சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2012 ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் 12 வரையான தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரசில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்காவதும் இறுதியானதுமான தீர்மானம் இங்கே வெளியிடப்படுகிறது.

இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் சேர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் பெயரை 'சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு' என்பதில் இருந்து 'சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு' என்று மாற்றியமைக்க இக்காங்கிரஸ் முடிவெடுத்தது.

1. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு மார்க்சிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் கோட்பாடுகளில் கல்வியூட்டுவதற்கான ஒரு போராட்டம் அவசியமானதாக இருக்கிறது.

2. 2008 இல் தொடங்கிய நெருக்கடி அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் சகிக்க முடியாத நிலைமைகளை உருவாக்கி மில்லியன் கணக்கான இளைஞர்களை அரசியல் போராட்டத்திற்குள் தள்ளியிருக்கிறது. பாரிய வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் இளைஞர்கள் மிகவும் ஆழமான பாதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2000வது ஆண்டு முதலாக அமெரிக்கப் பொருளாதாரம் 25 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான மொத்த முழு-நேர வேலைகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாய் இழந்திருக்கிறது. 2009க்கும் 2011க்கும் இடையில் உயர்நிலைப் பள்ளியில் தேறி ஆனால் கல்லூரிக்குச் செல்லாத இளைஞர்களில் வெறும் 16 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு-நேர வேலை கிட்டியிருக்கிறது. கல்வி மட்டுமல்லாது, இப்போது கல்விச்சாலைகளில் இல்லாத 16 முதல் 24 வயது வரையான அமெரிக்கர்களில் 47.3 சதவீதத்தினருக்கு மட்டுமே முழு-நேர வேலை இருக்கிறது.

3. உலகம் முழுவதிலும், இளைஞர்கள் எதிர்காலமற்று இருக்கின்றனர். இளைஞர்கள் உயிர்வாழச் சம்பாதிப்பதே சிரமமென்கிற நிலையில் போர், போலிஸ் மிருகத்தனம் மற்றும் அரச ஒடுக்குமுறை ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகின்றனர். 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் எட்டுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வேலைவாய்ப்பில்லை என சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. கிரீஸிலும் ஸ்பெயினிலும் மொத்த இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், நான்கில் ஒருவருக்கு வேலைவாய்ப்பில்லை.

4. ஆளும் வர்க்கத்தின் பொதுவான கொள்கையை முன்னெடுக்கின்ற ஒபாமா நிர்வாகம், இளம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்து, அதனை ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அடித்துநொருக்கும் கருவியாகப் பயன்படுத்துவதற்கு முனைந்து வருகிறது. இந்த எண்ணத்துடனேயே ஒபாமா நிர்வாகமானது இரண்டடுக்கு ஊதிய முறையின் விரிவாக்கத்தை வாகனத் துறை பிணையெடுப்புக்கான ஒரு முன்நிபந்தனையாக வலியுறுத்தியது.

5. இதேபோல மாணவர்களும் தமது வாழ்க்கைத் தரங்களில் பெரும் இழப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர். தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு ஒரு கண்ணியமான செலவுடனான உயர் கல்விக்கான சாத்தியம் என்பதே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கண்ணியமான பொதுக் கல்வி என்பதே முதலாளிகள் மற்றும் நடுத்தர வர்க்க உயரடுக்கின் பிரத்தியேக எல்லைக்குட்பட்டதாய் ஆகிக் கொண்டிருக்கிறது. வசதிகுறையந்த பின்புலங்களில் இருந்துவரும் மாணவர்கள் கல்வி பெற முனைகையில் அவர்கள் படுகின்ற கடனை அடைக்க வேண்டுமானால், உயிர்வாழ்வதற்கென உடல் தேயுமளவிற்கு அவர்கள் உழைத்தாலும் கூட அக்கடனை அவர்கள் பல பத்தாண்டுகளுக்கு கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

6. இளைஞர்கள் முகம் கொடுக்கும் பரிதாபகரமான பொருளாதார வாய்ப்புவளங்கள் எல்லாம் பொதுக் கல்வியிலான முன்கண்டிராத வெட்டுகளால் இன்னும் சிக்கலாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் கடந்த 14 மாதங்களில் 470,000 உள்ளூர் அரசாங்கக் கல்வி ஊழியர்கள் வேலையிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் மாநில மற்றும் மாநகர அரசாங்கங்கள் K-12 நிதிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. இது பள்ளிகள் மூடலுக்கும், வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கும், அத்துடன் ஒரு கண்ணியமான கல்வியின் முக்கியமான மூலபாகங்கள் அகற்றப்படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மாநிலங்கள் எல்லாம் இடைநிலைக் கல்விக்கான உதவியை வெட்டிக் கொண்டே செல்கின்றன. இதனால் கல்லூரிகள் எல்லாம் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் நிர்ப்பந்தம் பெறுகின்றன.

7. ஏறிக் கொண்டே செல்லும் கல்விக் கட்டணம் இளம் தலைமுறையின் மீது கடன் மேலும் மேலும் பெருகிச் செல்ல தள்ளியிருக்கிறது. அமெரிக்காவில் மாணவர் கல்விக் கடன் தொகையின் மொத்த அளவு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு பல்கிப் பெருகியிருக்கிறது. இது வாகனக் கடன்கள் மற்றும் கடன் அட்டை கடன்கள் இரண்டின் கூட்டுமொத்த அளவையும் விஞ்சுவதாகும். 2010 இல் பட்டம் பெற்ற மாணவர்கள் சராசரியாக 25,250 டாலர் வரை மாணவர் கடன் கொண்டிருக்கின்றனர். இது 2006 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இருந்த 19,646 டாலர் என்கிற அளவில் இருந்து இந்த அளவிற்கு மேலேறிச் சென்றிருக்கிறது. இதனிடையே கல்லூரி முடித்த பட்டதாரி மாணவர்களுக்கு ஊதியங்கள் சரிவு கண்டிருக்கின்றன. 23 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட கல்லூரிப் பட்டதாரிகளுக்கான ஒரு மணி நேரத்திற்கான ஊதியம் 2000 ஆம் ஆண்டு முதல் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்திருக்கிறது. பத்தாயிரக்கணக்கான இளம் மாணவர்கள் தமது மாணவர் கடன்களை ஒருபோதும் செலுத்த முடியாத ஒரு நிலையை எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்பதே இதன் பொருளாகும்.

8. இளம் தலைமுறை வறுமைக்குள் தள்ளப்படுவது, இளைஞர்கள் அரசியல் போராட்டத்திற்குள் நுழைவதைப் போன்ற ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்கு ஆகும். கனடா, பிரிட்டன், மெக்சிக்கோ, சிலி மற்றும் அமெரிக்காவில் பொதுக் கல்வியைப் பாதுகாத்து எழுந்த வெகுஜனப் போராட்டங்கள் உள்ளிட இளைஞர்களிடையே கணிசமான சமூக இயக்கங்கள் எழுந்திருக்கின்றன. வேலைவாய்ப்பற்ற இளம் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரிப் பட்டதாரிகளின் பெருந்திரள் எண்ணிக்கையானது புரட்சிகர எழுச்சிக்கான ஒரு சமூக அடிப்படையாய் அமைகிறது என்பதை ஒன்றுக்கும் மேலான உத்தியோகபூர்வ பார்வையாளர்கள் கவலையுடன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

9. பொருளாதாரப் பேரழிவு தவிர ஒரு முடிவில்லாத போரின் வருங்காலத்திற்கும் கூட இளம் தலைமுறை முகம் கொடுத்து வருகிறது. இதில் அவர்கள், உலகத்தை வெல்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் செலுத்தத்தில் பீரங்கி இரைகளாகச் சேவை செய்ய நிர்ப்பந்தம் பெறுவர், இல்லையெனில் அந்த ஆக்கிரமிப்புப் போர்களின் பிரதான இலக்குகளாய் இருப்பர். அமெரிக்கா உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இடைவிடாத போரை பின்பற்றுவதால், இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகள் மீண்டுமொருமுறை ஒரு கட்டாய இராணுவச்சேவைக்கான அவசியத்தை மேலெழுப்புகின்றனர்.

10. அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவுமே ஒரு முன்நோக்கிய வழியைக் காட்டவில்லை. 2008 இல், ஒபாமா நிர்வாகம் இளைஞர்களுக்கு, குறிப்பாக "மாற்றம்" என்ற சுலோகத்தின் மீது விண்ணப்பம் வைத்தது. ஆயினும் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் கருவியாகச் செயல்படுவதில் ஜனநாயகக் கட்சி எந்த வகையிலும் குடியரசுக் கட்சியினருக்கு சளைத்ததல்ல என்பதையே கடந்த மூன்றரை ஆண்டுகள் விளங்கச் செய்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதன் மூலமாக மட்டுமே இளம் தலைமுறையின் புரட்சிகர சாத்திய வளம் அறியப்பட இயலும். உலகப் பொருளாதாரத்தை சோசலிசரீதியாய் மாற்றுவதை முன்னெடுக்கின்ற தொழிலாளர்' அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்குப் போராடுகின்ற தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை விரிவாய் பேசுகின்ற ஒரு அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டு மாணவர்களும் இளைஞர்களும் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். சமூகத்தை ஒட்டுமொத்தமாக மறுஒழுங்கமைப்பது மட்டுமே பல்கலைக்கழக மட்டம் வரையிலும் இலவசப் பொதுக் கல்விக்கான உரிமையையும், மாணவர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதையும், அத்துடன் இளைஞர்களுக்கு கண்ணியமான ஊதியம் வழங்கும் வேலைகளுக்கான உத்தரவாதத்தையும் பெற்றுத்தர முடியும்.

11. தொழிலாள வர்க்கம் தான் சமூகத்தின் பிரதானமான புரட்சிகர சக்தி என்பதை IYSSE வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களை நோக்கிய நோக்குநிலை என்பதன் பொருள் போலி-இடது அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றதும் கல்லூரி வளாகங்களில் பரவிக் கிடப்பதுமான பிற்போக்குத்தன, அகநிலை, கருத்துவாத மற்றும் பகுத்தறிவற்ற அரசியல் தத்துவங்களுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டம் என்பதாகும். பிராங்க்பேர்ட் பள்ளி, பின் நவீனத்துவ வகையறாக்கள், நவ-அராஜகவாதம் மற்றும் அடையாள அரசியல் இவற்றுடன் தொடர்புபட்ட தத்துவார்த்தப் போக்குகள் அனைத்தும் மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் நிராகரிப்பதிலேயே வேரூன்றியிருக்கின்றன. IYSSE ஐ கட்டியெழுப்புவதற்கு மார்க்சிசத்துக்கும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒட்டுமொத்த புரட்சிகரப் பாரம்பரியத்தைக் கைப்பற்றுவதற்குமான ஒரு போராட்டம் அவசியமாய் இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஊடாக, தொழிலாள வர்க்கத்தின் இளைஞர்களையும் அத்துடன் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கின்ற நடுத்தர வர்க்கத்தின் சிறந்த அடுக்குகளையும் IYSSE தனது பதாகைக்கு வென்றெடுக்கும்.

12. மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதென்பது சோசலிச நனவுக்கான ஒரு முறையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும். இளம் தலைமுறையானது வர்க்கப் போராட்டத்தின் பல பத்தாண்டு கால ஒடுக்குமுறைக்கு இடையில் தான் வளர்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களில் இருந்தான படிப்பினைகள், எல்லாவற்றுக்கும் மேலாய் ரஷ்யப் புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்தின் இயல்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை உள்ளீர்த்துக்கொண்டு இந்தத் தலைமுறை கல்வியூட்டப்பட வேண்டியிருப்பதை இதுவே மிகவும் அவசியமாக்குகிறது. மார்க்சிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த மரபு ஒரு புதிய இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கப்படுவது அவசியமாக இருக்கிறது.

13. இளந் தலைமுறையினர் இடையே இந்த முன்னோக்கிற்காக போராடுவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இந்த சோசலிச சமத்துவக் கட்சி காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.

Loading