மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பத்தாண்டுகளுக்கு முன்னர் இன்றையநாளில், எகிப்தில் தொடங்கிய பாரிய போராட்டங்கள் அதற்கு 18 நாட்களுக்குப் பின்னர் நீண்டகால சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கைப் பதவி விலக இட்டுச் சென்றதுடன், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது.
எகிப்திய புரட்சியானது தொழிலாள வர்க்கம் மத்திய பங்கு வகித்த ஒரு சக்தி வாய்ந்த புரட்சிகர மேலெழுச்சியாக இருந்தது. ஜனவரி 25, 2011 இல், பத்தாயிரக் கணக்கானவர்கள், சூயஸ், போர்ட் சய்த் மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்கள் உள்ளடங்கலாக அந்நாட்டு நகரங்களின் வீதிகளில் இறங்கினர். அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் "ஆக்ரோஷ வெள்ளி" (Friday of rage) என்றழைக்கப்பட்டதில், எண்ணிக்கையில் அதிகரித்து கொண்டிருந்த அந்த மக்கள், உள்நாட்டு போருக்கு நிகராக ஆகிக் கொண்டிருந்த வீதிப் போராட்டங்களில் அந்த ஆட்சியின் இழிபெயரெடுத்த பாதுகாப்புப்படைகளைத் தோற்கடித்தனர்.
அதற்கடுத்தடுத்து வந்த நாட்களில் எகிப்து எங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கெய்ரோ நகரின் மையப்பகுதிக்கு வந்திருந்த நூறாயிரக் கணக்கானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தஹ்ரீர் சதுக்கம் அந்த மேலெழுச்சியின் சர்வதேச அடையாளம் உருவானது என்றாலும், இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தான் முபாரக்கிற்கு தீர்க்கமான அடியை வழங்கியது. பெப்ரவரி 7-8 இல், அந்நாடெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புகளின் ஓர் அலை மேலெழுந்ததுடன், பெப்ரவரி 11 இல் முபாரக் பதவி இறங்கியதற்குப் பின்னரும் தொடர்ந்து அது அதிகரித்தது.
அந்த புரட்சியின் உச்சக்கட்டத்தில், அங்கே நாளொன்றுக்கு 40 இல் இருந்து 60 வேலைநிறுத்தங்கள் வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டன. அதற்கு முந்தைய ஓராண்டில் நடந்த வேலைநிறுத்தங்கள் அளவுக்கு பெப்ரவரி 2011 இல் மட்டுமே அத்தனை வேலைநிறுத்தங்கள் நடந்திருந்தன. எகிப்தின் முக்கிய தொழில்துறை மையங்களில் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்தனர், சூயஸ் கால்வாய் தொழிலாளர்கள், சூயஸ் மற்றும் போர்ட் செய்த் இன் எஃகு உருக்காலை தொழிலாளர்களும் மற்றும் நைல் டெல்டா நகரமான மஹல்லா அல்-குப்ராவில் எகிப்தின் மிகப் பெரிய தொழில்துறை வளாகமான கஜ்ல் அல்-மஹல்லாவில் 27,000 ஜவுளித்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் இதில் உள்ளடங்கும்.
ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தின் தொடக்கமாக, அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் துனிசியாவின் நீண்டகால சர்வாதிகாரி ஜைன் அல்-அபிடைன் பென் அலியைப் பாரிய போராட்டங்கள் பதவியிலிருந்து கீழிறக்கி இருந்த நிலையில், எகிப்து மற்றும் துனிசியாவின் அபிவிருத்திகளை உலக சோசலிச வலைத் தளம் மதிப்பீடு செய்தது. “எகிப்திய புரட்சி" என்ற ஒரு முன்னோக்கில், WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
1991 இல் சோவியத் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வந்த முதலாளித்துவ-சார்பு தற்பெருமைவாதம், எகிப்திய புரட்சியால் ஒரு பலமான அடியைச் சந்தித்து வருகிறது. நவீன உலகில் வர்க்க போராட்டம், சோசலிசம், மற்றும் மார்க்சிசம் பொருத்தமற்றவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. "இதுநாள் வரையிலான சமூகங்களின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறே ஆகும்" (கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்) என்பதில் உள்ளபடி “வரலாறு" என்பது முடிந்துவிட்டிருந்தது எனக் குறிப்பிட்டது. இதுவரையில், அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் முன்கூட்டியே "வர்ணம்-தீட்டப்பட்டு", அரசியல்ரீதியாக எழுதப்பட்ட மற்றும் சமூகத்தின் ஏராளமான முதலாளித்துவ-சார்பு பிரிவுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டவை மட்டுமே ஊடகங்களால் புரட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
இத்தகைய சுயதிருப்தி கொண்ட மற்றும் பிற்போக்கான நிலைமை தான் துனிசியா மற்றும் எகிப்தில் குமுறி வெடித்துள்ளது. பழிதீர்ப்பதற்கு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. கெய்ரோ மற்றும் எகிப்து முழுவதும் தற்போது கட்டவிழ்ந்துள்ளது என்னவென்றால், அது புரட்சியாகும் - ஒரு நிஜமான புரட்சியாகும். இவ்விஷயத்தில் முதன்மை நிபுணரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
ஆனால் பத்தாண்டுகளுக்குப் பின்னர், எகிப்தில் அதிகாரத்தில் இருப்பது தொழிலாள வர்க்கமல்ல, மாறாக ஒரு புதிய பாரிய மேலெழுச்சி குறித்த பீதியில் வாழும் மற்றும் சமூக எதிர்ப்பின் ஒவ்வொரு அறிகுறியையும் ஒடுக்கும் இரத்தத்தில் ஊறிய ஓர் இராணுவ சர்வாதிகாரமாகும். ஜனவரி 22 இல், எகிப்திய நாடாளுமன்றத்தில், முபாரக்கின் முன்னாள் தளபதியும் இப்போதைய சர்வாதிகாரியுமான அப்தெல் பதாஹ் அல்-சிசியின் முறையீட்டின்படி அவசரகால நெருக்கடி நிலை இன்னும் மூன்றாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. 2013 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹம்மத் முர்சிக்கு எதிரான அவரின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து, அந்த ஆட்சியின் சித்திரவதை கூடங்களுக்குள் 60,000 க்கும் அதிகமான அரசியல் கைதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொற்றின் பயங்கர விளைவுகளாலும் முதலாளித்துவவாதிகளின் அதிகரித்தளவிலான சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களாலும் எரியூட்டப்பட்டு உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட மேலெழுச்சிக்கு மத்தியில், எகிப்திய அனுபவங்களில் இருந்து அரசியல் படிப்பினைகளை எடுப்பது அவசியமாகும். எகிப்தில் எவ்வாறு எதிர்புரட்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்தது, இது வரவிருக்கும் வர்க்க போராட்டங்களுக்கு என்ன அரசியல் பணிகளை முன்னிறுத்துகின்றன? இத்தகைய முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான திறவுகோல், சம்பவங்களைக் குறித்தும் அரசியல் போக்குகள் மற்றும் வேலைத்திட்டங்களின் பாத்திரம் மீதும் ஒரு தீர்க்கமான ஆய்வாகும். எகிப்திய புரட்சியின் பிரதான பிரச்சினையே ஒரு புரட்சிகர தலைமை இல்லாததாகும்.
முபாரக் தூக்கியெறியப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, டேவிட் நோர்த் மற்றொரு முன்னோக்கில் பின்வருமாறு எச்சரித்தார்:
எகிப்திய தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், ஒரு வயதான சர்வாதிகாரியின் கரங்களில் இருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கு அத்தியாவசியமான சமூக சக்தியை வழங்கி விட்ட பின்னரும், சில தலைமை ஆட்களின் பெயர்களும் முகங்களும் மாறுவதைத் தவிர வேறு எந்த அரசியல் முக்கியத்துவமான மாற்றமும் இருக்காது. அரசியல் அதிகாரமும் பொருளாதார வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடும் எகிப்திய முதலாளிகளின் கைகளில் தான் தொடரும், அதற்கு இராணுவமும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருக்கும் அவர்களின் ஏகாதிபத்திய மேலாளர்களும் ஆதரவளிப்பார்கள். ஜனநாயகம் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான வாக்குறுதிகள் எல்லாம் முதல் சந்தர்ப்பத்திலேயே மறுதலிக்கப்படும், அத்துடன் ஒரு மிருகத்தனமான அடக்குமுறையின் ஒரு புதிய ஆட்சி ஸ்தாபிக்கப்படும்.
இந்த அபாயங்கள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. ஜனநாயகத்திற்கான போராட்டமும் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்கான போராட்டமும், லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் வலியுறுத்தியதைப் போல, ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வெல்வதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையே இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த புரட்சிகர போராட்ட வரலாறும் நிரூபிக்கிறது.
எகிப்திய புரட்சியின் போக்கிலேயே, இந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டது. முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளும் கட்சிகளும் மற்றும் அவர்களின் ஸ்ராலினிச மற்றும் போலி-இடதுசாரி தொங்குதசைகளும் அவற்றின் இன்றியமையா எதிர்புரட்சிகர குணாம்சத்தை எடுத்துக்காட்டின. அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் ஒத்துழைத்ததுடன் எகிப்திய முதலாளித்துவம் மற்றும் அதன் அமைப்புகளைப் பாதுகாத்தன. இது முபாரக்கின் கீழ் செய்யப்பட்டிருந்ததைப் போலவே இப்போதும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவத்தின் (Muslim Brotherhood) விசயத்தில் எந்தளவுக்கு உண்மையாக உள்ளதோ, அதேயளவுக்கு நாசரிசவாதிகள் (Nasserist) அல்லது "தாராளவாத" கட்சிகள் விசயத்திலும் உண்மையாக உள்ளது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த முஸ்லீம் சகோதரத்துவம், இராணுவத்துடன் கூட்டு சதியில் ஈடுபட்டு, வேலைநிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் தடை விதித்ததுடன், லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய தலையீடுகளை ஆதரித்தது.
ஒருவரால் சில முக்கியமான சான்றுகளைக் குறிப்பிட முடியும். மாற்றத்திற்கான தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மொஹம்மத் எல் பராதி சிசியின் இராணுவ ஆட்சிக்குழுவில் முதல் துணை ஜனாதிபதியாக ஆனார். “சுதந்திர" தொழிற்சங்க தலைவர் கமால் அபு ஈடா தொழிலாளர் துறை அமைச்சரானார். நாசரிசவாத எகிப்திய மக்கள் போக்கின் தலைவர் ஹம்தீன் சபாஹி அந்த இராணுவ ஆட்சிக்குழுவின் படுகொலைகளைப் பகிரங்கமாக பாதுகாத்தார். ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்த்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கலாக, குறைந்தப்பட்சம் 900 எதிர்ப்பாளர்களை இராணுவம் படுகொலை செய்யபோது, கெய்ரோவில் ரபா எல்-அதாவ்யா சதுக்கத்தில் முர்சி ஆதரவாளர்களால் போராட்டங்கள் உடைக்கப்பட்ட அதேவேளையில், சபாஹி தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், “நாங்கள் மக்களுடனும், இராணுவம் மற்றும் பொலிஸூடனும் கை கோர்த்து நிற்போம்,” என்று அறிவித்தார்.
எவ்வாறிருப்பினும், பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி, மற்றும் ஏனையவற்றுடனான நெருக்கமான தொடர்புடன் எகிப்தின் ஒரு போலி-இடது குழு புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) என்றழைக்கப்பட்ட அமைப்பே, அந்த எதிர்புரட்சிக்குப் பாதை வகுத்த ஒரு குறிப்பிட்ட ஊழல் போக்காக இருந்தது. புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் தொழிலாளர்களால் சுயாதீனமான பாத்திரம் வகிக்க முடியாது என்றும் ஆனால் அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட ஏதோவொரு பூர்ஷூவா கன்னையிடம் அவர்கள் தங்களை அடிபணிய செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர், புரட்சிகர சோசலிஸ்டுகள், முபாரக்கின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரம் பெற்றிருந்த இராணுவத்தின் மீதான பிரமைகளுக்கு எரியூட்டினர். பிரிட்டனின் கார்டியனில் எழுதுகையில், புரட்சிகர சோசலிசவாதிகள் அமைப்பின் நடவடிக்கையாளர் ஹோஸ்சம் அல்-ஹமாலாவி குறிப்பிடுகையில், “இளம் அதிகாரிகளும் சிப்பாய்களுமே" “நமது கூட்டாளிகள்" என்றதுடன், ஆயுதப்படை "முடிவாக ஒரு 'மக்கள்' அரசாங்கத்திற்கு அதிகார பரிமாற்றம் செய்யும்" என்று அறிவித்தார்.
போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களையும், “இரண்டாம் புரட்சிக்கு" மேலெழும்பிய அழைப்புகளையும் ஆயுதப்படை ஒடுக்கிய போது, புரட்சிகர சோசலிஸ்டுகள் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கான அவர்களின் முந்தைய ஆதரவை மீண்டும் புதுப்பித்தனர். கட்சி அறிக்கைகளில், அவர்கள் இஸ்லாமியவாதிகளை "புரட்சியின் வலதுசாரி" என்று குறிப்பிட்டதுடன், 2021 ஜனாதிபதி தேர்தலில் முர்சிக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் முர்சியின் வெற்றியை "புரட்சியின் வெற்றியாகவும்" மற்றும் "எதிர்புரட்சியை பின்னுக்குத் தள்ளுவதில் மாபெரும் சாதனையாகவும்" அதை கொண்டாடினர்.
முர்சியின் தொழிலாளர்-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளுக்கு எதிராக புதிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்தபோது, புரட்சிகர சோசலிஸ்டுகள் தங்களைத்தாங்களே மீண்டும் இராணுவத்தை நோக்கி நோக்குநிலைப்படுத்திக் கொண்டனர். அவர்கள், எல் பரடி, எகிப்திய பல கோடி பில்லியனர் Naguib Sawiris மற்றும் முபாரக் ஆட்சியின் முன்னாள் அதிகாரிகள் ஆதரித்து நிதி வழங்கிய தமரோட் கூட்டணியை (Tamarod Alliance) ஆதரித்தார்கள், அது முர்சியைத் தூக்கியெறிய இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது. புரட்சிகர சோசலிஸ்டுகள் மே 19, 2013 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தமரோட்டை "புரட்சியை முழுமைப்படுத்துவதற்கான பாதை" என்று புகழ்ந்ததுடன், “இந்த பிரச்சாரத்தில் முழுமையாக பங்கெடுப்பதற்கான உத்தேசத்தையும்" அறிவித்தனர்.
ஜூலை 3 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு புரட்சிகர சோசலிஸ்டுகளின் விடையிறுப்பு முற்றிலும் அதன் எதிர்புரட்சிகர தன்மையால் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை "இரண்டாவது புரட்சியாக" கொண்டாடியதுடன், அந்த “புரட்சியை பாதுகாக்க" போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இராணுவம் முபாரக் ஆட்சியின் ஒடுக்குமுறை எந்திரத்தை மீட்டமைத்த போது, புரட்சிகர சோசலிஸ்டுகள் ஜனநாயக மற்றும் சமூக சீர்திருத்தங்களைப் பெற இராணுவ அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க முடியும் என்று மீண்டுமொருமுறை கட்டுக்கதைகளைப் பரப்பினார்கள். அவர்கள் ஜூலை 11 அறிக்கையில், “மில்லியன் கணக்கான வறிய எகிப்தியர்களின் நலனுக்கான சமூக நீதியை எட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க" புதிய அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க அழைப்புவிடுத்தனர்.
அதற்குப் பின்னர் இருந்து, அவர்கள் தங்களின் பாதையை மூடிமறைப்பதிலேயே பிரதானமாக அக்கறை கொண்டுள்ளனர். சோசலிச தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான Socialist Worker இல் பிரசுரிக்கப்பட்ட புரட்சியின் நினைவுதினக் கட்டுரையில் ஹமாலாவி (Hamalawy) அவரே இந்த எதிர்புரட்சி சதியைக் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்: “இராணுவம் மதசார்பற்ற எதிர்ப்புடன் (இடதுசாரிகள், அரபு தேசியவாதிகள், தாராளவாதிகள்) இரகசிய உடன்படிக்கையை எட்டியிருந்தது, ஜூலை 2013 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதன் ஆதரவையும் பெற்றிருந்தது. என்ன பின்தொடர்ந்து நடந்தது என்றால் எகிப்திய நவீன வரலாற்றில், எகிப்திய இடதுகளே உற்சாகப்படுத்திய, மிகப்பெரிய படுகொலைகள் நடந்தன.”
சிசியின் படுகொலைகளை உற்சாகப்படுத்திய இத்தகைய "எகிப்திய இடதுகள்" மத்தியில் அவரின் சொந்த அமைப்பும் இருந்தது என்ற உண்மையை ஹமாலாவி வேண்டுமென்றே மூடிமறைத்துவிட்டார்.
பாரிய போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதன் அவசியமே எகிப்திய புரட்சியின் முக்கிய படிப்பினையாகும். இந்த வழியில் மட்டுமே முதலாளித்துவ மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவ தலையாட்டிகளிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க முடியும், மேலும் பெருந்திரளான மக்கள் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் பிரிவுகளும் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி வழிநடத்திய கருத்துருக்களால் வழிநடத்தப்படுகின்றன. எகிப்திய புரட்சிக்கு ஓராண்டுக்குப் பின்னர், 2012 இல் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP-US) இரண்டாவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நாம் பின்வருமாறு எழுதினோம்:
புரட்சிகர போராட்டங்களின் தவிர்க்கமுடியாத தன்மையை போதுமானளவுக்கு அனுமானித்து பின்னர் அவை கட்டவிழும் வரை காத்திருக்க முடியாது. அதுபோன்ற செயல்படா தன்மைக்கு மார்க்சிசத்துடன் எந்த தொடர்பும் கிடையாது, அது தத்துவார்த்தரீதியில் வழிநடத்தப்படும் அறிகை (cognition) மற்றும் புரட்சிகர நடைமுறையை ஒன்றுபடுத்துவதன் மீது தங்கியுள்ளது. அனைத்திற்கும் மேலாக, முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் மொத்தமும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியதைப் போல, சோசலிச புரட்சியின் வெற்றிக்கு ஒரு புரட்சிகரக் கட்சியின் பிரசன்னம் அவசியப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, பாரிய போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கத்திற்குள்—அனைத்திற்கும் மேலாக, அதன் மிகவும் முன்னேறிய கூறுபாடுகளுக்குள், ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்ய அதனால் செய்யக்கூடிய அனைத்தையும் மேற்கொண்டு ஆக வேண்டும்.
உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட மேலெழுச்சிக்கு மத்தியில், இது இப்போது புதுப்பிக்கப்பட்ட ஆற்றலோடு பின்தொடரப்பட வேண்டும். இதுதான் ICFI மற்றும் அதன் பிரிவுகள் மற்றும் அதன் மீது அனுதாபம் கொண்ட குழுக்களின் பணியாகும்.