ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரின் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருவதுடன், 2020 தேர்தல் முடிவுகளைப் பயனற்றதாக ஆக்கவும், தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் செயலூக்கத்துடன் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டுள்ளார்.
ட்ரம்ப் அவர் என்ன செய்யவிருப்பதாக தேர்தல்களுக்கு முன்னர் அறிவித்தாரோ இப்போது அதை செய்து வருகிறார் என்பதற்கு சூழ்நிலை இதை விடத் தெளிவாக இருக்காது. பைடென் திட்டவட்டமாக ஜெயித்துள்ள ஒரு தேர்தலின் சட்டபூர்வத்தன்மையை அவர் மறுத்து வருவதுடன், தேர்தல் "களவாடபட்டு" விட்டதாக ஒரு பொய்யான சொல்லாடலை உருவாக்க முயன்று வருகிறார், மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் வாக்குகளை ஒன்றுமில்லாத ஆக்க சூழ்ச்சி செய்து வருகிறார்.
இந்த சூழ்ச்சியில் குடியரசுக் கட்சியும் இணைந்துள்ளது, இது மேலும் மேலும் பாசிசவாத மற்றும் குற்றகரமான ஆட்சிக்குழு வடிவத்தை எடுத்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அளவிலுள்ள குடியரசுக் கட்சி தலைவர்கள் ட்ரம்பின் பொய்களை ஆதரித்துள்ளதுடன், பைடெனின் வெற்றியை அங்கீகரிக்கவும் மறுத்துள்ளனர். செனட் சபையில் திங்கட்கிழமை வழங்கிய ஓர் உரையில், செனட் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் அறிவிக்கையில், "விதிமுறைமீறல்கள் மீதான குற்றச்சாட்டுக்களைக் கவனிக்கவும், அவரின் சட்டபூர்வ வாய்ப்புகளை எடை போடவும், அவருக்கு 100 சதவீதம் உரிமை உண்டு,” என்றார்.
ஜோர்ஜியாவில், அம்மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நிகழ்ச்சிப்போக்கில் "தோல்விகளுக்காக" ஒரு குடியரசுக் கட்சியினரான அம்மாநில செயலரை இராஜினாமா செய்யுமாறு குடியரசுக் கட்சி செனட்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். செனட் சபையில் நீதித்துறை குழுவின் தலைவர், குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சி கிரஹாம், ட்ரம்ப் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியதுடன், குடியரசுக் கட்சியினர் தேர்தல் முடிவுகளுக்கு சவால் விடுக்கவில்லை என்றால், “மீண்டும் ஒருபோதும் ஒரு குடியரசுக் கட்சி ஜனாதிபதி தேர்வாக மாட்டார்,” என்று அறிவித்தார்.
நிர்வாகத்தின் நிலைப்பாடு, குண்டர் தன்மை கொண்ட வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவினால் செவ்வாய்கிழமை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டது. ட்ரம்ப் இன்னுமொரு பதவிக்காலமும் பதவியில் தங்கியிருப்பார் என்று பகிரங்கமாக அறிவித்தார். பைடென் நிர்வாகத்திற்கு "சுமூகமாக கைமாற்றுவதை" அவர் உறுதிப்படுத்துவாரா என்று அரசுத்துறை பத்திரிகையாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட போது, உண்மையில் "இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு சுமூகமான மாற்றம்" இருக்கும் என்று பொம்பியோ விடையிறுத்தார்.
வரவிருக்கும் பைடென் குழுவுக்கு மூத்த அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் சரக்கு பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பைக் கையாளும் பொது சேவைகள் நிர்வாகத்தின் (GSA) ட்ரம்ப் நிர்வாக தலைவர் திங்கட்கிழமை கூறுகையில், அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த அவசியமான சட்டபூர்வ ஒத்துழைப்பை அவர் முன்னெடுக்கப் போவதில்லை என்றார்.
அதே நாளில் அரசுத்துறை தலைமை வழக்குரைஞர் வில்லியம் பார், வாக்கு மோசடி “மத்திய அரசு தேர்தலின் முடிவில் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தால்" அதன் மீது புலனாய்வுகளைத் தொடங்குமாறு அனைத்து அமெரிக்க அரசு வழக்குரைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார், இது தன்னிடமிருந்து தேர்தல் களவாடப்பட்டிருப்பதாக கூறும் ட்ரம்பின் போலி வாதங்களுக்குப் பின்னால் நீதித்துறையை நடைமுறையளவில் அணி சேர்ப்பதாகும்.
காங்கிரஸிலும் மாநில சபைகளிலும் உள்ள ட்ரம்ப் மற்றும் அவரின் குடியரசுக் கட்சி கூட்டாளிகள் தேர்தலைக் கவிழ்க்க ஒரு முடிவான மூலோபாயத்தின் மீது செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வாக்கு மோசடி நடந்துள்ளது என்ற பொய் வாதங்களுடன் தேர்தலின் சட்டப்பூர்வத்தன்மைக்குக் குழிபறிக்க முயன்று வருகின்றனர், பின்னர் இது மக்கள் வாக்குகளை மறுத்தளிக்கவும் மற்றும் ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவும் மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்படும்.
செவ்வாய்கிழமை காலை CNN இல் தோன்றிய வேர்ஜினியா பல்கலைக்கழக அரசியல் துறை இயக்குனர் லேரி சபாடோ, இந்த அபாயம் நிஜமானது என்பதை தெளிவுபடுத்தியதுடன், “சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் விரும்பியதை செய்கிறார்கள்,” என்பதை சுட்டிக் காட்டினார்.
இது பென்சில்வேனியா மற்றும் மற்ற மாநிலங்களின் வாக்கு முடிவுகள் மீதான சட்டபூர்வ சவால்களுடன் இணைக்கப்படும். வாக்குகளை இந்தளவுக்கு ஆணவத்துடன் ஒடுக்குவது சந்தேகத்திற்கிடமின்றி உச்ச நீதிமன்றத்தில் போய் நிற்கும், இதில் முழுமையாக மூன்றில் ஒரு பங்கினர் இப்போதிருக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் சூழ்ச்சியாளர், 2000 ஆம் ஆண்டு புஷ்ஷிற்கு எதிராக கோர் வழக்கின் முடிவைச் சார்ந்திருப்பார்கள், அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி அன்டோனின் ஸ்காலியா வாதிடுகையில், ஜனாதிபதியையோ அல்லது ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர்களையோ தேர்ந்தெடுக்க அரசியலமைப்பு அமெரிக்க மக்களுக்கு உரிமை வழங்கி இருக்கவில்லை என்று வாதிட்டார்.
ட்ரம்பின் போலி-சட்ட சூழ்ச்சிகள், பொலிஸ் மற்றும் அரசு எந்திரத்திலுள்ள சில பிரிவுகளின் ஆதரவுடன், அதிவலது மற்றும் பாசிசவாத சக்திகளின் வன்முறை தூண்டுதல்களால் ஆதரிக்கப்படுகின்றன. “தேர்தல் திருட்டை நிறுத்து" (Stop the Steal) என்ற பதாகையின் கீழ் ட்ரம்ப் ஆதரவாளர்களை அணித்திரட்ட இந்த வாரயிறுதியில் வாஷிங்டன் டிசி இல் ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான ட்ரம்பின் திட்டங்களை ஆரம்பத்தில் விமர்சித்திருந்த பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பரை திங்கட்கிழமை ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கினார். 30 ஆண்டு காலம் சிறப்புப் படை நடவடிக்கையாளராக இருந்து ஓய்வுபெற்ற கர்னல் கிறிஸ்டோபர் மில்லர் பென்டகனின் புதிய "இடைக்கால" தலைவராக இருப்பார். போர் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக 70,000 பலமான சிறப்புப் படையினருக்குள் ட்ரம்ப் ஆதரவை உருவாக்க முனைந்துள்ளார், இந்த அரை சுதந்திரமான-போலிப் படைப்பிரிவை அவரின் சொந்த தனிப்பட்ட இராணுவமாக மாற்றுவதே நோக்கமாகும். உள்நாட்டு போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான மில்லரின் விருப்பமும் ஜனாதிபதிக்கு அவர் வழங்கும் ஆதரவுமே மில்லரின் பிரதான தகுதியாக உள்ளது.
ட்ரம்ப் முன்நகர்ந்து வரும் அடாவடித்தனத்திற்கு முரண்பட்ட விதத்தில், ஜனநாயகக் கட்சியோ அதன் வழக்கமான அலட்சியம் மற்றும் அக்கறையற்றதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ட்ரம்பின் நடவடிக்கைகளை "மனக்குழப்பம்" என்பதாக செவ்வாய்கிழமை பைடென் உதறித் தள்ளினார். “இந்த தருணத்தில் நாங்கள் ஜெயித்து விட்டோம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்ற உண்மை எங்கள் திட்டமிடலில் பெரிய விளைவுகளைக் கொண்டிருக்கவில்லை,” என்பதையும் பைடென் சேர்த்துக் கொண்டார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரையில், தேர்தல் முடிவுகளை மறுத்தளிக்க ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் செயலூக்கத்துடன் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உண்மைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றாகிறது. வரவிருக்கும் பைடென் நிர்வாகத்திற்கான மந்திரிசபை நியமனங்கள் குறித்து விவாதிப்பது உள்ளடங்கலாக அவர் விரைவில் மெக்கொன்னலைச் சந்தித்து பேச கருதுவதாகவும் அவர் சேர்த்துக் கொண்டார்.
பைடெனின் பத்திரிகையாளர் கூட்டம் சனிக்கிழமை மாலை அவரின் வெற்றி உரையைத் தொடர்ந்து நடந்தது, அதில் அவர் குடியரசுக் கட்சியினருடன் "நல்லிணக்கத்திற்கு" முறையிட்டதுடன், தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுத்துள்ள உண்மையைக் குறித்தும் எதுவும் குறிப்பிடவே இல்லை.
ட்ரம்பின் நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சியினர் ஏதோ தனிப்பட்ட உணர்ச்சி வெடிப்பாகவும், அமெரிக்காவின் ஜனநாயக ஆட்சியில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதை மாற்றுவதற்கான ஒரு பேராபத்தான தீவிர அச்சுறுத்தல் இல்லை என்பதாகவும் கையாள்கிறார்கள். பொதுமக்களுக்கு எச்சரிக்கையூட்டுவதற்கு பதிலாக, தேர்தல் முடிவை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதன் விளைவைக் குறித்து அவருக்கு எச்சரிப்பதற்கு பதிலாக, அல்லது மக்களை எச்சரிக்கையில் வைக்க அவர்களை அணித்திரட்டுவதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியினரோ ஆபத்தான எதுவும் நடக்கவில்லை என்று விடாது அறிவித்து வருகின்றனர்.
ட்ரம்பின் நடவடிக்கைகளுக்குச் சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பானது, வரவிருக்கும் பைடென் நிர்வாகம் பதவிக்கு வந்தாலும் கூட அதன் கொள்கைகளுக்கு எந்த ஆதரவையும் கொண்டிருக்காது. ஆனால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வலதுசாரி மற்றும் நவ-பாசிசவாத சூழ்ச்சிக்கான எந்தவொரு முயற்சிகள் மீதும் தொழிலாள வர்க்கம் அலட்சியமாக இருக்க முடியாது. மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மரைக் கடத்தி கொல்வதற்கான பாசிசவாத சூழ்ச்சிகளை நாங்கள் எந்த காரணத்திற்காக எதிர்த்தோமோ அதே காரணத்திற்காக நாங்கள் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டத்தையும் எதிர்க்கிறோம். உண்மையில் இந்த சதித்திட்டங்களை மூடிமறைத்துள்ள ஜனநாயகக் கட்சியை விடவும் SEP இவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்புக்கு ஜனநாயகக் கட்சியை நம்பிக் கொண்டிருக்க முடியாது, அது பகுப்பாய்வின் இறுதியில் அதே செல்வந்த தட்டுக்களின் நலன்களையே பாதுகாக்கிறது. வேறு எதனையும் விட, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி மக்கள் போராட்டத்தின் வெடிப்பைக் குறித்தும், அடிமட்டத்திலிருந்து வரும் எதிர்ப்பைக் குறித்தும் அஞ்சுகிறது. தேர்தலுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் வேகத்தை ட்ரம்புக்கு மற்றும் அதிவலதுக்கு எதிராக திருப்பி இருக்கவில்லை மாறாக "சோசலிசம்" என்ற எந்த வார்த்தையையும் கட்சியிலிருந்து இல்லாதொழிக்கும் ஒரு சிலுவைப் போரைத் தொடுத்து, இடதுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
ட்ரம்பின் சூழ்ச்சிகள் ஒரு நீடித்த நெடிய நிகழ்வுபோக்கின் விளைவாகும், இதன் பேராபத்தான உள்நோக்கங்கள் ஜூன் 1 இல் தெளிவானது, அப்போது ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே அமைதியாக போராடிய போராட்டக்காரர்களைத் தாக்க கனரக ஆயுதமேந்திய மத்திய அரசு படைகளை அனுப்பியதுடன், கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்தவும் மற்றும் நாடெங்கிலும் வீதிகளில் ஆயுதமேந்திய துருப்புகளை அனுப்பவும் சூளுரைத்தார்.
அப்போதே உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது:
அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை வந்துள்ளது. இராணுவ ஆட்சியின் அடிப்படையில் தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள், அதீத சமூக சமத்துவமின்மை மற்றும் முடிவில்லா போர்களின் தாக்கத்தின் கீழ், அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியின் விளைவாகும்.
ட்ரம்ப் முயற்சிக்கும் ஆட்சி சதி தோற்கடிக்கப்படுவது என்பது தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைச் சார்ந்துள்ளது, அது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தலைமை எடுத்தாக வேண்டும்.
அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலா பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் சுமையின் கீழ் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்டமைப்புகள் முறிந்து வருகின்றன, இது அனைத்திற்கும் மேலாக மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்களால் குணாம்சப்பட்டிருப்பதுடன், உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயாலும் ஆளும் வர்க்கங்களின் "சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும்" மனிதபடுகொலை கொள்கையாலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமை ஆபத்தால் நிறைந்துள்ளது. ஆத்திரமூட்டல்களை நடத்தவும், இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும், இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான சாக்குபோக்கை உருவாக்கவும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கவும் ட்ரம்ப் மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு பதவியேற்பு தினம் வரையில் இன்னும் 69 நாட்கள் உள்ளன.
இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு அடிபணிய செய்வதென்பது, உச்ச நீதிமன்ற நீதிகளைச் சார்ந்திருப்பது ஒருபுறம் இருக்க, இது பேரழிவில் மட்டுமே போய் முடியும்.
ட்ரம்ப் தேர்தலைக் கவிழ்ப்பதில் வெற்றியடைந்தால், அரசு மற்றும் அதன் ஒடுக்குமுறை சக்திகள் சட்டபூர்வத்தன்மைக்கு நிகரான எதையும் கொண்டிருக்காது என்ற நிலைமைகளின் கீழ் நாட்டின் ஒவ்வொரு நகரிலும் பாரியளவில் உணர்ச்சி பிரவாகத்தைத் தூண்டிவிடும். பைடென் மக்கள் வாக்குகள் மற்றும் தேர்வுக் குழு வாக்குகளில் ட்ரம்பை தோற்கடித்துள்ளார் என்பது மட்டுமல்ல, அவர் ஜெயித்த மாநிலங்களும் பகுதிகளும் பாரியளவில் சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கத்தைக் கொண்ட அமெரிக்காவின் மிகவும் பலமான பொருளாதார மற்றும் தொழில்துறை பிரதேசங்களாகும்.
ட்ரம்ப், பென்ஸ் மற்றும் அவர்களின் சக-சதிகாரர்களை உடனடியாக நீக்க கோருவதே வெள்ளை மாளிகையில் பேணி வளர்க்கப்பட்டு வரும் சூழ்ச்சிக்கு ஒரே நம்பகமான விடையிறுப்பாகும்.
இந்த கோரிக்கையை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாகவும் மற்றும் நாடுதழுவிய அரசியல் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தின் மூலமாகவும் மட்டுமே கைவரப் பெற முடியும். இந்த இயக்கம் நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் பிடியை உடைப்பதையும், சோசலிச அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுசீரமைப்பதையும் சற்றும் நிறுத்தி விடக்கூடாது. சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக அமெரிக்காவில் தொழிலாளர்களின் போராட்டமானது உலகெங்கிலும் எல்லா தொழிலாளர்களிடம் இருந்தும் பாரியளவில் தவிர்க்க முடியாத ஆதரவைச் சந்திக்கும்.