நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மொன்றியாலில் பெப்ரவரி 3,1993 இல் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரான டேவிட் நோர்த் பின்வரும் சொற்பொழிவை நிகழ்த்தினார். இச் சொற்பொழிவு (அப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்று அழைக்கப்பட்ட) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் நீண்ட காலத் தலைவராக இருந்துவந்த கீர்த்தி பாலசூரியாவின் வாழ்வை மற்றும் அவரின் அரசியல் பங்களிப்பை நினைவு கூருவதற்காக ஆற்றப்பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரிய அவரது முப்பத்தி ஒன்பதாவது வயதில், டிசம்பர் 18, 1987 இல் மாரடைப்பால் அகால மரணத்துக்கு ஆளானார்.

தோழர் கீர்த்தி பாலசூரிய மரணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்து சென்று விட்டன என்று நம்புவது கடினமாக உள்ளது. அவர் உயிருடன் இன்று இருப்பாராயின், அவர் தனது நாற்பத்தி நான்காவது பிறந்தநாளைத் தாண்டி ஒரு சில மாதங்கள்தான் சென்றிருக்கக் கூடிய ஒரு தோழரின் வாழ்வையே நாம் இன்று எல்லாவற்றிக்கும் முதலாக நினைவு கூருகின்றோம். கீர்த்தி, அவரின் வயதைக்காட்டிலும் இளமையாய் இருந்தார். அவருக்கு அளப்பரிய அறிவு மற்றும் அரசியல் அனுபவம் என்பன இருந்த பொழுதும், அவரின் ஆர்வம் மற்றும் நகைச்சுவை என்பன ஒரு பையனின் பாங்கை கொண்டிருந்தன. என்றாலும் அவரைப் பொறுத்தவரை முதிர்ச்சியின்மையோ அல்லது அக்கறையின்மையோ அடியோடு இருந்ததில்லை. அவர் ஊடுருவிச் செல்லும் ஆழ்ந்த அறிவுத்திறம் படைத்த மனிதர். அவரின் அரசியல் பற்றுறுதி பல்லாண்டுகாலமாக நெறிமுறைப்படுத்தப்பட்ட படிப்பின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டு, பலம் சேர்க்கப்பட்டதாக இருந்தது.

நான் கீர்த்தியை முதலில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தினால் (Socialist Labour League) இங்கிலாந்தில் 1972 கோடைக்காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலையில் சந்தித்தேன். அவர் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய ஒரு விரிவுரைத் தொடரில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அவர் கருச்சிதைவுற்ற 1923ம் ஆண்டு ஜேர்மன் புரட்சிபற்றி ஒரு நீண்ட பங்களிப்புச் செய்ததை என்னால் இன்னமும் நினைவு கூரமுடியும். கீர்த்தி இப்பாடசாலையில் சிங்களத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால் முழுச் சபையினரும் அவரின் உணர்ச்சிமிக்க பேச்சினால் வசீகரிக்கப்பட்டிருந்தனர். வார்த்தைகள் அக்கினிக் குழம்பாக அவரிடமிருந்து பெருக்கெடுத்தன. அவரின் மொழிபெயர்ப்பாளர்- தோழர் விஜே டயஸ் என்று நான் நினைக்கின்றேன்- பெரும் முயற்சி எடுத்த பொழுதும், அவரால் கீர்த்தியின் பெருக்கெடுக்கும் பேச்சுடன் ஈடுகொடுக்க முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தனது மொழிபெயர்ப்பாளர் ஒன்றில் சில வசனங்களை விட்டுவிட்டு தடுமாறுகின்றார் அல்லது ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை வேண்டியளவு சரியான நுட்பத்துடன் எடுத்துக்கூறத் தவறிவிட்டார் எனக் கீர்த்தி உணர்ந்ததும், அவர் திடீரென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துத் தனது கருத்தினை தம்மால் முடிந்தமட்டும் எடுத்து முன்வைக்க முற்படுவார்.

அப்பொழுது கீர்த்தி ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் அன்றைய (விரைவில் வங்காள தேசமாக மாற இருந்த) கிழக்குப் பாகிஸ்தான் மீது நடந்த இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பாக சோசலிச தொழிலாளர் கழகம் கடைப்பிடித்த அரசியல் நிலைப்பாட்டை உக்கிரமாக எதிர்த்திருந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்பினை சோசலிச தொழிலாளர் கழகம் அங்கீகரித்ததை எதிர்த்து கீர்த்தி 1971 டிசம்பரிலும், மற்றும் 1972 ஜனவரியிலும் எழுதிய கடிதங்களை அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகள் மேலுமொரு பதினான்கு ஆண்டுகளுக்கு- தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுவரை- பார்க்கக் கிடைக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு பின்னரே கீர்த்தியுடன் விரிவாகப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நாம் இருவரும் 1975 மே மாதத்தில் லண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் ஆறாவது அகல் பேரவையில் (Congress) கலந்துகொண்டோம். அந்த அகல் பேரவை, ரிம் வொல்ஃபோர்த், வேர்க்கஸ் லீக்கில் இருந்து விட்டோடிய பின்னர் நடந்தது. கீர்த்திக்கு வொல்ஃபோர்த்தை தெரிந்திருந்ததால் அவர் வேர்க்கஸ் லீக்கினுள் வெடித்த நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்திருந்த அரசியல் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிதீவிர அக்கறை காட்டினார். உண்மையில் கீர்த்தி ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது அகல் பேரவையில் வொல்ஃபோர்த்தைக் கடைசியாக பார்த்திருந்தார். அந்த அகல் பேரவையில், வொல்ஃபோர்த்தின் அறிக்கை, கவலையுடன் கவனிக்க வேண்டியளவு இழப்புக்களை —பெரும் எண்ணிக்கையில் முன்னணி உறுப்பினர்களின் இராஜினாமாக்கள் உட்பட— வேர்க்கஸ் லீக் கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத் தகவல் கீர்த்தியை கவலைப்படச் செய்தது. வேர்க்கஸ் லீக்கினுள் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கான திட்டவட்டமான அரசியல் விளக்கத்தினை வொல்ஃபோர்த்தினிடம் இருந்து பெறக் கீர்த்தி முயற்சித்தார். இருந்தபொழுதும், கீர்த்தி வொல்ஃபோர்த்தை கேள்வி கேட்க எடுத்த முயற்சி ஹீலி மற்றும் பண்டாவின் குறுக்கீட்டால் துண்டிக்கப்பட்டது. அவர்கள் இளைஞர்களிடையே ''பரந்தளவில் உறுப்பினர் திரட்டும்'' வொல்ஃபோர்த்தின் அறிக்கைகளால் கவரப்பட்டிருந்தார்களேயன்றி, பெறுமதி மிக்க மற்றும் அனுபவம் நிறைந்த உறுப்பினர்களின் இழப்புகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

அடுத்த பத்து ஆண்டுகளில் நான் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே கீர்த்தியை பார்க்க முடிந்ததோடு, பொதுவில் அவை அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள முடியாத நிலமைகளின் கீழேதான் ஏற்பட்டன. அக்டோபர் 1985 வந்த பின்னரே நாம் இறுதியில் நெருக்கமாக மற்றும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் இணைந்து தொழிற்பட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் நெருக்கடி வெடித்தது. அக்டோபர் மூன்றாம் வாரத்தின் முடிவில் கீர்த்தி லண்டன் வந்தடைந்தார். நான் தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) மற்றும் நான்காம் அகிலம் ஆகியவற்றுள்ளான நிலைமைகளை வேர்க்கஸ் லீக்குக்கு மீள் அறிக்கை (Report back) சமர்ப்பிக்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குத் திரும்பினேன். எனக்கு நல்ல ஞாபகம் உண்டு அக்டோபர் 20 காலையில் யாரிடமிருந்தல்ல -மைக் பண்டாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பண்டா, கீர்த்தி லண்டனுக்கு வந்துவிட்டதாகவும்—உண்மையில் கீர்த்தி தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கட்சி வளவில் (Premises) இருப்பதாகவும் என்னிடம் கூறினார். பண்டாவுடன் தொலைபேசி பேச்சு முடிந்த மறுகணமே நான் மற்றொரு தொடுவையில் (line) தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கீர்த்தியுடன் பேச விரும்புவதாக வேண்டினேன். தொலைபேசியில் அவர் வந்ததும் அவரின் முதல் வார்த்தை; ''தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் போக்குப் பற்றிய உங்களது விமர்சனங்களை நான் வாசித்தேன், நான் அவற்றுடன் உடன்படுகின்றேன்''. இந்த அணுகுமுறை தோழர் கீர்த்தியின் தனிச்சிறப்பியல்பாகும். அவர் எப்பொழுதும் அரசியல் ரீதியில் விவாதத்துக்கு உட்பட்டுள்ள விடயங்களுடன்தான் ஆரம்பிப்பார். அவர் லண்டனை வந்தடைந்த பின், முந்தைய நாளில் பண்டா கீர்த்திக்கு, ஹீலியின் ''பாலுறவு ஊழல்' பற்றிய காம விபரங்கள் பற்றிப் பேசி மகிழ்விக்க முயன்றார். இறுதியில் பண்டா மூச்செடுக்க தனது பேச்சை நிறுத்தியதும், கீர்த்தி சாதாரணமாக அவரைப் பார்த்து, ''ஜெரி ஹீலியுடனான உங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்ன?'', எனக் கேட்டார். இக் கேள்வி, பண்டாவை அதிர்ச்சியுறச் செய்தது. கூறுவதற்கு அவருக்கு எதுவுமே இருக்கவில்லை. ஒரு கணிசமான அளவு அரசியல் தள்ளாட்டத்தின் பின்னர், இந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளியேற வழியைத் தேடிய பண்டா, நான் 1982 மற்றும் 1984க்கும் இடையில் எழுதிய அரசியல் பத்திரங்களின் பிரதிகளை கீர்த்தியிடம் கையளித்தார்.

ஆனால் இப் பத்திரங்கள் பண்டாவுக்கு எவ்வித முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவை அவருக்கு உடனடியாகத் தரக்கூடிய பயன்பாடு மற்றும் அவரின் உட்கட்சி கோஷ்டியின் கோஷ்டிப் போராட்ட தேவைகளுக்கான பயன்பாடுகள் என்பனவற்றைத் தாண்டி அவற்றின் பெறுமதி செல்லவில்லை. ஆனால் கீர்த்திக்கோ அவை இன்றியமையா முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஏனென்றால், உண்மையில் ஒரு தசாப்த காலத்துக்கு அதிகமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவினுள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் / தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் வளர்ச்சியுற்று வந்த சந்தர்ப்பவாதம் பற்றிப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1972ம் ஆண்டு முன்வைத்த விமர்சனங்களை, அப்பொழுது அனைத்துலகக் குழுவின் உள்ளே எவரும் அறிந்திருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோரின் நேர்மையற்ற மற்றும் சீர்குலைக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்தது. அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளின் கண்களின் முன், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை அபகீர்த்தியடையச் செய்யும் நோக்குடன் தொழிலாளர் புரட்சிக் கட்சி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆற்றிவந்த பணிகளைப் பற்றி பொய்யான அறிக்கைகளை புனைந்து வந்தது. இத்தாக்குதல்களின் நோக்கம் கீர்த்தியும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை சேர்ந்த அவரது தோழர்களும், நான்காம் அகிலத்தினால் வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்காக உணர்வுபூர்வமாக தம்மை அர்ப்பணித்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினூடு தொடுத்து வந்த போராட்டத்தை கீழறுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. கீர்த்தி, நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கட்சியின் தலைவராகவும் அதன் மிகப்பெரிய பாரம்பரியங்களின் பெருமைமிக்க பிரதிநிதியாகவும் விளங்கினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் கீர்த்திக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சி உருவாக்கிய பயங்கரமான அனைத்துக் கஷ்டங்கள் மத்தியிலும், 1985ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வெடித்த அரசியல் நெருக்கடிக்கு கீர்த்தியின் பிரதிபலிப்புகளில் அகநிலைவாதத்தின் அல்லது மனக் கசப்பின் அறிகுறி கூடத் தென்படவில்லை. மாறாக அவர், இந் நெருக்கடியில் அனைத்துலகக் குழுவினை ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் கொண்டு மீண்டும் ஆயுதபாணியாக்க ஒரு சந்தர்ப்பத்தை கண்டதோடு, பல வருடங்களாக நான்காம் அகிலத்தை பலவீனமடையச் செய்துவந்த சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக உலகம் பரந்த அளவில் ஒரு எதிர் தாக்குதலை தொடுப்பதற்கான ஒரு வாய்ப்பையும் கண்டார்.

1985 அக்டோபர் மற்றும் 1987 டிசம்பர் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதி, அரசியல் ரீதியில் கீர்த்தியின் வாழ்க்கையில் மிகவும் பலன் தந்த மற்றும் மிகவும் மகிழ்ச்சிமிக்க காலப் பகுதியாக அமைந்தது என்று என்னால் துணிவுடன் கூறமுடியும். அவர் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மறுமலர்ச்சியில் ஈடுசெய்ய முடியாத மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார்.

1987 டிசம்பர் 23ல் நடைபெற்ற தோழர் கீர்த்தியின் மரணச்சடங்கில், நான் புரட்சிகரத் தொழிலாளர்களது மற்றும் இளைஞர்களது வரும் தலைமுறையினர், மாவோ சேதுங்கிடமிருந்தோ அல்லது ஹோ சி மின்ஸிடம் இருந்தோ அல்லது ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்தோ, அல்லது தாம் மார்க்சிஸ்டுக்கள் என்று வேடம் போட்டு உலா வரும் முதலாளித்துவ தேசியவாதத்தின் மற்றும் குட்டி முதலாளித்துவ மிதவாதத்தின் எந்த ஒரு பிரதிநிதியிடம் இருந்தோ தமது உள் ஊக்கத்தை பெறப்போவதில்லை எனக் கூறினேன். இதற்கு மாறாக எதிர்காலத்தின் புரட்சிகரப் போராளிகள், கீர்த்தி பாலசூரியாவின் அரசியல் முன் உதாரணத்தில் இருந்தே கற்றுக்கொள்ளவார்கள் என்றேன். கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள், இப்புகழுரையில் மிகைப்படுத்தலின் அறிகுறிகூட அடியோடு இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. அரசியல் ஏய்ப்பு மற்றும் தத்துவார்த்த பாசங்கை தமது அரசயல் வாழ்வின் அடித்தளமாக கொண்டிருந்த ஸ்ராலினிசத்தின் புகழ்மிக்க மாபெரும் மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் புகழ்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் ஈவிரக்கமற்று அடி கொடுத்துள்ளன. ஆனால் இந்நிகழ்வுகள் மார்க்சிசத்தின் வரலாற்று முன்னோக்கின் மற்றும் அது அதன் அடிப்படையாக கொண்டிருக்கும் விஞ்ஞானபூர்வ வழிமுறையின் சக்தியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.

கீர்த்தியின் அரசியல் வாழ்வின் வீச்சளவு ஏறக்குறைய இருபது வருடங்களிலும் அதிகமாக இருந்தது. இந்த வருடங்கள் அனைத்தும் புரட்சிகர மார்க்சிசத்தின் நிஜ மரபுகளைக் கட்டிக் காப்பதற்காக அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. இருந்தபொழுதும், மார்க்சிசத்தை பாதுகாக்கும் இப் போராட்டத்தை, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வாழ்வு, அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மிகவும் கோர வடிவங்களின் மேலாண்மைக்கு உள்ளாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் அவர் நடத்த வேண்டி இருந்தமை, அவரது விதியாக இருந்தது. இச்சந்தர்ப்பவாதம் மிகப் பிரமாண்டமான சடத்துவ ரீதியான வளங்களை தன்வசம் வைத்திருந்தது. ஆனால் இந்த வளங்களால், அதனை அதன் சொந்த அரசியல், சித்தாந்த மற்றும் ஒழுக்ககியல் திவாலின் தவிர்க்க முடியா விளைவுகளில் இருந்து என்றென்றைக்குமாக பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த காலத்திய பாசாங்குப் புனைக்கதைகள் யாவும் அம்பலமாக்கப்பட்டு வருகின்றன. மாவோக்கள், ஹொக்ஸ்ஸாக்கள், டீட்டோக்கள், காஸ்ட்ரோக்கள் மற்றும் இரண்டாம் உலகயுத்தத்தின் பிந்தைய சகாப்தத்தில் புரட்சியாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள் அனைவரும் அரசியல் மோசடிக்காரர்கள் மற்றும் தத்துவார்த்த போலிகள் என்றே நினைவு கூரப்படுவர். அவர்களின் சாதனைகள் எனக் கூறப்படுபவை அனைத்தும் இற்றுப் போன அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டவையாகும். அவர்கள் உருவாக்கிய அரசியல் கொலைக்களங்கள், ஒன்றில் அவை இடிந்து வீழ்ந்துவிட்டன அல்லது இழிவுற்ற நிலையில இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவர்களில் அநேகரைப் பொறுத்தவரை மரணம் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களின் அழிவுகரமான விளைபயன்களில் இருந்து அவர்கள் தப்பிச் செல்ல அவர்களுக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. இவற்றிற்கான விலையை செலுத்த தொழிலாள வர்க்கமே விடப்பட்டுள்ளது. ஸ்ராலினிசத்துடனான அவரது சிடுமூஞ்சித்தனமான பேரம் பேசல்களின் பெறுபேறுகளை நேரடியாக காண, காஸ்ட்ரோ மட்டுமே போதுமான அளவு நீண்டகாலத்திற்கு உயிர் வாழ்ந்துள்ளதாக தோன்றுகின்றது. அவர்களின் தனிப்பட்ட ரீதியான கதிகள் எப்படியாக இருந்த பொழுதும், இந்தப் போலி கதாநாயகர்கள் —இவர்களுடன் மேலும் அநேகரைச் சேர்க்க முடியும்— இவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றைப் பொதுவாகக் கொண்டிருந்தனர். அதுதான், இவர்களில் ஒருவர்கூட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மேம்பாட்டிற்கு அரசியல் ரீதியில் நிலையான பெறுமதியுள்ள பங்களிப்பு ஒன்றைக் கூட செய்திருக்கவில்லை. மாறாக இவர்கள் அதை சுரண்டினர், தவறான வழியில் அதை வழிநடத்தினர் மற்றும் அதைக் காட்டிக் கொடுத்தனர்.

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மூலம்

மறுபுறம், லெனின், ட்ரொட்ஸ்கி, லுக்செம்பேர்க் ஆகியோர் கற்பித்த புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் பள்ளியின் தலைசிறந்த பிரதிநிதிகளில் ஒருவராக கீர்த்தி நினைவுகூரப்படுவார். அவர் போராடி வெற்றி கொள்ள முயன்ற பிரச்சினைகள் ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சிகர மூலோபாயத்தின் மிகவும் அத்தியாவசியமான பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

கீர்த்தியின் வாழ்வின் தனிச் சிறப்பை மற்றும் அவர் போராடிய மூலக் கோட்பாடுகள் மற்றும் முன்னோக்குகள் என்பன இன்றைய காலப்பகுதியில் கொண்டுள்ள தீர்க்கமான முக்கியத்துவத்தை சரியாக மதிப்பீடு செய்ய, அவரின் சொந்த அரசியல் அபிவிருத்தி வேரூன்றியிருந்த இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் போராட்டங்களை மீளாய்வு செய்தல் அவசியமாகும். எனவே ரஷ்ய மார்க்சிஸ்டுகள் தாம் தயார் செய்துகொண்டிருந்த புரட்சி பற்றிய பல்வேறு கருத்துருக்களை விவாதித்துக்கொண்டிருந்த ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு, இந்நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்கு நாம் பின் செல்லவேண்டும்.

ரஷ்யா இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்றைய முக்கிய முதலாளித்துவ வல்லரசுகளுள் அதி குறைந்த அபிவிருத்தியை அடைந்ததாக இருந்தது. அதன் அமைப்பு, பிற்போக்கு மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிய மன்னரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதன் அரசியல் அமைப்பு ஒரு அரைநிலமானித்துவ பண்பினைக் கொண்டிருந்தது. மக்கட்தொகையில் மிகப் பெருப்பான்மையினர் விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் வறுமையின் படுபாதாளத்தில் மற்றும் அறியாமையிலும் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்திலேயே புதிய மற்றும் துரித தொழிற்துறை வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு கணிசமான அளவு தொழிலாள வர்க்கம் அங்கு தோன்றியிருந்தது. ஆனால் ரஷ்ய மக்கட்த்தொகையில் அதன் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறிப்பிட்டளவு சிறியதாக மற்றும் ஒரு சில நகர மையங்களில் செறிந்தும் இருந்தது.

இந்நூற்றாண்டின் திருப்பத்தில் எதிர்வரும் புரட்சியின் முக்கிய பணி, ஒரு ஜனநாயக பண்பைக் கொண்டிருக்கும் என்று ரஷ்யாவில் உள்ள மார்க்சிஸ்டுக்கள் உடன்பட்டிருந்தனர். அதாவது அது அரைநிலமானித்துவ அரச அமைப்பை அடித்துச் செல்வதோடு நாட்டுப்புறத்தில் நிலமானித்துவ உறவுகளின் மிச்சமீதங்களாக எஞ்சியிருப்பவை அனைத்தையும் அழித்துவிடும் என்று உடன்பட்டிருந்தனர். ரஷ்ய பிரபுத்துவத்தின் பெரும் நிலச் சொத்துடமைகள் உடைக்கப்பட்டு, நிலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

அதன் வரலாற்றுப் பணியின் நோக்கு நிலையில் இருந்து ஆய்வு செய்யப்படுமிடத்து, ரஷ்ய மார்க்சிஸ்டுக்களால் எதிர்பார்க்கப்பட்ட புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று வரைவிலக்கணம் செய்யப்பட்டது. இருந்தபொழுதும் ஜனநாயகப் புரட்சியை அடைவதில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான அரசியல் உறவு சம்பந்தமாக மற்றும் எந்த அரசியல் மற்றும் அரச வடிவங்களினூடு ஜனநாயகப் புரட்சி அடையப்படும் என்பது பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றின.

ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான ஜோர்ஜி வீ. பிளெக்ஹானோவ், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாபெரும் ஜனநாயகப் புரட்சிகளின் அடிப்படையில், அவை மேற்கு ஐரோப்பாவில் மற்றும் வட அமெரிக்காவில் உருவாக்கிய முன்னோடி முன்மாதிரிகள் போல ரஷ்ய புரட்சியும் ஒரு ஜனநாயகக் குடியரசையேயன்றி அதிலும் அதிகமாக எதையும் உருவாக்க முயல முடியாது என்ற நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வகித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முக்கியமாக 1789 - 1794ம் ஆண்டுகளினது பிரெஞ்சுப் புரட்சியின் பெறுபேறுகளை ஒத்த விளைபயன்களை ரஷ்யப் புரட்சி உருவாக்கும் என்று அவர் காரணம் கூறி வாதிட்டார். சர்வாதிகாரத்தை, ரஷ்ய புரட்சி தூக்கி வீசும் பொழுது, அது அரசியல் அதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்குச் சேர்க்கும். அதையடுத்து முதலாளித்துவ ஆட்சியின் ஏறத்தாழ நீண்டதாக உள்ள காலப்பகுதி ஒன்று பின்தொடரும். அக்காலப்பகுதியினுள் தொழிலாள வர்க்கமானது எதிர்காலத்தில் சோசலிசத்தை கைகூடச் செய்ய ஒரு தாராண்மை தன்மையிலான ஜனநாயகக் கட்டமைப்பினுள் அது அரசியல் போராட்டத்தில் கல்வியூட்டப்படும். அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் பார்க்குமிடத்து, பிளெக்ஹானோவின் போக்குவழியின் (Line) பொருள், தொழிலாள வர்க்கத்தின் கட்சி எதிர்வரும் புரட்சிக்கு தலைமை கொடுக்க முயல முடியாது என்பதாகும். மாறாக அது, புரட்சியின் தலைமைப் பாத்திரத்தை முதலாளித்தவ வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்துக்கான அவர்களது உரிமை கொண்டாடலை ஏற்றுக் கொள்வதோடு, ரஷ்ய சமூக ஜனநாயகமானது முதலாளித்துவ கட்சிகளின் விசுவாசமான நண்பனாகச் செயற்பட வேண்டும்.

இங்குதான் ஒரு காலத்தில் பிளெக்ஹானோவின் விசுவாசமான மாணவனாக விளங்கிய லெனின் தனது குருவிடமிருந்து பிரிந்தார். லெனின், ரஷ்ய புரட்சியானது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்ற வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் வர்க்க இயக்கவியல் (Dynamics) பற்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்துருவை முன்வைத்தார். பிளெக்ஹானோவ் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மேலாண்மையை ஆராயாமலே முன்கூட்டியே ஏற்றுக் கொண்டார். ஆனால் லெனின் இந்த வர்க்கமானது ரஷ்யாவை நிலமானித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக மிச்ச மீதங்கள் அனைத்தையும் துடைத்துக்கட்ட அவசியப்படும் போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல இயலாதது, ஏனென்றால் அது அளவுக்கு அதிகமாக பழமையை பாதுகாக்கும், மிக அதிகமாக சமரசம் செய்ய நாட்டம் கொண்டதாக மற்றும் பரந்த மக்களைக் கண்டு அளவுக்கு மிஞ்சி அச்சம் கொண்டுள்ளதாக உள்ளது என்று வாதிட்டார். பிளெக்ஹானோவ் தொழிலாள வர்க்கத்துக்கும் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இதற்கு எதிராக லெனின் பாட்டாளி வர்க்கத்திற்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இக்கூட்டின் இலக்கு இவ்விரு வர்க்கங்களினதும் தலைமையின் கீழ் ஒரு 'ஜனநாயக சர்வாதிகாரத்தை' அடைவது என்று லெனின் வாதிட்டார்.

லெனினின் சூத்திரம் நிச்சயமாகப் பிளெக்ஹானோவின் சூத்திரத்திலும் பார்க்க அதிகம் தீவிரமானது. மற்றும் அதன் தந்திர உபாயத்தின் போக்குவழி முற்று முழுதாக வேறுபட்டதாக விளங்கியது. பிளெக்ஹானோவ், ஜனநாயகப் புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையை வலியுறுத்தினார். அவர் தொழிலாள வர்க்கம் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துடனான அதன் அரசியல் கூட்டின் நலனுக்காக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பிற்போக்கு முகாமினுள் தள்ளிவிடக் கூடிய எந்த அதிதீவிர நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார். லெனின், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கக் கட்சிகளின் மற்றும் அவற்றின் தவிர்க்கமுடியா ஈடாட்டங்களில் இருந்தும் முற்று முழுதாக சுயாதீனமாக தனது போராட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கம் விவசாயிகளின் அதி தீவிரமான பகுதிகளுடன் கூட்டமைத்து, விவசாயத்தின் பண்டை உறவுகளின் கவிழ்ப்பை எல்லை வரம்புவரை தள்ளுவதோடு, பழைய ஜாரிச அரச இயந்திரத்துடனான கணக்கை தயவு தாட்சணியம் இன்றி முடித்துக் கட்டுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

இருந்தபொழுதும், லெனனின் அரசியல் முன்னோக்கில் பொருத்தமின்மை ஒன்று இருந்தது. தொழிலாள வர்க்கத்துக்கு எந்ந ஒரு சுயாதீனமான பங்கை மறுத்த பிளெக்ஹானோவின் ஒத்துப் போகும் போக்குவழியில் இருந்து அது துல்லியமாக விலகிச் சென்ற பொழுதும், லெனினின் முன்னோக்கு, முதலாளித்துவ சொத்துடமையினுள் புரட்சி ஊடுருவிச் செல்வதை முன்காணவில்லை. அதோடு இரு வர்க்கங்களின் 'ஜனநாயக சர்வாதிகாரம்' என்ற கருத்துரு, உள்ளியல்பாகவே துல்லியமற்றதாக இருந்தது.

மிகவும் தீவிரமானதும் உள்ளார்ந்த ரீதியில் பெரிதும் உறுதியானதுமான மூன்றாவது கருத்துப்பாடு ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது. உலக வரலாற்றுக் கருத்துப்பாட்டின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி ரஷ்ய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு (காலாவதியான முதலாளித்துவ அபிவிருத்தியைக் கொண்ட அனைத்து நாடுகளையும் போலவே) 1789ம் ஆண்டின் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது என வாதிட்டார். அது இனியும் தனது சொந்த 'முதலாளித்துவ' புரட்சியை செய்யும் நிலையில் இருக்கவில்லை. 1848ன் நிகழ்வுகள், ஜனநாயகப் புரட்சியின் பணி தொடர்பான முதலாளி வர்க்கத்தின் மனோபாவம், எல்லாவற்றிற்கும் மேலாக அது வாழ்ந்த சமுதாயத்தின் வர்க்க சக்தியால் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டின. தொழிலாள வர்க்கத்தின் பெருக்கம், முதலாளி வர்க்கத்துக்கு ஜார் எதேச்சாதிகாரத்தினை காட்டிலும் பெரும் ஆபத்தை தோற்றுவித்தது. மேலும் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் பாத்திரத்தினை வகிக்க இலாயக்கற்றவர்களாக விளங்கினர். அதன் அரசியல் பாத்திரம் எவ்வளவுதான் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தபோதிலும் அதனால் இன்னொரு வர்க்கத்தின் முன்னோக்கின் மீது மட்டுமே செயல்பட முடியும். ஆதலால் ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கமான பாத்திரத்தினை தொழிலாள வர்க்கமே வகிக்கவேண்டியதாக இருந்தது. அத்தோடு அதனை தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவில் மட்டுமே சாதிக்கவும் முடியும். மேலும் தொழிலாள வர்க்கம் தன்னை வெறும் ஜனநாயகப் பணியுடன் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போயிற்று. அது முதலாளித்துவ சொத்தினுள் ஊடுருவ கட்டாயப்படுத்தப்படுமாதலால் ஜனநாயகப் புரட்சி மேலும் மேலும் அப்பட்டமான சோசலிச தன்மையை பெற்றுக்கொள்ளும்.

ரஷ்யாவில் தொழிலாள வர்க்க புரட்சி, உலகம் பூராவும் வெடிப்புமிகுந்த அதிர்வினை உருவாக்கும்; ரஷ்யாவில் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும், ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் சோசலிச நிர்மாணத்தின் சாத்தியமும் புரட்சியை அதன் எல்லைகளுக்கு அப்பால் விஸ்தரிப்பதிலேயே தங்கியுள்ளதாக ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

உலக சோசலிசப் புரட்சியுடனான ரஷ்ய புரட்சியின் உறவானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் இன்றியமையாத அத்திவாரத்தினை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. அவரின் சமகாலத்தவர்கள் எவருக்கும் —லெனின் இதற்கு அப்பாற்பட்டவர் அல்ல— ஈடிணையற்ற விதத்தில் உறுதியோடும் தீர்க்க தரிசனத்தோடும் இறுதி ஆய்வுகளில் ரஷ்ய புரட்சியின் பண்பு தேசிய நிலைமைகளால் அன்றி சர்வதேச நிலைமைகளால் நிர்ணயம் செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோசலிச பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இறங்குவதற்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பெரிதும் பின்தங்கியது எனத் தொடர்ந்து வாதிட்ட மென்ஷிவிக் மேதாவிகளுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, ரஷ்ய பொருளாதார சக்தியை அதன் அபிவிருத்தியின் தேசிய மட்டத்தில் இருந்தும் அது கொண்டுள்ள தேசிய வளங்களில் இருந்து மட்டும் ஒழுங்குமுறையாக மதிப்பீடு செய்துவிட முடியாது என்றார். ரஷ்ய அபிவிருத்தியின் நிஜ சக்தியை அது உண்மையில் நிலைகொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தினதும் சர்வதேச அரசியல் உறவுகளினதும் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கும் என்றார்.

உலக நிலைமைகளால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த ஏகாதிபத்திய பொருளாதாரங்களின் மீது சார்ந்த ஒரு அரைக்காலனித்துவ நிலைமைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய முதலாளி வர்க்கம் கடந்த காலத்தில் ஜனநாயக புரட்சிகளுடன் தொடர்புபட்டிருந்த எந்தவொரு வரலாற்று பணியினையும் தீர்த்துவைக்க இலாயக்கற்றது என்பதே ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடாக விளங்கியது.

ஜனநாயக புரட்சிக்கு தலைமை தாங்கவும், பூரணப்படுத்தவும் ரஷ்ய முதலாளி வர்க்கத்தினால் முடியாது போனமை, ட்ரொட்ஸ்கி விளக்கியது போன்று ஒரு உலக வரலாற்றுத் தோற்றப்பாட்டின் வெளிப்பாடாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய அடிப்படையில் மனித இனத்தின் எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்துவைக்க இயலாது போனமை, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் தேசிய அரசுக்கே சாவுமணி அடித்தது. உலகப் பொருளாதார சக்திகள், முதலாளித்துவம் வேரூன்றியிருந்த தேசிய அரச அமைப்பின் அரசியல் கட்டுமானத்தையும் தாண்டி வளர்ச்சி கண்டன.

ஒரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கத்துக்கு நிலமானித்துவத்தின் அதிகாரத்துவத்தினை துடைத்துக்கட்டும் அரசியல் போராட்டத்தின் தாக்கமானது இடைவிடாது ஆட்சியை கைப்பற்றுவதையும் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தினையும் நோக்கி இட்டுச் சென்றது. எவ்வாறெனினும் அது தனது சர்வாதிகாரத்தினை ஸ்தாபிதம் செய்ததும் ரஷ்ய தொழிலாள வர்க்கமோ அல்லது எந்தவொரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கமோ ஒரு புறத்தில் தேசிய பொருளாதாரத்தின் நிலையான வரையரைகளுக்கும் மறுபுறத்தில் சர்வதேச முதலாளி வர்க்கத்தின் மிலேச்சத்தனமான எதிர்ப்புக்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

ரஷ்ய ஆட்சி நீடிப்பு

ஆதலால் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும் இறுதியில் சோசலிசத்தினை நோக்கிய முன்னேற்றமும் முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் அனுதாபத்தில் மட்டுமன்றி, இறுதி ஆய்வுகளில் அவற்றின் சொந்த தேசிய முதலாளி வர்க்கத்தினை வெற்றி கொள்வதிலும் தங்கியுள்ளது. 1907க்கு முன்னரே ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதுபோல், ''ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் நேரடி அரச ஆதரவு இல்லாமல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆட்சியில் நீடிக்க முடியாதது மட்டுமன்றி அதன் தற்காலிக சர்வாதிகாரத்தினை ஒரு சோசலிச சர்வாதிகாரமாக மாற்றவும் முடியாது.'' (Permanent Revolution & Results and Prospects [London: New Park, l975], p. 237).

முதலாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, தேசிய காரணிகளுக்கு மேலாக சர்வதேச நிலைமையின் முக்கியத்துவத்தினை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதை நிரூபித்தது. ஏகாதிபத்திய யுத்தம்- சாராம்சத்தில் காலவதியான தேசிய அரசுடன் உலக முதலாளித்துவ உற்பத்தி சக்திகளை சமாதான ரீதியில் இணக்கமுறச் செய்ய முடியாமையை சுட்டிக்காட்டியது. முன்னேறிய, பின்தங்கிய நாடுகள் இரண்டிலும் தொழிலாள வர்க்கம் ஒரு பொது முட்டுக்கட்டை நிலைக்கு முகம்கொடுத்தது. மனித சமுதாயத்தின் சகல அடிப்படைப் பிரச்சனைகளுக்குமான தீர்வினை, உலகப் பொருளாதார அபிவிருத்தியின் மட்டத்திலும் சர்வதேச புரட்சிகர போராட்டங்களின் ஊடாகவும் மட்டுமே காணமுடியும்.

இந்த விஞ்ஞான கருத்துப்பாடு சகல அரசியல் பிரச்சனைகளதும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டின் அடிப்படையாக உள்ளது. லெனினைப் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவர் அங்கீகரித்த அதேவேளையில், இந்த ஜனநாயக வேலைத்திட்டத்தின் இம் மூலகத்துக்கான ட்ரொட்ஸ்கியின் ஆதரவு ஆழமான விமர்சன பண்பினை கொண்டிருந்தது. ஒரு பெரிய அரசுடன் சிறிய தேசியங்களை பலாத்காரமாக ஒன்றிணைப்பதை அவர் வன்மையாக எதிர்த்தபோதிலும் ட்ரொட்ஸ்கி- 1915ல் எழுதியது போன்று — சமூகஜனநாயகம், ''வரலாற்றுக்கு மேலாக நின்று தேசியக் கொள்கையை ஏதோ ஒரு வகையான முழுமுதல் கருத்தாக மாற்றிவிடாது'' என வலியுறுத்தினார்.

''தேசமும் பொருளாதாரமும், அரசுடனும் ஒன்றுடன் மற்றொன்றும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. அரசு, பொருளாதாரத்துக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. இதை விரிவுபடுத்த முயல்வது தேசியத்தினை நசுக்குகின்றது. ''நிலத்தின் மேற்பரப்பில் பொருளாதாரம் அதன் சக்திகளின் இயற்கையான இயக்கத்தினையும் வளங்களையும் தேசிய இனக்குழுக்களின் பங்கீட்டுக்கு கீழ்ப்படுத்த மறுக்கின்றது.'' (Lenin's Struggle for a Revolutionary international [New York:Monad, 1984], pp. 370-71].

நிரந்தரப் புரட்சியும் கம்யூனிச அகிலமும்

அக்டோபர் புரட்சியைப்போல் உலக மக்களின் நனவில் பிரமாண்டமான அதிர்ச்சி மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய வேறு சம்பவம் வரலாற்றில் கிடையாது. உலகின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கினையும் இருபதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களையும் தேசிய இனங்களையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பில் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியமையானது ஒன்றில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு வகையான திரைமறைவில் ஏகாதிபத்திய சக்திகளால் ஆளப்பட்ட உலகின் பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த வெகுஜன இயக்கத்துக்கு ஒரு பிரமாண்டமான உத்வேகத்தை வழங்கியது.

அக்டோபர் புரட்சி அறநெறி ஊக்கத்தினை மட்டுமன்றி- ஆபிரிக்கா, மத்திய கிழக்கு சிறப்பாக ஆசியா —அங்கு ஏகாதிபத்திய ஆளுமைக்கு எதிரான ஒரு இராட்சத வடிவம் எடுக்கத் தொடங்கியிருந்தது போன்ற— பின்தங்கிய நாடுகளின் வெகுஜனங்களுக்கு ஆழமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினையையும் வழங்கியது. என்ன விதிமுறைகள் ஊடாக, என்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காலனித்துவ நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவர்? என்ற தீர்க்கமான கேள்விகளுக்கு அக்டோபர் புரட்சி நடைமுறைப் பதில்களை வழங்கியிருந்தது. ரஷ்யாவை போன்று ஆசியாவின் பின்தங்கிய நாடுகளில் மிகவும் முக்கியமானவை பற்றி பேசுமிடத்து சீன- இந்திய வெகுஜனங்கள் எதிர்கொண்ட பணிகள் முக்கியமாக ஒரு ஜனநாயக பண்பை கொண்டிருந்தன; காலனித்துவ அடக்குமுறையில் இருந்து விடுதலை, தேசிய இணைப்பு, விவசாயிகளின் மீதான நிலமானித்துவ உறவுகளின் அடிமைத் தளையை அகற்றுதல். ஒரு வழக்காறான அரசியல் வரைவிலக்கணத்தின் நிலைப்பாட்டின்படி சீனாவும், இந்தியாவும் எதிர்நோக்கும் பணிகள் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளினால் ''தீர்க்கப்பட்ட'' வையாக விளங்கின. ஆனால் மென்ஷிவிசத்தின் அரசியல் தர்க்கத்தின்படி இந்தியாவிலும் சீனாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் தலைமை தேசிய முதலாளி வர்க்கத்துக்கு உரியதோடு அதன் இலக்குகள் ஒரு சுதந்திர முதலாளித்துவ குடியரசு வடிவிலேயே அடையப்பட முடியும்.

ஆனால் ரஷ்யாவில் மென்ஷிவிசம் தவறானதென நிரூபித்த அதே வரலாற்று முரண்பாடுகள்தான் இந்தியாவிலும் சீனாவிலும் நிலவின. தேசிய இயக்கத்தின் முதலாளித்துவ தலைமைகள் துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் ஒரு தொழிலாளர் இயக்கத்தினை எதிர்நோக்கியது. அதன் சமூகப் போராட்டங்கள் முதலாளித்துவ தலைமையின் முக்கிய பொருளாதார நலன்களை அச்சுறுத்தியது. மேலும் முதலாளி வர்க்கத்தின் தலைமையில் (முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர தலைமையை வழங்க இலாயக்கானது என்பதை ஏற்றுக்கொள்ள ஒருவர் தயாராக இருப்பினும்) ஒரு தேசிய புரட்சியின் அடிப்படையில் இந்த ஒடுக்கப்படும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது முடியாத காரியமாக இருந்தது. ஆதலால் நிரந்தரப் புரட்சி தத்துவம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்துக்கு விளங்கியதை காட்டிலும் எழுச்சி கண்டுவரும் ஆசிய தொழிலாள வர்க்கத்துக்கு பெரிதும் பொருத்தமானதாக விளங்கியது.

1919-1922க்கும் இடையிலான கம்யூனிச அகிலத்தின் பத்திரங்கள் காலனித்துவ பிரச்சினை பற்றியதாய் விளங்கின. குறிப்பாக இரண்டாம், நான்காம் அகல்பேரவைகள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே விவரிக்கப்பட்டன. பின்தங்கிய நாடுகளின் வேறுபட்ட பொருளாதார, தொழிற்துறை அபிவிருத்தியின் அளவுகளையும், தொழிலாள வர்க்கத்தின் தொடர்ந்து வரும் பலத்தினையும் கணக்கில் எடுத்த அதே வேளையில் கம்யூனிச அகிலத்தின் இந்தப் பிரேரணை தொழிலாளர் இயக்கம் கருவடிவில் இருந்தாலும் கூட தேசிய முதலாளி வர்க்கத்தின் கட்சிகள், அமைப்புக்களில் இருந்து அரசியல் சுயாதீனமாக இருப்பதை வலியுறுத்தியது.

லெனினுக்கு பின் மூன்றாம் அகிலம்

லெனினின் மரணத்தின் பின்னர் கம்யூனிச அகிலத்தின் தகவமைவு தீவிரமாக மாற்றம் கண்டது. 1926ல் ஸ்ராலின், புக்காரினின் ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாடு அரங்குக்கு வந்தமை சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தினை கைவிடவும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சொந்த சடத்துவ நலன்களுக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினை கீழ்ப்படுத்தவும் சித்தாந்த அடிப்படையை வழங்கியது.

மார்க்சிசத்தின் இந்த அடிப்படை திருத்தலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியும் இடது எதிப்பும் நடாத்திய அரசியல் போராட்டத்தினையும் அல்லது இந்த தத்துவம் சோவியத் யூனியனுக்கும் உண்மையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் ஏற்படுத்திய துக்ககரமான விளைவுகளை விரிவாக ஆராய்வது இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நாம் தோழர் கீர்த்தியின் அரசியல் பயிற்சிக்கு அவற்றின் துன்பகரமான படிப்பினைகள் ஒரு அடிப்படையான பாத்திரத்தினை வகித்துள்ளதால் சுருக்கமாகவேனும் சீனச் சம்பவங்களை ஆராய்வோம்.

நடைமுறை அர்த்தத்தில் ஸ்ராலின், சியாங் கேய் சேக்குடனும் முதலாளித்துவ கோமின்டாங் உடனும் கொண்டிருந்த உறவுகள் —இதற்கு சீனத் தொழிலாள வர்க்கம் ஒரு பயங்கரமான விலைகொடுக்க நேரிட்டது— சந்தர்ப்பவாத ஈடுபாட்டில் இருந்தே பெருக்கெடுத்தன. இவை ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவத்தை விபரிக்கத் தூண்டின.

இத் தத்துவத்தின்படி சோவியத் யூனியனில் சோசலிச நிர்மாணம், முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, சோவியத் யூனியனில் சோசலிசத்தினை அதன் சொந்த உள்ளார்ந்த வளங்களின் அடிப்படையில் யதார்த்தமாக்கிவிட முடியும். எவ்வாறெனினும் ஸ்ராலின் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை யதார்த்தமாக்குவதில் கம்யூனிச அகிலத்தின் முக்கியத்துவத்தினையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அதன் செல்வாக்கினையும் ஒரேயடியாக தட்டிக்கழித்து விடவில்லை. ஏகாதிபத்தியம் ஒரு இராணுவத் தாக்குதலில் ஈடுபடாதிருந்தால் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை நிர்மாணித்துவிட முடியும் என்பதே கிரெம்ளின் நிலைப்பாடாக விளங்கியது.

இந்த விதத்தில் கம்யூனிச அகிலம் ஒன்றில் முதலாளித்துவ ஆட்சியாளருடன் கூட்டுக்களை விருத்தி செய்வதன் மூலம் அல்லது தேசிய தொழிலாளர் இயக்கங்களின் ஊடாக நெருக்குவாரம் கொடுப்பதன் மூலம் சோவியத் யூனியன் தொடர்பாக முதலாளித்துவ அரசாங்கங்களை ஒரு சாதகமான மனோபாவத்தினை கடைப்பிடிக்க செய்வதன் மூலம் இந்த ஆபத்தினை தவிர்ப்பதில் பயனுள்ளதாக விளங்கமுடியும்.

இங்கிலாந்தில் அத்தகைய ஒரு கொள்கை 1925-26ல் ஆங்கிலோ- ரஷ்யன் கமிட்டியின் ஸ்தாபிதத்தின் ஊடாக அமுல் செய்யப்பட்டது. இக்கமிட்டி பிரித்தானிய பொது வேலைநிறுத்தத்தினை காட்டிக் கொடுத்தது.

சீனாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கோமின்டாங்குடனும் அதன் தலைவர் சியாங் கேய் சேக்குடனும் உறவினை வளர்த்துக்கொள்ள முயன்றது. ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கின் அரசியல் நெறிமுறைக்கு அடிபணியுப்படி உத்தரவிட்டார். இது ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' எனப்பட்டது. அவையாவன; தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவம், தேசிய முதலாளி வர்க்கம் என்பனவாகும்.

1926 மேயில் கோமின்டாங் ஒரு அனுதாபக் கட்சியாக கம்யூனிச அகிலத்தினுள் அனுமதிக்கப்பட்டதோடு சியாங் கேய் சேக் அதன் தலைமைப்பீடத்தின் ''கௌரவ அங்கத்தவர் ஆக்கப்பட்டார்.

தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகர போராட்டத்தின் ஒரு அலைவீச்சின் பின்னணியிலேயே கோமின்டாங்கும் சியாங் கேய் சேக்கும் மேன்மைப்படுத்தப்பட்டனர். வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி சீன முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையேயான மோதுதலை உக்கிரமாக்கியதோடு முதலாளி வர்க்கத்தினை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அப்பட்டமாக தள்ளியது. ஆனால் கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச தலைமை சீனாவின் தேசிய ஒடுக்குமுறை சகல வர்க்கங்களையும் அடிமைப்படுத்தி, அவற்றினை புரட்சிகரப் போராட்டத்தினுள் தள்ளியுள்ளது என்ற அடிப்படையில் வர்க்க சக்திகளின் வேறுபாட்டினை நிராகரித்தது. இந்த போலிக் கருத்துப்பாட்டிற்கு எதிராக ட்ரொட்ஸ்கி வாதிட்டதாவது:

வெளியிலிருந்து ஏகாதிபத்தியம் பொறிமுறையில் சகல வர்க்கங்களையும் ஒன்றாக ஒட்டுப் போடுகின்றது என நினைப்பது முற்றிலும் தவறானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகர போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளைப் பலவீனப்படுத்துவதற்கு மாறாக பலப்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் சீனாவின் உள்ளார்ந்த உறவுகளில் ஒரு பெரிதும் பலம் வாய்ந்த சக்தி இந்தச் சக்தியின் முக்கிய மூலம் யாங்சியாங் நதியின் நீரில் நிற்கும் யுத்தக் கப்பல்கள் அன்றி —அவை இரண்டாம் பட்சமானவை மட்டுமே— வெளிநாட்டு மூலதனத்துக்கும், தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களே. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அதன் பொருளாதார, இராணுவ பலம் காரணமாக சீன மக்களின் வெகு ஆழத்தில் இருந்த சக்திகளின் ஒரு பலம்வாய்ந்த உழைப்பை வேண்டி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைப்பாளி மக்களை அவர்களின் காலடிக்கு கொணரும் அனைத்தும் தேசிய முதலாளி வர்க்கத்தினை தவிர்க்கமுடியாத விதத்தில் ஏகாதிபத்தியத்துடன் அப்பட்டமான கூட்டுக்கு தள்ளுகின்றது. முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளர், விவசாயிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் பலவீனப்பட்டுவிடவில்லை. ஆனால் மாறாக ஒவ்வொரு கடும் மோதுதல்களிலும்- இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம்வரை இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் ஆழமாக்கப்பட்டுள்ளது.(Leon Trotsky on China [New York: Anchor, 1976], p.161).

இடது எதிர்ப்பின் எச்சரிக்கைகள் 1927 ஏப்ரல் 12ம் திகதி சியாங் கேய் சேக்கின் படைகளால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் ஷங்காயில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. சீயாங்கின் சதி, தேசிய முதலாளி வர்க்கத்தின் ''வலதுசாரியினரை'' கொண்ட கோமின்டாங்கின் ஒரு சிறிய பிரிவினரின் காட்டிக்கொடுப்பு மட்டுமே எனக்கூறி கம்யூனிச அகிலம் இந்தப் பேரழிவுமிக்க தோல்விக்கான பொறுப்பினை மறுக்க முயன்றது. ஸ்ராலினிஸ்டுக்கள் சியாங்குக்கு எதிராக கோமின்டாங்கின் ''இடது கன்னையை'' நிறுத்தினர். அது ''நான்கு வர்க்கக் கூட்டின்'' 90 வீதத்தினை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வூகானில் உள்ள 'இடது' கோமின்டாங் அரசாங்கத்தினை மையமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் 1927 ஜுலை யில் வூகான் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மிலேச்சமானதாக திரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களையும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களையும் படுகொலை செய்தது. தனது கொள்கைகள் அடியோடு சரிந்து கொட்டியதை எதிர்கொண்ட ஸ்ராலின், பேரழிவில் போய் முடிந்த கன்டோன் கம்யூன் எனப் பேர்பெற்ற கையாலாகாத்தனமான சாகசத்துக்கு அங்கீகாரம் வழங்கினார். 1928ன் ஆரம்பத்தில் — ஓராண்டுக்கு முன்னர்தான் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அடியோடு இல்லாமல் போயிற்று.

இந்த தோல்வியின் வரலாற்று விளைவுகளை உண்மையில் புறக்கணித்துவிட முடியாது இதன் உடனடி பெறுபேறாக இடது எதிர்ப்பு இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு அரசியல் தோல்விக்கு சென்றதற்கு அப்பால் சீனப் புரட்சியின் தோல்வி 'வெறுமனே' 20 ஆண்டுகளால் தாமதப்படுத்தப்படவில்லை. 1949ல் ஆட்சிக்கு வந்த மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உடற்கூறும் சமூகச் சேர்க்கையும் 1927 தோல்வியின் விளைவு காரணமாக- மிகவும் ஆழமான விதத்தில் பரிணாமம் செய்யப்பட்டது. மார்க்சிச அர்த்தத்தில் அது முற்றிலும் ஒரு தொழிலாளர் கட்சியே அல்ல.

''தனியொரு நாட்டில் சோசலிசத்தின்'' பரந்த முக்கியத்துவம்

''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவமானது மிகவும் நனவான முறையிலும் நேரடியாகவும் சோவியத் யூனியன் மீது ஏகாதிபத்திய நெருக்குவாரத்தினை திணிக்கும் நோக்குடன் பாதுகாப்புக் கூட்டுக்களை உண்டுபண்ணுவதை நோக்கி கம்யூனிச அகிலத்தின் மூலோபாயத்தினை சந்தர்ப்பவாத ரீதியில் மறு அணிதிரளச் செய்ய இட்டுச் சென்றமை தெளிவாகியது. ஸ்ராலினின் அறியாமைமிக்க கணிப்புக்களுக்கு அப்பால் சியாங்கை மகோன்னதமாக காட்டியமை, தேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையாக விளங்கிய தத்துவார்த்த கருத்துப்பாட்டில் இருந்து பெருக்கெடுத்து வந்தது. ஸ்ராலினின் 'தத்துவத்தின்' நடுமையமாக வரலாற்றுச் சகாப்தம் பற்றிய முற்றிலும் வேறுபட்ட வரைவிலக்கணம் விளங்கியது. நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு முரண்பட்ட விதத்தில் சகாப்தம் பற்றிய ஸ்ராலினிச கருத்துப்பாடானது கணிசமான உள்ளார்ந்த சக்திகொண்ட பொருளாதார அமைப்பின் தேசிய அரச வடிவத்தினை குறித்து நின்றது. இதிலிருந்து பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கம் இன்னமும் ஒரு வரலாற்று ரீதியில் முற்போக்கான பாத்திரத்தினை வகிக்கின்றது என்பது வெளிப்பட்டது மறுபுறத்தில் ட்ரொட்ஸ்கி அத்தகைய ஒரு சாத்தியத்தினை நிராகரித்தார். ஏனெனில் இறுதி ஆய்வுகளின்படி காலனித்துவ முதலாளி வர்க்கம் காலவதியான சொத்து உறவுகளில் தங்கியுள்ளது மட்டுமன்றி அதன் இருப்பும்கூட ஒரு தேசிய அரச வடிவினுள்ளேயே வேரூன்றியுள்ளது அது மனிதனின் உற்பத்திச் சக்திகளின் நியாயமான அபிவிருத்திக்கும் கூட முக்கிய தடையாக உள்ளது.

ட்ரொட்ஸ்கி ஆசியாவில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி பற்றி பெரும் அக்கறை கொண்டிருந்தார். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையிட்டு அவர் பெரிதும் நனவாக இருந்தார். ஆனால் அவர் முன்னர் போன்று தொடர்ந்தும் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் தேசிய முதலாளி வர்க்கம் மேலாதிக்கம் வகிக்கும் என்ற வாதத்தினை நிராகரித்து வந்தார். இது சம்பந்தமாக ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் பற்றி ஒரு தென்னாபிரிக்க ஆதரவாளர்கள் குழுவுக்கு 1934ல் எழுதியவற்றை நினைவு கூர்வது பொருத்தமானது;

''அதன் குறுகிய சமரசக் கொள்கை காரணமாக இதன் சொந்தக் கோரிக்கைகளை காங்கிரசினால் அடைய முடியாதிருப்பதை போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்கள் சுதேச மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்கள் ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்ட வேலைத்திட்டத்தினை அபிவிருத்தி செய்கிறார்கள்'' (Writings of Leon Trotsky [1934-35] [New York: Pathfinder, 1974], p. 252).

முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் இன்னுமோர் மிகவும் ஆழமான அம்சம் ஒன்றுண்டு. பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சி கண்டுவந்த சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்களுக்கு அவர் பூரண மரியாதை செலுத்திய அதே சமயம் 'தேசிய விடுதலை' முன்னோக்கு —அடிப்படையில் 'தேசியப்' பணியினை சூல்கொண்டிருக்கும்வரை— சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் ஒரு விமர்சன நோக்காக விளங்கியது உதாரணமாக ''யுத்தமும் நான்காம் அகிலமும்'' என்ற தமது விஞ்ஞாபனத்தில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது;

''ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலவதியான புரட்சிகள், தேசிய அரசுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்தினை ஆரம்பித்து வைக்க இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து கொண்டாக வேண்டும். அரைக்காலனித்துவ நாடான ரஷ்யாவில் காலவதியான ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சிக்கு ஒரு முன்னுரையாக மட்டும் விளங்கியது போலவே காலனிகளின் விடுதலை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு இராட்சத நிகழ்வாக மட்டுமே விளங்கும்

'தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்து கொள்கின்றது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே பூகோளத்தின் சகல தேசியங்களுக்கும் ஒரு நிஜமானதும் நிரந்தரமானதுமான அபிவிருத்திச் சுதந்திரத்தினை உத்தரவாதம் செய்யும்.'' Writings of Leon Trotsky [1933-34], p. 306).

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த இயக்கத்தின் பிடியில் அகப்பட்டிருந்த இந்தியா மீதான அவற்றின் கருத்துக்கள் முக்கியமாக கூர்மை கண்டிருந்தது. 1939 ஜூலையில் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ நாடுகளின் புரட்சிகர இயக்கங்களை பிரமாண்டமான முறையில் தீவிரமடையச் செய்யும் என எதிர்பார்த்து, இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ட்ரொட்ஸ்கி காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை ஸ்ராலினிஸ்டுக்கள் காட்டிக் கொடுத்ததை கண்டனம் செய்ததோடு இந்தியாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை அமைக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

அவர் எழுதியதாவது; இந்திய முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர போராட்டத்தினை வழிநடாத்த இலாயக்கற்றது. அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தயவிலும் இருந்து வருகின்றது. அவர்கள் தமது சொந்த சொத்துக்காக அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் மக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை நாடுவதோடு, மேலிருந்து சீர்திருத்தங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய வெகுஜனங்களை தூங்க வைக்கின்றனர். காந்தி இந்த முதலாளி வர்க்கத்தின் போலித் தலைவரும், மோசடித் தூதுவனும் ஆவார். (Writings of Leon Trotsky [1939-40], p. 29).

ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு இலங்கையில் பலன் கிடைத்தது. 1935ல் இருந்து தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி அங்கிருந்து வந்தது. இது தொழிலாள வர்க்கத்தினுள் ஆதரவை திரட்டிக் கொண்டதோடு அவ்வாறே சம சமாஜக் கட்சி சீக்கிரம் இடதுநோக்கி பயணம் செய்தது. 1940 தொடக்கத்தில் சம சமாஜக் கட்சியின் அரசியல் வேலைத் திட்டம் பெரிதும் திட்டவட்டமான மார்க்சிச பண்பை பெற்றதோடு, அது ஸ்ராலினிஸ்டுக்களாக இனங்கண்டோரை அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியது. இந்தப் பரிணாமம் அதன் சர்வதேச பொறுப்புக்கள் பற்றிய விளக்கத்தில் வெளிப்பாடாகியது. அதன் சொந்த ஆரம்பகால வேலைத்திட்டத்தினை விமர்சன ரீதியில் ஆய்வு செய்த சமசமாஜ கட்சித் தலைமை இலங்கையில் ஒரு 'தேசிய' புரட்சி பற்றிய முன்னைய கருத்துப்பாட்டினையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு தீவில் புரட்சிகர சோசலிச இயக்கம் ஒரு முழு இந்திய புரட்சிகர இயக்கத்தின் அத்தியாவசியமான அங்கமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. இந்த அடிப்படையில் சமசமாஜக் கட்சி இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்ததோடு கிட்டத்தட்ட அதேசமயத்தில் நான்காம் அகிலத்துடன் சேரவும் விண்ணப்பித்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து கொண்ட ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக சம சமாஜக் கட்சி இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வழங்கியது.

இவ்வாறு ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் உறுதியான போராட்டம் காரணமாக இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் தத்துவார்த்த, அரசியல் சுயாதீனம் நிலைநாட்டப்பட்டது. இது ஸ்ராலினிஸ்டுக்கள் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்காததும் அடைய இலாயக்கற்றவர்களாகவும் இருந்ததுமான ஒரு வெற்றியாகும். அங்கு அவர்கள் காந்தி, நேருவின் முதலாளித்துவ காங்கிரசின் பின்னால் பரிதாபமான முறையில் இழுபட்டனர். எவ்வாறெனினும் இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையை வெற்றி கொண்டனர். மேலும் இந்த வெற்றி, ஒரு வரலாற்று-தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்- அதாவது காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் கட்டாயமாக ஒரு தேசியப் போராட்டமாகவே இருக்கவேண்டும் என்ற பரந்தளவிலான எண்ணம், யதார்த்தத்தினை திருத்தல் புள்ளிக்கு எளிதாக்குவதை காட்டுவதோடு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சமூக சக்தியை உண்மையில் குழப்பியடிக்கவும் செய்கின்றது. இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சித் தலையீட்டின் பலம், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமது போராட்டத்தின் அடிப்படையாக கொண்டிருந்தது தேசிய விடுதலையை அன்றி சர்வதேச முன்னோக்கினையே என்ற உண்மையில் இருந்தே பெருக்கெடுத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் பிற்கால காட்டிக்கொடுப்புக்கிடையிலும், (1950ல் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சியுடன் இணைந்து கொண்டது.) இந்த வரலாற்றுப் பங்களிப்பு ஒரு பலம் வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தினை சிருஷ்டித்தது. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துக்கு ஊக்கமளித்ததோடு கீர்த்தியின் எதிர்கால அரசியல் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டிருக்க ஒரு அத்திவாரத்தினையும் வழங்கியது.

யுத்தத்தின் பின்னைய தீர்வும் காலனித்துவ ஒழிப்பும்

ட்ரொட்ஸ்கி தமது படுகொலைக்கு சில மாதங்களுக்கு முன்னர் பின்தங்கிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்துள்ள வரலாற்றுப் பணிகளை இறுதித் தடவையாக மதிப்பீடு செய்தார். சோசலிசப் புரட்சியூடாக காலனித்துவ மேலாதிக்கம் முடிவுக்கு கொணரப்படாவிட்டால் ஏகாதிபத்திய யுத்தத்தில் இருந்து காலனித்துவ மக்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என அவர் எச்சரிக்கை செய்தார். அவர் எழுதியதாவது; ஆதலால் காலனித்துவ மக்களின் விடுதலைக்கான நம்பிக்கை முன்னரைவிட மிகவும் தீர்க்கமான முறையில் முழு உலகத் தொழிலாளர்களதும் விடுதலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பின்தங்கிய நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து ஏகபோகங்களின் இலாபங்களுக்கு அன்றி சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் உலகப் பொருளாதாரத்தினை ஒரு புதியமட்டத்தில் புணரமைப்பு செய்யும்போதே காலனிகள் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியில் விடுதலை பெறும். இந்த வழியில் மட்டுமே காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகள் பின்தங்கிய நிலைமையின் வேறுபட்ட கட்டங்களில் இருந்து மீட்சி பெறவும் ஒரு முன்னேறும் உலக சோசலிச பொதுநலவாயத்தின் இணைந்த பகுதிகளாகத் தமது இடத்தினை எடுக்கவும் முடியும்.(Documents of the Fourth International: The Formative Years 1933-40, [New York: Pathfinder, 1973], p.394).

இரண்டாம் உலகயுத்தத்தினைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனத்தினை மிகத்துன்பகரமான முறையில் ருசுப்படுத்தியுள்ளன. இந்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டியது போல் பெயரளவிலான அரச சுதந்திரம் வழங்கப்பட்டமை இந்திய வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகள் இட்டு நிரப்பப்பட்டதை எந்தவொரு அடிப்படையான விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அப்படி ஏதும் இருப்பின் சுதந்திரத்தின் நிபந்தனைகள் தேசிய முதலாளி வர்க்கத்தின் முற்றிலும் பிற்போக்கான தன்மைக்கு மறுக்கமுடியாத அத்தாட்சியாக விளங்குகின்றன. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பூராவும் அநேக துன்பகரமான வடிவங்களில் மீளச் சிருஷ்டிக்கப்பட இருந்தவற்றுக்கு ஒரு மாதிரியாக விளங்கிய இந்தியப் பிரிவினை, ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் கட்டிக் காத்தது. தொழிலாள வர்க்கத்தினை பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துவதற்கு இனவாத குரோதங்களை ஊக்குவிக்கவும், சாதுரியமாகச் செய்து முடிக்கவும் ஏகாதிபத்தியத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இதனால் வழி திறக்கப்பட்டது.

இலங்கையில் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இலங்கை முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையேயான உடன்படிக்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து தேசிய ஐக்கியத்தினையோ அல்லது சுதந்திரத்தினையோ அடையவில்லையென்ற ரீதியில் ஒரு சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்தனர். உண்மையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கை ரீதியான நிலைப்பாடு உடனடியாகவே நிரூபிக்கப்பட்டது. இலங்கை முதலாளி வர்க்கம் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தீர்க்கமான ஒரு பாத்திரத்தினை வகித்த பகுதியினருக்கு —தமிழ் தோட்டத் தொழிலாளருக்கு— எதிராக அவர்களின் குடியுரிமையை ஒழித்துக்கட்ட ஒரு குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது குடியுரிமையானது பிறப்பு, வதிவிடம் அல்லது வேலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவிருந்தது. இம் மசோதா, முதலாளி வர்க்கம் தனது சொந்த நடவடிக்கையின் மூலம் தேசிய ஐக்கியத்துக்கான முக்கிய தடையாக உள்ளதை எடுத்துக் காட்டியது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்வின் ஆர். டி. சில்வாவினால் ஒரு தீர்க்கதரிசனமான உரை நிகழ்த்தப்பட்டது:

''இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் அரசியல் தத்துவம் இருப்பின்- அதைப்பற்றி கூறவேண்டியது இதுதான்: இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் ஊகத்தின் ஊடாக முன்செல்லுமானால், இந்த அரசாங்கம் நனவற்ற ரீதியில் நடைமுறைப்படுத்தும் அடிப்படை மெய்யியல் அல்லது அரசியல் அல்லது சமூகவியல் கொள்கையானது அரசு இனத்துக்கும் இனம் சாதிக்கும் சமமாக விளங்க வேண்டும் என்பது தெளிவு. குடியுரிமைக்கான அடிப்படைக் கொள்கையாக பரம்பரையை கொள்வதில் இருந்து ஊற்றெடுக்கக்கூடிய வேறு அர்த்தமோ அல்லது வேறு தத்துவமோ இருக்க முடியாது. இது ஒரு காலவதியானதும் வெடித்துச் சிதறியதுமான ஒரு தத்துவமாகும். சரியாக முதலாளித்துவ அமைப்பு வீழ்ச்சி காணும் இன்றைய காலப்பகுதியில் பிற்போக்கு சேவகம் செய்யும் பொருட்டு இந்தப் பழையதும் காலவதியானதுமான தத்துவத்திற்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. இனத்தினை சாதியுடன் சமப்படுத்த முயல்வதும் அரசின் சேர்க்கையில் சாதியை ஆளும் காரணியாக்குவதும் சரியாக பாசிசத்தின் கீழேயே. ஆதலால் இலங்கைக் குடியுரிமை அந்தஸ்த்து ஒரு சாதி அந்தஸ்தின் நிலைக்கு கீழிறக்கப்படும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதுவும் எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.''

இந்த மேற்கண்ட பந்தி கீர்த்தி 1987 இலையுதிர் காலத்தில் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. அவர் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸட் கட்சியின் ஆரம்பகால போராட்டங்களை அடிக்கடி குறிப்பிட்டு வந்தார். ஏனெனில் அவர் அதன் வளம்பொருந்திய வரலாற்று பாரம்பரியங்களில் இருந்து புத்திஜீவி, அரசியல் உந்துசக்தியை பெற்று வந்தார். ஒரு காலத்தில் இந்திய, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கியவர்களால் அப்பாரம்பரியங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தின் விளைபயனாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தோன்றிய போதிலும் கீர்த்தி, கொல்வின் ஆர். டி. சில்வா போன்றவர்களின் பங்களிப்பின் நிலையான பெறுமதிகளுக்கு என்றுமே புறமுதுகு காட்டியதில்லை. 1948ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு கீர்த்திக்கு அவ்வளவு பெரும் முக்கியத்துவமாக இருக்கக் காரணம், பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயத்தினை விவரிப்பதில் யுத்தத்தின் பின்னைய தீர்வின் பிரச்சினை அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதியதே.

கீர்த்தி அடிக்கடி வலியுறுத்தி வந்ததுபோல் வரலாற்று முன்னேற்றத்தின் நலனுக்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யமுடியாத தேசிய முதலாளி வர்க்கத்தின் இயல்பான இயலாமையானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் நனவான வடிவம் எடுத்தது. ஒரு மோசடியான ''அரச சுதந்திரம்'' ஆக விளங்கிய இது, முன்னாள் காலனிகளின் வெகுஜனங்களின் மேலாக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தினை தொடர ஒரு மூடுதிரையை வழங்கியது. அரச சுதந்திரம் ஏதோ ஒரு விதத்தில் அரைகுறை வெற்றியை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அதற்கு தேசிய முதலாளி வர்க்கம் குறைந்தபட்சம் ஏதோவொரு பெருமைக்கு உரியதெனவும் காட்டும் பப்லோ-மண்டேல் சந்தர்ப்பவாதிகளின் சீர்திருத்தவாத பரிந்துரையாளர்களின் வாதங்களை கீர்த்தி அடியோடு நிராகரித்தார். தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் காஸ்ட்ரோ, பென்பெல்லா மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதிகளுக்கு பப்லோவாதத்தின் அடிபணிவுக்கு எதிராக அனைத்துலகக் குழு நடாத்திய கசப்பான போராட்டங்களின் அடிப்படை படிப்பினைகளை கீர்த்தி உள்ளீர்த்துக் கொண்டார்.

பங்களாதேஷில் இந்திய ஆக்கிரமிப்பு

கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கையில் 1971க்கு முன்னரே கீர்த்தி சோசலிச தொழிலாளர் கழகத்தின் (பிரித்தானிய) தலைமையுடன் மோதிக்கொண்டது அதிர்ச்சி தராது போகலாம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அடிப்படையாக கொண்டிருந்த அரசியல் அத்திவாரத்தின் அடிப்படையில் 1960களின் கடைப்பகுதியில் இருந்து சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் பெரிதும் தலைதூக்கிய சந்தர்ப்பவாத போக்குகளுக்கு அவரால் தீவிரமாக உணர்ச்சிவசப்படாது இருக்க முடியவில்லை. குறிப்பாக தீர்க்கமான பிரச்சினைகள் அனைத்திலும் மைக் பண்டா சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு தலைமை தாங்கிய அரசியல் மூவர் கூட்டின் பாகமாக ஹீலி சுலோட்டருடன் சேர்ந்து ஒரு தனித்துவமான சந்தர்ப்பவாத பண்பு கொண்ட நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்தார். முதலில் 1960களின் கடைப்பகுதியில் பண்டா, மாவோ சேதுங், ஹோசிமின் கொள்கைகள் ஸ்ராலினிசத்துக்கு ஒரு பதிலீடாகும் எனவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினுள் நல்லனவற்றை பொறுக்கி எடுத்து பிரயோகிப்பதுமாகும் எனவும் கூறி மாசோ சேதுங், ஹோசிமினுக்கு உணர்ச்சிமயமான புகழாரம் சூட்டத் தொடங்கினார். இருப்பினும் ஹீலி, பண்டாவுடனான அரசியல் மோதுதலை தவிர்க்கும் பொருட்டு அவரின் பெரிதும் ஊதாரித்தனமான பிரகடனத்தை, ஒரு தனிப்பட்ட விசித்திரமின்றி வேறொன்றுமல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார். முன்னர் அவர்களின் எதிர்ப்புக்கு இலக்கான பப்லோவாதிகளை போலவே சோசலிச தொழிலாளர் கழகமும் அன்று மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு அடிபணிந்து கொண்டிருந்தது என்பதே அரசியல் யதார்த்தமாகும்.

சோசலிச தொழிலாளர் கழகத்தினுள்ளே சவால் செய்யப்படாத இடது முதலாளித்துவ தேசிய வாதத்தின் மாவோ வாதமும், தேசிய விடுதலை முன்னணி (NLF) யின் அரசியலும் இதன் பல்வேறு வடிவங்களாகும். இச்சக்தி பண்டாவினால் மகத்தானதாக்கப்பட்டமை யுத்தத்தின் பின்னைய தீர்வினதும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களதும் வரலாற்று முக்கியத்துவத்தினை பல்வேறு விதத்திலும் மீள மதிப்பீடு செய்வதாக அபிவிருத்தி கண்டது. முன்னைய காலனிகளில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகள் தேசிய சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தில் நிஜ முன்னேற்றங்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் தொழிலாள வர்க்கம் இந்த அரசுகளுக்கு அரசியல் ஆதரவு வழங்க கடமைப்பட்டுள்ளது என்ற கருத்துப்பாட்டினை பண்டா படிப்படியாக அபிவிருத்தி செய்தார்.

1971-72ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் சாரம் இங்கேதான் உள்ளது. நாம் இதன் பின்னணியை சுருக்கமாக ஆராய்வோம். 1971 கோடையில் சேக் அப்துல் ரஹ்மானின் தலைமையிலான முதலாளித்துவ தேசிய அவாமி லீக், கிழக்கு பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றது. இப்பிராந்தியத்தில் வங்காளி மக்கள் வாழ்ந்து வந்ததோடு பாகிஸ்தானின் ஏனைய பாகத்தில் இருந்து ஆயிரம் மைல்களால் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தது. அவாமி லீக்கின் வெற்றியின் பிரதிபலிப்பாக யாஹ்யா கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் இராணுவ ஜூன்டா கிழக்கு பாகிஸ்தானை ஆக்கிரமித்து கானின் இராணுவம் வங்காளி மக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை நடாத்தியது. எவ்வாறெனினும் கோடை, இலையுதிர் காலங்களில் முக்திபாஹினி என்ற ஒரு கெரில்லா இயக்கம் வெற்றிகரமான எதிர்த்தாக்குதலை ஒழுங்கு செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் நெருக்கடி உக்கிரமடைந்ததை தொடர்ந்து கிழக்கு வங்காளத்தில் ஒரு தீவிரவாத ஆட்சி நிலைபெறும் என அஞ்சிய இந்திய அரசாங்கம் இராணுவ ரீதியில் தலையிட்டது. இது திடீரென இடம்பெறவில்லை. இதே சமயத்தில் இந்திய அரசாங்கம் மேற்கு வங்காளத்தில் தீவிரவாத நக்சலைட் இயக்கத்தை மூர்க்கமாக ஒடுக்கித் தள்ளுவதில் ஈடுபட்டிருந்தது.

பண்டா பெருமகிழ்ச்சியில் திழைத்தார். 1971 டிசம்பர் 6ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் எழுதியதாவது, ''பங்களாதேசுக்கு இராணுவ, பொருளாதார உதவி வழங்கும் இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் தீர்மானத்தினை நாம் விமர்சனத்துடன் ஆதரிக்கின்றோம்.''

1971 டிசம்பர் 8ம் திகதி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் சுயாதீனமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலைப்பாடு சோசலிச தொழிலாளர் கழகத்துக்கு நேரெதிரானதாக விளங்கியது:

''கிழக்கு வங்காளத்தின் விடுதலையாளர்கள் தாமே எனக்கூறும் இந்திய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை இந்திய தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும் என நாம் வேண்டுகின்றோம். கிழக்கு வங்காளத்திலான இந்திய இராணுவ தலையீட்டின் இலக்கு ஒன்றேயொன்றுதான் என ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரகடனம் செய்கின்றனர். பங்களாதேஷ் போராட்டம் ஒரு புரட்சிகர அடிப்படையில் முழு வங்காளத்தையும் இணைக்கும் போராட்டமாக அபிவிருத்தியடைவதை தடுக்கவே இது இடம்பெற்றது. இந்திய இராணுவத் தலையீடு, புரட்சிகர வங்காளி விடுதலைப் போராட்டத்தினை சிதறடிக்கவும், வங்காளத்தில் வெகுஜனங்களின் எழுச்சியை நசுக்கவும், முதலாளி வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலனின் பேரில் வெகுஜன இயக்கத்தினை சிறைப்பிடித்து வைக்கும் பொருட்டு மோசடியான முறையில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் பெயரை பலாத்காரமாக தட்டிப் பறித்துக்கொண்டுள்ள ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவவுமே தீட்டப்பட்டது. ஆதலால் நாம் இந்திய தொழிலாள வர்க்கம் முக்திபாகினியின் போராட்டத்துக்கு சகல விதத்திலும் ஆதரவளிக்கும் அதேவேளையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி யுத்தம் தொடர்பாக ஒரு புரட்சிகர தோற்கடிப்பு நிலைப்பாட்டினை வகிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

''இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாள வர்க்கத்துக்குரிய ஒரே புரட்சிகர வேலைத்திட்டம் இதுவே. யுத்தத்தின் பின்னைய துணைக்கண்டத்தின் முழு வரலாற்றினையும் மார்க்சிச ரீதியில் ஆய்வு செய்வதில் இருந்து தர்க்கரீதியிலும் ஈவிரக்கமற்ற முறையிலும் இது பெருக்கெடுக்கின்றது.

''பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் அதன் விசுவாசமான ஊழியர்களுக்கு இந்நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கத்துக்கு மோசடி ''சுதந்திரம்'' வழங்கப்பட்டதன் பின்னரான 25 வருடங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தினால் எந்தவொரு அடிப்படைப் பொருளாதார தேசிய அல்லது சமூகப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட முடியாது என்பது அம்பலமாக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று பணிகளின் எதிரில் அவர்களின் முற்றுமுழுதான வங்குரோத்து, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மைய ஆய்வினை நிரூபித்துள்ளது. சோசலிசப் புரட்சி பணியின் ஒரு பாகமாக கிராமிய ஏழை வெகுஜனங்களை தன்பின்னால் அணிதிரட்டிக் கொள்ளும் தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பதையும் நிரூபித்துள்ளது. இந்து- முஸ்லீம் முதலாளி வர்க்கத்தினதும் அத்தோடு சர்வதேச ஸ்ராலினிசத்தினதும் ஆதரவுடன் பிரித்தாளும் கொள்கைக்கு இணங்க, இந்தியத் துணைக்கண்டத்தினை துண்டாடுவது திட்டமாக விளங்கியது. கோடானுகோடி ஒடுக்கப்படும் வெகுஜனங்களுக்கு முதலாளித்துவத்தினதும், பட்டினியினதும், பஞ்சத்தினதும் துயரங்களதும் மேலாதிக்கத்தினை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் இதனுள்ளே பிரமாண்டமான சமூக, தேசிய முரண்பாடுகள் நசுக்கி ஒடுக்கப்பட்டன. இந்த முரண்பாடுகள் முழு சர்வதேச ஏகாதிபத்திய அமைப்பினது ஒரு பாகமாகவும் அதன் பெறுபேறாகவும் வளர்ச்சியடைவதோடு அவற்றைத் தொடர்ந்தும் அடக்கிவைக்க முடியாது''.

கீர்த்தியினால் 1971 டிசம்பர் 16ம் திகதி கிளிவ் சுலோட்டருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் இதனை அப்பட்டமாக பிரகடனம் செய்தது. ''இந்திய-பாகிஸ்தானிய யுத்தத்தை எதிர்க்காமல், வங்காளி மக்களின் தேசிய விடுதலை போராட்டத்துக்கும் சோசலிச அடிப்படையிலான இந்தியாவின் சுயவிருப்பிலான ஒன்றிணைப்புக்கும் ஆதரவளிப்பது சாத்தியம் இல்லை., அத்தகைய ஒரு ஒன்றிணைப்புக்கு முக்கிய தடையாக உள்ள இந்திய பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்களைத் தூக்கி வீசும் போராட்டம் இல்லாமல் எப்படி ஒருவர் இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றித் தன்னும் பேசமுடியும்?

1972 ஜனவரி 11ம் திகதி மற்றொரு கடிதத்தில் கீர்த்தி இந்திய இராணுவ வெற்றியை உற்சாகமாக அங்கீகரிக்கும் பண்டாவை கண்டனம் செய்து எச்சரித்தார், இந்திய இராணுவத்தை பற்றிய அலட்டலின் பின்னணியில் வங்காளி, பாகிஸ்தானிய, இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயல்பின் தெளிவான நிராகரிப்பு உள்ளது''.

மைக் பண்டா இறுதியாக 1972 ஜனவரி 27ல் பதிலளித்தார்; யுத்தம் எதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது; முதலாவதாக இது பங்களாதேஷ் மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூரண ஆதரவுடன் நசுக்கும் பாகிஸ்தானிய முதலாளி வர்க்கத்தின் முயற்சியை பிரதிநிதித்துவம் செய்தது. ஆனால் மிகவும் முக்கியமானதும் அகதிகள் பிரச்சினையை சிருஷ்டித்ததன் மூலமும் கிழக்கு வங்காளத்தினை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்ததன் மூலமும் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உள்நாட்டுச் சந்தைக்கு எதிரான ஒரு திட்டவட்டமான அச்சுறுத்தலாக வளர்ச்சி கண்டது.

''ஒரே இரவில் நிலைமையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டது. இந்திய தொழிலாள வர்க்கத்துக்கும், இந்திய முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் ஒழிந்து போகவில்லை. ஆனால் இது இந்திய நாட்டுக்கும் பாகிஸதான் பிரதிநிதித்துவம் செய்த ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான மோதுதலால் தாண்டிச் செல்லப்பட்டது.''

இது உண்மையில் விசித்திரமானதாய் விளங்கியது; பண்டாவின் கூற்றுப்படி வர்க்கங்களுக்கு இடையேயான மோதுதல் இந்திய, பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான போராட்டத்துக்கு கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் மார்க்சிசத்தின் மிக அத்தியாவசியமான அடிப்படைக் கொள்கைகளை காட்டிக் கொடுப்பதை பிரதிநிதித்துவம் செய்தது. தமது தேசிய எதிரி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜேர்மன் (அல்லது பிரான்சிய, ரஷ்ய, பிரித்தானியா போன்ற) தேசிய இனத்தின் மோதுதலால் தொழிலாள வர்க்கத்துக்கும் அதன் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடுகளால் தாண்டிச் செல்லப்பட்டுவிட்டது என 1914ல் வாதிட்ட சமூக- சோவினிஸ்டுகளுக்கும், பண்டாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் இருக்கவில்லை.

பண்டா, மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பலதடவை வீசப்பட்ட வார்த்தைகளை கொண்டே கீர்த்தியை எச்சரித்தார்; ''உங்களது மனோபாவம் பிடிவாதமும், வளைந்து கொடுக்காததுமாகும். ஆதலால் இது யதார்த்தத்தின் பல கோணங்களையும் முரண்பாடுகளையும் விசுவாசமாக பிரதிபலிக்க முடியாது. அதன் காரணமாக வெகுஜனங்களுள் செல்ல ஒரு வழியைக்காண முடியாது..''

இறுதியில் பண்டாவிடம் இருந்து வந்த கடிதம் ஒரு பெரிதும் பரிதாபமான குறிப்புடன் முடிவுற்றது; ''இவை அனைத்தில் இருந்தும் பங்களாதேசில் இந்தியப்படைகளின் தொடர்ச்சியான பிரசன்னத்தையோ அல்லது கெரில்லாக்களை ரஹ்மான் நிராயுதபாணியாக்குவதையோ நாம் ஆதரிக்கின்றோம் என்ற முடிவுக்கு வரவேண்டாம். நாம் அதை இன்றும் எதிர்க்கின்றோம். அன்றும் எதிர்த்துள்ளோம்.''

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினுள்ளே சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி

கீர்த்தியின் விமர்சனங்கள் அன்று வெளிச்சத்தைக் காணாததோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதற்கு பெரும் நஷ்டஈடு கொடுக்கநேரிட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி வெகுவேகமாக வலதுபக்கம் அடிபட்டுச் சென்றது. றொடீசியா, ஈராக், லிபியா அல்லது லெபனான் எங்கும் முதலாளித்துவ தேசியவாதிகளின் அரசியலை காப்பதிலும், நியாயப்படுத்துவதிலும் மேலும் மேலும் வெட்கக்கேடான முறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. இதேசமயத்தில் பண்டா தேசிய முதலாளி வர்க்கத்தின் அரச நிர்மாண சாதனைகள் எனப்பட்டதன் தீவிர ஆதரவாளரானார். இது உண்மையில் பயங்கரமான அரசியல் விளைவுகளை கொணர்ந்தது.

1979ல் கொலையாளி சுகார்ட்டோ தலைமையிலான இந்தோனேசிய ஜூன்டா கிழக்கு தீமோர் சுதந்திர பிரகடனத்துக்கு படைகளை அனுப்பியும் பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்தும் பதிலளித்தது. கிழக்கு தீமோர் சுதேசிகளின் பிரிந்து செல்லும் உரிமையை பேணிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அவுஸ்திரேலிய கிளையான சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு எதிராக பண்டா, சுகார்ட்டோ இந்தோனேசிய தேசிய இயக்கத்தின் மாபெரும் வெற்றிகளை அதாவது இந்தோனேசிய தீவுக் கூட்டங்களின் ஐக்கியத்தை பேணுகின்றார் என்ற அடிப்படையில் கிழக்கு தீமோர் ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தினார்.

1978-1982க்கும் இடையே ரொழிலாளர் புரட்சிக் கட்சி தொழிலாள வர்க்கத்தினை பாலஸ்தீன விடுதலை இயக்கம், முகாபே, என்கோமாவின் தேசபக்த முன்னணி போன்ற முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கும் லிபியா, ஈரான், ஈராக் போன்ற முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் கீழ்ப்படுத்தியதன் மூலம் ட்ரொட்ஸ்கிச அடிப்படைக் கொள்ளைகளை படிப்படியாக காட்டிக்கொடுத்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு, 1982 டிசம்பர் 31ம் திகதி ஜக் பார்ண்சின் ஒரு பேச்சில் மிகவும் தெளிவான விதத்தில் உச்சரிக்கப்பட்ட பப்லோவாதிகளின் நிலைப்பாட்டை பிரதிபலித்தது. அவர் கூறியதாவது: ''நிரந்தரப் புரட்சி ஒரு சரியான அனுமானமோ அல்லது போதுமான ஒன்றோ அல்ல. பிரச்சினையை தீர்ப்பது ஒருபுறம் இருக்க பிரச்சினை எதுவென காட்டி அதை நெருங்குவதாயும் இல்லை. எனது அபிப்பிராயத்தின்படி நிரந்தரப் புரட்சி சரியில்லாததோடு எமது வேலைத்திட்டத்தின் பொது வார்த்தைகளில் பயனற்றதுமாகும் எனச் சுட்டிக்காட்டி அதைக் கைவிடுவதன் மூலம் நாம் மேலும் நன்மை பெறுவோம்.''

பார்ண்சின் மாற்றீடு என்ன? ''நாம் FSLN உடனும், நியூ ஜூவல் இயக்கத்துடனும், கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் சேர்ந்த ஒரு பொது உலக மார்க்சிச இயக்கத்தின் பாகமாக எம்மை கொள்கின்றோம்.''

பார்ண்சின் பேச்சு எமது மனதில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பயணப் பாதையை பற்றி எதுவித சந்தேகத்துக்கும் இடம்வைக்காததோடு 1984 பெப்ரவரி 11ம் திகதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு நாம் சமர்ப்பித்த அறிக்கையில் எமது ஆய்வின் கணிசமான பகுதியை பார்ண்சின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்ய அர்ப்பணித்தோம். எவ்வாறெனினும், அது பண்டாவை கோபாவேஷம் கொள்ளச் செய்தது. அவர் ஆத்திரத்துடன் கூறியதாவது; ''நீங்கள் பார்ண்சுடன் தொடங்கி தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் முடிக்கிறீர்கள்'' உண்மையில் அது அப்படியே விளங்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிறைபேரவை தொடருக்கு அழைக்கப்படாததோடு இன்னுமோர் 22 மாதங்களுக்கு அவர்கள் எனது விமர்சனத்தை அறிந்துகொண்டும் இருக்கவில்லை. ஆனால் கீர்த்தி அதில் கலந்துகொண்டிருப்பின் அவர் இந்த அறிக்கைக்கு உறுதியான அங்கீகாரத்தை வழங்கியிருப்பார் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உள்ளேயான போராட்டம் ஒரு புறநிலை முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தர்ப்பவாதிகளால் மகோன்னதமானவையாக காட்டப்பட்ட முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் சரிவினை முன்னணிக்கு கொணர்ந்த உலக நிலமையிலான ஆழமான மாற்றங்களை இது எதிர்பார்த்திருந்தது.

தேசிய விடுதலையுடனான அனுபவங்களின் சாராம்ச சுருக்கம்

யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பற்றிய எந்தவொரு புறநிலை ரீதியான ஆய்வும் முதலாளித்துவ தேசியவாதத்தின் தெளிவான தோல்வியையும் அதன் ஆதரவுடன் நிறுவப்பட்ட ''சுதந்திர அரசுகளின்'' போலிப் பண்பையும் நிரூபிக்கின்றது.

அந்த நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பெயரளவுக்கு கம்யூனிச பண்புகொண்ட இயக்கங்களால் நடத்தப்பட்ட போதிலும் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிவதாகவே விளங்கியது.

சீனா இன்று முற்றிலும் முதலாளித்துவ பாதையில் பயணம் செய்கின்றது. முப்பது ஆண்டுகளாக பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த வியட்நாம் உலகிலேயே மலிவான ஊழியம் கிடைக்கும் நாடாகத் தன்னை விளம்பரம் செய்யும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

அனைத்துலகக் குழுவின் உள்ளேயான பிளவு ''தேசிய விடுதலை'' இயக்கங்களின் முழு வரலாற்று முக்கியத்துவத்தினையும், தொழிலாள வர்க்கத்துடனான அவற்றின் உறவையும், சோசலிசப் புரட்சி முன்னோக்கினையும் தீவிரமாக மீளாய்வு செய்வதைச் சாத்தியமாக்கியது. சிறப்பாக கீர்த்தி கொழும்பு அரசாங்கத்துக்கும் இலங்கையின் வடக்கேயுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தின் அரசியல் அபிவிருத்தியை ஆய்வு செய்கையில் 1985-87 களுக்கு இடையேயான இந்த தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய கீர்த்தியின் மதிப்பீடு அதிகரித்த விமர்சனத் தன்மை மிக்கதாகியது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.

வரலாற்று அறிக்கையின் பொருட்டும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் போக்கின் பரிணாமத்தை புரிந்து கொள்ளவும் அனைத்துலகக் குழுவினுள்ளே தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிஜ துரோகப் பாத்திரத்தையும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான அதன் தாக்கத்தினையும் திரும்பவும் ஒருதடவை இங்கு வலியுறுத்துவது அவசியம். தமிழ் தேசிய இயக்கம் தொடர்பாக கீர்த்தியும் அவரின் சக தலைவர்களும் ஆழமாக முரண்பட்டுக்கொண்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டினை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது திணிக்க 1972- 1979 களுக்கு இடையே தொழிலாளர் புரட்சிக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒழுங்கு விதிகளை பயன்படுத்தியது. அதாவது யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாளித்துவ அரசுகள் ஒரு முற்போக்கு வரலாற்றுத் தோற்றப்பாட்டினை கொண்டவை என்ற பண்டாவின் கருத்தின் அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் வெகுஜனங்களின் போராட்டத்தினை அடியோடு எதிர்த்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகளின் நியாயமான தன்மையை முற்றிலும் பிற்போக்கான முறையில் பேணுவதை அடிப்படையாகக் கொண்ட தமிழ் விடுதலை இயக்கம் தொடர்பான அவர்களின் எதிர்ப்பு, ஒரு வலதுசாரி பண்பினைக் கொண்டிருந்தது. பின்னர் 1979ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் பிரச்சினை தொடர்பான அதன் நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டது. பி. எல். ஓ. மற்றும் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் தொடர்பான அதன் மனப்பாங்கிற்கு அமைய, இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆர்வம் மிகுந்த, விமர்சனமற்ற ஆதரவாளராகியது.

பிளவின் பின்னரே யுத்தத்தின் பின்னைய முழுக் காலப்பகுதியினதும் வளம் மிக்க வரலாற்று அனுபவங்களினதும் கட்டுமானத்தினுள் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளை மீள் பரிசீலனை செய்வதும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை தீர்க்கமான முறையில் பிரயோகிப்பதும் சாத்தியமாகியது. பல தடவைகள் கீர்த்தி கூறியது போன்று தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதிகள் ''நீரைக் கலக்கி சேறாக்கியதோடு'' இன்று அனைத்துலகக் குழு உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தினை தெளிவுபடுத்துவதன் மூலம், மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீள வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சகல சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சலிக்காது பேணியதோடு வடக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையைக் காப்பாற்றியது. தமிழ் மக்களுக்கு எதிரான கொழும்பு சிங்கள சோவினிச ஆட்சியாளர்களின் இரத்தம் தோய்ந்த யுத்தத்தினை உறுதியாக எதிர்த்தது. எவ்வாறெனினும் சிங்கள சோவினிஸ்டுக்களுக்கும் அவர்களின் பிற்போக்கு முதலாளித்துவ அரசுக்கும் சிறிதும் பணிந்து போகாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எதிர்ப்புக்கிடையேயும், கீர்த்தி தமது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பணியினை வெறும் ''தேசிய விடுதலை'', ''சுயநிர்ணயம்'' சுலோகங்களை விமர்சனமின்றிக் கூப்பாடு போடுவதன் அடிப்படையில் உரியமுறையில் வரையறுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்துகொண்டிருந்தார்.

1987 ஆகஸ்ட் முற்பகுதியில் கைச்சாத்தான இந்திய- இலங்கை உடன்படிக்கை வேறெதனையும் விட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் திவால்நிலையை அம்பலப்படுத்தியது. கீர்த்தி இந்த அபிவிருத்தியினை ஒரு கடிதத்தில் பொறித்ததோடு அது அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தின் மேலாய அபிவிருத்திக்கான அடிப்படையையும் வழங்கியது.

1987 செப்டம்பர் 11ம் திகதி அவர் எனக்கு எழுதியதாவது, ''இன்றைய நிலைமை, குறிப்பாக இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பான புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தினை தொகுத்துரைக்கும்படி வேண்டுகிறது. லெனினின் ஆய்வுகளின் அனுபவங்களில் இருந்து நாம் அநேகவற்றைப் பெறுவது நிச்சயம். ஆனால் லெனின், மூன்றாம் அகிலத்திற்கான தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய வேளையில்தான் காலனித்துவ மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமது தேசியப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சிறப்பாக கீழைத்தேசங்களில் ஏற்பட்ட அநேக மாற்றங்களை மங்கலாக்கும் விதத்தில் விமர்சனமற்ற முறையில் இதனைப் பயன்படுத்த முடியாது. கீழைத்தேச நாடுகளிலும் கூட தேசியவாதம் ஒரு சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அரைக்காலனித்துவ முதலாளி வர்க்கத்தின் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதன் அவசியத்தினை பிரகடனம் செய்வதன் மூலம் திருத்தல்வாதம் இச்சீரழிவுக்கு இயைந்து போயிற்று. குறைந்தது 1970களின் ஆரம்பகாலங்களில் இருந்து பண்டா அனைத்துலகக் குழுவின் உள்ளே இப்போக்கின் பேச்சாளராக விளங்கினார். ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் தொழிலாள வர்க்கத்தினை இத் தேசியவாதத்துக்கு கீழ்ப்படிந்து போகச் செய்தமையானது பல சிறிய தேசிய இனங்களை சேர்ந்த ஒடுக்கப்படும் வெகுஜனங்களையும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரித்து வைக்கவும், சுதந்திரத்துக்கான சிறிய தேசிய இனங்களின் தேசிய இயக்கங்களின் அபிவிருத்திக்கும் ஒரு நேரடிப்பாத்திரம் வகித்தது.

முதலாளித்துவ அரசுக்கு எதிராக தேசியவாதத்தின் பதாகையின் கீழ் தொடுக்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்துக்கான போராட்டங்கள் ஒரு திட்டவட்டமான முற்போக்கு உள்ளடக்கத்தினை கொண்டிருந்த போதிலும் தேசியவாதம் தேசிய விடுதலையை அடைவதற்கோ அல்லது ஒடுக்குமுறையாளர்களை துக்கி வீசுவதற்கு அவசியமான சக்திகளை ஐக்கியப்படுத்துவதற்கோ இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. அத்தோடு உண்மையில் தீர்க்கமான கட்டத்தில் ஜனநாயகப் புரட்சியின் சகல சக்திகளுக்கும் தலைமை தாங்க இலாயக்கான ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு தடையாகவும் தோன்றியது.

கீர்த்தியின் வாழ்நாளில் அனைத்துலகக் குழுவின் கடைசிக் கூட்டம் 1987 நவம்பரில் நடைபெற்றதோடு அது தமிழ் தேசிய பிரிவினை முதலாளித்துவ வேலைத்திட்டத்துக்கு எதிராக ஒரு தமிழீழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் முன்னோக்கு அறிக்கையை வெளியிட்டது.

சர்வதேசியவாத முன்னோக்கு

கீர்த்தியின் மரணத்தின் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று யுத்தத்தின் பின்னைய காலப்பகுதிபற்றிய ஒரு ஐந்தொகையை வரையும் வேலையை பூர்த்தி செய்வதும் முதலாளித்துவ தேசியவிடுதலை இயக்கங்களின் முழு அனுபவங்களையும் மதிப்பீடு செய்வதும் அவசியமாகியுள்ளது.

சகல ஒடுக்கப்படும் மக்களதும் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் அதேசமயத்தில் 'தேசிய விடுதலை', 'சுயநிர்ணயம்' பற்றிய சுலோகங்கள் எப்படி நடைமுறையில் முதலாளித்துவத் தேசியவாதிகளால் எதுவிதமான நிஜ ஜனநாயக அல்லது முற்போக்கு சமூக உள்ளடக்கமும் இல்லாத பிரிவினை, இனவாதப் பிற்போக்கு வேலைத்திட்டங்களுக்கான நியாயப்படுத்தல்களுக்காக பரிணாமம் செய்யப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துவது மார்க்சிஸ்டுகளின் கடமையாகும்.

மார்க்சிஸ்டுகள், தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஒரு முற்போக்கு உள்ளடக்கம் கற்பிக்க காரணம் என்னவெனில் அவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்தும் பின்தங்கிய நிலைமை, கோத்திரம், ஜாதி வேறுபாடுகள் ஆகிய மரபுரிமைகளில் இருந்தும் வெற்றிபெறுவதோடு ஏதோவொரு விதத்தில் இனங்காணப்படுவதே. 'இந்தியா'வும் 'சீனா'வும் இனரீதியிலோ அல்லது மொழிரீதியிலோ ஐக்கியப்படுத்தப்பட்ட தேசியங்கள் அல்ல. ஆனால் அவை நிஜ பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்துக்கான சாத்தியங்களை திறப்பதன் மூலம் ஒரு பரந்த பிராந்தியம் பூராவும் மக்களை முற்போக்கான முறையில் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் அரசியல் கருத்துப்பாடுகளாகும்.

'தேசிய விடுதலையின்'' வீரர்களாக இன்று உரிமை கொண்டாடும் எந்தவொரு இயக்கத்தினுள்ளும் அந்த உள்ளடக்கத்தினை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எவ்வாறெனினும் வேறுபட்ட இயக்கங்களின் அகநிலை இலக்குகள் என்னவாக இருந்தபோதிலும் இந்த உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்புச் சகாப்தத்திலே புதிய தேசிய அரசுகளை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் மனித இனத்தின் சுதந்திரத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாது. வேறுபட்ட தேசிய, மொழி, மத அல்லது இன அடையாளங்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புப் பிராந்திய அடைப்புக்களை நிர்மாணிப்பதானது யதார்த்தமாகுமிடத்து அது ஒரு காட்டுமிராண்டி தனத்தினுள் தள்ளுவதைக் குறிக்கும்.

இந்தப் பிரச்சனை மீது ட்ரொட்ஸ்கி மிகவும் தெளிவாக வாதிட்டார். அவரது உயிர்வாழ்க்கை காலத்தில் கூட —சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை இன்னமும் ஒரு முற்போக்கு உள்ளடக்கத்தை கொண்டிருந்த காலத்திலும்— இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினை ஸ்தாபிதம் செய்வதற்கு மேலாக நின்றுகொண்டிருக்கவில்லை. சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை அன்றோ அல்லது இன்றோ மார்க்சிசம் தேசியவாதத்துடன் சமரசம் செய்துகொள்வதை குறிக்கவில்லை. உதாரணமாக கட்டலான் சுயநிர்ணய பிரச்சினை மீதான ட்ரொட்ஸ்கியின் ஆக்கங்கள் இந்தவிதத்தில் மிகவும் ஆலோசனைப் பண்பு கொண்டவை.

நான் இந்த விரிவுரையின் அளவினை தெரிவு செய்வதற்கு தலைவர் அவர்கள் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டதுபோல், கீர்த்தியின் பணியின் சிறப்பினை அவரின் புத்திஜீவி, அரசியல் பணிகள் அடிப்படையாகக் கொண்டிருந்த புரட்சிகர சர்வதேசிய வாதத்தின் கோட்பாட்டு பாரம்பரியங்களை ஒரு வரலாற்றுரீதியில் மீளாய்வு செய்வதன் அடிப்படையிலேயே சாத்தியமாகும் என நம்பியதேயாகும். இந்தப் பெரிதும் நீண்ட குறிப்பினை ஒரு முடிவுக்கு கொணர என்னை அனுமதியுங்கள்.

Loading