மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜோ பைடெனின் டெலிவேர் விமின்ங்டனில் நேற்று மதிய பத்திரிகையாளர் கூட்டம், அவரின் சொந்த வெற்றிக்காக காங்கிரஸ் சபை சான்றளிப்பதைத் தடுக்கும் நோக்கிலான புதன்கிழமை பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அரசியல்ரீதியில் பொறுப்பானவர்களை மூடிமறைக்க அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ட்ரம்பால் தூண்டப்பட்டு, குடியரசுக் கட்சியின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், நூற்றுக் கணக்கானவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து 48 மணித்தியாலத்துக்கும் குறைவான நேரத்தில், பைடென் அவரின் "குடியரசுக் கட்சியின் சக நண்பர்களுடன் "நல்லிணக்கத்திற்கு" அழைப்புவிடுத்ததுடன், யாரையும் அரசியல்ரீதியில் பொறுப்பாக்குவதை அவர் எதிர்ப்பதையும் தெளிவுபடுத்தினார்.
புதன்கிழமை கிளர்ச்சியைத் தூண்டிவிட்டதற்காக ட்ரம்ப் மீது உடனடியாக பதவிநீக்க குற்றவிசாரணையை அவர் ஆதரிக்கிறாரா என்ற கேள்வியிலிருந்து பைடென் வேண்டுமென்றே நழுவினார், அந்த கிளர்ச்சி பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிலராலும் முன்மொழியப்பட்டிருந்தது. “காங்கிரஸ் சபை என்ன செய்ய முடிவெடுக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” பைடென் தெரிவித்தார்.
பின்னர் ட்ரம்பை உடனடியாக நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாக வலியுறுத்திய அவர், “நமக்கு ஆறு மாதங்கள் இருந்திருந்தால், அவரைப் பதவியிலிருந்து நீக்க நாம் எல்லாவற்றையும் செய்திருப்போம்,” ஆனால் பதவியேற்புக்கு இரண்டு வாரங்களே உள்ளன, “20 இல் ஜனாதிபதியாக மற்றும் துணை ஜனாதிபதியாக நாங்கள் கட்டுப்பாட்டை எடுப்பதன் மீது நான் ஒருமுனைப்பட்டுள்ளேன்" — அதாவது ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்த பின்னர்.
பைடென் கருத்துக்களின் எஞ்சிய பகுதி, ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உதவிய குடியரசுக் கட்சி அதிகாரிகளுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குவதன் மீது ஒருமுனைப்பட்டிருந்தது. துணை ஜனாதிபதி பென்ஸை "மைக்" என்று குறிப்பிட்டு அவர் கூறுகையில், ஜனவரி 20 பதவியேற்பு விழாவில் "அவர் இருப்பது கௌரவமாக" இருக்கும் என்று தெரிவித்தார், அதை புறக்கணிக்க இருப்பதாக ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தேர்தல் சீர்குலைக்கப்பட்டிருந்ததாக பொய்யை ஊக்குவிப்பதில் முக்கிய பாத்திரங்கள் வகித்தவர்களான குடியரசுக் கட்சியின் இரண்டு செனட்டர்கள் ஜோஸ் ஹவோலி மற்றும் டெட் குரூஸ் இராஜினாமா செய்ய வேண்டுமென அவர் கருதினாரா என்று வினவியதும், அவர்கள் அடுத்த முறை பதவிக்குப் போட்டியிட்டால், அதாவது 2024 இல், அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை மட்டுமே வழங்கினார். அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், வியாழக்கிழமை காலை ஆரம்பத்திலேயே பென்சில்வேனியா மாநிலத்தின் தேர்வுக் குழு வாக்குகளை நிராகரிக்க வாக்களித்த ஏழு குடியரசுக் கட்சி செனட்டர்களில் குரூஸ் மற்றும் ஹவோலியும் இருந்தனர். பாசிசவாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த ஹவோலி அவர் கையை உயர்த்தியவாறு புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான புதிய செனட்டில் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் செனட் சபையின் பெரும்பான்மை அணி தலைவராக நீடிக்கும் மிட்ச் மெக்கொன்னல் குறித்து பைடென் கூறியது தான் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மெக்கொன்னல் குறித்து அவர் "மிகவும் பெருமைப்படுவதாக" பைடென் தெரிவித்தார். “அமெரிக்க செனட்டுக்கு முன்னர் அவர் என்ன கூறினாரோ அது செய்வதற்குரிய சரியான விடயம் என்று நான் கருதுகிறேன். அவர் எழுந்து நின்றார்; அவர் அவமானப்படுத்தப்பட்டார்,” என்றார்.
மெக்கொன்னல் புதன்கிழமை செனட் சபையில் ஆற்றிய உரையில், தேர்தல்களை செல்லுபடியற்றதாக்க ட்ரம்ப் முயற்சிகளுக்கு அரசியல்ரீதியில் சட்டபூர்வத்தன்மையை வழங்குவதில் அவர் வகித்த சொந்த பாத்திரத்தை மூடிமறைக்க அவர் முயன்ற நிலையில், அந்த உரையைத் தான் பைடென் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.
பைடென் பாதுகாத்த இந்த எல்லா பிரமுகர்களும் தேர்தல் திருடப்பட்டதாக வாரக் கணக்கில் பொய் வாதங்களைக் கூறியதுடன் நாடாளுமன்றக் கட்டிடம் மீதான தாக்குதலுக்கும் தயாரிப்பு செய்ய உதவியிருந்தனர். செனட் சபையில் குடியரசுக் கட்சியின் தலைவராக மெக்கொன்னல் பைடெனின் வெற்றியைக் குடியரசுக் கட்சியினர் அங்கீகரிப்பதை வாரக் கணக்கில் நிறுத்தி வைத்து ட்ரம்புக்கு முக்கிய சேவையை வழங்கி இருந்தார். ட்ரம்ப் "முறைகேடுகள் மீதான குற்றச்சாட்டுக்களைக் காணவும் மற்றும் அவருக்கான சட்டபூர்வ வாய்ப்புகளை எடை போடவும் 100 சதவீதம் அவர் உரிமைகளுக்குள்" இருந்ததாக மெக்கொன்னல் தேர்தலுக்குப் பின்னர் அறிவித்தார்.
மெக்கொன்னலின் மனைவி எலைன் சோ ட்ரம்ப் அந்நிர்வாகத்தின் நான்காண்டுகள் மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை செயலராக சேவையாற்றி உள்ளார். ட்ரம்பிடம் இருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதற்கான உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளது முயற்சியின் பாகமாக, நடப்பில் அவர் வரும் திங்கட்கிழமை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
குடியரசுக் கட்சியின் ஸ்திரப்பாட்டைத் தாங்கிப் பிடிப்பதே நேற்று பைடெனின் பிரதான கவலையாக இருந்தது. “நமக்கு குடியரசுக் கட்சி வேண்டும்,” என்றார், “கோட்பாடுகளைக் கொண்ட பலமான ஓர் எதிர்கட்சி நமக்கு வேண்டும்.” "குடியரசுக் கட்சியின் சக நண்பர்களுக்கு" அவரின் சுருக்கமான கருத்துக்கள் நெடுகிலும் பல முறை இதைக் குறிப்பிட்ட அவர், “நாம் உடன்பாடு கொண்டுள்ள மற்றும் ஒன்றிணைந்து செய்யக் கூடிய விசயங்களை" செய்து முடிக்க குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியை "ஐக்கியப்படுத்த" அவர் போராட இருப்பதாக வலியுறுத்தினார்.
ஜனநாயகக் கட்சியினருக்கு "வலுவான" குடியரசுக் கட்சி தேவை என்ற பைடெனின் கூற்று, அமெரிக்க முதலாளித்துவ அரசியல் கட்டமைப்புக்குள், ட்ரம்பின் கட்சியை உடைப்பது - பாசிசத்திற்கான காப்பகம்- மிக மோசமான விளைவு ஆகும். ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்த இன்றியமையாத அரசியல் கருவி, சதித்திட்டத்தின் குறைந்தபட்சம் தற்காலிக தோல்வியால் சிதைக்கப்படாமல் இருப்பதை பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.
இதனால் தான் இந்த குற்றகரமான சதி அவர்களின் சொந்த தேர்தல் வெற்றியை நோக்கி இருந்த போதும் கூட, அதை அம்பலப்படுத்துவதை ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கின்றனர். உண்மை வெளியில் வந்துவிட்டால், தீவிரமயப்படும் பெருந்திரளான தொழிலாளர்களின் தாக்கம் குடியரசுக் கட்சியின் ஸ்திரப்பாட்டை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசு எந்திரம் மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையையே அச்சுறுத்தும்.
பிரதானமாக வெளியுறவுக் கொள்கை மீது மையமிட்ட அவர்களின் தந்திரோபாய கருத்துவேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அதே ஆளும் வர்க்கத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்கள் தூக்கியெறிய இருக்கும் எஞ்சிய அமெரிக்க ஜனநாயக ஆட்சி வடிவங்களை விட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான இயக்கத்தைக் குறித்து மிகவும் கவலைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சமீபத்திய பதிப்பித்த அவரின் நினைவுக்குறிப்புகளில், ஒபாமாவின் பதவியேற்பின் போது ஜோர்ஜ் டபிள்யு. புஷ் க்கு எதிரான போராட்டங்கள் குறித்து "வெளியில் தெரியாதவாறு கோபம்" கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். ஒரு தேர்தலைக் களவாடியே புஷ் பதவிக்கு வந்தார் என்பதும், அல்லது நூறாயிரக் கணக்கானவர்களைக் கொன்ற சட்டவிரோத போர்களை அவர் தொடுத்தார் என்பதோ அவர் நினைவில் இல்லை. முதலாளித்துவ அரசின் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே கையிலுள்ள விசயமாக உள்ளது.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக, நவம்பர் 2016 இல், வரவிருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாக்குறுதிகளைக் கொண்டு ஜனநாயகக் கட்சியினர் விடையிறுத்தனர். தேர்தல் என்பது, ஒரே குழுவின் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான "உட்கட்சி பூசல்" என்று ஒபாமா அறிவித்தார்.
கடந்தாண்டில், ட்ரம்ப் அரசியலமைப்பைத் தூக்கிவீசி தனிப்பட்ட ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயன்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினரோ ஜனநாயக உரிமைகள் மீதான தொலைநோக்குத் தாக்குதலை மூடி மறைக்க முயன்றனர். பொலிஸ் படுகொலை மீதான போராட்டங்களுக்கு எதிராக கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த அச்சுறுத்திய ட்ரம்பின் ஜூன் 1 உரையைத் தொடர்ந்து, ஓர் இராணுவச் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான இந்த முயற்சிக்கு எல்லா எதிர்ப்பையும் இராணுவத்திடமே விட்டுக்கொடுத்தனர்.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மற்றும் "பின்புலத்தில் பக்கத்துணையாக நிற்க" பாசிசவாத Proud Boys அமைப்புக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்து வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் ஆரம்பத்தில் கொரொனா வைரஸ் விவகாரத்தில் கீழிறங்கி வந்த போது, வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், ஜனநாயகக் கட்சியினர் அவர் "விரைவில் முழுமையாக குணமடைய" வாழ்த்தியதன் மூலமாக விடையிறுத்தனர்.
“தேச நலனுக்காக" ட்ரம்ப் விரைவிலேயே குணமடைவார் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி, நியூ யோர்க் டைம்ஸ் “குணமாகுங்கள், திரு. ஜனாதிபதி,” என்றவொரு தலையங்கம் வெளியிட்டது. அப்போது WSWS குறிப்பிட்டவாறு, வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் விரைவாக மீண்டு திரும்பியது "தெளிவாக, அவர் நிலைப்பாடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மீது அவர் நோய்வாய்பட்டிருப்பது ஏற்படுத்தும் தாக்கம் மீதான ஆழ்ந்த கவலைகளால் உந்தப்பட்டிருந்தது.”
ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய வெறும் ஒரு சில நாட்களில், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மெரைக் கடத்திக் கொல்வதற்கான பாசிசவாத சூழ்ச்சி வெளியானது. ஜனநாயகக் கட்சியினர் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் முக்கியத்துவத்தை நசுக்கியதுடன் —அது இந்த புதன்கிழமை சம்பவங்களுக்கு ஒரு வெள்ளோட்டமாக இருந்தது— விட்மெரைப் பெரிதாக பாதுகாக்கவும் இல்லை. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களுக்கும் குடியரசுக் கட்சி மற்றும் பொலிஸ் படைகளுக்குள் இருந்த அதிகாரிகளுக்கும் இடையிலான பல தொடர்புகள் மீது எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
இப்போது, ஒரு முயற்சிக்கப்பட்ட பாசிசவாத கிளர்ச்சிக்கு வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் தலைவர் மற்றும் வரவிருக்கும் ஜனாதிபதியின் போக்கு, "நல்லிணக்கம்" மற்றும் "ஒருமனதான இருகட்சி நிலைப்பாடு" என்று உள்ளது. பைடெனின் துணைவர் செனட்டர் டோம் கார்பர் புதன்கிழமை மதியம் குறிப்பிட்டதைப் போல, “புதிதாக தொடங்க" வேண்டியுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வலதுசாரி கும்பங்களில் பங்கெடுத்த சிலருக்கு அப்பாற்பட்டு, யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை. இவர்கள் வலதுசாரி மாவீரர்களாக கொண்டாடப்படுவார்கள் என்பதோடு, இவர்கள் பாசிசவாதிகளின் நிதித் திரட்டும் நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளர்களாக ஆவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகப் போவதில்லை. அவர்களில் சிலர் எதிர்கால தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களாக இருப்பார்கள் என்றும் ஒருவர் நிச்சயமாக கூற முடியும். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அரசியல் ஏற்பாட்டாளர்கள் மற்றும் துணை நின்றவர்களைப் பொறுத்த வரையில் —ட்ரம்ப், அவரின் வக்கிரமான மகன்கள் எரிக் மற்றும் டொனால்ட், ஜூனியர் கிலானி, ஸ்டீபன் மில்லர், மற்றும் இதர பாசிசவாத அடாவடிக்காரர்கள்— வாழ்ந்து தழைத்தோங்கி வந்து இன்னொரு நாள் போராடுவார்கள்.
ஹிட்லர் 1923 பதவிக்கவிழ்ப்பு சதியில் தோல்வியடைந்ததில் இருந்து அரசியல்ரீதியில் ஆதாயமடைந்தார் என்பதை நினைவுக்கூர்வது மதிப்புடையதாக இருக்கும். அவரை சிறையில் அடைக்க தண்டனை விதிக்கப்பட்டார், அங்கே அவருக்கு வசதியான சிறைவாசம் வழங்கப்பட்டது, அங்கே அவரின் ஓய்வு நேரத்தை Mein Kampf நூல் எழுத பயன்படுத்தினார். 10 ஆண்டுகளுக்குள், அவர் ஜேர்மனியின் அதிபரானார்.
வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், அது தொழிலாள வர்க்கத்திற்கு வக்கிரமாக விரோதமான ஒரு வலதுசாரி ஆட்சியாக இருக்கும். குடியரசுக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பைடெனின் முயற்சி இடதை ஓரங்கட்டவும் மற்றும் தாக்கவும் நோக்கம் கொண்டுள்ளது. அது இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் ரஷ்ய விரோத சொல்லாடல் மற்றும் இனவாத மோதலை ஊக்குவிப்பது என ஜனநாயகக் கட்சி அரசியலின் இரண்டு தூண்களை ஒன்று சேர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி நிர்வாக அரசாங்கத்தின் கொள்கை அதிவலதின் கூடுதல் வளர்ச்சிக்குச் சிறந்த நிலைமைகளை உருவாக்கும்.
சூழ்ச்சிகளை மூடிமறைப்பதற்கான முயற்சி எதிர்க்கப்பட வேண்டும்! ட்ரம்பை உடனடியாக பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும் மற்றும் ஜனவரி 6 பாசிசவாத பதவிக்கவிழ்ப்பு சதிக்கு உதவிய மற்றும் துணை போன அனைவர் மீதும் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமான குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி உடனடியாகக் கோருகிறது. அவர்களின் மின்னஞ்சல்களும், சேதிகளும் மற்றும் தொடர்புகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்குவதிலும், திட்டமிடுவதிலும், அரசியல் மூடுமறைப்பை வழங்குவதிலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை உயர்த்துவதில், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) சிறிதும் ஜனநாயகக் கட்சி மீது நம்பிக்கை வைக்கவில்லை. மாறாக அது இரண்டு கட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசையும் அம்பலப்படுத்துகிறது.
இந்த சூழ்ச்சியை முழுமையாக இன்றைய வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் சக்திகளின் இயல்பைக் குறித்து அதன் நனவை உயர்த்துவதும், பாசிசவாத சூழ்ச்சிக்கும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க சக்திகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதும், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதும் அவசியமாகும்.