மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்த்தான் தன்னுடைய 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிஷேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டேல் (1923-1995) மற்றும் பியர் ஃபிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார். அதன் தலைமையில் 53 ஆண்டுகள் அவர் உறுப்பினராக இருந்து அதன் அரசியல் போக்கை வளர்ப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றினார்.
இக் கட்டுரையின் ஆசிரியர், நான்காம் அகிலத்தில் பப்லோ அறிமுகப்படுத்தயிருந்த திருத்தல்வாத அரசியலை எதிர்த்து, மரபு வழியிலான ட்ரொட்ஸ்கிசத்தை காப்பதற்காக 1953ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டிருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர் ஆவார். அனைத்துலகக் குழுவானது அப்போதிலிருந்து, ஐக்கிய செயலகம் அபிவிருத்தி செய்த ஒவ்வொரு முக்கியமான அரசியல் பிரச்சினையிலும் பப்லோ, மண்டேல் மற்றும் மைய்த்தான் தலைமையில் வழிநடத்தப்பட்ட போக்கிற்கு உறுதியான எதிரியாக இருந்தது.
1953 இன் பிளவை சுயமாகவே கண்டறிந்த ஐக்கிய செயலகத்தின் கடைசி முக்கிய தலைவராக இருந்தவரின் மறைவு ஒரு அரசியல் கணக்கெடுப்பை வரைவதற்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. அவ்வாறு செய்தல், மைய்த்தானுடைய தனிப்பட்ட நேர்மை அல்லது அவருடைய சோசலிச நம்பிக்கைகளின் முக்கியத்துவம் பற்றி ஐயம் எழுப்புதல் என்ற பொருள் ஆகிவிடாது. மாறாக, இன்றைய சூழ்நிலையில் ஓர் அரசியல் நிலைநோக்கை வளர்ப்பதற்கு அவசியமான முக்கியமான படிப்பனைகளை, வரலாற்றின் அனுபவங்களில் இருந்து எடுத்துக் கொள்வதைப் பற்றி உதவும் வகையில் அது அமையும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய செயலகத்தை பாதுகாத்து வந்த அரசியல் கருத்துருக்களின் தர்க்கரீதியான நகர்வுப்பாதையைத்தான் (Trajectory) மைய்த்தானுடைய வாழ்வு விவரித்துக் காட்டுகிறது. அத்தகைய கருத்துருக்களின் இதயதானத்தில், சோசலிச முறையில் சமுதாயத்தை மறுசீரமப்பைதற்கு தன்னுடைய வரலாற்றுப் பணிகளை நனவுபூர்வமாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீனமான அரசியல் இயக்கம் தேவையில்லை என்ற எண்ணம் இருந்தது. மாறாக புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தின் விளைவாக இடது புறம் தள்ளக்கூடிய, ஏனைய சமூக அரசியல் சக்திகள் மூலம் அது நடைமுறைப்படுத்தமுடியும் என்ற கருத்து இருந்தது.
ஸ்ராலினிசக் கட்சிகள், மாவோயிச விவசாய படைகள், குட்டி முதலாளிகளின் கெரில்லாக்கள் போன்ற தொழிலாள வர்க்கத்தைத் தளமாக கொண்டிராத, "கூர்மையற்ற கருவிகள்" புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தால் ஒரு புரட்சிப்பாதையை நோக்கி நகர்ந்து சோசலித்திற்குத் தயார் செய்யும் என்ற கருத்தை பப்லோவாதிகள் கொண்டிருந்தனர். அத்தகைய நிலைப்பாட்டில் இருந்து வெளிவந்த தர்க்க ரீதியான முடிவு, நான்காம் அகிலத்தை கலைத்துவிட்டு அல்லது —ஐக்கிய செயலகம் பெயரளவிற்கு அந்தப் பெயரில் ஓர் அமைப்பை பராமரித்தளவில்— அதன் அரசியல் பணிகளுக்கு முற்றிலும் புதியதொரு வரையறையை வழங்குதல் ஆகும்.
நான்காம் அகிலம், 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ஏனெனில் இந்தக் கட்சி ஒன்றுதான் மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாத்து, தொழிலாள வர்க்கத்தை எதிர்காலப் போராட்டங்களுக்குத் தயார் செய்திருக்க முடியும். 1930களில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவமும், ஸ்ராலினிச அதிகாரத்திலிருந்த மூன்றாம் அகிலமும் முற்றிலுமாக எதிர்ப்புரட்சி முகாமில் சேர்ந்து விட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு, அதிகாரத்துவத்தின் சலுகையை காத்தலும், தொழிலாளர்களின் ஜனநாயகத்தை அடக்குதலும்தான் மிக முக்கியமான தடைகளாயின. சர்வதேச அளவில், கிரெம்ளின் உலகெங்கிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை, ஏகாதிபத்திய சக்திகளுடனான இராஜதந்திர திட்டங்களுக்கான பகடைக்காய்களைப் போல் பயன்படுத்தியது, இக்கொள்கை பேரழிவான தோல்விகளை ஜேர்மனியில் 1933 இலும், ஸ்பெயினில் 1938 இலும் வழங்கியது.
தொழிலாள வர்க்கத்தின் மிக மோசமான தோல்விகளில் கூட, முதலாளித்துவ அமைப்பின் புறநிலை முரண்பாடுகள் மீண்டும் வர்க்கப் போராட்ட வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் இழந்ததில்லை. இத்தகைய போராட்டங்களுக்குத் தயார் செய்வதற்காக நான்காம் அகிலத்தை அமைப்பது தேவையாகும். அதன் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால், அது வர்க்கப் போராட்டத்தின் பல தசாப்தங்களின் அனுபவங்களையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியுள்ளது. சமூக ஜனநாயக அல்லது ஸ்ராலினிசக் கட்சிகள் மீண்டும் ஒரு புரட்சிப் பாதைக்குத் திரும்பும் என்ற கருத்தை ட்ரொட்ஸ்கி அழுத்தம் திருத்தமாக மறுத்து விட்டார். அவற்றில் தொழிலாளர்கள் அதிகமாக இருந்தபோதிலும், இக்கட்சிகள் ஏனைய சமூக நலன்கள், சக்திகள் ஆகியவற்றின் கருவிகளாக மாற்றப்பட்டு விட்டன.
1953 முதல் ஐக்கிய செயலகம் வலியுறுத்தியிருந்த வருங்காலம் பற்றிய கணிப்புக்கள், நிலைப்பாடுகள் ஆகியவை, வரலாற்று அனுபவங்களில், இன்று முடிவான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட முடியும். ஒரு புதிய புரட்சிகர கூட்டணி, சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு மாற்று என்று அவர்களால் கூறப்பட்ட அரசியல், சமூக சக்திகளில் ஒன்றுகூட, அவர்களுடைய எதிர்பார்ப்புக்களில் எதையும் நிறைவேற்றிவிட முடியவில்லை.
மக்கள் கொடுக்கும் அழுத்தத்தில், ஸ்ராலினிசம் ஒரு புரட்சிகர பங்கை வகிக்கும் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிழக்கு ஐரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் சோசலிசத்திற்கான பாதையில் பல தசாப்தங்களையும் கடக்கவேண்டியிருக்கும் என்றும் பப்லோ முன்கணிப்பாகக் கூறினார். இந்த முன்கணிப்பு இந்த நாடுகளின் சரிவு, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவினாலும் மறுக்கப்பட்டுவிட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், ட்ரொட்ஸ்கி முன்னரே கூறியபடி அக்டோபர் புரட்சிக்கு சவக்குழி தோண்டும் அமைப்பாகிவிட்டது.
மூன்றாம் உலகத்தின் சிறந்த முன்னுதாரணமாக இருக்கப் போகும் அமைப்புக்கள், தங்களையும் அறியாமல் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் தகர்த்துவிடப்போகும் தன்மையுடையவை என்று பப்லோவாதிகள் புகழாரம் சூட்டியிருந்த, மாவோவாத விவசாயப் படைகள் ஒரு சோசலிச வருங்காலத்திற்கு வழிவகுக்கவில்லை. மாறாக மிகக் கொடூரமான முதலாளித்தவத்திற்குதான் வடிவமைப்புக் கொடுத்துள்ளன. இன்று சீன தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் காணப்படாத மிக மோசமான நிலையில், சர்வதேச நிறுவனங்களால் ஊதியங்கள், வேலைநிலைமைகள் நிர்ணயிக்கப்படுவதைதான் மாவோ இன் வாரிசுகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
ஐக்கிய செயலகம் தேசிய விடுதலை இயக்கங்களையும் அவற்றின் "ஆயுதமேந்திய போரட்டங்கள்" என்ற செயற்பாட்டையும் பெரிதும் உயர்த்திவைத்திருந்தாலும், அவை எதுவுமே ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான வகையில் சுதந்திரத்தை சாதிக்க முடியவில்லை. அவை அனைத்துமே ட்ரொட்ஸ்கியின் கணிப்பை எதிர்மறையில்தான் உறுதிப்படுத்தியள்ளன; அதாவது, "ஒரு பின்தங்கிய முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டின் ஜனநாயகம், தேசிய சுதந்திரம் என்பவற்றிற்கான முழுமையான, உண்மையான தீர்வு, வெற்றிகொண்ட நாட்டினதும், எல்லாவற்றிற்கும் மேலாக அதன் விவசாயிகளின் தலைவன் என்றவகையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் கீழ்தான் அடையமுடியும்" (1).
ஐக்கிய செயலகத்தின் அரசியல் கருத்துருக்கள் தவறானவை என்பது மட்டுமில்லாமல், முதலாளித்துவத்திற்கு 1960களிலும், 1970களிலும் பாரிய சமூக இயக்கத்தில் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை தேடிய உலகெங்கிலும் இருந்த இளைஞர்களையும், தொழிலாளர்களையும் குழப்புவதில் ஒரு பெரும் பங்கைக் கொண்டிருந்தன.
ஸ்ராலினிசம், குட்டி முதலாளித்துவ தேசியவாதங்கள் இவற்றின் அடிப்படையில் ஐக்கிய செயலகத்தின் நம்பிக்கைகள் இறுதியில் போலித்தோற்றமானவை என்று கண்டறியப்பட்டு விட்டதால், அந்த இமைப்பு இன்னும் கூடுதலாக வலதுசாரிப் புறம் நகர்ந்து முதலாளித்துவ அரசின் அதிகார கோளத்திற்குள் பின்வாங்கிவிட்டது. ரோமனோ போடி மற்றும் மாசிமோ டி அலிமா ஆகியோரின் மத்திய-இடது அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் ஒரு கட்சியின் முக்கியமானவர்களின் வரிசையில், மைய்த்தானுடைய அரசியல் வாழ்வின் கடைசி 13 ஆண்டுகள் செலவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1991ல் இருந்து 2001 வரை அவர் Rifondazione Comunista (கம்யூனிச மறுசீரமைப்பு) என்னும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல்கள் அமைப்புக்களுள் ஒன்றில் நிர்வாகப் பணியாளராக இருந்தார்.
கடைசியாக அவர் சர்வதேச அரங்கில் தோன்றியது, பெப்ரவரி 2003 இல் ஐக்கிய செயலகத்தின் 15ம் உலகக் காங்கிரஸ் கூட்டத்தில், அப்பொழுது அவர் ஐக்கிய செயலகத்தின் ஒரு பிரேசில் நாட்டு உறுப்பினரை, ஜனாதிபதி இனாசியோ டா சில்வாவின் (“லூலா”) முதலாளித்துவ அரசாங்கத்தில் பணிபுரிந்து வந்ததற்காகப் பாராட்டினார்.
மைய்த்தான் நான்காம் அகிலத்தில் இணைகிறார்
முசோலினி ஆட்சியைக் கைப்பற்றிய ஆறு மாதங்களுக்குப் பின்னர், 1923ம் ஆண்டில் வெனிசில் லிவியோ மைய்த்தான் பிறந்தார். பாசிச இத்தாலியில் வளர்ந்த அவர் படோவா பல்கலைக் கழகத்தில் தொல்சீர் இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். போரின் கடைசி ஆண்டுகளில், அவர் நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிரான சோசலிச இயக்கத்தில் சேர்ந்து, இறுதியில் சுவிட்சர்லாந்துக்கு ஓடிப்போக நேரிட்டது, அங்கு போரின் முடிவைக் கண்டதோடு கைதிகள் முகாமிலும் இருக்க நேர்ந்தது. பின்னர் சோசலிச இளைஞர் இயக்கத்தில் ஓர் அமைப்பாளராக அவர் விளங்கினார். 1947ம் ஆண்டு, பாரிசில் நடைபெற்ற ஒரு சோசலிச மாநாட்டில் அவர் ஏர்னெஸ்ட் மண்டேலைச் சந்ததித்து நான்காம் அகிலத்தில் இணைந்தார்.
இந்தக் கால கட்டத்தில்தான் நான்காம் அகிலத்தின் தலைமையிடப் பிரிவுகள் சில ட்ரொட்ஸ்கியின் கருத்துருக்களை கேள்விக்குட்படுத்தினர். 1951ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் முக்கிய பிரிவில் அவர் சேர்ந்தபொழுது, அப்பொழுது அமைப்பின் செயலாளராக இருந்த பப்லோ தன்னுடைய திருத்தல்வாத நிலைப்பாட்டை முற்றிலும் வடிவமைத்திருந்தார்; அது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு பிளவிற்கு வழிவகுத்தது. இந்த ஆண்டில்தான் பப்லோவின் ஆவணமான, "நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?" என்பது வெளியிடப்பட்டது. அதில் சமூக யதார்த்தம் ''முதலாளித்துவ ஆட்சி, ஸ்ராலினிச உலகம் என்ற இரு பிரிவுகளை இன்றியமையாததாகக் கொண்டுள்ளது" என்றும் "முதலாளித்துவத்தை எதிர்க்கும் பெரும்பாலான சக்திகள் இப்பொழுது சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமையிலோ அல்லது செல்வாக்கின்கீழோ உள்ளது" (2) என்று பப்லோ கூறினார்.
பனிப்போர் அப்பொழுதுதான் தொடங்கிய நேரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக் கருத்துரு, தொழிலாள வர்க்கத்தை புறக்கணித்துவிட்டு, வர்க்கப் போராட்டத்தை சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான இரு முகாம்களிலும் நடந்து கொண்டிருந்த மோதலால் பிரதியீடு செய்தது. சோசலிசப் புரட்சி, சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போர் முறையில் ஆரம்பிக்கும் என்றும், அதில் சோவியத் அதிகாரத்துவம், "முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளிடையே" ஒரு முக்கிய பங்கைக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய நிலைமையில், நான்காம் அகிலத்திற்கு ஸ்ராலினிசக் கட்சிகளில் சேருவதைத் தவிர, "உண்மையான வெகுஜன இயக்கத்தில் ஒருங்கிணைந்து நிற்பதைத் தவிர" வேறு எதுவும் இல்லை என்றும் பப்லோ கூறினார்.
1953-ம் அண்டில், அமெரிக்காவின் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சி தன்னுடைய "பகிரங்கக் கடிதம்" ஒன்றை வெளியிட்டு, பப்லோவின் நிலைப்பாடுகளை நிராகரித்து அனைத்துலகக் குழு அமைப்பதற்கு அழைப்பு விடுத்தது, இதில் பிரிட்னும், மற்றும் பெரும்பாலான பிரெஞ்சுப் பிரிவுகள் மற்றவற்றுடன் சேர்ந்து கொண்டன.
இந்த மோதலின்போது மைய்த்தான் பப்லோ, மண்டேல் மற்றும் பிரான்சின் சிறுபான்மைப் பிரிவின் தலைவர் பிராங்க் ஆகியோரின் பக்கம் நின்று தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதும் ஐக்கிய செயலகத்தின் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டார். அவர் அந்தோனியோ கிராம்ஷி (Antonio Gramsci), லியோன் ட்ரொட்ஸ்கி, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப்புரட்சி, சீனப் கலாச்சாரப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முடிவு ஆகியவை பற்றி ஏராளமான நூல்களை எழுதினார்; அவற்றில் சில நூல்களே பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஐக்கிய செயலகத்திற்காகவும் தொடர்ச்சியாக பல நூல்களை எழுதி, ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை இத்தாலியில் மொழிபெயர்த்துத் தனக்கென ஒரு புகழான பெயரை ஈட்டிக் கொண்டார்.
இத்தாலியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய செயலகத்தின் இத்தாலிய பிரிவிற்கு வெளியில் நன்கு அறியப்பட்ட பிரமுகராகத்தான் மைய்த்தான் இருந்தார்.
மைய்த்தானும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியும்
ஸ்ராலினிசத்திற்கேற்றவாறு பப்லோவாதிகள் கொள்கைகளை மாற்றிக்கொண்டது, இத்தாலியில் நீண்டகால தாக்கங்களை கொண்ட விளைவுகளை ஏற்படுத்தியது. பிரான்சை தவிர வேறு எந்த தொழிற்துறையில் முன்னேறியிருந்த நாட்டிலும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியில் பெற்றிருந்தது போன்ற பரந்த செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை.
இது அந்நாட்டில் வினோதமான வரலாற்றுடன் பிணைந்திருந்த செயலாகும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCI) தன்னுடைய இருப்பின் பெரும்பகுதியை தடைசெய்யப்பட்டும், முசோலினி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திலும் கொண்டிருந்தது. அந்தோனியோ கிராம்ஷி போன்ற புகழ் பெற்ற தலைவர்கள்கூட பாசிசத்தால் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர். ஜேர்மனிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான, Resistenza (எதிர்ப்பு) இயக்கத்திலும், கூட்டு நாடுகள் படையெடுப்பிற்குப் பின் முசோலினி ஆட்சிக்குப் பின் எஞ்சியிருந்த இத்தாலியில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான சக்தியாக இருந்தது. மக்களிடம் பெரிதும் வலுவான வேரூன்றுவதற்கு இது உதவியது. எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டத்தால் ஏராளமான குடும்பங்கள் தங்களுடைய உறுப்பினர்களை இழந்திருந்த வட இத்தாலி, ரொஸ்கனாப் பிராந்தியங்கள் பலவற்றில் மற்றவற்றைவிட இதுதான் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக இருந்தது. ஆனால், இக்கட்சியின் தலைமை, பல்மீரோ தொக்கிளியாட்டி (Palmiro Togliatti) இன் கீழ், மாஸ்கோவிற்கு பெரிதும் விசுவாசம் காட்டிய ஊழியர்களைக் கொண்டிருந்தது. பல தலைவர்களும் பாசிசத்தில் இருந்து சோவியத் ஒன்றியத்தில் இருந்ததால் உயிர் தப்பியதால் அவர்கள் ஸ்ராலினிசத்தின் மோசமான குற்றங்களிலும் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டிருந்தனர்.
ஸ்ராலினிசப் போக்கை ஒட்டியே, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து முதலாளித்துவ ஆட்சியை, முசோலினியின் வீழ்ச்சிக்குப் பின் பாதுகாத்து வந்தது. 1944-ம் ஆண்டு, சர்வாதிகாரியின் வீழ்ச்சி நிகழ்ந்து ஒரு சில மாதங்களுக்குள் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சல் பீட்ரோ படோக்லியோவின் (Marshal Pietro Badoglio) அரசாங்கத்தில் சேர்ந்தது; இதனால் பாசிசக் கடந்த காலத்துடன் தீவிர முறிவு தவிர்க்கப்பட்டதுடன், அரசியல் வாழ்வில் ஒரு புரட்சிச் சீரமைப்பும் தடைசெய்யப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சமூக செல்வந்த தட்டினராக முசோலினியின் ஆட்சியில் இருந்தவர்கள் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி இன் செல்வாக்கினால்தான் அவருடைய வீழ்ச்சிக்குப் பின்னர் ஆபத்துக்கள் ஏதும் இன்றி தப்பிக்க முடிந்தது.
ஆயினும் கூட அடுத்த 50 ஆண்டுகளில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியில் முதலாளித்துவ அமைப்பிற்கு மிகவும் உற்ற துணையாக இருந்தது. மிகைமதிப்பிடாது கூறினால், முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகக் கூட அது இருந்தது. நாட்டில் பரந்த மக்கள் தளத்தைப் பெரிதும் கொண்டிருந்த, பரந்த அளவில் வேரூன்றியிருந்த, மத்திய நிறுவன அமைப்பு முறையைக் கொண்டிருந்த ஒரே அரசியல் கட்சியாக அது இருந்தது. அரசாங்கத்தின் நிரந்தரக் கட்சிகளில் ஒன்றான கிறிஸ்தவ ஜனநாயவாதிகளில் சில முக்கியமான பூசல்களை உடைய சிறுகுழுக்கள் இருந்தன; தேர்தல் முடிவுகளில் அவற்றிற்கு பெரிதும் உதவியது செல்வாக்குப் படைத்திருந்த கத்தோலிக்க திருச்சபையாகும். சோசலிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், தாராளவாதிகள் என்ற சிறிய கட்சிகள் அனைத்தும் பல செல்வாக்குக் குழுக்களின் பிரதிநிதிகளை கொண்டிருந்தனவே ஒழிய, பெரும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை.
இத்தாலியில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) கொண்டிருந்தது போலவும், இங்கிலாந்தில் தொழிற்கட்சியை போலவும் ஓர் அரசியல் பங்கை வகித்தது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட உயர் பொருளாதார மேம்பாட்டு நிலையில், வர்க்கங்களுக்கு இடையேயான மோதலில் அது தலையிட்டுச் சமாதானத்தைக் கொண்டுவந்தது; குறிப்பாக விவசாயிகள், ஏழைகள் இவர்களுக்கு இடையே நிகழ்ந்தவற்றில் அதன் செல்வாக்கு மிகுந்திருந்தது; ஆனால் வடக்கே இருந்த தொழிற்துறை முன்னேற்றம் கண்ட பகுதியை தவிர நாட்டிலும் விரைவான தொழில்முறை பரவி வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தகுந்த வகையில் உயர்ந்திருந்த நேரம் அது. முதல் தடைவையாக, குடும்பங்கள் ஒரு தொலைக்காட்சி, கார், விடுமுறை, பிற வசதிகள் என இதற்கு முன் அனுபவித்திராத நலன்களைப் பெற்றன. இக்காலக்கட்டத்தில், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது, போருக்குப் பின் நடந்த முதல் தேர்தலில் 20 சதவிகிதம் இருந்த நிலைமையில் இருந்து, பொருளாதார செழுமையின் உச்சக்கட்டமாக 1970 ன் நடுப்பகுதிகளில் 34 சதவிகிதமாக இது உயர்ந்தது.
இதன்பின்னர், சமூகப் பிரச்சினைகள் பெரிதும் அதிகரிக்கவே, ஒவ்வொரு தேர்தலிலும் அது வாக்குகளை இழக்கலாயிற்று.
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு புரட்சிகரமான சோசலிச மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தை இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தவிர்க்கவியலாத முறிவிற்கு தயாரித்திருக்கும். பிரச்சாரமும், தந்திரபோய முயற்சிகளும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்த உதவியிருக்கும்; அதாவது உழைக்கும் மக்களின் நீண்ட கால நலன்களுக்கும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்கும் இடையில் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகள் இருப்பது பற்றி நனவு ஊட்டியிருக்கும். இந்த அடிப்படையில் அரசியலில் நனவு கொண்டிருக்கும் உறுப்பினர்கள் அபிவிருத்தியடைந்திருப்பர். அத்தகைய மூலோபாயத்தின் ஆரம்பகட்டமாக, ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர பங்கைப் பற்றிய உணர்தல் தோன்றியிருக்கும்.
ஆனால் முற்றிலும் வேறுவிதமான முன்னோக்கிற்காக மைய்த்தானின் விருப்பம் இருந்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவத்தை நிலைநிறுத்தும் அமைப்பாக அவர் கருதாமல், அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சியுறும் என்ற கருத்தை கொண்டிருந்தார். முதலில் 1959 வெளிவந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவம், நடைமுறை அரசியல் பற்றிய அவருடைய 200 பக்க புத்தகத்திலும் பின்னர் 1969ல் மறுபதிப்பு செய்யப்பட்ட நூலில் அவர் பின்வருமாறு எழுதினார்:
"போருக்குப் பிந்தைய தொழிலாளர், விவசாய வெகுஜன இயக்கத்தின் அரசியல் அமைப்புமுறையின் வடிவம்தான் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியாக இத்தாலியில் வெளிப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், இந்த அமைப்பிற்குள்ளாகத்தான், மற்றும் இதன் தலையீட்டின் மூலம்தான் முடிவெடுக்கக் கூடிய சமூக சக்திகள், இப்பொழுது முற்போக்கான முறையில் இருக்கும் சமுதாய அமைப்பை சீரமைக்கவேண்டும் எனப் போரிடுவோர் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, தான் கொண்டுள்ள வெகுஜனத்தின் மீதான செல்வாக்கை சற்றே சிதைந்த வகையென்றாலும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதன் தலைமை, இது ஆழ்ந்துள்ள வர்க்கப் போராட்டத்தின் உண்மை நிலையைப் பற்றி நன்கு எடுத்துரைக்க வேண்டும்."(3)
மைய்த்தானுடைய கருத்தின்படி, "இந்த முக்கியமான சமூகக் காரணி கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மை நிலைப்பாடு பற்றிய உண்மையை இது விளக்குகிறது; ஏன் பல்லாயிரக் கணக்கான பாட்டாளி வர்க்க காரியாளர் அதற்கு விசுவாசமாக உள்ளது என்பதை இது விளக்குகிறது; தலைமையின் நல்லறிவு, தவறு செய்யாத தன்மை இவற்றைப் பற்றிய பொய்த்தோற்றங்களை அது முன்னரே நன்கு அறிந்த போதிலும், இந்நிலைதான் உள்ளது."
இங்கு யதார்த்தம் தலைகீழாக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் தொழிலாள வர்க்கம் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு முக்கியமான தடையாக இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோதிலும், தன்னுடைய செல்வாக்கை தொழிலாளர்கள் இயக்கத்தின் மீது போருக்குப் பிந்தைய சமூக சலுகைகள் வழங்கப்பட்டதன் மூலம்தான் தக்கவைத்துக்கொள்ள அதனால் முடிந்தது என்றாலும், மைய்த்தான் தொழிலாளர்கள் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமாக இருந்ததற்கு காரணம் அக்கட்சி அவர்களுடைய புரட்சிகரப் பேரவாக்களை நிறைவாகக் கொண்டிருந்தது, "அதுதான் வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தை" தெளிவாகக் கூறியது என்று கூறுகிறார்.
முதலாளித்துவ அரசாங்கத்திற்குக் கொடுத்த ஆதரவையும் அதன் தலைமையின் அதிகாரத்துவ தன்மை பற்றியும் மைய்த்தான் முற்றிலும் புறக்கணிக்க முடியவில்லை. எனவே கட்சி இரு தன்மைகள் நிரம்பிய நிலையில் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். "இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முரண்பாடு அது இனியும் ஒரு புரட்சிகரக் கட்சி அல்ல என்பதிலும், வெளிப்படையாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புரட்சிகர முன்னோக்கை நிராகரித்திருந்துடன், அதன் ஆரம்பத் தோற்றத்தினாலும், தன்மையையினாலும் உண்மையான சீர்திருத்தக் கட்சியாக மாற முடியவில்லை." (4)
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஓர் "உண்மையான சீர்திருத்தக் கட்சியாக" மாற்றப்பட இயலாத தன்மையைக் கொண்டுள்ளது என்ற கருத்தை நியாயப்படுத்தவதற்காக, "அதன் நவீன-அதிகாரத்துவ திருத்தல்வாதம் அல்லது முதலாளித்துவ அல்லது ஏகாபத்தியத்தின் சமூகசெல்வாக்கு எவ்வாறு தொழிலாளர் இயக்கத்தில் படர்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தவில்லை என்றும், மாறாக சோவியத் ஒன்றியத்தின் அதிகாரகத்துவ சாதியின் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது என்றும் அப்படி இருந்தும் இது ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தியாகும்" எனக் கூறினார். (5) இந்தக் கருத்துரு ட்ரொட்ஸ்கியின் கருத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் "உலக முதலாளித்துவத்தின் கருவியாக தொழிலாளர்களின் இயக்கத்தினுள் செயல்படுகிறது" என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். (6) எனவே சோவியத் ஒன்றியம் மற்றும் சர்வதேச அரங்கில், ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு பங்கைக் கொண்டிராமல், எதிர்புரட்சிகர பங்கைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மைய்த்தானுடைய இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அரசியல் முடிவுகளின் கருத்துருக்கள், இத்தாலிய பப்லோவாதிகளின் நூல்கள் முழுவதும் இழையோடுகிறது.
1951ம் ஆண்டிலேயே, மைய்த்தானுடைய Gruppi Comunisti Rivoluzionari (GCR) எனும் அமைப்பின் உறுப்பினர்கள் பப்லோவாத பரிந்துரைகளைப் பின்பற்றி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்தனர். ஒரு சிறிய நிர்வாக அமைப்பின் கருத்தளமும் Bandiera Rossa என்ற செய்தித் தாளும் இருந்தபோதிலும், பெரும்பாலான உறுப்பினர்கள் 1969ம் ஆண்டு வரை ஸ்ராலினிஸ்டுகளுடன் உழைத்து வந்தனர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் வெளிப்படியாக வேலை செய்ய முடியவில்லை. "நாங்கள் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் துறவியர் போல் வாழ்ந்தோம்; நாங்கள் எங்கள் கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கவில்லை. நிலைமை கனியும் வரை காத்திருந்தோம்" என்று வரலாற்றாளர் ஒருவரிடம் ஓர் உறுப்பினர் தெரிவித்திருந்தார்.(7)
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்கு இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினர் உட்பட்டிருந்தனர் என்பது அதற்குள் நடந்த செயற்பாடுகள் முக்கியத்துவம் அற்றவை என ஒதுக்குவதற்கில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. இதேபோன்ற சூழ்நிலையில்தான் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜெரி ஹீலியின் தலைமையில் தொழிலாளர் கட்சியில் 1947ல் இருந்து 1959 வரை பணியாற்றியிருந்தனர். ஆனால் நுழைதல் முறை (entryism) என பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொண்டிருந்த முறை, லிவியோ மைய்த்தானின் தலைமையில் GCR கொண்டிருந்த முன்னோக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு தொழிற்கட்சியின் எதிர்புரட்சிகர தன்மைபற்றி மிகவும் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்களுடைய பணி தொழிலாள வர்க்கம் தவிர்க்க இயலாமல் தொழிலாளர் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு வகைசெய்யும் முறையில் இயக்கப்பட்டது. அவர்கள் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்தினர்; இந்த அடிப்படையில் அவர்கள் ஒரு மார்க்சிச போராளர் குழுவை வெற்றியுடன் உருவாக்க முடிந்தது. 1963ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்டுகள் (Young Socialists) பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகத்துடன் சேர்ந்தது.
மைய்த்தானுடைய பப்பலோவாத முன்னோக்கு முற்றிலும் மாறுபட்ட விளைவுகளைக் கொடுத்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி "அரசியல் நிறுவன அமைப்பின் வடிவத்தில்" இருந்து, "அதில் தொழிலாளர், விவசாய வெகுஜனங்களின் வெளிப்பாடு இருந்தது" என்று கூறினால், தன்னுடைய செல்வாக்கை இழக்காமல் இருக்கும்பொருட்டு "வர்க்கப் போராட்டத்தின் உண்மையை இயம்ப வற்புறுத்தப்பட்டது" என்று கூறினால், ட்ராட்ஸ்கிஸ்டுகளுடைய பணி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இலிருந்த தொழிலாளர்களை முறிக்காமல் அவ்வமைப்பிலேயே விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதாக இருந்தது. அத்தகைய முன்னோக்கு GCR ஸ்ராலினிசத்திற்கான ஓர் இடது மறைப்பு என்பதைத்தான் காட்டுகின்றது. கட்சியின் தலைமையை பல பிரச்சினைகளிலும் விமர்சித்தாலும், சாராம்சத்தில் அவர்கள் அதை ஆதரித்து, ஒரு புரட்சி திசையை நோக்கிச் செல்லும் என்ற நப்பாசையை வளர்த்தனர்.
அதே நேரத்தில், இத்தகைய சார்பு இத்தாலிய தொழிலாள வர்க்கத்தை நான்காம் அகிலத்தின் பார்வையில் இருந்து ஒதுக்கிவைத்தது. அனைத்துலகக் குழுவின் பிரிவு இத்தாலியில் எப்பொழுதுமே இருந்திராத நிலையில், மிக நன்கு அறியப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கிச வாதியான லிவியோ மைய்த்தான் இத்தாலியக் கம்யூனிசக் கட்சியை ஆதரித்தது, 1960 களிலும் 1970 களிலும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தீவிர மோதல்கள் கொண்டிருந்த பல தொழிலாளர்களையும் இளைஞரையும் வெளியேறச் செய்தது. இந்த ஆண்டுகளில் நிகழ்ந்த முற்போக்குத் தன்மை நான்காம் அகிலத்திற்கு எந்த நன்மையையும் தரவில்லை; ஆனால் அவை மாவோயிசம், அராஜாகவாதம் அல்லது "ஆயுதமேந்திய போராட்டம்", பயங்கரவாதம் என்ற மேலேசெல்லமுடியாத பாதை இவற்றிற்கு இட்டுச் சென்றன. 1970 களின் இறுதியில் கடைசியாகக் கூறப்பட்டது கணிசமான அளவு வளர்ந்து இத்தாலிய இடதுசாரிகள் மத்தியில் ஆழ்ந்த நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
இந்த வளர்ச்சிக்கு இருவகையில் மைய்த்தானின் பங்களிப்பு இருந்தது. முதலாவதாக அவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை போற்றிவந்திருந்தார்; 1968ம் ஆண்டு கூட அவருடைய அமைப்பிலேயே பெரும்பாலானவர்கள் வேறு நிலையைக் கொண்டிருந்தனர்; இதன் விளைவாக GCR ஒரு பிளவைக் கண்டது. மற்றொரு புறத்தில், ஐக்கிய செயலகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல் மைய்த்தான் மாவோயிசம் மற்றும் "ஆயுதமேந்திய போராட்டம்" பற்றிய பொய்த்தோற்றத்தை வளர்த்தார்; அவைதான் எதிர்வரவிருக்கின்ற ஆண்டுகளில் போர்க்குணமிக்க இயக்கத்தின் சீரழிவிற்கு காரணமாகின.
காஸ்ட்ரோவும் சேகுவராவும் ஆயுதப்போராட்டமும்
கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கத்திய தொழிற்துறைமயமாக்கப்பட்ட நாடுகளிலும், ஒரு புதிய சோசலிச உந்துதல், ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பையும், வளர்ச்சி பெற்று வரும் நாடுகள், இலத்தீன் அமெரிக்காவில் இது குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகளிடமும் இருந்துவரும் என ஐக்கிய செயலகம் நம்பிக்கையை கொண்டிருந்தது. இந்த இரண்டு நினைப்புக்களிலுமே பொதுவாக இருப்பது நான்காம் அகிலத்தின் தலைமையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படவேண்டும் என்ற கருத்து ஒதுக்கப்பட்டதான். இதற்கான ஆரம்ப முயற்சிகள் மற்ற சமூக சக்திகளுக்கு விடப்பட்டன.
சீனாவில், பப்லோவாதிகள் மாவோ சேதுங்கின் விவசாயப் படைகளை பெருமைப்படுத்தினர். அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணிக்கு (FLN) தன்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு பப்லோ 1950 களில் கூறினார், அது வெற்றி அடைந்த பின்னர், அஹ்மத் பென் பெல்லாவின் முதல் அல்ஜீரிய அரசாங்கத்தில் சேர்ந்து, ஆபிரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருந்த தேசிய இயக்கங்களுடன் உறவுகளை ஒருங்கிணைத்து வந்தார்.
1959ம் ஆண்டு, பிடல் காஸ்ட்ரோவின் கெரில்லா படைகள் பாடிஸ்டா சர்வாதிகாரத்தை கியூபாவில் இருந்து வெளியே விரட்டியடித்தபோது, பப்லோவாதிகள் கியூப புரட்சியின் உற்சாக ஆதரவாளர்களாக மாறினர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை 1953 ம் ஆண்டு ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அது பப்லோவாதிகளுடன் மீண்டும் மறுஐக்கியப்படுத்தி கொள்கின்ற அடிப்படையில் கியூபாவில் உருவாக்கப்பட்டதை தொழிலாள அரசு என்று கோரியது.
காஸ்ட்ரோ ஆட்சி தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது கியூபாவை ஒரு தொழிலாள அரசாக மாற்றியுள்ளது என்று உறுதியாகக் கூறப்பட்டமை மார்க்சிச பார்வையில் சோசலிசத்துடன் முற்றிலும் பிளவுபட்ட ஒரு கருத்தைத்தான் பிரதிபலித்தது. விவசாயிகளை முக்கியமாக நம்பியிருக்கும் குட்டி முதலாளித்துவ கெரில்லாத் தலைவர்கள் தொழிலாளர் அரசை, மிக அடிப்படையான தொழிலாளர்கள் சக்தியின் துணைகூட இல்லாமல் நிறுவமுடியும் என்றால், சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகவும் நனவுபூர்வமாகவும் பங்கைக் கொண்டுள்ளது என்ற மார்க்சிசத்தால் மரபுவழியில் அவற்றிற்கு அளிக்கப்பட்டிருந்த பங்கு தவறு எனப் போய்விடும்.
மேலும் மிகப் பெரிய முறையில் ட்ரொட்ஸ்கி எப்பொழும் வலியுறுத்தியிருந்த சோசலிப் புரட்சியின் சர்வதேசத்தன்மையை பப்லோவாதிகள் புறக்கணித்தனர். வரலாற்றளவில் கருதும்போது, மனித சமுதாயத்தில் சோசலிசம் முதலாளித்துவத்தை விட உயர்ந்த கட்ட அபிவிருத்தியை பிரதிநிதிதத்துவப்படுத்துகிறது. முதலாளித்துவம் ஏற்கனவே தேசிய அரசின் கட்டமைப்பிற்கு அப்பால் தன்னுடைய உற்பத்தி சக்திகளை அது வளர்த்துள்ளது, ஏற்கனவே சாதிக்கப்பட்டு விட்டதை சோசலிச சமுதாயத்தால் திரும்ப மாற்ற சாத்தியக்கூறு இல்லை. இந்தக் காரணத்தால், ஸ்ராலினிச தத்துவமான "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்பது முற்றிலும் தவறானதாகப் போய்விட்டது.
இந்த மார்க்சிச, சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து, அக்காலகட்டத்தில் மற்ற தேசிய நாடுகளினால் செயல்படுத்தப்பட்டிருந்த அதேபோன்ற நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டிருக்காத தன்மையை பெற்றிருந்த காஸ்ட்ரோ ஆட்சியின் தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் இரண்டாந்தர முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருந்தன. அதைவிட முக்கியமாள கேள்வி கியூப புரட்சி சர்வதேச சோசலிசப் புரட்சியின் அபிவிருத்திக்கு ஒரு ஆரம்ப நிலையை ஏற்படுத்தியதா என்பதே ஆகும். இவ்விதத்தில், கியூபாவில் நடந்தவற்றின் விளைவுகள் பேரழிவைத் தருவதாக இருந்தன.
கியூபாவை ஒரு தொழிலாளர்களின் அரசு என்று வெறுமனே புகழ்ந்ததுடன் பப்லோவாதிகள் மனநிறைவு கொள்ளவில்லை. அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த கெரில்லாப் போராட்டத்தின் கிராமப்புறத்தில் இருந்து தாக்குதல் என்ற கியூப வகை மாதிரி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குப் மிகப் பெரிய அழிவுதரும் விளைவுகளைக் கொடுத்தது. 1965ம் ஆண்டு கியூபாவில் இருந்து பொலிவியாவிற்கு சேகுவரா, அங்கு ஒரு கொரில்லாப் போராட்டத்தை தொடக்குவதற்கு சென்றபோது, ஐக்கிய செயலகக் குழுமம் அவருக்கு எல்லா ஆதரவும் தருவதாக வாக்களித்து அதன் பொலிவியன் பிரிவு கொரில்லாக்களுடன் சேர்ந்து கொள்ளத் தயராக இருப்பதையும் பிரகடனப்படுத்தியது. 1967ம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற ஒரு இலத்தீன் அமெரிக்காவின் ஒருமைப்பாடு மாநாட்டில், ஐக்கிய செயலகத்தின் பிரதிநிதியாக, "சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் ஆயுதமேந்திய போராட்டம் என்பது தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டுள்ளது" என்று கூறியிருந்த அமெரிக்க SWP இன் ஜோசப் ஹான்சன் இருந்தார்.(8)
1969ம் ஆண்டு ஐக்கிய செயலகத்தின் 9ஆவது உலக மாநாடு சிறிதும் குழப்பமற்ற வகையில் பின்வருமாறு அறிவித்தது: "இலத்தின் அமெரிக்காவிற்கு அடிப்படையான, நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரே முன்னோக்கு, பல ஆண்டுகள் நீடிக்கும் தன்மையுடைய ஆயுதமேந்திய போராட்டம்தான். இந்தக் காரணத்தால், தொழில்நுட்ப முறையில் தயாரிப்பு, புரட்சிகரப் பணியின் ஒரு கூறுபாடு என்று மட்டும் கருதப்படாமல், அடிப்படையான கூறுபாடு என்று கொள்ளப்படவேண்டும்... ஒரு ஒட்டுமொத்த காலத்திற்கும், ஆரம்பத்தில் வெளியில் இருந்து வந்தது போலத் தோன்றினாலும் அல்லது ஒருபக்கத்தன்மையை (சேயின் பொலீவியக் கொரில்லாக்களைப் போல்) கொண்டிருந்தாலும் கெரில்லாப் போராட்டம் ஓர் அடிப்படை அச்சாணிப்போல் விளங்கும்." (9)
இந்தக் கருத்து ட்ரொட்ஸ்கியுடைய நிரந்தரப் புரட்சி தத்துவத்தை, ஒரு ஆயுதமேந்திய போராட்டத்தின் பொருட்டுத் தியாகம் செய்துவிட்டு, பாட்டாளி வர்க்கத்திற்கு பதிலாக கலாஷ்நிகோவையும் கைஎறிகுண்டையும் புரட்சிகரக் காரணியில் ஒரு மாற்றாகக் கொண்டு வந்துள்ளது. இந்த முன்னோக்கு கொலைவெறிகொண்ட, தீவிரத் தன்மை கொண்டதாக தோன்றினாலும், தொழிலாள வர்க்கத்திடம் பப்லோவாதிகள் கொண்டுள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை தன்மையையும், இகழ்வையும் தான் உண்மையில் வெளிப்படுத்துகிறது —அதுவும், தொழிலாள வர்க்கம் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்— அதே வழிவகையில் தீவிரத்தன்மையையும் பெற்றுவரத் தொடங்கியபோது இது நிகழ்ந்தது.
ஐக்கிய செயலகத்தின் முன்னோக்கை கொள்ளுபவர் எவரும் நகரங்களுக்கு தங்கள் முதுகுகளை காட்டிவிட்டு, கிராமப்புறத்தில் நிகழும் கெரில்லாப் போர்களுக்கு ஆதரவு தரவேண்டியிருக்கும்; அவ்வாறு செய்தவர்கள் கடுமையான விலையை அதற்குக் கொடுத்தனர். நகர தொழிலாள வர்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஓர் இராணுவத்தால் எதிர்கொள்ளப்பட்டு, ஐக்கிய செயலகத்தில் நல்லெண்ணத்துடன் செயல்புரிய வந்திருந்த பல இளைஞர்கள், மிக எளிதில் இராணுவத்திற்கு இரையானார்கள்.
1970களின் ஆரம்பத்தில், ஐக்கிய செயலகத்தின் செய்திப் பத்திரிகை பிரிவு புரட்சிகர தொழிலாளர் கட்சி (PRT-ERP) உடைய மிக ஆற்றல் நிரம்பியிருந்த, ஆயுதமேந்திய நடவடிக்கைகளை பெரிதும் பாராட்டி, இது மாவோவியிசத்திற்கு மாறியதற்கு முன்பு, இந்தப் பிரிவை அதன் அதிகாரபூர்வமான பிரிவாக அங்கீகரித்தது. முடிவில், PRT-ERP பிரிவு இராணுவத்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது.
இத்தகைய அரசியலின் போக்குடைய வளர்ச்சி மற்றும் அதுபற்றிய தகவல்களை பரப்புவதிலும் லிவியோ மைய்த்தான் ஒரு முக்கியமான பங்கைக் கொண்டிருந்தார். ஐக்கிய செயலகத்தில் அவர் இலத்தீன் அமெரிக்கா, சீனா இவற்றைப் பற்றி ஒரு வல்லுனராகக் கருதப்பட்டு அப்பகுதிகளிலுள்ள கட்சிகளின் தீர்மானங்களை விளக்கிக் கூறுவதில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
ஐக்கிய செயலகத்துடன், இப்பிரச்சினையில் இதற்கு உடன்படாதிருந்த சீனாவின் பப்லோவாதி பெங் ஷூஷியின் கருத்தின்படி, ஐக்கிய செயலகத்தின் நிர்வாகக் குழு கெரில்லாப் போராளிகளின் புறம் செல்வதை நியாயப்படுத்திய 1968ம் ஆண்டின் ஆவணம் மைய்த்தானால்தான் தயாரிக்கப்பட்டிருந்தது. (10) 1969ம் ஆண்டின் உலக மாநாட்டில், மைய்த்தானும் மண்டேலும் கொரில்லா மூலோபாயத்தை பற்றிய முக்கியமான ஆதரவினை திரட்டுபவர்களாக இருந்தனர்; ஆயினும்கூட அக்கருத்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டது.
1997ம் ஆண்டு, சேகுவராவின் 30 வது ஆண்டு மறைவு பற்றி ஐக்கியச் செயலகத்தின் அதிகாரபூர்வமான ஏடான Inprecor இல் அமைப்பின் கண்ணோட்டத்தைப் பற்றி திறனாய்வு இல்லாத முறையில் சுருக்கமாக ஒரு கட்டுரையை மைய்த்தான் வெளியிட்டார். இக்கட்டுரை சேகுவராவைப் பற்றிய துதியை புகழாராமகச் சூட்டியது. அதிகாரபூர்வமான ஐக்கிய செயலகத்தின் வெளியீடுகளில் இருந்து பல மேற்கோள்கள் வடிவில், அவர் "தலை சிறந்த சோசலிஸ்ட்", "சோசலிசப் புரட்சியின் சர்வதேச உருவகம்" ததும்பி நின்றவர் என்றும் "ஒரு புதுதலைமுறைப் புரட்சியாளர்களின் அடையாளச் சின்னமாக இருந்தார்" என்றும் கட்டுரையில் கூறப்பட்டது.(11)
1968ம் ஆண்டும் அதன் விளைவுகளும்
இலத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற கெரில்லா போராளிகளிகளுக்கான ஆதரவு இத்தாலியில் நேரடி விளைவைக் கொண்டிருந்தது. 1970 களில் இடதுசாரிச் சிந்தனையை ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த அரசியல் குழப்பத்திற்கு இது கணிசமான பங்கைக் கொடுத்ததுடன் சிலநேரம் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட ஏராளமான மாவோவாத, பெருங்குழப்பவாதிகளின் அமைப்புக்கள், நிறுவனங்கள் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலையின் எழுச்சியும் ஏற்பட்டது.
இத்தாலியில் இளைஞர், மற்றும் தொழிலாள வர்க்கத்தினரை தீவிரமயமாக்கும்போக்கு 1960களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 1970களிலும் தொடர்ந்து அது வலதுபுறம் தீவிரமாகத் திரும்பியிருந்த, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCI) கடுமையான மோதல்களை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டு, என்ரிக்கோ பெர்லிங்க்வர் (Enrico Berlinguer) கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முதலில், மாஸ்கோவில் இருந்து தனிமைப்படுத்திக்காட்டி சமூக ஜனநாயக கட்சியுடன் சமரசத்துடன் இவர் கொண்டிருந்த "ஐரோப்பியக் கம்யூனிசப்'' போக்கு ஐக்கிய செயலகத்தினால் உற்சாகத்துடன் ஆதரவு கொடுக்கப்பட்டது. ஆனால் இக்கொள்கையில் இருந்த வலதுசாரி உள்ளடக்க தன்மை ஐயத்திற்கிடமின்றித் தெரிந்தது. பெர்லிங்க்லர் "வரலாற்றுரீதியான சமரசத்தை" கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுடன் கொண்டு அரசாங்கத்தில் சேருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். 1976ல் இருந்து 1979வரை இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடைய பாராளுமன்றக் குழு, மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை என்றாலும், அரசாங்க முகாமிற்கு ஆதரவு கொடுத்து வந்தது.
இப்படி, இந்தப் பெரும் புகழ்பெற்ற இத்தாலிய "ட்ரொட்ஸ்கிசவாதி" தன்னுடைய நம்பிக்கையை இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்குக் கொண்டிருந்த அதேநேரத்தில், மாவோ, மற்றும் சேகுவரா இவர்களைப் பற்றிய பரந்த முறையில் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த போலிக் கனவுகளையும் வளர்த்த தன்மை, ஒரு புதிய தலைமுறையையே நான்காம் அகிலத்தின் உண்மையான மார்க்சிச முன்னோக்குடன் அரசியலில் நுழைய விடாமற் செய்துவிட்டது.
Gruppi Comunisti Rivoluzionari என்னும் மைய்த்தானுவைடய சொந்த அமைப்பு எப்பொழுதுமே குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கை அடைந்ததில்லை. அதன் உறுப்பினர் எண்ணிக்கை ஒருபொழுதும் 200ஐத் தாண்டியதில்லை, ஒரே ஒரு முறைதான் 1980 ல் தேர்தல்களில் அது தனித்துப் போட்டியிட்டது.
ஆயினும்கூட, மைய்த்தானுடைய செல்வாக்கைக் குறைமதிப்பிடக் கூடாது. பல தசாப்தங்களில், ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் GCR ஐக் கடந்து வந்துள்ளனர். அவர்களுள் 1970களின் குழப்பமான தீவிரவாத குழுக்களில் முக்கிய பங்கு கொண்டிருந்தவர்கள் பலரும், ஏதேனும் ஒரு நேரத்தில் மைய்த்தானுடைய கூடத்தில் பயின்றவர்களாக இருந்தவர்கள் ஆவர். 1990களில், அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் மைய்த்தானுடன்Rifondaazione Comunista என்னும் குடையின் கீழ் இருந்தனர்.
1968ம் ஆண்டு மாணவர் எழுச்சியின் உயர்கட்டத்தில், மைய்த்தான் தன்னுடைய அமைப்பின் மீது தற்காலிகாமாகக் கட்டுப்பாட்டை இழந்திருந்தார் போலும். GCR ல் பெரும்பாலானவர்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அரசியல் பணியை முடிவிற்குக் கொண்டுவந்து தன்னியல்பாக இயக்கத்தினுள் தமது அமைப்பையே கலைத்துவிட்டனர். அவர்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி நிலைநோக்கை நிராகரித்திருந்தது மட்டும் இல்லாமல், ட்ரொட்ஸ்கிசத்தின் ஏதாவது ஒரு அமைப்பையும் மறுத்துவிட்டனர். GCR கூட்டத்தில், ஒரு பெரும்பான்மையைச் சேர்ந்த பேச்சாளர் இத்தகைய கலைப்புவாத முறையை நியாயப்படுத்திப் பேசியதாவது: "ட்ரொட்ஸ்கிச மரபியம் இப்பொழுது எல்லா புரட்சியாளர்களுடைய பொதுச் சொத்து; அதன் பாதுகாப்பு என்பது மட்டும் ஓர் அமைப்பு நிலைநிறுத்தப்படுவதற்குக் காரணமாகி விடாது." (12)
இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் பணியை மைய்த்தான் உடனடியாக விட்டுவிடத் தயாரக இல்லை, ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்களிடம், தேவையானால் வேறுவித நிலைநோக்கை கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். மாநாட்டில் தன்னுடைய எதிர்ப்பாளர்களுக்குப் பதில் கூறுகையில், அமைப்பை ஒரு தள்ளிவிட முடியாத வழிபாட்டுப் பொருள் என ஆக்கிவிடக் கூடாது என்றும் "புத்தம் புதிய அமைப்பு, நடைமுறைக்கேற்றவாறு" கொண்டுவரப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேணடும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: "நம்முடையதைவிட பரந்ததாக இத்தாலியில் ஒரு புரட்சிகரப் போக்கு வளர்ந்து, மக்கள் இயக்கத்தை அது முன்னின்று நடத்துமேயாயின், அது சரியென்று கொள்ளும் அளவுகோலை நாம் ஆராய்வோம். நாம்தான் முதலில் தோன்றியவர்கள் என்று வாதிடாமல், அத்தகைய இயக்கத்தின் வெற்றிக்கு நம்முடைய பங்கை ஆற்றுவோம். ஆனால் அத்தகைய நிலை இப்பொழுது இல்லை."(13)
மைய்த்தான் மற்றும் அவருடைய எதிர்பாளர்கள் இருவருடைய நிலைப்பாடுமே நான்காம் அகிலத்தின் பதாகையில் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தினுடைய இயக்கத்தின் வளர்ச்சியை ஒதுக்கி வைத்தது. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் வாகனத்தில் இருந்து குதித்து குட்டிமுதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் பின் சேர்த்துச் செயல்படுவதற்கான நேரம் சரியாக உள்ளதா என்பதைப் பற்றிய தந்திரோபாயத்தை பற்றியே அவர்களுக்கிடையே பிளவு இருந்தது.
பெரும்பான்மை பிரிவு பின்னர் Avanguardia Operaia என்ற குழுவை தோற்றுவிக்க காரணமாக இருந்தது, அது வெளிப்படையாக மாவோயிசத்திற்கு தன்னுடைய ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. நான்காம் அகிலத்தை நிராகரித்ததற்கு, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒன்றாக வளர்வதற்கும் "புறநிலையான தற்போதைய இடதுசாரிகளான மாவோயிசம், காஸ்ட்ரோயிசம்" போன்றவற்றுடன் இணைந்து வளரவும், அது தடையாக இருந்தது என்று நியாயப்படுத்திய முறையில் கூறியது.
பெரும்பான்மையின் மற்றொரு பிரிவு IL Manifesto குழுவுடன் சேர விழைந்தது, இக்குழு 1969ம் ஆண்டு இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் பிளவடைந்து சென்றவர்களால் அமைக்கப்பட்டிருந்தது, இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவுஜீவிகள், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பல்மிரோ டோக்லியட்டி (Palmiro Togliatti) இன் மரபில் கடந்த காலக் கருத்துக்கள், பிராங்க்பேர்ட் கூடம் (Frankfurt School-தொழிலாள வர்க்கத்தை நிராகரித்த குட்டிமுதலாளித்துவ பிரிவு), மாவோயிச நிலைப்பாடுகள் இவற்றின் கலவையைக் கொண்ட கருத்துக்களை முன்னெடுத்தனர். இன்று இக்குழுவில் எஞ்சியிருப்பது இதே பெயரை உடைய ஒரு நாளேடு ஒன்றுதான்.
சிறுபான்மையின் ஆதரவைக் கொண்டிருந்த மைய்த்தான் மீண்டும் GCR ஐ நிறுவினார், இது விரைவில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தன்னுடைய பணியைக் கைவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டிருந்த தீவிரப்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்ற விழைந்தது. 1969ம் ஆண்டு, ஐக்கியச் செயலகத்தின் 9வது மாநாடு "பெரும்பாலான மக்களின் செல்வாக்கைக் கொண்டு புத்தம் புதிய அமைப்பை" உருவாக்கும் வகையில் பொருத்தமான சார்பு இருக்கும் என்று முடிவெடுத்தது. இதே மாநாடு தன்னுடைய ஆதரவிற்கு இலத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் வெளிப்படுத்தியது. சீன கலாச்சாரப் புரட்சி பற்றி ஒரு தீர்மானத்தை மைய்த்தான் முன்மொழிந்தார்.
ஆரம்பத்தில், மைய்த்தானும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியுடைய பிளவினரான IL Manifesto உடன் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொள்ள வேண்டும் என்று பாடுபட்டார். "புரட்சி இடதுடன் சேர்ந்து வளருவதை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி, IL Manifesto விற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்" என்று அவர் 1972ல் எழுதினார். "IL Manifesto விற்கு உருக்கொடுத்த இயங்கியல் ஆய்வுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் வகையை ஆராயலாம்; அத்தகைய நிலைப்பாடு இன்னமும் தொடர்ந்துள்ளது. இதனால் மற்றைய சக்திகளை நாம் ஒதுக்கி விட்டுள்ளோம் என்ற பொருள் இல்லை..." (14)
பின்னர், 1970 களின் நடுப்பகுதியில் இருந்து, அவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டிருந்த அமைப்புக்களின் பால் கவனத்தைச் செலுத்தினார். PDUP (Partito di unità proletaria), Avanguardia Operaia) மற்றும் Lotta Continua ஆகியவை இக்குழுக்கள் ஏராளமானவற்றுள்ளிருந்து சாரமான திரட்டாகவும் மிகுந்த செல்வாக்கு படைத்தவையாகவும் வெளிவந்தவையாகும். இவை மாவோ, ஹோ சி மின் மற்றும் சேகுவரா ஆகியோரைப் பெரிதும் புகழ்ந்து, தன்னியல்பாக, போலிப்-புரட்சிக் கருத்துக்களின் கலவையை பிரதிபலித்தன. அவை வேலைநிறுத்தங்களையும் மற்ற "நேரடி நடவடிக்கைகளையும்" வளர்த்து அரசியல், சமுதாய மோதல்களில் மிக அதிகமான பங்கை எப்பொழுதும் கொண்டிருந்தன. மொத்தத்தில் அவை கிட்டத்தட்ட 10,000 உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டிருந்தன.
1974ம் ஆண்டிற்குப் பின்னர் சமுதாயப் போராட்டங்களின் குறைவு இந்தக் குழுக்களை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியது. ஒரு சிறிய சிறுபான்மை ஆயுதமேந்திய போராட்டம், பயங்கரவாதம் இவற்றின் பால் திரும்பியது; அது கூடுதலான, விரிவான, பரந்த வடிவமைப்பை, மற்ற எந்த ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத முறையில் கொண்டு வந்தது. இதன் விளைவாக தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் தெளிவற்ற சார்புதான் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் முற்போக்கான, தீவிர போராட்ட நடவடிக்கைகளின் எத்தகைய வடிவத்தையும் கைவிட்டு, மரபு வழியிலான அரசியல் போராட்டத்திற்குத் திரும்பினர். 1976ம் ஆண்டு, மேலே கூறப்பட்ட மூன்று அமைப்புக்களும் கூட்டாக பாராளுமன்றத் தேர்தல்களில் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் (Democrazia Proletaria), என்ற பதாகையின்கீழ் போட்டியிட்டனர்.
GCR அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது. Lotta Continua உடைய Adriano Sofri உடன் மைய்த்தானும், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட தேர்தல் கூட்டங்களில் பங்கு பெற்றார். ஆனால் இதன் முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் வலுவான கட்சியாகத் தொடர்ந்திருந்து, அவர்களுக்குப் பின் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வாக்குகளைப் பெற்று இருந்தது. Democrazia Proletaria கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகளைப் பெற்று 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் மொத்த வாக்குகளில் 1.5 தான் அதன் சதவிகிதம் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே இருந்தது. CGR உடன் நெருக்கமாக ஒத்துழைத்திருந்த Lotta Continua, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தன்னையே கலைத்துக் கொண்டுவிட்டது.
தொழிலாள வர்க்கத்திற்கு செயல்படத்தக்க வகையில் ஒரு முன்னோக்கு இல்லாதது இத்தாலிய ஆளும் வர்க்கத்தையும், அதன் முக்கியமான அரசியல் ஆதரவு கொடுக்கும் அமைப்பான இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியும் 1968ல் இருந்து 1975 வரை நடந்த தீவிமான வர்க்கப் போராட்டங்களில் தப்பிப் பிழைத்து திருப்பித் தாக்குதலில் இறங்கிவிட்டன. இடது அமைப்புக்கள் ஏமாற்றத் திகைப்பை அடைந்தன, அது 1980 களில் அது தொடர்ந்திருந்தது. Democrazia Proletaria, ஆரம்பத்தில் ஒரு தேர்தல் பங்கு பெறும் கட்சி என அமைக்கப்பட்டிருந்தது, பின்னர் தொடர்ந்து செய்லபட்டு எஞ்சியிருந்த தீவிரபோக்கு அமைப்புக்களின் இணையும் கலம் ஆயிற்று.
1989ம் ஆண்டில் மைய்த்தானுடைய குழு (Lega Comunista Rivoluzionaria, LCR என்று வேறு பெயரிடப்பட்டது), பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்தது. இரு ஆண்டுகளுக்கு பின்னர் முழு அமைப்பும், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்ட பின்னர் வெளிவந்த Rifondazione Comunista உடன் இணைந்தது.
அப்பொழுதிலிருந்து மைய்த்தானும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுடைய அரசியல் ஆற்றல் முழுவதையும் Rifondazione உடைய அமைப்பிற்குப் பாடுபட்டனர்; பிரான்சின் பப்லோவாத Alain Krivine, மைய்த்தான் பற்றிய தன்னுடைய இரங்கல் செய்தியில் உறுதிபடுத்துவதாவது: "1991-ல் இருந்து, லிவியோ இந்தப் புதிய கட்சியின் தலைமையிடத்திற்கு ஒவ்வொரு மாநாட்டிலும் தேர்ந்தெடுக்கப்படார். நான்காம் அகிலத்தின் உறுப்பினர்கள், தலைமையின் கருத்தையொட்டி அதன் ஆரம்பத்தில் இருந்தே அதன் வளர்ச்சியில் முழுமையாகப் பங்குபெற முடிவு கொண்டிருந்தனர்.... நம்முடைய தோழர்கள் சிலர் செனட்டில் பொறுப்பான பதவிகளை எடுத்துக் கொண்டனர், கட்சி நிறுவனங்களிலும் அதேபோல் கொண்டனர்; மேலும் Liberazione நாளேட்டிலும் தலைமையக் கொண்டனர்." (15)
Rifondazione Comunista இல் ஒரு ''ட்ரொட்ஸ்கிஸ்ட்''
Partito della Rifondazione Comunista (PRC) கட்சியைப் பற்றி முந்தைய நிகழ்வுகளை விரிவாகக் கூறும் இடமன்று இது. அதற்குப்பதிலாக, நான் இக்கட்சியில் நிர்வாகக் குழுவில் பத்து ஆண்டுகள் இருந்த கட்சித் தலைவர் பெளஸ்டோ பெர்டிநோட்டியின் உற்ற, நெருங்கிய ஆலோசகராகவும் அமைப்பின் தன்மை, பங்கு பற்றி மோசமான பொய்த்தோற்றங்களையும் பிரச்சாரம் செய்திருந்த மைய்த்தானுடைய பங்கு பற்றி எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கின்றேன்
Rifondazione பற்றி ஐக்கிய செயலகத்தின் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த, மைய்த்தானுடைய புகழாரத்துதிகளில் இத்தாலிய ஸ்ராலினிசம், மாவோ சேதுங், பிடெல் காஸ்ட்ரோ, சேகுவரா பற்றி இவர் முன்பு புகழ்பாடியிருந்தபோது பயன்படுத்திய தனித்தன்மை வாய்ந்த பப்பலோவாத நடைமுறைச் சொற்றொடர்களையே காண்கிறோம். கட்சியின் வேலைதிட்டத்தை பற்றிய சீரான ஆய்வு, இத்தாலிய அரசியல் வாழ்வில் அதன் பங்கு ஆகியவை பற்றி இப்படைப்புக்களில் தேடித் துருவினாலும் எதையும் காண்பதற்கில்லை. மைய்த்தான், "முரண்பாடுகள்", "புறநிலை சக்திகள்", மற்றும் "சக்திகளின் உறவுகள்" என்றவற்றை பற்றி வீணாக பேசியுள்ளார்.
இந்த ஆண்டு மைய்த்தானுடைய போக்கை கொண்டுள்ள ஒர் உறுப்பினரான Flavia D'Angeli எழுதியுள்ளது Rifondazione மத்தியில் இருப்பவர்கள் தொடர்பான ஒரு மதிப்பீட்டை காட்டுவதாக உள்ளது. "PRC இன் வரலாறு முழுவதிலும், Bandiera Rossa வை சுற்றியுள்ள அரசியல் போக்கு கட்சியின் நடவடிக்கையில் அதன் போராளிகள் உண்மையாக நுழைக்கப்படுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கவும், வர்க்க நடவடிக்கைகளை போலியாக காட்டவும், சமூக கருத்தை உள்ளே கொண்டு வருவதற்கு ஊக்கம் கொடுக்கவும் முயன்றது. ஒரு தனிச்சிறப்பு உடைய நிகழ்வாகவும், ஒரு புதிய புரட்சிகரமான அரசியல் கருத்துகளை மீளஉருவாக்கும் கருவியாக, மோதல்கள், பிளவுகள், பரிசோதனைகள், புதிய வாய்ப்புக்கள், புதிய முறையில் இணைப்புக்களைக் கொள்ளுதல் என்ற சிக்கல் நிறைந்த வகையில் ஒரு கருவியாக Rifondazione நமக்குத் தோற்றமளிக்கிறது.
"ஒரு முற்றுப்பெற்றுள்ள முதலாளித்துவ-எதிர் சக்தியை நோக்கி நேரடியாக வளர்ச்சியுறும் நிலையை நாம் நினைத்துப் பார்க்கவில்லை; மாறாக ஒரு முரண்பாடான நிகழ்வுப்போக்காகத்தான் எதிர்பார்த்தோம். இவ்வாறு, ஒரு முழுக் கட்டத்திலும், நாம் கட்சிக்குள் பரந்த, பன்முக இடதை அமைக்க முயன்றோம்; சில நேரங்களில் அது வெற்றிகளை பெற்றது, ஆனால் இந்த ஆரம்பமுயற்சிகள் இல்லாமல், ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்து, ஒரே சீரான மூலோபாய நிலைநோக்கை அளித்தது...
"எங்கள் முக்கிய சக்திகளை முன்னணியில் இருந்த குழுவில் திரட்டி நின்றோம், பெரும்பாலான தோழர்களுடன் சகஜமான உறவுகளைக் கொண்டிருந்தோம்; ஒரு புரட்சிகரக் கட்சியை அமைப்பதற்கு மிகச் சாதகமான நிலைமை உள்ளது என்ற நனவு இருந்தது; ஆனால் அதே நேரத்தில் அத்தகைய முன்னேற்றும் உறுதியாக வந்துவிடும் எனக் கொள்வதற்கில்லை என்ற நனவும் இருந்தது; மேலும் முரண்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தோன்றியது." (16)
"சிக்கலான முரண்பாட்டு நிகழ்ச்சிபோக்குகள்" போன்ற எல்லா வெற்று பேச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் எளிமையான உண்மை என்னவென்றால், ஒரு 13 ஆண்டு காலத்திற்கு மைய்த்தானுடைய குழு முதலாளித்துவ அமைப்பிற்கு இடதுசாரி மறைப்பு என்ற முறையில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது, கட்சி முதலாளித்துவ சமுதாயத்தை ஒவ்வொரு கடுமையான நெருக்கடியிலும் பாதுகாத்துள்ளதோடு, ஒருவேளை அடுத்த தேர்தலில் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தால், அடுத்த இத்தாலிய அரசாங்கம் அமைப்பதிலும் அநேகமாக நேரடித் தொடர்பு கொள்ளக் கூடும். Rifondazione கொண்டிருந்த பங்கு பற்றிய எந்தத் தீவிர சோதனைக்கும் அது "ஒரு புரட்சிகரமான கட்சியை அமைப்பதற்கான" "ஒரு கருவி" என்றோ அல்லது "முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தி" என்று கூறும்படியோ இல்லை; மாறாக அது தொழிலாள வர்க்கம் சுயாதீனமான, சோசலிச நிலைநோக்குடையதாக வளர்வதற்கு ஒரு தடையாகத்தான் இருந்துள்ளது.
Rifondazione இன் தோற்றம் 1991க்குப் பின் செல்லுகிறது. அப்பொழுது, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) தன்னுடயை பாரம்பரிய பெயரை விலக்கிடவும், கட்சியின் அடையாளம், அதன் பழைய கம்யூனிச செயல்கள் ஆகியவற்றையெல்லாம் துறந்துவிட முடிவு செய்ததுடன் தன்னுடைய விசுவாசத்தை சமூக ஜனநாயக கட்சிக்கு அறிவித்தது. இத்தகைய மாற்றம் இதன் போக்கில் விரைவாக ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாஸ்கோவிற்கும் பாரம்பரியமாக இருந்திருந்த தொடர்புகள், சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் இறுதியாக முடிவுற்றன என்பது முதல் காரணமாகும். இத்தாலியின் பாரம்பரிய ஆளும் கட்சிகளான கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சோசலிஸ்டுகளும் பெரும் ஊழல் அவதூறு நடவடிக்கையில் ஆழ்ந்தது இரண்டாம் காரணமாகும். தன்னுடைய கம்யூனிசத்துடனான அடையாளத் தொடர்புகளை ஒதுக்கிவிட்டதின் மூலம், இடது ஜனநாயகக் கட்சி (Democratic Party of the Left - PDS) என்று புதுப்பெயரிடப்பட்டதே அது அரசாங்கத்தில் பொறுப்பேற்பதற்கு தயாராக இருந்து, ஆணிவேர்களில் ஆட்டம் கண்டிருந்த ஒரு முதலாளித்துவத்தை காப்பாற்ற விழைந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.
இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு பிரிவு, இத்தகைய மாறுதலை மிகக்கூடுதலான வலது போக்கு என்று கருதியது. இடதில் இத்தகைய மாற்றம் ஆபத்தான வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிடும் என்ற அச்சத்தைக் கொண்டிருந்தது. இவ்விதத்தில்தான் “கம்யூனிச மறு அஸ்திவாரம்", (Rifondazione Communista) தோன்றியது. இப்புதிய அமைப்பில், "ஐரோப்பிய கம்யூனிசம்" என்ற பெர்லிங்கருக்கு எதிரான போராட்டத்தில் மாஸ்கோவின் நம்பிக்கை உரியவகையில் பெயரை ஏற்படுத்திக் கொண்ட ஆர்மன்டோ கோசுட்டாவின் (Armando Cossuta) தலைமையின் கீழிருந்த ஸ்ராலினிச கடும்போக்கானவர்களும் அடங்கியிருந்தனர். இந்தப் புதிய அமைப்பு 1970 களில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, முன்பு ஓரளவு வலிமையுடன் போராட்டம் நடத்தியிருந்த பல தீவிரபோக்குப் பிரிவுகளுக்கும் தன்னுடைய நிறுவனத்தில் இடம் அளித்தது.
ஆரம்பத்தில், PDS இன் எதிர்பார்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், பெர்லுஸ்கோனியின் Forza Italia தான் வெற்றியைக் கண்டதே ஒழிய PDS அல்ல. இத்தாலிய வரலாற்றில் போருக்குப் பின் முதல் தடவையாக புதிய பாசிஸ்ட்டுகளை தன்னுடைய ஆளும் கூட்டணிக்குள் கொண்டுவரமுடிந்ததால், பெர்லுஸ்கோனியால் பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால் அவருடைய வலதுசாரி அரசாங்கம் ஒரு சில மாதங்களுக்குத்தான் அதிகாரத்தில் இருக்க முடிந்தது; அதனுடைய பொருளாதார, சமூகநலக் கொள்கைகளுக்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து அவருடைய ஆட்சி சரிந்து போயிற்று.
இந்தக் காலக் கட்டத்தில்தான் Rifondazione முதல்தடவையாக தன்னுடைய பெருமித அரசியல் நிர்வாகத் தன்மையை நிரூபித்தது. கிட்டத்தட்ட ஒராண்டுக்கும் மேலாக, பெர்லுஸ்கோனியின் கீழ் மந்திரியாக இருந்தவரும், நாட்டின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவருமான லாம்பெர்டோ டீனியுடைய (Lamberto Dini) இடைக்கால அரசாங்கத்திற்குப் பாராளுமன்ற பெரும்பான்மையை அது பெற்றுத் தந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அது நேரடியாகப் பங்கு கொள்ளாமல் ரோமனோ புரோடியின் (Romano Prodi) இடது-மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்தது. இவ்விதத்தில், Rifondazione தீவிரமான நலன்புரி, சமுதாயச் செலவினங்கள் மீதான கடுமையான குறைப்புக்களை செயல்படுத்த தேவையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு உத்தரவாதம் அளித்து, வரவு-செலவுத் திட்டத்தை உறுதிப்படுத்தி, இத்தாலி, ஐரோப்பிய கூட்டு நாணய முறையான யூரோவின் பங்கு பெறுவதற்கான தகுதியைப் பெறவும் உதவியது.
1998ம் ஆண்டு Rifondazione புரோடிக்கான தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டபோது, ஒரு பெரிய அரசாங்க நெருக்கடி ஏற்பட்டு, முற்றிலும் எதிர்வகையில் PCT இன் பின்தோன்றல்கள் முதல்தடவையாக ஓர் அரசாங்கத்திற்குத் தலைமேயேற்று நடத்தும் நிலை வந்தது. PDS இன் தலைவரான மாசிமோ டி அலீமா (Massimo d'Alema) இடது-மத்திய கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில் வருவதையும் பாதுகாத்துக் கொண்டார். இப்பொழுது Rifondazione அரசாங்கத்தில் பங்கு பெற்றிராமல், கூடுதலான எதிர்ப்புத் தன்மை நிறைந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதன் விளைவாக அர்மண்டோ கோசுட்டாவைச் சுற்றி இருந்த மூத்த ஸ்ராலினிஸ்டுகள் கட்சியை விட்டு விலகி, தங்களுடைய சொந்த Comunisti Italiani என்னும் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அமைப்பை நிறுவினர்.
மைய்த்தானும் அவருடைய ஆதரவாளர்களும் Rifondazione மேற்கொண்ட இந்தத் தந்திரோபாயத்தை இடது நோக்கிய திருப்பம் என்றும், தங்களுடைய அரசியல் போக்கை நியாயப்படுத்திய ஒன்று என்றும் களிப்புடன் கொண்டாடினார்கள் என்பதைக் கூறவும் தேவையில்லை. "கட்சி முன்னேற முடியாத நிலை, மற்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறது, உண்மையில் இனித் திரும்பமுடியாத அழிவுநிலைக்கு வந்துவிடும் என்ற ஆபத்தையும் மேற்கொண்டதற்காக பெளஸ்டோ பெர்டிநோட்டிக்கு (Fausto Bertinotti) மதிப்புக் கொடுக்கபடவேண்டும்." என்று மைய்த்தான் அறிவித்தார். மேலும் பெர்டிநோட்டி "ஸ்ராலினிசத்திற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைக் கொள்ளவும் அதேநேரம் பூகோளமயமான சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணநலன்கள் மற்றும் இயக்கம் தொடர்பான தற்காலத்திற்கான ஒரு மூலோபாய சிந்தனைக்கும் ஊக்கத்தையும் கொடுக்கிறார்" என்று அவர் கூறினார்.(17)
உண்மையில், 1998ம் ஆண்டின் தந்திரோபாய மாற்றம் அடிப்படையில் ஒரு புதிய நிலைநோக்கை கொள்ளுவதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பெர்டிநோட்டியுடன் இருந்த பெரும்பான்மையினர் அவர்கள் மக்களிடையே செல்வாக்கையிழந்திருந்த கொள்கைகளுக்கு அடிமைத்தனமான முறையில் ஆதரவைத் தொடர்ந்தால் அரசாங்கமே முழுமையாகக் கவிழ்ந்து விடக் கூடிய அபாயத்தில் இருப்பது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் பெருகி வரும் எதிர்ப்பை திசைதிருப்பும் முக்கியப் பணியை Rifondazione இழந்துவிடும் நிலையை இது ஏற்படுத்தியது.
அடுத்துவந்த ஆண்டுகளில், Rifondazione கூடுதலான முறையில் பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பைக் காட்டும் இயக்கத்தின் செல்வாக்கைப் பெற முயலும் நிலைப்போக்கைக் கொண்டது. இந்த மாற்றத்திற்கு, பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே ஒரு சோசலிச முன்னோக்கை நிராகரித்திருந்த போதிலும் கூட, மைய்த்தானுடைய ஆதரவு பிரிவினர் உற்சாகமான ஆதரவை கொடுத்தனர். அதே நேரத்தில், கட்சி தன்னுடைய நிலைநோக்கான அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதை நிலைநிறுத்திக் கொண்டுதான் இருந்தது. இது ஜூன் 2003 இல் இன்னும் தெளிவாயிற்று. Rifondazione ஆரம்பித்துவைத்த சிறுதொழிற்துறைகளில் வேலைப்பாதுகாப்பு விரிவாக்கப்படவேண்டும் என்பது பற்றிய பொது வாக்கெடுப்பு தோல்வியடைந்தவுடனேயே, பெர்டிநோட்டி செய்தியாளர்களிடம் தன்னுடைய கட்சி அடுத்த தேர்தல்களுக்கு இடது-மத்திய கட்சிகளுடன் நடைமுறைப்படுத்தக் கூடிய உடன்பாடு ஒன்றை கொள்ளப் பாடுபடும் என்றும் வருங்காலத்தில் ஒரு மத்திய-இடது அரசாங்கம் ஏற்பட்டால் அதில் மந்திரி பதவிகளைக்கூட ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
1994ம் ஆண்டில் இருந்து Rifondazione க்குத் தலைமை தாங்கி வந்த பெளஸ்டோ பெர்டிநோட்டி இக்கட்சியில் சந்தர்ப்பவாதப் போக்கின் முழுத்தன்மையையும் கொண்டுள்ளார். 1940ல் பிறந்த அவர் பல வருஷங்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தும் அதன் தலைமையிட உட்பிரிவு வட்டம் எதிலும் சேர்ந்திருக்கவில்லை. வட இத்தாலிய தொழிற்துறை பகுதியில் தொழிற்சங்க உயரலுவலகராக முக்கியத்துவத்திற்கு உயர்ந்த அவர், ஒரு இடதுசாரி தொழிற்சங்கவாதி என்ற புகழை அடைந்திருந்தார். இடது, மற்றும் மார்க்சிச குறிப்புடைய கருத்துக்களைச் செதுக்கிக் கொண்டுவருவதில் அவர் திறமையைக் கொண்டிருந்தார்; ஆனால் அவருடைய கொள்கைகளோ முற்றிலும் எதிர்ப்போக்கைக் கொண்டிருந்தன. உடனடி விளைவுகளைக் கருத்திற்கொண்டுதான் ஒவ்வொரு நடைமுறையும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய அரசியல் வழியில் நீண்டகால அல்லது கொள்கை அடிப்படையிலான பரிசீலனைகளின் விரிவான கருத்தாய்வு இருந்ததில்லை. சோசலிசத்திற்கு அவர் உதட்டளவில் கொடுத்த ஆதரவு தன்னுடைய ஆதரவாளர்களின் மனநிலைக்கு அடிபணியும் நோக்கத்தை கொண்டிருந்தது.
பெர்டிநோட்டியை நல்ல முறையில் சித்தரிக்கும் தன்மையில் மைய்த்தான் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். Rifondazione இன் தலைவருடன் அவர் நெருக்கமான உறவைக் கொண்டிருந்து, அவருடைய மரணத்திற்கு சில மணிநேரம் முன்புகூட மிகப் பரந்த அரசியல் விவாதங்களை கொண்டிருந்தார். பெர்டிநோட்டியைப் பற்றிய அவருடைய துதிப்பாடல்கள் சிலநேரம் அரசசபையில் இருந்த புகழ்பாடும் தன்மையைத்தான் ஒத்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பெர்டிநோட்டியின் புதிதாக வெளியிடப்பட்ட "மரணிக்காத சிந்தனைகள்" என்ற தலைப்பில் வந்த புத்தகத்திற்கு அவர் மதிப்புரை வழங்கினார்.
இப்புத்தகத்தின் மீது புகழாரம் சூட்டி அவர் எழுதினார்: "நம்முடைய பங்கிற்கு பெர்டிநோட்டியின் ஆராய்ந்த தீர்ப்பை பகிர்ந்து கொள்ளுகிறோம்: இப்பொழுதுள்ள மிக முக்கியமான முரண்பாடு எப்பொழுதையும் காட்டிலும், நிகழ்ச்சிநிரலில் முதலாளித்துவத்தை அகற்றவேண்டும் என்ற முன்னோக்கு மிகக் கட்டாயம் என்ற உண்மையில் துல்லியமாக உள்ளது; ஆனால் சக்திகளின் உறவுமுறைகள் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு பின்னோக்கிச் செல்லும் முற்றுணர்வைக் கொண்டிருப்பது இரண்டும் இதை உணர்வதில் பெரும் தடையாக அமைந்துள்ளன."(18)
Rifondazione இன் தலைவர் "முதலாளித்துவத்தை அகற்றும் முன்னோக்கை நிகழ்ச்சிநிரலில்" கொண்டுவர விரும்புகிறார் என்ற கூற்று, அவருடைய அரசியல் வாழ்வை காணும்போது மிகவும் அபத்தமானது. உண்மையில் முதலாளித்துவ-எதிர்ப்பு முன்னோக்கு வளர்வதற்கு பெர்டிநோட்டியின் கட்சிதான் ஒரு முக்கியமான தடையாக இருந்தது.
மைய்த்தான் கொடுத்த ஆதரவிற்கு பெர்டிநோட்டியும் அவரைப் பற்றிய புகழைப் பாடும் வகையில், மைய்த்தானுடைய வாழ்க்கை வரலாறு 2002 இல் வெளிவந்தபோது அதற்கு ஒரு முன்னுரையை அளித்துள்ளார்.
பெர்டிநோட்டியைச் சூழ்ந்திருந்த பெரும்பான்மையைப்பற்றி, கட்சியின் இடதுசாரிப் பிரிவு கூறியிருந்த விமர்சனங்களில் இருந்து காத்திடும் வகையில் மைய்த்தான் நடந்துகொண்டுள்ளார். Progetto Comunista போக்கு கட்சியை வலது-மத்தியகூட்டிற்கு திறந்துவிடும் தன்மையை நிராகரித்து, தொழிற்சங்கவாத நிலைப்பாட்டின் வழியில் பூகோளமயமாதலுக்கு எதிரான இயக்கத்திற்கு அடிபணிவதை விமர்சித்துள்ளது. Progetto Comunista இன் தலைவரான மார்கோ பெரென்டோ (Marco Ferrando) இந்த இயக்கம் "ஒரு வெறும் கற்பனையானதாக மாற்றப்பட்டுவிடக் கூடாது" என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பெரன்டோ "பூகோளமயமாக்கலுக்கு எதிரான ஒரு குறுங்குழுவாத பார்வை கொடுக்கின்றார்" என்று மைய்த்தான் குற்றஞ்சாட்டினார். "PRC இன் வரலாற்றுத் தன்மை மிகுந்த மாறுதல் வழிவகையைப் பொறுத்தவரையில் அவர் அதிலிருந்து ஒதுங்கியிருக்க'' முடிவெடுத்தார்". (19)
மைய்த்தானால் சிலநேரம் காட்டப்பட்ட கருத்துவேறுபாடுகள், அவ்வப்போதான விமர்சனங்கள், அவற்றிற்கும் பல காரணங்களை அளித்தல் என்று இருந்தபோதிலும், அவருடைய Bandiera-Rossa போக்கு Rifondazione க்கும், Bertinotti க்கும் அரசியலில் ஒரு முக்கிய ஆதரவுத் தூணாக அமைந்தது. கட்சி, மற்றும் அதன் தலைமையை இடதுபக்கமிருந்து வரும் விமர்சனங்களில் இருந்து அது காப்பாற்றியதோடு, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சோசலிப் போக்கை அபிவிருத்திசெய்வதையும் தடுத்துவிடுகிறது. மைய்த்தானும் அவருடைய ஆதரவாளர்களும், இந்த அமைப்பின் சந்தர்ப்பவாத, மற்றும் கொள்கையற்ற தன்மையைப்பற்றி எச்சரிக்கும் வகையில் எதிராகப் பேசியதே இல்லை. தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச பாதையை, Rifondazione இடம் இருந்து பிரிந்து மேற்கொள்ளவேண்டும் என்பதற்கு இவர்கள் தயார் செய்யவே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் International Viewpoint இல் கட்சியை பற்றிப் பெரிதும் உற்சாகத்துடன், "அது சிறப்பான, உண்மையில் மிகத் தனித்தன்மை வாய்ந்த குணநலன்களை இத்தாலிய தொழிலாளர்கள் இயக்கங்களிடையே கொண்டுள்ளது" என்று கூறினார். மேலும், "இன்று இதற்குச் சமமானமான ஒரு அமைப்பை ஐரோப்பிய இடது கட்சிகளிடையே மட்டும் இல்லாமல், தொழிலாள வர்க்கத்திற்காகவும் சோசலிசத்திற்காகவும் போராடுவதாக கூறிக்கொண்டு செயல்படும் கட்சிகளை ஐரோப்பாவிலும் மற்ற கண்டங்களிலும் காண்பதற்கில்லை" என்றும் அவர் தெரிவித்தார். (20)
இது ஒரு வெறும் கண்துடைப்பு அல்ல. உண்மையில் மற்ற சந்தர்ப்பவாத கட்சிகளில் இருந்து Rifondazione ஐ வேறுபடுத்திக்காட்ட ஏதும் இல்லை. இவை அனைத்துமே ஒரு காலை பாராளுமன்றத்தன்மைக்கு புறம்பான எதிர்ப்பு, வேலைநிறுத்த இயக்கத்தில் கொண்டு, மற்றோரு காலை அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியல் வாழ்விலும் ஊன்றியுள்ளன. ஸ்ராலினிசத்திற்குப் பின்வந்த கட்சியான ஜேர்மனியின் ஜனநாயக சோசலிச கட்சி (PDS), பப்லோவாதிகளின் Ligue Communiste Révolutionnaire அல்லது பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி, இங்கிலாந்தின் Socialist Alliance, இன்னும் பல குழுக்களும் இதைப் போன்ற தன்மையைத்தான் ஏதேனும் ஒரு விதத்தில் கொண்டுள்ளன. ஆழ்ந்த சமுதாய நெருக்கடிக் காலங்களில், அவை முதலாளித்துவ அமைப்பிற்கு ஓர் இடது ஆதரவுத் தூண் போல் செயல்படுகின்றனர். இந்த அமைப்புக்கள் Rifondazione உடன் உறவுகளைத் தக்கவைத்திருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல.
மைய்த்தான் சர்வதேச அரங்கில் கடைசியாகத் தோன்றியது
ஐக்கிய செயலகத்தின் ஓர் உறுப்பினரும், பிரெஞ்சு LCR (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக) தலைவர்களுள் ஒருவருமான Alain Krivine, மைய்த்தான் சர்வதேச வழிவகையில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு "திறந்துவிடுதல்" ('opening up') என்ற கொள்கையை அளிப்பதில் ஒரு முன்னோடியாக இருந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார்.
மைய்த்தானைப் பற்றிய இரங்கல் குறிப்பில், Alain Krivine எழுதுகிறார்: "லிவியோவின் மரணத்துடன் ஒரு அத்தியாயம் முடிவடைகிறது; ஆனால் அவருக்கு நன்றி கூறுவதுடன் மற்றொன்று தொடங்குகின்றது, அதாவது "திறந்துவிடுதல்" என்பது தொடர்ந்துள்ளது.... 1990 களில், லிவியோவும் மற்ற அகிலத்தின் தலைவர்களும் புரட்சிகரத் தொழிலாளர்களின் இயக்கம் எவ்வாறு சிதைந்துள்ளது என்றும் அது எவ்வாறு மறுபடியும் சீரமைக்கப்படவேண்டும் என்ற நிகழ்வை நன்கு உணர்ந்தனர். நான்காம் அகிலத்தின் மூலம் பிரத்தியேகமாக இது நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிசக் காட்டிக் கொடுப்பு இரண்டுடனும் சமமாக முறித்துக் கொள்ளும் ஒரு முதலாளித்தவ-எதிர்ப்பு சக்தியின் திட்டத்திற்கு ஒரு புதிய அஸ்திவாரம் அளிப்பது இன்றியமையாதது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த முன்னோக்கு ஏற்கனவே வெளிப்பட்டு, முதலாளித்துவ-எதிர்ப்பு சக்கதிகளை மறுசீரமைக்க உதவுகிறது, அவர்களுடைய பழைய மரபுகள், தோற்றம் ஆகியவற்றைப் பற்றி இது பொருட்படுத்தவில்லை." (21)
இது வட்டத்தை முடிவிற்கு கொண்டுவருகின்றது. 1953ம் ஆண்டு ஐக்கிய செயலகம் தேர்ந்தெடுத்த அரசியல் நிலைநோக்கை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு மைய்த்தான் இட்டுச் சென்றார். அந்த நேரத்தில், நான்காம் அகிலத்தின் சுதந்திரமான பிரிவுகள் என்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, "உண்மையான வெகுஜன இயக்கத்துடன்" அதாவது ஸ்ராலினிசக் கட்சிகள், குட்டி முதலாளித்துவ தேசிய அமைப்புக்கள், போருக்குப் பிந்தைய காலத்தில் சற்று செல்வாக்கைக் கொண்டுள்ள மற்ற அமைப்புக்கள் இவற்றுடன் இணைத்தல் தேவை என்ற நியாயப்பாட்டைக் கூறி பப்லோ நிராகரித்தார். சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர், இந்த அமைப்புக்களின் மீது கொள்ளப்பட்ட எதிர்ப்பார்ப்புக்களைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி, ஐக்கிய செயலகம் மீண்டும் மற்ற சக்திகளுடன், "அவர்களுடைய மரபுகள், தோற்றம் ஆகியவற்றை பற்றி" பொருட்படுத்தாமல் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள விழைகிறது.
இதன் பொருள் நடைமுறையில் அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியலில் முழுமையான இணைப்பை ஏற்படுத்தியாகிவிட்டது என்பதுதான். இத்தாலியில் உள்ள Rifondazione பற்றி மட்டும் குறிப்பிடாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக 175 மில்லியன் மக்கள் கொண்ட ஒரு நாட்டை ஆண்டுவரும் பிரேசிலுடைய தொழிலாளர்கள் கட்சியை (PT), பற்றியும் மைய்த்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஐக்கியச் செயலகத்தின் பிரேசில் பிரிவு உறுப்பினர் ஒருவரான மிகுவெல் ரோசெட்டோ (Miguel Rossetto) நாட்டின் விவசாயச் சீர்திருத்த அமைச்சராக உள்ளார். மைய்த்தான் கடைசியாகப் பங்கு பெற்றிருந்த, ஐக்கியச் செயலகத்தின் 15ஆம் உலக மாநாட்டில், அத்தகைய ஒத்துழைப்பிற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்தலை அவர் குறிப்பிட்டுச் செய்தார்.
தன்னுடைய ஆரம்ப உரையில் அவர் அறிவித்தார்: "கொள்கை அடிப்படையில், நாம் எப்பொழுதுமே தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு பெருந்தீமை பயக்கும் பாராளுமன்ற குழப்பவாத நோயினால் தாக்கப்படவில்லை.... எனவே நம்முடைய பெருகி வரும் செல்வாக்கின் பிரதிபலிப்பாக உள்ள கடந்த தசாப்தத்தின் உண்மையான நாங்கள் பாராளுமன்ற தேர்தல் வகையில் தொடர்ச்சியான நாடுகளில், பிரேசிலில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை, டென்மார்க்கில் இருந்து போர்த்துக்கல் வரை, ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் பிரதிநிதிகளை கொண்டுள்ளோம். பிரேசிலில் மிகுவெல் ரோசெட்டோ போன்ற தோழர், இவருடைய அரிய குணநலன்களும் போராளித்தன உணர்வும் நன்கு அறியப்பட்டவையே, முன்னோருபோதிமில்லாத வகையில் வெற்றியைக் கொண்டு தேர்தலில் லூலா (Lula) நிறுவியுள்ள அரசாங்கத்தின் உறுப்பினராக இன்று உள்ளார். தீவிரபோக்கான விவசாயச் சீர்திருத்தத்தை சாதிக்கவேண்டிய முக்கியமான பொறுப்பை மிகுவெல் கொண்டுள்ளார். இது தற்போதிருக்கும் அமைப்புமுறையினை உடைக்கும் ("dynamic of rupture with the system") பொதுவான சக்தியை தோற்றுவிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்நிகழ்வை தொடர்ந்து கவனித்து, அவருடைய போராட்டத்திற்கு, PT மற்றும் MST (நிலமில்லாத கிராமப்புறத் தொழிலாளர்) ஆகியவற்றின் தீவிரபோக்கான பிரிவுகளுடைய ஆதரவையும் தருவோம்: மேலும் இந்த முயற்சியில் உள்ள மிகக் கடினமான தன்மையை பற்றிய ஆழ்ந்த வேதனையை அடக்கிக் கொண்டு, இந்த மாநாட்டில் அவருக்கு நம்முடைய உளமார்ந்த ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்துவோம் ஆக." (22)
"தற்போதுள்ள அமைப்புமுறையுடனான உடைவுமுறை" என்ற மைய்த்தானுடைய வருங்காலம் பற்றிய கணிப்பு விரைவில் ஒரு கற்பனையை தவிர வேறொன்றும் இல்லை என்பதை புலப்படுத்திக் கொண்டது. சிறிதும் தடையின்றி, வலதுசாரி முன்னோடியின் நவீன-தாராளவாத கொள்கைகளை பிற்பற்றும் ஓர் அரசாங்கத்தில் ரோசெட்டோ ஒரு அதிகாரபூர்வ பொறுப்பை கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கம் பிரேசில் முதலாளித்துவத்தின் விசுவாசத்தைக் கொண்டுள்ளது; மேலும் சர்வதேச நாணய சபையில் இருந்தும் மிக உயர்ந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சொற்களில்கூட அது "முதலாளித்துவ-எதிர்ப்பை" காட்டுவதில்லை. ஜனாதிபதி Inácio “Lula” da Silva, ஒரு போர்குணமிக்க தொழிற்சங்கவாதி என்ற புகழ், எழுச்சியுறும் அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய தொழிலாள வர்க்கத்தை சமாதானப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்விடயத்தில் பப்லோவாதிகள் முக்கிய பாத்திரத்தை வகித்தனர்.
மைய்த்தானுடைய வாழ்வில் இருந்து ஒரு படிப்பினையைப் பெறலாம் என்றால், அது முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதிகாரத்துவ அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக, நான்காம் அகிலத்தில் தலைமையின் கீழ், ஒரு சர்வதேச சோசலிச கட்சியை பொறுமையாக அமைப்பதை விட வேறு மாற்று ஏதும் இல்லை என்பதுதான். பரந்த மக்களின் உரிமைகளின் மீதும் சமூகநல உரிமைகளின் மீதும் நிரந்தர தாக்குதல்கள் மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய போர்கள் போன்றவை காட்டும் உலகந்தழுவிய முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த நெருக்கடி நிலைமைகளில், அத்தகைய கட்சி சக்திவாய்ந்த ஈர்ப்புத் தன்மையைப் பெற்று விளங்கும்.
குறிப்புகள்:
1) Léon Trotsky, "The Permanent Revolution", Editions de Minuit, Paris 1963, p.124
2) Quoted from: David North, “The Legacy We Defend,” Chapter 15, www.wsws.org. This book contains a detailed account of the 1953 split and the conflict between the Unified Secretariat and the International Committee.
3) Livio Maitan, «PCI 1945-1969: Stalinism and opportunism», Rome 1969, p. 195
4) Ibid. p. 201
5) Ibid. p. 199; emphasized by us.
6) Leon Trotsky, Transition Program, Selio 1978, p.40
7) Interview with F. Villani in: Yurii Colombo, "The Trotskyist movement in Italy during the season of social movements", http://www.giovanetalpa.net/movtrot.htm
8) Quatrième Internationale, Nov/Dec. 1967
9) "Résolution du 9o Congrès Mondial sur l'Amérique Latine," Quatrième Internationale May 1969
10) "Criticisms of the Positions of the SWP (USA)" by Peng Shuzi, March 16, 1981
11) "Die Vierte Internationale, die kubanische Revolution und Che Guevara," Inprekorr no. 318
12) Bandiera Rossa, April 15 1968, quoted by Yurii Colombo, op cit.
13) Bandiera Rossa, April 1 1968, quoted by Yurii Colombo, op cit.
14) Quarta Internazionale n. 5-6, giugno 1972
15) Alain Krivine, "Ciao compagno!," Rouge 30.9.2004
16) Flavia D'Angeli, "New turn for PRC," International Viewpoint 359, May/June 2004
17) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002
18) Livio Maitan, "On Fausto Bertinotti's book," International Viewpoint 326, December 2000
19) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002
20) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002
21) Alain Krivine, "Ciao compagno!" Rouge 30. September 2004
22) Livio Maitan, "Opening Speech of the Congress," International Viewpoint 349, May 2003