முன்னோக்கு

மரண அலையை நிறுத்து! தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டுபவர்களின் கொள்கைகளை நிராகரிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் பாரிய மரண அலை ஒன்று பரவி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் மீண்டுமொருமுறை வேகமாக பரவி வருகின்ற நிலையில், அமெரிக்கா குவிமையமாக உள்ளது.

நேற்று மொத்த மரண எண்ணிக்கை 300,000 ஐ அல்லது ஒவ்வொரு ஆயிரம் நபர்களில் அண்மித்து ஒருவர் என்ற எண்ணிக்கையைக் கடந்தது. அங்கே மற்றொரு 3,019 உயிரிழப்புகள் ஏற்பட்டன, முன்பில்லாதளவில் 246,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். தோராயமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 125 பேர் அல்லது ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 17,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வரவிருக்கும் வாரங்களில் கூர்மையாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இந்த நோயாளிகள் எண்ணிக்கை நவம்பர் இறுதியில் நன்றிகூறலுக்காக பயணித்ததன் காரணமாக ஏற்பட்ட அதிகரிப்பை மட்டுமே பிரதிபலிக்கத் தொடங்கி உள்ளது, மரண விகிதம் இரண்டு வாரங்களுக்கு முந்தைய எண்ணிக்கையாகும்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாலும், மருத்துவக் கவனிப்பு முறை முறியத் தொடங்கி உள்ளதாலும், மருத்துவர்களும் செவிலியர்களும் யாருக்குச் சிகிச்சை அளிப்பது யாருக்கு சிகிச்சை அளிக்காமல் விடுப்பது என்று கொடூரமான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலைமை பரந்தளவில் இன்னும் அதிக அபாயகரமாக உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 200 மருத்துவமனைகள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டி இருந்தன, நாட்டின் மொத்த மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகளது தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன.

A worker in protective suits takes a break amid graves at a newly opened cemetery for the victims of COVID-19 in Medan, North Sumatra, Indonesia, Monday, Nov. 16, 2020. (AP Photo/Binsar Bakkara)

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஊடக ஒருமுனைப்போ, முதல்கட்ட தடுப்பூசி ஒப்புதல் மற்றும் வினியோகம் மீது தங்கியுள்ளது. ஆனால் தடுப்பூசியின் திறன் என்னவாக இருந்தாலும், அதை பெறுவதற்கு மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுந்தானே அதை பெற முடியும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோபர்ட் ரெட்பீல்ட் வியாழக்கிழமை கூறுகையில், “9/11 சம்பவத்தில் ஏற்பட்டதை விட அல்லது பேர்ல் துறைமுகத்தில் ஏற்பட்டதை விட, அடுத்த 60 இல் இருந்து 90 நாட்களில் நமக்கு நாளொன்றுக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட போகிறது,” என்றும், மேலும் ஒரு தடுப்பூசியானது குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு —அனேகமாக இன்னும் அதிக நாட்களுக்கும் கூட— மரண எண்ணிக்கையில் நிஜமான தாக்கத்தைக் கொண்டிருக்காது என்று எச்சரித்தார்.

இப்போது தொழிலாள வர்க்கத்தின் ஒரு தலையீடு இல்லையென்றால், இந்த மரணங்கள் முன்பில்லாத மட்டங்களில் தொடரும். உயிரிழப்புகள் 90 நாட்களுக்கு 3,000 க்கும் அதிகமாக இருந்தால், மார்ச் மாத ஆரம்பத்தில் இன்னும் 270,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆளும் வர்க்கமோ மலைப்பூட்டும் அளவில் அலட்சியத்துடன் விடையிறுத்து வருகிறது. இவ்வார தொடக்கத்தில் WSWS எச்சரித்துள்ளதைப் போல, ஒரு மிகப் பெரிய போரைத் தவிர வேறெங்கும் கண்டிராத அளவில் நிகழும் உயிரிழப்புகள், “வழமையாக்கப்பட்டு" வருகின்றன. இந்த தொற்றுநோய், “ஏதோ தவிர்க்கவியலாத பிரபஞ்ச நிகழ்வைப் போலவும், இதற்கு எந்த உடனடி நடவடிக்கையும் தேவையில்லை என்பதைப் போலவும்" கையாளப்பட்டு வருகிறது என்பதை நாம் குறிப்பிட்டோம்.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் பாசிசவாத சூழ்ச்சிகளைத் தொடர்கின்ற அதேவேளையில், “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" அதன் கொள்கையையும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது, இதன் மூலம் வைரஸைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லை என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், அவர்கள் இந்த கொள்கையுடன் உடன்படுகின்றனர். இந்த வாரம், பைடென் அவரின் கொரோனா வைரஸ் விடையிறுப்பு "திட்டத்தை" வெளியிட்டார், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வலியுறுத்தல், தடுப்பூசி உற்பத்தி மீதான வாக்குறுதிகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு கோரிக்கைக்கு கூடுதலாக அதில் வேறெதுவும் இல்லை.

உயிரிழப்புகளைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான எந்தவொரு குறிப்பும் இல்லாமல் ஊடகங்களோ ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் அளவை அறிவித்து கொண்டிருக்கின்றன. விடுமுறை காலங்களில் பயணிப்பது மற்றும் ஒன்றுகூடுவதில் உள்ள அபாயங்கள் குறித்து குறிப்பிடப்படுகின்றன. என்றாலும் வைரஸ் பரவுவதில் தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்கள் வகிக்கும் பாத்திரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படுவதில்லை என்பதோடு, பள்ளிகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறக்கலாம் என்பதைக் குறித்து திட்டமிட்டு பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

வீடுகளில் இந்த வைரஸ் பரவுவதற்கு ஆளும் வர்க்கம் தொழிலாளர் மீது பழிச்சுமத்த முயல்கின்றன. ஆனால் தங்குதடையின்றியும் பாதுகாப்பின்றியும் இருக்கும் வேலையிடங்களில் நிகழும் பரவலை மூடிமறைப்பதற்காகவே, நோய்தொற்று ஏற்படுத்துபவர்களைக் குறித்த முறையான தடம் அறிவது கைவிடப்பட்டுள்ளது. ஆலைகளிலோ அல்லது பள்ளிகளிலோ நோயாளிகள் உருவாகும் போது, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், நிர்வாகத்தால் தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

ஆளும் வர்க்க கொள்கைக்கு ஏதேனும் சவால் விடுக்கப்படும் போது, ஒடுக்குமுறையே விடையிறுப்பாக உள்ளது. புளோரிடாவில் இந்த தொற்றுநோய் பரவல் குறித்து அரசின் பொய்களை அம்பலப்படுத்துவதற்காக செயலாற்றிய தரவு ஆய்வு விஞ்ஞானி ரெபேக்கா ஜோன்ஸ், புளோரிடா ஆளுநர் ரொன் டிசான்டிஸ் உத்தரவின் பேரில் இவ்வாரம் கெஸ்டாபோ பொலிஸ் வேட்டையின் இலக்கில் வைக்கப்பட்டார்.

ஆளும் வர்க்கம் உயிர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்பதோடு, பத்து மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுக்கும் பாரியளவிலான சமூக அவலத்தைக் கையாளவும் அது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. அமெரிக்காவில் பத்தில் நான்கு குடும்பங்கள், தொற்றுநோய்க்கு முன்னர் பெற்றதை விட இப்போது குறைந்த வருமானம் ஈட்டுவதாக குறிப்பிடுகின்றன. நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் 27 வாரங்களுக்கும் அதிகமாக வேலைவாய்ப்பின்றி உள்ளனர், இவ்வாரம் புதிய வேலையற்றோரின் விண்ணப்பம் 850,000 க்கு அதிகரித்துள்ளது. 12 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் நவம்பரில் வாடகை கொடுக்க முடியாமல் இருப்பதுடன், இம்மாத இறுதியில் தேசிய கடன் இடைநிறுத்தக் காலம் நிறைவடைவதால் வெளியேற்றத்தை முகங்கொடுக்கிறார்.

காங்கிரஸ் சபை, ஒரு "ஊக்கப்பொதி சட்டமசோதா" மீது எந்த உடன்பாடும் எட்டாமல் அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, இது நிறைவேற்றப்பட்டாலும் கூட, இந்த பாரியளவிலான சமூக தேவையைப் பூர்த்தி செய்யாது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தற்போது, பெருநிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் அவர்கள் எவ்வளவு பணம் கையளிக்கலாம் என்பதன் மீதே பெரிதும் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த பேரழிவு தவிர்க்க முடியாதது இல்லை. இந்த வைரஸ் இயற்கையின் விளைவாக இருந்தாலும், அதற்கான விடையிறுப்பு சமூக மற்றும் பொருளாதார நலன்களால் கட்டளையிடப்படுகிறது.

மார்ச் 17 இல், அமெரிக்க மரண எண்ணிக்கை வெறும் 121 ஆக இருக்கையில் அந்த வைரஸ் பரவல் வெறும் ஆரம்ப கட்டத்தில் இருந்த போதே, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி, மருத்துவக் கவனிப்பு உள்கட்டமைப்பை அவசரகதியில் விரிவாக்குவது, மற்றும் பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்களுக்கும் முழு வருமானத்துடன் அனைத்து பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமல்லாத வேலையிடங்களை உடனடியாக மூடுவது உள்ளடங்கலாக, “தொழிலாள வர்க்கத்திற்கான நடவடிக்கை திட்டத்தை" விவரித்தது.

அவசரகால நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால், நூறாயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். முதலில் இந்த வைரஸ் மேலெழுந்த சீனாவில் மரண எண்ணிக்கைகள் 5,000 க்கும் குறைவாக உள்ளது என்பதுடன் இந்த வைரஸ் நடைமுறையளவில் துடைத்தழிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே, இது சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் ஆளும் வர்க்கம் அதன் நலன்களுக்கு பொருந்தாத அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரித்தது. ஜனநாயகக் கட்சி துணைபோக மற்றும் அதன் ஒத்துழைப்புடன், ட்ரம்ப் நிர்வாகம், அந்த அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டியதுடன், எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்தது. அதே நேரத்தில், உலக வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் செல்வவளத்தைக் கைமாற்றுவதற்காக இந்த தொற்றுநோய் சாதகமாக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரஸ் சபையின் ஒருமனதான ஆதரவுடன், ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வோல் ஸ்ட்ரீட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இது நடந்த உடனேயே, “குணப்படுத்தல், நோயை விட மோசமானதாக ஆகிவிடக் கூடாது" என்பதே அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களினது தொனியாக ஆனது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடெங்கிலும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, பொருளாதார நடவடிக்கை மீதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டுபவர்களின் பலிபீடத்தில் பொது சுகாதாரம் தியாகம் செய்யப்பட்டுள்ளது. பெரிதும் பங்குச் சந்தைகளது அதிகரிப்பின் காரணமாக, அமெரிக்காவில் மொத்த பில்லியனர்களின் (651 பேர்) செல்வவளம் இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னர் 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக (அல்லது 36 சதவீதத்திற்கு) அதிகரித்துள்ளது. நாட்டில் பருவ வயதடைந்த ஒவ்வொருவருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் 3,000 டாலர் காசோலை வழங்க, செல்வவளத்தின் இந்த அதிகரித்த தொகை மட்டுமே கூட, போதுமானதாகும்.

இப்போது அடைப்பை மேற்கொள்ள மறுப்பது முற்றிலும் குற்றகரமான தன்மையைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் உயிரிழக்க உள்ள பத்தாயிரக் கணக்கானவர்கள் மத்தியில், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களை மீண்டும் திறப்பதன் விளைவாக நோய்தொற்று ஏற்பட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

இப்போது அவசர நடவடிக்கை எடுத்தாலும் கூட நூறாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்!

அத்தியாவசியமல்லாத வணிகங்கள் அனைத்தையும் மற்றும் பள்ளிகளையும் உடனடியாக மூடுமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. வேலைக்குத் திரும்புவது சாத்தியமாகும் வரையில் ஒரு கண்ணியமான வாழ்கைக்கு உத்தரவாதம் அளிக்க போதுமான வருமானம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பொருளாதார நலிவை முகங்கொடுக்கும் சிறுவணிகங்களுக்கும் நிஜமான உதவி வழங்கப்பட வேண்டும்.

இந்த வைரஸைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது என்ற எல்லா வாதங்களும், மொத்த சமூக வாழ்வும் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு அடிபணிய வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் உள்ளன. பொது நிதியைக் கொள்ளையடித்து திரட்டி, இந்த தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டியவர்கள் குவித்து கொண்டுள்ள ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள், சமூக தேவைப் பூர்த்தி செய்வதற்காக பறிமுதல் செய்யப்பட வேண்டும். மிகப்பெரும் நிதியியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகள் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும்.

உயிர்களைக் காப்பாற்ற அவசியமான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு குழுக்கள் மற்றும் நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்குமாறு SEP அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய உற்பத்தி தொழிலாளர்களும், அமசன் மற்றும் சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுவான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க இத்தகைய குழுக்களை உருவாக்க வேண்டும். இத்தகைய நிலைமைகளில் வேலை செய்ய மறுக்க தொழிலாளர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இலாபங்களை விட தொழிலாளர்களின் உடல்நலனுக்கே பிரதான முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்!

இத்தகைய குழுக்கள், இதே நலன்களைக் கொண்டுள்ள மற்றும் இதே நிலைமைகளை முகங்கொடுக்கும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கும் அமெரிக்க தொழிலாளர்களுக்கும் இடையே உறவுகளை ஸ்தாபிக்கும்.

அனைத்திற்கும் மேலாக, இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஆளும் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாகும். அமெரிக்க முதலாளித்துவம் மிகவும் வெளிப்படையாக அம்பலப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கம் அதன் திறமையின்மை, காட்டுமிராண்டித்தனம் மற்றும் குற்றங்கள் அனைத்திலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது உருவாக்கி கொண்டிருக்கும் பாரிய கோபம் சோசலிச புரட்சியின் வடிவத்தை எடுக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்!

Loading