மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஹாங்காங் இனி சீனாவிடமிருந்து "உயர்ந்தளவிலான தன்னாட்சி" கொண்டிருக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இது, ஒரு உலகளாவிய நிதியியல் மையமாக விளங்கும் அதன் அந்தஸ்தைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடையாணைகளை விதிப்பதற்கு வாஷிங்டனுக்கு கதவைத் திறந்து விடும் ஒரு படியாகும்.
பொம்பியோவின் இந்த முடிவு, உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்க்கு வக்கிரமாக பெய்ஜிங்கை பலிக்கடா ஆக்குவது உட்பட சமீபத்திய மாதங்களில் வேகமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின் சீன-விரோத பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தும் ஒரு கூடுதல் படியாகும்.
பெய்ஜிங்கை இலக்கில் வைப்பது என்பது வெறுமனே மிகப் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க உயிரிழப்புக்கு வெள்ளை மாளிகையின் குற்றகரமாக பொறுப்பில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டது மட்டுமல்ல, மாறாக கடந்த தசாப்தத்தில் சீனாவைப் பொருளாதாரரீதியிலும் மூலோபாயரீதியிலும் பலவீனப்படுத்தி போருக்குத் தயாரிப்பு செய்வதற்காக தீவிரப்படுத்தப்பட்டு வந்த முயற்சிகளின் பாகமாகும்.
ஹாங்காங்கில் பயங்கரவாதம், வெளிநாட்டு ஆதிக்கம், கிளர்ச்சிகளை சம்பந்தப்படுத்தி புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்று அதன் வருடாந்தர தேசிய மக்கள் மாநாட்டில் (NPC) நிறைவேற்றப்படும் என்ற சீனாவின் கடந்த வார அறிவிப்புக்கு விடையிறுப்பாக பொம்பியோவின் அறிவிப்பு வந்தது. அனேகமாக நிறைவேற்றப்படக்கூடிய சீனச் சட்டமசோதா நடைமுறையளவில் ஹாங்காங் சட்டமன்றத்தின் அதிகாரத்தை நீக்குகிறது, இதுபோன்றவொரு சட்டம் 2003 இலேயே நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டங்களின் முன்னால் தோல்வி அடைந்தது.
குற்றவாளிகளை நாடுகடத்த முன்மொழியப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் நடந்த பல மாத கால போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில், அமெரிக்க காங்கிரஸ் சட்டமசோதா ஒன்றை நிறைவேற்றியது. அது சீனாவிடம் இருந்து ஹாங்காங்கின் தன்னாட்சிக்கு (autonomy) அமெரிக்க வெளியுறவுத்துறையின் அங்கீகாரம் பெறுவதை அவசியமாக்கியது. அந்த முன்னாள் பிரிட்டிஷ் காலனியுடன் முன்பு நிலவிய பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணும் வகையில் 1997 இல் சீனாவிடம் ஹாங்காங்கைப் பிரிட்டிஷ் ஒப்படைப்பதற்கு முன்னதாக நிறைவேற்றப்பட்ட அமெரிக்க சட்டமசோதாவை ஒழித்துக் கட்டுவதற்குப் பொம்பியோவின் இந்த அறிவிப்பு இப்போது ட்ரம்ப் நிர்வாகத்தை அனுமதிக்கிறது.
ஹாங்காங்கின் சிறப்பு பொருளாதார அந்தஸ்து, சீனாவில் இருந்தும் சீனாவுக்குள்ளும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஓர் உலகளாவிய நிதியியல் மையமாக ஹாங்காங் அதன் இடத்தைத் தக்க வைத்து கொள்ளவும், அத்துடன் சீனாவுக்குள் செயல்பட்டு வரும் நூற்றுக் கணக்கான அமெரிக்க மற்றும் ஏனைய பெருநிறுவனங்களின் தலைமையகமாக விளங்கவும் அதற்கு உதவியது. 2018 இல் அமெரிக்கா ஹாங்காங்குடன் 33 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.அமெரிக்காவிற்கான பெருநில சீனாவின் ஏற்றுமதிகளில் சுமார் 8 சதவீதமும், சீனாவின் இறக்குமதிகளில் 6 சதவீதமும் ஹாங்காங் வழியாக நடந்து வந்தது.
பெருநில சீனாவில் இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விட ஹாங்காங்கில் இருந்த இலகுவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளினாலும்; தொழில்நுட்ப பரிவரித்தனைகள், கல்வித்துறை பரிவர்த்தனைகள், வரி விதிப்பு, செலாவணி பரிவர்த்தனை மற்றும் தடையாணைகள் மீதான உடன்படிக்கைகளால் ஹாங்காங் ஆதாயமடைந்துள்ளது. இவை அனைத்துமே இப்போது கேள்விக்குள்ளாகின்றன.
இவ்வார ஆரம்பத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிக்கையில், தேசிய மக்கள் மாநாடு (NPC) தேசிய பாதுகாப்பு சட்டமசோதாவை நிறைவேற்றினால் அமெரிக்கா "மிகவும் பலமாக" விடையிறுக்கும் என்று அறிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செயலர் டேவிட் ஸ்டெல்வெல் கூறுகையில், தண்டிக்கும் விதமான முறைமைகள் விவாதிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியதுடன், அமெரிக்கா "ஹாங்காங் மக்கள் மீதும், உலகெங்கிலும் பாதிப்பைக் குறைக்க" முயன்று வருவதாக தெரிவித்தார்.
ஆனால் ஹாங்காங் பொருளாதாரத்தின் எந்தவொரு சரிவும் தொழிலாள வர்க்கத்தைக் கடுமையாக பாதித்து, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கும் மற்றும் அப்பிராந்தியத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சமூக சேவைகளை இன்னும் கூடுதலாக வெட்டுவதற்கும் இட்டுச் செல்லும். ஹாங்காங் மற்றும் சீனாவில் உள்ள அமெரிக்க பெருநிறுவனங்கள் மீது ஏற்படக்கூடிய தடையாணைகளினது பாதிப்பு குறித்து வாஷிங்டன் கவலை கொள்ளக் கூடுமே தவிர, அங்கே உழைக்கும் மக்களின் தலைவிதியைக் குறித்து அதற்கு எந்த கவலையும் இல்லை, அவர்களின் ஜனநாயக உரிமைகளைக் குறித்து அதை விட இன்னும் குறைவான கவலையே கொண்டிருக்கும்.
முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டமசோதாவுக்கு எதிராகவும், சீன தேசியகீதம் மற்றும் தேசியக் கொடியை எந்த விதத்திலும் இழிவுபடுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்காக ஹாங்காங் சட்டமன்றத்தில் ஒரு சட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று ஹாங்காங்கில் கூடுதலாக போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் பங்குபற்றியோரின் தொகை குறைவாக இருந்ததற்கு கோவிட்-19 கட்டுப்பாடுகளினாலும் மற்றும் வீதிகளில் இருந்த கணிசமான பொலிஸாரின் பிரசன்னம் மட்டுமல்லாது, மாறாக போராட்ட தலைவர்களின் வலதுசாரி நோக்குநிலையினாலும் ஏற்பட்டதாகும்.
ஜனநாயக உரிமைகள் மீதான பெரும்பான்மை மக்களினது நியாயமான கவலைகளை வெளிப்படுத்தி, அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் சட்டமசோதாவுக்கு எதிராக கடந்தாண்டு தொடங்கிய மிகப்பெரும் போராட்டங்கள், அதிகரித்தளவில் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான குழுக்கள் மற்றும் கட்சிகளின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்களின் மேலாளுமைக்கு வந்திருந்ததுடன், அது சீன-விரோத பெருநில விரோத மனோபாவத்தை ஊக்குவித்து, தங்களின் சார்பாக தலையிட பிரதான ஏகாதிபத்திய சக்திகளை நோக்கி, குறிப்பாக அமெரிக்காவை நோக்கி, நோக்குநிலை ஏற்றன.
பொம்பியோவின் அறிவிப்புக்கு ஆதரவாக Demosistō இன் தலைவர், முன்னாள் மாணவரான Joshua Wong இன் விடையிறுப்பு, இத்தகைய அமைப்புகளின் ஏகாதிபத்திய சார்பு நோக்குநிலைக்குத் தெள்ளத்தெளிவான வெளிப்பாடாக உள்ளது. “அமெரிக்க கொள்கையில் கடுமையான மாற்றம், ஹாங்காங் மீதான போக்கை மாற்றிக் கொள்ள அவர்களை [சீனா] ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றவர் அறிவித்தார்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கண்டித்து கடந்த வாரம் ஒரு தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்க செனட்டர் ஜோஸ் ஹாவ்லே உடன் வொங் சமீபத்தில் பேசியிருந்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், அத்துடன் ஊடகங்களிலும், ஹாங்காங் போராட்டக்காரர்களின் முகமாக, கடந்தாண்டு மனதார வரவேற்கப்பட்ட வொங், உயர்மட்ட அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துள்ளதுடன், அமெரிக்க காங்கிரஸிலும் உரையாற்றி உள்ளார்.
ஹாங்காங் மக்கள் குறித்து பொம்பியோ மற்றும் ஏனைய ட்ரம்ப் அதிகாரிகளினது அக்கறையான அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் குற்றகரமான போர்களை நியாயப்படுத்துவதற்காக ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது லிபியாவில் "மனித உரிமைகளை" சாதகமாக்கிக் கொண்டதைப் போலவே ஹாங்காங் அல்லது சீனாவிலும் அதற்கு "மனித உரிமைகள்" மீது எவ்வித ஆர்வமுமில்லை. ஹாங்காங் ஆகட்டும், தாய்வான் அல்லது மேற்கு சீனாவின் உய்குர் சிறுபான்மையினர் ஆகட்டும், சர்வதேச அளவில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீளவலியுறுத்துவதற்கு ஓர் அபாயகரமான அது கருதும் சீன ஒற்றுமைக்குக் குழிபறிப்பதற்கு வாஷிங்டன் "மனித உரிமைகள்" என்பதை ஒரு சௌகரியமான கருவியாக பயன்படுத்துகிறது.
ஹாங்காங்கில் அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் அமெரிக்கா ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற நப்பாசையை ஊக்குவிப்பதை நேராக சீன ஆட்சி அதன் கரங்களில் சாதகமாக்கி, பெய்ஜிங்கின் பொலிஸ் அரசு ஆட்சியைச் சவால்விடுக்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியான சீனத் தொழிலாள வர்க்கத்தில் பிளவுகளை விதைக்கிறது.
ஹாங்காங் விவகாரத்தில் பெய்ஜிங்கை எதிர்கொள்வதென்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவு சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தில் வெறுமனே சமீபத்திய மோதலாகும்: சீனத் தொலைதொடர்பு பெருநிறுவனம் ஹூவாய்க்கு எதிராக புதிய முறைமைகளை இலக்கு வைத்தது; சீனப் பங்குகள் மீதான முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது; சீனாவில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது புதிய வரிகளைத் திணிக்க அச்சுறுத்துவது; அத்துடன் தென் சீனக் கடலில் மோதல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் என இவையும் அதில் உள்ளடங்கும்.
எல்லா தரப்பில் இருந்தும்—இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும்—சீனாவுடன் ஓர் ஆக்ரோஷமான மோதலை உள்ளடக்கிய ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்றழைக்கப்படுவதன் தொடர்ச்சியே, இருகட்சிகளது ஆதரவைப் பெற்ற ட்ரம்பின் பிரச்சாரமாகும். 2020 இக்குள், பென்டகன் அதன் கடற்படை மற்றும் விமானப்படை தளவாடங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பிரதேசத்தில் நிலைநிறுத்த உள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சியை மற்றும் பலவீனத்தை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தி உள்ளதுடன், மிகப் பெரியளவில் புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், இராணுவம் உட்பட கைவசமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு, அதுவும் மனிதகுலத்தை ஒரு பேரழிவுகரமான அணுஆயுத போருக்குள் அது மூழ்கடித்தாலும் கூட, அதன் விரோதிகளுக்கு எதிராக அதன் உலகளாவிய இடத்தைப் பலப்படுத்திக் கொள்ள தீர்மானகரமாக உள்ளது.