முன்னோக்கு

தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் சபை ஒன்றுகூடுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க காங்கிரஸ் சபை உத்தியோகபூர்வமாக 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் தேர்வுக்குழு வாக்குகளை எண்ணுவதற்காக இன்று ஒன்றுகூடுகிறது. வழமையான நிலைமைகளில், இந்த நிகழ்முறை ஒரு சம்பிரதாயமாக இருக்கும். ஆனால் இன்றைய வாக்கு எண்ணிக்கையோ, தேர்தல் முடிவுகளை ஒன்றுமில்லாததாக ஆக்கி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயலூக்கமான தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் முயற்சியின் நிலைமைகளின் கீழ் நடக்கிறது.

பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் பெரும்பான்மையினரும் குடியரசுக் கட்சியின் செனட்டர்களில் கணிசமான எண்ணிக்கையினரும் மும்முரமாக ஆதரவு வழங்குகின்ற நிலையில், ட்ரம்ப், வாக்குகள் அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க முயன்று வருகிறார். அமெரிக்க செனட் சபை தலைவராக உள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸிற்கு வெற்றியாளர்களை "நிராகரிக்க அதிகாரம் இருப்பதாக" செவ்வாயன்று ட்ரம்ப் அறிவித்தார். அதுபோன்றவொரு நடவடிக்கை அப்பட்டமாக அரசியலமைப்புக்கு விரோதமானதாக இருக்கும்.

President Donald Trump speaks in the East Room of the White House, in Washington. (AP Photo/Evan Vucci)

ட்ரம்ப் திங்கட்கிழமை ஜோர்ஜியாவில் உரையாற்றுகையில், “அவர்கள் இந்த வெள்ளை மாளிகையை எடுக்க மாட்டார்கள். நாங்கள் பிசாசுகளைப்போல போராடவிருக்கிறோம்.”

காங்கிரஸ் சபைக்கு வெளியே, வாஷிங்டன் டி.சி. இல், Proud Boys போன்ற நவ-பாசிசவாத மற்றும் படைப்பிரிவு அமைப்புகள் தலைமையில் பத்தாயிரக் கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஒன்று கூடி வருகிறார்கள். ஆர்ப்பாட்டங்களுக்குச் செவ்வாய்கிழமை அவரின் முழு ஆதரவை அறிவித்த ட்ரம்ப், புதன்கிழமை காலை வெள்ளை மாளிகைக்கு எதிரில் ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றவிருப்பதாக தெரிவித்தார்.

அரசியலமைப்பை தூக்கியெறிவதற்கான ட்ரம்பின் விடாப்பிடியான முயற்சிகளுக்கு முன்னால், ஜனநாயகக் கட்சியும் அதன் பாதுகாவலர்களும் ட்ரம்ப் நடவடிக்கைகள் முன்னிறுத்தும் அச்சுறுத்தலை சாத்தியமானளவுக்கு குறைத்துக் காட்டவும் மூடிமறைக்கவும் அவர்களால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றனர். மக்களை எச்சரிக்கையூட்டி, கட்டுப்பாட்டை மீறிய ஓர் எதிர்ப்பு இயக்கத்தை இயக்கத்திற்குக் கொண்டு வரும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்ப்பதே அவர்களின் பிரதான கவலையாக உள்ளது.

திங்கட்கிழமை பைடென் குறிப்பிடுகையில், தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகளை "பொறாமை புலம்பல்கள், குறைகூறல்கள்" என்றார். அமெரிக்காவில் அரசியலமைப்பு ஒழுங்கைத் தூக்கியெறிவதற்கு முயலும் சதிகாரர்களின் குழுவை "நம்மை எதிர்க்கும் நண்பர்கள்,” என்று குறிப்பிட்ட அவர், இருதரப்பும் "நல்லிணக்கமாக" இருக்கவும், “வேறுபட்ட அரசியலை நமக்குப் பின்னால் வைத்துக் கொள்ளவும்,” அவரின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

வெறும் முதுகெலும்பற்றத்தன்மை மற்றும் சரணாகதி நிலை என்பதற்கும் அதிகமாக, பைடெனின் கருத்துக்கள் ஓர் அடிப்படை வர்க்க யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. பிரதானமாக வெளியுறவுக் கொள்கையை மையமிட்டு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதி பகுப்பாய்வில், ட்ரம்பும் அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களும் ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாவர். இதை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டவாறு, இந்த மோதல் ஓர் "உள்கட்சி பூசல்" தான். வரலாற்றுரீதியில் ஸ்ராலினிசம் மற்றும் மக்கள் முன்னணி அரசியலுடன் இணைந்துள்ள, அமெரிக்க இடது தாராளவாதத்தின் முன்னணி பிரசுரமான The Nation, மக்களை உறக்கத்திலேயே வைத்திருப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளை வெட்டவெளிச்சமாக விளக்குகிறது.

ட்ரம்பின் நடவடிக்கைகளை "அனாவசியமானது,” என்று குறிப்பிடும் TheNation, ட்ரம்ப் அவரின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் வெற்றி பெற மாட்டார் என்று ஆணித்தரமாக அறிவிக்கிறது. "ட்ரம்ப் அவரால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து பார்த்து விட்டார் என்பது நல்ல விசயம் தான். வன்முறை குழப்பத்தை உருவாக்க போதுமான சத்து அவருக்கு இருக்கிறது என்றாலும் … தேர்தல் முடிவுகளைப் புரட்டி போடுவதற்கு அது போதுமானதில்லை,” என்றது அறிவிக்கிறது.

Nation இல் வெளியான மற்றொரு கட்டுரை, ட்ரம்பின் நடவடிக்கைகளை "தோல்விக்காக சபிக்கப்பட்ட" ஒரு "கோமாளித்தனமான ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்று குறிப்பிடுகிறது. “கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அரசியல் அதிகாரத்தில் ட்ரம்ப் பலவீனமடைந்து வருகிறார், மேலும் தேர்தல் முடிவை அவரால் மாற்றி விட முடியும் என்று யதார்த்தத்திற்கு முரணாக வாதிடுவதற்கு அவசியமில்லை,” என்கிறது.

அமெரிக்க அரசியலில் ஒவ்வொன்றும் ஜனவரி 20 இல் வழமைக்குத் திரும்பி விடும் என்ற The Nation இன் அசைக்குமுடியாத நம்பிக்கை அமெரிக்க முதலாளித்துவத்தின் மீது அது வைத்திருக்கும் அசைக்க முடியாத தன்மையின் வெளிப்பாடாகும். முதலாளித்துவத்தை வெல்ல முடியாது அழிக்க முடியாது என்று அது எந்தளவுக்கு நம்பிக் கொண்டிருக்கிறதோ அந்தளவுக்கு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவது குறித்து ஆளும் வர்க்கம் யோசிக்க ஏதேனும் அவசியம் இருக்கிறது என்பதை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாததாய் தெரியும்.

இது தான், ஒரு வேலைத்திட்டம் இல்லாத, கொடுமையான அமெரிக்க தாராளவாதத்தின் குரல். விசயத்தை ஏற்றுக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருப்பதும், ஒவ்வொன்றும் மீண்டும் அதன் பாதைக்குத் திரும்பிவிடுமென நம்புவதுமே முதலாளித்துவ நெருக்கடிக்கு அவர்களின் ஒரே விடையிறுப்பாக இருக்கும்.

1934 இல் எடுவார்ட் டலாடியே (Édouard Daladier) அரசைப் பதவிலிருந்து கீழே கொண்டு வந்த பாசிசவாத வீதி ஆர்ப்பாட்டங்களைக் குறித்து எழுதுகையில், லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

பாசிசவாதம் தங்களை ஒன்றும் செய்து விடாது என்று பிரெஞ்சு மக்கள் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு குடியரசில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், அதில் அனைவருக்குமான வாக்குரிமையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக எல்லா பிரச்சினைகளும் மக்களுக்கான இறையாண்மை மூலமாக கையாளப்பட்டது. ஆனால் பெப்ரவரி 6, 1934 இல் பல ஆயிரக் கணக்கான பாசிசவாதிகளும் அரச ஆதரவாளர்களும், துப்பாக்கிகள், உருட்டுக்கட்டைகள், முட்கம்பிகளுடன் ஆயுதமேந்தி, டுமேர்க் (Doumergue) இன் பிற்போக்குத்தனமான அரசாங்கத்தை நாட்டின் மீது திணித்தார்கள்.

இப்போதும் கூட, பாசிசவாத வன்முறையும் அரசியலமைப்புக்குப் புறம்பான ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டங்களும் அமெரிக்க அரசியலின் புறநிலைக் காரணியாக ஆகியுள்ளது.

நாம் தீர்மானமாக அறிவிக்கிறோம்: ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அவரின் அச்சுறுத்தல்களைத் தொழிலாளர்கள் உச்சபட்ச கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவர் தான் ஜனாதிபதியாக இருக்கப் போகிறார் என்பதோடு, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான அவரது முயற்சியில், வெளிப்படையாக தெரிந்த மற்றும் வெளிப்படையாக தெரியாத, அவர் பயன்படுத்தக் கூடிய எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்த அவர் தீர்மானகரமாக உள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் ஏதோ எதிர்த்து போராடுவதைப் போல பாசாங்கு செய்து கொண்டிருக்கின்ற அதேவேளையில், ட்ரம்ப் இரத்தம் சிந்த வைக்கவும் கூட பயப்படவில்லை. அவர் 1930 களுக்குப் பிந்தைய மிகப்பெரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில் ஒரு முன்கூட்டிய எதிர்புரட்சிக்காக வாதிடும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகிறார். தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை நசுக்குங்கள் இல்லையென்றால் அது உங்களை விழுங்கிவிடும், இதற்கான நேரம் குறைவாக உள்ளது என்றவர் ஆளும் வர்க்கத்தை எச்சரிக்கிறார்.

பாசிசவாதம் மற்றும் சர்வாதிகாரத்திலிருந்து அமெரிக்கா தன்னைக் காத்துக் கொள்ளும், “அது இங்கே நடக்காது,” என்று நம்புபவர்கள், அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியின் யதார்த்தம் குறித்து தங்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள். இங்கே நடக்க முடியும் என்பது மட்டுமல்ல, மாறாக இங்கே அது நடந்து கொண்டிருக்கிறது.

அனைத்திற்கும் மேலாக ட்ரம்பின் நடவடிக்கைகள் அவர் மன அலைக்கழிப்பால் ஏற்பட்டுள்ளது என்பதைப் போல, உத்தியோகபூர்வ ஊடகங்களுக்குள்ளும் மற்றும் Nation போன்றவற்றிலும் வெளியாகும் கருத்துரைகள் மேம்போக்காக உள்ளன. ஆனால் ட்ரம்ப் வெறுமனே அவருக்காக பேசவில்லை. அவர் ஏற்கனவே இந்தளவுக்கு சென்றுள்ளார் என்ற உண்மையே, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஒரு கணிசமான பிரிவு ஜனநாயகத்தின் பொறிகளை முறிக்க தயாராகிவிட்டது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

முடிவாக, ஜனவரி 20 என்பது வெறும் தேதி தான். பதவிக்கு பைடென் வந்தாலும் கூட, அமெரிக்காவில் ட்ரம்ப் ஒரு செல்வாக்கான அரசியல் பிரமுகராக இருப்பார் என்பதோடு, அவர் இடத்தை எடுக்க அங்கே மற்றவர்களும் பின்னால் காத்திருக்கிறார்கள். குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநிலங்கள் பைடெனின் ஜனாதிபதி பதவியை அங்கீகரிக்குமா என்பதும் கூட தெளிவாக இல்லை.

இந்த நெருக்கடி பரவிவரும் தொற்றுநோயின் பின்புலத்தில் கட்டவிழ்ந்து வருகிறது, இந்நோயால் ஏற்கனவே அமெரிக்காவில் மட்டும் 350,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நாடெங்கிலுமான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளாட்சி மருத்துவ சிகிச்சையைப் பங்கிட்டு வழங்க தொடங்குமாறு மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த பேரிடருக்கு முன்னால், ஆளும் வர்க்கத்தின் எல்லா பிரிவுகளும் இலாபங்களைத் தொடர்ந்து குவிப்பதற்காக வணிகங்கள் திறந்திருக்க வேண்டும் என்று கோரி, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" அவர்களின் கொள்கையை இரட்டிப்பாக்கி உள்ளன. பாரிய உயிரிழப்புகள் மற்றும் சமூக அவலங்களுக்கு மத்தியிலும், வோல் ஸ்ட்ரீட் இடைவிடாது தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது, அத்துடன் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ வளமும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இத்தகைய மனிதப்படுகொலை கொள்கைகளானது, ஒடுக்கப்படும் வர்க்கங்களின் மிகவும் அடிப்படை நலன்களுக்கான கொள்கைகளை உருவாக்கும் போது கருத்தில் கொள்ள முடியாது என்றளவுக்கு சமநிலையற்ற ஒரு சமூக ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. இறுதியாக அமெரிக்க ஜனநாயகத்தின் சீரழிவும் துர்நாற்றமும் அமெரிக்க முதலாளித்துவத்தினது நெருக்கடி மற்றும் மரண ஓலத்தின் வெளிப்பாடாகும். ட்ரம்ப் இந்த நோயின் மிகவும் கண்கூடான ஓர் அறிகுறி மட்டுந்தான்.

இந்த தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தைப் போலவே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்த போராட்டத்திற்கும் தீர்வு அதே தான்: சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தால் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் அதிகாரம் நசுக்கப்பட்டு தூக்கியெறியப்பட வேண்டும்.

Loading