ஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாம் இங்கே உலக சோசலிச வலைத் தளத்தின்(WSWS) அமெரிக்க பிரிவின் பதிப்பாசிரியர் பரி கிரே, சனிக்கிழமை, அக்டோபர் 14 இல் வழங்கிய ஓர் உரையின் எழுத்து வடிவத்தை இங்கே பிரசுரிக்கின்றோம். 1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வழங்கி வரும் இணையவழி சர்வதேச தொடர் விரிவுரைகளின் இரண்டாம் பாகத்தில் இது முதலாவதாகும். அக்டோபர் 21, அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 11 இல் அடுத்த மூன்று விரிவுரைகள் வழங்கப்படும். ஐந்து விரிவுரைகள் கொண்ட இத்தொடர் விரிவுரைகளின் முதல் பாகத்தை, ICFI இந்த இளவேனில் காலத்தில் வழங்கியது. இவ்விரிவுரைகள் அனைத்தும் உலக சோசலிச வலைத் தளத்தில் கிடைக்கின்றன. தொடர் விரிவுரைகளில் கலந்துகொள்ள பதிவு செய்ய, இங்கே பார்வையிடவும்: wsws.org/1917.

இந்த விரிவுரை லெனினின் அரசும் புரட்சியும் என்பதில் கவனத்தை செலுத்தும். 1917 கோடையில், லெனின் முதலில் பெட்ரோகிராட்டுக்கு வெளியிலும், பின்னர் பின்லாந்திலும் தலைமறைவாக இருந்தபோது, இந்நூல் எழுதப்பட்டது. ஜூலை தொடக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் பாரிய அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர், போல்ஷிவிக் கட்சி மீதான முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க லெனின் தலைமறைவாகி இருந்தார்.

ஆகஸ்ட் இறுதிவாக்கில் —அப்போதும் லெனின் தலைமறைவாகவே இருந்தார், ட்ரொட்ஸ்கி, காமனேவ் மற்றும் ஏனைய போல்ஷிவிக் தலைவர்களும், பல போல்ஷிவிக் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்— தளபதி லாவ்ர் கோர்னிலோவ் (Lavr Kornilov), ஆரம்பத்தில் இடைக்கால அரசாங்க தலைவர் அலெக்சாண்டர் கெரென்ஸ்கியின் மறைமுக ஆதரவுடன், ஓர் இராணுவ சதிக்கு முயன்றார். போல்ஷிவிக்குகளை தலைமையாக கொண்ட ஆயுதமேந்திய தொழிலாள வர்க்கத்தினது எதிர்-அணிதிரள்வு, போல்ஷிவிக்குகளின் ஆதரவுக்கு துரிதமாக புத்துயிரூட்டி, கெரென்ஸ்கியையும் அவரது மென்ஷிவிக் மற்றும் சோசலிச-புரட்சிக் கட்சி ஒத்துழைப்பாளர்களையும் முழுமையாக பலவீனப்படுத்தியது.

லெனினின் அரசும் புரட்சியும் — பரி கிரேயின் இணையவழி விரிவுரை

பாட்டாளி வர்க்க புரட்சியா, அல்லது 1871 பாரீஸ் கம்யூன் தோல்வியைத் தொடர்ந்து நடந்த பாரிய படுகொலைகளைப் போன்று இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் மோசமாக அளவில் நடக்கக்கூடிய இரத்தந்தோய்ந்த எதிர்புரட்சியா என்ற கேள்வி வெளிப்படையாக முன்வைக்கப்பட்டது.

இதைத்தான் ட்ரொட்ஸ்கி, அரசும் புரட்சியும் குறித்து அவரின் ரஷ்ய புரட்சியின் வரலாறுஎன்ற நூலில் கூறுகிறார்:

லெனின் அவரது தலைமறைவு வாழ்வின் முதல் மாதங்களிலேயே அரசும் புரட்சியும் என்னும் ஒரு நூலை எழுதினார். இதற்கான முக்கிய ஆவணங்களைப் போரின் போது அவர் வெளிநாடுகளிலிருந்து சேகரித்திருந்தார். நாளாந்த நடைமுறை பிரச்சினைகளை சிந்திப்பதற்கு அவர் அர்ப்பணித்திருந்த அதேயளவிற்கு சிரமத்துடன் கவனமெடுத்து, அதில் அவர் அரசின் தத்துவார்த்த பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்துகிறார். அவரைப் பொறுத்த வரையில், கூறப்போனால் உண்மையில் தத்துவம் என்பது, நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டி என்று இல்லாதிருந்தால், அவரால் இதை செய்திருக்க முடியாது. … “அரசு குறித்த மார்க்சிசத்தின்" உண்மையான "கற்பித்தலுக்கு" புத்துயிரூட்டுவதே தனது பணியென அவர் கூறுகிறார். ...”

ஒரு புதிய மற்றும் உயர்ந்த வரலாற்று அடித்தளத்தில் வர்க்க தத்துவத்தை சர்வசாதாரணமாக மீள்ஸ்தாபிதம் செய்வதன் மூலமாக, லெனின் மார்க்சின் சிந்தனைகளுக்கு ஒரு புதிய சரியான தன்மையையும், அவ்விதத்தில் ஒரு புதிய முக்கியத்துவத்தையும் தருகிறார். ஆனால் அரசு குறித்த இந்த படைப்போ, அனைத்திற்கும் மேலாக, அது வரலாற்றில் மிகப் பெரிய புரட்சிக்கு விஞ்ஞானபூர்வ அறிமுகத்தை உள்ளடக்கி இருந்தது என்ற உண்மையிலிருந்து அதன் அளவிடாமுடியா முக்கியத்துவத்தை பெறுகிறது. மார்க்சின் இந்த "உரையாசிரியர்", பூமியின் மேற்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை புரட்சிகரமாக கைப்பற்றுவதற்காக தனது கட்சியைத் தயார் செய்கிறார். [1]

பாட்டாளி வர்க்க புரட்சி மற்றும் அரசு குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்கள் மீது லெனின் அவரது "வரலாற்று அகழ்வாய்வை" எந்தளவுக்கு முக்கியமாக கருதினார் என்பதை, அது குறித்த லெனினின் குறிப்புகளைக் கொண்டே, ட்ரொட்ஸ்கி அடிக்கோடிடுகிறார்: “ஜூலையில் அவர் காமனேவ் இற்கு எழுதுகிறார்: 'அவர்கள் என்னை கொன்றுவிட்டால், அரசு குறித்து மார்க்சிசம் எனும் எனது சிறிய குறிப்புநூலை [அதாவது,அரசும் புரட்சியும் படைப்புக்கான லெனினின் தயாரிப்பு குறிப்புகள்] பிரசுரிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” [2]

லெனின், சோசலிச புரட்சியின் அடிப்படை பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தின் கட்சி மற்றும் முன்னணி படைக்கு தெளிவுபடுத்துவதில் தீர்மானகரமாக இருந்தார். இதற்கு, சந்தர்ப்பவாதிகள் மற்றும் மத்தியவாதிகள், முதலும் முக்கியமாக முதலாளித்துவ ஜனநாயகம் குறித்து பெருமைபீற்றி, மார்க்சிசத்தை ஒரு சீர்திருத்த கோட்பாட்டுக்குள் திருப்ப முனைந்திருந்த அவர்களின் தலைமை தத்துவவியலாளர் கார்ல் காவுட்ஸ்கி செய்து வந்த மார்க்சிச தத்துவம் மீதான பொய்மைப்படுத்தல்களை மறுத்துரைப்பதும் மற்றும் அரசு குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கற்பித்தலுக்கு விளக்கமளிப்பதும் அவசியப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய குட்டி-முதலாளித்துவ திருத்தல்வாத போக்குகள் போல்ஷிவிக் தலைமைக்குள் பிரதிபலித்தன என்பதை லெனின் மிகத் துல்லியமாக நன்குணர்ந்திருந்தார். லெனின் ரஷ்யாவுக்கு திரும்புவதற்கு முன்னதாக மற்றும் அவரது "ஏப்ரல் ஆய்வுரைகளுக்காக" (April Theses) அவர் போராடுவதற்கு முன்னதாக, ஜோசப் ஸ்ராலின் மற்றும் லெவ் காமனேவ் இன் கீழ் மேலோங்கியிருந்த தற்காப்புவாத (defensist) மற்றும் மத்தியவாத (centrist) நிலைப்பாடுகள் மறைந்து விட்டிருக்கவில்லை.

லெனினின்அரசும் புரட்சியும்என்ற படைப்பானது, கட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தை தத்துவார்த்த ரீதியில் ஆயுதபாணியாக்கி, ஒட்டுமொத்தமாக இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதிகாரத்தை சோவியத்துக்களுக்கு கைமாற்றுவதற்காக இருந்தது. இது, “அரசு குறித்து மார்க்சிச தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகளும்" என்று அப்படைப்பிற்காக லெனின் தேர்ந்தெடுத்த துணைத்தலைப்பால் எடுத்துக்காட்டப்படுகிறது.

லெனினைப் பொறுத்த வரையில், அது வெறுமனே, ரஷ்யாவில் கட்சி எதிர்கொண்டிருந்த தந்திரோபாய மற்றும் அமைப்புரீதியிலான பிரச்சினைகளும் எவ்வளவிற்கு மிகவும் அவசரமானதாக இருந்தபோதும், அவை ஒரு ரஷ்ய கேள்வியாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு உலக கேள்வியாக இருந்தது. அரசும் புரட்சியும் படைப்பை, போரினதும் புரட்சியினதும் சூட்டில் எழுதப்பட்ட அவரது மற்றொரு தலைச்சிறந்த தத்துவார்த்த படைப்பானஏகாதிபத்தியம் என்பதுடன் இணைத்து வைத்து பார்க்க வேண்டும்.

லெனின், இரண்டு ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட சம்பவங்களான உலகப் போரின் வெடிப்பையும் மற்றும் இரண்டாம் அகிலத்தின் பொறிவையும் உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக, முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாக போர்களினதும் புரட்சிகளினதும் சகாப்தமாக பார்த்தார். போரானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியைக் குறிப்பதுடன், அது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தை தூண்டும் என்பதே, போரின் தொடக்கத்திலிருந்தே அதை நோக்கிய அவரது அடிப்படை முன்னோக்காக இருந்தது. மேலும் இரண்டாம் அகிலத்தின் பிரதான தலைவர்கள் போரை ஆதரித்த நிலையில், அதன் காட்டிக்கொடுப்பானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை இரண்டாம் அகிலத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தில் மட்டுமே நடத்த முடியும் என்பதையும், அதன் அடிப்படையில், ஒரு புதிய கம்யூனிச அகிலம் நிறுவுவதையும் அர்த்தப்படுத்தியது.

ரஷ்யாவில், மென்ஷிவிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட குட்டி-முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பு ஒரு உறுதியான வடிவத்தை எடுத்தது. மென்ஷிவிக்குகள், குட்டி-முதலாளித்துவ ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற வாதத்தையும் பெருமைபீற்றிய அடிப்படையில், போரை ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் பிரஷ்ய எதேச்சதிகாரத்திற்கு எதிராக "ஜனநாயகத்திற்கான புரட்சிகர போராக" ஆதரிக்குமாறு சோவியத்துகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் கோரினர். அந்த அடிப்படையில், அவர்கள் பெப்ரவரியில் ஜாரைத் தூக்கியெறிந்த தொழிலாள வர்க்க புரட்சி மூலமாக சோவியத்துக்கள் வென்றிருந்த அதிகாரத்தை, கடேட் கட்சி (Cadet Party) தலைமையில் இருந்த எதிர்புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்திடமும், முடியாட்சியினது அரசு அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்தில் இருந்த முதலாளித்துவ வர்க்க கூட்டாளிகளிடமும் மீண்டும் ஒப்படைக்க இருந்தனர்.

இப்போது, பகிரங்க எதிர்புரட்சியின் முன்னால், மென்ஷிவிக்குகள் அவர்களது ஆக்ரோஷத்தை, முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகவும் கறுப்பு நூற்றுவர் இயக்கத்திற்கு (black hundreds) எதிராகவும் அல்ல, மாறாக போல்ஷிவிக்குகளுக்கு எதிராக, அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி இருந்தனர்.

மிக அடிப்படையாக பார்த்தாலும், அரசும் புரட்சியும்படைப்பில் உருகொடுக்கப்பட்டிருந்த போராட்டம், ரஷ்ய புரட்சி எதனின் ஒரு உள்ளார்ந்த பாகமாக இருந்ததோ, அதாவது உலக சோசலிசப் புரட்சியினதும் மற்றும் அதற்கு தலைமை கொடுக்க கட்டமைக்கப்பட வேண்டியிருந்த புதிய அகிலத்தினதும் அடிப்படை வேலைத்திட்டத்தை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தால் உயிரூட்டப்பட்டிருந்தது.

லெனின், அரசும் புரட்சியும் படைப்பின் முதல் பதிப்பின் முன்னுரையை, அப்படைப்பின் போக்கில் அவர் ஆராயவிருந்த பிரச்சினைகளினது அவசரமான, நடைமுறை தொடர்புகளை வலியுறுத்தி தொடங்கினார். பின்னர் அவர் உடனடியாக ரஷ்ய புரட்சியை அதன் உலக வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்தி, ஏகாதிபத்தியத்திற்கும் அரசு சம்பந்தமான கேள்விக்கும் இடையிலான தொடர்பை வரைகிறார். ஏகாதிபத்தியத்தின் வருகையுடன் சேர்ந்து, முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை எந்திரம் —அதாவது, நிரந்தர இராணுவம், பொலிஸ், அரசு அதிகாரத்துவம்— கொடூர பங்கை ஏற்கிறது என்றவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகமோ இராணுவவாதம் மற்றும் அரசு வன்முறைக்கு ஒரு முகமூடி என்பதற்கும் சற்று கூடுதலாக மாறிவிடுகிறது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு ஒரு சமாதானமான நிலைமாற்றம் என்ற, முந்தைய கால சுதந்திர முதலாளித்துவ போட்டியிலிருந்து எழும் எந்தவொரு கருத்தும் நம்பிக்கை வைக்கவியலா வழக்கற்றவையாக ஆகிவிடுகின்றன.

ஏகாதிபத்திய போரானது, மிகப்பெரும் தொழில்துறை மற்றும் நிதிய அமைப்புகளை கூடுதலாக அரசு எந்திரத்துடன் ஒருங்கிணைத்து, ஏகபோக முதலாளித்துவத்தை அரசு-ஏகபோக முதலாளித்துவமாக மாற்றுவதால், இத்தகைய போக்குகள் ஏகாதிபத்திய போரால் இன்னும் பிரமாண்டமாகின்றன.

அக்டோபர் 1916 இல் பிரசுரிக்கப்பட்ட ஏகாதிபத்தியமும் சோசலிசத்தின் உடைவும் என்ற அவரின் எதிர்விவாதத்தில், லெனின் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் துர்நாற்றத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறார்:

ஜனநாயகக்-குடியரசும் சரி, பிற்போக்குத்தனமான-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவமும் சரி, இரண்டுமே உயிருடன் அழுகி வருவதால், இவற்றிற்கு இடையிலான வேறுபாடு துல்லியமாக இல்லாது போய்விட்டது. … இந்த நிலைப்பாட்டுடன் இணைந்த அனைத்து அரசியல் பிற்போக்குத்தனமே ஏகாதிபத்தியத்தின் ஒரு குணாம்சமாக உள்ளது. [3]

அரசும் புரட்சியும் படைப்புக்கான அவரது முன்னுரையின் தொடக்கத்தில் லெனின் எழுதுகிறார்:

அரசு குறித்த கேள்வி, தத்துவார்த்தரீதியிலும் சரி, நடைமுறை அரசியல் கண்ணோட்டத்திலிருந்தும் சரி, இரண்டு விதத்திலும் இப்போது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஏகாதிபத்திய போர், முதலாளித்துவ ஏகபோகத்தை அரசு-ஏகபோக முதலாளித்துவமாக மாற்றுவதை பெரிதும் வேகப்படுத்தி தீவிரப்படுத்தி உள்ளது. அரசு தன்னை இன்னும் அதிகமாக சக்திவாய்ந்த சகல முதலாளித்துவ கூறுபாடுகளுடனும் உள்ளார்ந்து இணைத்து வருகையில், உழைக்கும் பெருந்திரளான மக்கள் மீதான அரசின் கொடூர ஒடுக்குமுறை, முன்பினும் அதிக கொடூரமாக மாறுகிறது. முன்னணி நாடுகள், தொழிலாளர்களுக்கான இராணுவ தண்டனை விதிக்கப்பட்ட உழைக்கும் சிறைகூடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன — இங்கே நாம் அவற்றின் "பின்புறத்தை" குறித்து பேசுகிறோம். …

பொதுவாக முதலாளித்துவத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் செல்வாக்கில் இருந்தும் உழைக்கும் பெருந்திரளான மக்களை விடுவிப்பதற்கான போராட்டமானது, “அரசு" மீது அக்கறை கொண்டுள்ள சந்தர்ப்பவாத குருட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை.

… புரட்சி (ஆகஸ்ட் 1917 இல் தொடங்கி) காணக்கூடிய வகையில் இப்போது அதன் அபிவிருத்தியில் முதல் கட்டத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறது; ஆனால், பொதுவாக கூறுவதானால், இப்புரட்சியை அதன் பூரணத்தன்மையில் ஏகாதிபத்திய போரால் முன்கொண்டு வரப்பட்ட சங்கிலித் தொடரான சோசலிச பாட்டாளி வர்க்க புரட்சிகளின் ஒரு பிணைப்பாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆகவே அரசுக்கும் பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சிக்கும் இடையிலான தொடர்பு பற்றிய கேள்வி, ஒரு நடைமுறை அரசியல் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, மாறாக நாளாந்த ஒரு அவசர பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், அதாவது வரவிருக்கும் மிக அண்மைக் காலத்தில் முதலாளித்துவ தளைகளிலிருந்து விடுதலை பெற பெருந்திரளான மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவாக்குவதற்கான பிரச்சினையின் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. [4]

ஏப்ரல் நெருக்கடியிலிருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்

இப்போது அரசும் புரட்சியும் படைப்பிலிருந்து ரஷ்யாவின் அரசியல் உள்ளடக்கத்தை ஆராய திரும்புவோம்.

பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்ட ஜாரின் ஏகாதிபத்திய போர் நோக்கங்களையே, போரில் வெற்றி பெறும் வரையில் போர் தொடர்பான அரசின் நோக்கங்களாக சூளுரைத்து, கடேட் கட்சி தலைவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான பாவெல் மிலியுகோவின் (Pavel Miliukov) கடிதம் வெளியானதும், சோவியத்துக்களில் இருந்த மென்ஷிவிக் மற்றும் சோசலிச புரட்சிக் கட்சி தலைவர்களின் ஆதரவைச் சார்ந்திருந்த முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம், ஏப்ரலில் அதன் முதல் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்தது. அக்கடிதம் வெளியானதும், அது மிலியுகோவின் இராஜினாமாவைக் கோரி பெட்ரோகிராட்டில் சிப்பாய்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு பாரிய ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டத்தை தூண்டியது. இது தான் "ஏப்ரல் நெருக்கடி" என்றானது.

மிலியுகோவ் பதவியிறங்கியதுடன், அரசாங்கம் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், மென்ஷிவிக்குகளும் சோசலிச புரட்சியாளர்களும் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க, அரசாங்கத்தினுள் நுழைய உடன்பட்டனர். இது, அதிகரித்தளவில் போர்குணமிக்க தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் பார்வையில் அவர்களைக் கடுமையாக மதிப்பிழக்க செய்தது. போல்ஷிவிக்குகள், ஏப்ரல் மாத இறுதியில், போர் மற்றும் இடைக்கால அரசாங்கம் மீதான எதிர்ப்புக்கும் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கும், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற முழக்கத்தை மையமிட்டு லெனினின் புரட்சிகர நிலைப்பாட்டை ஏற்றனர். தொழிலாள வர்க்கம் மற்றும் சிப்பாய்களிடையே இருந்த போல்ஷிவிக்குகளுக்கான ஆதரவு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

ட்ரொட்ஸ்கி அவரது வரலாறு என்ற நூலில் எழுதுகிறார், ஏப்ரல் மாத இறுதியில், போல்ஷிவிக்குகளின் பெட்ரோகிராட் அமைப்பில் 15,000 அங்கத்தவர்கள் இருந்தனர். ஜூன் மாத முடிவில், அது 82,000 க்கும் அதிகமாக இருந்தது. அலெக்சாண்டர் ராபினொவிட்ச் எழுதிய புரட்சிக்கு முன்னதாக என்ற நூலில் இதை சற்றே குறைவாக காட்டுகிறார் என்றாலும் அதுவும் ஈர்க்கத்தக்க எண்ணிக்கையாகவே உள்ளது. அவர் எழுதுகிறார், பெப்ரவரியில் 2,000 ஆக இருந்த பெட்ரோகிராட் கட்சி அங்கத்தவர் எண்ணிக்கை ஜூலை மாத தொடக்கத்தில் 32,000 க்கு சென்றது.

இந்த நிகழ்வுகளின் நூறாம் நினைவாண்டில், இன்றும், பெப்ரவரியில் ஆட்சி தூக்கியெறியப்பட்டதில் இருந்து அக்டோபர் கிளர்ச்சி வரையிலான ரஷ்ய புரட்சியைக் குறித்து, பிரபலமாக உள்ள எந்தவொரு ஊடகங்களிலும் மற்றும் கல்வித்துறையிலும், அக்டோபர் புரட்சி பற்றிய ஒரு புறநிலைரீதியான கணக்கெடுப்பை -இந்த வாதங்களை- நிராகரிக்கின்றன, அவை அக்டோபர் புரட்சியானது தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் உயர்மட்ட தலைமையிலிருந்த சதிகாரர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்பதாக குறிப்பிடுகின்றன. பெருந்திரளான மக்களின் நனவில் ஏற்பட்ட பரந்த மாற்றங்கள் குறித்தும், புரட்சியின் சிக்கலான முரண்பட்ட போக்கில் அவர்களின் சுயாதீனமான புரட்சிகர முனைவு குறித்தும், இந்த பெருந்திரளான மக்கள் இயக்கத்திற்கும் போல்ஷிவிக் கட்சி மற்றும் அதன் தலைமைக்கும், அனைத்திற்கும் மேலாக லெனினின் மாபெரும் அரசியல் தலையீட்டுக்கும், இடையிலான தொடர்பை வளமாகவும் விரிவாகவும் விளக்கி இருப்பது, ட்ரொட்ஸ்கியினது வரலாறு எனும் நூலின் அளப்பரிய பலங்களில் ஒன்றாகும்.

“பெருந்திரளான மக்களிடையேயான மாற்றங்கள்" என்று தலைப்பிட்ட அவர் அத்தியாயத்தில், ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

வேலைநிறுத்தங்களின் அதிகரிப்பானது, பொதுவாக வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்பானது, ஏறத்தாழ தன்னியல்பாக போல்ஷிவிக்குகளின் செல்வாக்கை அதிகரித்தது. … இது, நிர்வாகத்தின் மற்றும் முதலாளிமார்களின் நாசவேலைகளுக்கு எதிராக தங்களின் ஆலைகளின் வாழ்வுக்காக போராடத் தொடங்கிய, ஆலை மற்றும் அங்காடி கமிட்டிகள் சோவியத்துக்களிடம் சென்றதைக் காட்டிலும் மிக விரைவாக போல்ஷிவிக்களிடம் சென்றனர் என்ற உண்மையிலிருந்து தெளிவுபடுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் பெட்ரோகிராட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் ஆலை மற்றும் அங்காடி கமிட்டிகளின் ஒரு மாநாட்டில், போல்ஷிவிக் தீர்மானம் 421 வாக்குகளில் 335 வாக்குகளை வென்றது. …

சோவியத்துக்களில் நடந்த அனைத்து இடைதேர்தல்களும் போல்ஷிவிக்குகளின் வெற்றியை எடுத்துக்காட்டின. ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வாக்கில் மாஸ்கோ சோவியத்தில் 176 மென்ஷிவிக்குகள் மற்றும் 110 சோசலிச புரட்சியாளர்களுக்கு எதிராக 206 போல்ஷிவிக்குகள் இருந்தனர். இதேபோன்ற மாற்றங்கள் பிற மாகாணங்களிலும் நடந்தன, ஆனால் மிக மெதுவாக நடந்தன. … [5]

ஜூன் வாக்கில், பெட்ரோகிராட் சோவியத்தின் மென்ஷிவிக் மற்றும் சோசலிச புரட்சிக் கட்சிகளின் தலைமை முழுவதுமாக, போல்ஷிவிக் தலைமையிலான தொழிலாளர் எழுச்சியின் அச்சத்தால் நிறைந்திருந்தது. தொழிலாளர்களின் மற்றும் சிப்பாய்களின் பிரதிநிதிகளது அகில-ரஷ்ய முதல் மாநாடு பெட்ரோகிராட்டில் ஜூன் 3 இல் இருந்து ஜூன் 24 வரை நடந்தது. [இந்த உரை நெடுகிலும், ஜூலியன் காலண்டர், அதாவது புரட்சியின் அக்காலக்கட்ட ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட பழைய-பாணியிலான காலண்டர் பயன்படுத்தப்படும், இது நவீன காலண்டர் நாட்களில் இருந்து 13 நாட்கள் பின்னுக்கு இருக்கும்.] சமூகரீதியில் பேரினவாத சோவியத் தலைமை, தனது அனைத்து நடைமுறை நோக்கங்களையும் இப்போது கெரென்ஸ்கியின் தலைமையில் கொண்டிருந்த முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் போர் ஆதரவுக்கும் முத்திரை குத்த செய்ய அம்மாநாட்டைப் பயன்படுத்த உத்தேசித்திருந்தது.

மென்ஷிவிக்குகளின் தலைவர் இராக்லி ஷெரடெல்லி (Irakli Tsereteli) உம் மற்றும் சோசலிச புரட்சிக் கட்சியின் தலைவர் விக்டொர் செர்னொவும், ஒரு புதிய இராணுவ தாக்குதல் —உண்மையில் இது ஜூன் 18 அன்று காங்கிரஸின் போது கெரென்ஸ்கியால் தொடங்கப்பட்டது— தேசப்பற்றின் ஒரு புதிய அலையைத் தூண்டி, சமூக அமைதியின்மையின் வளர்ச்சி மற்றும் போல்ஷிவிக்குகளுக்கான அரசியல் ஆதரவைத் தடம்புரள செய்யுமென நம்பினர்.

அம்மாநாடு கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க வாக்களித்ததுடன், மறைமுகமாக புதிய இராணுவ தாக்குதலையும் ஆமோதித்தது. ஆனால் போருக்கு எதிராகவும் "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற கோஷத்தின் கீழும், ஜூன் 10 இல் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் —ஆயுதமேந்தாத— ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென்ற போல்ஷிவிக்குகளின் நோக்கத்தை அதன் தலைமை செவியுற்றதும், அது அந்நடவடிக்கையைக் கண்டித்தும் மற்றும் சோவியத் தலைவர்களின் ஒப்புதல் இல்லாத அனைத்து கோஷங்களையும் இரத்து செய்வதற்குமான வாக்குகளைப் பெற்றது. போல்ஷிவிக்குகள் அந்த ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்து, தந்திரோபாய பின்வாங்கலுக்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

சோவியத் செயற்குழுவின் ஒரு முன்னணி அங்கத்தவரும், கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அமைச்சருமான ஷெரடெல்லி (Tsereteli), போல்ஷிவிக்குகளை தோற்றப்பாட்டளவில் சட்டவிரோதமாக்க அழைப்புவிடுத்து, ஜூன் 11 அன்று சோவியத் மாநாட்டில் ஓர் உரை வழங்கினார்: அவர் குறிப்பிட்டார்:

என்ன நடந்ததோ அதுவொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி, அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கும், தாங்கள் ஒருபோதும் வேறெந்த வழியிலும் அதிகாரத்திற்கு வர முடியாது என்று அறிந்திருந்த போல்ஷிவிக்குகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் நடத்திய சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. … போல்ஷிவிக்குகள் வேண்டுமானால் நம்மை குறை கூறட்டும் —நாம் வெவ்வேறு போர்முறைகளுக்கு நகர்வோமாக. ஆயுதங்களை எவ்வாறு கண்ணியத்துடன் கையாள வேண்டுமென தெரியாதவர்களிடம் இருந்து அவற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். போல்ஷிவிக்குகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். [6]

சோவியத் மாநாடு ஷெரடெல்லியின் முன்மொழிவை ஆதரிக்கவில்லை. ஆனால் அது ஜூன் 18 இல் ஓர் உத்தியோகபூர்வ ஆர்ப்பாட்டம் நடத்த ஒப்புதல் வழங்கியது. போல்ஷிவிக்குகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர். மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச-புரட்சியாளர்களின் பயங்கரங்களுக்கு எதிராக, போல்ஷிவிக் பதாகைகளும் கோஷங்களும் அந்த பாரிய நடவடிக்கையில் மேலாதிக்கம் செலுத்தின.

“ஜூலை நாட்களுக்கான" களம் அமைக்கப்பட்டது. லெனினும் ட்ரொட்ஸ்கியும், ஒரு புதிய புரட்சிக்கு விவசாயிகள் மத்தியிலும் மற்றும் மாகாணங்களிலும் பாரிய ஆதரவு இல்லை என்ற நிலைமைகளின் கீழ், தலைநகரில் எழுச்சி தனிமைப்படுத்தப்படும் அபாயம் குறித்து துல்லியமாக நன்குணர்ந்திருந்தனர். பாரீஸ் கம்யூனின் துயரமான நிர்க்கதியும், இதில் அடோல்ஃப் தியர் உம் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமும் விவசாயிகளின் ஆதரவைப் பெற முடிந்ததுடன், இரத்தஆறு ஓடச் செய்ய பாரீஸ் தொழிலாளர்களை அவர்களால் தனிமைப்படுத்த முடிந்தது என்பதும், ஓரளவுக்கு இதே வடிவம் 1905 ரஷ்ய புரட்சியின் தோல்வியில் மீண்டும் நடந்திருந்தது என்பதும் அவர்களின் சிந்தனையில் நிறைந்திருந்தன.

உணவு இல்லாமை, விலை உயர்வுகள், முன்னிலையில் நடந்து வந்த படுகொலைகள் மற்றும் அரசாங்கம் எந்தவொரு முக்கிய சீர்திருத்தமும் செய்ய தவறியமை என இவற்றிற்கு விடையிறுப்பாக போல்ஷிவிக்களுக்கான ஆதரவு அதிகரித்தது. ஜூலை 3 அன்று மாலை, அதாவது ஜூலை 4 இல் நடந்த அரைகுறை-கிளர்ச்சிக்கு முந்தைய நாள், போல்ஷிவிக்குகள் முதல்முறையாக பெட்ரோகிராட் சோவியத்தின் தொழிலாளர் பிரிவில் பெரும்பான்மையை வென்றனர்.

ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கு சாக்குபோக்காக சேவையாற்றும் வகையில், எதிர்புரட்சிகர வலது ஆயுதமேந்திய விடையிறுப்பைத் தூண்டிவிட ஒழுங்கமைக்கும் ஆத்திரமூட்டல்களின் அபாயம் குறித்து லெனின் மீண்டும் மீண்டும் எச்சரித்தார். ஆனால் போல்ஷிவிக்குகளின் செல்வாக்கின் கீழ் இருந்தவர்கள் உட்பட, சிப்பாய்கள் மற்றும் மாலுமிகளின் போர்குணம் மிக்க பிரிவுகளது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோகிராட்டில் ஜூலை 4 அன்று சிப்பாய்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய நடவடிக்கைக்கு எதிராக பகிரங்கமாக போல்ஷிவிக்குகள் ஆலோசனைகளை வழங்கிய போதும், அதைத் தடுக்க முடியவில்லை. கட்சியின் சொந்த இராணுவ அமைப்பே கூட அந்நடவடிக்கையை ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், கட்சி அந்த நடவடிக்கையை ஆதரிக்க முடிவெடுத்ததுடன், ஏற்க வேண்டியிருந்த அரசியல் சேதாரத்தைக் குறைக்கும் வகையில், அதையொரு அமைதியான ஆர்ப்பாட்டமாக மட்டுப்படுத்த முனைந்தது.

அரசாங்கம், சோவியத் தலைவர்களின் ஆதரவுடன், விசுவாசமான துருப்புகளை அணிவகுக்க செய்து பெட்ரோகிராட்டுக்குள் நுழைத்து கிளர்ச்சியை ஒடுக்கியது. போல்ஷிவிக்குகளை ஒரு தீவிர அச்சுறுத்தலாக்கி அவர்களை அகற்றும் நோக்கில், அந்நடவடிக்கையின் தோல்வியானது அவர்கள் மீதொரு தாக்குதலைத் தொடுக்க ஓர் உடனடி சந்தர்ப்பமாக கைப்பற்றப்பட்டது. சில மணி நேரங்களுக்குள், பத்திரிகைகள் ஜேர்மன் தங்க அவதூறை (German Gold libel) —அதாவது லெனினும் போல்ஷிவிக்குகளும் ஜேர்மன் படைத்தளபதியின் சம்பளத்தை பெறுபவர்கள்— என்ற பொய் மக்கள் மீது வெள்ளமென பாய்ச்சப்பட்டன.

பிராவ்தா அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு அச்சு இயந்திரங்கள் நாசமாக்கப்பட்டன. பிற போல்ஷிவிக் பத்திரிகைகளும் மூடப்பட்டன. குரோன்ஸ்ராட் மாலுமிகள் மற்றும் பெட்ரோகிராட் படைப்பிரிவு துருப்புகளுடன் சேர்ந்து நூற்றுக் கணக்கான போல்ஷிவிக்குகளும், அத்துடன் தொழிலாளர்களும் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லெனின், ட்ரொட்ஸ்கி, காமனேவ், சினோவியேவ் மற்றும் ஏனைய போல்ஷிவிக் தலைவர்களையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. போல்ஷிவிக்குகளுக்கான ஆதரவு இராணுவத்தில் சரிந்ததுடன், தொழிலாள வர்க்க பிரிவுகளிலும் வீழ்ச்சி அடைந்தது.

ஜூலைக்குப் பிந்தைய நாட்களின் ஒடுக்குமுறையானது கூட்டணி அரசாங்கத்தால் நடத்தப்பட்ட எதிர்புரட்சிகர தாக்குதலின் தொடக்கமாக இருந்தது. அது, மரண தண்டனையை மீண்டும் முன்னுக்கு கொண்டுவர உடனடியாக உத்தரவாணை பிறப்பித்தது. போர்க்களங்களிலிருந்து தப்பியோடும் ரஷ்ய படையினரைச் சுட்டுக்கொல்வது குறித்து, இராணுவ தளபதிகளே சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டன. இராணுவ நடவடிக்கைகளின் எல்லா களங்களிலும் போல்ஷிவிக் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், துருப்புகளுக்கு இடையிலான அரசியல் கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டன.

ஜூலை 18 இல், கெரென்ஸ்கி இராணுவ தலைமை தளபதியாக கோர்னிலோவை நியமித்தார். கறுப்பு நூற்றுவர்கள் இயக்கத்துடன் (Black Hundreds) தொடர்புகள் வைத்திருப்பதற்காக கோர்னிலோவ் நன்கறியப்பட்டவர் என்பதோடு, இராணுவ விவகாரங்களில் சோவியத்துக்கள் "தலையிடுவதை" எதிர்த்து, முன்னதாக பெட்ரோகிராட் படைப்பிரிவில் இருந்து அவர் பதவியை இராஜினாமா செய்தவராவார்.

போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வருகின்றனர் (The Bolsheviks Come to Power) என்ற தனது நூலில் ரபினோவிட்ச் எழுதுகிறார், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், இரயில் பாதைகள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆலைகளையும் இராணுவமயப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை கூட்டணி அரசாங்க மந்திரிசபை பரிசீலித்து வந்தது. இந்நிறுவனங்களில், வேலைநிறுத்தங்களோ, கதவடைப்புகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் வேறு எந்தவிதமான அணித்திரள்வுகளோ அக்காலப்பகுதியில் தடைவிதிக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய வேலை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை அளவைப் பூர்த்தி செய்ய தவறியவர்கள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டு, போர் முனைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.

ஆகஸ்ட் 11 அன்று கோர்னிலோவ் அவரது படைத்தளபதி ஜெனரல் லுகொம்ஸ்கி (Lukomsky) உடனான ஒரு கலந்துரையாடலில், “லெனின் தலைமையிலான ஜேர்மன் உளவாளிகளையும் முகவர்களையும் தூக்கிலிடவும்" மற்றும் "தொழிலாளர்களினதும் சிப்பாய்களினதும் சோவியத்தை வேறெந்த இடத்திலும் ஒன்றுகூடாத விதத்தில் அதை கலைத்துவிடவும் இதுவே சரியான தருணம்" என்றார். பெட்ரோகிராட்டைச் சுற்றி குவிக்கப்பட்டிருந்த துருப்புகளின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி ஜெனரல் க்ரிமோவ் (Krymov) குறித்து கோர்னிலோவ் லுகொம்ஸ்கிக்கு கருத்துரைக்கையில், அவசியமானால் "ஒட்டுமொத்த சோவியத் அங்கத்தவர்களையும் தூக்கிலிடவும்" க்ரிமோவ் தயங்கமாட்டார் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.[7]

அதிகரித்து வந்த போர்-எதிர்ப்புணர்வை பீதியூட்டும் ஒரு முயற்சியாகவும் மற்றும் கிளர்ச்சிகரமான போல்ஷிவிக்-தலைமையிலான எதிர்ப்புக்கு ஒரு எதிர்பலமாக எதிர்புரட்சிகர வலதை முன்னுக்குக் கொண்டு வரும் முயற்சியாகவும், ஆகஸ்ட் மத்தியில் அந்த கூட்டணி அரசாங்கம், மாஸ்கோ அரசு மாநாட்டை நடத்தியது. இந்த தருணம் வரையில், கெரென்ஸ்கி ஓர் இராணுவ ஒடுக்குமுறையை நடத்தவும் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தைத் திணிக்கவும் கோர்னிலோவ் உடன் சேர்ந்து சதிதிட்டம் வகுத்து வந்தார். அம்மாநாடு கோர்னிலோவ்வை வெற்றி நாயகனாக புகழ்ந்தது, கடேட் கட்சியின் பிரதிநிதிகளும் முடியாட்சி பிரதிநிதிகளும் சோவியத்துக்களை குற்றஞ்சாட்டினர்.

போல்ஷிவிக்குகள் அம்மாநாட்டை புறக்கணிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை, அவர்கள் மாஸ்கோ தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்புவிடுத்தனர், அது அம்மாநாடு நடந்த நாட்கள் முழுவதும் அந்நகரை முடக்கி இருந்தது.

ஜூலை நாட்களின் ஒடுக்குமுறையின் தாக்கமும், ஜேர்மன் தங்க அவதூறும் ஒருசில வாரங்களுக்குள் சிதறிப் போனது. அதிகாரம் மீதான கூட்டணி அரசாங்கத்தின் பிடி தொடர்ந்து நழுவியது. பிராவ்தா அலுவலங்களைச் சூறையாடி அது போல்ஷிவிக்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த அந்நேரத்தில், கெரென்ஸ்கியின் இராணுவ நடவடிக்கையின் தோல்வியால் ஒரு மலைப்பூட்டும் அடியைச் சந்தித்தது. ஜூலை 6 அன்று, ஜேர்மனியர்கள் அவர்களின் எதிர்தாக்குதலைத் தொடங்கி, விரைவிலேயே ரஷ்யாவின் தென்மேற்கு முகப்பிலிருந்த டர்னோபோலை (Tarnopol) மீண்டும் கைப்பற்றினர்.

ஜூலையின் இரண்டாவது பாதியிலும், ஆகஸ்டின் முதல் வாரங்களிலும் அரசியல் நிலைமையை ரபினோவிட்ச் பின்வருமாறு விவரிக்கிறார்:

ஒவ்வொரு நாளின் புதிய செய்திகளும், கிராமப்புறங்களில் நில-வேட்கை கொண்ட விவசாயிகளிடையே அராஜகமும் வன்முறையும்; நகரங்களில் ஒழுங்கீனங்களும் விரிவடைந்து வந்ததையும்; ஆலை தொழிலாளர்களிடையே போர்க்குணம் அதிகரித்து வந்ததையும்; ஃபின்கள் (Finns) மற்றும் உக்ரேனியர்களிடம் இருந்து வந்த முழு சுயாட்சியை நோக்கிய இயக்கங்களை அரசாங்கம் தடுக்க திராணியற்று இருந்ததை குறித்தும்; முகப்பிலும் பின்புலத்திலும் சிப்பாய்கள் தொடர்ந்து தீவிரமயப்பட்டதைக் குறித்தும்; அத்தியாவசிய பொருட்களினது உற்பத்தி மற்றும் வினியோகம் நாசகரமாக முறிந்து வந்ததையும்; விலைகள் விண்ணை எட்டி வந்ததையும்; போல்ஷிவிக்குகளின் செல்வாக்கு மீள்எழுச்சி பெற்று விரிவடைந்து வந்ததையும் கொண்டு வந்தன; இத்தகைய சிக்கல்களில் இருந்து, பிரதான அரசியல் குழுக்களிலேயே இவர்கள் மட்டுமே இலாபமடைந்தவர்களாக தெரிந்தார்கள், ஆறாம் மாநாட்டுக்குப் பின்னர், ஓர் ஆயுத கிளர்ச்சியை ஒழுங்கமைக்க ஒரு முன்கூட்டிய சந்தர்ப்பத்திற்காக அவர்கள் பொறுமையிழந்து காத்திருந்ததாக தெரிந்தது. [8]

ஆகஸ்ட் தொடக்கத்தில், போல்ஷிவிக்குகள் வளர்ச்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்தனர். ஆகஸ்ட் மாத கடைசி நாளில், கோர்னிலோவ்வினது சதி தோல்வியடைந்ததை தொடர்ந்து, பெட்ரோகிராட் சோவியத்தில் முதல்முறையாக போல்ஷிவிக்குகள் பெரும்பான்மையை வென்றனர்.

ஜூலை நாட்களைத் தொடர்ந்து உடனடியாக, லெனின் அதன் போக்கில் கூர்மையான மாற்றத்திற்காக போல்ஷிவிக் கட்சி தலைமைக்குள் போராட்டம் தொடங்கினார். அக்டோபர் புரட்சி தயாரிப்புக்கான இந்த முக்கிய புள்ளிக்கும் லெனினின் அவரது அரசும் புரட்சியும் படைப்பில் மேலெழுப்பிய பிரச்சினைகளுக்கும் இடையே இங்கே ஒரு தெளிவான தொடர்புள்ளது.

லெனின், மத்திய குழுவின் முன்னணி அங்கத்தவர்களுடனான ஜூலை 6 கூட்டத்தில், ஜூலை நாட்கள் ஒப்பீட்டளவில் புரட்சியின் அமைதியான கட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை குறிப்பதாக வலியுறுத்தினார். அதிகாரம் எதிர்புரட்சிகர முதலாளித்துவ வர்க்கம் மற்றும் இராணுவத்தின் கரங்களில் ஒருங்குவிந்திருந்தன, மென்ஷிவிக்குகளும் சோசலிச-புரட்சியாளர்களும் மீட்டுப் பெறவியலாதளவில் இத்தகைய சக்திகளுடனான ஒரு கூட்டணிக்கு பொறுப்பேற்றிருந்தன. அதிகாரத்தை அமைதியாக தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவது குறித்த எந்தவொரு கருத்தும் கைவிடப்பட வேண்டியிருந்தது. “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற கோஷத்தை "அனைத்து அதிகாரங்களும் புரட்சிகர கட்சியான போல்ஷிவிக்-கம்யூனிஸ்டுகள் தலைமையிலான தொழிலாள வர்க்கத்திற்கே!” என்பதைக் கொண்டு பிரதியீடு செய்ய லெனின் வலியுறுத்தினார். கட்சி ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தயாரிப்பு செய்வதில் ஒருமுனைப்பட வேண்டியிருப்பதாகவும், அரசியல் நிலைமைகள் சாதகமான உடனேயே அதை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஜூலை 10 இல் லெனின் இந்த போக்கை விவரித்து, "அரசியல் நிலைமை” (The Political Situation) என்ற ஒரு கட்டுரை எழுதினார், இது ஆகஸ்ட் 2 இல் பிரசுரமானது. அதன் ஒரு பகுதி குறிப்பிட்டது:

"அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற இந்த முழக்கம் புரட்சியின் அமைதியான அபிவிருத்திக்கான ஒரு முழக்கமாக இருந்தது… இந்த முழக்கம் இனி பொருத்தமானதாக இல்லை, அதைப் பொறுத்த வரையில் அதிகாரம் கைமாறி உள்ளது என்பதையும், உண்மையில் சோசலிச-புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் முற்றிலுமாக புரட்சியைக் காட்டிக்கொடுத்துள்ளனர் என்பதையும் அது கணக்கில் எடுக்கவில்லை. என்ன உதவும் என்றால் நிலைமையைக் குறித்தும், தொழிலாளர்களது முன்னணிப் படையின் பொறுமை மற்றும் தீர்க்கமான நிலைப்பாடு குறித்தும், ஆயுதமேந்திய எழுச்சிக்காக படைகளின் தயார்நிலை குறித்தும் ஒரு தெளிவான புரிதல்... நாம் எந்தவிதமான அரசியலமைப்பு பிரமைகளோ அல்லது குடியரசு பிரமைகளோ கொண்டிருக்கக் கூடாது, ஒரு அமைதியான பாதை குறித்த பிரமைகளும் இனி வேண்டாம்... நாம் படைகளை ஒன்றுதிரட்டுவோம், அவற்றை மறுஒழுங்குபடுத்துவோம், ஆயுதமேந்திய எழுச்சிக்காக அவற்றை உறுதியோடு தயார்படுத்துவோம், இந்நெருக்கடியின் போக்கு நிஜமாகவே பாரியளவில், நாடு-தழுவிய அளவில் அதை அனுமதித்தால்... இந்த கிளர்ச்சியின் ஒரே நோக்கம், ஏழை விவசாயிகளின் ஆதரவுடன், நமது கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கண்ணோட்டத்துடன் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றுவதே ஆகும். [9]

இந்நேரத்தில் லெனின் கிளர்ச்சிக்கான தயாரிப்புகளில் சோவியத்துக்களைக் காட்டிலும் தொழிற்சாலை குழுக்களைக் ஒருமுனைப்படுத்துவது குறித்து பேசியதை ரபினோவிட்ச் எடுத்துரைக்கிறார்.

ஜூலை 13-14 இல் நடத்தப்பட்ட மத்திய குழுக் கூட்டத்தில், லெனின் தலைமறைவாக இருந்த நிலையில், "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற முழக்கத்தை கைவிடுவதற்கும், கிளர்ச்சிக்கான தயாரிப்புகளைத் தொடங்குவதற்கும் அழைப்புவிடுத்த லெனினின் ஆய்வறிக்கை வாக்களிப்பில் தோற்கடிக்கப்பட்டது. ஜூலை 26 இல் இருந்து ஆகஸ்ட் 3 வரையில் நடந்த ஆறாவது அகில-ரஷ்ய மாநாட்டில் தான், லெனினால், "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற அந்த முழக்கத்தை ஒதுக்கிவிட்டு, “எதிர்புரட்சிகர முதலாளித்துவ சர்வாதிகாரத்தை முழுமையாக நிர்மூலமாக்குவோம்!” என்ற முழக்கத்தை ஏற்குமாறு, சில சிரமத்துடன் உடன்பட வைக்க முடிந்தது.

ஆகஸ்ட் இறுதியில் கோர்னிலோவ்வின் தோல்வியைத் தொடர்ந்தும், பெட்ரோகிராட் சோவியத்தின் பெரும்பான்மையை போல்ஷிவிக்குகள் கைப்பற்றிய பின்னர் உடனடியாகவும், போல்ஷிவிக்குகள் “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” என்ற முழக்கத்தை மீட்டுயிர்ப்பித்தனர். ஆனால் லெனின் உடனடியாக, முன்கூட்டிய ஆயுத கிளர்ச்சிக்கான தயாரிப்பின் மீது அனைத்து முயற்சிகளையும் ஒருங்குவிக்க கட்சி தலைமைக்குள் ஒரு தீர்க்கமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இந்த அத்தியாயம் தான், அக்டோபர் புரட்சியின் மிக தீர்மானகரமான படிப்பினையை —சோசலிச புரட்சியில், தொழிலாள வர்க்க புரட்சிகர கட்சியினது பிரமாண்டமான மற்றும் இன்றியமையாத பாத்திரத்தை— முன்னுக்குக் கொண்டு வருகிறது. லெனின், சோவியத்துக்களை, ரஷ்ய புரட்சிக்கு மட்டுமல்ல, உலக சோசலிசப் புரட்சிக்கே உலக-வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை என்பதையும், இவைதான் புரட்சிகர அங்கங்கள், இவற்றின் மூலமாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கியெறிந்து, முதலாளித்துவ அரசை இல்லாதொழித்து, அதை தொழிலாளர்களின் ஒரு நிஜமான ஜனநாயக அரசைக் கொண்டு பிரதியீடு செய்வதற்காக பெருந்திரளான மக்களை அணிதிரட்ட முடியும் என்பதையும் முழுமையாக உணர்ந்திருந்தார்.

இருப்பினும் லெனின் சோவியத்துக்களை உயர்ந்தவடிவமான ஒன்றாக்கவில்லை. புரட்சிக்கு அவசியமானால், அந்த சமரசத்தால் ஆதிக்கத்திற்குட்பட்ட சோவியத்துக்களை உடைக்கவும், புரட்சிக்கான பிரதான அங்கங்களாக தொழிற்சாலை குழுக்கள் போன்ற போராட்டத்திற்கான புதிய அங்கங்களைக் கட்டமைக்கவும் அவர் தயாராக இருந்தார். சோவியத்துக்களால், அது கண்கூடாக தெரிந்த விதத்தில், போல்ஷிவிக்குகள் வழங்கிய தலைமையின் காரணமாகவும், முதலாளித்துவ வர்க்கத்தின் முகவர்களாக மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச-புரட்சியாளர்களை கட்சி இடைவிடாது அம்பலப்படுத்தியதாலும் அவற்றின் புரட்சிகர பணிகளைச் செயல்படுத்த முடிந்திருந்தது. இது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் மற்றும் தக்க வைப்பதற்கும் தொழிலாள வர்க்க முன்னணிப்படையை தெளிவுபடுத்துவதில் மற்றும் தயார்படுத்துவதில் தீர்க்கமாக இருந்தது.

போல்ஷிவிக் கட்சியின் போராட்டமும் —மற்றும் கட்சிக்குள் இருந்த வலதுசாரி கன்னைக்கு எதிராக, ட்ரொட்ஸ்கியின் ஆதரவுடன், லெனினின் போராட்டமும்— இல்லாமல், மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச-புரட்சியாளர்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அழுத்தத்தை சோவியத்துக்களால் கடந்து வந்திருக்க முடியாது, அவை நசுக்கப்பட்டிருக்கும்.

சோவியத்துக்களுக்கு எதிராக ஓர் இராணுவ ஒடுக்குமுறைக்காக கோர்னிலோவ்வுடன் சதி செய்த கெரென்ஸ்கி, ஆகஸ்ட் 27 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு முன்னதாக, கோர்னிலோவ்வும் அவரை கைவிட உத்தேசிப்பதாக எச்சரிக்கை கிடைத்ததும் தான், தளபதிகளுடன் முறித்துக் கொண்டார். பெட்ரோகிராட் சோவியத் தலைவர்களின் பாகத்தில், கோர்னிலோவ் வெற்றி பெற்றால் அவர்களின் தலைகள் பலி மேடையில் வைக்கப்படுமென அஞ்சி, தொழிலாளர்களை ஆயுதமேந்தச் செய்யவும் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தகர்க்க அவர்களை அணிதிரட்டவும் உத்தியோகபூர்வமாக ஒரு பிரச்சாரம் தொடங்கினர்.

ஆனால் பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள், இடைக்கால அரசாங்கத்திற்கும் மற்றும் சோவியத் தலைமையிலிருந்த சமரசவாதிகளுக்கும் எதிரான போல்ஷிவிக்குகளது அரசியல் போராட்டத்தால் கல்வியூட்டப்பட்டிருந்த நிலையில், அவர்களே செம்படைகளை ஒழுங்கமைப்பதிலும் மற்றும் தளபதிகளைக் கைவிடுவதற்காக கோர்னிலோவ் அணிதிரட்டியிருந்த துருப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள சிப்பாய்களை இணங்கவைப்பதிலும் பெரும் முனைப்பை எடுத்தனர். போர்முனையிலிருந்து எந்தவொரு துருப்புகளும் தலைநகரில் நுழைவதற்கு முன்னரே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்தது.

கோர்னிலோவ் விவகாரத்திற்குப் பின்னர், அவர்அரசும் புரட்சியும் படைப்பை நிறைவு செய்து கொண்டிருக்கையில், லெனின் "புரட்சியின் அடிப்படை கேள்விகளில் ஒன்று" என்றவொரு கட்டுரை எழுதினார், (செப்டம்பர் 7 அல்லது 8 இல் எழுதப்பட்டு செப்டம்பர் 14 இல் பிரசுரிக்கப்பட்ட) இது அவரது தத்துவார்த்த படைப்புகளுக்கும் கையிலுள்ள நடைமுறைப் பணிகளுக்கும் இடையிலான நேரடி தொடர்பை வெளிப்படுத்தியது. அவர் எழுதினார்:

அரசு அதிகாரம் குறித்த கேள்வியை தவிர்த்துவிடவோ அல்லது ஒதுக்கிவிடவோ முடியாது ஏனெனில் அதுதான் புரட்சியின் அபிவிருத்தியில் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் முக்கிய கேள்வியாக உள்ளது. …

இருப்பினும், “சோவியத்துக்களுக்கே அதிகாரம்" என்ற முழக்கம், மிகப் பெரும்பாலும், பல விடயங்களில் இல்லையென்றாலும், “சோவியத் பெரும்பான்மை கொண்ட கட்சிகளின் மந்திரிசபை" என்பதை குறிப்பதற்காக முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது...” [அவ்வாறு கிடையாது.] “சோவியத்துக்களுக்கே அதிகாரம்" என்பது, ஜனநாயகரீதியிலான ஒவ்வொன்றையும் சேதப்படுத்தும் அதிகாரத்துவ எந்திரமான, முழுமையான பழைய அரசு எந்திரத்திற்கு விரைவாக மறுவடிவம் கொடுப்பதைக் குறிக்கிறது. அதன் அர்த்தம், இந்த எந்திரத்தை அகற்றிவிட்டு, ஒரு புதிய மக்களின் எந்திரத்தைக் கொண்டு, அதாவது, சோவியத்துக்களின் உண்மையான ஜனநாயக எந்திரத்தைக் கொண்டு, அதாவது, தொழிலாளர்கள், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகள் என மக்களில் ஒழுங்கமைந்த மற்றும் ஆயுதமேந்திய பெரும்பான்மையைக் கொண்டு பிரதியீடு செய்வதாகும். இதன் அர்த்தம், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல, மாறாக சீர்திருத்தங்கள் மற்றும் பல்வேறு இதர மாற்றங்களை நடைமுறையில் கொண்டு வரும் வகையில், அரசு நிர்வாகத்திலும் மக்களின் பெரும்பான்மையினரது முன்னெடுப்பையும் சுயாதீனத்தையும் அனுமதிப்பது என்பதாகும். [10]

தொழிலாள வர்க்கமும், சோசலிச புரட்சியும், அரசும்

இப்போது நாம் லெனினின் அரசும் புரட்சியும் படைப்பின் சாராம்சத்திற்குத் திரும்புவோம்.

அரசு குறித்தும் மற்றும் அரசு சம்பந்தமாக பாட்டாளி வர்க்க புரட்சியின் பணிகள் குறித்தும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் அடிப்படை கல்வியைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

* எல்லா அரசுகளும் சுரண்டப்படும் வர்க்கங்களை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக பாத்திரம் வகிக்கின்றன;

* முதலாளித்துவ அரசமைப்பை தகர்த்து தூக்கியெறிந்து, முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தின் இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை (அதாவது, தொழிலாளர்களின் ஜனநாயகத்தை) தொழிலாள வர்க்கம் ஸ்தாபிக்க வேண்டியுள்ளது;

* இப்பணியைச் செய்ய தொழிலாள வர்க்கம் தனது பலத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது;

* பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஆளும் வர்க்க எதிர்ப்பை நசுக்கி, சோசலிச கட்டமைப்பிலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுவதற்கான அடித்தளத்தை அமைப்பதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வகிக்க வேண்டிய பாத்திரமாகும், இதில் வர்க்க பேதங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, “ஒவ்வொருவரும் அவரவர் வேலைக்கேற்ப எனும்" கோட்பாடு "ஒவ்வொருவரும் அவரவர் இயலுமைக்கேற்ப, ஒவ்வொருவரும் அவரவர் தேவைகளுக்கேற்ப" என்ற கோட்பாட்டைக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

* கம்யூனிசத்தின் கீழ் அரசு என்பதே உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.

இந்த கருத்துருக்கள், லெனின் அரசும் புரட்சியும் எழுதிய போது சோசலிச இயக்கத்தினுள் பெரும் சர்ச்சைக்குள் இருந்தன.

இவை, 1899 இல் எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாத அறிக்கையான சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் பிரசுரிக்கப்பட்டதில் தொடங்கி, பல தசாப்தங்களாக சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாத கூறுபாடுகளின் திட்டமிட்ட தாக்குதலின் கீழ் இருந்தன. புரட்சி குறித்த மார்க்சிஸ்ட் கருத்துருவை பகிரங்கமாக நிராகரித்த பேர்ன்ஸ்டைன், தொழிலாள வர்க்கம் நாடாளுமன்றத்தின் மூலமாக படிப்படியாக எட்டும் சமூக சீர்திருத்த வழியில்தான் சோசலிசத்தை அடைய முடியுமென வாதிட்டார். அவர், மார்க்சின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான கருத்துருவை, லூயி புளோங்கி (Louis Blanqui) அறிவுறுத்திய சூழ்ச்சி மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு முறைகளைத் தழுவுவதாகும் என்று தாக்கினார்.

ஆனால் அரசு குறித்த கேள்வி மீதான குழப்பம், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி நிறுவப்பட்ட 1875 இல் இருந்தே இருந்து வந்தது. மார்க்ஸ், அவரின் பிரபலமான கோத்தா வேலைத்திட்டம் மீதான விமர்சனம் (Critique of the Gotha Program) என்பதில், அக் கட்சியின் ஸ்தாபக வேலைத்திட்டமான அது, "மக்களின் சுதந்திர அரசுக்கு" அழைப்புவிடுத்ததை கடுமையாக விமர்சித்தார். இந்த முழக்கம் புரட்சியால் ஸ்தாபிக்கப்படும் அரசின் வர்க்க இயல்பை வரையறுக்காமல் கைவிடுகிறது என்பது மட்டுமல்ல, “மக்களின்" என்ற வெற்று வார்த்தைக்குப் பின்னால், புதிய அரசானது அனைத்து வர்க்க ஆளுமையிலிருந்தும் "சுதந்திரமாக" இருக்கும் என்று அறிவுறுத்தியது —இது எந்த அரசுக்கும் சாத்தியமற்றதாகும்.

அரசும் புரட்சியும் படைப்பில் லெனின் சுட்டிக்காட்டுவதைப் போல, மார்க்ஸ் விமர்சனங்களின் சரியானதன்மையை ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தலைமை உத்தியோகபூர்வமாக ஆமோதித்த போதினும், 1886 இல் அக்கட்சி தலைவர் ஆகுஸ்ட் பெபெல், நமது நோக்கங்கள் (Our Aims) என்று தலைப்பிட்ட அவரின் 1872 துண்டறிக்கையை எவ்வித மாற்றமும் இன்றி மறுபிரசுரம் செய்தார், அது பின்வருவதை உள்ளடக்கி இருந்தது: “ஆகவே அரசு என்பது வர்க்க ஆட்சியின் அடிப்படையிலிருந்து மக்களின் அரசு என்பதற்கு மாற்றப்பட வேண்டும்,” என்றிருந்தது.

மேலே குறிப்பிட்டவாறு, அரசு பற்றிய மார்க்சிச கருத்துரு மீதான திரித்தல்களானது, மென்ஷிவிக்குகளால் போர் மற்றும் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கான அவர்களது ஆதரவை நியாயப்படுத்தவும், மற்றும் முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிந்து தொழிலாளர்களின் ஓர் அரசை நிறுவுவதற்கு சோவியத்துக்களை பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் வரலாற்று சடவாதத்தைப் பயன்படுத்தி மனிதயின நாகரீக பரிணாமத்தின் ஆய்விலிருந்து தருவித்த அரசு பற்றிய அடிப்படை கருத்துருவுக்கு, ஏங்கெல்ஸின் நிறைய மேற்கோள்கள் மூலமாக, சாதகமாக விளக்கமளிப்பதற்காக, லெனின் அரசும் புரட்சியும் படைப்பின் முதல் அத்தியாயத்தை அர்ப்பணித்திருந்தார்.

ஏங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (1884) என்பதிலிருந்தும், டூரிங்கிற்கு-மறுப்பு இன் (Anti-Dühring) மூன்றாம் பதிப்பில் அவர் முன்னுரையிலிருந்தும் (1894) லெனின் மேற்கோள் காட்டியிருந்தார். இந்த அத்தியாயத்தில் உள்ளடங்கிய முக்கிய கருத்துக்களின் தொகுப்புரையை மட்டுமே இங்கே காட்டுவது சாத்தியமாகும்.

முதலாவது: அரசு என்பது ஆதியிலிருந்து இருந்து வந்ததல்ல. புராதன சமூகங்களுக்கு, மக்களுக்கு மேலே அரசு அதிகாரம் என்ற ஒன்று இருப்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. சமரசப்படுத்தவியலாத எதிர்விரோத சமூக வர்க்கங்களாக சமூகம் பிளவுபட்ட போதுதான் அரசு என்ற ஒன்று தோன்றியது. ஒரு சிறப்பு பொது அதிகாரம் அவசியப்பட்டது, ஏனென்றால், ஏங்கெல்ஸின் வார்த்தைகளில், “வர்க்கங்களாக பிளவுபட்டிருந்ததால், சுய-நடவடிக்கை மேற்கொள்ளும் ஆயுதமேந்திய மக்களின் அமைப்பு என்பது சாத்தியமில்லாது இருந்தது.” வர்க்க மோதல் ஒன்றையொன்று விழுங்குவதைத் தடுப்பதற்காக, “மோதலை தணித்து, அதை 'ஒழுங்கமைப்பு' கட்டுக்களுக்குள் வைக்கும் வகையில், கண்கூடாக சமூகத்திற்கும் மேலே அமைந்த, ஒரு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.”

லெனின் பின்னர் அரசு குறித்த இந்த கருத்துருவின் இரண்டு விதமான திரித்தல் மற்றும் பொய்மைப்படுத்தலுக்கு எதிராக வாதிடுகிறார். முதலாளித்துவ வர்க்கமும் குட்டி-முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் முன்னெடுக்கும் மிகவும் குரூரமான வகை ஒன்றுள்ளது, இது, அரசு என்பது வர்க்கங்களைச் சமரசப்படுத்துவதற்கான ஓர் அங்கம் என்று வாதிடுகிறது. இதற்கு எதிராக ஏங்கெல்ஸை மேற்கோளிடும் லெனின், தொடர்ந்து குறிப்பிடுகையில், “மார்க்ஸ் கருத்துப்படி, அரசு என்பது வர்க்க மேலாதிக்கத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது, ஒரு வர்க்கம் மற்றொன்றை ஒடுக்குவதற்கான ஒரு அங்கமாக உள்ளது; வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தீவிரத்தைக் குறைத்து, இந்த ஒடுக்குமுறையைச் சட்டபூர்வமாக்கி நிலைக்க வைக்கும் 'ஒழுங்கமைப்பை' உருவாக்குவதே இதன் நோக்கமாகும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

இதையடுத்து மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை திரிக்கும் மிகவும் நேர்த்தியான வஞ்சகமான "காவுட்ஸ்கி வாத" திரித்தல் வகை ஒன்று உள்ளது. இது, அரசு என்பது வர்க்க மேலாதிக்கத்திற்கான ஓர் அங்கம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறது, என்றாலும் இந்த உண்மையிலிருந்து தர்க்கரீதியில் எழும் தீர்மானத்தை "மறந்துவிடுகிறது" அல்லது "மூடிமறைக்கிறது", இதை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அவர்களே 1848 புரட்சிகள் மற்றும் 1871 பாரீஸ் கம்யூன் குறித்த அவர்களின் பகுப்பாய்வுகளில் இருந்து வெளிப்படையாக வரைந்தளித்துள்ளனர்: அதாவது, (லெனினின் வார்த்தைகளில்) “ஒரு வன்முறையான புரட்சி இல்லாமல் மட்டுமல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட அரசு அதிகார எந்திரத்தை அழிக்காமலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் சுதந்திரம் சாத்தியமில்லை...” [11]

இரண்டாவது: ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கப்படும் வர்க்கம் மீதான ஓர் ஒடுக்குமுறை எந்திரமாக, ஒவ்வொரு அரசும், ஏங்கெல்ஸ் எதை "பொது அதிகாரம்" என்று குறிப்பிடுகிறாரோ, அத்தகையதை ஸ்தாபிக்கிறது, இது இன்றியமையாத விதத்தில் "வெறுமனே ஆயுதமேந்திய நபர்களை மட்டுமல்ல, மாறாக கண்ணியமான [குலமரபு] சமூகத்திற்கே தெரியாதவாறு, மேலதிக சடப்பொருட்கள், சிறைச்சாலைகள், மற்றும் அனைத்து வகையான அச்சுறுத்தும் அமைப்புகளையும்" உள்ளடக்கி இருக்கும். நிலையான இராணுவமும் பொலிஸூம் அரசு அதிகாரத்தின் தலையாய கருவிகளாக உள்ளன.

இது வர்க்க சமூகத்தின் முந்தைய எல்லா கட்டங்களையும் விடவும், நாடாளுமன்றம், “சுதந்திர பத்திரிகைகள்", இன்னும் இதுபோன்ற ஏனையவற்றை கொண்ட முதலாளித்துவ வர்க்க ஜனநாயக குடியரசு உள்ளடங்கலாக முதலாளித்துவத்தினை விட குறைவான ஒன்றல்ல. லெனின் விவரிக்கிறார், “பண்டைய அரசுகளும் மற்றும் நிலப்பிரபுத்துவ அரசுகளும் மட்டுமே, அடிமைகளையும் பண்ணைக் குடியானவர்களையும் சுரண்டும் அங்கங்களாக இருந்தன என்பதில்லை, மாறாக [ஏங்கெல்ஸை மேற்கோளிடுகிறார்] 'நவீன பிரதிநிதித்துவ அரசும், மூலதனத்திற்காக கூலி-உழைப்பை சுரண்டும் கருவியாக உள்ளது...'”

லெனின் எழுதுகிறார், உண்மையில்: “ஒரு ஜனநாயகக் குடியரசுதான் முதலாளித்துவத்திற்கு மிகவும் சாதகமான அரசியல் கவசமாக உள்ளது… அனைவருக்கும் வாக்குரிமையை, ஏங்கெல்ஸ் பெரிதும் திட்டவட்டமாக, முதலாளித்துவ மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக கருதினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் கூறுகிறார்… அனைவருக்குமான வாக்குரிமை என்பது 'தொழிலாள வர்க்க முதிர்ச்சிக்கான ஒரு குறியீடு; நவீன அரசியலும் இதைத் தவிர வேறொன்றுமாக இருக்காது, ஒருபோதும் இருக்கவும் முடியாது.'” [12]

மூன்றாவது: முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவும் சோசலிசத்தைக் கட்டமைக்க தொடங்கவும் மற்றும் வர்க்க சுரண்டல்கள் அனைத்தையும் இல்லாதொழிக்கவும், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசை தகர்த்து தூக்கியெறிந்து, தொழிலாளர்களின் ஓர் அரசை நிறுவ வேண்டும். இது ஒரு சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மையின் கருவியாக, வரலாற்றில் முதல் அரசாக இருக்கும். இது, ரஷ்யாவில் சோவியத்துக்கள் போன்ற, உழைக்கும் பெருந்திரளான மக்களின் அதிகாரத்திற்கான ஜனநாயக, சுய-நடவடிக்கை மேற்கொள்ளும் அங்கங்களின் அடிப்படையில், ஆயுதமேந்திய தொழிலாள வர்க்கத்தின் அரசாக இருக்கும். இது, செல்வந்தர்களுக்கு ஜனநாயகமாகவும் ஏழைகளுக்கு ஒடுக்குமுறையாகவும் விளங்கும் முதலாளித்துவத்தின் கீழான குரூர ஜனநாயக நாடகத்திற்கு எதிராக பெருந்திரளான மக்களின் உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும்.

வரலாற்றில் இருந்த முந்தைய அரசுகளைப் போலன்றி, இந்த அரசு ஒரு வர்க்கமில்லா சமூகத்திற்கு மாறுவதற்கு இடமளித்து, அவ்விதத்தில் அரசை இல்லாதொழிக்கிறது, அரசு என்பதற்கு அப்போது அங்கே எந்த சமூக தேவையும் இருக்காது. டூரிங்கிற்கு- மறுப்பு என்ற நூலின் மூன்றாம் பதிப்பிற்கான ஏங்கெல்ஸின் முன்னுரையிலிருந்து லெனின் மேற்கோளிடுகிறார், அதில் ஏங்கெல்ஸ் எழுதுகிறார்:

அரசு, உண்மையிலேயே ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியாக முன்னுக்கு வருவதற்கான முதல் நடவடிக்கையானது —அதாவது, சமூகத்தின் பெயரில் உற்பத்திக் கருவிகளை தன்வயப்படுத்தும் நிகழ்முறையானது— அதே நேரத்தில், அரசாக அதன் கடைசி சுயாதீனமான நடவடிக்கையாக இருக்கும். சமூக உறவுகளில் அரசின் தலையீடு, ஒரு துறை மாற்றி ஒரு துறையில், மிகைமிஞ்சி சென்று, பின்னர் அதுவே மடிந்துவிடுகிறது. மனிதர்களாலான அரசாங்கமானது, விடயங்கள் மீதான நிர்வாகத்தாலும், உற்பத்தி நிகழ்சிப்போக்கு நடைமுறைப்படுத்துவதாலும் பிரதியீடு செய்யப்படுகிறது. அரசு 'அழிக்கப்படுவதில்லை'. அதுவே உலர்ந்து உதிர்கிறது. [13]

லெனின் "நவீன சோசலிஸ்ட் கட்சிகள்" என்று எவற்றை அவர் அழைக்கிறாரோ அவற்றில் வியாபித்திருந்த திரித்தல்களைத் தாக்குகிறார், இக்கட்சிகள் அராஜகவாத கோட்பாட்டாளர்களை (anarchists அரசு-ஒழிப்பு கோட்பாட்டாளர்கள்) தாக்குவதற்காக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் இந்த கருத்துக்களையும், இதுபோன்ற கருத்துக்களையும் தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து அல்ல, அதாவது இடதிலிருந்து அல்ல, மாறாக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசின் நிலைப்பாட்டிலிருந்து, அதாவது வலதிலிருந்து, மேற்கோளிடுகின்றன. இவை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை தங்களின் அதிகாரபூர்வமானவர்களாக மேற்கோளிட்டு, அரசு அழிக்கப்படுவதில்லை, அது அதுவாகவே உலர்ந்து உதிர்கிறது என்று அறிவித்து, அரசை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டுமென்ற அராஜகவாத கோட்பாட்டாளர்களின் கோரிக்கையை எதிர்க்கின்றனர்.

“உண்மையின் ஒரு விடயமாக", லெனின் எழுதுகிறார், “ஏங்கெல்ஸ் இங்கே பாட்டாளி வர்க்க புரட்சியால் முதலாளித்துவ அரசு அழிக்கப்படுவதைக் குறித்து பேசுகின்ற அதேவேளையில், அது உலர்ந்து உதிர்வது குறித்த வார்த்தைகள் சோசலிச புரட்சிக்குப் பின்னரான பாட்டாளி வர்க்க அரசுமுறை பற்றி குறிக்கிறது. ஏங்கெல்ஸைப் பொறுத்த வரையில், முதலாளித்துவ அரசு 'உலர்ந்து உதிர்வதில்லை', மாறாக புரட்சியின் ஊடாக பாட்டாளி வர்க்கத்தால் 'முடிவுக்குக் கொண்டு' வரப்படுகிறது. புரட்சிக்குப் பின்னர் எது உலர்ந்து உதிர்கிறது என்றால், பாட்டாளி வர்க்க அரசு அல்லது அரை-அரசே உலர்ந்து உதிர்கிறது.” [14]

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இன் 1847 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யிலிருந்து தொடங்கி 1848 மற்றும் 1851 இடையே பிரான்சில் நடந்த புரட்சிகர போராட்டங்களைக் குறித்த அவர்களின் எழுத்துக்கள் (பிரான்சில் வர்க்க போராட்டங்களும், லூயி நெப்போலியனின் பதினெட்டாவது புரூமர்) மற்றும் பாரீஸ் கம்யூன் குறித்த அவர்களின் எழுத்துக்கள் (பிரான்சில் உள்நாட்டு போர்) வரையில், அவர்கள் பரிணாம வளர்ச்சிசெய்து மற்றும் திடப்படுத்திய நிலைப்பாட்டிலிருந்து, லெனின் அரசு குறித்த அவர்களின் எழுத்துக்களை மிகவும் கவனமாக மீளாய்வு செய்யஅரசும் புரட்சியும் படைப்பில் ஒரு கணிசமான பகுதியை அர்ப்பணிக்கிறார்.

மார்க்ஸ், தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய மூலோபாய புரட்சிகர அனுபவங்களின் பகுப்பாய்விலிருந்து அரசியல் படிப்பினைகளை எடுத்தார், அது அரசு அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் மற்றும் அது ஸ்தாபிக்கும் அரசின் இயல்பைக் குறித்த அவரின் புரிதல்களை ஆழப்படுத்தியதாக லெனின் வலியுறுத்துகிறார். அரசு குறித்து மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்துருக்கள் பரிணமிக்க வழிநடத்திய விஞ்ஞானபூர்வ, சடவாத, வரலாற்று மற்றும் முறையான அணுகுமுறை மீதான கேள்வியை லெனின் வெளிப்படையாக உயர்த்துகிறார். 1848 பிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து அரசு குறித்த மார்க்சின் எழுத்துக்களில் இருந்த வளர்ச்சியை விவாதித்து அவர் குறிப்பிடுகிறார்:

அவரது இயங்கியல் சடவாத மெய்யியலுக்கு உண்மையாக இருந்து, மார்க்ஸ், 1848-1851 மாபெரும் புரட்சிகர ஆண்டுகளின் அனுபவங்களை அடித்தளமாக எடுக்கிறார். இங்கே, ஒவ்வொரு விடயத்தையும் போல, அவர் கல்வியானது அனுபவத்தின் தொகுப்பாக உள்ளது, ஓர் ஆழ்ந்த உலகளாவிய மெய்யியல் கருத்துருவாலும் மற்றும் வரலாறு குறித்த வளமான அறிவாலும் ஒளிர்ந்தது. [15]

பிரான்சில் உள்நாட்டு போர் (The Civil War in France) என்பதில் பாரீஸ் கம்யூன் பற்றிய மார்க்சின் எழுத்துக்களின் மீதான அவரது மீளாய்வில், லெனின் இவ்வாறு கருத்துரைக்கிறார்:

மார்க்ஸ், கற்பனாவாதத்தில் தஞ்சமடையவில்லை, இந்த பாட்டாளி வர்க்க அமைப்பு ஆளும் வர்க்கமாவதற்குரிய துல்லியமான வடிவங்களைப் பெறுவதிலும், மற்றும் மிகவும் முழுமையாக, மிகவும் சீரான "ஜனநாயகத்தை நிறுவுவதற்கு" எந்த விதத்தில் இந்த அமைப்பு ஒருங்கிணையுமோ அந்த துல்லியமான விதம் ஏற்படுவதற்கும் இருந்த பிரச்சினைக்கான பதிலைக் கண்டறிய, பாரிய இயக்கத்தின் அனுபவத்திற்காக காத்திருந்தார். [16]

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களுக்காக, கண்டுபிடித்து பயன்படுத்தக்கூடிய விதிகளைக் கொண்ட ஒரு புறநிலை வரலாற்று நிகழ்வுபோக்காக சோசலிச புரட்சியைக் கையாண்ட இந்த கடினமான, விஞ்ஞானபூர்வ அணுகுமுறை, அரசும் புரட்சியும் படைப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. லெனின், தலைமறைவாக இருந்தும், புரட்சிக்கு மாற்றீட்டையும் அல்லது எதிர்புரட்சியையும் முகங்கொடுத்திருந்த போதினும், இவ்விதத்தில் தான் சோவியத் அதிகாரத்திற்கான போராட்டம் மீதான கேள்வியை அணுகினார்.

இந்த உள்ளடக்கத்தில், “ரஷ்ய புரட்சியை ஏன் படிக்க வேண்டும்?” என்று தலைப்பிட்டு டேவிட் நோர்த் வழங்கிய இந்த தொடர் சொற்பொழிவின் முதல் உரையின் ஏழாவது காரணத்தை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும்.

ரஷ்ய புரட்சி விஞ்ஞானபூர்வ சமூக சிந்தனையின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய அத்தியாயமாக ஆழ்ந்த ஆய்வைக் கோருகிறது. 1917 இல் போல்ஷிவிக்குகளின் வரலாற்று சாதனை, விஞ்ஞானபூர்வ சடவாத மெய்யியலுக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான இன்றியமையா உறவை எடுத்துக்காட்டியது மற்றும் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தியதுமாகும். [17]

லெனின், 1848 இன் ஐரோப்பிய புரட்சிகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யைமேற்கோளிட்டு, 1848 மற்றும் 1871 சம்பந்தமாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்கள் மீதான அவர் மீளாய்வைத் தொடங்குகிறார். அது "பாட்டாளி வர்க்க அதிகாரத்திற்கான அடித்தளம்" அமைத்து "முதலாளித்துவத்தை வன்முறையாக தூக்கிவீசுவதை" குறித்து பேசுகிறது, மற்றும் அதிலிருந்து உருவாகும் அரசை "ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கமாக" குணாம்சப்படுத்துகிறது.

1848 பாரிஸ் தொழிலாள வர்க்க எழுச்சி மற்றும் முதலாளித்துவ குடியரசால் அது இரத்தக்களரியுடன் ஒடுக்கப்பட்டமை, அதைத் தொடர்ந்து டிசம்பர் 1851 இல் லூயி நெப்போலியனின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆகியவற்றிலிருந்து, மார்க்ஸ் தொலைநோக்கு பார்வையுடன் தீர்மானங்களை வரைந்திருந்தார். பதினெட்டாவது புரூமர் (Eighteenth Brumaire) என்ற கட்டுரையில் அவர் எழுதினார்: “சகல புரட்சிகளும் இந்த [அரசு] எந்திரத்தை உடைத்தெறிவதற்கு பதிலாக இன்னும் அதிக துல்லியமான நிலைமைக்கு கொண்டு வந்தன,” அதாவது தொழிலாள வர்க்கம் முதலாளித்து அரசை "உடைக்க" வேண்டியிருக்கும் என்பதை அவர் உணர்த்துகின்றார்.

இந்த வாக்கியத்தைக் குறிப்பிட்டு, கம்யூன் உயிரோடிருந்த காலத்தில், மார்க்ஸ் ஏப்ரல் 1871 இல் லூயிஸ் கூகெல்மானுக்கு (Louis Kugelmann) ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் குறிப்பிட்டார்:

எனது பதினெட்டாவது புரூமர் கட்டுரையின் கடைசி அத்தியாயத்தை பார்த்தீராயின், பிரெஞ்சு புரட்சியின் அடுத்த முயற்சி, கடந்த காலத்தைப் போல, அதிகாரத்துவ மற்றும் இராணுவ எந்திரத்தை ஒரு கரத்திலிருந்து மற்றொரு கரத்திற்கு மாற்றுவதாக இருக்காது, மாறாக அதை உடைப்பதாக இருக்கும்; மேலும் அதுவே இக்கண்டத்தின் எந்தவொரு நிஜமான மக்கள் புரட்சிக்கும் முன்நிபந்தனையாக உள்ளது. அதைத்தான் பாரீஸில் நமது தைரியமான கட்சி தோழர்கள் முயற்சித்துள்ளார்கள் என்று நான் அறிவித்துள்ளதை நீங்கள் காண்பீர்கள். [18]

பாட்டாளி வர்க்க புரட்சியானது முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்தின் ஊழல்பீடித்த கட்டமைப்புகள் உட்பட பழைய முதலாளித்துவ அரசை தகர்த்து விட்டு, அதன் இடத்தில், முதலாளித்துவ எதிர்புரட்சியை ஒடுக்குகின்றதும் மற்றும் முழு சோசலிசத்திற்கான மற்றும் கம்யூனிசத்திற்கான மாற்றத்திற்கு நிலைமைகளை உருவாக்குகின்றதுமான முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்ட ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ வேண்டியிருக்கும் என்ற மார்க்ஸின் கருத்துருவை, பாரீஸ் கம்யூனும் அதன் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையும், பலப்படுத்தின.

மார்க்ஸ் மார்ச் 5, 1852 தேதியிட்டு ஜோசப் வெய்டெமெயருக்கு (Joseph Weydemeyer) எழுதிய கடிதம் ஒன்றில் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தினார், அதில் அவர் எழுதினார்:

எனது தரப்பில் புதியதாக இருந்தது என்னவென்றால், பின்வருவதை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது: (1) அதாவது, வர்க்கங்களின் இருப்பு, உற்பத்தி அபிவிருத்தியிலிருந்து எழும் குறிப்பிட்ட வரலாற்று போராட்டங்களுடன் மட்டுமே தொடர்புபட்டுள்ளது (2) வர்க்கப் போராட்டமானது கட்டாயமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது; (3) இந்த சர்வாதிகாரமே அனைத்து வர்க்கங்களையும் இல்லொழிப்பதற்கும் மற்றும் வர்க்கமற்ற சமூகத்திற்கு மாறுவதற்காகவும் அமைகிறது. [19]

“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்பதம் குறித்து, லெனின், பிரான்சில் உள்நாட்டு போர் படைப்பின் மூன்றாம் பதிப்பிற்கான ஏங்கெல்ஸின் 1891 தேதியிட்ட முன்னுரையை மேற்கோளிடுகிறார்:

எவ்வாறிருப்பினும், யதார்த்தத்தில், அரசு என்பது ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம் என்பதற்கு கூடுதலாக ஒன்றுமில்லை, மேலும் உண்மையில் அது ஜனநாயகக் குடியரசு என்றாலும் முடியாட்சி என்பதற்கு குறைந்ததில்லை. …

பிற்பகுதியில், அந்த ஜேர்மன் பிலஸ்தீனுக்கு மீண்டுமொருமுறை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அந்த வார்த்தைகளின் ஒட்டுமொத்த பயங்கரம் மேலோங்குகிறது. சரி, நல்லது, கணவான்களே, சர்வாதிகாரம் எப்படி இருக்குமென நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? பாரீஸ் கம்யூனைப் பாருங்கள். அதுவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். [20]

லெனின் சுட்டிக் காட்டுவதைப் போல, மார்க்ஸ் பிரான்சில் உள்நாட்டு போர் என்பதில் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்திற்கும் மற்றும் கம்யூன் அங்கத்தவர்கள் கட்டமைக்க இருந்த அரசுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளையும், எதிர்விரோதங்களையும் வலியுறுத்தினார். “கம்யூனின் முதல் உத்தரவாணை … நிரந்தர இராணுவத்தை ஒடுக்குவதும், ஆயுதமேந்தியவர்களை கொண்டு அதை பிரதியீடு செய்வதுமாக இருந்தது,” என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். பொலிஸ் என்பது, கம்யூனின் "பொறுப்பான மற்றும் எந்நேரத்திலும் கலைக்கப்படத்தக்க" முகவர்களாக மாற்றப்பட்டார்கள்.

அனைவருக்கும் வாக்குரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் எத்தருணத்திலும் பதவிநீக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்ற உண்மை, அனைத்து அரசு அதிகாரிகளது சம்பளம் சராசரி தொழிலாளர்கள் விட அதிகமாக இருக்காது, நீதிமான்களும் நீதிபதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக, பொறுப்பானவர்களாக, திரும்ப பெறத்தக்கவர்களாக இருப்பார்கள் ஆகிய பிற கூறுபாடுகளை மார்க்ஸ் உயர்த்திக் காட்டினார். அனைத்திற்கும் மேலாக, கம்யூன் ஒரு நாடாளுமன்ற அமைப்பாக இருக்காது, அதேநேரத்தில் செயல்படும் நிர்வாகமாக, செயல்படும் சட்டமன்றமாக இருக்கும்.

லெனின் கருத்துரைக்கிறார்:

ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து ஒரு பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்காக, ஒடுக்குவோரின் ஜனநாயகத்திலிருந்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் ஜனநாயகத்திற்காக, அரசு என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் "ஒடுக்குமுறைக்கான சிறப்பு அதிகாரமாக" இருப்பதிலிருந்து பெரும்பான்மை மக்களின் —அதாவது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்— ஒட்டுமொத்த படையால் ஒடுக்குவோரை ஒடுக்குவதற்காக உடைகிறது என்பது வேறெங்கேயும் விட இங்கே மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. துல்லியமாக இந்த மிக அதிர்வூட்டும் புள்ளியில் தான், ஒருவேளை மிக முக்கியமாக அரசு குறித்த பிரச்சினையைப் பொறுத்த வரையில், மார்க்சின் கல்வி முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுள்ளது! [21]

அரசும் புரட்சியும் இறுதி அத்தியாயம், அரசு சம்பந்தமாகவும் அதன் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றவாதம் குறித்த பெருமைபீற்றல்கள் சம்பந்தமாகவும், மார்க்சிசம் மீதான சந்தர்ப்பவாத விதிவிலக்கல்களுக்கு எதிராக விவாதத்தை அபிவிருத்தி செய்கிறது. லெனின் காவுட்ஸ்கி மீதான அவரது தாக்குதலில் ஒருங்குவிக்கிறார்.

பேர்ன்ஸ்டைனின் திரித்தல்வாத அறிக்கையான சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகளுக்கான காவுட்ஸ்கியின் பதிலுடன் தொடங்கும் அவர், பாட்டாளி வர்க்க புரட்சியின் பணி நடப்பு அரசு எந்திரத்தைக் காப்பாற்றி வைப்பதல்ல, மாறாக "அதை உடைப்பதாகும்" என்று 1852 இன் மிக தொடக்கத்தில் மார்க்ஸ் வலியுறுத்திய உண்மையை காவுட்ஸ்கி தட்டிக்கழித்து விடுவதைச் சுட்டிக்காட்டுகிறார். காவுட்ஸ்கியை மேற்கோளிட்டு லெனின் எழுதுகிறார்:

பேர்ன்ஸ்டைனுக்கான எதிர்ப்பில் காவுட்ஸ்கி எழுதினார், “பாட்டாளி வர்க்க சர்வாதிகார பிரச்சினைக்கான தீர்வை,” “பாதுகாப்பாக நாம் எதிர்காலத்திடம் விட்டுவிடுவோம்.” இது பேர்ன்ஸ்டைனுக்கு எதிரான ஒரு எதிர்வாதமல்ல, மாறாக உண்மையில் இது அவருக்கான ஒரு விட்டுக்கொடுப்பாகும், சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிவதாகும்… [22]

காவுட்ஸ்கியின் 1902நூலான சமூக புரட்சி என்பதைப் பொறுத்த வரையில், லெனின், ஓர் எதிர்கால தொழிலாளர் அரசின் ஆட்சி வடிவங்களுக்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அதுபோன்றவொன்றுக்கும் இடையிலான அடிப்படை கருத்து வேறுபாடுகளைக் குறித்து காவுட்ஸ்கி உளறிக் கொட்டுவதன் மீது ஒருமுனைப்படுகிறார்.

டச் சோசலிசவாதி Anton Pannekoek, அவர் [காவுட்ஸ்கியின்] நிலைப்பாடுகள் மீது வைத்த ஒரு விமர்சனத்திற்கு காவுட்ஸ்கியின் பதிலுரை மீதான ஒரு விமர்சனத்துடன் லெனின் நிறைவு செய்கிறார். முந்தையவர் 1912 இல் "பாரிய மக்கள் நடவடிக்கையும் புரட்சியும்" என்று தலைப்பிட்டு பிரசுரித்த ஒரு கட்டுரையில், "செயலூக்கமற்ற தீவிரமயப்படலுக்காக" காவுட்ஸ்கியை விமர்சித்திருந்தார். Pannekoek அப்போது, ரோசா லுக்செம்பேர்க் உட்பட சந்தர்ப்பவாதம் மீதான இடது விமர்சகர்களுடன் அடையாளம் காணப்பட்ட ஒரு சமூக ஜனநாயகவாதியாக இருந்தார். 1920 களில் அவர் அதிதீவிர-இடது நிலைப்பாடுகளை ஏற்றதுடன், பின்னர் சோவியத்-விரோத அரசு முதலாளித்துவ நிலைப்பாடுகளை தழுவினார்.

லெனினின் கருத்துப்படி, Pannekoek அவரது 1912 எதிர்விவாதத்தில், பாட்டாளி வர்க்க புரட்சியின் பணி "அரசு அதிகார கருவிகளையும்", "ஆளும் சிறுபான்மையின் அமைப்பையும்" அழிப்பதாகும் என்று எழுதியிருந்தார்.

காவுட்ஸ்கி அவரது பதிலுரையில், Pannekoek அராஜகவாதத்தை நோக்கி செல்வதாக குற்றஞ்சாட்டி எழுதுகையில்: “இதுவரையில், சமூக ஜனநாயகவாதிகளுக்கும் அராஜகவாத கோட்பாட்டாளர்களுக்கும் இடையிலான வித்தியாசம் இதில் தான் உள்ளடங்கி உள்ளது: முந்தையவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பபற்ற விரும்பினார்கள், அதேவேளையில் பிந்தையவர்களோ அதை அழிக்க விரும்பினார்கள். Pannekoek இரண்டையும் செய்ய விரும்புகிறார்.”

லெனின் எழுதுகிறார்: “சமூக ஜனநாயவாதிகளுக்கும் அராஜகவாத கோட்பாட்டாளர்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்த அவரது [காவுட்ஸ்கியின்] வரையறை முற்றிலும் தவறானது, மார்க்சிசம் முழுமையாக கொச்சைப்படுத்தப்பட்டு திரிக்கப்படுகிறது.”

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்கள் மீதான லெனினின் மீளாய்வு விரிவாக எடுத்துக்காட்டுவதைப் போல, மார்க்சிசம் நடப்பு அரசை தகர்ப்பதை எதிர்க்கிறது என்றுரைப்பது முற்றிலும் தவறானதாகும். வித்தியாசம் என்னவென்றால் அராஜகவாத கோட்பாட்டாளர்கள் தொழிலாள வர்க்கத்தால் ஒரு புதிய, பாட்டாளி வர்க்க அரசு ஸ்தாபிக்கப்படுவதை எதிர்க்கிறார்கள், ஆனால் அது இல்லாமல் முதலாளித்துவ வர்க்கத்தின் படுகொலை ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தால் தன்னை பாதுகாத்துக் கொள்ளவே இயலாது.

அனைத்து அதிகார வடிவங்களையும் நிராகரித்த அராஜகவாத கோட்பாட்டாளர்களின் நிராகரிப்புக்கு, ஏங்கெல்ஸ், "அதிகாரம் குறித்து" என்று தலைப்பிட்ட 1873 கட்டுரை ஒன்றின் ஒரு பந்தியில் மரணஅடியாக பதில் அளிக்கிறார், இதுஅரசும் புரட்சியும் படைப்பில் லெனினால் மேற்கோளிடப்படுகிறது:

ஆனால் அதிகார-எதிர்ப்புவாதிகள் (anti-authoritarians) அரசியல் நிலை ஒரேயடியில் இல்லாதொழிக்கப்பட வேண்டும், அதுவும் அதற்கு பிறப்பளித்த சமூக நிலைமைகள் அழிக்கப்படுவதற்கு முன்பாகவே, அழிக்கப்பட வேண்டுமென கோருகிறார்கள். அவர்கள், அதிகாரத்தை அழிப்பதே சமூகப் புரட்சியின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென கோருகிறார்கள். இந்த கனவான்கள் எப்போதேனும் ஒரு புரட்சியைக் கண்டிருக்கிறார்களா? ஒரு புரட்சியானது நிச்சயமாக அங்கே முற்றிலும் அதிகார விடயமாக இருக்கிறது; அது, மக்களின் ஒரு பிரிவினர் துப்பாக்கிகளையும், ஈட்டிகளையும், பீரங்கிகளையும் கொண்டு மற்றொரு பிரிவினர் மீது தங்களின் விருப்பத்தைத் திணிக்கும் ஒரு நடவடிக்கையாகும், அவை அனைத்தும் பெரிதும் அதிகார வழிவகையாக இருக்கும். ஜெயிக்கும் தரப்பு, பிற்போக்குவாதிக்களிடம் இருந்து கைப்பற்றிய அதன் ஆயுதங்களான பயங்கரவாத கருவிகளைக் கொண்டு அதன் ஆட்சியைப் பேண வேண்டியிருக்கும். பாரீஸ் கம்யூன் முதலாளித்துவத்திற்கு எதிராக அந்த ஆயுதமேந்தியவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இருந்திருக்காவிட்டால், ஒரு நாளுக்கு அதிகமாக அது நீடித்திருக்குமா? அதற்கு எதிர்முரணாக, அந்த அதிகாரத்தை அது மிகவும் குறைவாக பயன்படுத்திவிட்டதென நாம் பழிசாட்ட முடியாதா? ஆகவே இரண்டு விடயங்களில் ஒன்று: அதிகார-எதிர்ப்புவாதிகள் (anti-authoritarians) அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே பேசுகிறார்கள், இவ்விடயத்தில் அவர்கள் குழப்பத்தைத் தவிர வேறொன்றையும் உருவாக்கவில்லை; அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், இவ்விடயத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் செயலைக் காட்டிக்கொடுக்கிறார்கள். இரண்டு விடயத்திலேயும் அவர்கள் பிற்போக்குத்தனத்திற்கு மட்டுமே சேவையாற்றுகிறார்கள். [23]

லெனின்,அரசும் புரட்சியும் படைப்பில், மார்க்சிசத்திற்கும் அராஜகவாதத்திற்கும் (anarchism) இடையிலான வித்தியாசத்தை பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:

மார்க்சிஸ்டுகளுக்கும் அராஜகவாத கோட்பாட்டாளர்களுக்கும் இடையிலான வித்தியாசம் இதில் உள்ளடங்கியுள்ளது: (1) முன்னவர்களுக்கு, அரசை முழுமையாக அழிக்கும் நோக்கம் இருந்தாலும், இந்த நோக்கம் ஒரு சோசலிச புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர், சோசலிசம் ஸ்தாபிக்கப்பட்டு அரசு உலர்ந்து உதிருவதற்கு இட்டு சென்ற பின்னர் மட்டுமே கைவரப்பெற முடியுமென்பதை ஏற்றுக் கொள்கின்றனர்; பிந்தையவர்களோ, 24 மணி நேரத்திற்குள் அரசு முழுமையாக அழிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள், அதுபோன்று இல்லாதொழிப்பதற்கான நிலைமைகளை இவர்கள் புரிந்து கொள்வதில்லை; (2) முன்னவர்கள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றதும், பழைய அரசு எந்திரத்தை முழுமையாக தூக்கியெறிந்து விட்டு, அதனிடத்தில் கம்யூன் போன்ற வகைப்பட்ட ஆயுதமேந்திய தொழிலாளர்களின் ஓர் அமைப்பை உள்ளடக்கிய ஒன்றைக் கொண்டு பிரதியீடு செய்வதை அங்கீகரிக்கின்றனர்; பிந்தையவர்களோ, அரசு எந்திரத்தின் அழிப்பை அறிவுறுத்தினாலும், அதனிடத்தில் பாட்டாளி வர்க்கம் எதை நிலை நிறுத்தும் என்றோ, எவ்வாறு அதன் புரட்சிகர அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்பதைக் குறித்தோ முற்றிலும் எந்த தெளிவான கருத்துமின்றி உள்ளனர்; அராஜகவாத கோட்பாட்டாளர்கள் (Anarchists) அரசு அதிகாரத்தை புரட்சிகர பாட்டாளி வர்க்கம் பயன்படுத்துவதைக் கூட நிராகரிக்கிறார்கள்; (3) முன்னவர்கள், புரட்சிக்காக தொழிலாளர்களை தயார் செய்வதற்கான ஒரு கருவியாக நவீன அரசைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள்; பிந்தையவர்களோ இதை நிராகரிக்கிறார்கள். [24]

மார்க்சிசம் மீதான அடித்தளமற்ற முட்டாள்தனமான பொய்மைப்படுத்தலும் மற்றும் அதன் பெயரில் முதலாளித்துவ ஜனநாயக பிரமைகளது ஊக்குவிப்பும், Pannekoek க்கு காவுட்ஸ்கியின் பதிலில் இருந்து லெனின் மேற்கோளிட்ட ஒரு பந்தியில் தொகுத்தளிக்கப்படுகிறது:

பொது வேலைநிறுத்தத்தின் நோக்கம் ஒருபோதும் அரசை அழிப்பதற்காக இருக்க முடியாது, மாறாக சில குறிப்பிட்ட பிரச்சினைகள் மீது அரசாங்கத்திடம் இருந்து விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்கோ, அல்லது பாட்டாளி வர்க்கத்தை பாதி வழியில் சந்திக்க விரும்பும் ஒரு அரசாங்கத்தைக் கொண்டு விரோதம் கொண்ட ஓர் அரசாங்கத்தை பிரதியீடு செய்வதாகவோ மட்டுமே இருக்க முடியும்… ஆனால், எந்தவொரு நிலைமைகளின் கீழும், ஒருபோதும் அது (விரோதமான ஓர் அரசாங்கத்தின் மீது ஒரு பாட்டாளி வர்க்க வெற்றியானது) அரசு அதிகாரத்தின் ஒழிப்புக்கு இட்டுச் செல்லாது; அது அரசு அதிகாரத்திற்குள் சக்திகளுக்கு இடையிலான ஒரு குறிப்பிட்ட மாற்றங்களுக்கு மட்டுமே இட்டுச் செல்ல முடியும் … அப்படியாயின், நமது அரசியல் போராட்டத்தின் இலக்கு, முன்பிருந்ததைப் போலவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கான வழிவகை மூலமாக அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதாகவும், அரசாங்கத்தின் எஜமானராக நாடாளுமன்றத்தை மாற்றுவதாகவும் இருந்துவிடுகிறது. [25]

* * *

பிரான்சில் உள்நாட்டு போர் மீதான அவர் மீளாய்வில், லெனின், பாரீஸ் கம்யூனுக்கு மார்சின் விடையிறுப்பு குறித்து எழுதுகிறார்:

ஆனால் மார்க்ஸ், அவரே குறிப்பிட்டவாறு, "சொர்க்கத்தையே நடுநடுங்க வைத்த" கம்யூன் அங்கத்தவர்களின் சாகசவாதம் குறித்து மட்டும் உற்சாகத்தோடு இருக்கவில்லை. அவர், பாரிய புரட்சிகர இயக்கம் அதன் நோக்கத்தை எட்டவில்லை என்றாலும், அதை பிரமாண்ட முக்கியத்துவம் கொண்ட ஒரு வரலாற்று அனுபவமாக, உலக பாட்டாளி வர்க்க புரட்சியில் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றமாக, நூற்றுக் கணக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் விவாதங்களை விட நடைமுறையில் ஒரு மிக முக்கிய படியாக பார்த்தார். இந்த அனுபவத்தை பகுத்தாராய்வதற்கு, அதன் தந்திரோபாயங்களில் இருந்து படிப்பினைகளைப் பெறுவதற்கு, அது வழங்கிய புதிய வெளிச்சத்தில் அவர் தத்துவத்தை மறுஆய்வு செய்வதற்கு — அதுபோன்ற பிரச்சினை மார்க்ஸுக்கு கிடைத்தன. [26]

பாரீஸ் கம்யூன் மீதான மார்க்சின் அணுகுமுறையும், மார்க்சிசத்தின் தத்துவார்த்த மரபுக்கு லெனினின் அணுகுமுறையும், மற்றும் அக்டோபர் புரட்சியை நோக்கிய நமது இன்றைய அணுகுமுறையும் அதுபோலவே உள்ளது. மார்க்ஸ் மற்றும் லெனினை மட்டுமே பொறுத்த வரையில், இத்தகைய மாபெரும் போராட்டங்களின் படிப்பினைகளைக் குறித்தும் மற்றும் அவர்கள் எடுத்துக்காட்டிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான ஒரு பகுப்பாய்வும், உள்ளீர்ப்பும் மிக நெருக்கமாக சமகாலத்திய அரசியல் அபிவிருத்திகள் சம்பந்தமாக உள்வாங்கப்பட்டன மற்றும் நடத்தப்பட்டன, ஆகவே ரஷ்ய புரட்சியை இன்று நாம் நினைவு கூர்வதும் அவ்வாறே.

“இடது" என்றோ அல்லது "சோசலிஸ்ட்" என்று கூட பகட்டு வேடமிடும் பல்வேறு குட்டி-முதலாளித்துவ வர்க்க அமைப்புகள், உண்மையில், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அரசுடன் அணிசேர்ந்து வருகின்ற அதேவேளையில், அவை அக்டோபர் புரட்சிக்கு ஒன்று அலட்சியமாகவோ அல்லது அதிகரித்தளவில் விரோதமாகவோ உள்ளன, ஏனென்றால் அவை தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக உள்ளன என்பதோடு, இன்றைய முதலாளித்துவத்தை அது தூக்கிவீசுவதை எதிர்க்கின்றன.

ஆனால் முன்னொருபோதும் இல்லாத இன்றைய முதலாளித்துவ நெருக்கடியாலும் மற்றும் புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டம் உருவாவதில் இருந்தும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பணிகளுக்கு "அக்டோபர் படிப்பினைகள்" ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ளன. அக்டோபர் புரட்சியானது நமது இக்காலத்தின் அரசியல் சம்பவங்களுடன் உள்ளார்ந்த ஒத்தத்தன்மையைக் கொண்டுள்ளது.

ஏகாதிபத்தியம் மற்றும் அரசும் புரட்சியும் ஆகியவற்றில் லெனின் கண்டறிந்த போக்குகள் — அதாவது, அரசு-ஏகபோக முதலாளித்துவத்தின் வடிவில் பிரமாண்டமான நிதிய மற்றும் பெருநிறுவன ஏகபோகங்களும் (கூகுள், அமசன், ஆப்பிள் மற்றும் சிஐஏ மற்றும் பென்டகன் இவற்றை நினைத்து பாருங்கள்) ஏகாதிபத்திய அரசும் முன்பினும் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன; அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தின் அசுரத்தனமான வளர்ச்சி மற்றும் துர்நாற்றம் வீசும் ஜனநாயக வடிவங்கள் (அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸின் "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியங்களாலும் புகழப்பட்ட, கட்டலோனியாவில் இராணுவ ஒடுக்குமுறை, பிரான்சில் அவசரகால உத்தரவாணைகளைக் கொண்ட ஆட்சி, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நவ-பாசிசவாதிகள் நுழைந்திருப்பது, அமெரிக்காவில் தளபதிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பில்லியனர்களின் ஓர் அரசாங்கம்) ஆகியவை லெனினின் நாட்களை விட பல மடங்கு முன்னேறியவையாக உள்ளன. ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை எதை நோக்கி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறதோ, உலக போர், ஓர் அணுஆயுத மனிதயின படுகொலைகள் மற்றும் மனிதயின நாகரீக அழிவைக் கொண்டு அச்சுறுத்துகிறது.

இந்த விரிவுரைகள் உட்பட ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நினைவாண்டு நினைவுகூர்தலுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), எழுச்சி பெற்றுவரும் உலக சோசலிசப் புரட்சிக்காக தொழிலாள வர்க்கத்தை தெளிவுபடுத்துவது, கல்வியூட்டுவது மற்றும் அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவது என லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பாதையை பின்தொடர்கிறது.

* * *

குறிப்புகள்:

[1] Trotsky History of the Russian Revolution (Chicago: 2008), p. 709.

[2] Ibid., p. 710.

[3] LeninCollected Works Volume 23 (Moscow: 1977), p. 106.

[4] Lenin State and Revolution (International Publishers, New York: 1988), pp. 5-6.

[5] Trotsky History of the Russian Revolution (Chicago: 2008), pp. 304-305.

[6] Alexander Rabinowitch Prelude to Revolution, (Indiana University Press: 1991), pp. 82-83.

[7] Rabinowitch The Bolsheviks Come to Power (Chicago and Ann Arbor: 2004), p. 109.

[8] Ibid., p. 94.

[9] Lenin Collected Works Volume 25 (Moscow: 1964), pp. 177-78.

[10] Ibid., pp. 366, 368.

[11] LeninState and Revolution (International Publishers, New York: 1988), p. 9.

[12] Ibid., p. 14.

[13] Ibid., p. 16.

[14] Ibid., p. 17.

[15] Ibid., p. 26.

[16] Ibid., p. 36.

[17] North, et al.Why Study the Russian Revolution? Volume 1 (Oak Park, Michigan: 2017) p. 19.

[18] Lenin State and Revolution (International Publishers, New York: 1988), p. 33.

[19] Ibid., p. 29.

[20] LeninMarxism on the State (Moscow: 1972), pp. 56-57.

[21] LeninState and Revolution (International Publishers, New York: 1988), p. 38.

[22] Ibid., p. 89.

[23] Ibid., p. 53.

[24] Ibid., pp. 94-95.

[25] Ibid., p. 99.

[26] Ibid., p. 32.

Loading