பிலிப்பைன்ஸ் மாவோவாத தலைவர் சிஸன் டுரேற்றவுக்கு எதிராக இராணுவத்துடன் கூட்டணி நாடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 11 அன்று சர்வதேச மக்கள் போராட்டக் கழகம் (International League of Peoples’ Struggle - ILPS) நடத்திய ஒரு இணையவழி உரையாடல், 2016 தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் பாசிச ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றவுக்கு முன்னர் அளித்த ஆதரவை அம்பலப்படுத்தியதற்கு பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஏன் இத்தகைய கோபத்துடன் பதிலளித்தது என்பதன் மீது கூடுதல் விளக்கத்தை வெளிப்படுத்தியது.

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மரியா சிஸன் மற்றும் சர்வதேச மக்கள் போராட்டக் கழகத்தின் "தலைவர் எமரிட்டஸ்" ஆகியோர், "முதலில் சோகம், இரண்டாவது கேலிக்கூத்து: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்” என்ற தலைப்பிலான ஆகஸ்ட் 26 சொற்பொழிவிற்காக வரலாற்றாசிரியர் டாக்டர் ஜோசப் ஸ்காலிஸை பலமுறை கண்டித்துள்ளார். இந்த உரை, 1968 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து டுரேற்ற மற்றும் பிற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு அளித்த ஆதரவை ஆவணப்படுத்தியது. சிஸன், ட்ரொட்ஸ்கிசம் பற்றிய மதிப்பிழந்த ஸ்ராலினிச பொய்களை மீண்டும் மீண்டும் கூறி டாக்டர் ஸ்காலிஸை சிஐஏ இன் முகவராகவும், டுரேற்ற ஆட்சியின் தகவலாளராகவும் அவதூறாக பேசியுள்ளார்.

"தேசிய ஜனநாயகப் புரட்சியின் முக்கியத்துவம் மற்றும் வேலைத்திட்டம்" என்ற தலைப்பில் சர்வதேச மக்கள் போராட்டக் கழகத்தின் இணையவழி உரையாடலில் இந்த தாக்குதல்களைத் தொடர்ந்ததுடன், அதே நேரத்தில் இராணுவத்தின் பிரிவுகள் உட்பட முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுகள் என்று அழைக்கப்படுபவர்களுடனான வர்க்க ஒத்துழைப்பின் மாவோயிச-ஸ்ராலினிச வேலைத்திட்டத்தை பாதுகாத்தது.

செப்டம்பர் 11, சர்வதேச மக்கள் போராட்டக் கழகத்தின் இணையவழி உரையாடலில் ஜோஸ் மரியா சிஸன்

பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை பின்பற்றும் அமைப்புகளின் கூட்டணியான பாயனின் (Bayan) பொதுச் செயலாளர் ரெனாடோ ரெய்ஸ் ஜூனியருடன் (Renato Reyes Jr) சிஸனும் உரையாற்றினார். "தேசிய ஜனநாயக [ND] இயக்கம் மீதான ட்ரொட்ஸ்கிச தாக்குதல்கள் மற்றும் டுரேற்றவை ஆதரிப்பவர் என்று கூறப்படும் பங்கு" குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு நிகழ்ச்சி நடாத்துபவர் கேட்டபோது, ரெய்ஸ், மாவோயிஸ்டுகளின் முக்கிய கவலையை பற்றி குரல் எழுப்பினார்: "இந்த சமீபத்திய தாக்குதல்கள்," பிலிப்பைன்ஸ் மக்களும், வெகுஜன இயக்கமும், எதிர்க் கட்சியும் டுரேற்றவுக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைக்க முயற்சிக்கும் ஒரு நேரத்தில் வந்துள்ளன ... [ட்ரொட்ஸ்கிஸ்டுகள்] தேசிய ஜனநாயக இயக்கத்தை சேர்ந்தவர்களை தாக்குவதன் மூலம் ஐக்கிய முன்னணிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்." என்றார்.

பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் "தேசிய ஜனநாயக இயக்கம்" (பாயன் மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகள்) டுரேற்றவை வெளியேற்றுவதற்காக துணைத் தலைவர் லெனி ரோபிரேடோ (Leni Robredo), அவரது முதலாளித்துவ லிபரல் கட்சி மற்றும் இராணுவத் தலைமையின் பிரிவுகளுடன் ஒரு "ஐக்கிய முன்னணியை" உறுதிப்படுத்த முயல்கின்றன (பார்க்க: “பிலிப்பைன்ஸில் அரசியல் நெருக்கடி தீவிரமடைகிறது”).

"போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" என்ற போர்வையில் ஏழைகளுக்கு எதிராக பாரியளவிலான கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட டுரேற்ற ஆட்சியை ஏராளமான இளைஞர்களும் தொழிலாளர்களும் வெறுக்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய்க்கு வேண்டுமென்றே அலட்சியமாக இருப்பது, இதன் விளைவாக மேலும் ஆயிரக்கணக்கான இறப்புகள் மற்றும் சமூக சமத்துவமின்மையை அதிகரிப்பதுடன், மேலும் மேலும் மக்களை இடது பக்கம் உந்தி தள்ளுகிறது.

டுரேற்றவுக்கு எதிரான இயக்கத்தை முதலாளித்துவத்தின் ரோபிரேடோ சார்பு பிரிவுக்கு அரசியல் ரீதியாக அடிபணியச் செய்வதற்கும், ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதற்கும் பாயனும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் சேவைகளை வழங்குகின்றன. டாக்டர் ஸ்காலிஸின் விரிவுரைக்கான பரந்த ஆதரவானது, ஸ்ராலினிச அமைப்புகளுக்கும் மற்றும் பாசிசம், சமத்துவமின்மை, இராணுவவாதத்திற்கும் எதிராக போராட ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையேயும் "பிளவை ஏற்படுத்துவதன் மூலம்" இந்த அரசியல் குற்றவியல் நடவடிக்கையை இல்லாதொழிக்க அச்சுறுத்துகிறது.

"பல ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு, இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதற்கு, இடம்பெயர்த்தப்படுவதற்கு" டுரேற்றவுக்கு பாயன் ஆதரவளித்தது என்று டாக்டர் ஸ்காலிஸ் கூறுவது “நியாயமற்றது மற்றும் நேர்மையற்றது" என்று ரெய்ஸ் அறிவித்தார்.

உண்மையில், கட்சி செயற்பாட்டாளர்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கான அரசியல் பொறுப்பு, டுரேற்றவின் மீது மாயைகளை ஊக்குவித்த தலைமையையே சாரும். உதாரணமாக, பாயன் இன் தலைவர் கரோல் அரால்லோ, மே 24, 2016 அன்று Business World பத்திரிகையில் டுரேற்றவை "ஒரு இடதுசாரியும் சோசலிஸ்ட்டும்" என்று விவரித்தார். பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட தனிநபர்களுக்கு டுரேற்ற வழங்கிய நான்கு அமைச்சரவை பதவிகளைக் குறிப்பிட்ட பின்னர், "அவர் எவ்வளவு நன்றாக, எவ்வளவு விரைவாக, எவ்வளவு தூரம் செல்வார் என்பதற்கான உண்மையான அறிகுறிகள் இருப்பதாகவும், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கி அவர் செல்ல முடியும்" என்றும் கூறினார்.

டுரேற்றவின் கொலைகார நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்ற பின்னர், ஜூலை 4, 2016 அன்று ரெய்ஸ் எழுதினார்: “கடந்த மாதத்தில் உடன்படாத எதையாவது ஜனாதிபதி கூறும் ஒவ்வொரு முறையும் உடனடியாக மோதலுக்கு போவது கூட்டணியை பலவீனப்படுத்தியிருக்கும்.” அவர் தனது வாசகர்களிடம் "நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பையாவது கொடுக்க வேண்டும்" என முறையிட்டார்.

சிஸன், தனது பங்கிற்கு, டுரேற்றவை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, “சோசலிச நோக்குநிலையுடனான” பிலிப்பைன்ஸின் “முதல் இடது ஜனாதிபதி” என்று பாராட்டினார்.

மக்களின் பார்வையில் சில நம்பகத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்கும், ஆயுதப்படைகள் உட்பட பிலிப்பைன்ஸ் ஆளும் வர்க்கத்தில் டுரேற்றவின் போட்டியாளர்களுக்கு சேவை செய்வதற்கும் சிஸன், ரெய்ஸ் மற்றும் பிற “தேசிய ஜனநாயக” தலைவர்கள் இந்த வரலாற்றுப் பதிவை மறைக்க தீவிரமாக முயல்கின்றனர்.

டுரேற்றவை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டதற்கு, சிஸன் பதிலளித்தார், "அரசியலமைப்பு வாரிசாக ரோபிரேடோ இராணுவத்திலிருந்து போதுமான ஆதரவைப் பெற முடியும்." ரோபிரேடோ மற்றும் இராணுவம் இதற்காக, "பிரம்மாண்டமான வெகுஜன நடவடிக்கைகளால்... 83 முதல் 86” வரையிலான காலகட்டத்தில் மார்கோஸை வெளியேற்றியதைப் போலவே ஆதரிக்க வேண்டியிருக்கும்.

அந்த காலகட்டத்தில், முதலாளித்துவ எதிர்ப்பிற்கு ஒரு சுயாதீனமான மாற்றீட்டை முன்வைப்பதை விட, 1986 தேர்தலை ஒரு செயலற்ற புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்து முதலாளித்துவ ஆட்சியை பராமரிக்க பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி உதவியது. மார்கோஸுக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட வெகுஜன இயக்கம் கொராஸன் அக்கினோவுக்கு (Corazon Aquino) பின்னால் கொண்டு செல்லப்பட்டு, வாஷிங்டனுடன் சேர்ந்து ஆயுதப்படைகளின் பிரிவுகளும் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றன. பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அக்கினோவை ஜனாதிபதி பதவிக்காக உற்சாகமாக ஊக்குவிக்கத் தொடங்கியது.

"பெரும்பான்மையான இராணுவ அதிகாரிகள் தேசபக்தி மற்றும் அமெரிக்க சார்புடையவர்கள், ஆனால் சீனாவுக்கு எதிரானவர்கள்" என்று சிஸன் வலியுறுத்தினார். அதேசமயம் அமெரிக்க கூட்டணியைப் பேணுகையில் சீனாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த டுரேற்ற முயன்றார். வாஷிங்டனின் போரை நோக்கி அதிகரித்து வரும் உந்துதலுக்கு மத்தியில், டுரேற்ற ரோபிரேடோவைச் சுற்றியுள்ள குழுவான முதலாளித்துவத்தின் இராணுவ மற்றும் அமெரிக்க சார்பு பிரிவுகளின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார். பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி பெருகிய முறையில் டுரேற்றவை சீனாவின் கைப்பாவையாக சித்தரிக்கிறது. சிஸன் பிலிப்பைன்ஸை அச்சுறுத்தும் ஒரு "ஏகாதிபத்திய" சக்தியாக சீனாவை முத்திரை குத்துகின்றார்.

பிப்ரவரி 26 அன்று ஒரு கட்டுரையில், சிஸன் தனக்கு "சில பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் நட்பான தொடர்புகள்" இருப்பதாகக் கூறினார். "டுரேற்ற-எதிர்ப்பு மற்றும் அமெரிக்க சார்பு அதிகாரிகள்" குறிப்பாக Visiting Forces உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான டுரேற்றவின் அச்சுறுத்தல்களால் கோபமடைந்ததாகக் கூறினார். அமெரிக்க இராணுவம். மாவோயிச தலைவர் "பிரம்மாண்டமான வெகுஜன நடவடிக்கைகள்" இராணுவத்தில் உள்ள அமெரிக்க சார்பு அதிகாரிகளை டுரேற்றவுக்கு எதிராகத் திருப்பி, அவரை ரோபிரேடோவால் மாற்றீடு செய்ய தூண்டப்படுவர் என்று எழுதினார்.

சிஸனின் மனைவியும், பிலிப்பைன்ஸ் தேசிய ஜனநாயக முன்னணியின் (NDFP) அமைதி பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஜூலி டி லிமா, செப்டம்பர் 17 அன்று அறிவித்தார், தேசிய ஜனநாயக முன்னணி முன்னோடியில்லாத வகையில் அரசாங்கத்தை தவிர்த்து, ரோபிரேடோவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மக்கள் இராணுவத்தால் நடத்தப்படும் ஆயுதப் போராட்டத்திற்கான ஒரு தீர்மானத்தை முன்னொருபோதுமில்லாதவாறு நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்றார். ரோபிரேடோவின் லிபரல் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் "டுரேற்றவை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஒரு அணிதிரளும் புள்ளியாக" மாற வேண்டும் என்று டி லிமா கூறினார்.

சுருக்கமாக, பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிஸ்டுகள் இராணுவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தங்கியிருக்கும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிக்க முன்மொழிகின்றனர். அத்தகைய ஆட்சி டுரேற்றவுக்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டைக் குறிக்காது. இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஆழமாக்கும் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் ஒன்றுசேருவதற்கான தயாரிப்புகளை துரிதப்படுத்தும்.

ஒரு சோசலிச மாற்றீட்டை நாடுபவர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ள ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தையும் வரலாற்றையும் படிக்க வேண்டும். உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முன்வருபவர்களுடன் பிலிப்பைன்ஸில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ஒரு சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடும் ஒரே இயக்கம் இதுதான்.

Loading