சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) காங்கிரஸ் தீர்மானம் உலகளாவிய பெருந்தொற்றும், வர்க்கப் போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இத்தீர்மானம் 2020 ஜூலை 19 முதல் ஜூலை 24 வரை இணையவழி நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஆறாவது தேசிய காங்கிரசில் அதன் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

1. உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாக வந்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றானது ஏற்கனவே வெகு-முன்னேறிய நிலையில் இருக்கும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு செறிவான தீவிரப்படலுக்கான நிலைமைகளை இது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுதல், பொருளாதாரத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுதல், சந்தை அராஜகத்தை விஞ்ஞானபூர்வபூர்வ திட்டமிடலைக் கொண்டு பிரதியிடல், தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவரல், வறுமை ஒழிப்பு, ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டின் அத்தனை வடிவங்களது ஒழிப்பு, வாழ்க்கைத் தரத்திலும் சமூக கலாச்சாரத்திலும் ஒரு பாரிய அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உலக சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் விதத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதைத் தவிர்த்து வேறெந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லாதவொரு நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்திருக்கிறது.

2. இந்த பெருந்தொற்றினை ஒரு “தூண்டுதல் நிகழ்வு” என வரையறை செய்கையில், உலக சோசலிச வலைத் தளமானது அதனை, முதலாம் உலகப் போரின் வெடிப்பில் உச்சமடைந்த சங்கிலித் தொடர் நிகழ்வுகளின் ஒரு வரிசைக்கு தொடக்கமளித்த, 1914 ஜூன் 28 அன்று ஆஸ்திரிய இளவரசரான பிரான்ஸ் ஃபெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுடன் ஒப்பிட்டது. “அந்த படுகொலை நடக்காதிருந்திருந்தால்”, உலக சோசலிச வலைத் தளம் எழுதியது, “போர் ஆகஸ்டில் வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆயினும் வெகுவிரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ, அநேகமாக 1914 குளிர்காலத்திலோ அல்லது அடுத்து வந்த வருடத்திலோ, ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பூகோள அரசியல் முரண்பாடுகள் ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்றிருக்கும். இந்தப் படுகொலை அந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை துரிதப்படுத்தியது, என்றாலும் அது முன்பே நிலவிய மற்றும் பெரிதும் பற்றியெரியும் தன்மை கொண்ட சமூகப்பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளே அதனை தூண்டிவிட்டது.” [1]

3. கொரோனா வைரஸை உருவாக்கிய குறிப்பிட்ட நிலைமைகள் ஒரு தற்செயலான மற்றும் அவசரகால தன்மையை கொண்டிருக்கின்ற போதிலும், பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பானது முன்னர் நிலவிய முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளாலும் ஆளும் வர்க்கத்தின் நலன்களாலுமே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கமானது முந்தைய காலகட்டத்தில் அது பிரயோகித்து வந்திருந்த அதே ஒட்டுண்ணித்தனமான பொருளாதார உறவுகளையும் சமூகக் கொள்கைகளையுமே தொடர்ந்திருக்கின்றன மற்றும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

4. முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, அத்தனை கலந்துகொண்ட நாடுகளுமே அது ஓரளவுக்கு விரைவாய் முடிந்துபோகும் என்றே அனுமானித்திருந்தன. ஆனால் அந்த மோதல் வருடக்கணக்காக கடந்து இழுபட்டுக் கொண்டே சென்றது. ஏனென்றால் அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்திய முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், போரில் தமது மூலோபாய நலன்களைச் சாதிப்பதற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்படுவதை ஒரு ஏற்புடைய விலையாகக் கருதினர். இந்தப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்ப்பந்திக்க தொழிலாள வர்க்கம் தலையீடு செய்வது 1917 ரஷ்யப் புரட்சியின் வடிவத்திலும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான புரட்சிகரப் போராட்டங்களது ஒரு அலையின் வடிவத்திலும் அவசியமானது. இப்போதைய சூழ்நிலையில், நெருக்கடியில் இருந்து ஆதாயமடைந்திருக்கின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் பூகோள-மூலோபாய நலன்களே பெருந்தொற்றுக்கு ஒரு செயற்திறன்மிக்க பதிலிறுப்பை செயலுறுத்துவதற்கான மிகப்பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. தொற்றுகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்ந்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளும் தொடர்ந்து உயர்ந்து செல்கின்றன, இப்போது அவை மீண்டும் முன்னெட்டியிராத மட்டங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. வைரஸ் பரவல் மீதான செயற்திறன்மிக்க கட்டுப்பாட்டை எட்டுவதற்கு முன்பாகவே, மே இறுதியில் வேலைக்குத் திரும்பக் கோரி நடத்தப்பட்ட பொறுப்பற்ற பிரச்சாரமானது, முழுக்கவும், இலாபத்தை உருவாக்குவதற்காக தொழிலாள வர்க்கத்தை தடையின்றி சுரண்டுவதைத் தொடர்வதற்கு பெருநிறுவன-நிதிய உயரடுக்கு கொண்டிருக்கும் தேவையால் உத்தரவிடப்பட்டிருந்தது.

5 நிலைமை கவலைக்கிடமான விதத்தில் இருக்கிறது. பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஜூலை மத்தியிலான நிலவரப்படி, உலகளவில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 700,000 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக வைரஸ் தொற்றுபவர்களின் எண்ணிக்கை முன்கண்டிராத உச்சங்களில் இருக்கிறது, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா முழுவதிலும் இந்த வைரஸ் மிகத் துரித வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

6. இந்த பெருந்தொற்றின் சூழ்மையமாக அமெரிக்கா இருக்கிறது. 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது நாட்டின் ஒவ்வொரு 100 பேருக்கும் ஒருவர் என்பதைக் காட்டிலும் அதிகமான விகிதத்தில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 70,000 க்கும் அதிகமாக உள்ளது. ஃபுளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன அல்லது தகமைக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகளை அனுமதித்துள்ளன, செவிலியருக்கு பாதுகாப்பு உபகரணங்களது பற்றாக்குறை நிலவுகிறது. கோடை முடிவதற்குள்ளாக, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 250,000 முதல் 350,000 வரை இருக்கலாம். இது முதலாம் உலகப் போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போர் ஆகிய மூன்று போர்களது யுத்தக்களத்தில் இறந்த அமெரிக்க படையினரது மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கிற்கும் அதிகமானதாகும்.

7. தொற்றுப்பரவலுடன் சேர்ந்து, சமூக நெருக்கடியும் பெருகிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய அளவில் இந்தப் பெருந்தொற்றின் விளைவாக இன்னும் 265 மில்லியன் மக்கள் பட்டினிப் பிரச்சினையை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிடுகிறது. தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு 3.4 டிரில்லியன் டாலர் வரை இருக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கணித்திருக்கிறது. அமெரிக்காவில், பொதுமுடக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்ற நடவடிக்கைகளை தாண்டியும் கூட, பத்துமில்லியன் கணக்கிலான மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் தொடர்கின்றனர், 100,000 சிறுவணிகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டிருக்கின்றன.

8. பெருந்தொற்றுக்கு அமெரிக்கா காட்டிய பற்றாக்குறையான, ஒழுங்கற்ற மற்றும் மனிதாபிமானமற்ற பதிலிறுப்பானது ட்ரம்ப் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் குற்றவியல்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தியிருக்கவில்லை, “பெருநிறுவன ஊக்குவிப்பு, பங்கு வெளியீடு மற்றும் பங்கு ஊகவணிகம் ஆகியவற்றின் மூலமான சுருட்டல் மற்றும் ஏமாற்று ஆகியவற்றின் ஒரு ஒட்டுமொத்த அமைப்புமுறை”யின் மிகத் தீவிர மற்றும் உண்மையான குற்றவியல் வளர்ச்சியால் உருக்கொடுக்கப்பட்ட சமூக அங்கலட்சணத்தைக் கொண்ட அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதன் ஆளும் உயரடுக்கின் அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலையையும் கூட அம்பலப்படுத்தியிருக்கிறது. [2] இந்த அடிப்படையில், மார்க்சும் கூட சாத்தியமென கற்பனை செய்திருக்கக் கடினமானதொரு அளவில், ஆளும் வர்க்கமானது, கடந்த 40 வருடங்களில், செல்வத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்களுக்கு மறுவிநியோகம் செய்கின்றதொரு கொள்கையை நடத்தி வந்திருக்கிறது.

9. ஊக வணிகம் மற்றும் நிதியமயமாக்கம் ஆகியவற்றின் வழியான பங்குச் சந்தையின் பாரிய வீக்கமானது, மக்களின் கீழ் மட்டத்தில் இருக்கும் பாதிப் பேர் கொண்டிருக்கும் செல்வத்தை விட அதிகமானதை வெறும் மூன்று தனிநபர்கள் கொண்டிருக்கும் படியான, சமூக சமத்துவமின்மையின் முன்கண்டிராத மட்டங்களை உருவாக்கியிருக்கிறது.

10. “இந்த பெருந்தொற்று கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட எத்தனை காலம் பிடிக்கும்?” இந்தக் கேள்வி பில்லியன் கணக்கான மக்களால் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு செயற்திறன்மிக்க தடுப்பூசி உருவாக்கப்படுகின்றவரை இந்த பெருந்தொற்று பிரச்சினை தொடர்ந்து இருக்கும் என்பதே பொதுவாகக் கிடைக்கின்ற பதிலாக இருக்கிறது. இந்த விதிவசவாத பதிலானது COVID-19 நெருக்கடி முழுக்கமுழுக்க ஒரு மருத்துவப் பிரச்சினை என்கின்ற அனுமானத்தின் அடிப்படையில் இருக்கிறது. இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் சமூக மற்றும் அரசியல் பரிமாணங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. எப்படி முதலாம் உலகப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அவசியமாயிருந்ததோ, அதைப்போலவே இந்த நோய்க்கான செயற்திறன்மிக்க சமூகப் பதிலிறுப்புக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவான தலையீடு அவசியமாயுள்ளது. எதிர்வரும்காலத்தில் அண்மையில் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, அது நீண்டகால எதிர்ப்புசக்தியை வழங்குகிறது —இதற்கு உத்தரவாதமற்ற நிலையே இருக்கிறது— என்ற நிலை உருவாகினாலும் கூட, அதன் விநியோகமானது பெருநிறுவனங்களது இலாபநலன்கள் மற்றும் பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பூகோளமூலோபாய மோதல்கள் ஆகியவற்றிற்குரிய விடயமாகத்தான் இருக்கப் போகிறது. இதைத்தவிரவும், பெருந்தொற்றை மட்டுப்படுத்தலானது சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விடப்போவதில்லை. முதலாம் உலகப் போருக்கு பின் வந்த காலத்தைப் போலவே, இந்த பெருந்தொற்றானது ஆழமான வடுக்களை விட்டுச்செல்லும் என்பதுடன் நீண்ட-கால பின்விளைவுகளைக் கொண்டதாயிருக்கும். நோய் வெடிப்புக்கு முன்பு நிலவிய ஏற்கனவே மோசமானவையாக இருந்த நிலைமைகளுக்கு கூட திரும்பப் போவதில்லை. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியானது பெருந்தொற்றால் உருவாக்கப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் அபிவிருத்தி காணவிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் விரிவெல்லையும் தீவிரமும் அதிகரிக்கவிருக்கிறதே அன்றி, குறையப் போவதில்லை.

11. பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதை பொறுப்பற்ற விதத்தில் நியாயப்படுத்துவதற்காக, முதலாளித்துவ ஊடகங்கள் பிரகடனம் செய்தன: “சிகிச்சை [பொது முடக்கம்] நோயை விடவும் மோசமானதாய் இருந்து விடக்கூடாது.” உண்மையில், இந்த பெருந்தொற்று ஒரு அறிகுறி மட்டுமே. முதலாளித்துவமே நோயாகும். சர்வதேச வர்க்கப் போராட்டமே அத்தியாவசியமான சிகிச்சையாகும். சோசலிசமே மருந்தாகும்.

12. இப்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்கும் வருங்காலத்திற்கான பாதையை வரைவதற்கும், பெருந்தொற்றின் உலக சூழ்மையமாக ஆகியிருக்கும் நாடான அமெரிக்காவில் இந்த நெருக்கடி எவ்வாறு அபிவிருத்தி கண்டிருக்கிறது என்பதைத் திறனாய்வு செய்வது அவசியமாகும்.

2019 டிசம்பர் – 2020 மார்ச் 27: பெருந்தொற்றின் வெடிப்பு, தகவல்களை அடக்குதல் மற்றும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கினை மீட்டுக் காப்பற்றல்

13. முதலாவது கட்டம், 2019 டிசம்பரில் சீனாவில் இந்த வைரஸின் ஆரம்பகட்ட வெடிப்பு முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மூலமாக அதன் சர்வதேசப் பரவல் நிகழ்ந்ததுடன் தொடங்கி 2020 மார்ச் 27 இல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேர்ஸ் (CARES) சட்டம் என்று கூறப்பட்ட ஒன்றில் கையெழுத்திடும் வரை நீடித்தது. இந்த மிகமுக்கிய காலகட்டத்தில் தான், ட்ரம்ப் நிர்வாகமும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்களும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் வழிகாட்டுதல்களின் படி பெருந்தொற்றின் பரவலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் வங்கிகள், மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் சக்திவாய்ந்த வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ஆகியோரை மீட்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகரீதியாக பேரழிவுகரமான முடிவுகளை எடுத்தனர்.

14. கொரோனோ வைரஸ் ஒரு உலகளாவிய பெரும் சுகாதாரப் பேரிடராக வளர்ச்சியடையும் சாத்தியம் கொண்டிருந்ததை 2020 ஜனவரி ஆரம்பத்திலேயே, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு மையங்களது தேர்ச்சிபெற்ற நோய்த்தொற்று நிபுணர்கள் அடையாளம் கண்டு விட்டிருந்தனர். பன்றிக் காய்ச்சல் மற்றும் எபோலா நோய்களது வெடிப்பில் அவர்கள் பெற்றிருந்த முந்தைய அனுபவங்கள் இந்த பெருந்தொற்றின் பின்விளைவுகள் குறித்த அதிக சந்தேகத்திற்கிடமில்லாத தரவுகளை மருத்துவ சமுதாகு வழங்கியிருந்தது. 2005 சமயத்திலேயே, பெருந்தொற்று நிபுணரான லோரி ஹாரெட், Foreign Affairs இதழில் வெளியான ஒரு கட்டுரையில், H5N1 ஏவியன் தொற்றுக்காய்ச்சல் முன்நிறுத்திய அபாயங்களைக் குறித்து பின்வருமாறு எச்சரித்திருந்தார்:

இடைவிடாமல் பரிணாமவளர்ச்சியடைந்து செல்லும் இந்த வைரஸானது மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவும் திறனை பெறுமானால், மனிதத் தொற்றுக்காய்ச்சலுக்கே உரிய ஆற்றலை பெற்றுவிடுமானால், அதன் அசாதாரண கொடியநிலையைத் தொடர்ந்து தக்கவைக்குமானால், எவரும் முன்னொருபோதும் கண்டிராதவொரு பெருந்தொற்றுக்கு மனிதகுலம் முகம்கொடுக்கும் நிலை ஏற்படலாம். [3]

மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவக் கூடிய ஒரு வைரஸ் பெருந்தொற்றின் அமெரிக்க மற்றும் சர்வதேச பின்விளைவுகள் குறித்து ஹாரெட் (Garrett) பின்வருமாறு ஒரு திகிலூட்டும் வர்ணிப்பை அளித்தார். அமெரிக்கா “16 மில்லியன் உயிரிழப்புகளையும் கற்பனைக்கெட்டாத பொருளாதார விலையையும் கொடுக்க நேரிடலாம்” என்று அவர் எழுதினார். [4] ஹாரெட் தொடர்ந்து எழுதினார்:

ஒட்டுமொத்த உலகமும் இதேபோன்றதொரு வைரஸ் படுகொலை மட்டங்களைக் காணும்; HIV யால் பாதிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களும் மில்லியன் கணக்கான நோயெதிர்ப்புசக்தி குறைந்த மனிதர்கள் வாழும் பகுதிகளும் இன்னும் அதிகமான உயிரிழப்புகளையும் கூட காணக்கூடும். இதற்கான பதிலிறுப்பாக, சில நாடுகள் பயனற்ற ஆனால் மிகவும் வாழ்வாதார இடையூறுகள் கொண்ட தனிமைப்படுத்தல்களை திணிக்கலாம், அல்லது எல்லைகள் மற்றும் விமான நிலையங்களை, பல மாதங்களுக்கும் கூட மூடலாம். இவ்வாறு மூடுவதானது வர்த்தகம், பயணம் மற்றும் உற்பத்தித் திறனை பாதிக்கும். உலகின் பங்குச் சந்தைகள் தத்தளிக்கும், இன்னும் கூறினால் அடிபாதாளத்தினுள் விழும் என்பதில் சந்தேகமில்லை. [5]

15. உலகம் ஒரு சுகாதாரப் பேரிடரின் மிக விளிம்பில் நின்று கொண்டிருந்தது என்பதை 2020 இன் முதல் நாட்களிலேயே —அநேகமாக டிசம்பரின் இரண்டாவது பாதியிலேயே என்று சொல்லலாம்— அமெரிக்க அரசாங்கமும் அதன் உளவு-சேகரிப்பு முகமைகளும் புரிந்து கொண்டு விட்டன என்பது தெளிவு. அமெரிக்காவுக்கு முதல் தகவல்கள் எப்போது கிடைத்திருந்தாலும், அபாயம் குறித்த செய்திகள் ஜனவரியில் உலக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. உலக சோசலிச வலைத் தளம் கொரோனோ வைரஸ் குறித்த அதன் முதல் விரிவான செய்தியை 2020 ஜனவரி 24 அன்று வழங்கியது. அதற்கு நான்கு நாட்களின் பின்னர், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:

கடந்த கால் நூற்றாண்டு காலத்தின் போது, உலகின் அரசாங்கங்கள், குறிப்பாக அமெரிக்கா, பெருமளவிலான போருக்காக வெகுகவனமாகத் தீட்டப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், அதேகாலகட்டத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் கொடுமையான பெருந்தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கென அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு ஆதாரவளங்களையோ அல்லது முன்யோசனைகளையோ கொண்டிருக்கவில்லை. [6]

16. பெருந்தொற்றின் பரவலால் மிகத்தீவிரமான சுகாதார அபாயம் முன்நிறுத்தப்பட்ட போதிலும், ஆளும் வர்க்கமானது, பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்பின் மீது, அதாவது இந்த நோய் பங்குச் சந்தையை மற்றும் சமூகத்தின் மிகவும் வசதிபடைத்த ஒன்று முதல் ஐந்து சதவீதம் வரையான பேரின் தனிமனித செல்வத்தை எவ்வாறு பாதிக்கவிருக்கிறது என்பதன் மீதே கிட்டத்தட்ட பிரத்தியேக கவனம் குவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அபாயம் குறித்து தெளிவாக பகிரங்கமாக அறிவிப்பதானது ஒரு நிதிரீதியான பீதிக்கு இட்டுச் சென்று, சந்தைகள் “தத்தளிப்பதற்கும் இன்னும் சொன்னால் அதளபாதாளத்தில் வீழ்வதற்கும்” காரணமாகி விடும் என்று முதலாளித்துவ நிதியசிலவராட்சியினர் அஞ்சினர்.

17 அதன் கவலைகளுக்கு காரணமில்லாமலில்லை. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 2008-2009 வரலாற்று முக்கியத்துவமுடைய நிதியப் பொறிவுக்கு வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு நூறுபில்லியன் டாலர்கள் கணக்கில் இறைத்ததன் மூலமாகப் பதிலிறுத்திருந்தது. 2008-09 நெருக்கடியே கூட நிதியமயமாக்கல் என்று கூறப்பட்ட நிகழ்ச்சிப்போக்கின், அதாவது பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் செல்வக்குவிப்பை உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து முன்னெப்போதையும் விட அதீதமான அளவில் பிரித்ததில் அருவெறுப்பான வெளிப்பாட்டை காட்டிய முதலாளித்துவத்தின் நீடித்த சிதைவின் ஒரு விளைபொருளாகவே இருந்தது. “பணத்தை அச்சிட்டுப் புழக்கத்தில் விடுதல்" (quantitative easing) என்றழைக்கப்பட்ட இந்த முன்கண்டிராத அளவிலான நிதிப் பிணையெடுப்பானது அதீத-குறைவான வட்டிவிகிதத்திலான கடன்களை —“இலவசப் பணம்”— பெருநிறுவன நிதிய உயரடுக்கிற்கு வழங்கியிருந்தது. இப்பணம் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பிற ஊகவணிக சொத்துக்களினது பெறுமதியை ஊதிப்பெருக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

18. பெருந்தொற்றின் தாக்குதலுக்கு முன்பாகவே, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரமானது ஒரு கடன் மலையின் உச்சிவிளிம்பில் (கற்பனை மூலதனம்) அமர்ந்திருந்தன என்பதும், அதன் அளவு உண்மையான பொருளாதாரத்தின் உற்பத்தி மற்றும் இலாப உருவாக்கும் திறனைக் காட்டிலும் வெகு அதிகமானதாய் இருந்தது என்பதும் படிப்படியாக தெளிவாகி வந்திருந்தது. பெருந்தொற்று பரவலானது பாரிய கடன் மட்டங்களுக்கு சேவையாற்ற அவசியமான வருவாய் பாய்வை துண்டிக்கக் கூடிய ஒரு பொருளாதார முடக்கத்தைக் கொண்டு அச்சுறுத்தியது. சர்வதேச கணக்குத்தீர்ப்பு வங்கி (Bank of International Settlements) 2020 ஏப்ரலில் வழங்கிய ஒரு அறிக்கையில் பின்வருமாறு விளக்கியது:

கோவிட்-19 அதிர்ச்சியானது பெருநிறுவன பணக் கையிருப்புகளின் மீது பிரம்மாண்டமான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது. 2019 இல் இருந்தான பெருநிறுவன நிதி அறிக்கைகள் வரும் ஆண்டிற்கான முழுமையான பராமரிப்புச் செலவுகளுக்குப் போதுமான பணம் கையிருப்பு இல்லை என்பதாகக் காட்டுகின்றன. [7]

19. அந்த அறிக்கை தொடர்ந்தது:

நவீன காலத்தில் கோவிட்-19 அதிர்ச்சியளவுக்கு மிக மோசமாக வேறெந்த மந்தநிலையும் தாக்கியதில்லை. பொதுச் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக தேசிய-அளவிலான முடக்கங்கள் செயல்படுத்தப்படுகின்ற நிலையில் வருவாய்களில் முன்கண்டிராத அளவிலான மிகப்பெரும் சரிவுகளுக்கு நிறுவனங்கள் இப்போது முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தாக்குப்பிடிக்க நிறுவனங்கள் எவ்வளவு திறனை கொண்டுள்ளன என்பதே, கோவிட்-19 மந்தநிலை பரவலான நிறுவனங்களின் திவால்நிலைகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகளில் நீடித்த வடுவை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிக்கும். [8]

20. இந்த நிலைமையில், பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் நிதிய நலன்களானவை தமது வருமான உள்பாய்வை மட்டுப்படுத்துகின்றதும், பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அனைத்திற்கும் இணக்கமற்றதாகவும் குரோதமானவையாகவும் உள்ளன. ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையிலான காலத்தில், திரைமறைவில் ஒரு பாரிய பெருநிறுவன-நிதிய பிணையெடுப்புக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வந்த அதேவேளையில், இந்த பெருந்தொற்றானது உயிரிழப்புகளை அதிகம் ஏற்படுத்தாது அதிசயமான விதத்தில் காணாமல் போய்விடும் என்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறிவந்தது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த கூட்டரசாங்க மற்றும் மாநில அரசாங்கங்கள், அத்தியாவசியமற்ற உற்பத்திகளை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்தன.

21. பிப்ரவரி 28 அன்று, இந்த பெருந்தொற்றுக்கான “உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பதிலிறுப்பு” ஒன்றுக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு அறிக்கையை ICFI விடுத்தது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் (இன்று அந்த எண்ணிக்கை 12 மில்லியனுக்கும் அதிகமாய் இருப்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்), ICFI, “அபாயத்தை மிகைபதிப்பீடு செய்யமுடியாது” என்று எச்சரித்தது. நோய்ப்பரவலை மட்டுப்படுத்தவும், நோயை குணப்படுத்தவும் இறுதியாக வைரஸை அழித்தொழிக்கவுமான எதிர்நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் அணிதிரட்டப்படுவதற்கும், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக ஆதாரவளங்கள் பாரிய அளவில் ஒதுக்கப்படுவதற்கும், வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகரமாக இருக்கின்ற வகையில் செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கும் அந்த அறிக்கை அறைகூவல் விடுத்தது. [9]

22. அரசாங்கங்களின் திட்டமிட்ட செயலின்மையை “தீய அலட்சியம்” [10] என்று WSWS வரையறை செய்தது. அரசாங்கங்களின் தரப்பில் இருந்து வைரஸை நோக்கி வெளிப்பட்ட அலட்சிய மனோபாவமானது, சந்தைகள் மீதான அதன் தாக்கத்தினால் வழிநடாத்தப்பட்டதாக இருந்தது. வணிகங்களுக்கான பின்விளைவுகள் 2008 நெருக்கடியைத் தொடர்ந்து வழங்கப்பட்டதை விடவும் மிகப் பெரியதொரு பிணையெடுப்பை அவசியமாக்கும் என்பதை ஆளும் வர்க்கம் நன்கு அறிந்திருந்தது.

23. வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவுமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்கமானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களை வோல் ஸ்ட்ரீட்டுக்கான பல-டிரில்லியன்-டாலர் பிணையெடுப்பு ஒன்றை தயாரிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தியது. இந்தத் தலையீட்டின் அளவானது பொருளாதார சூழலின் நம்பிக்கையற்ற நிலைக்கு சாட்சியமளிப்பதாக இருந்தது. பிப்ரவரி 19 க்கும் மார்ச் 23 க்கும் இடையில், பெருந்தொற்றால் முன்நிறுத்தப்பட்ட அபாயத்தை பொதுமக்களிடம் மறைப்பது இனியும் சாத்தியமில்லை என்றானபோது, S&P 500 குறியீடு அதன் மூன்றிலொரு பங்கு மதிப்பைத் இழந்தது.

24. ஆளும் வர்க்கத்தின் “தீய அலட்சிய” கொள்கைக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் பெருந்தொற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. Instacart, Amazon மற்றும் Whole Foods இல் வேலைசெய்த தொழிலாளர்களால் வேலைப்புறக்கணிப்பு போராட்டங்களும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்டன. அமெரிக்காவிலும் கனடாவிலும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள் ஒரு தொடர் திடீர் போராட்ட நடவடிக்கைகளை நடத்தினர், அதேநேரத்தில் ஐரோப்பாவிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு அலை நடந்துகொண்டிருந்தது. “கொரோனோ வைரஸ் பரவலைத் தடுக்க வாகன உற்பத்தித் துறையை மூடு!” என்ற மார்ச் 14 அறிக்கை உள்ளிட, WSWS இல் வெளியான கட்டுரைகளும் SEP ஆல் விடுக்கப்பட்ட அறிக்கைகளும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டன, பகிரப்பட்டன. பிணையெடுப்புச் சட்டம் இன்னும் தயாரிப்பில் இருந்து கொண்டிருந்த நிலையில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அழுத்தம் பெருகியதை அடுத்து, கூட்டரசாங்க, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் பொருளாதார நடவடிக்கைகளை மூட உடன்படும்நிலைக்குத் தள்ளப்பட்டன.

25. மார்ச் பின்பகுதியில், நாடாளுமன்றம், கிட்டத்தட்ட ஒருமனதான வாக்களிப்பில், CARES சட்டத்தை நிறைவேற்றியது, இச்சட்டம் நூறு பில்லியன் கணக்கில் பெருநிறுவனங்களுக்குக் கையளித்தது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் மூலமாக வோல் ஸ்ட்ரீட் பல-டிரில்லியன்-டாலர் செலவில் பிணையெடுக்கப்படுவதற்கு ஒப்புதலளித்தது. சில வார காலத்திலேயே Fed இன் சொத்து இருப்பு 4 ட்ரில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 7 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகையாக வளர்ச்சி கண்டது, ஏனென்றால் வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களிடம் இருந்து சொத்துக்கள் மற்றும் கடன்களை அது வாங்கியிருந்தது.

26. CARES சட்ட நிறைவேற்றமானது நெருக்கடியின் முதல் கட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரான டேவிட் நோர்த், ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரான நிக் பீம்ஸுக்கு எழுதிய மார்ச் 28 தேதியிட்ட ஒரு கடிதத்தில், முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியின் உள்ளடக்கத்தில் 2020 இன் முதல் மூன்று மாதங்களது நிகழ்வுகளை மதிப்பீடு செய்திருந்தார்.

முதலாளித்துவ ஊடகங்கள் உலகச் சந்தைகளிலான மலைப்பூட்டும் வீழ்ச்சிக்கு முழுக்கவும் பெருந்தொற்றைக் காரணமாகக் கூறுவதில் வியப்பேதுமில்லை. ஆயினும் அது மட்டுமே போதுமான காரணமில்லை. கொரோனோ வைரஸ் பரவத் தொடங்கும் முன்பாகவே, பங்கு மதிப்புகளிலான படுவேக வளர்ச்சியானது, பணம் வரம்பற்று இறைக்கப்பட்டமை மற்றும் Fed மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் மூலமாக வட்டி விகிதங்கள் முன்கண்டிராத அளவில் குறைக்கப்பட்டமை ஆகியவற்றினால் எரியூட்டப்பட்டு, ஒரு நச்சுத்தனமான குணாம்சத்தைப் பெற்று விட்டிருந்தது. எதிர்மறை வட்டி விகிதங்கள் (அதாவது 0 க்கு கீழான) எனும் நிகழ்வுப்போக்கும் கூட தோன்றியது. கற்பனையான மூலதனத்தின் மலைபோன்ற குவிப்பானது ஆளும் வர்க்கம் எண்ணற்ற ஜாலவித்தைகளை (பங்குகளை திரும்பவாங்கல் போன்றவை) பிரயோகித்து பங்குவிலைகளை இன்னும் அதிகமாக உயர்த்தி தன்னை வளப்படுத்திக் கொள்வதை சாத்தியமாக்கியது.

கடந்த மூன்று வாரங்களிலான சந்தையில் பங்குகளின் விற்றுத்தள்ளலின் (மூன்றுநாள் “இறந்த பூனையின் துள்ளல்”, அதாவது, தற்காலிக சிறுஏற்றம் இருந்தபோதிலும்) மிகவும் திகைப்பூட்டும் அம்சம் அதன் அசுர வேகமாகும். ஒரு சில நாட்களிலேயே ட்ரில்லியன் கணக்கான பணம் பங்குச் சந்தைகளில் தொலைந்தது. இது நவீன வரலாற்றின் வேறெந்த வீழ்ச்சியை விடவும் வேகமானதாகும். இந்த பொறிவின் வேகமானது பங்குச் சந்தைகளிலான முந்தைய மாயவித்தையான உயர்ச்சியின் உண்மையற்ற தன்மையால் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. இதுவே பல-ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்புக்கான வெறிகொண்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக இட்டுச்சென்றது. ஒரு சில மாதங்களுக்கு சமூக வெடிப்பை நிறுத்தி வைக்கும் நோக்கத்துடனான ஒரு சில சிதறல் துணுக்குகளான இந்த பிணையெடுப்பின் நிறைவேற்றமானது, கற்பனை மூலதன உருவாக்கத்தின், அதாவது உற்பத்தியுடன் தொடர்பில்லாது, மதிப்பை செயற்கையாக உயர்த்துவதன், ஒரு புதிய மற்றும் இன்னும் மிகப் பிரம்மாண்ட அளவிலான, ஒரு தொடர்ச்சியாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட பொருளாதார மோசடித் திட்டம் நீடித்திருக்க முடியாது என்பதை முதலாளித்துவ வர்க்கம் முழுக்க அறிந்திருந்தது. இந்தக் காரணத்தினாலேயே, பெருந்தொற்று ஒரு உண்மையான பிரச்சினையாக ஆனது. உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோது கடன் மட்டங்களை விரிவுபடுத்துவது என்பது ஒரு விடயம். உலகெங்கிலும் உற்பத்தி நகரமுடியாதிருக்கின்ற நிலையில் அவ்வாறு நடப்பது முற்றிலும் மாறுபட்டதொரு விடயமாகும். கடன் விரிவாக்கத்திற்கும் உழைப்பு நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக மதிப்பு உற்பத்தி செய்யப்படுவதில் (அது வெளிப்படுகின்ற அத்தனை வடிவங்களிலும்) ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிக்கும் இடையிலுள்ள பொருத்தமின்மையானது மறைக்கப்பட முடியாது. இதுதான் “பெருந்தொற்றுக்கான சிகிச்சை நோயினும் மோசமானதாக இருக்க முடியாது” என்று கூறிக்கொண்டு வேலைகளுக்கு துரிதமாக மீண்டும் திரும்புவதற்கு ட்ரம்ப் மற்றும் முதலாளித்துவ சிலவரணியினர் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு காரணமாயுள்ளது.

முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் நாம் ஒரு வெகுமுக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பெருந்தொற்றினால் தூண்டப்பட்டுள்ள பொறிவின் விளைவாக திவால்நிலைக்கு முகம்கொடுத்திருக்கும் ஆளும்வர்க்கமானது, திவால்நிலையைத் தவிர்க்க ட்ரில்லியன் கணக்கான டாலர்களை தங்கள் வசமளிக்க வேண்டும் என்று அதன் அரசிடம் கோரிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அதே அரசினைப் பிரயோகித்து தேவையான அரசியல் மற்றும் திட்டமிடல் தயாரிப்புகளை நிறைவு செய்த உடனேயே, தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு தாட்சண்யமற்ற தாக்குதல் நடத்துவதற்கும் அது தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது.

மார்ச் 27 – மே 31, 2020: வேலைக்குத் திரும்பக் கோரும் பிரச்சாரமும் போலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களும்

27. இந்த பகுப்பாய்வு, நிகழ்வுகள் மூலமாக துரிதமாக ஊர்ஜிதமானது. பிணையெடுப்பு அமல்படுத்தப்பட்ட உடனேயே, ஆளும் வர்க்கத்தின் கவனம், பிணையெடுப்புக்கு விலைசெலுத்துவதற்கும் பெடரல் ரிசர்வால் உருவாக்கப்பட்ட கற்பனை மூலதனத்தின் மலைப்பூட்டும் மட்டங்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை நிர்ப்பந்திக்கும் பொருட்டு, முழுமையான பொருளாதார உற்பத்தியைத் தொடருகின்ற கட்டாயத்தை நோக்கித் திரும்பியது.

உற்பத்தி நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் துரிதமாக வேலைக்குத் திரும்பச் செய்வதற்குமான ஒரு பிரச்சாரம், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த சக்திவாய்ந்த பெருநிறுவன-நிதிய நலன்களது பிரதான ஊடகக் குரலான நியூ யோர்க் டைம்ஸ் மூலமாக, ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதற்கு அரசியல் நியாயமும் கற்பிக்கப்பட்டது. மார்ச் 22 அன்று, கேர்ஸ் (CARES) சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது, “அமெரிக்காவை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான ஒரு திட்டம்” என்ற தலைப்பிலான ஒரு பத்தியை அப்பத்திரிகையில் தோமஸ் ஃப்ரீட்மன் எழுதினார். அமெரிக்கா ஒரு வேலைமுடக்கத்தில் “தடுமாறி விழுந்திருந்தது” என்பதாக ஃப்ரீட்மன் கூறினார். ஒரு பாரிய வேலைமுடக்க-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான சமிக்கை காட்டும்விதமாக, ஃப்ரீட்மன் பின்வருமாறு எழுதினார்:

ஆனால் நமது ஏராளமான நிறுவனங்களை மூடி மில்லியன்கணக்கான பேர் வேலையிழக்கச் செய்யப்படுகின்ற வேளையில், சில நிபுணர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்: “ஒரு நிமிடம்! நாம் நமக்கு என்ன மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறோம்? நமது பொருளாதாரத்திற்காக? அடுத்த தலைமுறைக்கா? இது நோயை சுகமாக்குவதற்கா —ஒரு சிறு காலத்திற்கே என்றாலும்கூட-- நோயை விட மோசமானதாகாதா?”

29. “முக்கிய தொற்றுநோய் நிபுணர்களின் அறிவுரையை” நக்கலாக “group think”, (அதாவது செயற்கையான கருத்தொற்றுமை) என்று குறிப்பிட்ட ஃப்ரீட்மன், ”நம்மிடையே மரணிக்கும் ஆபத்து கொண்டவர்களை அல்லது கொரோனோ வைரஸ் தொற்றினால் நீண்டகாலப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி வைப்பது… சமூகத்தின் எஞ்சிய பேர்களை காய்ச்சல் போன்ற மற்ற வழக்கமான அச்சுறுத்தல்களின் விடயத்தில் கையாண்ட அதேவழியில் கையாள்வது.” என்ற சமூக நோயெதிர்ப்பு சக்தியின் ஒரு வேலைத்திட்டத்தைக் குறித்து பெருமையடிக்கத் தொடங்கினார், விஞ்ஞானபூர்வமற்ற அபத்தத்தை பொறுப்பற்று தம்பட்டமடித்த ஃப்ரீட்மன், பெருந்தொற்றின் அபாயத்தை தணித்துக் காட்டும் விதமாக, காய்ச்சலை போலவே, மிகப் பெருவாரியானோர் சில நாட்களில் குணமடைந்து விடுவார்கள், ஒரு சிறு எண்ணிக்கையிலானோருக்கு மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியமாகும், மிகப் பலவீன பிரிவினரில் மிகச் சொற்ப சதவீதத்தினர் துன்பகரமாக இறப்பார்கள்.” ஃப்ரீட்மன் இந்த வார்த்தைகளை எழுதியதற்குப் பின்னர், அமெரிக்காவில் மரணத்தை சந்தித்த “இந்த மிகச் சொற்ப சதவீதத்தை” சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 130,000க்கும் அதிகமாகும்.

30. “தாராளவாத” நியூ யோர்க் டைம்ஸின் நிலைப்பாடு ஊடகங்கள் முழுவதிலும் எதிரொலிக்கச் செய்யப்பட்டது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது: “ஒரு தடுப்பூசி வரும்வரை பொருளாதாரம் பூட்டியே கிடக்க வேண்டும் என்று, அற்புத சிகிச்சை வேண்டும் என்று அல்லது நாட்டில் ஒவ்வொருவரையும் அன்றாடம் சோதிக்க வேண்டும் என்று கோருகின்ற கூட்டமானது அரசாங்கம் தனியார் பொருளாதாரத்தைப் பிரதியிட்டுவிட முடியும் என்று எண்ணுவதாய் தோன்றுகிறது... ஒரு தடுப்பூசி வராதபட்சத்தில் வைரஸ் நெடுங்காலம் நம்முடன் இருக்கும், ஆகவே நாம் அதனுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்; ஒரு இயங்கும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.” [11]

31. பொருளாதாரத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் திறப்பது உலக சுகாதார அமைப்பு (WHO) நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) மற்றும் தொற்றுநோய்க்கான விஞ்ஞானத்தின் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலால் ஒத்துப்போனது மற்றும் நியாயப்படுத்தப்பட்டது. ஹைட்ரோக்ஸிகுளோரோக்குயின் மற்றும் ரெம்டெஸிவிர் போன்ற பரிசோதிக்கப்படாத மருந்துகளை ட்ரம்ப் அதிரடியாகவும் அறியாமையுடனும் ஊக்குவித்தமையானது, மக்கள் தங்கள் உடலில் வெண்மையாக்கும் சலவைப்பொருளை ஏற்றிக் கொள்ளலாம் அல்லது அவர்களது உடம்பில் புற ஊதாக் கதிர்களை பாயவிடலாம் என்றெல்லாம் ஏப்ரல் 24 அன்று அவர் ஆலோசனையளித்த போது, அச்சமூட்டும் மட்டங்களுக்குச் சென்றது. பரிசோதனை செய்யப்படவில்லை என்றால் தொற்று கண்டறியப்படமுடியாது என்ற அவரது அறிவிப்பானது, “எல்லாவற்றையும் உடைத்தெறியட்டும்” என்ற மனோபாவத்தின் மேலமைந்த சமூக நோயெதிர்ப்புசக்தி கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கட்டுப்பாடுகளை அவசரகதியில் அகற்றுவதன் மோசமான பின்விளைவுகள் குறித்து தொற்றுநோய் வல்லுநர்களும், வைரஸ் ஆய்வாளர்களும் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் விடுத்த எச்சரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, கேலி செய்யப்பட்டன. தொழிலாளர்கள் மறுபடியும் தொழிற்சாலைகளுக்குள்ளும், பள்ளிகளுக்குள்ளும், வேலையிடங்களுக்குள்ளும் அடைக்கப்படவிருப்பதை எதுவும் தடுத்துநிறுத்தப் போவதில்லை.

32. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான இடைவிடாத அழுத்தம், திகைப்பூட்டும் விதத்தில் அத்தியாவசிய உபகரணங்களோ அல்லது ஒத்திசைவான மருத்துவ மூலோபாயமோ இல்லாதிருந்தமை, அரசாங்க செயல்பாடுகளின் அப்பட்டமான கையாலாகாத்தனம், மற்றும் பெரிய பெருநிறுவனங்கள் தத்தமது தொழிலாளர் பிரிவினரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து காட்டிய கொடுமையான அலட்சியம் ஆகியவை துரிதமாக தொற்றுகள் மற்றும் மரணங்களின் ஒரு வெடிப்பாக உருமாற்றம் கண்டது. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பின்மையானது 1930களது பெருமந்தநிலைக்குப் பின்னர் கண்டிராத மட்டங்களுக்கு உயர்ந்தது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உணவு உதவிகளுக்காக வரிசைகளில் நிற்கவேண்டியவர்களாயினர். நூறாயிரக்கணக்கான சிறு வணிகங்களுக்கு அவற்றுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிதி உதவி கிடைக்காது செய்யப்பட்டது.

33. ஆனால் செல்வந்தர்களுக்கோ, இந்த பெருந்தொற்றானது நிதி ஆசீர்வாதமாக ஆகியிருக்கிறது. CARES சட்ட நிறைவேற்றமானது வரலாற்றில் பங்கு மதிப்புகளது மிகத் திடீரென்ற மற்றும் மிக விரைவான மீட்சிக்கு துவக்கமளித்தது. மார்ச்சுக்கும் மே மாதத்திற்கும் இடையில், பிரதான சந்தைக் குறியீடுகள் 30 சதவீதம் வரை உயர்ந்தன. வோல் ஸ்ட்ரீட்டுக்கும், பிரதான வீதிக்கும் இடையிலான பிளவைக் குறித்து விவாதிக்கையில், Economist மிகவும் வெளிப்படையாக விளக்கியது:

மற்ற மத்திய வங்கிகளை விடவும் மிக அதிரடியாக செயல்பட்டு கற்பனைக்கெட்டாத அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் Fed தான் கூடுதலாக இந்த மேம்பட்ட மனோநிலைக்கான காரணமாக உள்ளது. அதிக இலாபம்தரும் “பெறுமதியற்ற” பத்திரங்கள் உள்ளிட இன்னும் அதிக பெருநிறுவனக் கடன்களை வாங்குவதற்கும் அது உறுதிபூண்டிருக்கிறது. பிப்ரவரியில் நின்றுபோயிருந்த பெருநிறுவனப் பத்திரங்களது புதிய வெளியீடுகளுக்கான சந்தை, கண்கவர் பாணியில் மீண்டும் திறந்திருக்கிறது. நிறுவனங்கள் கடந்த ஆறு வாரங்களில் 560 பில்லியன் டாலர் பத்திரங்களை வெளியிட்டிருக்கின்றன, இது வழக்கமான அளவை விட இருமடங்காகும். உல்லாச கடற்பயணக் கப்பல் நிறுவனங்கள் கூட அதிக விலைக்கு பணத்தை திரட்ட முடிந்தது. பெரு நிறுவனங்களில் சீட்டு அடுக்குவரிசை போன்ற திவால்நிலைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்விளைவாக, அமெரிக்க நிறுவனங்களது பணப்பாய்வுக்கு ஒரு பாதுகாப்பு அரணை மத்திய வங்கி ஏற்படுத்தியிருக்கிறது. பங்குச்சந்தை இந்த குறிப்பைப் புரிந்துகொண்டு மேலேறியிருக்கிறது. [12]

34. ஆளும் வர்க்கத்தின் வேலைக்குத் திரும்பக் கோரும் பிரச்சாரத்தின் பேரழிவுகரமான விளைவைக் குறித்து உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மார்ச் மற்றும் ஏப்ரல் முழுவதிலும், ஏராளமான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக, தொடர்ந்து எச்சரித்து வந்தன. ஃப்ரீட்மன் எழுதிய பத்திக்கான பதிலிறுப்பாக, மார்ச் 24 வெளிவந்த கட்டுரையில், ஆளும் வர்க்கத்தின் கொள்கையை “சமூகரீதியாக ஏற்கச்செய்யப்பட்ட ஒரு கருணைக்கொலை...”யின் ஒரு வடிவம் என்று WSWS விவரித்தது. “அமெரிக்க முதலாளித்துவம் மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில், ஆளும் வர்க்கமானது வெறும் ஒட்டுண்ணித்தனமானது மட்டுமல்லாது, சொந்தமக்களையே கொல்லக்கூடியதாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.” [13] “பெருந்தொற்றை ‘வழமையான ஒன்றாக்குவது’, அதாவது, எதிர்வரும் சில காலத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மடிவார்கள் என்ற உண்மைக்கு பொதுமக்களை பழக்கப்படுத்துவது என்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நோக்கமாய் இருக்கிறது” என்று SEP ஏப்ரல் 11 அன்று விடுத்த ஒரு அறிக்கையில் பின்வருமாறு அறிவித்தது. தொழிலாளர்களது மரணம் என்பது “வணிகம் செய்வதற்கான செலவு, உயிரிழப்பவர்கள் இடத்தில் வேறு ஆட்களைப் பணியமர்த்தி வேலையை தொடர வேண்டும்” என்பதைப் போல கையாளப்படவிருந்தது. [14]

35. மனித உயிர் பாதுகாப்புக்கு அதீதமான அக்கறை செலுத்தப்படுவதற்கு எதிராக வாதிட்டு நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான கருத்துரைகளுக்கு ஏப்ரல் 18 அன்றான கட்டுரையில் WSWS கவனம் ஈர்த்தது. சுவிட்சர்லாந்தின் Neue Zurcher Zeitung இல் வந்த ஒரு கருத்துரை பெருந்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் “தனிப்பட்ட வயதானவர்கள் ஒரு சில வருடங்கள் காலத்திற்கு முந்தியே இறப்பதைத் தடுப்பதற்காக பொருளாதார தற்கொலையை” தேர்ந்தெடுப்பதாக அர்த்தம் தருவதாகும் என்று அறிவித்ததென்றால், ஜேர்மனியின் Der Spiegel இல் வந்த வேறொரு கருத்துரையோ, பெருந்தொற்றைத் தடுப்பதானது “இறப்பு இல்லாமல் வாழ்வு சிந்திக்க முடியாதது” என்ற கோட்பாட்டை மீறுவதாய் இருப்பதாக வாதிட்டது. “75 ஆண்டுகளுக்கு முன்பாக இதேமாதத்தில் அவரது பேர்லின் பதுங்குகுழியில் தற்கொலை செய்துகொண்ட நாஜி தலைவரான ஹிட்லராய் இருந்தால், இந்த வாதங்களுக்கு உடனடியாக உடன்பட்டிருப்பார்” என்று WSWS குறிப்பிட்டது. [15]

36. பெருந்தொற்றுக்கு ஆளும்வர்க்கம் அளித்த பதிலிறுப்பானது சமூகப் பதட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு கணிசமான வளர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ச்சியான போலிஸ் வன்முறை நிகழ்வுகள் பாரிய ஆர்ப்பாட்டங்களது வெடிப்புக்கான தூண்டுபொறியாக இருந்தன. மார்ச் 13 அன்று, கெண்டகியின் லூயிஸ்வில் நகரில், Breonna Taylor என்ற பெண்ணை அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அத்துமீறி நுழைந்து போலிஸ் கொன்றது. மே ஆரம்பத்தில், ஜோர்ஜியாவின் புருன்ஸ்விக் நகரில் அஹமத் ஆர்ப்ரே ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரி மற்றும் பொது விசாரணையாளர் மற்றும் அவரது மகனால் பிப்ரவரி 25 அன்று கொலை செய்யப்பட்டதன் காணொளித் துண்டு வெளியானது. அதன்பின், மே 25, தேச நினைவுதினத்தன்று, மின்னேசோட்டாவின் மினியபோலிஸ் நகரில் நான்கு போலிஸ் அதிகாரிகள் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொடூர படுகொலையில் பங்குபெற்றனர். அலைபேசியில் படம் பிடிக்கப்பட்டிருந்த அந்த திகிலூட்டும் காட்சி மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டது.

37. ஃபுளோய்ட் படுகொலையானது அமெரிக்காவில் பாரம்பரிய பழமைவாத ஆழ்தெற்குப் பகுதிகள் உள்ளிட அமெரிக்காவின் ஒவ்வொரு பெரிய நகரத்திலும், மற்றும் அத்தனை கண்டங்களது நாடுகளிலும் நிறம்கடந்த மற்றும் இனம்கடந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றவைத்தது. பல தசாப்தங்களாக, தொழிற்சங்கங்களது செயலூக்கமான ஆதரவுடன் சமூக ஆர்ப்பாட்டங்களும் வர்க்கப் போராட்டமும் ஒடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில், கோபமும் அதிருப்தியும் வெடித்துப் பகிரங்கமானது. ஆர்ப்பாட்டங்கள் போலிஸ் வன்முறையால் பொறிபற்றியிருந்தன என்ற அதேநேரத்தில், வாழ்க்கைத் தரங்களில் நீண்டகால மற்றும் தீவிர வீழ்ச்சி, இளைஞர்கள் மீது திணிக்கப்பட்ட நசுக்கும் கடனளவுகள் மற்றும் அவர்களது வருங்காலத்திற்கான வாய்ப்புவளங்கள் மங்கியநிலை, வியாபகமான சமூக சமத்துவமின்மை மற்றும் அதன் பின்விளைவுகள், ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்பட்டமை, மற்றும் இரு-கட்சி ஆட்சிமுறையின் நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பின் சட்டகத்திற்குள்ளாக அர்த்தமுள்ள மாற்றத்திற்கோ அல்லது சமூக நிலைமைகளிலான மேம்பாட்டிற்கோ சாத்தியமில்லாதநிலை ஆகியவையே அவற்றின் கீழமைந்த காரணங்களாக இருந்தன.

38. சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆர்ப்பாட்டங்களை வரவேற்றது, ஆதரவளித்தது. மே 30 அன்று, SEP விளக்கியது: “ஒரு பெருந்தொற்றின் தீவிர ஆபத்துக்களுக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆழமான வேரூன்றிய உறுதிப்பாடு, பாசிச பொலிஸ் மீதும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதுமான வெறுப்பு, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளது ஐக்கியத்திற்கான ஒரு ஆழ்ந்த உறுதிப்பாடு ஆகியவற்றின் ஒரு சக்திவாய்ந்த மற்றும் உதாரணகரமான வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன.” [16] ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான உண்மையானவொரு முற்போக்கு மாற்றானது கீழிருந்தான ஒரு வெகுஜன இயக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எழ முடியுமே தவிர, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளை ட்ரம்ப் கையாளும் விதத்தில் அதிருப்தியுற்றிருக்கின்ற இராணுவ மற்றும் உளவு முகமைகளது பிரிவுகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மேலிருந்து ஜனநாயகக் கட்சி தூண்டிவிடுகின்ற ஒரு அரண்மனை சதிக்கவிழ்ப்பில் இருந்து அல்ல என்ற SEP இன் பகுப்பாய்வை இந்த ஆர்ப்பாட்டங்கள் ஊர்ஜிதப்படுத்தின. 2017 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், WSWS முன்கணித்தது:

வெகுஜனப் போராட்டங்கள் அமெரிக்காவின் திட்டநிரலில் இருக்கின்றன. ஆர்ப்பாட்டப் பேரணிகள், எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஒரு பொதுவான தேசம் தழுவிய தன்மையைப் பெறவிழைகின்றன. ட்ரம்புக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் அதன் அரசுக்கும் எதிராய், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டில் இருந்து சுயாதீனப்பட்டும் மற்றும் அவற்றுக்கு எதிரான விதத்திலும், ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்திற்கான தேவையை முன்னோருபோதும் இல்லாதளவு அவசரமாக முன்நிறுத்தும் என்பதே இந்தப் பகுப்பாய்வில் இருந்து எழும் அரசியல் முடிவாகும். [17]

39. ஃபுளோய்ட் கொலை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறை இரண்டுக்குமே ட்ரம்ப் நிர்வாகமே நேரடிப் பொறுப்பாகும். சென்ற அக்டோபரில், மினியபோலிஸ் நகரில், “சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு ட்ரம்புக்கு வாக்களியுங்கள்” என்ற பதாகைகளை காட்டியபடி நின்ற பொலிஸ்காரர்களின் ஆதரவுக்கு மத்தியில், ட்ரம்ப் சோசலிஸ்டுகள் மற்றும் “தீவிர இடது”களுக்கு எதிரான ஒரு வசைமாரி உரை நிகழ்த்தினார். நிதிய சிலவரணியின் கொள்கைகளுக்கு ஒரு வலது-சாரி, பாசிச ஆதரவு அடித்தளத்தை உருவாக்கும் தனது முயற்சிகளின் பகுதியாக ட்ரம்ப் போலிஸ் வன்முறையை தொடர்ந்து ஊக்குவித்து வந்திருக்கிறார். ஃபுளோய்ட் படுகொலைக்கு முன்வந்த வாரங்களில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கத்துடனான எந்த கட்டுப்பாடுகளில் இருந்தும் மின்னசோட்டா, மிச்சிகன், வேர்ஜினியா மற்றும் பிற மாநிலங்களை “விடுதலை செய்ய”க் கோரும் அதி-வலது ஆர்ப்பாட்டங்களை ட்ரம்ப் ஊக்குவித்தார்.

40. எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆண்டும் நிறவேறுபாடின்றி 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர்களைக் காவுகொள்ளும் போலிஸ் வன்முறையானது அதன் அடித்தளத்தில் வர்க்க ஆட்சியின் ஒரு விளைபொருளாகும். போலிஸ் வன்முறை எனும் தொற்றுவியாதியானது ஒபாமாவின் கீழும் நிலவியது, நாடெங்கிலும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சரி, அல்லது மினியபோலிஸ் உள்ளிட்ட இடங்களில் போல ஜனநாயக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சரி நாடெங்கிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சமூக அமைதியின்மை பெருகிச் செல்கின்ற நிலைமைகளின் கீழ், போலிசானது, படிப்படியாக இராணுவத்துடன் ஒருங்கிணைப்பு செய்யப்படுகின்ற வேளையில், வன்முறையுடனான ஒடுக்குமுறைக்கான ஒரு படையாக பயன்படுத்தப்படவிருக்கிறது.

41. ஆகவே, பொலிஸ் வன்முறையை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே எதிர்க்கப்பட முடியும் என்று SEP முடிவுக்கு வந்தது. “பொலிஸ் கொடுமைக்கு எதிரான போராட்டமானது பாதுகாப்பற்ற வேலைநிலைமைகள், பாரிய வேலைவாய்ப்பின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துசெல்லும் இயக்கத்துடன் பிணைக்கப்பட்டாக வேண்டும். அது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டமாகவும் இருக்கிறது.” [18]

42. பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்குகையில், SEP ஆர்ப்பாட்டங்களின் சர்வதேச குணாம்சமானது 1988 இலேயே நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு சுட்டிக்காட்டியிருந்த பொருளாதார பூகோளமயமாக்கம் மற்றும் தகவல்தொடர்பு வடிவங்களிலான புரட்சிகர மாற்றங்கள், புரட்சிகர பின்விளைவுகள் ஆகியவற்றின் ஒரு பிரதிபலிப்பாக இருந்ததற்கு குறிப்பாக கவனத்தை ஈர்த்தது. ஜூன் 15 அன்று வெளியான ஒரு அறிக்கையில் SEP பின்வருமாறு எழுதியது:

ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த நிகழ்ச்சிப்போக்குகள் இறுகிப்போய் கிடக்கும் தேசிய-அரசுகளின் அமைப்புமுறைக்கும் உலகப் பொருளாதாரத்தின் யதார்த்தத்திற்கும் இடையிலமைந்த அத்தியாவசியமான முரண்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. மேலும், பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கானது முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட, சர்வதேச இயக்கத்திற்கான அடிப்படையை உருவாக்கியிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஐக்கியத்திற்கான சாத்தியமென்பது ஒரு கற்பனாவாத இலட்சியமல்ல. அதன் ஸ்தூலமான யதார்த்தமாதல் தற்போதைய உலக முதலாளித்துவ உற்பத்தியின் சூழ்நிலைமைகளில் இருந்து எழுகிறது...[19]

ஜூன் 1 – ஜூலை 2020: ட்ரம்ப்பின் ஆட்சிசதி நடவடிக்கையும் ஜனநாயகக் கட்சியின் இனவாத அரசியலும்

43. அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கிவீசி நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்தும் விதமாக, ஒரு ஜனாதிபதி மாளிகை ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றுவதற்கான முயற்சி தான் ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிலிறுப்பாக இருந்தது. ஜூன் 1 அன்று வெள்ளை மாளிகையின் ரோஜாத் தோட்டத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ட்ரம்ப், பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை “உள்நாட்டு பயங்கரவாதம்” என முத்திரை குத்தும் பொருட்டு கிளர்ச்சிச் சட்டம் 1807 ஐ கையிலெடுப்பதற்கான தனது கருத்தை அறிவித்தார். வெள்ளை மாளிகைக்கு வெளியில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த குடிமக்களின் மீது கூட்டரசாங்க பொலிஸ் ஒரு வன்முறைத் தாக்குதலை நடத்திய வேளையில், ட்ரம்ப் தான் ஒரு “சட்டம் ஒழுங்கு”க்கான ஜனாதிபதி என்று அறிவித்தார். நகரங்களோ அல்லது மாநிலங்களோ ஆக்ரோஷமானது என வெள்ளை மாளிகை கருதக்கூடியவற்றுக்கு, போதுமான அளவிலான நடவடிக்கைகளை எடுக்காதபட்சத்தில், “அமெரிக்க இராணுவத்தை நான் நிலைநிறுத்துவேன், அவர்களுக்காக அந்தப் பிரச்சினையை நான் விரைந்து தீர்ப்பேன்” என்று ட்ரம்ப் கூறினார்.

44. வேலைக்குத் திரும்பக் கோரும் பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை மூர்க்கத்துடன் முன்தள்ளிக் கொண்டிருந்த அதேவேளையில் தான் அரசியலமைப்பு சட்டத்தைக் தூக்கிவீசுவதற்கான ட்ரம்ப்பின் நடவடிக்கைகளும் நடந்தேறின. ஃபுளோய்ட் கொல்லப்பட்ட நினைவுதின நாளானது பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் ஒரு மைல்கல்லாக விளம்பரப்படுத்தப்பட்டது. ரோஜா தோட்ட உரைக்கு முன்பாக ஆளுநர்களுக்கு விடுத்த ஒரு அழைப்பில் ட்ரம்ப் அறிவித்தார்: “இது ஒரு இயக்கம். அதனை நீங்கள் தணிக்கவில்லை என்றால், அது மோசமடைந்து கொண்டே செல்லும்.” அதாவது, பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகத் தொடங்கியவை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கமாக துரிதமாக அபிவிருத்தி காணக்கூடும்.

45. ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப்பின் சதிவேலைக்கான அத்தனை எதிர்ப்பையும், இத்தகையதொரு நடவடிக்கை நாட்டை வெகுதுரிதமாக உள்நாட்டுப் போரின் திசையில் தள்ளும் என்று கவலை கொண்டிருந்த உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற தளபதிகள் கையில் விட்டு விட்டனர். இதனால் உருவாகும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான நீண்டகால விளைவுகளை அம்பலப்படுத்தும் விதமான எந்த ஒரு முக்கிய அறிக்கையையும் ஜனநாயகக் கட்சியின் எந்த உயர்மட்ட பிரமுகரும் வெளியிடவில்லை.

46. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவிருக்கும் ஜோ பைடன், “ட்ரம்பை தோலுரித்தமைக்காக நான்கு படைத்தலைவர்களுக்கு பாராட்டுமழை” பொழிவதின் மூலம் பதிலிறுத்தார். 2020 இல் தோற்று பதவியை விட்டு விலக ட்ரம்ப் மறுப்பாரேயானால், “நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் [இராணுவம்] அவரை புடைசூழ்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியில் அனுப்புவார்கள் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.” என பைடன் கூறினார். WSWS எழுதியவாறாக:

ஜனநாயகக் கட்சியினர் இராணுவத்தை அமெரிக்காவில் அரசியலின் இறுதி மத்தியஸ்தராக கருதுகின்றனர் என்பதையே பைடனின் கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. ஜனாதிபதியின் இந்த எதேச்சாதிகார ஆட்சிப் பிரகடனத்திற்கு எதிராக நாடாளுமன்றமோ அல்லது ஜனநாயகக் கட்சியோ ஒரு சுண்டுவிரலையும் கூட அசைக்கவில்லை. அத்தகையதொரு இராணுவ நடவடிக்கையானது போதிய தயாரிப்பில்லாமல் இருப்பதாலும், இப்போதைக்கு அவசியமற்றதாகவும் இருக்கின்றது என்று பென்டகனின் மேல்மட்டத்தில் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணத்தால் மட்டுமே, ட்ரம்ப் பின்வாங்கினார். [20]

47. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளது அபாயங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்துக்கு விழிப்பூட்டுவதில் சோசலிச சமத்துவக் கட்சி தனியாக நின்றது. ஜூன் 4 அன்று வெளியான “தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அழைப்பு! ட்ரம்ப்பின் ஆட்சி சதி நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம்!” என்ற அறிக்கையில் SEP எழுதியது:

தொழிலாள வர்க்கமே வெள்ளை மாளிகையின் சதியின் இலக்காகும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பானது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பு மற்றும் அதன் தறகொலைக்கு ஒத்த வேலைக்குத் திரும்பக் கோரும் பிரச்சாரம் ஆகியவற்றின் விளைவாய் இது பிரம்மாண்டமான அளவில் தீவிரப்பட்டிருக்கின்ற சமூக சமத்துவமின்மை தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் தீவிரமான சமூக கோபத்துடன் ஒன்றிணையும் என்பது தொடர்பாக பெருநிறுவன-நிதிய தன்னலக்குழு அச்சமடைந்திருக்கிறது.

நெருக்கடி கடந்து விட்டிருக்கிறது என்று கருதுவதைக் காட்டிலும் ஆபத்தானது வேறொன்றுமில்லை. மாறாக, அது இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்த முன்கண்டிராத நெருக்கடியில் ஒரு சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் தலையிட்டாக வேண்டும். வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் வழிமுறைகளின் மூலமாக வெள்ளை மாளிகையின் சதியை அது எதிர்த்து நிற்க வேண்டும். [21]

48. ஜூலையில் ட்ரம்ப் நிர்வாகம், அரசியலமைப்புச் சட்டத்தையும், அதன் உரிமைகளின் மசோதாவையும் அப்பட்டமாக மீறிய விதத்தில், போர்ட்லாண்டில் கூட்டரசாங்கத்தின் துணை இராணுவப் படைகளை நிலைநிறுத்தியதோடு, மற்ற நகரங்களிலும் மேலதிகமாக நிலைநிறுத்தங்களை செய்யப் போவதாக மிரட்டல்கள் விடுத்ததில் இந்த எச்சரிக்கைகள் ஊர்ஜிதமாயின. உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிய, இராணுவ உடையில் இருந்த அடையாளம்காணமுடியாத முகவர்கள், நிராயுதபாணியாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இழுத்துச் சென்று அவர்களை அறியப்படாத இடங்களுக்குக் கொண்டுசெல்கின்ற அடையாள இலக்கத்தகடற்ற வாகனங்களுக்குள் வீசினர்.

49. முன்கண்டிராத இந்தத் தாக்குதலுக்கான பதிலிறுப்பில், போர்ட்லாண்டின் மேயரால் வரைவு செய்யப்பட்டு, சிக்காகோ, வாஷிங்டன் டி.சி., அட்லாண்டா மற்றும் கான்சாஸ் சிட்டி ஆகிய நகரங்களது மேயர்களால் சேர்ந்து கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் அவர்கள் அறிவித்திருந்தனர்: “நமது நகரங்களில் இந்த துணை இராணுவ வகை படைகளை ஒருதலைப்பட்சமாக நிறுத்துவது என்பது நமது ஜனநாயக அமைப்புமுறைக்கும் நமது மிக அடிப்படை விழுமியங்களுக்கும் முற்றிலும் பொருத்தமற்றதாகும்.” பாசிச ஃபாக்ஸ் நியூஸ் வருணனையாளர் சீன் ஹானிடி உடனான ஜூலை 23 அன்றான ஒரு நேர்காணலில், ட்ரம்ப் பின்வருமாறு எச்சரித்தார்: “நாம் அத்தனை நகரங்களுக்கும் போவோம், எந்தவொரு நகரங்களுக்குள்ளும் போவோம். நாங்கள் தயார். தாங்கள் செய்வது என்ன என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்ற 50,000 முதல் 60,000 வரையான படையினரை நாங்கள் நிறுத்துவோம். அவர்கள் வலிமையானவர்கள். உறுதிமிக்கவர்கள். நாம் இந்தப் பிரச்சினைகளை வெகு வேகமாகத் தீர்க்க முடியும்.”

50. அரசியல் எதிர்ப்புக்கு எதிராக இராணுவப் படைகளை ட்ரம்ப் களமிறக்கியதன் சர்வாதிகாரத் தாக்கங்கள் வரவிருக்கும் தேர்தலில் முடிவுகள் என்னவாயிருந்தாலும் தான் பதவியில் தொடரவிருப்பதாக அவர் விடுத்த பகிரங்க மிரட்டல்களின் மூலம் வெளிப்படையாகின.

51. வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் அமைதியிழந்திருப்பது ட்ரம்ப் மட்டுமல்ல. முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் எப்போதும் தொழிலாள வர்க்க போர்க்குணம் மற்றும் சோசலிச செல்வாக்கின் எந்த அறிகுறிக்கும் தீவிர உணர்திறன் உடைய வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களை திசைதிருப்பி அவற்றை அப்பட்டமாக இனவாத வழியில் தவறாக வழிநடத்துவதற்காக தலையீடு செய்தன. இந்த பிற்போக்குத்தனமான போக்கிற்கு எதிராய் SEP பின்வருமாறு எச்சரித்தது:

முதலாளித்துவ அரசின் ஒரு கருவியாகவும் வர்க்க ஆட்சியின் முன்வரிசைக் காவலர்களாகவும் இருக்கின்ற பொலிசிடம் இருந்து கவனத்தை மாற்றுவதே இனவாத குறுங்குழுவாதிகளின் நோக்கமாய் இருக்கிறது. மேலும், ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு இனவாத வரையறையை கற்பிப்பதற்கான முயற்சிகள் அவ் ஆர்ப்பாட்டங்களின் வெளிப்படையான நிறம்கடந்த, பல்லின மற்றும் பல்தேசிய தன்மையுடன் முரண்பாடு கொண்டிருக்கின்றன. [22]

52. ஆர்ப்பாட்ட இயக்கத்தை நோக்குநிலை பிறழச் செய்யவும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை அடக்கவும் உறுதிபூண்டிருந்த நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அதன் முக்கிய தலைவர்களை மதிப்பிழக்கச் செய்கின்ற அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. இப்பிரச்சாரத்தை அது 2019 ஆகஸ்டில் 1619 திட்டப்பணியுடன் தொடக்கியிருந்தது. அடிமைமுறை ஆதரவு தலைவர்களின் சிலைகளை அகற்றுவதற்கான ஒரு நியாயமான கோரிக்கையாகத் தொடங்கிய ஒன்று வாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன், கிராண்ட் மற்றும் இன்னும் ஒரு புகழ்பெற்ற அடிமைமுறையொழிப்புவாதியினதும் வாழ்க்கைகளை நினைவூட்டும் சிலைகளை அவமதிப்பதற்கும் அகற்றுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக ஆனது.

53. அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் தலைவர்களது சிலைகளை வீழ்த்தும் பிரச்சாரத்திற்கான தனது எதிர்ப்பில், WSWS, ட்ரம்ப் நிறவெறிக் குரோதங்களை தூண்டுகின்ற நோக்கம் கொண்ட விதத்தில், அமெரிக்க சமூகத்தின் அரசியல்ரீதியாக மிகவும் நோக்குநிலை பிறழ்ந்த பிரிவினருக்கு அழைப்புவிடுகின்றார் என்றால், ஜனநாயகக் கட்சியோ, அத்தனை சமூகப் பிரச்சினைகள் மற்றும் மோதல்களையும் நிறரீதியாக மதிப்பீடு செய்வது மற்றும் விளக்குவதன் மூலமாக வகுப்புவாத அரசியலின் இன்னொரு வகையைப் பிரயோகிக்கிறது என்பதை விளக்குகிறது.

வறுமை, பொலிஸ் கொடுமை, வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியங்கள், பெருந்தொற்று மரணங்கள் என குறிப்பான பிரச்சினை என்னவாயிருந்தபோதிலும், அது கிட்டத்தட்ட பிரத்தியேகமாய் நிறவேறுபாடு ரீதியாக வரையறை செய்யப்படுகிறது. இந்த நிறவெறி கனவுலகத்தில், “வெள்ளை” நிறத்தவர் அத்தனை பிரச்சனைகளில் இருந்தும் அவர்களுக்கு விலக்களிக்கிற ஒரு உள்ளார்ந்த “தனிச்சலுகை” பெற்றிருக்கின்றனர்.

இன்றைய யதார்த்தத்தினை இவ்வாறு மோசமாக திரிப்பதற்கு இதற்குச் சளைக்காத மோசமான விதத்தில் கடந்தகாலத்தை திரிப்பு செய்வது அவசியமாயுள்ளது. சமகால அமெரிக்காவை இடைவிடாத இனச் சண்டையில் இருக்கின்ற ஒரு நாடாக சித்தரிப்பதற்கு, அதேவகையிலான ஒரு வரலாற்று கட்டுக்கதையை உருவாக்குவது அவசியமாயிருக்கிறது. வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக, அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரலாறானது தொடர்ச்சியான பரஸ்பர நிறவெறி மோதலின் வரலாறாக முன்வைக்கப்படுகிறது. [23]

54. நிறவெறி இருப்பதுடன், குறிப்பாக பொலிஸ் துறைகளுக்குள் அணிதிரட்டப்பட்டுள்ள பிற்போக்கான பிரிவுகளுக்கு மத்தியில் அது ஊக்குவிக்கப்படுகிறது. சகிப்பின்மை மற்றும் இனப்பாகுபாட்டின் அத்தனை வடிவங்களையும் போலவே, இதுவும் ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. எனினும், அமெரிக்கா தனித்தனி நலன்களைக் கொண்ட “வெள்ளை அமெரிக்கா”வாகவும் “கறுப்பு அமெரிக்கா”வாகவும் பிளவுபட்டிருக்கவுமில்லை, அல்லது நிறவெறி அரசியலை ஊக்குவிப்பவர்களால் கூறப்படுவதைப் போல அத்தனை “வெள்ளை மக்களும்” பொலிஸ் வன்முறை மற்றும் ஒடுக்குமுறையால் பயனடைபவர்களும் இல்லை.

55. அமெரிக்க அரசியலின் மைய அச்சாக இனத்தை ஆக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டாலும், இந்த “இழப்புகளுக்கு” ஆபிரிக்க அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளும் உயர்-நடுத்தர வர்க்கமும் வைக்கின்ற பிற்போக்குத்தனமான கோரிக்கையுடன் இந்த முயற்சிகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன. வர்க்க அடிப்படையிலான சமூகப் பிளவில் வேர்கொண்டிருக்கின்ற பொருளாதார சமத்துவமின்மையே அமெரிக்காவில் பெரும்பாலான சமூக யதார்த்தமாய் இருப்பதாகும். செல்வமும் வருவாயும் எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்பது குறித்து பிரபல பொருளாதார அறிஞர்களான தோமஸ் பிக்கெட்டி, இம்மானுவல் சாயெஸ் மற்றும் கேபிரியல் ஸக்மேன் ஆகியோர் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் 50 சதவீதத்தினருக்கும் எஞ்சியோருக்கும் இடையில் வருமான வளர்ச்சி விகிதத்தில் கூர்மையான வேறுபாடு இருப்பதைக் கண்டனர்.

வரிவிதிப்பிற்கு முன்பான வருமானம் கீழ்மட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் பேருக்கு 1980 க்குப் பிந்தைய காலத்தில், தலைக்கு 16,000 டாலர் என்ற அளவில் (2014 வரையான காலத்தில் டாலர் பெறுமதிக்கும் தேசிய ரக உள்நாட்டு உற்பத்தி விகிதத்தையும் பயன்படுத்தி கண்டறியப்பட்டது) தேங்கியிருக்க, மற்றவர்களுக்கு இது 2014 இல் 60 சதவீதம் வரை அதிகரித்து 64,500 டாலர்கள் அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தது. இதன் விளைவாக கீழிருக்கும் 50 சதவீதம் பேரின் வருமான பங்கு 1980 இல் 20 சதவீதமாக இருந்ததில் இருந்து 2014 இல் 12 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. இதனிடையே மேலிருக்கும் 1 சதவீதத்தினரின் வரிக்கு முந்தைய சராசரி வருமானம் 420,000 டாலர்களாய் இருந்ததில் இருந்து 1.3 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருந்தது, அவர்களின் வருமானம் பங்குசதவீதம் 1980களின் ஆரம்பத்தில் 12 சதவீதமாக இருந்ததில் இருந்து, 2014 இல் 20 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்த இரண்டு குழுக்களது வருமான பங்களிப்பு சதவீதமும் இடம்மாறியிருந்ததுடன் தேசிய வருமானத்தில் 8 சதவீதம் கீழிருக்கும் 50 சதவீதத்தினரில் இருந்து மேலிருக்கும் 1 சதவீதத்தினருக்கு கைமாற்றப்பட்டிருந்தது. மேல் மட்டத்திலிருக்கும் 1 சதவீதத்தினரின் வருமானத்தின் பங்கு எண்ணிக்கையளவில் அவர்களைவிட 50 மடங்கு அதிகமாக இருக்கும் கீழிமட்டத்திலிருக்கும் 50 சதவீதத்தினரது வருமான பங்கைக் காட்டிலும் இப்போது கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கிறது. 1980 இல், மேலிருக்கும் 1 சதவீத வயதுவந்தோர் கீழிருக்கும் 50 சதவீத வயதுவந்தோரைக் காட்டிலும் சராசரியாக 27 மடங்கு அதிகமாக வருமானத்தை பெற்றனர் என்றால், இன்று அவர்கள் 81 மடங்கு அதிகமாய் பெறுகின்றனர்.

பெருந்தொற்றின் ஆறு மாதங்கள்: முடிவுகளும் வாய்ப்புவளங்களும்

56. கோவிட்-19 வைரஸ் முதன்முதலாய் கண்டறியப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர், அது அமெரிக்கா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னதாக இலையுதிர்காலத்தில் பெருந்தொற்றின் ஒரு இரண்டாவது அலைக்கான சாத்திய அபாயங்கள் குறித்த பேச்சு மாறி, முதலாவது அலையே இன்னும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என்பதும் நாடுமுழுவதையும் இப்போதும் அது பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உணரப்பட்டது. தகவல் ஊடகங்களே கூட மிகவும் எச்சரிக்கையடைந்து ஏப்ரல் மே மாதங்களில் அவை அடிக்கடி பிரயோகித்து வந்த “நம்பிக்கைக் கீற்றுகள்”, “மீட்சியின் ஆரம்பம்”, “தொலைதூரத்தில் வெளிச்சம்” போன்ற பிரயோகங்களை விட்டுவிட்டன. உயிரிழப்புகள் குறித்து சமீபத்தில் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ மதிப்பீடானது நவம்பருக்குள்ளாக 225,000 அமெரிக்கர்கள் இந்த நோய்க்கு பலியாகுவார்கள் என்று கூறியது, அநேகமாக இந்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விடக் குறைந்ததாகவே இருக்கும் என நிரூபிக்கப்படும்.

57. ஆளும் தன்னலக்குழுவானது பொதுச் சுகாதாரம் குறித்த அத்தனை பரிசீலிப்புகளையும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கு கீழ்ப்படியச் செய்த நிலையிலும் கூட, பொருளாதார நிலைமை மேலும் மேலும் செய்வதறியா நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச்சில் கேர்ஸ் (CARES) சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர், பங்குச் சந்தைகளில் உண்டான கண்கவர் எழுச்சி, உண்மையான பொருளாதாரத்தின் எந்த மீட்சிக்கும் தொடர்பில்லாத ஒரு ஊகவணிக பெருநிகழ்வாக இருந்திருக்கிறது. எனினும் பெடரல் ரிசர்வின் இலத்திரனியல் பண அச்சடிப்பு, நிரந்தரமாக எல்லையின்றி போய்க்கொண்டே இருக்க முடியாது, அத்துடன் அதன் நடவடிக்கைகள் மேலும் மேலும் திறனற்றவையாக ஆகிக் கொண்டிருக்கின்றன என்ற கவலை நிதி வட்டாரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. “Fed இன் பலத்தின் வரம்புகள்” குறித்து சமீபத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் இவ்வாறு எச்சரித்தது:

இந்த இலையுதிர்காலத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு ஒரு நேர்மறையான ஊக்கத்தைக் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இதேபோன்றதொரு அதிர்ச்சியை வெகுவிரைவில் மறுபடியும் கொடுப்பது Fed இற்கு அதீத கடினமானதாக இருக்கும்; நாம் இப்போது படிப்படியான நடவடிக்கையின் பகுதியில் இருக்கிறோம். திவாலடையும் நிறுவனங்களது இருப்புநிலை கணக்குகளின் அறிக்கைகளிலான முன்னெப்போதினும் விரிந்து கொண்டே செல்லும் ஓட்டைகளை அடைத்துக் கொண்டே இருப்பதோ, இழந்த நுகர்வோர் தேவையை பிரதியிடுவதோ அல்லது அத்தனை வேலை வெட்டுகளையும் திரும்பச் செய்வதோ Fed ஆல் முடியாது. நிதிய ஆதரவும் கூட வலியைத் தாமதிக்க முடியுமே தவிர, அகற்றி விட முடியாது.

இதனைப் புரிந்துகொள்வதற்கு, விமான நிறுவனங்களை எடுத்துக் கொள்வோம். இந்த இலையுதிர்காலத்தில், அமெரிக்க விமான நிறுவனங்கள் நிதியுதவி பெற்றுக் கொண்டு, பதிலுக்கு அக்டோபர் 1 வரையில் ஆட்குறைப்பு செய்வதில்லை என்று உறுதியளித்தன. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில், டெல்டா நிறுவனம் 17,000 முன்கூட்டிய ஓய்வுகளை அறிவித்திருக்கிறது, யுனைடெட் நிறுவனம் அதன் 45 சதவீத அமெரிக்க பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவித்தலை அளித்திருக்கிறது.

58. இந்த ஆண்டின் முதல்பாதி பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் அளித்த பதிலிறுப்பினால் மேலாதிக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பாதியில் தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பு முன்னணிக்கு வரவிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளது பேரழிவுகரமான பின்விளைவுகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் அங்கீகரிப்புக்கு ஒரு திகைப்பூட்டும் அடியைக் கொடுத்திருக்கின்றன. பொருளாதாரப் பொறிவுக்கான பெருநிறுவன பதிலிறுப்பு பாரிய வேலையிழப்புகள், ஊதிய வெட்டுக்கள், Medicare, Medicaid, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பிற முக்கிய ஏற்கனவே நிதியாதாரப் பற்றாக்குறையில் இருக்கும் சமூக வேலைத்திட்டங்களுக்கான செலவினங்களை மேலும் வெட்டுவதற்கான கோரிக்கைகள் ஆகியவை தொழிலாள வர்க்கத்தில் பெருகும் எதிர்ப்பை எதிர்கொள்ளவிருக்கிறது. பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு வழிதரும் விதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கும் எதிர்ப்பு குவியும். வீடுகளை விட்டு வெளியேற்றங்கள் மற்றும் முன்கூட்டிய விற்பனைகளுக்கு எதிர்ப்பு உண்டாகும். ஆகவே, சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கப் போராட்டம் தீவிர வளர்ச்சியடைய எதிர்பார்க்கிறது, அப்போராட்டம் கட்சியின் தலையீட்டின் மூலமாக அரசியல் வர்க்க நனவுள்ள மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு தன்மையை எடுக்கும்.

ஏகாதிபத்தியமும் போர் அபாயமும்

59. தொழிலாள வர்க்கத்தில் சமூக போர்க்குணமும் அரசியல் நனவும் வளர்ச்சி காண்பதால் உண்டாகக் கூடிய மரண அச்சுறுத்தலைக் குறித்து அமெரிக்க ஆளும் வர்க்கம் அறிந்து வைத்திருக்கிறது. நாம் ஏற்கனவே விளக்கியிருப்பதைப் போல, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த நிறப்பாகுபாட்டு அரசியலை பயன்படுத்துவதில் தொடங்கி, முற்போக்கான, எல்லாவற்றுக்கும் மேல், சோசலிச எதிர்ப்பை ஒடுக்குவதற்கான பொலிஸ் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மற்றும் இறுதியாக அரசியலமைப்புச்சட்ட நிர்ணயங்களை மறுதலித்து பகிரங்கமாக சர்வாதிகாரத்தில் இறங்குவது வரையில் தனது ஆட்சிக்கான ஆபத்தை எதிர்கொள்வதற்கு அவசியமாக அது கருதுகின்ற அத்தனை நடவடிக்கைகளையும் பிரயோகிக்க அது ஆயத்தமாயுள்ளது.

60. ஆயினும் இந்த உள்நாட்டு தந்திரோபாயமானது ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பிரம்மாண்ட அதிகரிப்புடன் கைகோர்த்துச் செல்லும். பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கையின் மற்ற அனைத்து துறைகளில் போலவே, பெருந்தொற்றானது போருக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயாரிப்புகளை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இன் மிகத் தொடக்கத்தில், அமெரிக்காவில் பெருந்தொற்று வெடிப்பதற்கு முன்பாக, உலக சோசலிச வலைத் தளம், ஜனவரி 2, 2020 அன்றான ஒரு கட்டுரையில் ஈரானிய தளபதி காசிம் சுலைமானி ட்ரம்ப் நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டதன் தாக்கங்களுக்கு அவசர கவனத்தினை செலுத்த அழைப்பு விடுத்தது:

2020 இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்றபோதிலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் உத்தரவிடப்பட்ட மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியின் படுகொலையானது, கணக்கிலடங்கா பின்விளைவுகளுடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் முழுவீச்சிலான போருக்கு அச்சுறுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி இன்னுமொரு குறிவைத்த கொலையில் சம்பந்தப்படுவதும், அதன்பின் இரத்தவெறியுடன் அதைக் குறித்து பெருமையடிப்பதும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கின் சீரழிவு மிகமுன்னேறிய நிலைக்குச் சென்றிருப்பதற்கு சாட்சியமாயிருக்கிறது.

61. ஈரானுக்கு எதிரான மேலதிக இராணுவத் தாக்குதல்களை தாமதிப்பதற்கான தந்திரோபாய முடிவு எடுக்கப்பட்டது என்றபோதும், WSWS எச்சரித்தது: “கடந்த இரண்டு நாட்களில் நடந்திருக்கக் கூடிய எதுவும் அமெரிக்காவின் இராணுவ நோக்கங்களை மாற்றி விடவில்லை. இந்த வாரத்தின் நெருக்கடியைக் கொண்டுவந்த அதே பூகோள அரசியல் நிர்ப்பந்தங்கள் புதிய நெருக்கடிகளையும் கொண்டுவரும்.”

62. இந்த பெருந்தொற்றுக் காலம் முழுமையிலும், அமெரிக்காவின் போர்வெறி கொள்கைகளில் எந்த தளர்ச்சியும் இருக்கவில்லை. மே மாதத்தில், வெனிசூவேலாவில் முறியடிக்கப்பட்ட அமெரிக்க-தலைமையிலான கொலைப் படையினரின் மூலமான ஆட்சிக் கவிழ்ப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவளித்தது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் தொடர் பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கிறார், ரஷ்யாவுக்கும் பிரதான பூகோள அரசியல் எதிரியான சீனாவுக்கும் எதிரான அமெரிக்க மிரட்டல்களுக்கு ஆதரவு கோரி அவர் இப்பயணங்கள் மேற்கொண்டிருந்தார். ட்ரம்ப் நிர்வாகம் குரோதத்தை உருவாக்கி வளர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக “வூகான் வைரஸ்” என்று குறிப்பிடுவதையும், இன்னும் ‘அமெரிக்க மக்களை தொற்றுக்குள்ளாக்குவதில் சீனா இறங்கியிருப்பது’ என்று எந்த ஆதாரமுமின்றி குறிப்பிடுகின்ற அளவுக்கும் கூட செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது. முரட்டுத்தனமான இந்த கூற்றுக்கு வாஷிங்டன் போஸ்டும் மற்றும் ஃபரீது ஸகாரியா போன்ற முன்னணி ஊடக வருணனையாளர்களும் ஆதரவு கொடுத்தனர். போர்க்கூச்சலில் பின்தங்கி விடாத வண்ணம், நியூ யோர்க் டைம்ஸ், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரைக் கொல்வதற்கு தலிபான் போராளிகளுக்கு ரஷ்யா பணமளித்ததாக ஒரு செய்தியை இட்டுக்கட்டியது.

63. இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் தயாரிப்புகள், சீனாவிடம் இருந்து அது அதிகரித்துவரும் சவாலுக்கு முகம்கொடுக்கும் நிலையில், தனது உலகளாவிய மேலாதிக்க நிலையைப் பராமரிப்பதற்கு அது செய்யும் முயற்சிகளாய் இருக்கின்றன. அதன் பொருளாதார மேலாதிக்கம் நீண்டகாலப் போக்கில் அரிக்கப்பட்டிருப்பதானது அமெரிக்காவை தனது இராணுவ வலிமையின் மீது தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. இந்தப் போக்கு கோவிட்-19 பெருந்தொற்றின் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கத்தினால் மேலும் தீவிரம் பெற்றுள்ளது. ஜூலை ஆரம்பத்தில் தென் சீனக் கடலுக்குள் இரண்டு தாக்குதல் விமானந்தாங்கி கப்பல்களை அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் நிலவுகின்ற பொறுப்பற்ற தன்மைக்கு சாட்சியம் கூறுகிறது.

64. போர் அபாயத்தை குறைத்து மதிப்பிடப்பட்டு விடக்கூடாது. நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஒரு ஆட்சி அதன் சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளான ஒரு சமாளிக்கக் கடினமான நெருக்கடியாக அது உணரக்கூடிய ஒன்றுக்கான தீர்வாக எண்ணி போரில் இறங்கியதற்கு இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன, ஹிட்லரின் உதாரணம் அதில் மிகப் பயங்கரமானதாகும். குறிப்பாக சீனாவுக்கு எதிரான ட்ரம்ப்பின் போர்வெறித்தனமான தாக்குதல்கள், பெரும்பகுதி, அமெரிக்காவிற்குள்ளான பிரம்மாண்டமான சமூகப் பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராகத் திருப்புவதற்கான அதன் தேவையினால் உந்தப்படுகின்றன.

65. உலக முதலாளித்துவத்தின் அதிகரிக்கும் நெருக்கடியானது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்புக்கு எரியூட்டுவதுடன் நிற்கவில்லை. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவின் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும், இடையிலான மோதல்களையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மத்திய கிழக்கிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் முடிவில்லாத ஏகாதிபத்தியப் போர்களும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளும் முன்கண்டிராத அளவிலான அகதிகள் நெருக்கடியையும் உருவாக்கியிருக்கின்றன, மனித இனத்தின் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களான ஒரு சதவிதத்திற்கும் அதிகமானோர் பலவந்தமாக இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பெருந்தொற்றானது குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு அழிவுகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது.

66. அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதை தவிர இந்த அபாயத்திற்கு வேறு எந்த பதிலும் கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகள்

67. தொழிலாள வர்க்கம் தான் சமூகத்தின் அடிப்படையான மற்றும் முன்னணி புரட்சிகர சக்தியாகும், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம், உலக ஏகாதிபத்தியத்தின் மிக சக்திவாய்ந்த கோட்டையில் அது தீவிர சவால்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றபோதும், அது அதன் வரலாற்று கடமைகளின் மட்டங்களுக்கு எழும் என்ற அசைக்கமுடியாத உறுதியால் கட்சியின் வேலைகள் வழிநடத்தப்படுகிறது.

68. 1995 ஜூனில் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டிருக்கிறது. அதற்கு முன்புவரை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்க சக-சிந்தனையாளர்கள் வேர்க்கர்ஸ் லீக் (அது 1966 இல் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது) என்ற அமைப்பை கொண்டிருந்தனர். கழகத்தில் இருந்து கட்சிக்கு மாறியமையானது, 1980கள் மற்றும் 1990களின் ஆரம்பத்தில், அனைத்து பழைய தேசியவாத மற்றும் அதிகாரத்துவத்தினால் மேலாதிக்கம் செலுத்தப்பட்ட வெகுஜனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உடைந்து போனதற்கான ஒரு பதிலிறுப்பாக இருந்தது. புரட்சிகரக் கட்சியின் வளர்ச்சியானது இந்த அமைப்புகளின் கட்டமைப்பிற்குள்ளாக தீவிரப்படலின் ஒரு வடிவத்தை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் பழைய அமைப்புகளின் மீது கோரிக்கைகளை வைப்பது என்ற முந்தைய தந்திரோபாயம் புறநிலை நிகழ்போக்குகளினாலும் மற்றும் நிகழ்வுகளாலும் காலத்திற்கு ஒவ்வாததாக ஆனது.

69. இந்த மாற்றமடைந்த சூழ்நிலையில் இருந்து அவசியமான அரசியல் முடிவுகளை வரைகின்றவிதமாய், டேவிட் நோர்த் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியாக மாறுவதற்கு ஊக்கமளித்தார்:

தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை கொடுக்கப்படவிருக்கிறது என்றால், அது நமது கட்சியால் தான் கொடுக்கப்பட்டாக வேண்டும். உழைக்கும் வெகுஜன மக்களுக்கு ஒரு புதிய பாதை திறக்கப்படப் போகிறது என்றால், அது நமது அமைப்பால் தான் திறக்கப்பட்டாக வேண்டும். தலைமையின் பிரச்சினை ஒரு புத்திக்கூர்மையான தந்திரோபாயத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது. தொழிலாள வர்க்கத் தலைமைக்கான நெருக்கடியை அந்த தலைமையை வழங்க மற்றவர்களைக் “கோருவதன்” மூலமாக நாம் தீர்க்க முடியாது. அங்கே ஒரு புதிய கட்சி ஒன்று இருக்கப் போகிறதென்றால், நாம் தான் அதனைக் கட்டியெழுப்பியாக வேண்டும்.

70. அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளாலும் அமல்படுத்தப்பட்ட இந்த முன்முயற்சியின் ஒரு விளைவாக, நான்காம் அகிலமானது, தொழிலாள வர்க்கத்திலான தனது அரசியல் செல்வாக்கை மிகப்பரந்த அளவில் விரிவுபடுத்த முடிந்திருக்கிறது. கழகங்கள் கட்சிகளாக மாறுகின்ற நிகழ்முறையில் தோன்றியிருந்த 1998 பிப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்பட்டமையானது சோசலிசத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இன் பாத்திரத்தை நிலைநாட்டுவதில் ஒரு இன்றியமையாத காரணியாக இருந்து வந்திருக்கிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தின் போது, ஏகாதிபத்தியத்தின் குட்டி-முதலாளித்துவ முகமைகளது (ஒரு சிலவற்றின் பெயர் கூறி உதாரணமளிப்பதென்றால் கிரீசில் சிரிசா, ஸ்பெயினில் பொடேமோஸ் மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி போன்றவை) பிற்போக்குத்தனமான பாத்திரம் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பேர்னி சாண்டர்ஸின் பாதியில் கலைந்த ஜனாதிபதி பிரச்சாரம் (சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் ஏராளமான பிற நடுத்தர-வர்க்க போக்குகள் இதற்குள்ளாக தங்களை கலைத்து விட்டிருந்தன) நடைமுறைவாத அபத்தத்திலும் வேலைத்திட்ட திவால்நிலையிலும் அதன் அமெரிக்க அளவில் மட்டுமே இந்த அமைப்புகளில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அனைத்துலகக் குழு, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பட்ட வார்த்தைகளை மீண்டும் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்: “இந்த பூமியில் நமது காரியாளர்களுக்கு [ICFI] வெளியில் புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒன்று அங்கே கிடையாது.”

71. சோசலிச சமத்துவக் கட்சி இப்போதைய நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்கள் மீது செயல்பட்டாக வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கான எதிர்ப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறிக் பாய்கின்ற நிலையிலும் கூட, ட்ரம்ப் நிர்வாகமானது, ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், பள்ளிகள் இலையுதிர்காலத்தில் மீண்டும் திறக்கப்படக் கோரிக்கொண்டிருக்கிறது, அதன்மூலம் நூறாயிரக்கணக்கிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது உயிர்களை ஆபத்துக்குள்ளாக்குகிறது. மில்லியன் கணக்கான மக்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சமூக நெருக்கடியை நிதிய தன்னலக்குழுவினர் பொருளாதார பயமுறுத்தலுக்கான ஒரு வழிவகையாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணம் கொண்டிருப்பதால், மத்திய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பற்றோருக்கான சமூகநல உதவிகள் இந்த மாத இறுதிக்குள்ளாக அகற்றப்பட அல்லது குறைக்கப்பட இருக்கின்றன.

72. 2019 நவம்பரில், பெருந்தொற்று வெடிப்புக்கு சற்று முன்வந்த காலத்தில், ஒரு உயர்மட்ட சிந்தனைக் குழாமான, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (Center for Strategic and International Studies) உலக நிலைமை குறித்து பின்வரும் மதிப்பீட்டைச் செய்தது:

வெகுஜன ஆர்ப்பாட்ட இயக்கங்கள் உலகெங்கிலும் அரசியலை கொந்தளிக்கச் செய்து கொண்டிருக்கின்றன... ஊழல் மற்றும் பொருளாதார சமத்துவமற்ற நிலைமைகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். பலசமயங்களில், இளம், கோபப்பட்ட மற்றும் நகர்ப்புற ஆர்ப்பாட்டக்காரர்கள் இருக்கும் அமைப்புமுறைக்கு தமது கட்சி அல்லது சித்தாந்தத்தினால் ஒரு பிரதியீட்டை முன்வைக்கின்ற ஒரு ஒழுங்கமைந்த எதிர்ப்பாக இருப்பதில்லை. மாறாக தங்களது குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்ற ஒரு தலைமையற்ற இயக்கமாகவே இருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன, மிகப் பெரும்பாலும் அவை குழம்பியவையாக இருக்கின்றன. காலாவதியாகப் போன, உடைந்து போன அல்லது தமக்கு பதிலிறுப்பற்றதாக அவர்கள் உணர்கின்ற அமைப்புமுறையில் மாற்றத்தை பொதுவாக விரும்புகின்றனர். [28]

73. ஜனவரி 3 அன்று, சீனாவைத் தாண்டி கொரோனா வைரஸ் பரவிய எந்த செய்தியும் வெளிவருவதற்கு முன்பாக, சோசலிச சமத்துவக் கட்சி 2020 ஆம் ஆண்டினை “சோசலிசப் புரட்சியின் தசாப்தம்” என்று வரையறை செய்கின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது. மெக்சிகோ, போட்டோ ரீக்கோ, ஈக்வடோர், கொலம்பியா, சிலி, பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, பிரிட்டன், லெபனான், ஹாங்காங், ஈராக், ஈரான், சூடான், கென்யா, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் இன்னும் பல நாடுகளில் பாரிய ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்ததைச் சுட்டிக்காட்டி SEP எழுதியது, “சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகள் உலகளாவிய நெருக்கடியில் இருந்து எழுகின்றன.” [29]

74. முதலாளித்துவ நெருக்கடியின் அத்தனை கூறுகளையும் போலவே, இந்த பெருந்தொற்றானது தொழிலாள வர்க்கத்தில் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை மிகப் பரந்த அளவில் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது. நெருக்கடியின் அதேயளவுக்கு மிகப்பெரியதாய் இருந்தாலும் கூட, அது தானாகவே சோசலிசத்திற்கு இட்டுச் சென்று விடுவதில்லை. 1935 இல், வெடிப்பான சமூக மோதல்களின் இன்னுமொரு காலகட்டத்தில், இரண்டாம் உலகப் போரை ஒட்டிய காலத்தில், ட்ரொட்ஸ்கி எழுதினார்: “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரேயொரு விஞ்ஞானபூர்வ தத்துவமாகிய மார்க்சிசத்திற்கும், ‘இறுதி’ நெருக்கடிக்கான விதிவசவாத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மார்க்சிசம், அதன் வெகு சாரத்தில், புரட்சிகர நடவடிக்கைக்கான வழிகாட்டல்களின் ஒரு தொகுப்பாகும். மார்க்சிசம் விருப்பத்தையும் துணிவையும் கவனத்திற்கு எடுக்காமல் விடுவதில்லை, மாறாக சரியான பாதையைக் கண்டறிய அவற்றுக்கு உதவி செய்கிறது”. அவர் தொடர்ந்து எழுதினார்:

முதலாளித்துவத்தை சுயமாகவே மரணிக்க செய்யக்கூடிய எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. வணிகச் சுழற்சியின் ஊசலாட்டங்கள் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதை பாட்டாளி வர்க்கத்திற்கு எளிதாக்குகின்ற, அல்லது கூடுதல் கடினமாக்குகிற நிலைமையை மட்டுமே உருவாக்குகின்றன. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சோசலிச சமூகத்திற்கான மாற்றமானது தமது சொந்த வரலாற்றை படைக்கக் கூடிய உயிர்வாழும் மனிதர்களது நடவடிக்கைகளை முன்னனுமானித்துக் கொள்கிறது. அவர்கள் வரலாற்றை தற்செயலாகவோ, அல்லது தமது விருப்பத்திற்கேற்ற மாதிரியோ உருவாக்குவதில்லை, மாறாக புறநிலையாகத் தீர்மானிக்கப்படுகின்ற காரணங்களின் ஆதிக்கத்தின் கீழ் படைக்கின்றனர். ஆயினும் அவர்களது சொந்த நடவடிக்கைகளான அவர்களது முன்முயற்சி, அஞ்சாமை, அர்ப்பணிப்பு, மற்றும் அதைப் போலவே அவர்களது முட்டாள்தனமும் கோழைத்தனமும் வரலாற்றின் அபிவிருத்திச் சங்கிலியில் அத்தியாவசியமான இழைகளாக இருக்கின்றன. [30]

75. ஸ்ராலினிஸ்டுகளின் அதிகாரத்துவ விதிவசவாதத்தை விமர்சனம் செய்த ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார், “ஒரு புரட்சிகர சூழ்நிலை ஆகாயத்தில் இருந்து கீழே விழுவதில்லை. அது வர்க்கப் போராட்டத்தில் இருந்து பிறக்கிறது. ஒரு புரட்சிகர சூழ்நிலையின் அபிவிருத்தியில் தொழிலாள வர்க்கத்தின் கட்சியானது மிக முக்கியமான அரசியல் காரணியாக இருக்கிறது.”

76. 2020 இன் இரண்டாம் பாதியின் போதான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைகள், ஒரு அதிகரித்துச் செல்லும் அரசியல் நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் அபிவிருத்தி காணும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமானது, நிதி-பெருநிறுவன சிலவராட்சியின் சேவகர்களாய் இருக்கின்ற இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளது அரசியல் திவால்நிலைக்கு மேலதிக சாட்சியம் வழங்கும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய அந்த இரண்டு கட்சிகளுக்கு இடையில் தந்திரோபாய பேதங்கள் எத்தனை கசப்பானதாக இருந்தாலும், முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பதில் அவை சம உறுதிப்பாட்டுடன் இருக்கின்றன. தேர்தலில் இரண்டில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் —அதற்கு தேர்தல் நடந்தாக வேண்டும் என்ற விவாதத்திற்குரிய அனுமானம் அவசியமாய் இருக்கிறது— ட்ரம்ப் நிர்வாகத்தின் போது அருவெருப்பான வெளிப்பாட்டைக் கண்ட அந்த போக்குகள் தொடர்ந்து நீடிக்கவும் மோசமடையவுமே போகின்றன. ட்ரம்ப் ஒரு பாசிச குண்டர் என்பது மறுக்கமுடியாதது. ஆனால் அவர் அமெரிக்காவின் ஏடன் தோட்டத்தினுள் பாம்பு போல் புகுந்தவரல்லர். ட்ரம்ப் உலகின் மிக ஒட்டுண்ணித்தனமான, தாட்சண்யமற்ற மற்றும் பிற்போக்கான ஆளும் வர்க்கத்தின் தனிமனிதவுருவே அன்றி வேறொன்றுமில்லை. அவரது நிர்வாகத்தின் கொள்கைகள், தீவிர நெருக்கடி நிலைமைகளின் கீழ், ரீகன் (1981-89), முதலாம் புஷ் (1989-1993), கிளிண்டன் (1993-2001), இரண்டாம் புஷ் (2001-09) மற்றும் ஒபாமா (2009-2017) ஆகியோரது கொள்கைகளாக இருந்தனவற்றிலிருந்து ஒரு முறிவாக இல்லாமல் அவற்றின் தொடர்ச்சியாகவே அதிகமாக இருக்கின்றன.

77. ஜனநாயகக் கட்சியும் அதன் போலி-இடது முகவர்களும் இந்தத் தேர்தலை இருத்தலியல் (existential) அடிப்படையில் முன்நிறுத்த முற்படுகிறார்கள், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்குக் காத்திருக்கும் பேரழிவைக் குறித்து அவை எச்சரிக்கின்றன. ஆனால் பேரழிவு ஏற்கனவே தாக்கி விட்டிருக்கிறது என்பதுடன் ஜோசப் பைடன் ஜனாதிபதியானாலும் அது தொடரவே போகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தொடரவே செய்யும். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளதை ஜனநாயகக் கட்சியினர் தெளிவாக்கியிருக்கின்றனர்.

78. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமானது தேர்தல் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக வர்க்கப் போராட்ட தர்க்கத்தின் அடிப்படையிலானதாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான ஜோசப் கிஷோரும் நொரீஸா சன்டா-குரூஸ் உம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போர்க்குணத்தை ஊக்குவிப்பதற்கும், அதன் அரசியல் நனவையும் சோசலிச முன்னோக்கு குறித்த புரிதலையும் உயர்த்துவதற்கும், மற்றும் எந்த முதலாளித்துவக் கட்சி தேர்தலில் ஜெயித்து வந்தாலும் எதிர்வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தயாரிப்பு செய்வதற்கும் இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேல், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஒரு சர்வதேச வர்க்கத்தின் பகுதி என்பதையும், அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமானது தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் அது நடத்தப்படுகிற மட்டத்திற்கு மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதையும் விளக்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளும்.

79. 2019 இன் வெகுஜன ஆர்ப்பாட்டங்களது அளவும் புவியியல்ரீதியான விரிவெல்லையும், இப்போது 3 பில்லியன் பேரைக் கொண்டதாக இருக்கும் உலகளவில் ஒருங்கிணைந்த ஒரு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியை விளங்கப்படுத்துகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் விவசாய வேலைகளில் இருந்து பாரிய எண்ணிக்கையில் வெளியேற்றம் நடந்திருக்கிறது, நூறு மில்லியன் கணக்கான விவசாயிகளும் சிறுவிவசாயிகளும் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தொழிலாள வர்க்கத்தின் படைகளில் இணைந்துள்ளனர். 2007 இல், உலக வரலாற்றில் முதன்முறையாக, மனித இனத்தின் பெரும்பான்மை எண்ணிக்கையினர் நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்வது கண்டறியப்பட்டது. தொழிலாள வர்க்கம் அதிகமான அளவில் தொழில்நுட்பத்தின் மூலமாக பிணைக்கப்பட்டுள்ளது, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் 2014க்கும் 2019க்கும் இடையிலான காலத்தில் முதன்முறையாக இணையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

80.இந்த சர்வதேச மூலோபாயத்தின் கட்டமைப்பிற்குள்ளாக, வர்க்கப் போராட்டத்தில் திட்டமிட்டபடி தலையீடு செய்து மிகவும் அரசியல் நனவுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கட்சிக்கு வென்றெடுப்பதே கட்சி நடவடிக்கைகளது முக்கிய கவனமாய் இருந்தாக வேண்டும். கட்சி ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும்: “கடமைகள் என்ன? வெகுஜனங்கள் புறநிலைக்குத் தக்க தமது சிந்தனையை அரசியல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் தகவமைத்துக் கொள்ள அவர்களுக்கு உதவுவது, அமெரிக்கத் தொழிலாளர்களின் பாரம்பரிய தப்பெண்ணங்களை உடைத்து, ஒட்டுமொத்த அமைப்புமுறையின் புறநிலைமைக்கு ஏற்ப அவர்களைத் தகவமைப்பது ஆகியவை மூலோபாயக் கடமையில் அடங்கியிருக்கின்றன.” [31]

81. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “நான்காம் அகிலத்தின் மூலோபாயப் பணி முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் இல்லை, மாறாக அதனைத் தூக்கியெறிவதில் இருக்கிறது. முதலாளித்துவத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தை கைப்பற்றச் செய்வதே அதன் அரசியல் இலக்காகும். எனினும், சின்னஞ்சிறியவையாக மற்றும் பகுதியானவையாக இருப்பினும் கூட, தந்திரோபாயக் கேள்விகள் அனைத்திற்குமான மிகப் பரிசீலிப்புடனான கவனம் இல்லாமல் இந்த மூலோபாயப் பணியை சாதிப்பது கற்பனை செய்ய முடியாததாகும். பாட்டாளி வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளும், அதன் அத்தனை அடுக்குகளும், ஏனைய தொழிலை செய்பவர்களும் மற்றும் குழுக்களும் புரட்சிகர இயக்கத்திற்குள்ளாக ஈர்க்கப்பட வேண்டும். இந்த சகாப்தமானது புரட்சிகரக் கட்சியை அன்றாட வேலைகளில் இருந்து விடுவிக்கவில்லை மாறாக இந்த வேலைகளை புரட்சியின் உண்மையான வேலைகளுடன் இணைந்தே முன்னெடுப்பதற்கு அதனை அனுமதிக்கிறது என்ற உண்மையில் தான் தனித்துவமானதாக இருக்கிறது.”

82. இந்த பணிகளை மேற்கொள்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரொட்ஸ்கி அறிவுறுத்தியவாறு, இடைக்காலக் கோரிக்கைகளை முன்வைக்கின்றது. அதாவது, ஒரு ஸ்தூலமான நிலைமையில் இருந்து எழுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகளை சோசலிசப் புரட்சி மூலோபாயத்துடன் இணைக்கின்ற கோரிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை முன்னெடுக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பில், வேலைக்குத் திரும்பக் கோருகின்ற பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது; பெருநிறுவன-வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை திரும்பப்பெறுவது; வேலைவாய்ப்பற்ற மக்கள் அனைவருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கும் சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்குமான ஒரு அவசரகால வேலைத்திட்டம்; பத்து மில்லியன் கணக்கான மக்கள் முகம்கொடுக்கிற அவசரமான சமூக நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் சொத்துக்களை பறிமுதல்செய்வது; மற்றும் பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது தொழிலாளர்களின்’ ஜனநாயக உரிமையையும் கட்டுப்பாட்டையும் ஸ்தாபிப்பது ஆகியவற்றுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுவதுடன், அதற்காக அது போராடும்.

83. இந்த அத்தனை கோரிக்கைகளுமே, பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பு தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் என்ன அவசியமாக உள்ளது என்பதன் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர முதலாளித்துவ அமைப்புமுறையும் நிதிய சிலவராட்சியினரும் என்ன கொடுப்பதற்கு தயாராய் உள்ளனர் என்பதன் அடிப்படையில் அல்ல என்ற அடித்தளத்தில் இருந்து பிறக்கின்றவையாகும். இது தவிர்க்கமுடியாமல் ஒரு இறுதி முடிவான தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதையும் மற்றும் முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பதையும் நோக்கி இட்டுச்செல்கின்றது.

84. இந்த முன்னோக்கில் இருந்து பின்வரும் குறிப்பிட்ட கடமைகள் பிறக்கின்றன:

அ. ஒவ்வொரு தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் வேலையிடத்தை இணைக்கின்ற வகையில் சாமானியத் தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான கட்சியின் போராட்டத்தை தீவிரப்படுத்துதல். தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கின்ற இந்த குழுக்கள், தொழிலாளர்களின், அவர்களது குடும்பங்களின் மற்றும் இன்னும் விரிந்து சமுதாயத்தின் உடல்நலத்தையும் உயிர்களையும் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சூத்திரப்படுத்த வேண்டும், செயல்படுத்த வேண்டும் மற்றும் மேற்பார்வை செய்ய வேண்டும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசத் தலைமையை உருவாக்குவதற்கும் மற்றும் கட்சியினுள் தொழிலாளர்களைக் அணிதிரட்டுவதற்குமான போராட்டத்துடன் இது இணைக்கப்பட வேண்டும்.

ஆ. இரண்டு அமெரிக்கப் புரட்சிகளது முற்போக்கு உள்ளடக்கத்தை கட்சி பாதுகாப்பதைத் தொடர்வது; இது ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் போலி-இடது நடுத்தர வர்க்க முகமைகளது நிற-இன அரசியலுக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாது பிணைந்ததாகும். அமெரிக்கா நிறக் குரோதங்களால் பின்னியதாக இருக்கிறது என்றும், கறுப்பினத் தொழிலாளர்களின் நிலைமைகளுக்கு வெள்ளைத் தொழிலாளர்களே காரணம் என்றும் கூறுவது பொய்யானதும் அரசியல் பிற்போக்குத்தனமானதும் ஆகும். தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, மேலிருக்கும் 1 சதவீதத்தினரது ஆதிக்கத்தில் இருக்கும் செல்வத்திற்கு இன்னும் கூடுதலான அணுகலை வேண்டுகின்ற ஆபிரிக்க அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவினது முதலாளித்துவ அபிலாசைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட குட்டி-முதலாளித்துவக் கொள்கையான, நஷ்ட ஈடுகளுக்கான கோரிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது.

இ. கல்லூரி வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்கள் மத்தியில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினை (IYSSE) கட்டியெழுப்புவதற்கான ஒரு விரிவான மற்றும் செயலூக்கமான பிரச்சாரம். குறிப்பாக, பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரத்தை எதிர்த்து, IYSSE, கல்வியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து, இளைஞர்கள் மத்தியிலான எதிர்ப்பை ஒழுங்கமைத்து வழிநடத்த வேண்டும்.

ஈ. குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) பிரிவால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரது பாதுகாப்பிற்குமான ஒரு தளர்ச்சியற்ற பிரச்சாரத்தை SEPம் IYSSEம் மேற்கொள்ள வேண்டும். கட்சியும் அதன் இளைஞர் அமைப்பும் நாடுகடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகின்றன. புலம்பெயர்ந்த மக்கள் வரவேற்கப்படுவதற்கும் சிறையிலடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்படுவதற்கும் அவை அழைப்பு விடுகின்றன. குடும்பங்களைப் பிரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தஞ்சம் கோருவோருக்கும் அகதிகளுக்கும் கண்ணியமான வீட்டுவசதி மற்றும் நிதி உதவியை வழங்குவதற்கும் கோருகின்றன. அமெரிக்காவிற்குள்ளாக முழு குடியுரிமைகளுடன் பாதுகாப்பான மற்றும் உற்பத்தித்திறனுடனான வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

உ. ஒரு மூன்றாம் உலகப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான தனது பிரச்சாரத்தை SEP தீவிரப்படுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தின் அத்தனை கன்னைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளமூலோபாய நலன்களுக்கு உறுதிபூண்டிருக்கின்றன. போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; அது முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பானதாக சோசலிசத்திற்கானதாகவும் இருக்க வேண்டும்; அது முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்குக் குரோதமானதாகவும் இருக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேல், அது சர்வதேசரீதியானதாக, முதலாளித்துவத்தையும் அதன் தேசிய-அரசு பிளவுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஐக்கியப்படுத்துவதாகவும் அணிதிரட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

ஊ. அரசு ஒடுக்குமுறை மற்றும் போருக்கு எதிரான போராட்டமானது சர்வதேசத் தணிக்கைக்கு எதிரான போராட்டம் மற்றும் அரசுக் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான செய்தித்துறையினரின் உரிமையினது பாதுகாப்பு ஆகியவற்றுடன் பிரிக்கவியலாது பிணைந்ததாகும். ஜூலியன் அசாஞ்சை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கும், செல்சியா மானிங் மீதான துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அத்துடன் WSWS மற்றும் பிற இடது-சாரி, போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்கள் மற்றும் தனிநபர்கள், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் மூலம் தணிக்கை செய்யப்படுவதற்கு எதிராக பிரச்சாரத்தை SEPம் IYSSEம் தளர்ச்சியின்றி தொடர்ந்து செய்ய வேண்டும்.

85. SEP இன் முன்னெடுப்புகள் மற்றும் பிரச்சாரங்களது அரசியல் தாக்கமும் திறனும் கட்சிக்குள் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதில் சார்ந்திருக்கிறது. புரட்சிகர அரசியலானது ஏதோ தொலைதூரத்திலான, வானுலக மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட களத்தில் கட்டவிழ்வதில்லை. மிகச் சாதகமான புற நிலைமைகளில் கூட கட்சியால் கல்வியூட்டப்பட்டிருக்கிற அரசியல் நனவுள்ள தொழிலாளர்களை அதற்கேற்ப செயற்பட பயன்படுத்தப்பட்டாக வேண்டும். டெட்ராயிட், டொலிடோ மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகளில் சாமானியத் தொழிலாளர்களைக் கொண்ட பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதானது தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் நனவுள்ள ஒரு சக்தியாக அபிவிருத்தி செய்வதில் கட்சி வகிக்கின்ற இன்றியமையாத பாத்திரத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது.

86. நெருக்கடியின் தன்மை குறித்தும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலோபாயம் குறித்தும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கட்சி பொறுமையாக விளக்க வேண்டும். ஆனால் பொறுமையாக விளக்குவதற்கான அவசியமானது செயற்படாது சிந்தித்துக்கொண்டிருப்பதற்கான ஒரு நியாயப்படுத்தலாகி விடக்கூடாது. அரசியல் புரிதலை, நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் தவறவிடப்படக் கூடாது. போராட்டத்தில் தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்குவதே கட்சியின் நோக்கமாகும்.

87. சோசலிச சமத்துவக் கட்சியின் அத்தனை வேலைகளும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் நெருங்கி ஒத்துழைத்து முன்னெடுக்கப்படும். உலகளாவிய பெருந்தொற்றுக்கு தேசியளவிலான தீர்வு ஏதும் இல்லை, அதைப்போலவே சமத்துவமின்மை, சுரண்டல், போர், சுற்றுச்சூழல் சீரழிப்பு ஆகிய தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மிகப்பெரும் பிரச்சினைகள் எதற்குமே எந்த தேசியளவிலான தீர்வு கிடையாது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பும் வேலையானது, முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு இறுதியாக ஒரு முற்றுபுள்ளி வைத்து மனிதகுலத்திற்கு முன்னோக்கிய ஒரு புதிய பாதையை காட்டத்தக்க பாரிய சமூக சக்தியான உலகெங்குமான பில்லியன் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

88. சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு ஆண்டுக்கு முன்பாக அதன் கோடைப் பள்ளியில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அபிவிருத்தி மற்றும் புறநிலைமை ஆகியவற்றின் மீதான ஒரு திறனாய்வை அடிப்படையாகக் கொண்டு, ICFI ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்தில் நுழைந்திருந்தது என்ற முடிவுக்கு வந்தது. “சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக ICFI விரிந்து வளர்ச்சி காணவிருக்கின்ற” ஒரு கட்டம் என்று SEP தேசியத் தலைவரான டேவிட் நோர்த் இதனை வரையறை செய்தார்.

30 ஆண்டுகளுக்கும் முன்பாக அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட, பொருளாதார பூகோளமயமாக்கத்தின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள், மேலும் பிரம்மாண்டமானதொரு அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்பில் புரட்சிகளை உண்டாக்கியிருக்கின்ற புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் சேர்ந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் 25 ஆண்டுகள் முன்பு வரை கூட கற்பனை செய்திருக்க முடியாத ஒரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது ஒரு பரஸ்பரஇணைப்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தி காணும். இந்த புறநிலை சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். அது ஏகாதிபத்தியப் போர் எனும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க-அடிப்படையிலான மூலோபாயத்தை எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய கட்டத்தின் அடிப்படையான வரலாற்றுப் பணியாகும். [33]

89. அதன் செறிவான அரசியல் பொறுப்புகளை முன்னெடுப்பதற்கு, கட்சியும் அதன் காரியாளர்களும் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களில் உறுதியுடன் வேரூன்றியும் கல்வியூட்டப்பட்டும் இருக்க வேண்டும். ICFI இல் உருவடிவம் பெற்றுள்ள செறிந்த வரலாறானது, தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியடையும் இயக்கத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான தீவிரப்படலும் கட்சியின் நடைமுறையும் சந்திப்பதானது தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கும், முதலாளித்துவத்தின் ஒழிப்புக்கும், உலகப் பொருளாதாரத்தின் சோசலிச உருமாற்றத்திற்குமான நிலைமைகளை உருவாக்கும்.

Endnotes:

[1] “The COVID-19 pandemic: A trigger event in world history,” by David North, World Socialist Web Site, May 4, 2020.

[2] Capital by Karl Marx, Volume III (London: 1974), p. 438

[3] “The Next Pandemic?” in Foreign Affairs, Vol. 84, No. 4 (July-August 2005), pp. 3–4.

[4] Ibid, p. 4.

[5] Ibid

[6] “The Wuhan coronavirus outbreak and the global threat of infectious diseases,” by Bryan Dyne, World Socialist Web Site, January 28, 2020.

[7] “Covid-19 and corporate sector liquidity,” by Ryan Banerjee, Anamaria Illes, Enisse Kharroubi and José-Maria Serena, BIS Bulletin, No. 10, 28 April 2020, p. 1.

[8] Ibid.

[9] “For a globally coordinated emergency response to the coronavirus pandemic!,” by the International Committee of the Fourth International, World Socialist Web Site, February 28, 2020.

[10] “The response of the ruling elite to the coronavirus pandemic: Malign neglect,” by Alex Lantier and Andre Damon, World Socialist Web Site, March 14, 2020.

[11] “The Economic Lockdown Catastrophe,” by the Wall Street Journal Editorial Board, May 8, 2020

[12] “The Market v the Real Economy,” Economist, May 7, 2020

[13] “Message from big business on coronavirus pandemic: Save profits, not lives,” by Andre Damon, World Socialist Web Site, March 24, 2020.

[14] “Trump’s campaign to reopen businesses risks hundreds of thousands of lives,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, April 11, 2020.

[15] “The pandemic, profits and the capitalist justification of suffering and death,” by David North, World Socialist Web Site, April 18, 2020.

[16] “Hundreds of thousands stage multiracial demonstrations against police violence in a powerful show of working-class unity,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, May 30, 2020.

[17] “Palace coup or class struggle: The political crisis in Washington and the strategy of the working class,” World Socialist Web Site, June 13, 2017.

[18] “Hundreds of thousands stage multiracial demonstrations against police violence in a powerful show of working-class unity,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, May 30, 2020.

[19] “The protests against police murder: The way forward,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, June 15, 2020.

[20] “Would-be führer Trump steps up coup plotting,” by Patrick Martin, World Socialist Web Site, June 12, 2020.

[21] “A call to the working class! Stop Trump’s coup d’état!,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, June 4, 2020.

[22] “The protests against police murder: The way forward,” by the Socialist Equality Party (US), World Socialist Web Site, June 15, 2020.

[23] “Racial-communalist politics and the second assassination of Abraham Lincoln,” by Niles Niemuth and David North, World Socialist Web Site, June 25, 2020.

[24] “The US is having a bank-shaped recovery,” by Gillian Tett, in Financial Times https://www.ft.com/content/26173096-7fe8-47e4-abeb-feafa3432901

[25] “Decade of Social Revolution Begins,” by David North and Joseph Kishore in World Socialist Web Site, January 3, 2020.

[26] “Trump bides his time, but the preparations for war against Iran will continue,” by Bill Van Auken and David North, in World Socialist Web Site, January 9, 2020.

[27] The Workers League and the Founding of the Socialist Equality, report by David North on June 25, 1995 (Detroit: 1996), p. 30

[28] “The Age of Leaderless Revolution,” by Samuel Brannen, November 1, 2019 at https://www.csis.org/analysis/age-leaderless-revolution

[29 ] “The decade of socialist revolution begins,” by David North and Joseph Kishore, World Socialist Web Site, January 3, 2020.

[30] Leon Trotsky, “Once Again Whither France,”(March 28, 1935), in Whither France, New Park Publications (1974), p. 42.

[31] Trotsky, “Discussions with Trotsky before the Transitional Program: A summary of transitional demands” (March 23, 1938), in The Transitional Program for Socialist Revolution, Pathfinder (2019), p.132.

[32] Trotsky, “The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International (The Transitional Program),” September 1938.

[33] “The Political Origins and Consequences of the 1982–1986 Split in the International Committee of the Fourth International,” SEP Summer School, July 21, 2019.

Loading