பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிஸ்டுகள் நவால்னியை பிரபல்யப்படுத்தி தங்கள் போக்குகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) சர்வதேச அரங்கில் அது பின்பற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்கான மற்றொரு எடுத்துக்காட்டை வழங்கியுள்ளது. ரஷ்யாவில் எதிர்க்கட்சி எதிர்ப்புக்களை மகிமைப்படுத்தும் ஒரு அறிக்கையை ஜனவரி 24 அன்று அது வெளியிட்டது, இருப்பினும் அவற்றின் தலைவர் அலெக்ஸி நவால்னியின் தீவிர-வலதுசாரி தன்மையைப் பற்றி அது எதுவும் கூறவில்லை, அதன் பின்னர் ஒரே வாரத்தில் CPP இன் தலைமை தகவல் அதிகாரி இந்த அறிக்கையின் ஒரு “திருத்தப்பட்ட பதிவை” வெளியிட்டார். இது, “ரஷ்ய எதிர்ப்பாளர் நவால்னியின் தன்மையை இன்னும் தெளிவாக வரையறுக்கவும், ரஷ்ய கம்யூனிச சக்திகளுக்கு எதிராக சவால்களை முன்வைக்கவும்” பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இடைக்காலத்தில் ஜனவரி 31 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரை, மேற்கத்திய சார்பு நவால்னிக்கு CPP இன் மறைமுக ஆதரவு இருப்பது குறித்தும், பிலிப்பைன்ஸில் அதன் சூழ்ச்சிகளுடனான தொடர்புகள் குறித்தும் கவனத்தை ஈர்த்தது பற்றி உண்மையில் குறிப்பிடவில்லை. CPP “நவால்னியை துல்லியமாக ஆதரிக்கிறது, ஏனென்றால், துணை ஜனாதிபதி லெனி ரோப்ரெடோ மற்றும் அவரது தாராளவாத கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிக நெருக்கமாக ஒத்துப்போகும் ஆளும் வர்க்க பிரிவுகளுடன் அது அணிவகுத்து நிற்கிறது” என்று WSWS குறிப்பிட்டது.

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்டுகள் தலைகீழ் திருப்பத்தை எடுத்தனர். நவால்னி, “ரஷ்யாவின் சில மிகப்பெரிய தன்னலக்குழுக்களின் ஆதரவையும், அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தின் வெளிப்படையான ஒப்புதலையும்” உண்மையில் அனுபவிக்கிறார் என்பதை “திருத்தப்பட்ட பதிவு” கண்டுபிடித்தது. அவர், “உண்மையில், புதிய தாராளமயக் கருத்துக்களை ஆதரிப்பவராவார்…. [மற்றும்] ரஷ்ய தேசியவாதத்தையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத கருத்துக்களையும் ஊக்குவித்துள்ளார்.” அதே நேரத்தில், ஜனவரி 24 ஆம் தேதி நவால்னி சார்பு ஆர்ப்பாட்டங்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றும்படி பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தியது திருத்தப்பட்டது.

அலெக்ஸி நவால்னி [Wikimedia Commons]

ஒரு அரசியல் கட்சி கொள்கை ரீதியாக திருத்தம் செய்வது நிச்சயமாக அனுமதிக்கத்தக்கது. ஆனால், கொள்கை ரீதியான அரசியல் CPP க்கும் ஸ்ராலினிசத்திற்கும் பெரும்பாலும் முற்றிலும் அந்நியப்பட்டது. அவர்களின் வழிமுறைகள், சேறடிப்பது, மிரட்டிப் பணியவைக்க தவறும்பட்சத்தில், சரீர ரீதியான வன்முறையை கையில் எடுப்பது. பிலிப்பைன்ஸ் பாசிச ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவை நியமிக்க CPP அளித்த ஆதரவை மிக நுணுக்கமாக ஆவணப்படுத்தியதற்காக கல்வியாளர் ஜோசப் ஸ்காலிஸை அவர்கள் படுகொலை செய்ய மிரட்டிய சமீபத்திய நிகழ்வு அவர்களது குணாம்சத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாவல்னியுடன் கூட CPP யும் எவ்வாறு பாதிப்படைகிறது என்பது பற்றி ஆய்வுசெய்வது ஒருபுறம் இருக்க எந்தவொரு விளக்கமும் வழங்கப்படவில்லை. மாறாக, பழைய பாடநூல்களை எரித்து அவற்றை மீண்டும் எழுதும் பழைய ஸ்ராலினிச முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும், மின்னணு தொலைதொடர்பு வடிவங்களுடன் இது மிகவும் எளிதாகவுள்ளது, அதாவது விசைப்பலகையில் ஒரு அசைவுடன் அசல் அறிக்கை மறைந்துவிடுகிறது. அது இப்போது CPP இன் வலைத் தளத்தில் ஆழமாக புதைத்து வைக்கப்பட்டுள்ளது!

எவ்வாறாயினும், மிக முக்கியமாக, அறிக்கையின் புதிய “திருத்தப்பட்ட பதிப்பு” அரசியல் ரீதியாக அசல் போலவே வெளியாகியுள்ளது. “ரஷ்ய மக்கள்… புட்டின் தலைமையின் கீழ் ரஷ்ய அதிகாரத்துவத்தின் ஊழல் நடத்தையால் சோர்ந்து போயிருக்கின்றனர்” என்பதே நவால்னியின் அசல் புலம்பலாகும். ரஷ்யாவில் தொழிலாள வர்க்க அதிருப்தி, மோசமடைந்து வரும் சமூக நிலைமைகள் மற்றும் பொலிஸ்-அரசு அடக்குமுறையால் உந்தப்படுவதாக புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும், “புட்டின் எதிர்ப்பு ரஷ்ய முதலாளித்துவம் நவால்னியைச் சுற்றி ரஷ்ய மக்களை அணிதிரட்ட விரும்புகிறது” என்பதையும் இது கண்டறிந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், CPP இன் உள்நோக்கங்கள், “தொழிலாள வர்க்கம் மற்றும் மக்களுக்கு அரசியல் தலைமையை வழங்க புரட்சிகர பாட்டாளி வர்க்க சக்திகளுக்கு சவால் விடுகிறது.” கம்யூனிஸ்டுகள், “புட்டின் தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டினாலோ, அல்லது முதலாளித்துவத்தின் மற்றொரு பிரதிநிதியால் அவர் பிரதியீடு செய்யப்பட்டாலோ அவர்களது நிலைமைகள் மேலும் மோசமடையும் கட்டாயத்திற்குள்ளாகும் என்ற உண்மையை தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்ள அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், கம்யூனிச சக்திகள் தங்கள் சொந்த அரசியல் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், சோசலிசப் புரட்சியின் பாதையில் மீண்டும் அணிவகுக்கச் செய்ய ரஷ்ய தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதில் தங்களது திறமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்” என்றும் இது தெரிவிக்கிறது.

இந்த ஆர்ப்பரிப்பு, நவால்னியுடனான முந்தைய களியாட்டத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பும் பு-பு-புரட்சிகர சாளர அலங்காரமே தவிர வேறில்லை. சோசலிசத்திற்காக போராட CPP மேற்கூறிய எதையும் செய்யவில்லை, மாறாக “முற்போக்கு முதலாளித்துவத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிலிப்பைன்ஸில் குறைந்தபட்சம் ஒரு முதலாளித்துவ அரசியல் பிரமுகரை அடுத்து மற்றொருவரை ஊக்குவிக்கும் சந்தர்ப்பவாதத்தில் தான் இது ஈடுபட்டுள்ளது. ரோப்ரெடோ மற்றும் அவரது தாராளவாத கட்சியுடன் கூட்டு ஏற்படுத்திக் கொள்ள முனைகையில், மிக சமீபத்தில் CPP டுரேற்றவை ஒரு பாசிச சர்வாதிகாரி என்று கண்டிக்கிறது. பேரழிவு தரும் ஸ்ராலினிச இரண்டு கட்ட தத்துவத்தின் ஆதரவாளராக, குறிப்பாக CPP, பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் சோசலிசப் புரட்சியின் பாதையில் அணிவகுக்கக் கூடாது, மாறாக முற்போக்கான முதலாளித்துவத்திற்கு அவர்கள் தங்களை அடிபணியச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. CPP சோசலிசத்திற்கான போராட்டத்தை காலவரையற்ற எதிர்காலத்திற்கு தள்ளிப்போடுகிறது.

ரஷ்ய தொழிலாளர்களைப் பொறுத்தவரை, “கம்யூனிஸ்டுகள்” என்று துல்லியமாக CPP எவரை குறிப்பிடுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். CPP யும் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சிசனும், ஜோசப் ஸ்ராலின் மற்றும் அவரது சீன சகாவான மாவோ சேதுங் ஆகியோரின் பக்தர்களாவர், இவர்கள் இருவருமே “தனியொரு நாட்டில் சோசலிசம்,” என்ற பிற்போக்குத்தனமான தேசியவாத சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவர்கள், மேலும் உண்மையான கம்யூனிஸ்டுகளை, எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச சர்வதேசியவாதத்தை கடைப்பிடித்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளை இவர்கள் துன்புறுத்தினர்.

1991 ஆம் ஆண்டில் மாஸ்கோ ஸ்ராலினிச ஆட்சி சோவியத் ஒன்றியத்தை கலைத்த பின்னர், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி சிதைந்து போனது. பொதுவாக அனைத்து துண்டுதுணுக்குகளும், முதலாளித்துவ சார்பு திட்டநிரலான ரஷ்ய தேசியவாதம் மற்றும் இனவெறி, மற்றும் ரஷ்ய முதலாளித்துவத்தின் வேறுபட்ட கன்னைகளுடனான இழிவான சூழ்ச்சிகளின் —பிலிப்பைன்ஸில் பெரும்பாலும் CPP செய்வதைப் போல— ஊக்குவிப்பாளர்களாக உள்ளன. உதாரணமாக, 2019 மாஸ்கோ கவுன்சில் தேர்தலில், ஸ்ராலினின் அனைத்துக் குற்றங்களையும் பாதுகாக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி (KPRF), வலதுசாரி “தாராளவாத” நவால்னியின் ஆதரவை அனுபவித்தது, இவர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியைத் தடுப்பதற்காக “புத்திசாலித்தனமாக வாக்களிக்க” தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இந்த குமட்டும் அரசியல் சாக்கடையில் தான் CPP மீன்பிடித்து வருகிறது. கடந்த காலத்தில், KPRF இன் பொதுச் செயலர் ஜென்னடி ஜியுகனோவிடமிருந்து சிசன் எப்போதாவது விடயங்களை பகிர்ந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டில், ரஷ்ய-வட கொரிய நட்புக் குழுவின் முன்னணி உறுப்பினரும், CPP கூறியதான ஸ்ராலினை பாதுகாக்கும் புத்தகங்களின் ஆசிரியருமான இரினா மாலென்கோவை யும் CPP ஊக்குவித்தது. அந்த நாட்களில் 4,000 யூதர்கள் உலக வர்த்தக மையத்தில் வேலையை புறக்கணித்ததாகக் கூறி, அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட 9/11 தாக்குதலுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட யூத-விரோத கட்டுரை தொடர்பாக இவர் இழிந்த பெயர் பெற்றவராவார். பின்னர் Pravda செய்தியிதழ் கட்டுரையை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரியது.

இன்னும் அடிப்படையில், சோவியத் ஒன்றியத்திலும், மற்றும் சீனாவிலுமான முதலாளித்துவ மீட்டெடுப்பு என்பது ஸ்ராலினிசத்தின் ஒட்டுமொத்த பேரழிவுகரமான குற்றச்சாட்டாகும். ரஷ்யா, சீனா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகள் தொடர்பாக CPP எந்தவித விளக்கத்தையும், அல்லது எந்தவித மார்க்சிச விளக்கத்தையும் வழங்கவில்லை. இது, 1950 களில் ரஷ்ய முதலாளித்துவ மறுசீரமைப்புக்கு தேதியிடுகிறது –அதாவது ஸ்ராலின் இறந்த பின்னர்– ரஷ்ய புரட்சியின் தேட்டங்கள், தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகள், மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகியவை ஸ்ராலினிசத்தால் சிதைக்கப்பட்டிருந்தாலும் கூட நீடித்திருந்தன என்ற உண்மையை புறக்கணிக்கிறது. மாவோவின் மரணத்திலிருந்து சீனாவில் நிகழ்ந்து வரும் முதலாளித்துவ மறுசீரமைப்பை பற்றி CPP குறிப்பிடுகிறது – மாவோ 1972 இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டதன் மூலம் இதற்கான அடிப்படையை உருவாக்கினார் என்ற உண்மை புறக்கணிக்கப்படுகிறது, இதை “பாட்டாளி வர்க்க வெளியுறவுக் கொள்கை” என்று அந்த நேரத்தில் CPP அபத்தமாக பாராட்டியது.

பொருளாதார அடிப்படையிலான சமூகத்தில் ஏற்படும் இத்தகைய அடிப்படை மாற்றத்தை ஒரு தனிநபரின் மரணத்தைக் கொண்டு வெறுமனே விளக்க முடியும் என்று கூறுவது, அது எவ்வளவு முக்கியமாக இருந்தாலும், மார்க்சிசத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை. இறுதி ஆய்வில், சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா இரண்டு நாடுகளிலுமான முதலாளித்துவ மறுசீரமைப்பு, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற முன்னோக்கின் மூலம் கொண்டுவரப்பட்ட பொருளாதார முட்டுச்சந்து மற்றும் அதனுடன் இணைந்ததான, ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கம் மற்றும் உண்மையான மார்க்சிசம் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றின் விளைவாகும். இந்த எல்லைக்குட்பட்ட தன்னாட்சி பொருளாதாரங்கள், 1970 களின் பிற்பகுதியிலிருந்து பூகோளமயப்பட்ட உற்பத்தியால் முற்றிலும் கீழறுக்கப்பட்டன. சோசலிச சர்வதேசியவாதத்தை நிராகரித்து, உலகளாவிய முதலாளித்துவத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் ஏற்றுக்கொண்டன.

உலக சோசலிசப் புரட்சிக்காக தொழிலாள வர்க்கம் போராடுவதற்கான விஞ்ஞான அடிப்படையை வழங்கும் மார்க்சிசத்துக்கு CPP பயனுமற்றது. இதுவரை, இது மார்க்சிச முழக்கங்களை வாய்ச்சவடாலாக எழுப்பி, தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றுவதோடு, உழைக்கும் மக்களுக்கு எப்போதும் பேரழிவுகரமானது என்பதை நிரூபித்துள்ள ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுடன் அதன் எப்போதும் மாறிவரும் கூட்டணிகளை நியாயப்படுத்துகிறது. ரஷ்யாவில் நவால்னி சார்பு எதிர்ப்புக்கள் குறித்த CPP அறிக்கையின் புதிய திருத்தப்பட்ட பதிப்பு அதன் அரசியல் திவால்நிலையின் மற்றொரு நிரூபணமாகும்.

புரட்சிகர மார்க்சிச அரசியலில் தீவிரமாகவுள்ள எவரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இப்போது பரிந்துரைத்துள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டங்களின் படிப்பினைகளைப் படிப்பதன் மூலம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான வழியை கண்டறிவார்கள்.

மேலும் படிக்க

Loading