மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழாவை அமெரிக்க அரசியலில் ஒரு அடிப்படை திருப்புமுனையாக முன்வைக்க ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன.
பைடெனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்துவதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கிளர்ச்சியைத் தூண்டிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர், பாசிச ட்ரம்ப் வாஷிங்டனை விட்டு வெளியேறுவதைக் கண்ட அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடையே பெரும் நிம்மதி உணர்வு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் வெள்ளை மாளிகையை குடியரசுக் கட்சியினரிடமிருந்து ஜனநாயகக் கட்சியினருக்கு மாற்றுவதன் மூலம் இந்த அரசாங்கம் என்ன செய்யக்கூடும் அல்லது என்ன செய்ய முடியும் என்பது குறித்த நப்பாசைகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். முன்னோடியில்லாத சமூக, பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் ஆளும் வர்க்கத்தின் நலன்களால் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். எவ்வாறாயினும், பைடென் நிர்வாகத்தின் முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசியலின் யதார்த்தங்கள் மற்றும் அது தொடங்கும் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் குறித்து பொதுமக்களை மயக்கத்திற்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
நியூ ஜோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு உறுப்பினர் ஜெஸ்ஸி வெக்மான் புதன்கிழமை ஒரு ஆசிரியர் தலையங்க கட்டுரையில் “ட்ரம்ப் உடைத்ததை பைடென் குணப்படுத்த முடியும்” என்று அறிவித்தார். "அமெரிக்கா இப்போது தனது வாக்காளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் ஒரு ஒழுக்கமான, அனுபவம் வாய்ந்த பொது ஊழியரால் வழிநடத்தப்படுகிறது" என்று வெக்மான் அறிவித்தார்.
செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் கார்டியன் பத்திரிகையில் எழுதுகையில், பைடெனுக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் "வழக்கம் போல் செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும்" மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொற்றுநோய்க்கு பேரழிவு தரும் பிரதிபலிப்பில் இருந்து செல்வ சமத்துவமின்மை வரையிலான நாட்டை எதிர்கொள்ளும் ஒருதொடர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு வாய்ப்பைத் திறந்துவிட்டதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகை மற்றும் செனட் மற்றும் காங்கிரஸ் இரண்டையும் கட்டுப்படுத்துவதன் மூலம், ஜனநாயகக் கட்சியினருக்கு "அமெரிக்க மக்களுக்கு அவர்களின் வலி மற்றும் துன்பங்களுக்கு திறம்பட மற்றும் விரைவாக பதிலளிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட தைரியத்தை வரவழைக்க வேண்டும்" என்று சாண்டர்ஸ் கூறினார். செனட் வரவு-செலவுத் திட்டக் குழுவின் தலைவராகவுள்ள தான், பைடென் மற்றும் அவரது காங்கிரஸின் சகாக்கள் பின்பற்றுவதற்கு ஒரு சாதகமான முன்மாதிரியாக இருப்பார் என சாண்டர்ஸ் சபதம் செய்தார்.
அமெரிக்கா இதே மாதிரியான நிலைமையில் பலமுறை இருந்துள்ளது. 1993 ஆம் ஆண்டில், "நம்பிக்கைக்கான மனிதர்" பில் கிளிண்டன் பதவிக்கு வந்தபோது, அது வலதுசாரி ரீகன் / புஷ் சகாப்தத்தின் முடிவு என்று அறிவிக்கப்பட்டது. உள்நாட்டில் கிளிண்டன் "எங்களுக்குத் தெரிந்தபடி" சமூகநல உதவிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வெளிநாட்டில் அவர் பால்கனில் போர் தொடுத்து ஈராக் மீது குண்டுகளை வீசினார். "நம்பிக்கை மற்றும் மாற்றத்தின்" வேட்பாளரான ஒபாமா, ஜோர்ஜ் டபுள்யூ புஷ் தொடங்கிய போர்களை விரிவுபடுத்தி, அதேநேரத்தில் டிரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டிற்கு அனுப்பினார். அந்த நேரத்தில் செல்வத்தை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு பாரியவில் மாற்றுவதை மேற்பார்வையிட்டார்.
நிச்சயமாக இது முற்றிலும் அமெரிக்க நிகழ்வு அல்ல. கிரேக்கத்தில் சிரிசா, ஸ்பெயினில் பொடேமோஸ் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஜெரமி கோர்பின் மற்றும் தொழிற் கட்சி ஆகியவற்றின் மிக சமீபத்திய அனுபவங்களை மட்டுமே ஒருவர் கவனிக்க வேண்டும். இங்கிலாந்தில் கோர்பின் விஷயத்தில் பைடென் வாக்குறுதியளித்த எதையும் தாண்டி தீவிர மாற்றத்திற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு அல்லது தலைமைக்கு வந்தவுடன் அவை விரைவாக மறைந்துவிட்டன.
ட்ரம்பின் எல்லைச் சுவரைக் கட்டுவதை நிறுத்துவது, முஸ்லீம்-விரோத பயணத் தடையை மாற்றியமைத்தல் மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்ட பைடென் தனது பதவிக்கு வந்த முதல் நாட்களில் கையெழுத்திட்ட நிறைவேற்று ஆணைகள் போன்றவற்றை நீண்டகால மற்றும் மாற்றங்களைக் குறிக்கும் கொள்கைகளாக அதிகமாக பரபரப்பாக காட்டப்பட்டன. எவ்வாறாயினும், ஒருவர் அவற்றை அவதானித்தால், அவை மக்கள் தொகையின் பரந்த மக்களின் நிலைமைகளை அடிப்படையில் மாற்ற எதுவும் செய்யாத துண்டு துரும்புகளால் ஆனவையாக உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேற்றங்களுக்கான தேசிய தடைக்காலத்தை நீட்டிப்பு, பெரும்பாலான கடன்களுக்கு பொருந்தாததுடன் அல்லது செலுத்தப்படாத வாடகையிலிருந்தும் விடுவிக்கவில்லை. அதேபோல் மாணவர் கடன் வட்டி கொடுப்பனவுகளில் "இடைநிறுத்தம்" நீட்டிக்கப்படுவது இன்னும் பல்லாயிரக்கணக்கானோரில் கடன்களுக்காக செலுத்த வேண்டிய 1.7 டிரில்லியன் டாலர் கடனை சுமையை குறைக்க எதுவும் செய்யாது.
பைடெனின் தொற்றுநோய் திட்டம், ஒரு வரையறுக்கப்பட்ட முகமூடி அணியவேண்டும் என்ற ஆணையை உள்ளடக்கியுள்ளதுடன் மற்றும் முதல் 100 நாட்களில் 100 மில்லியன் மருந்து குப்பிகளை வழங்க விரைவான தடுப்பூசி விநியோகம் குறித்த உறுதிமொழிகளைக் கொண்டுள்ளது. பைடெனின் ஆலோசகர்கள் தங்கள் இலக்குகளை அடைந்தாலும் கூட, பெரும்பாலான மக்கள் ஒரு தடுப்பூசி பெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதை பைடென் நிராகரித்துள்ளதுடன், மேலும் அனைத்து மழலையர் காப்பு நிலையங்களில் இருந்து 8 ம் வகுப்பு வரையான பள்ளிகளும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றபோதும் கூறப்படுகின்றது.
பைடென் நிர்வாகம் ஏற்கனவே அற்பமான 1.9 டிரில்லியன் டாலர் தொற்றுநோய்களுக்கான நிவாரணங்களை மெதுவாக வழங்கி வருகிறது. காங்கிரஸின் மீது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாடு இருந்தபோதிலும், இந்த மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் ஆதரவும் இருக்க வேண்டும் என்று பைடென் வலியுறுத்தியுள்ளார். அதாவது பேச்சுவார்த்தைகளில் அது மேலும் குறைக்கப்படும். கடந்த வாரம் மேலும் 900,000 அமெரிக்கர்கள் வேலையின்மைக்காக தாக்கல் செய்த நிலையில், CBS News 1,400 டாலர்கள் உதவி காசோலைகளுக்கு மாதங்கள் ஆகக்கூடும் என்று அறிவித்தது. பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஜோர்ஜியா செனட் தேர்தல் போட்டியில் 2,000 டாலர்கள் உடனடியாக வழங்குவதாக பிரச்சாரம் செய்திருந்தபோதிலும், அது நிறைவேற்றப்பட்ட பின்னரே அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படும்.
நிர்வாகம் செய்யும் அனைத்தும்,
1) நிதிய தன்னலக்குழு மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவை ஆகவும்;
2) அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய புவிசார் மூலோபாய நலன்களின் தேவைகளின் கட்டமைப்பினுள்ளையே உள்ளடங்கியிருக்கும். தொற்றுநோய் தொடர்பாக, சந்தைகளை மகிழ்வித்த ட்ரம்ப் பின்பற்றும் கொலைகார “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையை அவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்று ஜனநாயகக் கட்சியினர் தெளிவுபடுத்துகின்றனர்.
வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில், பைடெனின் அமைச்சரவை வேட்பாளர் பதவிக்கான செனட் உறுதிப்படுத்தல் விசாரணைகள், அவர் பல விஷயங்களில் ட்ரம்ப்பின் தொடர்ச்சியாக இருப்பதோடு, ரஷ்யாவுடனான பதட்டங்களை மேலும் அதிகரிப்பதாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தின. ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்த முக்கிய பிரச்சினை ரஷ்யாவுடனான அமெரிக்க உறவுகள் பற்றியதாகும். லிபியா மீது போருக்குத் தள்ளிய, சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிய மற்றும் பரவலாக அமெரிக்க ஆளற்ற விமான கண்காணிப்பை விரிவுபடுத்திய ஒபாமா நிர்வாகத்தின் கும்பல்களால் பைடென் நிர்வாகம் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென் கரோலினா செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் விசாரணையின் கீழ், வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவுள்ள அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) ஈரானை "அரசு உதவியுடனான பயங்கரவாதம்" என்று அறிவித்து, இஸ்ரேல் ஒரு இனவாத நாடு என்ற கூற்றை நிராகரித்தார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாக விலக்குவதை எதிர்த்து மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடிய மத்திய அமெரிக்கர்களிடம் அமெரிக்காவிற்கு வரக்கூடாது எனக் கூறினார். புதன்கிழமை தேசிய புலனாய்வு இயக்குனராக விரைவாக பதவிக்கு உறுதிப்படுத்தப்பட்ட அவ்ரில் ஹைன்ஸ் (Avril Haines), ட்ரம்பினால் முன்னடுக்கப்பட்ட சீனா மீதான "ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை" ஆதரிப்பதாக கூறினார்.
பைடென் நிர்வாகத்தின் நோக்குநிலையான “ஐக்கியம்” என்பது, அதாவது ஒரு வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கொள்கையின் அடிப்படையில் குடியரசுக் கட்சியுடன் ஐக்கியமாகும்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக தேசிய அரசியலில் பணியாற்றிய பைடென் அரசின் ஒரு உருவாக்கமாகும். நாம் குறிப்பிட்டபடி, அவர் அந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறார். அவரது முக்கிய அக்கறை, குறிப்பாக குடியரசுக் கட்சியிலிருந்து அரசு எந்திரத்தை சீரமைப்பதும், தொழிலாள வர்க்கத்தை நோக்கிய தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தை நடைமுறைப்படுத்துவதும் ஆகும். உத்தியோகபூர்வ அரசியலின் கட்டமைப்பானது இடதுபுறம் அல்ல, வலதுபுறம் நகர்கிறது. அத்துடன் ட்ரம்ப் வளர்த்த பாசிச சக்திகளை மேலும் அரசின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பதுமாகும்.
நாட்டில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு வருடம் கழித்து, அமெரிக்க சமூகம் கோவிட்-19 தொற்றுநோயால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளதுடன், இது வேலையின்மை, பசி மற்றும் வீடற்ற தன்மை ஆகியவற்றில் கூர்மையான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. 418,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், 25 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்குட்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான சிறு வணிகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளபோது, அதே நேரத்தில் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை பங்குச் சந்தை மூலம் வானளாவிய அளவிற்கு உயர்த்துவதைக் கண்டிருக்கிறார்கள்.
வர்க்க மோதலின் ஒரு பாரிய வெடிப்புக்கான நிலைமைகள் முதிர்ச்சியடைகின்றன. இந்த வாரம் Bronx இலுள்ள Hunts Point Produce Market 1,400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மிகவும் பரந்த சமூக கோபத்தின் ஆரம்ப அறிகுறியாகும். இது முதலாளித்துவத்திற்கு எதிராக அபிவிருத்தியடைய வேண்டும்.
அதிகரித்து வரும் பொருளாதார சமூக சமத்துவமின்மையிலிருந்து தொற்றுநோய்க்கான பேரழிவு தரும் பிரதிபலிப்பு வரை, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையும் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நிதிய தன்னலக்குழுவின் பிடியை உடைக்காமல் தீர்க்க முடியாது. தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியுடனான தங்கள் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உயிர்களைக் காப்பாற்றவும், சமத்துவமின்மை மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு சுயாதீனமான, புரட்சிகர சோசலிச பாதையை உருவாக்க வேண்டும். வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்காக அல்லாது மனிதத் தேவையை பூர்த்தி செய்ய சமூகத்தை மறுசீரமைக்க முற்படுபவர்கள் அனைவரும் இன்று சோசலிச சமத்துவக் கட்சியில் சேர முடிவெடுக்க வேண்டும்.