிடப்பட வேண்டும்' என்கின்றனர். "உட்பிரிவுவாதத்திற்கு (கன்னைவாதத்திற்கு) எதிராக" என்ற முறையில் டஜன் கணக்கான உரைகளும், கட்டுரைகளும் வெளிவருவது இந்த குறுகிய கண்ணோட்டத்தினால்தான். இதயத்தின் மையத்தானத்துள், அமைப்பினர் மத்தியக்குழுவின் தீர்மானம் ஒரு அரசியல் தவறு, ஒன்றில் அதை அவர்கள் தீங்கில்லாதவகையில் திருத்திக்கொள்ளவேண்டும், அல்லது இது அமைப்பினரின் ஏமாற்றுத்திட்டம் பயன்படுத்தப்பட்டாக வேண்டும் என்று நம்புகின்றனர். என்னுடைய கருத்தில் இவர்கள் பெரும் தவறாக எண்ணியுள்ளனர். கட்சிக்குள் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு தந்திரோபாயம் இருந்தால், அது புதியபார்வையை மதிப்புடன் ஏற்பதாகப் போலியாகக் கூறிக் கொண்டு, பழைய பார்வையை தொடரவேண்டும் என்தை பின்பற்றப்படுவதுதான்.
கருத்துக்கள் பற்றிய முரண்பாடுகளிலும் வேறுபாடுகளிலும்தான் கட்சியின் பொதுக்கருத்து உருவாக்கப்படுதல் தவிர்க்கமுடியாமல் நடைபெறுகிறது. இந்த வழிவகையை அமைப்பினுள் குறுக்கி பின் அதன் உழைப்பின் பலன்களுக்கு கோஷங்கள், உத்தரவுகள் போன்றவற்றைக் கொடுத்தல் என்பவற்றினால் பாதுகாத்துக்கொள்வது கட்சிக்கு தத்துவார்த்தரீதியிலும், அரசியல்ரீதியிலும் மலட்டுத்தன்மையைக் கொடுத்துவிடும். கட்சி முழுவதுமே தீர்மானங்களை இயற்றுதல், ஏற்றதில் பங்குபெறச் செய்தல் என்பது தற்காலிக தத்துவார்த்த தனிக்குழுக்களை வளர்ப்பதற்கு ஒப்பாகிவிடும்; இது அவற்றை நீடித்திருக்கக் கூடிய குழுக்கள், உட்பிரிவுகள் ஆக மாற்றிவிடும் ஆபத்துகூட உள்ளது. அவ்வாறானால் என்ன செய்வது? இதில் இருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா? "அமைதிக்கும்", உட்பிரிவுகளாக உடைவதற்கும் இடையே இடைப்பட்ட வழிவகை ஏதும் இல்லையா. ஒன்று உள்ளது; தலைமையின் முழுப்பணியே, ஒவ்வொரு முறையும் தேவையான போதும் அதிலும் முக்கிய திருப்புமுனைக் காலங்களில், இந்த வழிவகையை அக்கணத்தின் உண்மையான நிலைமைக்கு பொருந்தும்வகையிலான வழிவகையை கண்டறிதலே ஆகும்.
அதிகாரத்துவம் பிளவுகளுக்கான மூலாதாரங்களில் ஒன்று என்பதை மத்தியக் குழுவின் தீர்மானம் தெளிவாகக் கூறியுள்ளது. அந்த உண்மை இப்பொழுது நிரூபிக்கப்படவேண்டும் என்ற தேவையே இல்லை. பழைய பாதை "முழுமையாக இயங்கும்" ஜனநாயகத்திலிருந்து உண்மையில் வெகு தொலைவில்தான் இருந்தது; ஆயினும்கூட கட்சியை சட்டவிரோதப் பிளவுகளில் இருந்து அது காப்பாற்ற முடியவில்லை; இந்த உண்மையைக் காண மறுத்தல் நகைப்பிற்குரியதுதான்!; இப்பிளவுகள் தற்காலிக அல்லது நீடித்த இயல்புடைய குழுக்களுக்கு வழிவகுத்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு, கட்சியின் தலைமை அங்கங்கள் கட்சியின் பரந்த மக்கட்தொகுப்பின் குரலைக் கேட்க வேண்டும்; ஒவ்வொரு விமர்சனத்தையும் பிரிவு(கன்னை) உணர்வின் வெளிப்பாடு என்று கருதக்கூடாது; அப்படி நினைத்தால் உள்ள உறுதியுடன், கட்டுப்பாட்டுடன் இருக்கும் கம்யூனிஸ்டுகள்கூட முறையான மௌனத்தை காக்க அல்லது தம்மையே பிரிவுகளாகவே அமைத்துக்கொள்ள இட்டுச்செல்லும்.
ஆனால் இவ்வகையில் பிரச்சினையைக் காண்பது Myaznikov [3] மற்றும் அவரைப் பின் பற்றுபவர்களை நியாயப்படுத்துவது போல் ஆகிவிடாதா? இப்படி உயர்மட்ட அதிகார அறிவு ஒலிக்கிறது. ஏன்? முதலில் நாம் இப்பொழுது எடுத்துக்காட்டிய சொற்றொடர் மத்திய குழுவின் தீர்மானத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பந்தியாகும். மேலும் விளக்கம் கொடுப்பது என்பது எப்படி நியாயப்படுத்துவதற்குச் சமமாகும்? இரத்த ஓட்ட பற்றாக்குறையின் விளைவுதான் ஒரு சீழ்க்கட்டி, போதிய பிராணவாயுப் போக்கு இல்லாததால் ஏற்படுகிறது என்று கூறுவது கட்டியை "நியாயப்படுத்துவது" ஆகாது; அதை மனித உடலமைப்பில் ஒரு இயல்பான பகுதி என்று கூறுவதும் ஆகாது. ஒரே முடிவு கட்டி துளைக்கப்பட்டு, தொற்றுத்தன்மை அகற்றப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, இரத்தத்திற்குத் தேவையான பிராணவாயு செல்வதற்கு ஒரு சன்னல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் "பழைய பாதையின்" மிகப் போர்க்குணமிக்க பிரிவு மத்திய குழுவின் தீர்மானம் தவறு என்ற முடிவிற்கு வந்துள்ளது; அதிலும் குறிப்பாக அதிகாரத்துவம் தான் பிரிவுவாதத்திற்கு (கன்னைவாதத்திற்கு) காரணம் என குறைப்படுவது தவறு என்று நம்புகிறது. அது இதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், முறையாகத் தெரிவிக்க வேண்டாம் என்ற கருத்தினால்தான், முறை என்பது அதிகாரத்துவத்தின் இன்றியமையாத தன்மை என்பதில் முழுகியுள்ள மனப்பான்மையினால்தான் பேசாமல் உள்ளது. இப்பொழுதுள்ள சூழ்நிலையில் பிரிவுகள் (கன்னைகள்) பெரும் தீமை என்பதை மறுப்பதற்கியலாதது; தற்காலிகமாயினும், குழுவாதல் பிரிவுகள் ஆகிவிடும். அனுபவம் காட்டுகிறவாறு, குழுவாதல்களும் பிரிவுகளும் (கன்னைகளும்) தீமை பயப்பவை, அவை தோன்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவது போதுமானதல்ல. இப்பொழுதைய தேவை என்னவென்றால் இதைப் பற்றிய உறுதியான கொள்கை தேவை, சரியான போக்கு உண்மை நிலைக்கேற்ப எடுக்கப்பட வேண்டும்.
எமது கட்சியின் வரலாற்றை, புரட்சிக்காலகட்ட வரலாறு மட்டும் என்றாலும் கூடப் படிப்பது போதுமானது, அதாவது பிளவுகளின் உருவாக்கம் ஆபத்தை நிறைந்த தன்மையைக் கொண்ட காலகட்டத்தை படித்தால் போதும். இதற்கு எதிரான போராட்டத்தை பொதுவான கண்டனங்கள் மற்றும் குழுக்களை தடுப்பதுடன் மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டால் போதாது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
1917 இலையுதிர் காலத்தில் கட்சியில் மிக சக்திவாய்ந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது; மிக முக்கியமான அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற வினா எழுந்தபோது அது தோன்றியது. நிகழ்வுகள் சீற்றமான வேகத்துடன் நடக்கையில், போராட்டத்தின் தீவிரம் கருத்து வேறுபாடுகள் உடனடியான தீவிரப் பிளவுகளை உருவாக்கும் வடிவத்தை எடுத்தது. வன்முறைமிக்க எழுச்சியின் எதிர்ப்பாளர்கள் அதை செய்யவிருப்பமில்லாமலேயே கட்சிக்கு தொடர்பற்ற கூறுபாடுகளுடன் ஒரு முகாம் அமைத்து தங்களுடைய அறிக்கைகளை கட்சிக்கு வெளியிலான பதிப்புக்களில் வெளியிடுதல் போன்றவற்றைச் செய்தனர். அந்த நேரத்தில் கட்சியின் ஒற்றுமை ஒரு மயிரிழையில் நின்றது. பிளவு எவ்வாறு தவிர்க்கப்பட்டது? நிகழ்வுகள் மிகவேகமாக நடந்ததாலும் சாதகமான விளைவுகளைக் கொடுத்ததாலும்தான். நிகழ்வுகள் சில மாதங்கள் நீடித்திருந்தால் பிளவு தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டிருக்கும்; இன்னும் கூடுதலான வகையில், எழுச்சி தோல்வியடைந்திருந்தாலும் ஏற்பட்டிருக்கும். மத்திய குழுவின் பெரும்பாலோரின் உறுதியான தலைமையினால், கட்சி ஆக்கிரோஷமான தாக்குலை மேற்கொண்டு, எதிர்ப்பைக் கடந்தது அதிகாரம் வெற்றியடையப்பட்டது; எண்ணிக்கையில் அதிகம் இல்லாவிட்டாலும், பண்பில் வலுவாக இருந்த எதிர்ப்பாளர்கள் அக்டோபர் அரங்கை ஏற்றனர். பிரிவும், ஆபத்துப் பிளவும் அந்நேரத்தில் கட்சிச் சட்டங்கள் என்ற பொதுவான அடிப்படையில் தீர்க்கப்படவில்லை; புரட்சிகர நடவடிக்கையினால் கடக்கப்பட்டன.
இரண்டாம் பெரிய கருத்து வேறுபாடு பிரெஸ்ட் லிடோவ்ஸ்க் (Brest Litovsk) சமாதானக் காலத்தில் எழுந்தது. புரட்சிகரப் போருக்கான ஆதரவாளர்கள் அப்பொழுது உண்மையான பிரிவாக அதன் மத்திய குழு போன்றவற்றைப் பெற்றிருந்தனர். ஒரு காலகட்டத்தில் லெனினுடைய அரசாங்கத்தைக் கைது செய்வதாக புக்காரின் பற்றிய சமீபத்திய தகவலில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. பொதுவாகக் கூறுகையில், இது Mayne Reid [4] கதை அல்லது ஒரு கம்யூனிஸ்ட் Pinkerton [5] கதை போல்தான் தெரிகிறது. கட்சியின் வரலாறு இதைக் கருத்திற்கொளும் என்று எதிர்பார்க்கலாம். அது எப்படி இருந்தாலும், ஒரு இடது கம்யூனிஸ்ட் பிரிவு இருந்தது என்பது கட்சி ஒற்றுமைக்கு மிகத் தீவிர ஆபத்தைப் பிரதிபலித்தது. அந்நேரத்தில் பிளவைக் கொண்டுவருவது கடினமாக இருந்திராது; பெரும் தலைமை அதற்குத் தேவைப்பட்டிருக்காது ... பெரும் அறிவார்ந்த முயற்சியும் தேவையாக இருந்திராது. இடது கம்யூனிஸ்ட் பிரிவிற்கு எதிராக ஒரு ஆணை கொடுக்கப்பட்டிருந்தால் போதும். இருந்தபோதிலும்கூட, கட்சி சிக்கலான வழிவகைகளை மேற்கொண்டது: இதைப்பற்றி விவாதம் செய்தல், விளக்குதல், அனுபவத்தின் மூலம் நிரூபித்தல் மற்றும் தன் மத்தியில் ஒரு அமைப்புரீதியான உட்குழு இருந்து தற்காலிகமான அசாதாரண போக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதால் தான் தற்காலிமாக பதவிவிலகிவிடுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தது.
இதேபோல் இராணுவ அமைப்புமுறைப் பிரச்சினையும் சற்று வலுவான, பிடிவாதத் தன்மையுடைய குழுவைத் தோற்றுவித்தது; முறையான இராணுவம், அதையொட்டி உருவாகும் மத்திய இராணுவ அமைப்பு, வல்லுனர்கள், ஏனையவை போன்றவற்றை எதிர்த்த நிலையில் அது இருந்தது. சில நேரங்களில் போராட்டங்கள் மிகத்தீவிர தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அக்டோபரில் இருந்தது போல் இங்கும் பிரச்சினை அனுபவத்தாலும், போரின் மூலமே முடிவிற்கு வந்தது. முறையான இராணுவக் கொள்கையில் சில பெரும் தவறுகள், மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் ஆகியவை சரி செய்யப்பட்டன; எதிர்ப்பாளர்களின் அழுத்தம் இல்லாமல் இது நடைபெற்றது; அதுவும் சேதத்திற்கு இடம் இல்லாமல் செய்யப்பட்டது; ஆனால் முறையான இராணுவத்தின் மத்திய அமைப்பிற்கு இதன் மூலம் நலன்கள் கிட்டின. எதிர்ப்பைப் பொறுத்தவரையில், சிறிது சிறிதாக அது சிதறிப்போயிற்று. அதன் முக்கிய பிரதிநிதிகளின் ஏராளமானவர்கள் இராணுவ முறையில் பங்கு பெற்றனர்; அவர்களில் பலர் முக்கிய பதவிகளையும் கொண்டிருந்தனர்.
தெளிவாக வரையறுக்கப்பட்ட குழுக்கள் தொழிற்சங்கங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க விவாதங்களின்போது அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட அனுபவத்தை ஒட்டி இக்காலகட்டத்தை முழுமையாகப் பரிசீலினை செய்து அதில் இருந்து கிடைக்கும் ஒளியைக் காட்ட முடிவதால், விவாதங்கள் முற்றிலும் தொழிற்சங்கங்களைச் சுற்றி இருந்தது என்றோ தொழிலாளர்களின் ஜனநாயகம் பற்றி இருந்தது என்றோ கூறமுடியாது: இப்பூசல்களில் வெளிவந்த கருத்துக்கள் கட்சியில் ஆழ்ந்த கவலையைக் கொடுத்தன; இதற்குக் காரணம் போர்க் கம்யூனிச பொருளாதார ஆட்சி நீடித்ததுதான். நாட்டின் முழுப் பொருளாதார அமைப்பும் ஒரு பிடியில் சிக்கியிருந்தது. எனவே தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் ஜனநாயகம் பற்றிய பங்கின் விவாதம் புதிய பொருளாதாரப் பாதைக்கான தேடுதலை சற்று மூடிமறைத்தது. இதற்கு விடை காணும் வகையில் உணவுப் பொருட்கள் பெறுதலில் இருந்த தடைகள் அகற்றப்படுதல், தானிய ஏகபோக உரிமை, மற்றும் மைய பொருளாதார நிர்வாகக் கொடுங்கோன்மையில் இருந்து சிறிது சிறிதாக அரசாங்கத் தொழிற்துறையை விடுவித்தல் என்பவை நிகழ்ந்தன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டு தொழிற்சங்கங்கள் பற்றிய விவாதத்தை மூடிமறைத்தன; இன்னும் கூடுதலான வகையில் புதிய பொருளாதார கொள்கை ஏற்படுத்தப்பட்டவுடன் (New Economic Policy - NEP), தொழிற்சங்கங்களின் பங்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தோன்றின; சில மாதங்களுக்குப் பிறகு, தொழிற்சங்கங்கள் பற்றிய தீர்மானம் தீவிரமாக மாற்றப்பட்டு விட்டது.
மிகவும் நீடித்திருந்த குழு, சில கோணங்களில் இருந்து மிக ஆபத்தாக இருந்தது, அது "தொழிலாளர்களின் எதிர்ப்பு (Workers' Opposition)" [6] என்பதாகும். சிதைந்த முறையில் இருந்தாலும், போர் கம்யூனிசத்தில் இருந்த முரண்பாடுகள், கட்சியில் இருந்த சில தவறுகள் மற்றும் சோசலிச அமைப்பின் சில அடிப்படை இலக்குகளில் இருந்த இடர்பாடுகள் ஆகியவற்றை இது பிரதிபலித்தது. ஆனால் இதிலும்கூட நாம் வெறும் பொதுவான தடுப்பு என்பதைப் போடவில்லை. ஜனநாயகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், முறையான முடிவுகள் எடுக்கப்பட்டன; கட்சியில் இருந்து தேவையற்றவர்களை அகற்றுவதில் திறமையான, மிக முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; "தொழிலாளர்களின் எதிர்ப்பு" என்பதில் இருந்த குறைகூறல்கள், கோரிக்கைகளில் நியாயமான, உகந்த கருத்துக்கள் திருப்திக்குள்ளாயின. இதில் முக்கியமான விஷயம் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றில் கட்சி எடுத்த முடிவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள், குழுக்கள் ஆகியவை மறையவேண்டும் என்பதற்காக எடுத்த நடவடிக்கைகளினால், பத்தாம் காங்கிரஸ் முறையான வகையில் இனி பிரிவுகள் அமைத்தல் கூடாது எனத் தடுக்க முடிந்தது; அதன் முடிவுகள் செயலற்றுப்போகா என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அனுபவமும், நல்ல அரசியல் உணர்வும் காட்டுவதுபோல், இத்தகைய தடுப்பு புதிய கருத்தியல்ரீதியான அமைப்புரீதியான குழுக்கள் இனி தோன்றாது என்பதற்கான தீவிர உறுதிப்பாட்டை வழங்காது என்று கூறவதற்கில்லை என்பதை கூறத்தேவையில்லை. இவ்விஷயத்தில் அடிப்படை உத்தரவாதம் ஒரு சரியான தலைமை, கட்சியில் பிரதிபலிக்கும் அவசியமான கருத்துக்களை சரியான நேரத்தில் அவதானித்தல், கட்சியின் முன்னெடுப்புகளை முடக்காது ஒழுங்கமைக்கும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மை இருத்தல், விமர்சனங்களை கண்டு அச்சம் அடையாது, கட்சியை பிளவுகள் என்பவற்றால் அச்சமடையத்தேவையும் இல்லை; பயத்தின் விளைவில்தான் பெரும்பாலும் மிரட்டல்தன்மை ஏற்படுகிறது. பத்தாம் காங்கிரஸ் பிளவுகளுக்கு தடைவிதித்தல் என்ற முடிவு ஒரு துணைக் கூறுபாட்டையும் கொண்டிருந்தது; அது தானே அனைத்து உள்விவகார கஷ்டங்களுக்கும் தீர்வு கொடுக்கும் திறவுகோலாக இல்லை என்பதாகும். ஒரு கட்சியில் வளர்ச்சி, தலைமையிடத்தின் தவறுகள், அமைப்பின் பழமைவாத போக்கு, வெளிச் செல்வாக்கு போன்றவற்றில் எல்லாம் இருந்து ஒரு கட்சித்தீர்மானம் மட்டும் எம்மை குழுக்கள் மற்றும் பிளவுகள் அதிர்ச்சிகளில் இருந்து காப்பாற்றிவிடும் என்ற முடிவு படுமோசமான"அமைப்பை வழிபடும் தன்மையாக ஆகிவிடும்." அத்தகைய அணுகுமுறையே ஆழ்ந்த அதிகாரத்துவம்தான்.
இதற்கு வியத்தகு உதாரணம் நமக்கு பெட்ரோகிராட் அமைப்பின் வரலாற்றினால் கொடுக்கப்படுகிறது. இனி குழுக்களும், பிளவுகளும் கூடாது என்று தடையிட்ட பத்தாம் காங்கிரசிற்குப் பின்னர் பெட்ரோகிராட்டில் துடிப்பான அமைப்புரீதியான போராட்டம் ஏற்பட்டு இரண்டு எதிரெதிரான போக்குகள் உடைய குழுக்கள் ஏற்பட்டன. எடுத்த உடன் எளிமையாகச் செய்யக்கூடியது இரண்டில் ஒன்றை (குறைந்தது ஒன்றை), தீய, குற்றம் சார்ந்த, பிளவுத் தன்மையுடைய பிரிவு என்று அறிவிப்பதுதான். ஆனால், பெட்ரோகிராட்டால் அவ்வாறு கோரப்பட்ட இந்த வழிவகையை பயன்படுத்த மத்திய குழு உறுதியாக மறுத்துவிட்டது. இரண்டு குழுக்களுக்கும் இடையே மத்தியஸ்தர் பங்கைத் தான் ஏற்று அதில் வெற்றியும் பெற்றது; உடனடியாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் அவர்களுடைய கூட்டுழைப்புக்கு மட்டுமில்லாது அமைப்பினுள் அவற்றின் வருங்கால முழுமையான கரைத்தலுக்கும் உறுதியளித்தது. இங்கு ஒரு முக்கியமான உதாரணத்தைக் காண்கிறீர்கள்; இது மனத்தில் கொள்ளப்படவேண்டும்; சில அதிகாரத்துவ மண்டை ஓடுகளில் வெளிச்சம் பரவுவதற்கு இது உதவும்.
கட்சியில் நீடித்திருந்த முக்கிய குழு ஒவ்வொன்றும், முறையாக இருந்த பிரிவுகள் உட்பட, ஏதேனும் சமூக நலன்களின் சார்பாகப் பேசும் போக்கைக் கொண்டிருந்தன என்பதை மேலே குறிப்பிட்டோம். தவறான ஒருபுறமாய் விலகல் ஒவ்வொன்றும் இத்தகைய வளர்ச்சியின் போக்கில், வர்க்கப் பகைமையின் நலன்களின் வெளிப்பாடாக ஆனது அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கு அரை விரோதமான வெளிப்பாடாக ஆனது. இது முதலில் அதிகாரத்துவத்திற்கு பொருந்தும். அதைக் கருத்திற் கொண்டு தேவையானதைப்பற்றிக் கூறவேண்டும். அதிகாரத்துவம் ஒரு தவறான ஒருபுறமாய் விலகல் ஆகும், ஒரு ஆரோக்கியமற் ஒருபுறமாய் விலகல் என்பது சவாலுக்குட்படாத கருத்து என்று நம்புவோமாக. அப்படி இருக்கும்போது, அது கட்சியைச் சரியான பாதையில் இருந்து, வர்க்கப் பாதையில் இருந்து வேறுவிதமாக வழிநடத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அங்குதான் அதனது ஆபத்து துல்லியமாக உள்ளது. மிக உயர்ந்த அளவில் படிப்பினையைக் கொடுக்கும், அதே நேரத்தில் பெரும் எச்சரிக்கையையும் கொடுக்கும் உண்மை ஒன்று இங்கு உள்ளது: தற்காலிகமேயாயினும் ஒவ்வொரு கருத்து வேறுபாடும், கருத்து வேறுபாட்டின் காரணமாக விளையும் ஒவ்வொரு குழுவும் என்னதான் இருந்தாலும் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கங்களின் நலன்களின் வெளிப்பாடு, என்று பெரும் வலியுறுத்தலுடனும், சில சமயம் மூர்க்கத்தனமாகவும் உறுதிகூறும் தோழர்கள் இந்த அளவுகோலை அதிகாரத்துவத்திற்குப் பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை.
ஆனால் இக்குறிப்பிட்ட நிகழ்வில், சமூக அளவுகோல் சரியாகவே உள்ளது; ஏனெனில் அதிகாரத்துவம் நன்கு வரையறுக்கப்பட்ட தீமையாகும்; இழிந்த முறையில், சர்ச்சைக்கிடமின்றி தீங்கை விளைவிக்கவல்ல பிழையான ஒருபுறவிலகல் போக்கினை உடையதாகும்; அதிகாரபூர்வமாக கண்டனத்திற்குட்படுகிறது என்றாலும், மறைந்துபோகும் போக்கிலும் இல்லை. மேலும், ஒரே அடியில் இதை அகற்றுவதும் மிகக் கடினமாகும். ஆனால் மத்திய குழுத் தீர்மானம் கூறுவது போல் அதிகாரத்துவம் மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது, அதன் விளைவாக கட்சியின் வர்க்கத்தன்மையை வலுவிழக்கச் செய்யும் என்றால், அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னதாகவே ஒருவகை பாட்டாளி வர்க்கமல்லாத செல்வாக்குடன் அடையாளம் காணப்படக்கூடாது. மாறாக, கட்சியின் பாட்டாளி வர்க்கத் தன்மையைக் காக்கவேண்டும் என்னும் விருப்பு அதிகாரத்துவத்திற்கு எதிர்ப்பு என்பதைத் தவிர்க்கமுடியாமல் தோற்றுவிக்கும். இந்த தடுப்பின் திரையில் பல தவறான, விரும்பத்தகாத, தீய போக்குகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும். அவற்றை அவற்றின் கருத்தியலின் உள்ளடக்கத்தை மார்க்சிச ஆய்வுமுறை இல்லாது அம்பலப்படுத்த முடியாது. ஆனால் அதிகாரத்துவத்திற்கு எதிர்ப்பை, குழுமுறைக்கு ஒப்பாகக் கருதி மாற்றுச் செல்வாக்குகளின்பால் திருப்புவது என்பது அதிகாரத்துவ செல்வாக்கிற்கே ஒருவர் "வழியமைப்பது" போல் ஆகிவிடும்.
ஆயினும்கூட, கட்சி வேறுபாடுகளை விளங்கிக்கொள்வதை, விரோதமான வர்க்கங்களின் செல்வாக்கிற்கான போராட்டம் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிவிடுவது மிக எளிமையும், கொச்சைத்தனமானதுமான வகையில் உண்மையைப் பிரிந்து கொள்ளுவது போல் ஆகும். இவ்வாறுதான் 1920ம் ஆண்டு போலந்துப் படையெடுப்பு இரண்டு வித கருத்து நீரோட்டங்களை வெளிப்படுத்தியது; ஒன்றில் மிகத் தீவிரமான கொள்கை வேண்டும் என்று கூறப்பட்டது; மற்றொன்று நிதானத்துடன் செல்ல வேண்டும் என்றது. இங்கு மாறுபட்ட வர்க்கப் போக்குகள் உள்ளனவா? அப்படி உறுதியுடன் எவரும் கூறுவர் என்று நான் நம்பவில்லை. இருக்கும் நிலைமை பற்றி, சக்திகளின் தன்மை பற்றி, வழிவகைகள் பற்றி மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தன என்றுதான் கூறவேண்டும். ஆனால் மதிப்பீட்டின் அடிப்படை அளவுகோல் இரு பிரிவினருக்கும் ஓன்றாகத்தான் இருந்தது.
கட்சி ஒரே பிரச்சினையை வெவ்வேறு வகைகளில் தீர்க்க முடியும் என்பது பலமுறையும் நிகழ்கிறது. அப்பொழுது எந்த வகை மேம்பட்டது, எது கூடுதலான விரைவானது, கூடுதலான சிக்கனத்தன்மை உடையது என்பதில் வேறுபாடுகள் எழக்கூடும். இந்த வேறுபாடுகள் பிரச்சினையைப் பொறுத்து கட்சியின் கணிசமான உறுப்பினர்களிடமும் இருக்கலாம்; அதன் பொருள் இரண்டு வர்க்கப் போக்குகள் உள்ளன என்று ஆகிவிடாது.
வருங்காலத்தில் ஒன்று என்றில்லாமல் டஜன் கணக்கில் வேறுபாடுகளை நாம் காண்போம் என்பதில் ஐயமில்லை; ஏனெனில் நம்முடைய பாதை கடினமானது, சோசலிச அமைப்பின் அரசியல் பணிகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் தவிர்க்கமுடியாமல் கருத்து வேறுபாடுகளையும், தற்காலிக கருத்து வேறுபட்ட குழுக்களையும் ஏற்படுத்தும். அனைத்துவிதக் கருத்து வேறுபாட்டின் நுட்பவேறுபாடுகளையும் மார்க்சிச ஆய்வுமுறையில் அரசியல் சரிபார்த்தல் என்பதுதான் கட்சி எடுக்கக்கூடிய தடுப்பு நடவடிக்கைகளில் எப்பொழுதும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த எடுத்துக்காட்டும் வகையிலான மார்க்சியப் ஆய்வு, மேற்கொள்ள வேண்டியதுதான் என்றாலும், அதிகாரத்துவத்தின் தற்காப்பு ஆயுதமான ஒரேவிதச் சொற்றொடர்களைப் பயன்படுத்துதல் என்பதற்கு இடம் அளித்துவிடக்கூடாது. அதிகாரத்துவத்திற்கு எதிராக பலவித அரசியல் சிந்தனைமுறையில் தோன்றும் எழுச்சிகள் அனைத்தும் நல்ல சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அந்நிய மற்றும் தீமைபயக்கும் கூறுபாடுகள் அகற்றப்பட்டு; அப்பொழுது இன்னும் கவனமான முறையில் "புதிய பாதையில்'' நாம் நுழைய முடியும். ஆனால் கட்சி அமைப்பின் மனப்போக்கு, விருப்பங்கள் ஆகியவற்றில் தீவிர மாற்றம் இல்லாவிட்டால் இது நடக்காது. மாறாக, எந்தப் புதிய தாக்குதலுக்கும் பிந்தையது இப்பொழுது "பழைய பாதையின்" ஒவ்வொரு விமர்சனத்தையும் பொதுவாக நிராகரித்து அதை ஒரு பிரிவு (கன்னை) பாதையின் வெளிப்பாடு என்று கருத்திற்கொண்டு அதை அகற்றாதுள்ள இயல்பைத்தான் பார்க்கிறோம். கன்னைவாதம் ஆபத்தானது என்றால், பழைமை உணர்வு நிரம்பிய அதிகாரத்துவ (பிரிவுவாதம்) கன்னைவாதம் கொடுக்கும் ஆபத்தைப் பற்றி நாம் கவனியாமல், கண்ணை மூடிக்கொண்டோம் என்றால் அது குற்றஞ்சார்ந்த செயலாகும். இந்த ஆபத்திற்கு எதிராகத்தான் மத்திய குழுவின் தீர்மானம் முக்கியமாக இயக்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகளின் மிகப் பெரும்பான்மையினருக்கு கட்சியின் ஒற்றுமையைக் காப்பது என்பது பெரும் அக்கறையாகும். ஆனால் இது வெளிப்படையாகக் கூறப்படவேண்டும். இன்று கட்சியின் ஒற்றுமைக்குக்கு, குறைந்த பட்சம் கட்சியில் ஒருமித்த கருத்திற்குத் தீவிர ஆபத்து உள்ளது என்றால், அது கட்டுப்பாடற்ற அதிகாரத்துவத்தினால்தான். இந்த முகாமில்தான் ஆத்திரமூட்டல் என குறிப்பிடக்கூடிய குரல்கள் எழுப்பப்படுகின்றன. அங்குதான் அவர்கள் தைரியமாகக் பின்வருமாறு கூறுகின்றனர்:, நாங்கள் ஒன்றும் பிளவிற்கு அஞ்சவில்லை! இப்போக்கின் பிரதிநிதிகள் கடந்த காலத்தை மீண்டும் கிளறி விவாதத்தில் கூடுதலான காழ்ப்புணர்வைக் கொண்டுவர முற்படுகின்றனர், பழைய போராட்டம், பழைய பிளவு ஆகியவற்றின் நினைவுகளுக்கு செயற்கையாக உயிர் கொடுத்து, ஒரு புதிய பிளவுபோல் ஆபத்துடைய அரக்கத்தனமான குற்றம் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை கட்சியின் மனத்திற்கு இயல்பாக ஏற்குமாறு செய்கின்றனர். கட்சியின் ஒற்றுமைக்கு எதிராக ஒருவரையொருவர் எதிர்க்கும் வகையிலும், குறைந்த வகையிலான அதிகாரத்துவ ஆட்சிதான் கட்சிக்குத் தேவை என்பதற்கு எதிராகவும் கூறுகின்றனர்.
இத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்க கட்சி தன்னை அனுமதித்துக் கொண்டால், தன்னுடைய ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடுகளை தியாகம் செய்துவிட்டால், தன்னுடைய உள்போராட்டத்தை அதிகரிப்பதில்தான் வெற்றியடையும், தன்னுடைய ஒருங்கிணைந்துள்ள தன்மையை ஆபத்திற்குட்படுத்திவிடும். உங்களுக்கே கட்சியில் நம்பிக்கை இல்லை என்றால் அதை இயக்கும் அமைப்பிடம் கட்சி நம்பிக்கை கொள் என்று கோர முடியாது. இதுதான் முழுப் பிரச்சினைக்குரிய வினாவாகும். கட்சியைப் பற்றி முன்கூட்டியே அவநம்பிக்கை கொண்டிருக்கும் அதிகாரத்துவம், கட்சியின் முழு உணர்வு, கட்டுப்பாட்டுணர்வு பற்றி அவநம்பிக்கை கொண்டால், அதுதான் அமைப்பின் ஆதிக்கத்தால் தோற்றுவிக்கப்படும் அனைத்துத் தீமைகளுக்கும் முக்கிய காரணமாகும். கட்சிக்குப் பிளவுகள் தேவையில்லை, அவற்றை அது பொறுத்துக் கொள்ளாது. அது சிதையும் என்றோ எவரேனும் அதன் அமைப்பை சிதைப்பர் என்று நம்புவது அரக்கத்தனமாகும். இந்த அமைப்பு மிகமதிப்புடைய கூறுபாடுகளை உடையது, கடந்த கால அனுபவத்தின் அரிய பகுதியின் உறைவிடமாக உள்ளது என்பது கட்சிக்குத் தெரியும். ஆனால் அது அதைப் புதுப்பிக்க விரும்புகிறது; ஆனால் அது தனது அமைப்பு என்பதை அதற்கு நினைவுறுத்த விரும்புகிறது; தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைப்பு தன்னிடம் இருந்து பிரிந்துநிற்கக் கூடாது எனக் கூறுகிறது.
விவாதத்தின் போக்கின் பொழுது குறிப்பிடத்தகுந்ந வகையில் தன்னைத் தெளிவாகக் காட்டிக் கொண்ட நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி சிந்தித்தால், வருங்காலம் இரட்டை முன்னோக்குடையதாக இருப்பது முற்றாக தெளிவாகின்றது. முதலாவது, மத்திய குழுவின் தீர்மானங்களை ஒட்டி இப்பொழுது கட்சியில் நடக்கும் இயல்பான தத்துவார்த்த- அமைப்புரீதியிலான மறுகுழுவமைவு கட்சியில் இயல்பான வளர்ச்சிப் பாதையில் ஒரு முன்னோக்கிய அடியாக உள்ளது. ஆரம்பிக்கும் இப்புதிய அத்தியாயம், இதன் விளைவு அனைவருக்கும் மிகவும் உகந்ததாக இருப்பதுடன், கட்சிக்குப் பெரும் நலன்களை அளிக்கும். இதனால், கட்சியில் மிகையான விவாதத்தையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க இலகுவாக்குவதுடன், இழிவான ஜனநாயகப் போக்குகளையும் சமாளிக்கும் தன்மையடைந்துவிடும். இல்லாவிடின், அமைப்பு எதிர்தாக்குதலுக்கு சென்று கூடுதலான முறையில் இதன் மிகப்பழமைவாத கூறுபாடுகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி எவர் உயர்ந்தவர் எனப் போரிடும் பிளவு வகையில், கட்சியை பின்னுக்குத் தள்ளி "அமைதியை" மீளமைக்கும். இந்த இரண்டாம் நிகழ்வு மிகப் பெரும் துயரம் நிரம்பியதாகப் போய்விடும்; அது கட்சியின் வளர்ச்சியை தடுக்காது என்பதை கூறத்தேவையில்லை; ஆனால் அந்த வளர்ச்சி கணிசமான முயற்சிகள், எழுச்சிகள் என்பவற்றினூடாகத்தான் நடைபெறும். இந்த வழிவகை இன்னும் கூடுதலான முறையில் கட்சிக்கு ஆபத்து விளைவிக்கும், சிதைக்கும், விரோதப்போக்குத்தன்மையுடைய பிரிவினரை ஊட்டிவளர்ப்பதாகவே இருக்கும். இந்த இருவகையான சாத்தியப்பாடுகளை பற்றித்தான் நாம் கவனத்திலெடுக்கவேண்டும்.
"புதிய பாதை" என்ற தலைப்பில் என்னுடைய கடிதம் உள்ளது; அதன் நோக்கம் கட்சியை முதல் பாதையில் அழைத்துச் செல்வது; அது மிகவும் சிக்கனமானதும், சரியானதும் ஆகும். அது அளிக்கும் நிலைப்பாட்டில் நான் முழுமையாக நிற்பதுடன் எவ்விதமான ஒருதலைப்பட்சமான, ஏமாற்றுத்தமான விளக்கங்களையும் நிராகரிக்கிறேன்.
அத்தியாயம் 4
அதிகாரத்துவவாதமும் புரட்சியும்
(உரையாற்றமுடியாமல் போன ஆசிரியரின் அறிக்கையின் சுருக்கம்)
1. ஒரு சோசலிச உயர் இலக்கை அடைவதில் தடுப்பை ஏற்படுத்தும் முக்கிய நிலைமைகள், மேலும் புரட்சிக்கு சில நேரங்களில் வேதனை தரும் சோதனைகளாகவும் புரட்சிக்கு பெரும் ஆபத்தாகவும் உள்ளன என்பது நன்கு தெரிந்ததே. அவையாவன: அ) போர்க்கால கம்யூனிசத்தில் இயல்பாகவே அழுத்தி வைக்கப்பட்டிருந்த புரட்சியின் உள் சமூக முரண்பாடுகள்; ஆனால் இவை புதிய பொருளாதார கொள்கையின் (NEP) கீழ் தவிர்க்கமுடியாது வெளிப்பட்டு தனது அரசியல் வெளிப்பாட்டை காண முற்படுகின்றன; ஆ) சோவியத் குடியரசிற்கு, ஏகாதிபத்திய அரசுகளினால் பிரதிநிதித்துவப்படும் நீடித்த எதிர்ப்புரட்சிகர அச்சுறுத்தல்.
2. புரட்சியின் சமூக முரண்பாடுகள் என்பன அதன் வர்க்க முரண்பாடுகளாகும். எமது நாட்டின் முக்கிய வர்க்கங்கள் பின்வருமாறு: அ) பாட்டாளி வர்க்கம். ஆ) விவசாயிகள், இ) புதிய முதலாளித்துவ வர்க்கமும் அதனை சுற்றியுள்ள முதலாளித்துவ புத்திஜீவிகளும் ஆகும்.
பொருளாதார பங்கு மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ற நிலைப்பாட்டில் இருந்து நோக்கினால் முதலாவது இடத்தில் அரசினுள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பாட்டாளி வர்க்கமும், எமது பொருளாதாரத்தில் ஆதிக்கம் செய்யும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் உள்ளனர். புதிய முதலாளித்துவ வர்க்கம் முக்கியமாக சோவியத் தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும், அதேபோன்று சோவியத் தொழிற்துறையின் வேறுபட்ட பிரிவுகளிடையேயும் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் வேறுபட்ட பிரிவுகளிடையேயும் ஒரு இடைத்தரகர் பங்கை வகிக்கின்றது. தனது வர்த்தக இடைத்தரகர் என்ற தனது பங்குடன் மட்டும் நின்றுவிடாது உற்பத்தியை ஒழுங்கமைப்பது என்ற பங்கையும் வகிக்கின்றது.
3. மேற்கில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வளர்ச்சியின் விரைவு பற்றிய கேள்வியை சற்று ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், எமது புரட்சியின் போக்கு எமது பொருளாதாரத்தின் மூன்று அடிப்படை கூறுபாடுகளின் ஒப்புமையிலான வளர்ச்சியானால் நிர்ணயிக்கப்படும்; அரசு தொழிற்துறை, விவசாயம், தனியார் வர்த்தக-தொழிற்துறை மூலதனம்.
4. தாராளவாதிகளாலும், மென்ஷிவிக்குகளினாலும் தங்களது சொந்த வளர்ச்சிக்கும், மனச் சமாதானத்திற்குமாக செய்யப்படும் பெரும் பிரெஞ்சுப் புரட்சி (ஜாக்கோபின்களின் வீழ்ச்சி) உடனான வரலாற்று ஒப்புமைகள் மேம்போக்கானவை, முரண்பாடானவை. ஜாக்கோபின்களின் வீழ்ச்சி என்பது சமூக உறவுகளில் முதிர்வடையாத தன்மையினால் முதலிலேயே உறுதியாகியிருந்தது; இடது பிரிவு (அழிவிற்குட்பட்டிருந்த கைவினைஞர்களும் வணிகர்களும் நிறைந்த), பொருளாதார வளர்ச்சி வரக்கூடும் என்ற வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், புரட்சிக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்க முடியாமற் போயிற்று; (பூர்ஷுவாவான) வலது பிரிவு தவிர்க்கமுடியாமல் வளர்ச்சியுற்றது; இறுதியில், பொருளாதார, அரசியல் ரீதியில் கூடுதலாக பின்தங்கியிருந்த ஐரோப்பா பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி பரவுதலை தடுத்துவிட்டது.
இத்துறைகள் அனைத்திலும் எமது நிலைமை ஒப்பிடமுடியாத அளவிற்கு சாதகமான தன்மைகளை கொண்டிருந்தது. நம்மை பொறுத்தவரையில், புரட்சியின் இடது அணியாகவும் மற்றும் கருவுமாக பாட்டாளி வர்க்கம் இருந்தது; இதன் பணிகளும் இலக்குகளும் சோசலிச கட்டமைப்பிற்கான பணிகளுடன் முற்றிலும் இயைந்து இருந்தன. சில வரம்புகளுக்குள் ஒரு புதிய முதலாளித்துவ வர்க்க அமைப்பை அனுமதித்திருந்தபோதிலும்கூட, பாட்டாளி வர்க்கம் அரசியல் ரீதியாக மிகவும் வலுவுற்றிருந்தது; அரசு அதிகாரத்தில் விவசாயிகள் பங்கெடுத்துக் கொள்வதற்கு அது பூர்ஷ்வா, குட்டி முதலாளித்துவ கட்சிகளை இடைத்தரகராக நாடாமல், நேரடியாக கொண்டிருந்தது; இதன் விளைவாக பூர்ஷ்வா அரசியல் வாழ்வில் பங்குபெறுதல் தடைக்குட்பட்டது. ஐரோப்பாவில் இருக்கும் பொருளாதார, அரசியல் நிலைமை புரட்சியின் பரவுதலை தனது எல்லைக்குள் தடுக்கமுடியாத தன்மையை கொண்டுள்ளது என்பதோடு, தன்னுடைய பகுதிக்கு அப்பாலும் புரட்சி பரவுதலை தவிர்க்க முடியாதாக்கியது.
இதன் விளைவாக, பிரான்சில், ஜாக்கோபின்களின் மிக தீர்க்கதரிசனமான கொள்கையால் கூட நிகழ்வின் போக்கை தீவிரமாய் மாற்றுவதற்கு ஆற்றலற்ற நிலையில், நம்மை பொறுத்தவரையில், நிலைமை முடிவிலா வகையில் பெரும் சாதகத்தை கொடுத்ததால், அதுவும் மார்க்சிச முறையின் படி பெறப்பட்ட சரியான அரசியல் நிலைப்பாடு, புரட்சியை பாதுகாக்கப்பதில் ஒரு தீர்மானகரமான காரணியாக கணிசமான காலத்திற்கு இருக்கும்.
5. வரலாற்று முன்கருத்து ஒன்று நமக்கு கூடுதலான சாதகமற்றதாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். தனியார் மூலதனத்தின் விரைவான வளர்ச்சி ஏற்பட்டது என்றால், கூட்டுறவு உட்பட சோவியத் தொழிற்துறை, வர்த்தகம் விவசாய பொருளாதார தேவைகளை திருப்திப்படுத்துவதை உறுதிசெய்யவில்லை என்பது பொருளாகும். மேலும் தொழிலாளர் அரசிற்கும் விவசாயிகளுக்கும் இடையே தனியார் மூலதனம் கூடுதலான வகையில் குறுக்கீடு செய்வதுடன், அது கூடுதலான பொருளாதார செல்வாக்கையும், எனவே பிந்தையதன் மீது அரசியல் செல்வாக்கையும் கொள்ளுகிறது என்பதை காட்டும். சோவியத் தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே அத்தகைய முறிவு ஏற்படுதல் என்பது பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கு வெற்றியை கொடுக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது என்பதும் புலனாகும்.
6. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார முன்கருத்து அடையப்படக் கூடியது என்றால், எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கான அரசியல் வழிவகைகள் யாவை? பலவிதங்களில் அது நேரலாம்: தொழிலாளர்கள் கட்சி நேரடியாக தூக்கி எறியப்படலாம்; அல்லது அது கூடுதலான வகையில் சீரழிவை அடையலாம்; அல்லது இறுதியாக ஓரளவு சீரழிவு, பிளவுகள், எதிர்ப்புரட்சிகர எழுச்சிகள் அனைத்தும் ஒன்றாகத் தோன்றலாம்.
இத்தகைய விளைவுகளில் ஏதேனும் ஒன்று ஏற்படுதல் என்பது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை பொறுத்து இருக்கும். அரச மூலதனத்தை ஆதிக்கத்திற்குட்படுத்துவதில் தனியார் மூலதனம் சிறிது சிறிதாக நாளடைவில் வெற்றி பெற்றால், அரசியல் நடைமுறை பாதை அரச எந்திரத்தின் சீரழிவு முக்கியமாக பூர்ஷ்வா திசையில் வடிவத்தைக் கொள்ளும்; இதை ஒட்டி கட்சியிலும் விளைவுகள் ஏற்படும். தனியார் மூலதனம் விரைவில் பெருகி விவசாயிகளுடன் பிணைப்பு காண்பதில் வெற்றி கொண்டால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இயக்கப்பட்ட தீவிர எதிர்ப்புரட்சிகர சக்திகள் ஒருவேளை வெற்றியடையக் கூடும்.
இத்தகைய வெளிப்படையான முன்கருத்துக்களை தைரியமாக வைக்கிறோம் எனக் கூறினால், வரலாற்று ரீதியாக அவை சாத்தியமானவை என்பதற்காக அல்ல (மாறாக, அப்படி ஏற்படக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவுதான்); அவ்விதத்தில் பிரச்சினையை எழுப்புவதுதான் இன்னும் சரியான வகையில் ஆராய உதவும் என்பதற்காகவும், பன்முக வகையில் வரலாற்று திசைவழி கொண்டு அதன் விளைவாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் இப்படிக் கருதி ஆராய்கிறோம். புதிய போக்குகளையும், புதிய ஆபத்துக்களையும் அவை கரு நிலையில் இருக்கும்போதே உணர்ந்து வேறுபடுத்தி ஆராய்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் எமது மார்க்சிசவாதிகளின் மேம்மபட்டநிலை உள்ளது.
7. பொருளாதாரத் துறையில் நாம் ஏற்கனவே கூறியுள்ளதில் இருந்து கிடைக்கக் கூடிய முடிவு நம்மை "கத்திரிக்கோல்" பிரச்சினைக்கு கொண்டு வருகிறது: அதாவது தொழிற்துறையை அறிவார்ந்த முறையில் ஒழுங்கமைத்தலும், அதை விவசாயச் சந்தையுடன் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுதலும் ஆகும். இதில் காலத்தை நழுவவிட்டால் அது தனியார் மூலதனத்திற்கு எதிரான எமது போராட்டம் மெதுவான வேகத்தை கொண்டு விடும். அங்குத்தான் எமது முக்கிய பணி, அதாவது புரட்சி, சோசலிசம் பற்றிய பிரச்சினையின் முக்கிய திறவு கோல் உள்ளது.
8. நாம் கூறியபடி சில சமூக உறவுகளை ஒட்டி, எதிர்ப்புரட்சிகர ஆபத்து எழுச்சியுறுகிறது என்றால், ஒரு அறிவார்ந்த கொள்கையினால் அந்த ஆபத்தை தடுத்துவிட முடியாது என்று பொருள் ஆகாது (புரட்சியில் சாதகமற்ற பொருளாதார நிலைமையிலும் கூட அத்தன்மைதான்); அதேபோல் அந்த ஆபத்தை குறைத்தல், அகற்றல், ஒத்திப்போடுதல் என்பவை நிகழாது என்றும் பொருளாகாது. அப்படி ஒத்திப்போடுதல், மாறாக சாதகமான பொருளார மாற்றத்தை உள்நாட்டில் கொள்ளுவதனாலும் அல்லது ஐரோப்பாவில் வெற்றிகரமான புரட்சியுடன் தொடர்புபடுத்தும் வரையிலும் புரட்சியை பாதுகாப்பது சாத்தியமாகும்.
எனவேதான், மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருளாதார கொள்கையின் அடிப்படையில், நாம் திட்டவட்டமான அரசு மற்றும் கட்சிக் கொள்கைகளை கொள்ள வேண்டும் (இதில் கட்சிக்குள் கடைபிடிக்கப்படவேண்டிய உறுதியான கொள்கையும் அடங்கும்); அத்தகைய கொள்கை பொருளாதார வளர்ச்சி சந்திக்கும் இடர்பாடுகள், தோல்விகள் ஆகியவற்றால் ஊட்டமுற்று, அதனால் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான போக்குகளின் குவிதல் மற்றும் ஒருங்கிணைக்கப்படுதல் ஆகியவற்றை எதிர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கும்.
9. எமது கட்சியில் சமூக கூட்டமைப்பின் பன்முகத்தன்மை புரட்சியின் வளர்ச்சியின் புறநிலை முரண்பாடுகளை பிரதிபலிக்கிறது; அத்துடன் அதில் இருந்து விளையும் போக்குகள், ஆபத்து ஆகியவையும் வெளிப்படுத்தப்படுகின்றன.
10. கட்சியின் தொடர்பு புரட்சியின் அடிப்படை வர்க்கத்துடனான உறவிற்கு உத்தரவாதம் கொடுக்கும் தொழிற்சாலை கருக்கள் இப்பொழுது கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பகுதி என்றுதான் உள்ளது.
அவற்றின் அனைத்து எதிர்மாறான பக்கங்கள் இருந்தபோதிலும்கூட, சோவியத் அமைப்புக்களின் சிறு குழுக்கள் கட்சிக்கு தன்னுடைய அரச எந்திரத்தின் மீதான தலைமையை உத்தரவாதம் அளிக்கின்றன; இந்த குழுக்களின் மிகப்பெரிய விஷேடமான பலத்தையும் இவைதான் நிர்ணயிக்கின்றன. பழைய போராளிகளின் மிகப் பெரிய விகிதத்தினர் கட்சியின் வாழ்வில் இந்த சோவியத் குழுக்கள் மூலம்தான் பங்கு பெறுகின்றனர்.
இந்த கிராமப்புற சிறுகுழுக்கள் கட்சிக்கு கிராமப்புறத்துடன் உறுதியான தொடர்புகளை (மிக பலவீனமாக இருந்தாலும்) உருவாக்குகின்றன.
இராணுவ சிறுகுழுக்கள் கட்சியின் தொடர்பை இராணுவத்துடன் முறையாக வைத்திருக்கின்றன; (எல்லாவற்றிற்கும் மேலாக) இராணுவத்தின் மூலம் கிராமப்புறத்துடனும் தொடர்பை கொண்டுள்ளன.
இறுதியாக, கல்விக் கூடங்களில் இருக்கும் சிறுகுழுக்களில், இந்தப் போக்குகள், செல்வாக்குகள் அனைத்தும் ஒன்றாக கலந்து பரவி நிற்கின்றன.
அவற்றின் வர்க்கச் சேர்க்கையினால், தொழிற்சாலை சிறுகுழுக்கள் அடிப்படையானவை என்பதை கூறத்தேவையில்லை. ஆனால் அவை கட்சியில் ஆறில் ஒரு பங்கை தான் கொண்டுள்ளன என்பதால், அவர்களுடைய மிகத் தீவிரமான பிரிவுகள் எடுக்கப்பட்டு கட்சிக்கு அல்லது அரச எந்திரத்திற்கு வழங்கப்படுகின்றன; எனவே கட்சி துரதிருஷ்டவசமாக, தற்போதைக்கு பிரத்தியேக முறையிலோ, ஒரு கொள்கைவழிப்பட்ட முறையில்கூட அவர்களை சார்ந்திருப்பதற்கு முடியவில்லை.
அவர்களின் வளர்ச்சி தொழில்துறையிலும், பொருளாதாரத்திலும் பொதுவாக கட்சியின் வெற்றிக்கு உறுதியான அளவுகோலாக இருக்கும்; அதே நேரத்தில் கட்சி தன்னுடைய பாட்டாளி வர்க்க தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் என்பதற்கு உறுதியான உத்தரவாதமாகவும் இருக்கும். ஆனால் அவற்றின் விரைவான வளர்ச்சியை உடனடி வருங்காலத்தில் எதிர்பார்ப்பது என்பது மிகவும் கடினமாகும். இதன் விளைவாக, கட்சி அடுத்த காலகட்டத்தில் தன்னுடைய உள் சமநிலையை உறுதியாக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்; அதன் புரட்சிகர வழிவகையை காத்துக் கொள்ளுவதற்கு பன்முகப்பட்ட சமூக சேர்க்கையை சார்ந்திருப்பதும் கட்டாயமாகும்.
11. எதிர்ப்புரட்சிகர போக்குகள் தங்களுக்கான ஆதரவை, கட்சிக்காரர்களைவிட, குலாக்குகள் (kulak- ரஷ்ய பெரும் நிலச்சுவாந்தார்கள்), இடைத்தரகர்கள், சில்லறை வியாபாரிகள், சுருங்கச் சொன்னால் அரசாங்க அமைப்பை சூழ்ந்து நிற்கும் ஆற்றல் உடைய சலுகை பெறுபவர்களிடையேதான் பெறமுடியும் என்று ஆகும். விவசாயிகள் மற்றும் இராணுவ சிறுகுழுக்கள் தான் இன்னும் கூடுதலான முறையில் குலாக்குகளின் ஊடுருவலுக்கும் நேரடிச் செல்வாக்கின் அச்சுறுத்தலுக்கும் உட்படக்கூடும்.
ஆயினும்கூட, விவசாயிகளை வேறுபாடு கண்டறிதல் நமக்கு ஆதரவு கொடுக்கும் காரணியை பிரதிபலிக்கிறது. குலாக்குகளை இராணுவத்தில் இருந்தும் (பிராந்திய பிரிவுகளில் இருந்து உள்பட) ஒதுக்குவது என்பது, கடுமையான விதியாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல், கூடுதலான வகையில் கிராமப்புற இளைஞர்கள், இராணுவ பிரிவுகள், இராணுவ குழுக்கள் ஆகியவற்றின் அரசியல் கல்வியூட்டல்களுக்கான முக்கியமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இராணுவ சிறுகுழுக்களில் தங்களுடைய பிரதான பாத்திரத்திற்காக தொழிலாளர்கள், புத்துயிர் பெற்றுவந்துள்ள குலாக்களுக்கு எதிராக கிராமப்புறத்து தொழிலாளர் திரட்டை அரசியல்ரீதியாக செல்வாக்கு செலுத்தும்வகையில் எதிர்கொண்டு நிற்பர். கிராமப்புற குழுக்களிலும் இத்தகைய எதிர்த்துநிற்கும் முறை பயன்படுத்தப்படும். நீண்டகாலப்போக்கில், எந்த அளவிற்கு அரசு தொழிற்துறை கிராமப்புற மக்களின் தேவைகளை திருப்தி செய்வதில் வெற்றி அடைகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தப்பணியின் வெற்றி அமையும்.
ஆனால், எமது பொருளாதார வெற்றியின் வேகம் எப்படி இருந்தாலும், இராணுவ சிறுகுழுக்களில் எமது அடிப்படை அரசியல் நிலைப்பாடு, இடைத்தரகர்களுக்கு (Nepmen) எதிராக மட்டுமாக மட்டும் அல்லாது, முக்கியமாக புத்துயிர் பெற்றுள்ள குலாக் பிரிவினருக்கு எதிராகவும் இருக்க வேண்டும்; அவர்கள்தான் வரலாற்று ரீதியாக அனைத்து எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கும் தீவிர ஆதரவு கொடுப்பவர்களாக வரக்கூடும். இவ்விதத்தில் இராணுவத்தின் பல பிரிவுகளை பற்றியும் நாம் இன்னும் கூடுலான, விரிவான ஆய்வை அவர்களின் சமூகச்சேர்க்கையின் நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்வது தேவையாகும்.
12. கிராமப்புற, இராணுவ சிறுகுழுக்களின் மூலம், ஏறக்குறைய கிராமப்புறத்தை பிரதிபலிக்கும் போக்குகள், தனித்தன்மையுடன், நகரத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் போக்குகள் கட்சிக்குள் வடிகட்டப்படும் மற்றும் தொடர்ச்சியாக வடிகட்டும். அப்படியில்லை என்றால், கிராமப்புற சிறுகுழுக்கள் கட்சியினுள் எந்தவித மதிப்பையும் கொண்டிருக்க முடியாது.
இக்குழுக்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளில் ஏற்படும் மாறுதல்கள் கட்சிக்கு ஓர் எச்சரிக்கையாக அல்லது நினைவூட்டலாக என்று இருக்கும். இந்த குழுக்களை கட்சியின் திசையில் இயக்கும் தன்மை கட்சியின் பொதுவான திசையின் சரியான தன்மையை பொறுத்தும், அதன் உள் ஆட்சியின் தன்மையை பொறுத்தும் இருக்கும்; இறுதி ஆய்வில் "கத்தரிக்கோல்" பிரச்சினையை தீர்ப்பதை அல்லது தணிப்பதை நோக்கி நெருங்குகின்றோமா என்பதே நிர்ணயிக்கும்.
13. அதிகாரத்துவவாதத்தின் முக்கியமான ஆதாரமாக அரசு எந்திரம் உள்ளது. ஒரு புறத்தில், இது ஏராளமான செயற்பாட்டு கட்சிப் பிரிவினரை உள்ளிழுத்துக் கொள்ளுகிறது; அவர்களில் மிகத் திறமையானவர்களுக்கு மனிதர்களையும், பொருட்களையும் நிர்வகிக்கும் வழிவகைகளை கற்பிக்கிறது; வெகுஜனங்களின் அரசியல் தலைமைக்கு பதிலாக ஆகும். மறு புறத்தில், இது தன்னுடைய நிர்வாக முறைகளின் ஆதிக்கத்தின் மூலம் கட்சியின் கவனத்தையும் பெரிதும் கவர்ந்துகொண்டுவிடுகிறது.
எனவே, மிகப் பெரிய வகையில், கட்சியை மக்களிடம் இருந்து பிரிக்கும் அச்சுறுத்தலை கொண்டவகையில் அமைப்பின் அதிகாரத்துவமயமாக்கம் அமைந்து விடுகிறது. இப்பொழுது நேரடியாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாக காணப்படுவது இந்த ஆபத்துத்தான். இப்பொழுதுள்ள நிலைமையில் மற்ற ஆபத்துக்களுக்கு எதிரான போராட்டம் அதிகாரத்துவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் தொடங்க வேண்டும்.
14. அதிகாரத்தில் இருப்பவர்களுடைய தீய பழக்கங்களின் கூட்டுத்தான் அதிகாரத்துவம் என்று கருதுவது மார்க்சிசவாதிகளுக்கு ஏற்புடையதன்று. அதிகாரத்துவம் என்பது மனிதர்களையும் பொருட்களையும் நிர்வகிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகமுறை உள்ள ஒரு சமூக நிகழ்வுப்போக்காகும். சமூகத்தின் பன்முகத்தன்மையில்தான் இதன் ஆழ்ந்த காரணங்கள் உள்ளன; மக்கட்தொகையின் பல குழுக்களின் அன்றாட, அடிப்படை நலன்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டில் இதன் ஆழ்ந்த தன்மை உள்ளது. மக்கட்தொகுப்பின் பரந்த பிரிவினரிடையே கலாச்சாரம் இல்லாத உண்மையால் அதிகாரத்துவம் கூடுதலான சிக்கலுக்குரியதாகின்றது. நம்மைப் பொறுத்தவரையில், அதிகாரத்துவத்தின் அடிப்படை ஆதாரம் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும் விவசாயிகளின் நலன்களையும் ஒன்றிணைக்கும் மற்றும் சரியான இயைபுடைய ஒரு பொருளாதாரத்தில் கொண்டு வந்து தக்க வைத்துக் கொள்ளும் ஓர் அரசு எந்திரத்தை உருவாக்கும் தேவையில் உள்ளது; ஆனால் அத்தகைய இயைபு அடைவதிலிருந்து நீண்டதூரத்தில் உள்ளோம். இதேபோல்தான் நிலையான இராணுவத்தை தக்கவைத்துக்கொள்ளுவதும் அதிகாரத்துவத்தின் மற்றொரு முக்கிய ஆதாரமாகும்.
நாம் தற்பொழுது பட்டியலிட்டுள்ள எதிர்மாறான நிகழ்வுப்போக்குத்தாம் அதிகாரத்துவத்தை வளர்த்து, இன்னும் வளர்ந்த நிலையில் புரட்சியை பேராபத்திற்கு உட்படுத்தக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த முன்கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்: அரசிற்கும் விவசாய பொருளாதாரத்திற்கும் இடையே பெருகும் பிளவு, நாட்டில் குலாக்குகளின் வளர்ச்சி, தனியார் வர்த்தக, தொழிற்துறை மூலதனத்துடன் அவர்கள் கொண்டுள்ள கூட்டு, ஆகியவை நாட்டில் கிராமப்புறத்தில் இருக்கும் உழைக்கும் மக்களுடைய குறைவான மட்டத்திலான கலாச்சார தரத்தோடு சேர்த்துப் பார்க்கப்படுகையில், ஓரளவு நகரங்களிலும் என்றும் கூறலாம், எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள் பின்னர் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைந்துவிடும்.
வேறுவிதமாகக் கூறினால், அரசிலும் கட்சி எந்திரத்திலும் அதிகாரத்துவம் என்பது எமது நிலைமையில் இயல்பாக இருக்கும் பெருந்துன்பம் தரும் தன்மையின் வெளிப்பாடு ஆகும்; எமது பணியில் இருக்கும் குறைபாடுகள், வேறு திசையில் செல்லும் தன்மை இவற்றின் வெளிப்பாடும் ஆகும்; இவை சில சமூக நிலைமைகளின் கீழ் புரட்சியின் அடிப்படையை உறிஞ்சிவிடக் கூடும். எனவே பலவற்றைப் போல, இதிலும், அளவு என்பது ஒரு கட்டத்தில் பண்பாகவும் மாற்றப்படும்.
15.அரசு எந்திரத்தின் அதிகாரத்துவவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது அசாதாரண முறையில் முக்கியமான, நீடித்த பணியாகும் இது எமது மற்ற அடிப்படை பணிகளான பொருளாதார மறுசீரமைப்பு, மக்களுடைய கலாச்சார தரத்தை உயர்த்துதல் என்பவற்றிற்கு கிட்டத்தட்ட இணையாக மேற்கொள்ளப்படவேண்டும். இப்பணிகள் அனைத்தையும் சாதிப்பதற்கு மிக முக்கியமான வரலாற்றுக் கருவி கட்சியாகும். இயல்பாக கட்சி கூட நாட்டின் சமூக, கலாச்சார நிலைமைகளில் இருந்து தன்னை பிரித்துக்கொள்ள முடியாது. ஆனால் முன்னணிப்படையின் தானாக முன்வந்த இயக்கம் என்ற வகையில், தொழிலாள வர்க்கத்தின் மிகச் சிறந்த, செயலூக்கமுள்ள மற்றும் மிக நனவுடைய கூறுகள், அது அரசு எந்திரத்தை அதிகாரத்துவ போக்குகளில் இருந்து தாமே காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்காக அது ஆபத்தை தெளிவாக உணர்ந்து, சிறிதும் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.
எனவேதான் தனிப்பட்ட முயற்சியின் அடிப்படையில், புதிய முறையில் அரச எந்திரத்தை இயக்குவதற்கும், அதனை முற்றாக மாற்றுவதற்கும் தேவையான வகையில் கட்சி இளைஞர்களுக்கு பயிற்றுவித்தல் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குறிப்புக்கள்
[1] ஏப்ரல் 14, 1917 ல் லெனின் பெட்ரோகிராட்டுக்கு திரும்பிவந்த பின்னர் வழங்கிய கருத்துக்களே ஏப்ரல் ஆய்வுரைகள் ஆகும். போல்ஷிவிக் தலைமை (காமெனேவ், சினோவியேவ், ஸ்ராலின்) ஆகியோர் முதலாளித்துவ அரசாங்கத்தை நோக்கி சமரச நிலைப்பாட்டை கொண்டதை ஏப்ரல் ஆய்வுரைகள் தாக்கின. இவ்வாய்வுகள் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கான கட்சியாக மாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் திறனுடையதாக ஆக்கியதுடன் அரசாங்கத்துடன் சமரசம் காணும் முயற்சிகளுக்கு எதிராகவும் செய்தது.
[2] தொழிலாளர்கள் குழு என்பது போல்ஷிவிக் கட்சிக்குள் தலைமையை எதிர்த்த பல எதிர்ப்பு குழுக்களில் ஒன்றாகும்.
[3] Myaznilov, "Workers' Group" உடைய தலைவராக இருந்தார்; இது போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு சந்தர்ப்பவாதப் பிரிவாக இருந்தது. இதன் உறுப்பினர்கள் 1922ஆம் ஆண்டு கட்சியின் 11வது காங்கிரசில் வெளியேற்றப்பட்டனர்.
[4] ரீட், 19ம் நூற்றாண்டு அமெரிக்க நாவலாசிரியர் ஆவார்.
[5] 19ம் நூற்றாண்டில் பிங்கர்டன் துப்பறியும் நிறுவனம் அமைக்கப்பட்டது; இது தனிப் போலீசார் அமைப்பாக இருந்து, முற்போக்கு, தொழிலாளர் அமைப்புக்களில் அந்த அமைப்புக்களை அழிக்க வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்தைக் கொண்டிருந்தது.
[6] The Workers Opposition என்பது போல்ஷிவிக் கட்சிக்குள் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த மிகவும் அறியப்பட்ட எதிர்ப்பிரிவாக விளங்கியது. போல்ஷிவிக் கட்சியில் முக்கிய பெண்ணுரிமைவாதியாக இருந்த Alexandra Kollantai இப்பிரிவில் நன்கு அறியப்பட்டிருந்த தலைவர் ஆவார். தொழிலாளர் எதிர்ப்பு என்பது ஒரு தொழிற்சங்கவாத முன்னோக்கை கொண்டிருந்ததுடன் அதில் அனைத்துப் பொருளாதாரக் கட்டுப்பாடும் தொழிற்சங்கங்களுக்குக் கொடுத்துவிடப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.