David North
1917 சரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்கள் மீது ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரத்தை திணிக்க தீர்மானமாக இருந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய இரக்கமற்ற கிளர்ச்சியாளர்களால் செயற்படுத்தப்பட்ட ஒரு திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு, அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு சதியே, ரஷ்ய புரட்சியாகும் என்பது மார்க்சிச-விரோத இலக்கிய மூலச்சரக்குகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வாதத்தின்படி, போல்ஷிவிக் கட்சியானது 1917க்கு முன்னர் இருந்த ஒரு சிறிய கன்னை என்பதற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை, அத்துடன் அது அதிகாரத்திற்கு வர முடிந்ததென்றால் அதற்கு காரணம் புரட்சியால் விளைந்த பாரிய குழப்பத்தை அதனால் சுரண்ட முடிந்ததாகும். ஆனால் மொத்த குழப்பத்திற்கும் காரணமான அந்த புரட்சி எங்கே இருந்து வந்தது? ஹார்வார்ட் பல்கலைக்கழக வரலாற்றாளர் ரிச்சார்ட் பைப்ஸ் வலியுறுத்துகையில், அந்த புரட்சி முற்றிலுமாக பித்துப்பிடித்த புத்திஜீவிகளின் வேலைகளால் ஏற்பட்டதாகும், "நாம் அவற்றை, புத்திஜீவிகளின் அதிகார வேட்கை என்று வரையறுக்கிறோம். அவர்கள், மக்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கான புரட்சியாளர்களாக இருக்கவில்லை மாறாக மக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்காகவும் மற்றும் அவர்களின் சொந்த கருத்துவிளக்கங்களை மறுசீரமைத்துக் கொள்வதற்காகவும் இருந்தார்கள்” என்கிறார். 2

1980களில் இருந்து எண்ணற்ற வரலாற்றாளர்கள், 1917க்கு முந்தைய ரஷ்ய தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் அதன் அரசியல் வாழ்க்கையையும் குறித்து மிகவும் விரிவான சித்திரத்தை வழங்க முயன்றிருக்கிறார்கள். இத்தகைய பணிகளில் சிறப்பானவை, அந்த மக்களிடையே என்ன நடந்த கொண்டிருந்தது என்ற புரிதலை வாசகர்களுக்கு வழங்குவதுடன், 1917க்கு முன்பிருந்தே தொழிலாள வர்க்கத்திற்குள் செல்வாக்குமிக்க அரசியல் பிரசன்னத்தை போல்ஷிவிக்குகள் ஸ்தாபித்திருந்தார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் பிரசித்திபெற்ற அமைப்புகளுக்குள் பலமான இடத்தைக் கொண்டிருந்த மென்ஷிவிக்குகள், 1914 வாக்கில், போல்ஷிவிக்குகளின் எழுச்சிக்கு முன்னால் தலைகீழாக பின்னடைவில் இருந்தார்கள். ஆகவே 1917க்கு முந்தைய ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்திக்குள் அனுபவரீதியிலான-அடித்தளத்திலான ஆராய்ச்சியை பேராசிரியர் ரிச்சார்ட் பைப்ஸ் கண்டித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சோவியத் ஒன்றியத்திலும் அத்துடன் மேற்கிலும், அதுவும் குறிப்பாக அமெரிக்காவில், அவர்களின் பேராசிரியர்களால் வழிநடத்தப்பட்ட பெருந்திரளான பட்டப்படிப்பு மாணவர்கள், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் தொழிலாளர் தீவிரத்தன்மை குறித்த சான்றுகளை வெளிப்படுத்தும் நம்பிக்கையில், வரலாற்று ஆதாரங்களையெல்லாம் அடியிலிருந்து கிளறிப்பார்த்திருந்தனர். அதன் விளைவுகளாக, மிகவும் அர்த்தமற்ற சம்பவங்கள் மற்றும் புள்ளிவிபரங்களோடு நிறைந்த பெரிய பெரிய கனமான புத்தகங்கள் இருக்கின்றன, வரலாறு எப்போதும் ஆர்வமூட்டக் கூடியதாக இருக்கின்ற போதினும், அந்த வரலாற்று புத்தகங்களோ வெற்றுரைகளாக மற்றும் சோர்வூட்டுவனவாக இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன. 3

போல்ஷிவிக்குகளால் அதிகாரம் கைப்பற்றப்படுவதற்கு முந்தைய தசாப்தத்தில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினது அரசியல் அபிவிருத்தி குறித்துவொரு சிறிய பார்வையை அளிக்க, அத்தகைய சில "கனமான பெரிய புத்தகங்களையும்" நான் பயன்படுத்துவேன், அத்துடன் அவர்களின் "அர்த்தமற்ற சம்பவங்கள் மற்றும் புள்ளிவிபரங்களையும்" இதில் மேற்கோளிட்டுக் காட்டுவேன். 1905 புரட்சியின் தோல்வி, புரட்சிகர அமைப்புகளின் எண்ணிக்கைசார்ந்த பலத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஓர் திகைப்பூட்டும் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. புரட்சிகர எழுச்சியின் ஆண்டுகளில், 1905 மற்றும் 1907க்கு இடையே, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் (RSDLP) இரண்டு ஒன்றுக்கொன்று விரோதமான கன்னைகளான போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் ஆகிய இருதரப்பினரதும் எண்ணிக்கை பத்தாயிரக் கணக்கில் வளர்ந்திருந்தது. 1907 ஜூனுக்குப் பின்னர் அவற்றின் பாரிய அங்கத்தவர் எண்ணிக்கை சரியத் தொடங்கியது. தோல்வியின் தாக்கம் பரந்த விரக்தியை உண்டாக்கி இருந்தது. புரட்சிகர அரசியலும் அபிலாஷைகளும், போராட்டத்தில் ஆண்டுக் கணக்காக அர்ப்பணித்திருந்த காரியாளர்களாலும் கூட கைவிடப்பட்டன. ரஷ்ய புத்திஜீவிகளின் பரந்த பிரிவுகளின் மத்தியில் ஏற்பட்ட மாற்றம், மதத்திற்குத் திரும்புவது மற்றும் ஆபாச இயல் கருத்துக்கள் (pornography) மீதான ஆர்வம் உட்பட, எல்லாவிதமான பிற்போக்கு மனோபாவத்தையும் மலரச் செய்திருந்தது; புரட்சிகர இயக்கத்தின் அங்கத்தவர்களிடையே அதன் பிரதிபலிப்பையும் கண்டது. 1910 வாக்கில், ட்ரொட்ஸ்கியின் கருத்துப்படி, ரஷ்யாவிற்குள் இருந்த லெனினின் விசுவாசமான மற்றும் செயலூக்கத்துடன் இருந்த தொடர்புகள் சுமார் பத்து பேர் என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது.

எவ்வாறிருந்த போதினும், அதுவொரு ஆக்கபூர்வமற்ற காலகட்டமாக இருக்கவில்லை. லெனினும் ட்ரொட்ஸ்கியும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், 1905இன் சம்பவங்களைப் பகுத்தாராய்ந்து வந்தனர், மேலும் 1917இன் சோசலிச புரட்சியின் வெற்றிக்கு அடித்தளங்களை அமைத்த மூலோபாய படிப்பினைகளையும் ஆராய்ந்து வந்தனர். ட்ரொட்ஸ்கியை பொறுத்த வரையில், ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சி என்பது தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தலைமை ஏற்க முடியும் என்பதையும், ஜனநாயகப் புரட்சி அதிகரித்தளவில் சோசலிச திசையை எடுக்குமென்பதையும் 1905 புரட்சி எடுத்துக்காட்டி இருந்தது.

ரஷ்ய புரட்சியின் இந்த சமூக-அரசியல் இயக்கவியல் மீதான உள்ளார்ந்த பார்வை நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

லெனினைப் பொறுத்த வரையில், 1905இன் அனுபவங்கள் போல்ஷிவிசம் மற்றும் மென்ஷிவிசத்திற்கு இடையிலான முரண்பாடுகளை ஆழமாக பகுத்தாராய அவரை இட்டுச் சென்றன. “அவை சோசலிச தொழிலாளர் இயக்கத்தினது பிளவின் முக்கியத்துவத்தின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. 1905 புரட்சி முழுவதிலும் மென்ஷிவிக்குகளால் பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயங்கள் லெனினின் நம்பிக்கையை, அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீது தாராளவாத முதலாளித்துவத்தின் செல்வாக்கைப் பிரதிபலித்த ஒரு சந்தர்ப்பவாத போக்கை மென்ஷிவிசம் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கு மென்ஷிவிசத்தின் இந்த அரசியல் குணாம்சத்தை, தொழிலாள வர்க்கத்தின் முன்னால் அம்பலப்படுத்தும் போராட்டத்தை உறுதியாக ஆழமாக்க வேண்டியது அவசியமென்று லெனின் வலியுறுத்தினார்.

1905இல் மயிரிழையில் தப்பித்த பின்னர், சூட்சும புத்தி பிரதம மந்திரி ஸ்டோலிபின் (Stolypin) தலைமையின்கீழ், ஜாரிச ஆட்சி அதன் அரசியல் வாய்ப்புவளங்கள் புத்துயிரூட்டப்பட்டதை அனுபவித்து வந்தது. இருந்தபோதினும், தொழிலாளர் இயக்கம் ஒரு புதிய தீவிர நடவடிக்கை கட்டத்திற்குள் நுழைந்திருந்த நிலையில், 1911இல் இரகசிய பொலிஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்டோலிபினின் படுகொலை, ஜாரின் மிக தகைமை வாய்ந்த மந்திரியை பதவியிலிருந்து நீக்கியது. 1912இன் பாரிய வேலைநிறுத்தங்கள் போல்ஷிவிக் செல்வாக்கு வேகமாக வளர சாதகமான ஒரு புதிய அரசியல் சூழ்நிலைமையை உருவாக்கியது.

1907இல் இருந்து 1912 வரையிலான பிற்போக்கு காலகட்டம், மென்ஷிவிக்குகள் மத்தியில் வலதை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பத்தை உண்டாக்கி இருந்தது. உண்மையில், மென்ஷிவிக்குகள் ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் பலவீனமான பக்கத்தை —அதாவது, சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் ஜேர்மன் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதை— அவர்களுக்கு தூண்டுதலாக எடுத்துக் கொண்டு, முதலாளித்துவ தாராளவாதிகளின் அரசியல் வட்டத்திற்குள் நகர்ந்தார்கள், மற்றும் அவர்களின் அபிலாஷைகள் ஒரு தீர்க்கமான சீர்திருத்தவாத வர்ணத்தை ஏற்றது. பிற்போக்கு காலகட்டத்தின் போது, மென்ஷிவிக்குகள் முதலாளித்துவ தாராளவாத கடேட்டுகளுடன் (அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி) அவர்களுக்கு இருந்த தொடர்புகளால் ஆதாயமடைந்திருந்தார்கள். ஆனால் 1912இல் இருந்து தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுடன், தொழிற்சங்கங்களில் மென்ஷிவிக்குகள் அப்போது செல்வாக்கு பெற்றிருந்தார்கள் என்றபோதினும் கூட, போல்ஷிவிக்குகள் அவர்களைக் கடந்து செல்ல தொடங்கினார்கள்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயப்பட்ட தன்மைக்கு ஒரு அறிகுறி, பீட்டர்ஸ்பேர்க் உலோக தொழிலாளர்கள் சங்கத்தின் ஒரு கூட்டத்தில், ஏப்ரல் 1913இல் வெளிப்பட்டது. அந்த அமைப்பு பல ஆண்டுகளாக மென்ஷிவிக்குகளின் செல்வாக்கில் இருந்திருந்தது. இருந்தபோதினும், 700இல் இருந்து 800 தொழிலாளர்களுடன், அந்த கூட்டம் தொழிற்சங்கத்தின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு ஒரு போல்ஷிவிக் பெரும்பான்மையை தேர்ந்தெடுத்தது. 4

ஆகஸ்ட் 1913இன் இறுதியில், ஒரு நிரந்தர நிர்வாக குழுவிற்கான இரண்டாவது தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 5,600 தொழிற்சங்க உறுப்பினர்களில் 1,800இல் இருந்து 3,000 தொழிலாளர்கள் வரையில் அதில் பங்கெடுத்தார்கள். ஒரு போல்ஷிவிக் நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது, மென்ஷிவிக்குகளால் சுமார் 150 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் வர்க்க-நனவுகொண்ட தொழிலாளர்கள் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகளின் நிலைப்பாடுகளில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்தார்கள். இரண்டாவது தரப்பினர், ஒரு அரசியல் மற்றும் புரட்சிகர குணாம்ச போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் பட்டவர்த்தனமாக ஈடுபடுவதை எதிர்த்தார்கள். மறுபுறம், போல்ஷிவிக்குகளோ அதுபோன்றவொரு பரிந்துரையைத் தொழிற்சங்கங்கள் துல்லியமாக பிரயோகிக்குமாறு செய்ய பகிரங்கமாக முனைந்திருந்தார்கள்.

1913இன் மிஞ்சிய காலங்கள் முழுவதும் மற்றும் 1914லும், தொழிற்சங்கங்களில் செல்வாக்கான இடங்களிலிருந்து போல்ஷிவிக்குகள் மென்ஷிவிக்குகளை தொடர்ந்து வெளியேற்றினார்கள். சான்றாக, அமைப்புசார்ந்த உழைப்பாளர்கள் மத்தியில், ஜூலை 1914 வாக்கில் போல்ஷிவிக்குகள் தலைமையிடத்தில் ஒரு பெரும் பெரும்பான்மையை எட்டினார்கள். பதினொரு நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பத்து பேர் போல்ஷிவிக்குகள் ஆவர், மீதமிருந்த ஒருவர் சோசலிச-புரட்சிகர கட்சியை (Socialist-Revolutionary Party - SR) சேர்ந்தவர். மென்ஷிவிக்குகள் அவர்களின் முழு ஆதரவையும் இழந்திருந்தார்கள்.

“மிகவும் திறமையான மற்றும் கல்வியறிவு கொண்ட தொழிலாளர்களாக இருந்த அச்சக தொழிலாளர்கள், ஏப்ரல் 1914இல் அவர்களினது இயக்குனர்கள் குழுவின் மொத்த பதினெட்டு இடங்களில் ஒன்பது இடங்களுக்கும் மற்றும் பன்னிரெண்டு வேட்பாளர் இடங்களில் எட்டு இடங்களுக்கும் போல்ஷிவிக் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

மென்ஷிவிக்குகளின் இழப்பினூடாக போல்ஷிவிக்குகளினது ஆதரவு வளர்ந்ததைக் குறிக்கும் மற்றொரு குறிப்பு, அவர்களின் தத்தமது பத்திரிகை விற்பனையின் அளவுகளில் இருந்து வருகிறது. மென்ஷிவிக் பத்திரிகை, லூக் (Luck), ஒவ்வொரு பதிப்பிற்கும் சுமார் 16,000 பிரதிகளை அச்சிடும் அச்சகத்தைக் கொண்டிருந்தது. ஆனால் போல்ஷிவிக் நாளிதழான, பிராவ்தா, 40,000 பிரதிகளை அச்சிடும் அச்சகத்தைக் கொண்டிருந்தது.

ஜூலை 1914 வாக்கில், யுத்தத்திற்கு முன்னதாக, ரஷ்யாவின் பிரதான தொழில்துறை மையங்களில் வர்க்கப் போராட்டம் புரட்சிகர பரிமாணங்களை எடுத்திருந்தது. தொழிலாளர்கள் மற்றும் பொலிஸிற்கு இடையே வீதிச் சண்டை சம்பவங்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் செய்திகளில் அறிவிக்கப்பட்டிருந்தன. ஜார் ஆட்சிக்கோ அந்த யுத்தம் ஒரு அருமையான தருணமாக வந்திருந்தது. யுத்தத்தின் அழுத்தம், மூன்றாண்டு காலப்பகுதியில், சமூக மோதல் கூர்மைப்படுவதற்கு இட்டுச் சென்றிருந்த போதினும், அதன் ஆரம்ப தாக்கம் தேசப்பற்று வெறியுடன் கூடிய ஒரு சீரற்ற அலைக்குள் புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை அமிழ்த்துவதாக இருந்தது. உயர்மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட போல்ஷிவிக் அமைப்பு, வரம்புக்குட்பட்ட சட்டபூர்வதன்மை நிலைமைகளின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், தகர்க்கப்பட்டு மீண்டும் தலைமறைவாக இயங்கத் தள்ளப்பட்டது.

யுத்தத்திற்காக இல்லாது, 1914இன் இறுதியில் அல்லது 1915இல் புரட்சி வெடித்திருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே, போல்ஷிவிக்குகளின் தலைமையில், அது ஒரு பாரிய பாட்டாளி வர்க்க இயக்கம் கட்டவிழ்ந்திருப்பதைக் குறித்திருக்கும் என்று பின்னர் ட்ரொட்ஸ்கி எழுத வேண்டியிருந்தது. 1914 ஜூலையில் இருந்த நிலைமைகளை விட, போல்ஷிவிக்குகளுக்கு வெகு குறைந்த சாதகமான நிலைமைகளின் கீழ், 1917 பெப்ரவரியில் புரட்சி தொடங்கியது. முதலாவதாக, அவர்களது அமைப்பு ரஷ்யாவில் அரிதாகத்தான் செயல்பட்டு வந்தது. ஆலைகளில் பெரும் எண்ணிக்கையில் இருந்த அவர்களின் தொழிலாள வர்க்க காரியாளர்கள் இராணுவத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டு, ஒரு பரந்த யுத்த முனையில் சிதறடிக்கப்பட்டனர். ஆலைகளில் அரசியல்ரீதியாக மிகவும் குறைவான அனுபவம்பெற்ற தொழிலாளர்கள் நிறைந்திருந்தார்கள். இறுதியாக, இராணுவத்திற்குள் விவசாயிகளை பாரியளவில் ஒன்றுதிரட்டியதென்பது, புரட்சி வெடித்தபோது சமூக இயக்கத்தின் பாட்டாளி வர்க்க குணாம்சம், குறைந்தபட்சம் அதன் ஆரம்ப கட்டங்களில், 1914இல் இருந்ததை விடவும் மிக குறைந்தளவிலேயே வெளிப்பட்டது என்பதையே அர்த்தப்படுத்தியது. அதனால் தான் விவசாயிகளை பெரிதும் அடிப்படையாக கொண்ட சோசலிச-புரட்சிகர கட்சி புரட்சியின் முதல் வாரங்களிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றது.

சக்திகளின் சாதகமற்ற உறவுக்கு இடையிலும், 1917 பெப்ரவரி-மார்ச்சில் ஏறத்தாழ ஜார் ஆட்சியின் பொறிவைக் கொண்டு வந்திருந்த புரட்சிகர சம்பவங்களில், போல்ஷிவிக்குகள் முற்றிலும் செல்வாக்கின்றி இருக்கவில்லை. ரஷ்ய புரட்சியின் வரலாறு என்னும் நூலில் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, பெப்ரவரி 1917இன் எழுச்சி முற்றிலும் "தன்னியல்பாக", அதாவது அரசியல் தலைமையின் எந்தவொரு சுவடும் இல்லாமல் இருக்கவில்லை. போல்ஷிவிக்குகளினதும் மற்றும் மென்ஷிவிக்குகளினதும் கூட, ஆண்டுக் கணக்கான அரசியல் போராட்டமும் கல்வியூட்டலும், குறைந்தபட்சம் மார்க்சிசத்தின் பொதுவான கருத்துருவை பிந்தைய நடவடிக்கைகளில் வெளிப்பாட்டைக் காணும் அளவுக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர்களின் நனவில் அவற்றின் மிச்சமீதிகளை விட்டு வைத்திருந்தன.

ஒவ்வொரு பாரிய இயக்கமும் ஒரு குறிப்பிட்ட வகையான அல்லது மட்டத்திலான நனவைக் கொண்டிருக்கிறது, அது ஒரு நீண்ட காலகட்டத்தினூடாக உருவாக்கப்படுகிறது. அந்த தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சமூக மற்றும் அரசியல் நனவு வெறுமையாக இருக்கவில்லை. 1905 சம்பவங்கள் வெறுமனே மறந்து போயிருக்கவில்லை. மிகவும் நனவுபூர்வமான தொழிலாளர்களின் ஒரு தலைமுறை, போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகளுக்கு இடையிலான தத்துவார்த்த மற்றும் அரசியல் மோதல்களை தொடர்ச்சியாக கவனித்து வந்திருந்தது; அவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தது. பெப்ரவரி 1917 எழுச்சி, ஏன் சோவியத்துகளின் (தொழிலாளர் கவுன்சில்கள்) உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன என்பதற்கும், அரசியலற்ற கலகங்கள் மற்றும் கொள்ளையடிப்புகளுக்கு மாறாக ஏன் ஜாரிசத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் வடிவத்தை ஏற்றது என்பதற்கும், அங்கே ஒரு காரணம் இருக்கிறது. அதுவரையில் யுத்தமானது அடியிலிருந்த அமைப்பை முற்றிலும் அழித்திருக்கவில்லை என்பதுடன், ஆலைகளில் இருந்த அவர்களின் காரியாளர்களையும் ஒதுக்கி இருக்காததால், போல்ஷிவிக்குகள் அப்போதும் பெப்ரவரி 1917இன் வெகுஜன எழுச்சியில் மேலதிகமாக போர்க்குணமிக்க நனவை உட்புகுத்தக்கூடிய நிலையில் இருந்தார்கள். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து பார்க்கையில், “லெனின் கட்சியால் பெரும்பகுதி படிப்பிக்கப்பட்டிருந்த நனவுபூர்வமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின்" தலைமையில் பெப்ரவரி புரட்சி இருந்தது என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலுடன் —மற்றும் சமகாலத்திய வரலாற்று ஆராய்ச்சி நிரூபணங்களுடன்— நாம் உடன்படுகிறோம். 5

லெனினின் "இரகசியங்கள்"

பிற்போக்குத்தனமான வரலாற்றாளர்களின் மிக பொதுவான வலியுறுத்தலாக இருப்பதென்னவென்றால், போல்ஷிவிக்குகளால் அதிகாரம் கைப்பற்றப்பட்டமை, அந்த புரட்சி யாருடைய பெயரால் நடத்தப்பட்டதோ அந்த தொழிலாள வர்க்கம் உட்பட, ரஷ்ய மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நடத்தப்பட்ட ஒரு வஞ்சகமான சூழ்ச்சியின் விளைபொருள் என்பதாகும். வரலாற்றில் அந்த பிரமாண்டமான புரட்சி எவ்வாறு அதுபோன்றவொரு சூழ்ச்சியின் விளைபொருளாக எழுந்திருக்க முடியுமென்பதை ஆராய்ந்தறிய, ஒருவர் மீண்டுமொருமுறை ரிச்சார்ட் பைப்ஸை கவனிக்க வேண்டியிருக்கும்:

லெனின், மிகவும் புதிரான மனிதராக இருந்தார்: அவர் அடுக்கடுக்காக பேசினாலும் எழுதினாலும், சேகரிக்கப்பட்ட படைப்புகளே ஐம்பத்து-ஐந்து தொகுதிகளை நிரப்ப போதுமானதாக இருந்தாலும், அவரது பேச்சுக்களும், எழுத்துக்களும் பெரும்பாலும் பிரச்சார பாணியிலும் மற்றும் கிளர்ச்சியடையச் செய்யும் பாணியிலும் இருக்கின்றன, அதாவது அவை அவரது சிந்தனைகளை வெளிப்படுத்துவதை விட, பிரதானமாக அவரைப் பின்பற்றி வருபவர்களை இணங்குமாறு செய்யவும் மற்றும் தெரிந்த எதிராளிகளை அழிப்பதற்காகவும் இருக்கின்றன. அவரது மனதில் என்ன இருந்தது என்பதை, அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கும் கூட அவர் அரிதாகவே வெளிப்படுத்தினார். வர்க்கங்களுக்கு இடையிலான பூகோள யுத்தத்தின் தலைமை தளபதியான அவர், அவரது திட்டங்களை பிரத்யேகமாக வைத்திருந்தார். ஆகவே, அவரது சிந்தனைகளை மறுகட்டமைக்க, கிடைத்திருக்கும் ஆவணங்களில் இருந்து மறைந்திருக்கும் நோக்கங்கள் வரைக்கும், பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. 6

இதை பரிசீலனை செய்யுங்கள்: ஒவ்வொரு தொகுதியும் 300 மற்றும் 500க்கு இடையிலான பக்கங்களைக் கொண்ட அரசியல் இலக்கியத்தின் ஐம்பத்தைந்து தொகுதிகளை உருவாக்குவதென்பது, லெனின் அவரது முப்பது ஆண்டுகால அரசியல் வாழ்வு போக்கினூடாக, சராசரியாக ஆண்டுக்கு (அச்சு வடிவில்) 600 இல் இருந்து 1000 பக்கங்கள் வரை எழுதியிருந்தார் என்பதைக் குறிக்கிறது. இதில் பொருளாதார ஆய்வுகள், மெய்யியல் ஆய்வுக்கட்டுரைகள், அரசியல் உடன்படிக்கைகள், தீர்மானங்கள், பத்திரிகை கருத்துரைகள் மற்றும் கட்டுரைகள், பரந்த தொழில்ரீதியிலான மற்றும் தனிப்பட்ட கடிதங்கள், எண்ணிக்கையில்லா நினைவுக்குறிப்புகள் மற்றும் மெய்யியல் குறிப்புகள் போன்ற பிரத்யேக குறிப்புகளும் உள்ளடங்கும், இவை லெனினது கருத்துருக்களின் புத்திஜீவித அபிவிருத்தியை அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. லெனின் அவர் பணியாற்றிய பெரும்பாலான நாட்களை, அதுவும் இறுதிக்கால ஆண்டுகளை, எழுதும் மேசையிலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறிருக்கையில், பைப்ஸைப் பொறுத்த வரையில், இந்த எழுத்துக்கள் அனைத்தும் அவர் உண்மையில் என்ன நினைத்தாரோ அதைவிட அவரது திறமையான மூடிமறைப்பையே பெரிதும் அர்த்தப்படுத்துகிறதாம்!

லெனின் மீதான பைப்ஸின் குற்றச்சாட்டு, 1930களில் மாஸ்கோ விசாரணைகளின் போது லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் பழைய போல்ஷிவிக்குகளின் மீது ஜோடிக்கப்பட்ட வகையறாக்களில் ஸ்ராலினால் பயன்படுத்தப்பட்ட அதே காரணங்களை பயன்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ட்ரொட்ஸ்கி செம்படையின் தலைமையில் இருந்த ஆண்டுகள் உட்பட பல தசாப்த காலத்திய அவரது எழுத்துக்களும் அறிக்கைகளும், சோவியத் ஒன்றியத்தை அழிக்க அவரது தசாப்தகால இரகசிய சூழ்ச்சியின் ஒரு மூடிமறைப்பாகுமென ஸ்ராலினும் அவரது உடந்தையாளர்களும் வாதிட்டார்கள். ஸ்ராலின் மற்றும் அந்த பிரபலமான ஹார்வார்ட் வரலாற்றாளரின் "விசாரணை முறைகள்" —பைப்ஸினாலேயே "கிடைத்திருக்கும் ஆவணங்களிலிருந்து மறைந்திருக்கும் நோக்கங்கள் வரை" எனும் பின்னோக்கிய போக்காக விவரிக்கப்பட்ட அந்த முறைகள்— பழிவாங்கும் வழக்கின் மத்தியகால நீதித்துறை வழிமுறைகளை நினைவூட்டுகின்றன.

இடைக்கால அரசாங்கத்தை இரகசியமாக கவிழ்க்க அவர் "சதி செய்த" போது லெனின் அவரது சிந்தனைகளை அவருக்குள்ளே வைத்திருந்தார் என்ற அந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டை பொறுத்த வரையில், அந்த வாதம் அக்கறைமிக்கதாய் இல்லை. 1917 முழுவதும் லெனின், போல்ஷிவிக் கட்சியின் மீதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் பிரதானமாக தனது எழுத்துக்களாலேயே அவரது ஆளுமையை தக்க வைத்திருந்தார் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். உண்மையில், “ஏப்ரல் ஆய்வுரைகள்" (April Theses) என்றறியப்பட்ட ஒரு நேர்த்தியான எழுத்துபூர்வ ஆவணம் தான், லெனின் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் கட்சியின் கொள்கையை தீர்க்கமாக மாற்றியதுடன், அதிகாரத்தைக் கைப்பற்ற போல்ஷிவிக்குகளுக்கு பாதை அமைத்தளித்தது. பின்னர், ஜூலை மற்றும் அக்டோபர் 1917க்கு இடையே, அவர் தலைமறைவாக இருந்தார், அப்போது போல்ஷிவிக் கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்த அவரது எழுத்துபூர்வ வாதங்களின் சக்தியைத்தான் சார்ந்திருந்தார். லெனின் அவரின் எழுத்துகளினூடாக கட்சியின் பாரிய உறுப்பினர்கள் மீது அவரது ஆளுமையை கொண்டிருந்திருக்காவிட்டால், இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு அவர் விடுத்த அழைப்புக்கு போல்ஷிவிக் கட்சியின் தலைமைக்குள் இருந்த எதிர்ப்பை அவரால் கடந்துவர இயலாமல் போயிருக்கும். ஜோன் ரீட் அவரது பிரபலமான உலகை உலுக்கிய அந்த பத்து நாட்கள் (Ten Days That Shook the World) எழுதிய போது லெனினினது முடிவெடுக்ககூடிய திறமையின் பிரத்தியேக குணாம்சத்தை அங்கீகரித்து, மக்கள் தலைவராக மாறியிருந்த லெனின், அவரது புத்திஜீவித பலத்தின் காரணமாகத்தான் உலக வரலாற்றின் வெகுசில அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்று எழுதினார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போல்ஷிவிக் முயற்சி, எதில் தங்கியிருந்ததோ அந்த பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தின் வீச்செல்லையைக் குறித்து, வளமான தகவல்களை தோண்டியெடுத்து அளித்துள்ள ஆய்வாளர்களின் வரலாற்று ஆய்வுகள், பைப்ஸ் மற்றும் இன்னும் நிறைய ஏனைய நபர்களால் ஆதரிக்கப்பட்ட சூழ்ச்சி தத்துவத்தை மிகவும் உறுதியாக மறுத்துள்ளன. இந்த ஆவணங்களைக் குறித்த ஒரு ஆய்வு, போல்ஷிவிக் கட்சியால் அதிகாரம் கைப்பற்றப்பட்டது, பெட்ரோகிராட்டின் பாதுகாப்பான வீட்டின் ஓர் பின்னறையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் வெளிப்பாடே தவிர வேறெதுவும் இல்லை என்ற தீர்மானத்திற்கு ஒருவரை இட்டுச் செல்கின்றது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அதற்கு சமமான ஒரு உத்வேக இயக்கவியலை பார்த்திருந்திராத நிலையில், அதற்குச் சமமான ஒரு பரந்த வெகுஜன இயக்கத்தோடு அதே வேகத்தில் செல்வதற்கு போல்ஷிவிக் கட்சி பல ஆண்டுகளை செலவிட்டிருந்தது.

போல்ஷிவிசமும் தொழிலாள வர்க்கமும்

ரஷ்ய புரட்சி தொடர்பான பிளாக்வெல் (Blackwell) தகவல் களஞ்சியத்தின் படி, பெப்ரவரி புரட்சிக்கு முன்னதாக அங்கே ரஷ்யாவின் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் ஏறக்குறைய 3.5 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். அங்கே போக்குவரத்து மற்றும் கட்டுமானத்துறையில் மற்றுமொரு ஒன்றேகால் மில்லியன் தொழிலாளர்கள் இருந்தார்கள். கூலித்தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தக்கூடியவர்களின் எண்ணிக்கை அங்கே மக்கள்தொகையில் 10 சதவீதமாக இருந்தது அல்லது சுமார் 18.5 மில்லியனாக இருந்தது. 7 பெட்ரோக்கிராட் மிகப்பெரிய தொழிற்துறை மையமாக விளங்கியது, அதைச் சுற்றியிருந்த பகுதிகள் 417,000 தொழிற்துறை தொழிலாளர்களின் வசிப்பிடமாக இருந்தது. இவற்றில், சுமார் 270,000 பேர் உலோகத்துறை தொழிலாளர்கள். ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் ஜவுளித்துறையிலும், 50,000 பேர் இரசாயனத்துறையிலும் வேலையில் இருந்தார்கள். ரஷ்யாவின் மற்றொரு பிரதான தொழில்துறை மையமாக இருந்த மாஸ்கோவில் சுமார் 420,000 தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஜவுளித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஒரு-கால் பங்கினர் உலோகத்துறை தொழிலாளர்களாக இருந்தார்கள்.

அங்கே உக்ரேனின் உரால்ஸில் அத்துடன் பால்டிக் பிராந்தியத்தில், டிரான்ஸ்கௌகாசியா மற்றும் சேர்பியாவில் பெருந்திரளான தொழிற்துறை தொழிலாளர்கள் திரண்டிருந்தார்கள் —உக்ரேனின் டொன்பாஸ் பகுதி ஏறக்குறைய 280,000 தொழிலாளர்களுக்கு வேலை அளித்திருந்தது. ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அளவுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கையின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மிகவும் சிறியதாக இருந்தது. ஆனால் பெருமளவில் ஒருங்குவிந்திருந்தது. பெட்ரோகிரேடின் தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கு அதிகமானவர்கள், 1,000க்கு மேற்பட்டவர்களை கொண்ட தொழிற்சாலைகளில் வேலையில் இருந்தார்கள். உக்ரேனிய தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், 500க்கு அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் இருந்தார்கள். உரால்ஸிலும் அவ்வாறே இருந்தது. 8

ஏப்ரல் 1917இல் லெனின் ரஷ்யாவிற்கு திரும்புவதற்கு முன்னர், தலைநகரிலிருந்த போல்ஷிவிக் கட்சி தலைமை, புரட்சியானது அதன் அபிவிருத்தியில் முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தைக் கடந்து செல்ல முடியாது என்ற அடித்தளத்தில், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு எதிராக முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் அதன் யுத்தத்தைத் தொடர்வதற்கான ஆதரவு உட்பட அதற்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை அளிக்கும் ஒரு கொள்கையை ஏற்றிருந்தது. லெனின் இந்த கொள்கையை எதிர்த்தார், ஆனால் அப்போது அவர் சுவிட்சர்லாந்தில் இருந்தார், அத்துடன் பெட்ரோகிரேடில் இருந்த கட்சி தலைமையின் விவாதங்களில் அவரால் நேரடியாக தலையீடு செய்யவியலாமல் இருந்தது. ஸ்ராலின் தலைமையில் இருந்த பிராவ்தா ஆசிரியர் குழு, போல்ஷிவிக் கட்சியின் சமரச கொள்கைகளுக்கு பலமான எதிர்ப்பை எடுத்திருந்த லெனினின் அறிக்கைகளைப் பிரசுரிக்கவும் மறுத்தது. ரஷ்யாவுக்குள் லெனின் திரும்பும் வரையில், அவரது பல வாரக் கணக்கிலான உட்கட்சிப் போராட்டத்திற்கிடையிலும், அவரால் கட்சியின் நிலைநோக்கை மாற்ற முடியவில்லை. லெனின் பல ஆண்டுகளாக அவரே அபிவிருத்தி செய்திருந்த மற்றும் பாதுகாத்து வந்திருந்த ஒரு வேலைத்திட்ட நிலைப்பாட்டை மாற்ற போராடி வருகிறார் என்ற உண்மையிலிருந்து தான் போல்ஷிவிக் கட்சிக்குள் பிளவுகள் எழுந்திருந்தன. லெனின் அப்போது யாரை தாக்கி வந்தாரோ அந்த பழைய போல்ஷிவிக்குகளை பொறுத்த வரையில், லெனினின் புதிய போக்கு —அதாவது இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிய மற்றும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ஏற்பதற்கு தயாரிப்பு செய்யுமாறு விடுத்த அழைப்பு— ஒரு தசாப்தகாலமாக லியோன் ட்ரொட்ஸ்கியால், போல்ஷிவிக்குகளுக்கு எதிராக, எடுத்துரைக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு பேதமின்றி அடிபணிந்து விட்டதாக கருதப்பட்டது.

எந்த முன்னோக்கு லியோன் ட்ரொட்ஸ்கியுடன் மிக பிரபலமாக அடையாளம் காணப்பட்டதோ அதே முன்னோக்கை, லெனின், அவரது சொந்த வழியில், வந்தடைந்திருந்தார். நவீன ஏகாதிபத்தியம் குறித்த அவரது சொந்த ஆய்வு மூலமாக விளங்கப்படுத்தப்பட்ட உலக யுத்தத்தின் அனுபவமானது, ரஷ்ய புரட்சி ஓர் உலக சோசலிச புரட்சியின் தொடக்கமாகும்; முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி, ரஷ்ய முதலாளித்துவத்தின் பலவீனம் மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு அதன் அடிபணிவுடன் தொடர்பு கொண்டு, ரஷ்ய அபிவிருத்தியில் ஒரு முற்போக்கான முதலாளித்துவ ஜனநாயக கட்டத்திற்கு எந்தவொரு சாத்தியக்கூறையும் விட்டுவைக்காது; மற்றும் ஏகாதிபத்தியத்திடம் ரஷ்யா மண்டியிடுவதை உடைக்கக்கூடிய மற்றும் புரட்சிகர ஜனநாயக கடமையை கொண்டு செல்லக்கூடிய தகைமை பெற்ற ஒரே வர்க்கம் பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஆகும் என்ற தீர்மானத்திற்கு லெனினைக் கொண்டு வந்திருந்தது. இந்த தீர்மானங்களின் அடித்தளத்தில் தான் லெனின் "ஏப்ரல் ஆய்வுரைகள்" உருவாகி இருந்தன, அது தொழிலாளர்களின் சோவியத்திற்கு அரசு அதிகாரத்தை மாற்ற அழைப்புவிடுத்தது.

ஏப்ரல் மாநாட்டின் விவாதம், தலைமறைவாக இருந்த ஒரு சிறிய புரட்சியாளர்களின் வட்டத்தின் விவாதமாக இருக்கவில்லை. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்திருந்த நிலையில், உள்கட்சி போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான அடுக்குகள் பங்குபெற்றன; அதைக் கவனித்தும் வந்தன. பிரிட்டிஷ் வரலாற்றாளர் ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிடுகையில், லெனினின் "ஏப்ரல் ஆய்வுரைகள்" பெட்ரோக்கிராட் தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக வெய்போர்க் மாவட்டம் மற்றும் வாசிலெவ்ஸ்கில் தீவின் மிகவும் முன்னேறிய பிரிவுகளின் நனவில் நேரடியாகவும், சக்தி வாய்ந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்று வாதிடுகிறார். அந்த "ஏப்ரல் நாட்களின்" போது—அவை தான் இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மிகப்பெரிய தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்களாக இருந்தன—புஜிரெவ் மற்றும் எக்வால் (Puzyrev, Ekval) தொழிற்சாலைகளின் தொழிலாளர்களினது பொதுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஸ்மித் ஆதாரமாக காட்டுகிறார்:

அரசாங்கம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விருப்பங்களை பிரதிநிதித்துவம் செய்ய விரும்பவில்லை மற்றும் அது விரும்பவும் இயலாது, ஆகவே சுதந்திரத்தின் மீது அவர்களின் தாக்குதலை நிர்மூலமாக்குவதற்காக நாங்கள் அதை உடனடியாக கலைக்குமாறும், அதன் அங்கத்தவர்களை கைது செய்யுமாறும் கோருகிறோம். அதிகாரம் மக்களிடம், அதாவது தொழிலாளர்களின் சோவியத்துக்களிடம், மற்றும் மக்களின் நம்பிக்கை பெற்றிருக்கும் ஒரே அதிகார அமைப்பான சிப்பாய்களின் அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டுமென்பதை நாங்கள் ஏற்கிறோம். 9

லியோன் ட்ரொட்ஸ்கி, அவரது ரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற நூலில் எழுதுகையில், “வரலாற்று சம்பவங்களில் பெருந்திரளான மக்கள் நேரடியாக தலையீடு செய்வது தான்" ஒரு புரட்சியின் பிரதான அம்சமாகும் என்று எழுதினார். இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரத்தை ஸ்தாபித்து வைப்பதற்கு, மில்யுகோவ் மற்றும் சோவியத்தின் மிதவாத தலைவர்கள் போன்ற முதலாளித்துவ பிரதிநிதிகளின் முயற்சிகளுக்கு இடையேயும், பெப்ரவரியின் சம்பவங்கள் ஒரு மக்கள் ஜனநாயக உருவாக்கத்திற்கான வெடிப்பைக் கட்டவிழ்த்துவிட்டது. பெட்ரோக்கிராட் மற்றும் ரஷ்யா முழுவதிலும் உருவாக்கப்பட்டிருந்த ஆலைக்குழுக்கள் மற்றும் வேலைக்குழுக்கள், பாட்டாளி வர்க்கம் அதன் அதிகாரத்தை வலியுறுத்த மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு போக்கில் சமூகத்தை மறுஒழுங்கமைக்க அது தீர்மானகரமாக இருந்ததன் நடைமுறை வெளிப்பாடாக இருந்தன. தொழிற்சாலை ஆலைக்குழுக்கள் தோற்றப்பாட்டளவில் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் சம்பந்தப்பட்ட பல்திறனுள்ள கட்டமைப்புகளாக எழுச்சி பெற்றன. தொழிலாளர்களின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு, உணவு வினியோகம், கலாச்சாரம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு, வேலையிட நிலைமைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கும் மற்றும் குடிப்பழக்கத்தின் மீது வெறுப்பூட்டி தொழிலாளர் ஒழுக்கத்தை தக்கவைப்பதற்கும் பொறுப்பான துணைக் கமிட்டிகளை அவை உருவாக்கின.

புரட்சி ஆழமடைந்தபோது, கமிட்டிகள் பெரிதும் அதிகளவில் அமைப்புகளையும் மற்றும் உற்பத்தியினது கட்டுப்பாட்டையும் முன்கூட்டியே ஆக்கிரமித்திருந்தன. பிளாக்வெல் தகவல் களஞ்சியம் ஒரு சோவியத் வரலாற்றாளர் Z.V. ஸ்டெபனோவ்வின் (Stepanov) படைப்பை மேற்கோளிடுகிறது, அவர் "மார்ச் 1இல் இருந்து அக்டோபர் 25க்கு இடையே பெட்ரோக்கிராட்டின் 124 ஆலைக்குழுக்கள் 4,266 நடவடிக்கைகளை பட்டியலிடுவதோடு, உற்பத்தி மற்றும் வினியோகம் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாடு சார்ந்த 1,141 நடவடிக்கைகள்; அமைப்பு தொடர்பான 882 கேள்விகள்; அரசியல் பற்றிய 347 கேள்விகள்; கூலிகள் பற்றிய 299 விடயங்கள்; நியமனம் மற்றும் பணிநீக்கம் மற்றும் கட்டாய பணிநியமன கண்காணிப்பு சார்ந்த 241 நடவடிக்கைகள் இருந்ததாக கணக்கிடுகிறார்."10

1917இன் கோடையின் இறுதியிலும் மற்றும் இலையுதிர்காலத்திலும், ஆவணங்கள் மற்றும் நிதி கணக்குகளை பார்வையிட தொழில் வழங்குனர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென ஆலை கமிட்டிகள் முறையிடத் தொடங்கின. அக்டோபர் வாக்கில் 573 தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில், 1.4 மில்லியன் தொழிலாளர்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து, நடைமுறையில் ஏதோவொரு விதத்தில் அவர்களின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.

1917 முழுவதிலும் போல்ஷிவிக்குகள் ஆலைக்குழுக்களுக்குள் பாரிய பலத்தை அபிவிருத்தி செய்தார்கள். பெட்ரோக்கிராட் சோவியத்திற்குள் போல்ஷிவிக்குகள் ஒரு பெரும்பான்மையை பெறுவதற்கு முன்னரே, அவர்கள் மிகப் பிரதானமான ஆலைக்குழுக்களின் தலைமையை ஏற்றிருந்தார்கள். உள்ளூர் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குறித்த ஒரு ஆய்வு, போல்ஷிவிக் கட்சியின் முழக்கங்களுக்கும், கோட்பாட்டுரீதியிலான கோரிக்கைகளுக்கும் அங்கே ஒரு உத்வேகம்மிகுந்த ஆதரவு இருந்ததாக காட்டுகிறது. பெட்ரோக்கிராட்டை விட அரசியல்ரீதியாக குறைவாகவே அபிவிருத்தி அடைந்திருந்த மாஸ்கோவில், 1917இன் அக்டோபர் மாதம் சோவியத்துகளுக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டுமென்ற போல்ஷிவிக்குகளின் முறையீட்டுக்கு ஆதரவாக 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியதை காணலாம்; மேலும் போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அங்கே தொழிலாள வர்க்கத்தின் பெரும் பெரும்பான்மையினரிடையே வரவேற்பு இருந்ததற்கும் அதிகளவிலான ஆதாரம் இருக்கிறது.

மாஸ்கோவின் வடகிழக்கில் 250 மைல்களில் இருக்கும் ஜவுளித்துறை மையமான இவானோவோ-கினெஸ்மாவின் அபிவிருத்திகள் குறித்த வரலாற்றாளர் டேவிட் மாண்டேலின் ஆய்வில், அக்டோபர் 1917இல் இருந்த தொழிலாள வர்க்க மனோபாவத்தை குறித்த ஒரு யோசனை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. போல்ஷிவிக்குகளுக்கு இருந்த பலமான ஆதரவு, புரட்சியின் வெடிப்பை தனதாக்கிக் கொண்டது. அக்டோபர் 1917 வாக்கில், அது அதிகரித்திருந்தது. வேறொன்று இருந்ததென்றால் அது, இவானோவோ-கினெஸ்மாவின் தொழிலாளர்கள் பெட்ரோகிரேடில் போல்ஷிவிக் நடவடிக்கையினது மெதுவான வேகத்தால் பொறுமையிழந்திருந்ததன் வெளிப்பாடாகத்தான் இருக்கும். 1917 செப்டம்பர் இறுதியில் கினெஸ்மா சோவியத்திடையே ஒரு போல்ஷிவிக் சொற்பொழிவாளர் உரையாற்றிய போது, அந்த வீராவேசமான கேள்வியை எழுப்பினார்: “அதிகாரத்தைக் கையிலெடுக்க வரலாறு நம்மை அழைக்கிறது, நாம் தயாராக இருக்கிறோமா?" கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது, “நாம் நீண்டகாலத்திற்கு முன்னரே தயாராகிவிட்டோம், ஆனால் மத்தியில் அவர்கள் ஏன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரியவில்லை."11

அதுபோன்ற வரலாற்று துணுக்குகளை ஒருவர் ஐயுறவுடன் கையாள விரும்பினாலும் கூட, அவர்கள் எடுத்துக்காட்ட முயன்ற புறநிலை நிகழ்ச்சிப்போக்கின் யதார்த்தம் குறித்து அங்கே ஐயமிருக்க முடியாது. ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையே, போல்ஷிவிக் கட்சி ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியை எட்டியது. ஏப்ரல் 1917இல் பெட்ரோக்கிராட் போல்ஷிவிக் அமைப்பில் சுமார் 16,000 தொழிலாளர்கள் இருந்தார்கள். அக்டோபர் வாக்கில் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 43,000ஆக உயர்ந்திருந்தது, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தொழிலாளர்கள். ஜூன் 1917இல் அனைத்து-ரஷ்ய சோவியத்களின் முதல் மாநாட்டு தேர்தல்கள், சோசலிச-புரட்சிகர கட்சியின் 283 பிரதிநிதிகளையும், 248 மென்ஷிவிக் பிரதிநிதிகளையும், வெறும் 105 போல்ஷிவிக் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் அக்டோபர் புரட்சிக்கு முன்னர் கூடிய இரண்டாவது அனைத்து-ரஷ்ய மாநாட்டு தேர்தல்கள் மலைப்பூட்டும் மாற்றத்தை உருவாக்கி இருந்தது: போல்ஷிவிக் பிரதிநிதிகளின் பங்கு 390 ஆக உயர்ந்தது, சோசலிச-புரட்சிகர கட்சியினரின் பங்கு 160 ஆக வீழ்ந்தது, மென்ஷிவிக்குகள் எழுபத்தி-இரண்டாக இருந்தார்கள்.

புரட்சியின் போக்கினூடாக தொழிலாளர்கள் தொடர்ந்து அவர்களின் அரசியல் தொடர்புகளை மாற்றினார்கள், ஆனால் பொதுவாக இடதிற்கு நகர்ந்தார்கள் ஏனென்றால் அவர்கள் அதிகளவில் இடைக்கால அரசாங்கத்துடனும் மற்றும் அதனுடன் முறித்துக் கொள்ள மறுத்த மிதவாத சோசலிஸ்ட் கட்சிகளின் மீதும் வெறுப்படைந்திருந்தார்கள். வரலாற்றாளர் டிம் மக்டானியல் குறிப்பிடுவதைப் போல:

பொருளாதார நெருக்கடி, யுத்தம் தொடர்ந்தமை, வர்க்க மோதலின் தீவிரம், மற்றும் கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு ஆகியவை அரசியல்ரீதியாக செயலூக்கத்துடன் இருந்த பரந்த பெரும்பான்மை தொழிலாளர்களை அதன் பல்வேறு அவதாரங்களில் இருந்த இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரிகளாக மாற்றியது. இடைக்கால அரசாங்கம் இப்போது இன்னும் மிகத் தெளிவாக ஒரு "முதலாளித்துவ சர்வாதிகாரமாக" இருந்தது என்பதைத் தவிர, அவர்கள், புதிய அரசாங்கத்திற்கும் பழைய ஜாரிச ஆட்சிக்கும் இடையே வேறெந்த முக்கிய வேறுபாட்டையும் காணவில்லை. 12

சோசலிச-புரட்சிகர கட்சியின் (SR) ஒரு அங்கத்தவராக இருந்த ஒரு தொழிலாளி, போல்ஷிவிக் நாளிதழுக்கு எழுதிய ஒரு கடிதம், 1917இன் போதிருந்த அரசியல் மனோபாவத்தின் மாற்றங்களை பிரதிபலிக்கிறது:

ஆழ்ந்த தவறான புரிதல்களின் காரணமாக நான் SR கட்சியில் சேர்ந்தேன், அது இப்போது முதலாளித்துவத்தின் தரப்பிற்கு போய்விட்டதுடன் நம்மை சுரண்டுவோருக்கே கைகொடுக்கிறது. ஆகவே நான் இந்த வெட்கக்கேடான தயாரிப்புடன் இணைந்தவனாக இருக்க விரும்பமாட்டேன், நான் அந்த குறுநலவாதிகளின் பதவிகளில் இருந்து வெளியேறுகிறேன். ஒரு நனவுபூர்வமான பாட்டாளியாக, நான் போல்ஷிவிக் தோழர்களுடன் இணைகிறேன், அவர்கள் மட்டும் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்." 13

1917இல் தொழிலாள வர்க்கத்தின் தீவிரத்தன்மை, நிச்சயமாக, அதன் சொந்த சிக்கலான முரண்பாடுகளின்றி ஓர் ஒருமித்த நிகழ்ச்சிப்போக்காக இருக்கவில்லை. டோன்பாஸ் சுரங்க தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்ததைப் போல, போல்ஷிவிக்குகளின் பலம் வேகமாக அதிகரித்து வந்த இடங்களிலும் கூட, அவர்கள் எதிர்ப்பையும் எதிர்கொண்டார்கள். தொழிலாளர்களின் மனோபாவங்களில் ஏற்பட்ட கூர்மையான மாற்றங்களுக்கு அவர்கள் பலியான நேரங்களும் அங்கே இருந்தன. இருந்தபோதினும், அதன் அனைத்து முரண்பாடுகளுக்கு இடையிலும், அக்டோபர் புரட்சியானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய மற்றும் அரசியல்ரீதியாக-நனவுபூர்வமான இயக்கத்தின் விளைபொருளாக இருந்தது. 14

போல்ஷிவிக் வெற்றிக்குரிய காரணங்கள் குறித்த அவரது ஆய்வைத் தொகுத்தளிக்கையில், பேராசிரியர் ஸ்டீவ் ஸ்மித் இவ்வாறு எழுதுகிறார்:

மக்களிடையே அதிருப்தியையோ அல்லது புரட்சிகர உணர்வையோ போல்ஷிவிக்குகள் தாங்களே உருவாக்கவில்லை. அது சிக்கலான பொருளாதார மற்றும் சமூக மேலெழுச்சிகள் மற்றும் அரசியல் சம்பவங்களில் ஏற்பட்ட மக்களின் சொந்த அனுபவங்களில் இருந்து வளர்ந்தது. மாறாக புரட்சியின் சமூக இயக்கவியலைக் குறித்த தொழிலாளர்களின் புரிதலை வடிவமைத்ததிலும் மற்றும் அன்றாட வாழ்வின் உடனடி பிரச்சினைகள் எவ்வாறு பரந்த சமூக மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புடன் தொடர்புபட்டது என்ற விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதிலும் போல்ஷிவிக்குகளின் பங்களிப்பு இருந்தது. போல்ஷிவிக்குகளால் ஆதரவை வென்றெடுக்க முடிந்தது ஏனென்றால் அவர்களின் பகுப்பாய்வும், பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளும் அறிவுக்குகந்ததாக கருதப்பட்டன. போல்ஷிவிக்குகள் உரையாற்றுவதற்கும் கூட அனுமதிக்கப்படாத, முன்னர் தற்காப்புவாதத்தின் ஒரு கோட்டையாக இருந்த Orudiinyi Works ஆலையிலிருந்த ஒரு தொழிலாளி செப்டம்பரில் குறிப்பிடுகையில், "நாங்கள் உங்களை இணங்குவிக்க முயற்சிப்பவர்கள் இல்லை, மாறாக வாழ்க்கை தான் உங்களை எங்களுடன் இணங்குவிக்கிறது. மேலும் இப்போது போல்ஷிவிக்குகள் வென்றிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களின் தந்திரோபாயங்கள் சரியானதென்பதை வாழ்க்கை நிரூபித்துள்ளது," என்றார். 15

ஒரு அரை-நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், அப்போதும் அங்கே மனித வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை நம்பிய மற்றும் அதை புத்திசாலித்தனத்துடன் பிரதிபலிக்கும் தகைமை பெற்ற ஒரு அமெரிக்க புத்திஜீவி இருந்தார், ரஷ்ய புரட்சியின் அர்த்தத்தில், முற்றிலுமாக அவர் அனுதாபம் கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, பின்லாந்து நிலையத்தை நோக்கி என்ற தலைப்பில் அந்த இலக்கியத்துறை விமர்சகர் எட்மண்ட் வில்சனால் ஒரு பிரபலமான நூல் எழுதப்பட்டது. புரட்சியில் இருந்த மக்களைக் குறித்த அவரின் சொந்த மேற்தட்டு அவநம்பிக்கை மற்றும் இயங்கியல் மீதான அவரின் நடைமுறைவாத அலட்சியத்திற்கு அப்பாற்பட்டு, வில்சன் குறிப்பிடுகையில், ஏப்ரல் 17இல் பின்லாந்து நிலையத்தில் லெனின் வந்தடைந்தமை, அவரின் சொந்த சமூக அபிவிருத்தியில் எவ்வித தடையுமற்ற மேதைமை பெறுவதற்கான அந்த மனிதரின் போராட்டத்தில், அதுவொரு உயர்ந்த புள்ளியைக் குறித்தது என்று வாதிட்டார்.

வில்சன் எழுதினார், “இந்தப் புள்ளியில் அவர் எதன் மத்தியில் வாழ்ந்து வந்தாரோ அந்த அதிதீவிர விருப்பங்களில் மற்றும் அச்சங்களில், குழப்பங்களில் மேதைமை அடைவதில், அந்த மேற்கத்திய மனிதர் இந்த தருணத்தில் சில தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்திருப்பதைப் பார்க்க முடியும்." 16

நாம் மனதார இந்த மதிப்பீட்டுடன் உடன்படுகிறோம், ஆனால் பின்னர் மெக்கார்த்திசத்தின் அழுத்தத்தின் கீழ் வில்சன் இக்கருத்திலிருந்து பின்வாங்கிவிட்டார். இயற்கையின் புரிந்து கொள்ளப்படாத சக்திகள் ஏதோவொரு வடிவத்தில் மனித அபிவிருத்தியின் மீது மேலாதிக்கம் செய்வதைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்தையும் நனவுபூர்வமாக மேதைமை கொள்வதற்கு, மனிதகுலம் அதன் சொந்த தலைவிதியின் மீது கட்டுப்பாட்டை ஏற்பதற்கு, மனிதகுலத்தின் நனவுபூர்வ முயற்சிகளிலேயே ரஷ்ய புரட்சியானது இன்றும் உச்சக்கட்ட புள்ளியை பிரதிநிதித்துவம் செய்கிறது.

மார்க்சிசம் உலகுக்கு கற்பனாவாத கருத்துக்களின் ஒரு புதிய தொகுப்பை அறிமுகப்படுத்தவில்லை. அது நிலவும் சமூக சக்திகளுக்குள் வரலாற்றை மாற்றுவதற்குரிய சாத்தியக்கூறுகளைக் கண்டு கொண்டது. அது வரலாற்றுரீதியில் பரிணமித்த வர்க்க ஒடுக்குமுறையின் வடிவங்களை முடிவுக்கு கொண்டுவர தகைமை கொண்ட ஒரு சமூக சக்தியை, தொழிலாள வர்க்கத்தை, கண்டறிந்தது. முதலாளித்துவ வர்க்கத்தால் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படுவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் ஏனென்றால் வெறுமனே அது, சம்பிரதாயமான வார்த்தையில், அறநெறிரீதியில் தவறிருக்கிறது என்பதற்காக அல்ல; மாறாக ஏனென்றால் இந்த ஒடுக்குமுறை மனித சமூகத்தினது முற்போக்கான அபிவிருத்தியின் மீதே ஒரு தடைக்கல்லாக மாறியிருக்கிறது. துல்லியமாக அங்கே தான் முதலாளித்துவ ஒடுக்குமுறையின் அறநெறி பிறழ்வும் தங்கியிருக்கிறது.

தொழிலாள வர்க்கம் எதன் பாகமாக இருந்ததோ அந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை குறித்த ஒரு புரிதலை மார்க்சிசம் அதற்குள் அறிமுகப்படுத்தியது; அவ்விதத்தில் அது இந்த வர்க்கத்தை வரலாற்றில் புறநிலையாக இருப்பதிலிருந்து அதன் நனவான அகநிலைக்குள் திருப்பியது. தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச கல்வி 1847இல் தொடங்கியது. எழுபது ஆண்டுகளுக்கு பின்னர் 'அந்த அக்டோபர் புரட்சியானது', சோசலிச அறிவொளியின் பிரமாண்ட நிகழ்ச்சிப்போக்கினது விளைபொருளாக இருந்தது.

ஆராயப்பட வேண்டிய மற்றும் உய்த்துணர வேண்டிய காரணங்களைக் கொண்டு பார்த்தால், ரஷ்ய புரட்சி ஒரு பிரமாண்டமான பின்னடைவால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த உண்மை, எவ்விதத்திலும், அதற்கிருக்கும் முக்கியத்துவத்தையோ அல்லது 1917இன் சம்பவங்களினது முக்கியத்துவத்தையோ மதிப்பிழக்க செய்யப்போவதில்லை.

1 Lecture delivered at the University of Michigan in Ann Arbor on April 18, 1995.

2 Richard Pipes, Russia Under the Bolshevic Regime (New York: Vintage Books, 1995), p. 495.

3 Ibid., p. 494.

4 Victoria Bonnell, Roots of Rebellíon (Berkeley: University of California Press, 1983), p. 394.

5 Leon Trotsky, History of the Russian Revolution (New York: Pathfinder Press, 1980), p. 199.

6 Richard Pipes, The Russian Revolution (New York: Vintage Books, 1991), p. 394.

7. Harold Shukman, ed., The Blackwell Encyclopedia of the Russian Revolution (Oxford: Basil Blackwell, Ltd., 1994), P. 19.

8 Ibid.

9 Steve A. Smith, “Petrograd in 1917: the view from below,” in The workers' Revolution in Russia, 1917: The view From Below, ed. Daniel H. Kaiser (Cambridge: Cambridge University press, 1987).p.66.

10. The Blackwell Encyclopedia of the Russian Revolution, p. 22.

11. David Mandel, “October in the Ivanovo-Kineshma industrial region,” ed. Frankel, Frankel and Knei-paz, Revalution in Russia: Reassessments of 1917 (Cambridge Cambridge University Press, 1992), p. 160.

12 Tim McDaniel, Autocracy, Capitalism and Revolution in Russia (Berkeley: University of California Press, 1988), p. 355.

13 The worrkers' Revolution in Russia,191 7: The view from Below, pp- 73-74.

14 இந்த முடிவு இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அலெக்சாண்டர் ரபினோவிட்ச்சின் சிறந்த மேதைமையால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் புரட்சியைக் குறித்த அவரது சிறப்புமிக்க ஆய்வின் மூன்றாம் தொகுதி, அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் (The Bolsheviks in Power) என்பதன் முன்னுரையில், ரபினோவிட்ச்—முந்தைய வரலாற்று தொகுதிகளிலிருந்து கிடைத்த தீர்மானங்களை தொகுத்தளித்து—இவ்வாறு எழுதுகிறார்:

புரட்சிக்கான பீடிகையுடன் சேர்ந்து, போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள் எனும் நூல், லெனினின் தலைசிறந்த தலைமையில் ஒரு சிறிய, ஐக்கியப்பட்ட புரட்சிகர கொள்கைவெறியர் கூட்டத்தின் ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தவிர மேலதிகமாக வேறொன்றுமில்லை என்ற அக்டோபர் புரட்சி மீதான மேலோங்கிய மேற்கத்திய கருத்துக்களுக்கு சவால்விடுத்தது. 1917இல், பெட்ரோகிரேடில் போல்ஷிவிக் கட்சி தன்னைத்தானே ஒரு பாரிய அரசியல் கட்சியாக மாற்றி இருந்தது, அது, லெனினின் பின்னால் தடம்பதித்து அணிவகுத்துச் செல்லும் ஓர் ஒருமித்த இயக்கமாக இல்லாமல், அதன் தலைமை இடது, மத்தியவாதம், மற்றும் மிதவாத வலதுசாரிகளாக பிரிந்து கிடந்தது, அவை ஒவ்வொன்றும் புரட்சிகர மூலோபாய மற்றும் தந்திரோபாயத்தை வடிவமைக்க உதவின என்பதை நான் கண்டேன். மிக முக்கியமான வழிகளில், அதன் அமைப்புரீதியிலான இலகுதன்மை, வெளிப்படைத்தன்மை, மற்றும் மக்கள் அபிலாஷைகளுக்கு பொறுப்பேற்றிருந்ததன்மை, அத்துடன் தொழிற்சாலை தொழிலாளர்கள், பெட்ரோக்கிராட் படைப்பிரிவு சிப்பாய்கள், மற்றும் பால்டிக் கடற்படை மாலுமிகளுடன் பரவலாக, கவனமாக பேணி வளர்க்கப்பட்டிருந்த அதன் தொடர்புகளும் தான், பெப்ரவரி 1917இல் ஜாரை தூக்கியெறிந்த பின்னர் அதிகாரத்திற்கான போராட்டத்தில் அக்கட்சி வெற்றி பெறுவதற்கு காரணங்களான இருந்தன என்பதையும் நான் கண்டேன். [Bloomington and Indianapolis: 2007, pp. Ix-x]

பேராசிரியர் ரபினோவிட்ச்சின் முடிவுகள் விதிவிலக்கான பலத்தைப் பெறுகின்றன, அது ஓர் அரை-நூற்றாண்டு போக்கில் அவர் வரலாற்றாளரின் கைத்திறமையில் மேதையாக அங்கீகாரத்தை பெற்றுள்ளார் என்பதனால் அல்ல. ஆழ்ந்த மென்ஷிவிக் அனுதாபிகளுடன் சேர்ந்து ரஷ்ய புலம்பெயர்ந்தோர் குடும்பத்தில் வளர்ந்த ரபினோவிட்ச், போல்ஷிவிக் அதிகாரத்தை கைப்பற்றியமைக்கு பாரிய ஆதரவு இருந்திருக்கவில்லை என்ற உறுதியான நம்பிக்கையோடு, ரஷ்ய புரட்சிக்குள் அவரது ஆய்வுகளை தொடங்கியதாகவும், லெனின்கிராட்-செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் ஆவணக்காப்பகங்களில் அவர் முட்டிமோதி கண்டறிந்த ஆதாரங்களின் பலம் அவரது கருத்துக்களை மாற்றிக் கொள்ள அவரை நிர்பந்தித்ததாகவும் அவரே விவரித்துள்ளார். புதிய தலைமுறை ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சேவை செய்யத்தக்க விதத்தில், பேராசிரியர் ரபினோவிட்ச்சின் வேலைகள் ஒரு புத்திஜீவித நேர்மையையும், உண்மைக்காக அவரது அர்பணிப்பையும் நிரூபணம் செய்கின்றன.

15 Ibid., p. 77.

16 Edmund Wilson, To be Finland Station (London: Macmillan Publishers, 1983), p. 472.

Loading