இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தினசரி ஊதியத்தை 1,000 ரூபா வரை அதிகரிக்க கோரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) பெப்பிரவரி 5 அன்று தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மலையக மக்கள் முன்னணி உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளன.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், தங்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் மோசமடைந்து வரும் நிலையில், வாழ்க்கைச் செலவுக்கு பொருத்தமான ஊதியம், வேலைகள் மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராட வேண்டிய அவசரத் தேவை இருப்பதால், பல தோட்டத் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற வாய்ப்பு உள்ளது.
தொழிலாளர்கள் இந்த பிரச்சினையை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும்: இராஜபக்ஷ ஆட்சியின் நேரடி பங்காளியான இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள், ஒழுக்கமான வாழ்க்கைக்கு போதிய ஊதியத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்குவதை தடுக்கவும், அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சமரசத்திற்கு அவர்களை கீழ்ப்படுத்தவுமே இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஜனவரி 31 அன்று, வேலை நிறுத்தம் பற்றிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வைத்த, இ.தொ.கா. தலைவரும், தோட்ட உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமன் பின்வருமாறு கூறினார்: "பெருந்தோட்டக் கம்பனிகள் 725 ரூபா அடிப்படை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் உட்பட 1,000 ரூபா செலுத்த ஒப்புக் கொண்டுள்ளன. எனினும், கம்பனிகள் மேலதிகமாக இரண்டு கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்றும், கூட்டு ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை."
ஒரு நாள் வேலைநிறுத்தமானது 1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை வெல்வதற்காக அழைக்கப்படவில்லை. மேற்கண்ட நிபந்தனைகளை எதிர்ப்பதன் பெயரில், தொழிலாளர்களை மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைத்து, அவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக கோபத்தை கலைத்து, அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் ஏற்படுத்திக்கொள்ள இருக்கும் உடன்படிக்கையை திணிப்பதற்கே இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொண்டமான் குறிப்பிட்டுள்ள கம்பனிகளின் சம்பள சூத்திரம், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவின் வேண்டுகோளின் பேரில், அதாவது அவரது ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டது என்று, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2019 தேர்தலின் போதும், அதற்குப் பின்னரும், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை சுரண்டிக்கொள்ளும் நோக்கிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்தன. தோட்ட கம்பனிகளின் மேற்கண்ட அறிக்கையானது, தங்களால் முன்மொழியப்பட்ட உற்பத்தி அதிகரிப்புடன் முடிச்சிப்போடப்பட்டுள்ள ஊதிய சூத்திரத்தை சுமத்துவதில் அரசாங்கம் உடந்தையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் இத்தகைய உடன்படிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். அற்பதொகை ஊதியத்துக்கு தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதற்கான சதியானது அரசாங்கம், கம்பனிகள் மற்றும் இ.தொ.கா. உட்பட அனைத்து தொழிற்சங்கங்களாலும் கூட்டாக தீட்டப்படுகின்றது.
மாறாக, வாழ்க்கைச் செலவுக்கு போதுமான ஊதியம் மற்றும் ஏனைய சமூக உரிமைகளை வெல்வதற்கு, தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தும் பேதங்களை முறித்துக்கொண்டு, அனைத்துத் தொழிலாளர்களும் பங்குபற்றும் பொது வேலைநிறுத்தம் ஒன்றை ஏனைய தொழிலாளர்களின் ஆதரவோடு ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி ஊதியத்திற்கு பதிலாக, இது வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற, குறைந்தபட்சம் 50,000 ரூபாயாக இருக்கும் நிரந்தர மற்றும் முழு ஓய்வூதியம் கொண்ட மாத ஊதியத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் போராட வேண்டும்.
இராஜபக்சே அரசாங்கம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளின் முண்டுகோலாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தங்களது ஜனநாயக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு தோட்டத்திலும் அமைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்ய முடியும்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, தொழிலாளர்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதால், வேலைநிறுத்தத்தை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்திக்கொண்டதாக தொண்டமான் அங்கு கூறினார். அது ஒரு பொய் ஆகும். தொழிலாளர்களின் நீடித்த போராட்டமானது கம்பனிகளின் இலாப நலன்களைப் பாதுகாக்கின்ற அரசாங்கத்துடன் நேரடியாக மோதிக்கொள்ளும் என்பதை அவர் அறிவார். ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த தொண்டமன், இது அரசாங்கத்துக்கு விரோதமான வேலைநிறுத்தம் அல்ல என்றார்.
2015 இல், தொழிற்சங்கங்கள் 1,000 ரூபாய் ஊதியக் கோரிக்கையை முன்வைத்தமையானது, தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள உயர்ந்த சம்பளத்துக்கான கோரிக்கையை பிசுபிசுத்துப் போகச் செய்வதற்கே அன்றி,. அதற்காக போராடுவதற்கு அல்ல. 2015 முதலே தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்திலும் இது நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த கோரிக்கையின் அடிப்படையில், 2018 டிசம்பர் மாதம் 11 நாட்கள், 200,000 தொழிலாளர்கள் பங்குபற்றிய போராட்டம், இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) உட்பட அனைத்து பெருந்தோட்ட தொழிற்சங்கங்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்கள், இப்போது தினசரி 1,000 ரூபாய் ஊதியத்தைப் பெற்றாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அதே போல் மின்சாரம் மற்றும் போக்குவரத்து உட்பட சேவைக் கட்டணங்கள் அதிகரித்த காரணத்தால், வாழ்க்கைச் செலவுகளில் ஏற்பட்டுள்ள வேகமான அதிகரித்துள்ளதினால் அந்த தொகை, எந்த வகையிலும் போதுமானது அல்ல.
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல், இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளித்துவ எஜமான்களும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், தொழிலாளர்களை பலாத்காரமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தும் இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளிகளும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சமூக நலன்களை வெட்டித் தள்ளுவது மற்றும் வேலை துரிதப்படுத்தும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளன. கொவிட்-19 தொற்றுநோயால் ஆழமாக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்காக கொடூரமான "புதிய வழமை" என்ற கொள்கையின் கீழ், அனைத்து நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் பின்பற்றும் கொள்கை இதுவே ஆகும்.
தொழிற்சங்கங்கள் குழி பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் தலை தூக்கி வருகின்றன. மஸ்கெலியா மொக்கா தோட்டத்தின் தொழிலாளர்கள், டிசம்பர் 25 முதல் சம்பள வெட்டு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிராக நான்கு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அதே நேரம், மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தின் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழில் மற்றும் ஓய்வூதியத்தை காத்துக்கொள்வதற்காக டிசம்பர் 28 முதல் ஜனவரி 31 வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் இந்த போராட்டங்கள், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே வளர்ந்து வருகின்ற போதிலும், தொழிற்சங்கங்களால் அந்த போராட்டங்களை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுக்க முடிகின்றது. இதற்கு காரணம், அதற்கு எதிராகப் போராடும் மாற்று அமைப்புகளோ வேலைத் திட்டங்களோ தொழிலாளர்களுக்கு இல்லாமையே ஆகும். இதனாலேயே, தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம், தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.
முன்னெப்போதையும் விட, முதலாளித்துவ ஆட்சியையும் இலாப அமைப்பையும் ஒழிக்கும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி தங்கள் உரிமைகளை வெல்ல முடியாது என்பது, இன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நிரூபனமாகியுள்ளது. அதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும். இலங்கையில், இது ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டமாகும்.
இந்த முன்னோக்கிற்காக போராடும் சோசலிச சமத்துவக் கட்சியை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.