மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இது மார்ச் 25 அன்று நேரலையாக வழங்கப்பட்ட ஒரு உரையின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பதிப்பாகும். இந்த உரையின் ஒலிப்பதிவையும் ஸ்லைடுகளையும் கீழே அணுகலாம். இந்த உரை வரிசைக்கு பதிவு செய்ய wsws.org/1917 க்கு விஜயம் செய்யவும்.
1905 ஆம் ஆண்டை 1917 ஆம் ஆண்டின் “ஒத்திகை” என லெனின் விவரித்தார். ட்ரொட்ஸ்கி இதனை, அது ஏனைய விடயங்களுடன், இதுவும் “ஒரு மகத்தான முகவுரை” என்று அழைத்தார். ஒரு சில தினங்களுக்கு முன்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் மறுபிரசுரமான கட்டுரை ஒன்றில், ட்ரொட்ஸ்கி இந்த சிந்தனையை மீள்உறுதிப்படுத்தி தொழிலாளர்கள் 1905 ஐ கற்க வேண்டும், அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
1905 இல் ரஷ்ய சாம்ராஜ்யம் ஒரு ஜார் மன்னரால் ஆளப்பட்டது, அந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ் ஒரு முற்றுமுதலான கொடுங்கோலர். பிரம்மாண்டமான அரசு எந்திரத்தை இயக்குவதற்கு பிரபுக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு அடுக்கின் மீது அமர்ந்து கொண்டு உத்தரவுகளைக் கொண்டு அவர் ஆட்சி நடத்தினார். தேசிய செல்வத்தின் ஒரு மிகப்பெரும் பகுதியை நுகர்ந்து கொண்ட ஒரு மிகப் பெரும் இராணுவமும் ஜாரினால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ரஷ்யாவில் பேச்சு சுதந்திரம் என்பதே இருக்கவில்லை. ஊடகங்களுக்கும் சுதந்திரமில்லை, கடுமையான தணிக்கை அங்கே இருந்தது. ஒன்றுதிரள்வதற்கான உரிமை அங்கே இல்லை, ஜாருக்கு மனுகொடுப்பதற்கு கூட உரிமை இல்லை. ஜாருக்கு ஒரு மனுவை கொடுப்பதும் கூட சட்டவிரோதம், அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு சில பிரபுக்களுக்கு மட்டுமே அந்த சலுகை இருந்தது. வேலைநிறுத்தம் செய்வதற்கு உரிமையில்லை; ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கும் உரிமையில்லாதிருந்தது. நாடாளுமன்றம் கிடையாது, வாக்களிக்கும் உரிமை கிடையாது; 8 மணி நேர வேலை கிடையாது. சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டின் முடிவுவாக்கில், அநேக தொழிலாளர்களுக்கு பொதுவாய் வேலை நேரம் என்பது 14 மணி நேரமாய் இருந்தது, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 12 மணி நேர வேலை கிடைக்கலாம். 1897 இல் ஜார் அதிரடியாக வேலைநேரத்தை பதினொன்றரை மணி நேரமாகக் குறைத்தார், பல தொழிற்சாலைகளில் இது கடைப்பிடிக்கப்படவில்லை என்றாலும். மிகச் சிறிய தவறுகளுக்காகவும் கூட தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலைக்கு 15 நிமிடம் தாமதமாக வந்தாலும் கூட, அவர்களுக்கு ஒருநாள் சம்பளம் அபராதமாக விதிக்கப்படும். உற்பத்தியில் தவறு நேர்ந்தால், அபராதம் இன்னும் கூடுதலாய் இருக்கும். அவர்களுடைய ஊதியம் ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்ததாக இருந்தது.
ரஷ்ய சாம்ராஜ்யம் முழுக்க ரஷ்யர்களை கொண்டதாக இருந்திருக்கவில்லை. உண்மையில் ரஷ்யர்கள் -அதாவது ரஷ்ய இனத்தவர்- சாம்ராஜ்யத்தின் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே. நவீன காலகட்டத்தில் தேசிய பிரச்சினையானது 150 அடையாளம் காணத்தக்க தேசிய இனங்கள் வரை கொண்டிருக்கிறது. பெரிய இனங்களில் சில நன்கு அறியப்பட்டவையாகவும் புரிந்து கொள்ளப்பட்டவையாகவும் இருக்கின்றன. உதாரணமாக, ரஷ்ய சாம்ராஜ்யத்தில் போலந்தினர் இருந்தனர். போலந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பிளவுபட்டிருந்தது. போலந்தினர் ஜாரிச ஆட்சியின் கீழ் ரஷ்ய மயமாக்கத்திற்கு முகம்கொடுத்தனர்: அவர்கள் தங்கள் பள்ளிகளில் போலிஷ் மொழியை அல்லாமல் ரஷ்ய மொழியைக் கற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். பின்லாந்தினருக்கும் இதே நிலைதான், ஏனென்றால் பின்லாந்தும் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இருந்த அத்தனை தேசிய இனங்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டதாய் இருந்த யூத மக்களுக்கும் இது பொருந்தக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட 5 மில்லியன் எண்ணிக்கையில் இருந்த யூத மக்கள், அவர்கள் வாழ அனுமதிக்கப்பட்டிருந்த Pale of Settlement பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். பல வேலைகளில் அவர்கள் பணிபுரிவதற்கு மறுக்கப்பட்டது. பல்கலைக்கழக நுழைவுக்கு ஒதுக்கீட்டு வரம்பு இருந்தது. அவர்களுக்கு வாக்குகள் கிடையாது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. 1881 இல், முந்தைய ஒரு ஜார் (இரண்டாம் அலெக்சாண்டர்) படுகொலை செய்யப்பட்டிருந்ததை அடுத்து, யூத மக்களுக்கு எதிராய் அலையலையாய் கலவரப்படுகொலைகள் தொடுக்கப்பட்டன. இந்த கலவரப் படுகொலைகளில் அடிப்படையாக, குண்டர்களின் ஒரு ஆயுதமேந்திய ஒரு கும்பல், போலிஸின் திட்டமிட்ட மற்றும் நேரடியான வழிகாட்டலிலோ, அல்லது குறைந்தபட்சம், போலிஸ் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொள்கின்ற நிலையிலோ அட்டூழியம் செய்வதாய் இருக்கும். அவர்கள் யூதப் பகுதிகளுக்குள்ளாக திடீரென்று நுழைவார்கள், ஆட்களைக் கொல்வார்கள், சித்திரவதை செய்வார்கள், அவர்களின் வீடுகளை சூறையாடுவார்கள், அவர்களின் வணிகங்களை அடித்து நொருக்குவார்கள், பின் அடிப்படையில் யாரிடமும் பிடிபடாமல் சென்று விடுவார்கள். 1905 புரட்சிக்கு முன்னர் இரண்டு இழிபுகழ்பெற்ற கலவரப் படுகொலைகள் இப்போது மோல்டோவா என்ற பெயருடன் இருக்கும் கிஷினீவில் நடைபெற்றன.
ரஷ்யா பெரும்பாலும் ஒரு விவசாய நாடாய் இருந்தது. விவசாயிகள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக வறுமைப்பட்டவர்களாக இருந்தனர். பரவிக்கிடந்த 500,000 கிராமங்கள் மற்றும் குக்குராமங்களில் அவர்கள் வசித்தனர். விவசாயிகளது இந்த “சிதறியநிலை” குறித்தும் ‘இத்தகையதொரு பரந்த நாட்டில் நாடுமுழுக்க விரவி சிதறிக் கிடக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவது எப்படி?’ என்ற தீவிரமான அரசியல் பிரச்சினையை அது எவ்வாறு முன்வைத்தது என்பது குறித்தும் ட்ரொட்ஸ்கி விவரிக்கிறார்.
விவசாயிகள் அதன் சமூக கட்டமைப்பில் ஒன்றுபட்டவர்களாக இருக்கவில்லை. மிகவும் வசதியான விவசாயிகளும் இருந்தனர். மிகப்பெரும் நில உடமையாளர்களாக, பெரும்பாலும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு நெருக்கமானவர்களாய் இருந்தவர்கள் இருந்தனர். எந்த உடைமைகளும் இன்றி உண்மையிலேயே விவசாயக் கூலிகளை ஒத்த மிக வறுமையான விவசாயிகளும் இருந்தனர். அவர்கள் தங்களது கூலி உழைப்பை முதலாளிகளிடமோ அல்லது மற்ற வசதியான விவசாயிகளிடமோ விற்க வேண்டியிருந்தது. 60,000 பெரும் நிலவுடைமையாளர்களிடம் இருந்த அளவு செல்வம் தான் 100 மில்லியன் விவசாயிகளிடம் இருந்தது, ஆகவே மிகவும் செல்வம்படைத்த நிலவுடைமையாளர்களின், பெரும்பாலும் பிரபுக்களின் அடுக்கு ஒப்பீட்டளவில் எவ்வளவு சிறியதாக இருந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம். 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் பிரபுத்துவம் கடின நிலைக்குள் விழுந்து கொண்டிருந்தது, தனது நிலங்களை முதலாளித்துவ வர்க்கத்திடம் விற்கத் தொடங்கியிருந்தது, இது ஏராளமான சமூக உரசலை ஏற்படுத்தியது. ஆயினும் கூட அவர்கள் விவசாயிகளின் பரந்த பெரும்பான்மையினரைக் காட்டிலும் மிகவும் வசதி படைத்தவர்களாகவே இருந்தனர்.
1861 இல், அடிமைகளுக்கு சமமாக இல்லையென்றாலும் கூட அவர்களைப் போன்ற நிலையிலேயே இருந்த ஏழைவிவசாயிகள் விடுதலை பெற்றனர், ஆனால் இந்த விடுதலை பெரும்பாலும் வடிவத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இது கடுமையான கடன் சுமைக்கு இட்டுச் சென்றது. இந்த “விடுதலை பெற்ற” விவசாயிகள் பலரது விடயத்தில் அவர்களது கடன்களைக் கட்டி முடிப்பதற்கே 48 ஆண்டுகள் ஆகின. அவர்கள் கனமான வரிவிதிப்புக்கு முகம்கொடுத்தனர், அத்துடன் அடிப்படையாக வறுமைத்துயரத்தில் வாழ்ந்து வந்தனர். நிலம் மறுவிநியோகம் செய்யப்படுவதும் கடனில் இருந்து நிவாரணம் கிடைப்பதும் அவர்களது இன்றியமையாத தேவையாக இருந்தது.
19 ஆம் நூற்றாண்டின் முடிவில் தொழிற்துறை ஓரளவுக்கு துரிதமாக வளர்ச்சி காண ஆரம்பித்திருந்தது. குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்தும், அதை விட சற்றுக் குறைந்த மட்டத்திற்கு ஜேர்மனியிடம் இருந்தும் கிடைத்த வெளிநாட்டுக் கடன்கள் மூலமாகவே அதற்கு பெரும்பாலும் நிதியாதாரம் கிடைத்து வந்தது. இது ட்ரொட்ஸ்கி “ஒன்றிணைந்ததும் சமச்சீரற்றதுமான வளர்ச்சி” என்று அழைத்த ஒரு நிகழ்வுபோக்கிற்கு இட்டுச் சென்றது. ரஷ்யா மேற்கில் இருந்த கூடுதல் முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு ரொம்பவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும், ஒரு பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு முதலாளி ரஷ்யாவில் முதலீடு செய்ய விரும்பினார் என்றால் (அவர்கள் விரும்பினார்கள்) மூலதனத்தையும் மிக நவீன தொழில்நுட்பத்தையும், மிகப் பெரும் தொழிற்சாலைகளையும், புத்தம்புதிய தொழிற்துறை எந்திரங்களையும் இன்னபிறவற்றையும் இறக்குமதி செய்து கொண்டார்கள். ஏனைய நாடுகள் கடந்து சென்ற பல இடைப்பட்ட கட்டங்களை தாவித் தாண்டி ரஷ்யா முன்னேறிச் சென்றது. இது 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்கின்றதான (இது அந்த அமயத்தில் இதுமாதிரியான தொழிற்சாலைகளை கட்டுவதற்கான முன்மாதிரியாக கொள்ளப்பட்ட மிக முன்னேறிய நாடான அமெரிக்காவில் இருந்ததை விடவும் அதிகமான எண்ணிக்கையாகும்) தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெருமளவில் குவிக்கப்படுகின்றதான நிலைக்கு இட்டுச் சென்றது. இவ்வாறாக அங்கே கிராமப்புறங்களில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பாட்டாளி வர்க்கம் நூற்பாலைகள், உலோகத் துறை, சுரங்கத் தொழில், மற்றும் புகையிலை மற்றும் இன்னபிற தொழிற்சாலைகளில் பணியிலமர்ந்தது. பொதுவாக நகரங்களின் சுற்றுவட்டப் பகுதிகளில் அமைகின்ற தொழிற்துறை மையங்களில் அது குவிக்கப்பட்டது. உள்நகரப் பகுதிகளில் இந்த தொழிற்சாலைகள் இயல்பான வளர்ச்சி காணவில்லை.
பீட்டர்ஸ்பேர்க், மாஸ்கோ, இவானோவோ, கியேவ் மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த பெரும் தொழிற்துறை மையங்களில் இருந்த 3 முதல் 5 மில்லியன் வரையான தொழிலாளர்கள் தேசிய வருவாயில் பாதியை, அதாவது, ஒட்டுமொத்த விவசாய துறையில் இருந்து வந்த வருவாய்க்கு சமமான தொகையை ஈட்டித் தந்து கொண்டிருந்தனர். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கமானது எண்ணிக்கையளவில் சிறியதாய் இருந்தபோதும், ரஷ்ய பொருளாதாரத்தில் அது வகித்த பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் சார்பியல்ரீதியான சமூக மற்றும் பொருளாதார பலம் மிகப்பெரியதாக இருந்தது.
மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பேர்க் இடையிலான முதல் புகையிரதப்பாதை 1851 இல் திறக்கப்பட்டது. அதைத்தவிர்த்து, ட்ரொட்ஸ்கி அழைத்தவாறாய் “முன்பிருந்த சாலையின்மை நிலைதான்” அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் சாலைகள் பரிதாபகரமான நிலையில் இருந்தன. வசந்தகாலம் அல்லது இலையுதிர் காலத்தில் மழை பெய்கின்ற சமயத்திலோ, அல்லது பனியுருகும் சமயத்திலோ, அவை கடந்து செல்ல முடியாதவையாக இருந்தன. சகதி உங்கள் இடுப்பு வரை வந்து விடும், நீங்கள் நகரக் கூட முடியாது. ஆகவே புகையிரதப் பாதைகள்தான் நகரங்களுக்கும் தொழில் மையங்களுக்கும் இடையிலான முக்கிய தொடர்புகளாய் இருந்தன.
புரட்சியின் ஆண்டான 1905 இல், இத்தகையதொரு அதிமுக்கியமான அரசியல் பாத்திரம் வகித்த புகையிரதப் பாதை தொழிலாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட 667,000 பேர் இருப்பர். இது ஒரு பாட்டாளி வர்க்கப் படையாக இருந்தது, நாம் பின்னர் காணவிருப்பது போல, இந்தப் படை ஒரு தீர்மானகரமான பாத்திரத்தையும் ஆற்றியது.
சாலைகள், கல்வி, மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றை தமது பொறுப்பில் கொண்டிருந்த ஸெம்ஸ்டோவ்ஸ் என்று அழைக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ளாட்சியின் வடிவங்களாக இருந்தவற்றில் அதைத்தவிர வேறொன்றையும் செய்யாத சில தாராளவாதிகள் இருந்தனர். இவர்களுக்கு நிறைய அரசியல் அதிகாரம் இருக்கவில்லை, அதிக எண்ணிக்கையிலும் இவர்கள் இருக்கவில்லை. பொதுவாக நகர்ப்புறங்களில் இருந்த குட்டி-முதலாளித்துவ தாராளவாதிகளும் எண்ணிக்கையளவில் சிறியளவே இருந்தனர், அத்துடன் குறைந்த அரசியல் செல்வாக்கையே கொண்டிருந்தனர்.
ஜாரைத் தூக்கியெறிந்து ஒரு முதலாளித்துவக் குடியரசை ஸ்தாபிப்பதற்கான புரட்சி பலராலும் எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்தது. சோசலிசத்தின் கனவுகள் எல்லாம், அதிலும் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் இருந்த பொருளாதாரரீதியாக அதிகம் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டால் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தன.
எவ்வாறாயினும், மார்க்சின் மூலதனம் ரஷ்ய மொழியில் 1872 இல் மொழிபெயர்ப்பானது (முதல் மொழிபெயர்ப்புகளில் இதுவும் ஒன்று). ஜாரிச தணிக்கைகளுக்கு அது தப்பித்து விட்டது என்றால் அதன் காரணம் அவர்களுக்கு அது பொருளாதாரப் புள்ளிவிவரத்தின் ஒரு வறட்டுத்தனமான தொகுப்பாய் தெரிந்தது.
1870 களில் ஆதிக்கம் செலுத்தியிருந்த ஜனரஞ்சக இயக்கமானது, சோசலிசத்தை, விவசாயிகளது கம்யூன் அடிப்படையில், நாட்டுப்புறங்களில் கூட்டு உடைமைத்துவத்தின் அடிப்படையில், சொல்லப்போனால் முதலாளித்துவ வளர்ச்சி என்பதையே ஒட்டுமொத்தமாக கண்டுகொள்ளாமல், அறிமுகம் செய்ய முனைந்தது. 1881 இல் அவர்கள் மார்க்சுக்கே எழுதிக் கேட்டனர்: “நாங்கள் ரஷ்யாவில் எதை எதிர்பார்க்கலாம்? விவசாயிகள் கம்யூனின் அடிப்படையில் சோசலிசத்துக்கு நம்பிக்கை கொள்வதற்கு நியாயமான அடிப்படை இருக்கிறதா?”
முதலாவது ரஷ்ய மார்க்சிச குழுவானது 1883 இல், ஜெனிவாவில், ஜோர்ஜி பிளெக்ஹானோவ் (புகைப்படத்தில் நடுவில் இருப்பவர்) தலைமையில், நாடு கடந்து வாழ்ந்து வந்த ஆறு புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர் முக்கியமான மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருந்தார், மார்க்ஸை பிரபலப்படுத்துகின்றதான படைப்புகளை எழுதினார், ஐரோப்பாவில் 1889 இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த இரண்டாம் அகிலத்தில் பங்குபெற்றார். அந்த ஆண்டில் பிளெக்ஹானோவ் புகழ்மிக்க இந்த வசனத்தைக் கூறினார்: “ரஷ்யாவில் புரட்சிகர இயக்கமானது ஒரு தொழிலாளர்’ இயக்கமாக வெற்றி காணும் இல்லையேல் அது வெற்றி காணவே போவதில்லை.” விவசாயிகளது மிகப் பரந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த ஒரு தொழிலாள வர்க்கத்தைக் குறித்த இந்த வசனமானது அவரது விமர்சகர்களில் பலருக்கும் அபத்தத்திற்கு நெருக்கமானதாகத் தோன்றியது.
1870கள் மற்றும் 1880களில் உருவாக்கப்பட்ட சிறிய தொழிலாளர்’ குழுக்களும் (வடக்கு லீக்; தெற்கு லீக்) அங்கே இருந்தன.
ஆயினும், அடுத்த பெரிய நடவடிக்கையாக பீட்டர்ஸ்பேர்க்கில் “தொழிலாள வர்க்க விடுதலைக்கான போராட்ட சங்கம்” 1895 இல் உருவாக்கப்பட்டது. விளாடிமிர் உலியனோவ் (பின்னாளில் லெனின், போல்ஷிவிக் கட்சியின் தலைவர்) மற்றும் இவுலி மார்ட்டோவ் (பின்னாளில் ஒரு முன்னணி மென்ஷிவிக்காய் ஆனவர்) ஆகியோர் அதன் இரண்டு முன்னிலை உறுப்பினர்களாய் இருந்தனர். (மார்ட்டோவ் புகைப்படத்தில் மேசையின் வலது பக்கத்தில் இருக்கிறார், லெனின் நடுவில் அமர்ந்திருக்கிறார்).
ரஷ்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பீட்டர்ஸ்பேர்க்கில் 1896 மே-ஜூனில் நடந்த நூற்பாலை தொழிலாளர்களின் போராட்டம், போராட்ட சங்கத்தின் அபிவிருத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. ஆகவே, இந்த போராட்ட சங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர், நூற்பாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களது ஒரு அலை நடந்தேறியது. இங்கேயிருக்கும் வரைபடம் பீட்டர்ஸ்பேர்க்கைக் காட்டுகிறது; ஸ்லைடில் தொழிற்சாலை அடையாளங்கள் காட்டப்பட்டுள்ளவை போராட்ட சங்கம் தொடர்புகள் கொண்டிருந்து அரசியல் வேலைகள் செய்து வந்த தொழிற்சாலைகளைக் காட்டுவதாகும். அது நூற்பாலைத் தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு சமானமாக இருந்தது. ரஷ்யாவில் தொழிலாளர்’ இயக்கத்தின் அபிவிருத்திக்கு மாபெரும் உத்வேகம் அளித்த மிகப்பெரும் வேலைநிறுத்தங்களில் ஒன்றாய் அது இருந்தது.
இது வெறுமனே ஒரு பீட்டர்ஸ்பேர்க் நிகழ்வாக இருக்கவில்லை; கறுப்புப் புள்ளிகளால் குறிக்கப்பட்டிருக்கும் பல்வேறு நகரங்களிலும் போராட்ட சங்கம் உறுப்பினர்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தது, அங்கே புத்தகங்களையும் துண்டறிக்கைகளையும் விநியோகித்துக் கொண்டிருந்தது, சீர்மையாய் வேலைசெய்து கொண்டிருந்தது. நான் பேச விரும்பும் விடயங்களில் ஒன்று: “தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைத்தது யார்? தொழிலாள வர்க்கம் எவ்வாறு புரட்சிக்கு வந்தது?”. இதுவிடயத்தில் 1890களில் செய்யப்பட்ட வேலையும், 1883 தொடங்கி பிளெக்ஹானோவினால் செய்யப்பட்ட வேலையும், பெரும் நகரங்களில் புரட்சியாளர்களால் செய்யப்பட்ட வேலையும் புரட்சிக்கு அழைத்துச் சென்றதில் முற்றிலும் இன்றியமையாத உட்கூறுகளாய் இருந்தன.
இந்த அத்தனை நடவடிக்கைகளுமே சட்டவிரோதமாய் இருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்த முடியாது. நீங்கள் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான மே தினத்தை கொண்டாட விரும்பினீர்கள் என்றால், ஒரு காட்டின் புதர்களுக்குள்ளோ ஒரு நதியின் கரைகளிலோ தான் கூட வேண்டியிருக்கும். ஒரு அரங்கை நீங்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாது, வேண்டுமானால் ஒரு காலி கிட்டங்கியை நீங்கள் கண்டுபிடிக்கலாம். போலிஸ் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். உளவாளிகள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். நீங்கள் பேச ஆரம்பித்தால், அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் குதிரைப்படையினர் எங்கிருந்தேனும் வந்து கொத்திக் கொண்டு போய்விடுவார்கள், போலிஸ் எங்கிருந்தேனும் வந்து பிடித்துக் கொண்டு போய் விடும். பல சமயங்களில் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடக்கும். நீங்கள் கைது செய்யப்படலாம். நீங்கள் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக இருந்தால், நீங்கள் உங்கள் வேலையை தொலைக்கக் கூடும். இந்த ஆரம்பகால புரட்சியாளர்களால் செய்யப்பட்ட வேலை அந்த சமயத்தில் முற்றிலும் சட்டவிரோதமானதாய் இருந்தது. லெனின் ஏற்கனவே 1895 டிசம்பரில் கைது செய்யப்பட்டு விட்டிருந்தார். நீங்கள் கைது செய்யப்படும்போது, இரகசிய போலிஸ் [Okhrana] உங்களுக்கென ஒரு விபரக்கோப்பினைத் திறந்து, உங்களின் ஒரு புகைப்படத்துடன் அந்தக் கோப்பினை அவர்களால் இயலுமான அளவிற்கு நெடிய ஒரு காலத்திற்கு பராமரித்து வைத்திருப்பர்.
1898 இல் ரஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர்கள் கட்சியின் (RSDRP) ஸ்தாபக காங்கிரஸ் மின்ஸ்க்கில் நடத்தப்பட்டது. மொத்தம் ஒன்பது பிரதிநிதிகள் இருந்தனர், சில நாட்களுக்குள்ளாகவே, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டனர்.
தொழிலாள வர்க்கத்தின் ஒரு தேசிய அளவிலான கட்சியைக் கட்டியெழுப்புவதில் உதவிசெய்வதற்கு 1900 டிசம்பரில், சமூக-ஜனநாயக செய்தித்தாளான இஸ்க்ரா [தீப்பொறி] வெளிநாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு ரஷ்யாவுக்குள் சட்டவிரோதமாய் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இது ஒரு பாரிய முயற்சியாகும். மூனிச்சில் அல்லது ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் ஒன்றில் அதை அச்சிட்டு, பின் அதை கணிசமான எண்ணிக்கையில் ரஷ்யாவுக்குள் கொண்டுவருவது என்பது மிகக் கடினமான வேலை. இரகசிய போலிஸ் எல்லா இடங்களிலும் இருந்தனர் என்பதில் இது இன்னும் சிக்கலாக்கப்பட்டிருந்தது. அவர்கள் சமூக-ஜனநாயக இயக்கத்திற்குள்ளும் ஊடுருவியிருந்தனர். ஒரு சில வருடங்களுக்கு இஸ்க்ராவை ரஷ்யாவுக்குள் கொண்டுவரும் வேலைக்குப் பொறுப்பாக இருந்தவரே ஒரு போலிஸ் முகவர் என்பது தெரிய வந்தது. எல்லாம் எங்கே செல்கிறது என்று அவருக்குத் தெரியும், எல்லா முகவரிகளும் அவருக்குத் தெரியும், அத்தனை தொடர்புகளும் அவருக்குத் தெரியும், அவர்தான் பத்திரிகையை நாட்டிற்குள் கொண்டுவருவதை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.
19 ஆம் நூற்றாண்டு முழுமையிலும் ரஷ்யா பிற்போக்குத்தனத்தின் ஒரு கோட்டையாக பார்க்கப்பட்டது என்றபோதிலும், ஐரோப்பாவின் மிகவும் உணர்திறன்மிக்க மார்க்சிஸ்டுகளில் ஒருவரான கார்ல் கவுட்ஸ்கி, இந்த பரந்த சாம்ராஜ்யத்தில் ஏதோ புதிதாக உதயமாகிக் கொண்டிருந்தது என 1902 இலேயே சூசகம் செய்தார். அப்போது அவர் எழுதினார், “மேற்கிலிருந்தான மிக ஏராளமான புரட்சிகர முன்முயற்சிகளை உட்கிரகித்திருக்கும் நிலையில், இப்போது ரஷ்யாவே கூட மேற்கிற்கான புரட்சிகர சக்திக்கான ஒரு மூலவளமாக சேவை செய்யத் தயாராய் இருக்கக் கூடும்.” [1]
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் (RSDRP) இரண்டாவது காங்கிரஸ் 1903 ஜூலை-ஆகஸ்டில் புரூசெல்ஸிலும் லண்டனிலும் நடத்தப்பட்டது (சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ரஷ்யாவில் அது நடத்தப்பட முடியவில்லை). இந்த காங்கிரசில் கட்சியில் ஒரு உடைவு தோன்றியது, அதில் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் பிரதான கன்னைகளாக இருந்தன. கட்சியின் பல அங்கத்தவர்களுக்கும், இந்த உடைவு ஒரு தற்காலிகமானதாயும், அதற்கான காரணங்கள் முற்றிலும் தெளிவற்றவையாகவும் தோன்றியது. ட்ரொட்ஸ்கியும் கூட, இறுதியில் இந்த அரசியல் பேதங்கள் வெற்றிகாணப்பட்டு கட்சி மறுஇணைவு காணச் செய்யப்பட முடியும் என்பதாய்தான் நினைத்தார்.
1905 இன் சமயத்தில் ரஷ்யாவில் இருந்த சூழலை விவரிக்கையில் இரண்டாம் காங்கிரசை ட்ரொட்ஸ்கி இவ்வாறு நினைவு கூர்ந்தார்:
கட்சி காங்கிரசின் சமயத்திலும் கூட, ரஷ்யாவின் ஒட்டுமொத்த தென் பகுதியுமே ஒரு மாபெரும் வேலைநிறுத்தத்தின் காலடியில் நின்று கொண்டிருந்தது. [1902 நவம்பரில் நடந்த பிரபலமான ரோஸ்டோவ் வேலைநிறுத்தம், மற்றும் தெற்கின் தொழிற்துறைப் பகுதிகள் மொத்தமும் நீட்சி கண்ட 1903 இன் ஜூலை நாட்கள் ஆகியவை பாட்டாளி வர்க்கத்தின் வருங்கால நடவடிக்கைகள் அனைத்துக்கும் கட்டியம் கூறின]. விவசாயிகளது கிளர்ச்சிகள் மேலும் மேலும் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுகொண்டிருந்தன. பல்கலைக்கழகங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. சொற்பகாலத்திற்கு, ரஷ்ய-ஜப்பான் போர் இந்த இயக்கத்தை நிறுத்தி வைத்தது, ஆனால் ஜாரிசத்தின் இராணுவப் படுதோல்வி புரட்சிக்கு ஒரு மிக சக்திவாய்ந்த நெம்புகோலை வழங்கியது. ஊடகங்கள் கூடுதல் துணிச்சல் பெற்றுக் கொண்டிருந்தன, பயங்கரவாத நடவடிக்கைகள் இன்னும் அடிக்கடி நிகழ ஆரம்பித்தன; தாராளவாதிகள் விழித்துக் கொண்டு அரசியல்ரீதியான விருந்துகளின் ஒரு பிரச்சாரத்தை தொடக்கினார்கள். புரட்சியின் அடிப்படைப் பிரச்சினைகள் துரிதகதியில் முன்னிலைக்கு வந்தன. [ட்ரொட்ஸ்கி, என் வாழ்க்கை, பக்கம். 165]
நான் இந்த உரையில் பயங்கரவாதம் குறித்து அதிகமாக பேசப்போவதில்லை, ஆனால், பயங்கரவாதிகள் குறித்து ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்: 1893க்கும் 1917க்கும் இடையில், பயங்கரவாதிகள் —இவர்களில் பெரும்பாலும் நரோத்நயா வோல்யா [மக்கள் விருப்பம்] போன்ற பழைய ஜனரஞ்சக இயக்கங்களில் இருந்து வந்தவர்கள், இவர்களில் பலரும் பின்னர் சோசலிச-புரட்சிக் கட்சியில் சென்று சேர்ந்து கொண்டார்கள்— கிட்டத்தட்ட 12,000 ஜாரிச அதிகாரிகளைக் கொன்றார்கள். ஒரு மாணவர் அல்லது ஒரு இளம் தொழிலாளி, ஒரு கவர்னரின் அருகில், அல்லது ஒரு போலிஸ் தலைவரின் அருகில் அல்லது ஒரு உயர் அதிகாரியின் அருகில் சென்று பின் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய படுகொலைகளாக இவை பெரும்பாலும் இருந்தன. சில சமயங்களில் அவர்கள் ஒரு வெடிகுண்டை வீசி, கொல்லவந்தவரையும் கொன்று தானும் அதில் செத்துப் போவார்கள். அவர்கள் சில மிகப் பிரபலமான மனிதர்களையும் கூட வீழ்த்தியிருந்திருக்கின்றனர். 1904 இல், அவர்கள் ரஷ்யாவில் போலிஸ் நடவடிக்கைகள் அத்தனைக்கும் பொறுப்பான உள்துறை அமைச்சர் பிளெவ் ஐ கொன்றார்கள். ஒரு இளம் சோசலிஸ்ட்-புரட்சியாளர் அவரை சுக்குநூறாக்கினார். ஜாரின் மாமா கொல்லப்பட்டார். ட்ரெபோவ் போன்ற இன்னும் பல பிரபலங்கள் கொலைமுயற்சிகளில் உயிர்தப்பினர். ஆயினும் அவர்கள் எப்போதும் படுகொலை செய்யப்படும் அச்சத்திலேயே வாழ்ந்து வந்தனர். போல்ஷிவிக் கட்சியும் மென்ஷிவிக்குகளும் தனிநபர் பயங்கரவாதத்தை ஒரு தந்திரோபாயமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஜாரை வீழ்த்தி விடும் என்று அவர்கள் நம்பவில்லை. ஒரு ஜாரிச அதிகாரியை கொன்றால், அவரை விட இன்னும் கொடூரமான இன்னொருவர் அந்த இடத்தில் பிரதியிடப்பட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் கூட நாம் பேசிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடந்த ஒரு பரவலான நிகழ்வுப்போக்காக இது இருந்துவந்தது.
1904 பிப்ரவரியில் வெடித்த ரஷ்ய-ஜப்பான் போரைக் குறித்தும் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். குறைந்தபட்சம் ஸ்பானிய-அமெரிக்க போர் (1898) —பிலிப்பைன்ஸ் மீது அமெரிக்கா நடத்திய மிருகத்தனமான படையெடுப்பும் இதில் அடங்கும்— மற்றும் தென் ஆபிரிக்காவில் நடந்த போயர் யுத்தம் (1899-1902) —இதில் பெரிய பிரித்தானியா தான் மிகப்பெரும் ஏகாதிபத்திய வேட்டையாளராய் இருந்தது— ஆகியவை முதலாக ஏகாதிபத்திய போர்களின் சகாப்தம் நடந்தேறிக் கொண்டிருந்தது.
இந்த சூறையாடல் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தின் ஏகாதிபத்திய போர்களில் இருந்து, தான் ஒதுக்கப்பட்டு விடுவதை ரஷ்ய சாம்ராஜ்யம் விரும்பவில்லை. ஒரு பெரிய ஆக்டோபஸ் தனது கரங்களின் பிடியில் ஏராளமான நாடுகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போலிருக்கும் இந்த சித்திரம் அந்த சமயத்தில் ஒரு இளம் ஜப்பானிய மாணவர் ரஷ்ய சாம்ராஜ்யத்தை எவ்வாறு கண்டார் என்பதை காட்டுகிறது. போலந்து மேல் இடதுபக்கம் இருக்கிறது. துருக்கி, பேர்சியா, தீபெத் மீதும் கரங்களின் பிடி இருக்கிறது. ஒரு கை சீனாவை பிடிக்கச் செல்வது போல் இருப்பது பச்சையில் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு கை கொரியாவை நோக்கியும், இன்னும் ஜப்பானையும் நோக்கியும் கூட நீண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஜார் நிக்கோலஸ் மனதில் என்ன எண்ணம் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சித்திரமும் இங்கே இருக்கிறது. மஞ்சூரியா, கொரியா மற்றும் சீனாவை மேலும் சுற்றிவளைக்க ரஷ்யா மற்றும் ஜப்பான் இரண்டுமே தங்களது திட்டங்களை கொண்டிருந்ததால் (இவற்றில் அவை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன), ஜார் போரில் ஜப்பானை தோற்கடிக்க விரும்பினார்.
ஜார் எளிதான வெற்றிகளை எதிர்பார்த்தார். இந்த சித்திரம் ஜார் நிக்கோலஸை கீழ் வலது பக்கம் காண்பிக்கிறது; அவர் ஒரு ஜப்பானிய சிப்பாயை ஊதித் தள்ளுகிறார்; ஜப்பானிய கடற்படை அழிக்கப்பட்டுள்ளது; பின் அடிவாங்கிய “ஜப்பானிய குழந்தைகளை” அங்கிள் சாம் மற்றும் ஜோன் புல் —அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குறிக்கிறது— சமாதானம் செய்கின்றனர், அவர்கள் உண்மையில் அப்போதைக்கு ஜப்பானை ஆதரித்துக் கொண்டிருந்தனர்.
இந்த திட்டங்களுக்கான தொடக்க களமாக, ரஷ்யா சீனாவிடம் இருந்து போர்ட் ஆர்தர் துறைமுகத்தை 1895 இல் பலவந்தமாக குத்தகைக்குப் பெற்று, அதனை கிட்டத்தட்ட அசைக்க முடியாத கோட்டையாகவும் கடற்படை தளமாகவும் மாற்றியது, வடகிழக்கு சீனாவில் ஹார்பின் நகர் வழியாக வருகின்ற ஒரு புகையிரதப் பாதையும் அதனுடன் இணைக்கப்பட்டது. சைபீரியா ஊடான புகையிரதப் பாதை இன்னும் முடிவடையாமல் இருந்தது, மஞ்சூரியா வழியான பாதை உத்தரவாதமளிக்கமுடியாது இருந்தது.
ஆயினும், போரின் ஆரம்ப நாட்களில் ஜப்பானிய கடற்படை ரஷ்ய போர்க்கப்பல்களின் மீது கடுமையான சேதத்தை விளைவித்தது. 300 நாட்களுக்கும் அதிகமான முற்றுகைக்குப் பின்னர், போர்ட் ஆர்தர் ஜப்பானிடம் வீழ்ந்தது, ரஷ்யாவின் பசிபிக் போர்க்கப்பல்களின் பெரும்பகுதி அந்த துறைமுகத்தில் அழிக்கப்பட்டது. அவை கடல் யுத்தத்தில் அழிக்கப்படவில்லை, மாறாக துறைமுகத்தை பார்த்தபடி இருக்கும் மலையில் இருந்தவண்ணம் குண்டுவீசி அழிக்கப்பட்டன.
இந்த அதிர்ச்சியூட்டும் போர்ட் ஆர்தர் சரணாகதி ரஷ்யாவில் கணிசமான கொந்தளிப்பை உண்டுபண்ணியது. ஜாரும் அவரது ஆயுதமேந்திய படைகளும் ஊழலடைந்தவர்களாகவும் போட்டித்திறனற்றவர்களாகவும் பார்க்கப்படும் நிலை அதிகரித்துச் சென்றது. தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் சில தாராளவாத வட்டங்களிலும் கூட போர் எதிர்ப்பு கிளர்ச்சி பரவியது.
1905 புரட்சிக்கு இட்டுச் சென்ற அடுத்த நடவடிக்கை சற்று சாதாரணமானதைப் போல தெரியும். பீட்டர்ஸ்பேர்கின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் புட்டிலோவ் தொழிற்சாலையில் நான்கு தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, 1905 ஜனவரி 3 அன்று ஒரு வேலைநிறுத்தம் வெடித்தது.
ஃபியோடோர் டான் என்ற ஒரு முன்னணி மென்ஷிவிக் எழுதியவாறாக: “முதலில் தொழிற்சாலை நிர்வாகத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நான்கு தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்ற ஒரு சாதாரணமான இலக்கை தனக்கு வரித்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தமானது, ஒரு வார காலத்திற்கெல்லாம், ஒட்டுமொத்த தலைநகரையும் பற்றிக் கொண்டு, பீட்டர்ஸ்பேர்க் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பிரம்மாண்டமான அரசியல் இயக்கமாக உருமாற்றப்படும் என்பதை எவரொருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.” [2]
ஒரு வாரத்திற்குள்ளாக, ஜனவரி 9 ஞாயிறன்று, ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது. பாதிரியாரான தந்தை கப்போன் [புகைப்படத்தின் நடுவில் சிலுவையுடன் இருப்பவர்] “தந்தை ஜார்” மன்னரிடம் நிவாரணம் கோரி ஏராளமான தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட 1,50,000 - 200,000 மனுதாரர்களைக் கொண்ட ஒரு பேரணிக்குத் தலைமை வகித்தார்.
அவர்களது கோரிக்கைகளில் பின்வருவன இடம்பெற்றிருந்தன: எட்டு மணி நேர வேலை; தொழிலாளர்களுக்கு ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் விவசாயிகளுக்கு நிலம்; பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம்; திருச்சபையையும் அரசையும் பிரிப்பது; போரை நிறுத்துவது; ஒரு புதிய பாராளுமன்றக் குடியரசுக்கான அடித்தளங்களை அமைக்கின்ற வகையில் ஒரு அரசியலமைப்பு சபையை உருவாக்குவது.
இந்த பேரணி ஜார் வசித்த குளிர்கால அரண்மனையின் முன்னால் இருந்த சதுக்கத்தை நெருங்கிய சமயத்தில், இரண்டாம் நிக்கோலஸ் அவர்களை வரவேற்கவில்லை, மாறாக ஜாரிச துருப்புகளும் போலிசும் சுட்ட துப்பாக்கி ரவைகளின் மழைதான் வரவேற்றது. பேரணி நகரின் பல இடங்களில் இருந்து கிளம்பி வந்து அனைத்தும் அரண்மனை சதுக்கத்தில் ஒன்றுதிரள்வதாய் இருந்தது. அதன்பின் கூட்டத்தின் மீது கொசாக்குகள் (குதிரைப் படையினர்) தாக்குதல் நடத்தினர், அவர்களது கூர்வாள்கள் பலரை வெட்டி வீழ்த்தின. பல பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காயினர். துல்லியமான எண்ணிக்கை இருக்கவில்லை, என்றாலும் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டார்கள் 2,000 பேர் காயமடைந்தார்கள் (நிச்சயம் அதற்கு மேல்தான் இருக்கும்). உடல்கள் பல இழுத்துச் செல்லப்பட்டன. போலிஸ் அவற்றை இராட்சத இடுகாட்டில் குவித்தது. பலியானவர்களின் துல்லியமான எண்ணிக்கை ஒருபோதும் கணக்கிடப்படவில்லை. அதன்பின் ஜனவரி 9 “இரத்த ஞாயிறு” என்றே அறியப்பட்டது.
இந்தப் படுகொலை ரஷ்யா முழுமையும் அதிர்ச்சி அலைகளைப் பரவ விட்டது. தொழிற்துறைப் பகுதிகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மாணவர்கள் பல பல்கலைக்கழகங்களை மூடினர். ஜோர்ஜியா, பாகு, ஒடீசா, இவானாவோ-வோஸ்னெஸென்ஸ்க், லோட்ஸ் (போலந்தில்), நிஸ்னி-நோவ்கோரோட், ஸோர்மோவோ, மற்றும் பல இடங்களில் பிரம்மாண்டமான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில இராணுவ பிரிவுகளிலும் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி —இவை பரவலாகவில்லை என்றாலும் கூட— 1905 ஆம் ஆண்டின் வசந்தகாலம், கோடைகாலம் மற்றும் இலையுதிர் காலம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.
தாராளவாத முதலாளித்துவ புத்திஜீவிகளது அங்கத்தவர்கள் ஜாரை ஒரு கொலைகாரர் என்று கூறிக் கண்டனம் செய்தனர். இந்த சித்திரம் அவர்களது ஒரு செய்தித்தாளான Osvobozhdenie ஐ சேர்ந்ததாகும், ஸ்ட்ரவ் இதன் ஆசிரியராய் இருந்தார், இவர் ஒரு உத்தியோகபூர்வ மார்க்சிஸ்டாக இருந்தபின்னர், பின் வலதுநோக்கி மாறி ஒரு முதலாளித்துவ தாராளவாதியாக ஆகியிருந்தார். “ரஷ்யாவில் புரட்சி” என்பதுதான் தலைப்புச் செய்தி; ஜாரை ஒரு கொலையாளியாக கண்டனம் செய்கின்ற, “மக்களைக் கொலை செய்பவர்” என்பதுதான் முன்னணிக் கட்டுரை, அதனைத் தொடர்ந்து ஜோன் ஜோரெஸ் (Jean Jaurès) எழுதிய “ஜாரிசத்தின் மரணம்” எனும் ஒரு கட்டுரை இருந்தது. தாராளவாதிகள் சர்வாதிபத்தியத்தை எதிர்த்தனர், ஆனாலும் அவர்களுக்கு ஜாரை வீழ்த்தக் கூடிய அளவுக்கு அரசியல் வலிமையோ விருப்பமோ இருக்கவில்லை.
அடுத்துவந்த மாதங்களில் பெரிய பெரிய வேலைநிறுத்தங்கள் எழுவதும் தாழ்வதுமாய் இருந்தது. நூற்றுக்கணக்கானவை இருந்தபோதும், குறிப்பாக ஒன்று குறிப்பிடத்தக்கதாகும்.
மாஸ்கோவில் இருந்து சுமார் 150 மைல்கள் தொலைவில் பெரிய பெரிய நூற்பாலைகள் இருக்கின்ற ஒரு நகரமான Ivanovo-Voznesensk இல், தொழிலாளர்கள் மிக நெடியதொரு வேலைநிறுத்தத்தில் இறங்கினர், இது 100க்கும் அதிகமான நாட்கள் நீடித்தது. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபெற்ற இந்த வேலைநிறுத்தத்தின் பாதையில், ஒரு புதிய ஒழுங்கமைப்பு வடிவம் பிறந்தது: வேலைநிறுத்தத்திற்கு தலைமை கொடுப்பதற்கும் கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைப்பதற்கும் ஒரு சோவியத் அல்லது கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அநேக கோரிக்கைகள் பொருளாதாரரீதியானவை என்றாலும், ஜாரை தூக்கிவீசுவது, ஒரு அரசியலமைப்பு சபையை உருவாக்குவது, மற்றும் பிற அரசியல் கோரிக்கைகளுக்கான அழைப்புகளும் அங்கே இருந்தன. பின்னதாய் இவானாவோ தொழிலாளர்கள் ரஷ்யாவின் முதல் சோவியத்தை, முதலாவது தொழிலாளர்களது சபையை உருவாக்கிய பெருமையை பெற்றனர். புள்ளிவிபரப்படியான இந்த உண்மை இருந்தாலும், 1905 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட இருந்த பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தினால் இதன் பாத்திரம் பெருமளவு பின்னால் தள்ளப்பட்டு விட்டது.
1905 மே மாதத்தில் லாத்வியா உள்ளிட சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவானோவோ வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில், மேலதிகமான கெட்ட செய்தி, போர் முனையில் இருந்து கிட்டியது. தனது கடற்படை ஜப்பானிய போர்க்கப்பல்களை விரட்டிவிடும் என்று ஜார் இன்னும் நம்பிக் கொண்டிருந்தார். ஆயினும், ரஷ்ய பசிபிக் போர்க்கப்பல்களில் அநேகமானவை அழிக்கப்பட்டு விட்டதனால், அக்டோபரில் பால்டிக் போர்க்கப்பல்களை போர்ட் ஆர்தர் நோக்கி பயணப்பட உத்தரவிடப்பட்டது. அக்டோபர் முதல் மே வரை மொத்தம் 33,000 கிலோமீட்டர்கள் அவை பயணம் செய்தன. பாதையில், அவர்கள் முக்தன் யுத்தத்தில் (1905 பிப்ரவரி-மார்ச்) நேர்ந்த இராணுவ நாசத்தை குறித்தும் கேள்விப்பட்டனர், அங்கே ரஷ்ய இராணுவம் 90,000 துருப்புகளை இழந்திருந்தது. கப்பல்களில் இருந்த வீரர்களிடையே மன உறுதி குறைந்து கொண்டிருந்த நிலையிலும், அவை தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தன; கலகம் செய்தால் திரும்பி விடலாம் என்று வலியுறுத்திக் கொண்டிருந்த பல மாலுமிகளை தூக்கிலிட வேண்டிய நிர்ப்பந்தம் கடற்படை தளபதி Rozhdestvensky க்கு ஏற்பட்டிருந்தது. முன்னேறிச் சென்றால் தங்கள் கதி படுமோசமாயிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஆயினும் முன்னேறும் உத்தரவை தளபதி பிறப்பித்தார், அவர்களில் பலரும் கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
கப்பல்களின் ஆரம்ப இலக்கான போர்ட் ஆர்தர் வீழ்ந்து விட்டதால், அவை வடக்கே விளாடிஸ்வோஸ்டோக்கை (Vladisvostok) நோக்கி பயணித்தன. ஜப்பானுக்கு அருகிலிருக்கும் ஒரு தீவான சுஷிமா நீரிணையை அவை நெருங்கிய சமயத்தில், ஜப்பானிய கடற்படை எதிர்கொண்டு அவற்றை அழித்தது. ரஷ்யா எட்டு போர்க்கப்பல்களை இழந்தது, இதில் பலவும் சிறிய கப்பல்கள், 5,000க்கும் அதிகமான பேர் அதில் இருந்தார்கள். பெரிய போர்க்கப்பல்களில் வெறும் மூன்று மட்டுமே உயிர்தப்பின. ஆக மே 27-28 அன்றான ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, ரஷ்ய போர்க் கப்பல் வரிசையே அடிப்படையாக அழிக்கப்பட்டிருந்தது. இதற்கு பேதமான வகையில் ஜப்பானியர்கள் மூன்று கடல்வெடிப் படகுகளையும் 116 பேரையும் இழந்தனர், இது ரஷ்யாவின் பெரும்பகுதி மக்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இப்படியொரு நாசம் எப்படி நடக்க முடிந்தது?
சுஷிமா படுதோல்வி குறித்து ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு துண்டறிக்கை பீட்டர்ஸ்பேர்க்கில் விநியோகிக்கப்பட்டது. அதில் இருந்து சில பகுதிகள்:
அவமானகரமான அந்த படுகொலை ஒழிக!
சுஷிமா தீவு யுத்தத்திற்குப் பின்னர், ரஷ்ய போர்க்கப்பல்களே இனி இல்லை என்றாகிவிட்டது. ரஷ்ய போர்க்கப்பல்கள் இழிவுகரமான வகையில் அழிந்து போயின, அவற்றுடன் ஜாரிசத்தின் குற்றங்களுக்குப் பலிகடாவான நமது ஆயிரக்கணக்கான சகோதரர்களும் பசிபிக் பெருங்கடலின் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டார்கள்.... இத்தனை பெரிய தொகை செலவழித்து வாங்கிய ரஷ்ய போர்க் கப்பல்கள் இனியும் இல்லை. அதன் ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு போல்ட்டும் உழைக்கும் மக்களின் இரத்தமும் வேர்வையும் ஆகும். ஒவ்வொரு போர்க்கப்பலுமே விவசாயக் குடும்பங்களின் பல ஆண்டுகால உழைப்பு. எல்லாம் போய் விட்டது, துரதிருஷ்டவசமான மனிதர்களும் அவர்களின் கரங்களால் உருவாக்கப்பட்ட பயனற்ற செல்வம் அத்தனையும் கடலின் ஆழத்தில் மூழ்கி விட்டது...
அவமானகரமான அந்தப் படுகொலை ஒழிக! போரின் முதல் நாளிலேயே அரசியல்-நனவுள்ள தொழிலாளர்களால் எழுப்பப்படுகின்ற இந்த அழைப்பானது, அனைத்து தொழிலாளர்கள் மத்தியிலும் அத்தனை நேர்மையான குடிமக்கள் மத்தியிலும் உறுதியான ஆதரவைக் காணட்டும்.
அந்த அவமானகரமான படுகொலையின் குற்றவாளியான ஜாரிச அரசாங்கம் ஒழியட்டும்!
இரத்தவெறி பிடித்த இந்த கொலைகாரர்கள் ஒழியட்டும்!
நாங்கள் அமைதியையும் சுதந்திரத்தையும் கேட்கிறோம்! [3]
இதற்கடுத்ததாய் பரவலான கவனத்தைப் பெற்ற நிகழ்வு என்றால் 1905 ஜூன் மாதத்தில் ஒடீஸாவில் பொட்டெம்கின் (Potemkin) போர்க்கப்பலில் நடந்த கலகமாகும், இது சேர்ஜி ஐசன்ஸ்டீனின் 1925 திரைப்படத்தின் மூலமாக அமரத்துவம் பெற்றது. 1905 முழுமையிலும், இராணுவம் மற்றும் கடற்படையின் பெரும்பாலானோர் ஜாருக்கு விசுவாசமாய் இருந்தனர்; கருங்கடல் போர்க்கப்பல் வரிசையின் மிகச் சிறந்த கப்பல்களில் ஒன்றில் ஒரு கலகம் என்ற உண்மையானது இராணுவப் படைகளில் இருந்த மற்றவர்களும் அதனைப் பின்பற்றக்கூடும் என்ற அச்சத்தை ஜாரிச வட்டாரங்களில் தோற்றுவித்தது. இந்தக் கப்பல் அந்தக் கூட்டத்தில் இருந்த மற்ற கப்பல்களில் இருந்து விலகி கான்ஸ்டான்ஸா என்ற ரோமானிய துறைமுகத்தை அடைந்ததை அடுத்து போடம்கினில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் உயிர்பிழைத்தனர். இவர்கள் போடெம்கினில் இருந்த கலகத்தின் உண்மையான தலைவர்களில் ஜாரினால் பிடித்து தூக்கிலிப்படுவதில் இருந்து தப்பிய சிலராவர்.
இந்த புரட்சிகர ஆண்டில் நடந்த அடுத்த முக்கியமான நிகழ்வான அக்டோபர் பொது வேலைநிறுத்தத்திற்கு நான் தாவவிருக்கிறேன். குறிப்பிட்ட மட்டத்திற்கு இந்த வேலைநிறுத்தம் திட்டமிடப்படாததாய் இருந்தது. தொழிலாளர்’ இயக்கத்தில் இருந்த கட்சியின் தலைவர்கள் 1906 ஜனவரியில், இரத்த ஞாயிறின் ஆண்டுதினத்தன்று ஒரு பெரும் வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் மாஸ்கோவில் ஒரு அச்சகத்தில் நடந்த ஒரு எளிய வேலைநிறுத்தம் விடயங்களை அதற்கும் வெகு முன்பாகவே இயக்கி விட்டிருந்தது.
ட்ரொட்ஸ்கி இந்த நிகழ்வுகளை தனது 1905 என்ற நூலில் பின்வருமாறு சுருக்கமாக கோடிட்டுக்காட்டினார்:
“மாஸ்கோவில் சிட்டின் அச்சக (Sytin’s print-works) நிறுவனத்தின் எழுத்துதொகுப்பாளர்கள் செப்டம்பர் 19 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் வேலைநேரத்தை குறைக்க கோரியதோடு, நிறுத்தல்குறிகளையும் சேர்த்து 1,000 எழுத்துக்கள் அமைப்பதற்கு கொடுக்கப்படும் கூலியை உயர்த்தித் தருமாறு கோரினர். இந்த சிறிய நிகழ்வு, அதிகமோ குறைவோ இன்றி, ரஷ்யா-முழுமையான அரசியல் வேலைநிறுத்தத்தை உசுப்பி விட்டது. நிறுத்தல்குறிகளுடன் தொடங்கிய வேலைநிறுத்தம் சர்வாதிபத்தியத்தை அதன் கால்களில் மண்டியிடச் செய்வதில் முடிந்தது... [பக்.85]
* செப்டம்பர் 24 மாலைக்குள்ளாக, ஐம்பது அச்சக நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கின... மாஸ்கோ அடுமனை (Bakery) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்...
* அக்டோபர் 2 பீட்டர்ஸ்பேர்க்கின் அச்சு ஒழுங்கமைக்கும் தொழிலாளர்கள்... தமது மாஸ்கோ தோழர்களுடனான ஐக்கியத்தை வெளிக்காட்டும் வகையில் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
* அச்சகத்துறை, பொறியியல் துறை, அலுமாரி தயாரிப்புத் துறை, புகையிலை, மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களது பிரதிநிதிகளின் ஒரு கூட்டம், மாஸ்கோ தொழிலாளர்களது ஒரு பொது கவுன்சிலை (சோவியத்) உருவாக்கும் ஒரு முடிவை ஏற்றுக் கொண்டது.
* அக்டோபர் 7 அன்று, மாஸ்கோ புகையிரதப் பாதை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
* அக்டோபர் 9 அன்று, பீட்டர்ஸ்பேர்க் புகையிரதப் பாதை தொழிலாளர்களும் இணைந்து கொண்டனர்: 8 மணி நேர வேலை, குடிமை சுதந்திரங்கள், அத்தனை அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு, மற்றும் ஒரு அரசியலமைப்பு சபை ஆகியவற்றை அவர்கள் கோரினர்.
* தனித்தனி துறைகளது பொருளாதார உரிமைகளுக்கு முன்னதாய் புரட்சிகர வர்க்க உரிமைகள் வைக்கப்பட்டன. அதன் உள்ளூர் மற்றும் துறைரீதியான எல்லைகளில் இருந்து உடைத்துக் கொண்டுவிட்ட பின்னர், இந்த வேலைநிறுத்தம், தான் ஒரு புரட்சி என்பதை உணரத் தொடங்கியிருந்தது — ஆகவே முன்கண்டிராத துணிச்சலை பெற்றது.
* புகையிரத துறையின் ஒட்டுமொத்த தொழிலாளர் படையும் -முக்கால் மில்லியன் பேர்- வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.
* அக்டோபர் 13 அன்று, பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர்கள்’ பிரதிநிதிகளது சோவியத் உருவாக்கப்பட்டது. [1905, பக்.87-92, பல இடங்களில்]
இந்த வேலைநிறுத்தத்தின் விரிவெல்லை பிரமிப்பூட்டுவதாய் இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய நகரமுமே மூடப்பட்டிருந்தது; புகையிரதத்துறை முடங்கி விட்டிருந்தது; தபால்தந்தி துறையும் அஞ்சல் சேவைகளும் தொழிலாளர்களது கரங்களில் இருந்தன.
சாம்ராஜ்யத்தின் மற்ற பகுதிகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன: அக்டோபரில் வார்சோவில் (போலந்து) நடந்தது; மத்திய ஆசியாவில் தாஷ்கண்ட், இன்றைய உஸ்பெகிஸ்தான்; மற்றும் பின்லாந்தில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த அத்தனை மூன்று பகுதிகளுமே நான் முன்னர் குறிப்பிட்ட ஜாரின் ரஷ்யமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்தன, ஆயினும், ஜார் எப்போதும் போல, அவசியமானால் கத்திமுனையிலும் கூட “எதேச்சாதிகாரம், தேசியவாதம் (அதாவது, மகா-ரஷ்ய பேரினவாதம்), மற்றும் பழைமைவாத திருச்சபை” என்ற ஜாரிசத்தின் உத்தியோகபூர்வ கொள்கைக்கே உறுதிபூண்டவராய் இருந்தார்.
பொது வேலைநிறுத்தமானது தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்தியது. ஆயினும் ஒரு வேலைநிறுத்தம் எவ்வாறு ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்ல முடியும்? ஒரு தேசிய அளவிலான எழுச்சியை யார் ஒழுங்கமைக்க முடியும் வழிநடத்த முடியும்? இந்த இடத்தில் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் உருவாக்கம் முக்கியமானதாய் அமைந்தது: வருங்காலத்தில் ஒரு தொழிலாளர் அரசாங்கம் எவ்வாறு அமைய முடியும் என்பதை கருவில் குறித்துக் காட்டுகின்ற விதமாய் அது இருந்தது.
அவ்வளவு நீண்ட காலத்திற்குத் தான் நீங்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்த முடியும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டுகிறார். நீங்கள் புகையிரத சேவையை மூடினால், போக்குவரத்து கிடையாது. தபால் தந்தி துறையை மூடிவிட்டால் - தகவல் பரிவர்த்தனை இல்லை. அடுமனைகள் மூடப்பட்டு விட்டால், உணவு தயாரிக்கப்பட முடியாது. எவ்வளவு நாள் மக்களால் தாக்குப்பிடிக்க முடியும்? உணவில்லாமல், தகவல் தொடர்பு இல்லாமல், நகரத்தில் இருந்து நகரத்திற்கு போக்குவரத்து இல்லாமல்.
சோவியத் என்பது என்னவாக இருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி தனது 1905 நூலில் பின்வருமாறு விவரிக்கிறார்:
பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர் பிரதிநிதிகளது சோவியத்தின் வரலாறு 50 நாட்களது [அத்தனை நாட்கள் தான் அது நீடித்தது] வரலாறே ஆகும். சோவியத்தின் அரசியலமைப்பு சபை கூட்டம் அக்டோபர் 13 அன்று நடத்தப்பட்டது. டிசம்பர் 3 அன்று, சோவியத்தின் ஒரு கூட்டம் அரசாங்கத் துருப்புகளால் மூடப்பட்டது. [அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்].
முதல் கூட்டத்தில் ஒரு சில பத்து பேர்களே பங்கேற்றனர்; நவம்பர் இரண்டாம் பாதிக்குள்ளாக பிரதிநிதிகளின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்திருந்தது, இவர்களில் 6 பெண்களும் அடங்குவர். [1905, பக்.250]
பிரதிநிதிகளைப் பொறுத்தவரை, இது முக்கியமானது: ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒவ்வொரு 500 தொழிலாளர்களுக்கும் ஒரு பிரதிநிதியை, ஒரு பிரதிநிதியை, தேர்ந்தெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது முற்றுமுதலாக கண்டிப்புடன் பின்பற்றப்படவில்லை, உதாரணத்திற்கு 20,000 தொழிலாளர்கள் கொண்ட ஒரு பெரிய தொழிற்சாலை இருக்கிறதென்றால், அங்கிருந்து ஒவ்வொரு 500 தொழிலாளர்களுக்கும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஒருவேளை நீங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலையில் 500 பேர் இல்லை, இருநூறு அல்லது முந்நூறு தொழிலாளர்கள் தான் இருப்பர் என்றால், பிரச்சினையில்லை, ஒரு பிரதிநிதியை அனுப்பலாம். ட்ரொட்ஸ்கி தொடர்கிறார்:
இவர்கள் 147 தொழிற்சாலைகள், 34 பட்டறைகள் மற்றும் 16 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்தனர். பிரதிநிதிகளின் பிரதான பகுதியினர் -351 பேர்- உலோகத் துறை தொழிலாளர்களில் இருந்து வந்திருந்தனர்; அவர்கள் சோவியத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றினர். நூற்பாலைத் துறையில் இருந்து 57 பிரதிநிதிகள் இருந்தனர், 32 பேர் அச்சுத் துறை மற்றும் காகிதத் தயாரிப்புத் துறையில் இருந்தும், 12 பேர் தொழிற்சாலை சாதாரண தொழிலாளர்களில் இருந்தும், 7 பேர் அலுவலகத் தொழிலாளர்கள் மற்றும் மருந்தாளுநர் துறையில் இருந்தும் இருந்தனர். செயற் குழு சோவியத்தின் அமைச்சரவையாக செயலாற்றியது. அது அக்டோபர் 17 அன்று உருவாக்கப்பட்டது, 31 பேர் அதில் இருந்தனர். தொழிற்சாலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 22 பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளில் இருந்தான 9 பிரதிநிதிகள் (சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டு கன்னைகளில் இருந்தும் 6 பேர் மற்றும் சோசலிஸ்ட்-புரட்சியாளர்கள் கட்சியில் இருந்து 3 பேர்).
...சோவியத் உழைக்கும் பரந்த மக்களை ஒழுங்கமைத்தது, அரசியல் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் வழிநடத்தியது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கியது (இது இன்றியமையாததாக இருந்தது), அத்துடன் கலவர படுகொலைகளுக்கு எதிராக மக்களைப் பாதுகாத்தது. [1905, பக். 250-25] [இது நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஜார் தனது பிற்போக்குப் படைகளை ஒழுங்கமைக்கத் தொடங்கியிருந்தார், கலவரப் படுகொலையாளிகளை தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.]
சோவியத்துக்கு “தொழிலாளர்களது’ அரசாங்கம்” என்ற பெயரை ஒரு பக்கம் தொழிலாளர்கள் தாங்களாகவே கொடுத்தனர், இன்னொரு பக்கத்தில் பிற்போக்கான ஊடகங்களும் கொடுத்தன என்பது சோவியத் உண்மையாகவே கருவில் ஒரு தொழிலாளர்களது’ அரசாங்கமாக இருந்தது என்ற உண்மையின் ஒரு வெளிப்பாடாய் இருந்தது. தொழிலாள வர்க்கப் பகுதிகளது புரட்சிகர வலிமையால் உறுதியளிக்கப்பட்ட அளவுக்கான சக்தி, சோவியத்தின் சக்தியாக இருந்தது; அதிகாரம் இன்னும் இராணுவ-அரசியல் முடியாட்சியின் கைகளில்தான் இருந்து வந்தது என்ற மட்டத்திற்கு, அது அதிகாரத்திற்காய் போராடியது. [1905, பக் 251]
இந்தப் போராட்டத்தில் சில தெரிந்து கொள்ளப்பட வேண்டியிருந்தது. சோவியத் எவ்வாறு ஜாரிசப் படைகளால் சகித்துக் கொள்ளப்பட முடிந்தது? அக்டோபர் 17 அன்று, ஜார் தனது பிரபலமான (அல்லது இழிபுகழான) அறிக்கையை வெளியிட்டார், பிரபுத்துவத்தை பொறுத்தவரை இது பொது வேலைநிறுத்தத்திடம் அதிர்ச்சிகரமாய் சரணடைந்ததாக இருந்தது, ஆனால் அது ஒருவகையான ஏமாற்றுவேலையாகவும் இருந்தது.
அறிக்கைக்கு இரண்டு நாள் முன்பாக, பரந்த மக்களை ஒடுக்குவதற்குப் பொறுப்பாயிருந்த ஜாரின் உள்துறை துணை அமைச்சர் ட்ரெபோவ், வேலைநிறுத்தம் செய்பவர்களை சுட்டுத்தள்ள பரிந்துரைத்தார். எதையும் விட்டுத்தரக் கூடாது, வேலைநிறுத்தம் செய்பவர்களை அப்படியே சீவித் தள்ள வேண்டும் என்றார் அவர். அடுத்த நாளில் அவர் மறுபரிசீலனை செய்தார். ஆனால் அக்டோபர் 15 அன்று, ஒருவராலும் மறக்க இயலாத அந்த இழிபுகழ் பெற்ற அறிக்கையை அவர் விடுத்தார்: “வெற்றுத்தோட்டாக்கள் வேண்டாம் [துருப்புகளுக்கு வெற்றுத்தோட்டாக்களை கொடுக்க வேண்டாம்]. தோட்டாக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம்.”
பொதுவாக போலிஸ், அல்லது இராணுவம், அல்லது குதிரைப்படைகள் வேலைநிறுத்தம் செய்வோரை அல்லது ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ளும்போது என்ன நடந்ததென்றால், அவர்கள் சிலசமயம் சவுக்கால் விளாசுவார்கள். சில சமயம் கூர்வாள் கொண்டு தாக்கி ஒருசிலரை வெட்டி வீழ்த்துவார்கள். அதன்பின் பொதுவாக அவர்கள் கூட்டத்தை அச்சுறுத்துவதற்காக, வெற்றுத்தோட்டாக்களை கொண்டு ஒரு சில சுற்றுகள் சுடுவார்கள். கூட்டம் கலையாது போனால், அதற்குப் பின்னர்தான் அவர்கள் உண்மையான தோட்டாக்களை நிரப்பி சுடுவார்கள். ட்ரெபோவின் பரிந்துரை என்னவாக இருந்ததென்றால்: மற்ற எச்சரிப்பு தாக்குதல்கள் எதுவும் வேண்டாம், நேராக உண்மையான குண்டுகளை சுடுங்கள் என்றது.
ஜார் தனது அறிக்கையை அச்சிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பீட்டர்ஸ்பேர்க் சோவியத்Izvestiia என்ற அதன் சொந்த செய்தித்தாளை வெளியிட்டது. அது எவ்வாறு அச்சானது என்பதைக் குறித்து ஒரு சில வார்த்தைகள். அது சட்டவிரோதமானது, அப்படியானால் எப்படி அதைச் செய்தார்கள்? அவர்களுக்கென்று சொந்த அச்சகம் இருக்கவில்லை, ஏனென்றால் அதை ஜாரிச போலிஸ் உடனே கைப்பற்றி விட்டிருக்கும். ஆகவே சோவியத், ஆயுதமேந்திய தொழிலாளர்களின் ஒரு குழுவை ஏற்பாடு செய்திருந்தது, அவர்கள் ஒரு அச்சகத்திற்கு செல்வார்கள், நகரில் மூன்று அல்லது நான்கு முதலாளித்துவ செய்தித்தாள்கள் அல்லது ஜாரிச செய்தித்தாள்களை அச்சிடும் ஒரு அச்சகமாய் அது இருக்கும். அவர்கள் அதைக் கைவசம் கொண்டுவருவார்கள், பெரும்பாலும் இராத்திரி பத்து மணி போல, ஆயுதபாணியாக சென்று, “அடுத்த சில மணி நேரங்களுக்கு இந்த அச்சகம் எங்களுடையது. நீங்கள் எங்கள் பத்திரிகையை அச்சிடப் போகிறீர்கள்” என்று சொல்வார்கள். அச்சு கோர்ப்பவர்களில் பலரும் அனுதாபமிக்கவர்களாக இருப்பார்கள், அவர்கள் இதற்கு மகிழ்வுடன் ஒத்துழைப்பார்கள், ஆனால் சொல்வார்கள்: “எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருங்கள், நாங்கள் பலவந்தமாக இதைச் செய்ய வைக்கப்பட்டோம் என்று சொல்லுங்கள்” என்பார்கள். அங்கே அவர்கள் தங்கள் பத்திரிகையான Izvestiia ஐ அச்சிடுவார்கள், அடுத்த சில நாட்களுக்குப் பின்னர், அவர்கள் இன்னொரு அச்சகத்தை கைப்பற்றுவார்கள். அவர்களால் தங்களுக்கென்று சொந்த அச்சகம் வைத்திருக்க இயலாது.
ஜாருக்கும் கூட அச்சிடுவதில் பிரச்சினைகள் இருந்தது. அச்சகங்கள் அனைத்தும் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தன, வேலைநிறுத்தம் செய்த அச்சகத்தினர் ஜாரின் —மகா ஜார், அனைவரையும் ஆட்சிசெய்பவர்— அறிக்கையை அச்சிட மறுத்தனர். ஆயினும் அது அச்சானது. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு இராணுவம் அழைக்கப்பட்டு ஆவணம் அவசரகதியில் அச்சிடப்பட்டது. இதுதான் அவரது அறிக்கை.
ஜார் சில தேர்தல் உரிமைகளுக்கும் மிகவும் வரம்புக்குட்பட்ட அதிகாரங்களுடனான ஒரு சட்டமன்ற அவையாக ஒரு நாடாளுமன்றத்திற்கும் (Duma) இட்டுச்செல்லக் கூடிய வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதியளித்தார். எதிர்வினைகளும் கலவையாக இருந்தன. சில தொழிலாளர்கள் ட்ரெபோவின் இரத்தம்தோய்ந்த கையுடன் அந்த அறிக்கை இருக்கின்றதான ஒரு சுவரொட்டியை அச்சிட்டு, விரைவாய் அதைக் கண்டனம் செய்தனர். பீட்டர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அடுத்த நாளில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.
ஆயினும், தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் உற்சாகமாய் இருந்தது. ஒரு முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்ததாக அவர்கள் கருதினர்.
பீட்டர்ஸ்பேர்க் சோவியத் ஒரு மாறுபட்ட பிரதிபலிப்பை கொண்டிருந்தது:
”ஆக நம்மிடம் ஒரு அரசியல்சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஒன்றுகூடும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் நமது கூட்டத்தை துருப்புகள் சுற்றிவளைத்து நிற்கின்றன. நமக்கு பேச்சுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் தணிக்கை என்பது இன்னும் மீற முடியாததாக இருக்கிறது. நமக்கு கல்வி சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பல்கலைக்கழகங்கள் துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமக்கு தனிமனித சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆயினும் சிறைகள் சிறைக்கைதிகளால் நிரம்பிவழியுமளவுக்கு நிரப்பப்பட்டுள்ளன. நமக்கு விட்டே [தாராளவாத சீர்திருத்தங்களை நிறைவேற்றவிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த பிரதமர்] கொடுக்கப்பட்டுள்ளார், ஆனால் ட்ரெபோவும் [கொலைகாரர்] நம் முன் நிறுத்தப்படுகிறார். நமக்கு அரசியல்சட்டம் கொடுக்கப்படுகிறது, ஆனால் எதேச்சாதிகாரம் தொடர்கிறது. எல்லாமே கொடுக்கப்பட்டது போலிருக்கிறது, ஆயினும் எதுவுமே கொடுக்கப்பட்டிருக்கவில்லை.” [1905, பக். 123]
இந்த நிலைமைகளின் கீழ் சில தெரிந்துகொள்ளப்படவிருந்தன. ஜாரிச ஆட்சி ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கு தனது படைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தது.
ஜாரின் அறிக்கை விடுக்கப்பட்டதற்குப் பின் ஒருநாள் போல இருக்கும், கலவரப் படுகொலைகள் தொடங்கப்பட்டன, இவற்றில் மிகப் படுபயங்கரமானது கருங்கடலின் கடல்துறைமுகமான ஒடீசாவில் நடந்தது. அக்டோபர் 18-20 வரை மூன்று நாட்களுக்கு கறுப்பு நூற்றுவர் (Black Hundred) கும்பல் யூதப் பகுதிகளில் சுற்றிவந்தபடி மக்களை அடிப்பது, கொல்வது, சித்திரவதை செய்வதும், வீடுகளையும் கடைகளையும் சூறையாடுவதுமாய் இருந்தது. நானூறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 50,000 பேர் தங்களது வீடுகளை விட்டு ஓடினர். யூதப் பாதுகாப்பு படைகள் தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு, அது இந்த படுகொலைகளைக் குறைத்தது என்றாலும் நிறுத்தி விட முடியவில்லை. இந்த புகைப்படம் அத்தகைய பாதுகாப்புப் படையில் ஒன்றைக் காட்டுகிறது, இதில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை பாதுகாக்கும்போது உயிரிழந்த அவர்களது சில தோழர்களுடன் அவர்கள் நிற்கின்றனர்.
விடயங்கள் உண்மையாகவே கைமீறிப் போய்க் கொண்டிருந்தன. மாஸ்கோ வேலைநிறுத்தம் 19ஆம் தேதியன்று முடிவடைந்தது. பீட்டர்ஸ்பேர்க் சோவியத் தனது வேலைநிறுத்தத்தை அக்டோபர் 21 அன்று முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தது.
ஆயினும், பீட்டர்ஸ்பேர்க் சோவியத் தனது பணியைத் தொடர்ந்தது. பரவலாய் வாசிக்கப்பட்ட Izvestiia செய்தித்தாள் தவிர, நசாலோ (தொடக்கம்) என்ற ஒரு புதிய செய்தித்தாளும் தோன்றத் தொடங்கியது. அதன் தலைப்பு பகுதி அது ரஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர்கள்’ கட்சியின் ஒரு செய்தித்தாள் என பெருமிதத்துடன் பிரகடனம் செய்தது. அதன் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகவும், கிட்டத்தட்ட அதன் ஆசிரியராகவும், லியோன் ட்ரொட்ஸ்கி இருந்தார், அவர் அக்டோபர் 14 அன்று, சோவியத்தின் இருப்பின் இரண்டாவது நாள் அன்று, பின்லாந்தில் இருந்து பீட்டர்ஸ்பேர்க் திரும்பியிருந்தார். பார்வஸ், மார்டோவ், டான், மற்றும் பலர், முக்கியமாக மென்ஷிவிக் எழுத்தாளர்கள் மற்ற பங்களிப்பாளர்களாய் இருந்தனர். இந்த செய்தித்தாளின் 14 பதிப்புகள் மட்டுமே கடைசிவரை அச்சாயின, ஏனென்றால் டிசம்பர் 3 அன்று சோவியத் கைது செய்யப்பட்டதுடன் இது மூடப்பட்டது.
ட்ரொட்ஸ்கி பின்லாந்தில் இருந்து வந்துசேர்ந்தார் என்று கூறினேனல்லவா, பிப்ரவரியில் புரட்சிகர நிகழ்வுகள் கட்டவிழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்து கியேவ் திரும்பியிருந்தார். பின் பீட்டர்ஸ்பேர்க் வந்துசேர்ந்தார். பீட்டர்ஸ்பேர்க்கில் மே தினத்தன்று, அங்கே ஒரு மே தின ஆர்ப்பாட்டம் நடந்தது, அதில் அவரது மனைவி நத்தாலியா கைது செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கி தப்பியோட வேண்டியதானது. அவர் பின்லாந்தில் ஒரு குக்கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் இருந்த சமயத்தில், தனது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் பிரதான கூறுகள் பலவற்றில் அவர் வேலைசெய்தார். பீட்டர்ஸ்பேர்க் சோவியத், அக்டோபர் 13 அன்று உருவாக்கப்பட்டது. மறுநாள் ட்ரொட்ஸ்கி அங்கேயிருந்தார்.
சோவியத் பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்ட ஒரு முடிவை எடுத்தது: தங்களது சொந்த முன்முயற்சியில் அத்தனை தொழிற்சாலைகளும் ஆலைகளும் எட்டுமணி நேர வேலையை அறிமுகம் செய்ய அது அழைப்பு விடுத்தது. இந்த உரிமையை யாரிடம் இருந்தும் அவர்கள் கொடுக்கப் பெறவில்லை. எட்டுமணி நேரம் முடிந்ததும், அவர்கள் கருவிகளை வைத்துவிட்டு கிளம்ப ஆரம்பித்து விடுவார்கள். முதலாளிகளும், தலைமை அதிகாரிகளும், முதலாளித்துவ ஆலை உரிமையாளர்களும் ஒரு பாரிய கதவடைப்பைக் காட்டி அச்சுறுத்தினர். சற்று காலத்திற்கு, தொழிலாளர்கள் பின்வாங்க வேண்டியதானது. ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்: “மூலதனத்தின் ஒழுங்கமைந்த எதிர்ப்புக்கு முகம்கொடுத்த நிலையில், உழைக்கும் பரந்த மக்கள், ஒரு எழுச்சியின் தவிர்க்கவியலாத தன்மை, ஆயுதங்களுக்கான அத்தியாவசியத் தேவை எனும் புரட்சியின் அடிப்படை பிரச்சினைக்கு மீண்டும் திரும்பினர்.” [1905, பக். 186] அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? அதைப் பேசியாக வேண்டியிருந்தது.
நான் பேசவிருக்கும் 1905 இன் கடைசிக் காலகட்டம் மாஸ்கோவில் டிசம்பரில் நடைபெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியாகும்.
டிசம்பர் 4 அன்று, மாஸ்கோ சோவியத், பார்வஸ் எழுதிய ஒரு “நிதி அறிக்கையை” வழிமொழிந்தது, இந்த அறிக்கை ஜாரின் வரிவிதிப்பு முறையையும் வங்கி அமைப்புமுறையையும் அச்சுறுத்தியது. டிசம்பர் 6 அன்று, மாஸ்கோ பட்டாளத்தில் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டதை கண்ட நேரடியான தாக்கத்தில், சோவியத் —இந்த சமயத்திற்குள்ளாக அது மாஸ்கோவில் 100,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்தது— புரட்சிகரக் கட்சிகளுடன் இணைந்து அடுத்த நாள் டிசம்பர் 7 அன்று மாஸ்கோவில் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை பிரகடனம் செய்வதற்கும், அந்த வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியாக மாற்றுவதற்கு தன்னால் இயன்ற சிறந்த முயற்சியை மேற்கொள்வதற்கும் முடிவுசெய்தது. மாஸ்கோ Izvestiia அறிவிப்பு பின்வருமாறு கூறியது:
மாஸ்கோவில் டிசம்பர் 7 புதன்கிழமை மதியம் 12 மணி முதலாக பொது வேலைநிறுத்தத்தை அறிவிப்பதற்கும், அதனை ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியாக மாற்றுவதற்கும் மாஸ்கோ தொழிலாளர்கள் பிரதிநிதிகள் சோவியத்தும், ரஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர்கள் கட்சியின் கமிட்டி மற்றும் குழுவும், மற்றும் சோசலிச-புரட்சியாளர்கள் கட்சியின் கமிட்டியும் உத்தரவிட்டுள்ளன.
முதல் நகரமாக மாஸ்கோ வேலைநிறுத்தத்தில் இறங்கியது (7 ஆம் தேதியன்று). மிகப்பெரும் மையங்களை மட்டுமே குறிப்பிடுவதானால் அடுத்தநாளில், பீட்டர்ஸ்பேர்க், மின்ஸ்க் மற்றும் டகன்ரோக் ஆகிய நகரங்கள் சேர்ந்து கொண்டன. 10வது நாளில் டிஃப்ளிஸ் இணைந்தது; 11வது நாளில் வில்னா; 12வது நாளில் கார்கோவ், கியேவ், மற்றும் நில்னிய் நோவ்கோரோட்; 13வது நாளில் ஒடீஸா மற்றும் ரிகா; 14வது நாளில் லோட்ஸ்; மற்றும் 15வது நாளில் வார்சோவும் இணைந்தது. மொத்தத்தில் இந்த வேலைநிறுத்தத்தில் அக்டோபரில் 39 நகரங்கள் இணைந்திருந்த நிலையில் இப்போது 33 நகரங்கள் இணைந்திருந்தன.
ஆயினும், மாஸ்கோ தான் டிசம்பர் இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது. சுமார் 100,000 பேர் முதல் நாளிலேயே வேலையை நிறுத்தி விட்டனர். இரண்டாம் நாளில், வேலைநிறுத்தம் செய்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஆக உயர்ந்தது; மாஸ்கோ வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாய் மாறி மாஸ்கோவைச் சுற்றிய கிராமப்பகுதிகளில் இருந்த தொழிற்சாலைகளுக்கும் பரவியது. எல்லா இடங்களிலும் பெரிய பெரிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. விரைவிலேயே தடையரண்கள் எழுப்பப்பட்டன, சண்டை சூழ்ந்தது. கிளர்ச்சி ஆரம்பித்து விட்டிருந்தது.
இங்கே விவரிக்கப்பட்ட தடையரண்கள் பெரும்பாலும் அவற்றின் பின்னாலிருக்கும் ஆயுதமேந்திய தொழிலாளர்களுக்கு மறைப்பாக இருந்தவையல்ல, மாறாக ஜாரிச துருப்புகள் நகரத்திற்குள் பரவாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டவையாய் இருந்தன. சில தடையரண்கள் கிளர்ச்சியாளர்களால், தொழிலாளர்களால் காவல்காக்கப்பட்டன, ஆயினும் அவை சிறுபான்மையாய் இருந்தன.
அந்த சண்டை எவ்வாறிருந்தது? தொழிலாளர்களின் தரப்பில், இது தடையரண்களுக்கு பின்னாலிருந்து பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பதைக் காட்டிலும் கெரில்லா யுத்தத்தை ஒத்ததாகவே இருந்தது. சண்டை பெரும்பாலும் எவ்வாறு நடந்தது என்பதை ட்ரொட்ஸ்கி விவரிக்கிறார்.
பலவற்றில் இங்கே ஒரு உதாரணம். ஒரு கட்டிடத்தைப் பிடித்திருந்த 13 ஆயுதமேந்திய தொழிலாளர்களின் [druzhinniki] ஒரு குழு தங்கள் வசம் 3 துப்பாக்கிகள் மற்றும் 2 எந்திரத் துப்பாக்கிகள் கொண்டிருந்த நிலையில் 500 அல்லது 600 சிப்பாய்களின் துப்பாக்கிச்சூட்டை நான்கு மணி நேரத்திற்கு தாக்குப்பிடித்தது. அவர்களிடம் வெடிமருந்து முழுக்க தீர்ந்து துருப்புகளுக்கு பெரும் சேதத்தை விளைவித்த பின்னர், druzhinniki ஒரு சின்ன காயம் கூட இல்லாமல் தப்பித்து விட்டனர்; அந்த சிப்பாய்களோ நகரின் பல பகுதிகளையும் ஆட்டிலறி நெருப்பைக் கொண்டு அழித்தனர், ஏராளமான மர வீடுகளுக்கு தீயிட்டனர், விரல் விட்டு எண்ணக்கூடியதையும் விட அதிகமான மிரட்சி கண்டிருந்த குடிமக்களை கொன்றனர், எல்லாம் அந்த ஒரு டஜன் புரட்சியாளர்கள் பறந்தோடுவதற்குத் தான் உதவியது. [1905, பக் 241]
இதுதான் அடிப்படையாக தொழிலாளர்கள் சண்டையிட்ட விதமாக இருந்தது. அவர்கள் -இரண்டு, மூன்று, அல்லது நான்கு பேர் கொண்ட- சிறு குழுக்களாய் பிரிந்து கொள்ள வேண்டியது, வராந்தாக்களில் இருந்து சுட வேண்டியது, மேலிருந்தபடி சுட வேண்டியது, விரைவாக நகர்ந்து செல்ல வேண்டியது, ஒரே இடத்தில் ரொம்ப நேரம் நிற்கவே கூடாது.
கிளர்ச்சியை கைவிட உத்தரவிட்ட டுபஸோவ், மாஸ்கோ பட்டாளத்தில் உள்ள 15,000 பேரில் வெறும் 5,000 பேர் மட்டுமே நடவடிக்கைக்குள் இறக்கி விடப்பட முடியும் என பீட்டர்ஸ்பேர்க்கிடம் தெரிவித்தார். மற்றவர்களை நம்பமுடியாதென்றார். ஜாரை நேரடியாக சந்தித்த அவர், ஜார் கூடுதல் துருப்புகளை அனுப்பவில்லை என்றால் “எதேச்சாதிகாரம் பாதுகாப்பாக உள்ளபடியே இருக்கும்” என்று தன்னால் உத்தரவாதமாகக் கூற முடியாது என்று அறிவித்தார். உடனே சிறப்புவாய்ந்த செமியோனோவ்ஸ்கி காவலர்களது படையணி மாஸ்கோவுக்கு அனுப்பப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் அவர்கள் கிட்டத்தட்ட தடுத்து நிறுத்தப்பட்டார்கள். புகையிரதத்துறை தொழிலாளர்கள் சில பகுதிகளில் தண்டவாளங்களை பிய்த்துப் போட முயன்றனர், ஆனாலும் அந்த முயற்சியை இராணுவம் தடுத்து விட்டது, ஆகவே துருப்புகள் இலக்குக்கு பயணப்பட்டன.
16 ஆம் தேதி, சோவியத்தும் கட்சியும் வேலைநிறுத்தத்தை 19 ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுத்தன.
மாஸ்கோ எழுச்சியில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருந்தனர் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலானோர் காயமடைந்திருந்தனர். பல நூறு சிப்பாய்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
சண்டையின் ஒரு சமயத்தில், பிரெஸ்னயா பகுதியில், தொழிலாளர்கள் காலை ஆறு மணி முதலாய் மாலை நான்கு மணி வரையிலும், ஒரு நிமிடத்திற்கு ஏழு ஷெல்கள் என்ற வீதத்தில் இடைவிடாத ஆட்டிலறி வீச்சுக்கு முகம்கொடுத்தனர். ஆயுதமேந்திய சில தொழிலாளர்கள் உள்ளே இருந்தனர் என்றாலும், சாதாரண மக்கள் நிரம்பியிருந்த ஒரு நகர்ப்புற பகுதியில் அது என்னவிதமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம். இந்த குண்டுவீச்சில் அந்த பகுதியும், அங்கிருந்த சில தொழிற்சாலைகளும், முழுதான குப்பைகூளங்களாய் ஆகிப் போனது.
மாஸ்கோவில் நடந்த எழுச்சி மிகப்பெரியது என்றாலும், மற்ற பகுதிகளும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டன. ஒடீஸா, நோவோரோஸ்ஸிக், கோஸ்ட்ரோமா, மற்றும் இதுபோன்று இன்னும் பல நகரங்களிலும் சோவியத்துகள் தோன்றின.
1905 புரட்சியின் மாபெரும் விஸ்தீரணத்தை இந்தப் படத்தில் இருந்து காணலாம். கறுப்புப் புள்ளிகள் அனைத்தும் கிளர்ச்சியிலோ அல்லது ஒரு பொது வேலைநிறுத்தம் நடத்திக் கொண்டோ இருந்த நகரங்களைக் குறிக்கின்றன. புகையிரதத்துறை மிகப்பெருமளவில் பங்குபெற்றிருந்தது.
1905-1907 கால ஜாரின் இரத்தக்களரிமிக்க ஒடுக்குமுறை என்னும் பாரிய ஒடுக்குமுறையின் ஒரு காலகட்டம் சூழ்ந்தது. குறிப்பாக புகையிரதத்துறை தொழிலாளர்கள் ஒரு முக்கியமான பங்கு வகித்த புகையிரத பாதைகளின் வழியாக ஜார் தண்டனை அளிக்கும் குழுக்களை அனுப்பினார். துருப்புகள் ஒரு புகையிரத நிலையத்தில் வந்து இறங்கும், இறங்கியதும் கண்ணில் காணும் எல்லோரையும் —பெண்கள், குழந்தைகள், புகையிரதத்துறை தொழிலாளர்கள், அங்கேயிருப்பது யாராக இருந்தபோதிலும்— அவர்களை சுட்டுத் தள்ள ஆரம்பிக்கும். மக்களை திகிலடையச் செய்வதற்காக வரும் வழியில் சிலரை தூக்கிலிட்டும் கொன்றனர்.
ட்ரொட்ஸ்கி பதிலடி நடவடிக்கைகள் குறித்து எழுதினார்:
மாஸ்கோவுக்கு அரை மாதம் முன்பாகவே கிளர்ச்சி பற்றியிருந்த பால்டிக் மண்ணில், ....லாத்விய தொழிலாளர்களும் விவசாயிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர், தூக்கிலிடப்பட்டனர், தடிகளையும் கம்புகளையும் கொண்டு அடித்துக் கொல்லப்பட்டனர், ஓடவிட்டுத் தாக்கப்பட்டனர், ஜாரிச கீதம் முழங்க கொல்லப்பட்டனர். முழுதாகக் கிடைக்காத விபரங்களின் படி, இரண்டு மாத காலத்திற்குள் 749 பேர் கொல்லப்பட்டனர், 100 க்கும் அதிகமான பண்ணைகள் எரிக்கப்பட்டன, பால்டிக் மண்ணில் பல பேர் அடித்துக் கொல்லப்பட்டிருந்தனர். [1905, பக். 248]
ஜனவரி 9 க்கும் முதல் அரசு நாடாளுமன்றம் (Duma) ஏப்ரல் 27, 1906 அன்று கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், தோராயமான ஆனாலும் மிகைப்படுத்தப்படாத புள்ளிவிபரங்களின் படி, ஜாரிச அரசாங்கமானது 14,000 பேருக்கும் அதிகமாய் கொலை செய்திருந்தது, 1,000 க்கும் அதிகமானோரை தூக்கிலிட்டிருந்தது, 20,000க்கும் அதிகமான பேரை காயப்படுத்தியிருந்தது (இவர்களில் பலரும் தங்கள் காயங்களால் உயிரிழந்தனர்), 70,000 பேரை கைதுசெய்தது, நாடு கடத்தியது மற்றும் சிறையிலடைத்தது. ஜாரிசத்தின் இருப்பே பணயம் வைக்கப்பட்டு விட்டிருந்ததால் கொடுக்கப்பட்ட இந்த விலை அதிகமானதல்ல என்றே ஜார் கருதினார். [1905, பக் 249]
எல்லோருமே கொல்லப்பட்டு விடவில்லை. இங்கே நீங்கள் பார்க்கின்ற பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் முன்னிலை உறுப்பினர்களில், ட்ரொட்ஸ்கி இரண்டாம் வரிசையில் இருப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் கைது செய்யப்பட்டனர், 1906 இல் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர், சைபீரியாவின் எங்கோ மூலையில் இருக்கும் பகுதிகளுக்கு நாடுகடத்தப்படும் தண்டனை “மட்டுமே” கொடுக்கப் பெற்றனர். ஆயினும் அச்சமயத்தில் அவர்கள் தூக்கிலிடப்படவில்லை.
ஜாரிச ஆட்சியானது, உலுக்கப்பட்டிருந்த போதும், தனது ஆட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்கு தனது சக்திகளை திரட்டியது. கிளர்ச்சி நசுக்கப்பட்டு விட்டிருந்த நிலையில், இதுதான் விடயங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நேரம் என்று பிரபுக்கள் கருதினர்.
1905 புரட்சிக்கு முன்வந்த மற்றும் பிந்தைய காலகட்டத்தில், புரட்சியைக் குறித்து சமூக-ஜனநாயக இயக்கத்திற்குள்ளாக விவாதங்கள் கொந்தளிக்க ஆரம்பித்தன. புரட்சி எவ்வாறு கட்டவிழ வேண்டும் என்பது குறித்த மூன்று முக்கியமான வகைகள், முறையே பிளெக்ஹானோவ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டன.
பிளெக்ஹானோவ் ஒரு முதலாளித்துவ புரட்சிக்கு ஆதரவாக இருந்தார், இதில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கமானது தாராளவாத முதலாளித்துவத்துடன் கூட்டணி கொண்டிருக்கும். சர்வவியாபக, நேரடியான, சமத்துவமான மற்றும் இரகசியமான வாக்குரிமை கொண்ட ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாய் இருந்தது. மேற்கு ஐரோப்பாவின் சோசலிசப் புரட்சியானது ரஷ்யாவின் புரட்சிக்கு முன்வரும். 1905 டிசம்பரில், நடந்து முடிந்திருந்த நிகழ்வுகளுக்கு, குறிப்பாக மாஸ்கோவில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு பதிலிறுக்கும் விதமாய் அவர் அறிக்கை விட்டார்: “தொழிலாளர்கள் ஆயுதமேந்தி இருக்கக் கூடாது”. அந்த அறிக்கையை விடுத்ததன் மூலமாய் அவர் பல தொழிலாளர்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரது பார்வையில் உண்மையாகவே தன்னை மதிப்பிழக்கச் செய்துகொண்டார்.
லெனினின் நிலைப்பாடு மாறுபட்டிருந்தது. ஆம் முதலாளித்துவ புரட்சி நிறைவு செய்யப்பட வேண்டும் தான் என்றார் அவர். “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஒரு ஜனநாயக சர்வாதிகார”த்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். முதலாளித்துவ தாராளவாதிகளுடன் எந்தக் கூட்டணியும் இருக்கக் கூடாது என்ற அவர், குறிப்பாக வறுமைப்பட்ட விவசாயிகளுடனான கூட்டணியில் விவசாயப் பிரச்சினைக்கு ஒரு தீவிரமான தீர்வைக் காண அழைப்பு விடுத்தார். மேற்கு ஐரோப்பாவிலான சோசலிசப் புரட்சி ரஷ்யாவிலான புரட்சிக்கு உதவி செய்யும் என்று அவர் கருதினார்; “அதை எவ்வாறு செய்வது” என்று அவை நமக்கு சொல்லித்தரும் என்றார் அவர்.
ட்ரொட்ஸ்கி, விவசாயிகளின் ஆதரவுடன் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சர்வாதிகாரத்திற்கு அழைப்பு விடுத்தார். முதலாளித்துவ தாராளவாதிகளுடன் எந்தக் கூட்டணியும் கூடாது என்பதில் அவரும் உடன்பட்டார், ஒரு முதலாளித்துவ புரட்சியுடன் நின்றுவிடாமல் சோசலிசக் கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு தடையில்லாத அல்லது நிரந்தரப் புரட்சியாக உருமாறும் என்றார். ரஷ்யாவிலான சோசலிசப் புரட்சியானது மேற்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியை தூண்டும் என்றார். அந்த நோக்கு ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது.
ட்ரொட்ஸ்கி, நிரந்தரப் புரட்சி குறித்த தனது பார்வைகளை பின்னர் 1922 ஜனவரியில் பின்வருமாறு விரித்துரைத்தார்:
1905 ஆம் ஆண்டின் ஜனவரி 9 ஆம் தேதிக்கும் அக்டோபர் வேலைநிறுத்தத்திற்கும் இடையிலான காலத்தில் தான் ”நிரந்தரப் புரட்சி” தத்துவம் என்று அழைக்கப்பட்டதான கருத்துக்கள் ஆசிரியரின் மனதில் உருவாகின.
சற்று மிகுந்து உயர்ந்து நிற்பதான இந்த வெளிப்பாடானது, ரஷ்ய புரட்சி, அது நேரடியாக முதலாளித்துவ இலக்குகள் மீது அக்கறை கொள்கின்ற போதும், அந்த இலக்குகளுடன் நின்றுவிட இயலாது; பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தில் வைக்காமல் புரட்சியானது தனது உடனடியான, முதலாளித்துவக் கடமைகளை தீர்த்து விட முடியாது. அத்துடன் பாட்டாளி வர்க்கமானது, அதிகாரத்தை அதன் கைகளில் எடுத்துக் கொண்டு விட்ட நிலையில், புரட்சியின் முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளாகவே தொடர்ந்தும் கட்டுப்பட்டிருக்க இயலாது. அதற்கு நேர்மாறாய், அதன் வெற்றியை உத்தரவாதம் செய்வதற்கு, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையானது அதன் ஆட்சியின் மிக ஆரம்ப கட்டங்களிலேயே நிலவுடைமை சொத்துறவுகளுக்குள் மட்டுமல்லாது முதலாளித்துவ சொத்துறவுகளுக்குள்ளும் கூட மிக ஆழமாய் சென்று புரட்டிப் போட வேண்டியிருக்கும். அவ்வாறு செய்கையில் அது —பாட்டாளி வர்க்கம்— அதன் புரட்சிகரப் போராட்டத்தின் முதல் கட்டங்களின் போது அதற்கு ஆதரவாய் இருந்த அனைத்து முதலாளித்துவக் குழுக்களுடன் மட்டுமல்லாது, எவருடன் கூட்டணி சேர்ந்து அதிகாரத்திற்கு வந்திருந்ததோ, அந்த பரந்த விவசாயப் பெருமக்களுடனும் குரோதமான மோதலுக்குள் நுழையும். [1905, பக். vi]
[இந்த முரண்பாட்டை எவ்வாறு தீர்ப்பது?]
ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு தொழிலாளர்’ அரசாங்கத்திற்கும் விவசாயிகளின் பெருவாரியான பெரும்பான்மைக்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு சர்வதேச மட்டத்தில், உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் அரங்கில் மட்டுமே தீர்க்கப்பட முடியும். [1905, பக். vi-vii]
இவ்வாறாக, இந்த முரண்பாட்டிற்கு ரஷ்யாவின் எல்லைகளுக்குள் மட்டுமான எந்தத் தீர்வும் கிடையாது.
வார்சோவில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக 1905 புரட்சியில் சிறிதுகாலம் பங்கேற்றிருந்த ரோசா லுக்செம்பேர்க் ரஷ்யாவில் என்ன நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்கின்ற ஒரு முக்கியமான கட்டுரையை 1906 இல் எழுதினார், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குள்ளாக வெகுஜன வேலைநிறுத்தத்தின் பாத்திரம் குறித்த ஒரு விவாதத்திற்கும் அவர் கோரினார். தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்த பிரச்சினையை மேலும் விவாதிப்பதற்கேயும் தடை விதிக்கப்பட்டது. 1907 இல் நடந்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரசில் ட்ரொட்ஸ்கியின் 1905 பற்றிய பகுப்பாய்வுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
1905 நிகழ்வுகளின் வீச்சு செறிவுவாய்ந்ததாக இருந்தது. பலர் இதனைப் பாதி வெற்றி பாதி தோல்வி என விபரித்தனர். ஜாரிசம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தது என்றாலும் கூட அது மரணகரமாக காயமடைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முன்கண்டிராத வண்ணம் மிகுந்த வலிமைமிக்க புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கம் எழுந்தது. புதிய கட்சிகள், புதிய வேலைத்திட்டங்கள், மற்றும் புதிய அமைப்பு வடிவங்கள் எழுந்திருந்தன. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி அது தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைத்து வழிநடத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபணம் செய்து கொண்டிருந்தது. வெகுஜன வேலைநிறுத்தமும் ஆயுதமேந்திய எழுச்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவற்றுடன் அது கொண்டுள்ள உறவும் கற்கப்படவும் அதன் படிப்பினைகள் உட்கிரகிக்கப்படவும் அவசியமானது.
சர்வதேச அளவில், இந்த நிகழ்வுகள் சீனா, துருக்கி, மற்றும் பேர்சியா (இன்றைய ஈரான்) ஆகிய மூன்று நாடுகளில் புரட்சிகர இயக்கங்களின் மீது குறிப்பாக சக்திவாய்ந்த தாக்கத்தை கொண்டிருந்தன. அமெரிக்காவில் IWW (உலக தொழிற்துறை தொழிலாளர்கள் அமைப்பு) 1905 இல் உருவாக்கப்பட்டது; பிரான்சில் தீவிர தொழிற்சங்கவாதத்திற்கு (syndicalism) ஒரு பெரும் உத்வேகம் கிட்டியது.
1905 இல் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தினால் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் 1917 அக்டோபருக்குத் தயாரிப்பு செய்வதில் ஒரு இன்றியமையாத பாகமாய் இருந்தன.
ட்ரொட்ஸ்கி 1905 ஐ 25 வருடங்களுக்குப் பின்னர் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் இரத்தினச்சுருக்கமாய் பின்வருமாறு கூறினார்:
அக்டோபர் வேலைநிறுத்தத்தின் பாதி வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ஒரு மாபெரும் தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. தாராளவாத முதலாளித்துவத்தின் எதிர்ப்போ, விவசாயி வர்க்கத்தின் ஆரம்பநிலை எழுச்சிகளோ அல்லது புத்திஜீவித அடுக்கின் பயங்கரவாத நடவடிக்கைகளோ அல்ல, மாறாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் முதன்முதலாக ஜாரிசத்தை அதன் கால்களில் மண்டியிட வைத்தது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையானது கேள்விக்கிடமற்ற ஒரு உண்மையாக தன்னை வெளிக்காட்டியது. நிரந்தரப் புரட்சி தத்துவம் தனது முதல் சோதனையில் வெற்றிகரமாய் தாக்குப்பிடித்திருக்கிறது என்று நான் உணர்ந்தேன். புரட்சியானது பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்புவளத்தை திறந்து கொண்டிருந்தது என்பது வெளிப்படையாக இருந்தது. வெகுவிரைவிலேயே அதனை பின்தொடர்ந்து வந்த பல வருட பிற்போக்கான நிலை என்னை இந்த நிலைப்பாட்டில் இருந்து அசைத்து விட முடியவில்லை. ஆனால் இந்த அடிக்கோள்களில் இருந்து மேற்கு பற்றிய என்னுடைய முடிவுகளுக்கும் நான் வந்தேன். ரஷ்யாவின் இளம் பாட்டாளி வர்க்கமே இத்தனை அசுரபலம் கொண்டிருக்குமானால், கூடுதல் முன்னேறிய நாடுகளில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சக்தி எத்தனை வலிமையானதாக இருக்கும்! [எனது வாழ்க்கை, பக்கம். 180]
மேற்கோள்கள்
Quotes from Trotsky’s 1905 are from: Leon Trotsky, 1905, translated by Anya Bostock, Vintage Books, 1971.
Quotes from Trotsky’s autobiography are from: Leon Trotsky, My Life, translated by Max Eastman, Pathfinder Press, 1970.
[1] Kautsky, “The Slavs and Revolution,” in: Witnesses to Permanent Revolution, ed. by Richard B. Day and Daniel Gaido, Brill, 2009, p. 64.
[2] Theodore Dan, The Origins of Bolshevism, edited and translated by Joel Carmichael, Schocken Books, 1970, pp. 299-300.
[3] “An Anti-War Leaflet,” in: The Russian Revolution of 1905: Change Through Struggle, Revolutionary History, Volume 9, No. 1, pp. 85-87.