மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியாழக்கிழமை முடிவடைந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களுக்கான இரண்டு நாள் கூட்டம், ஒரு மூத்த பென்டகன் அதிகாரி குறிப்பிட்டது போல, “அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து இயங்க ஒரு புதிய தொனி மற்றும் அணுகுமுறையையும், ஒரு விருப்பத்தையும்” பின்பற்ற பைடென் நிர்வாகமும், மற்றும் அதன் பாதுகாப்பு செயலரான ஓய்வு பெற்ற ஜெனரல் லோயிட் ஆஸ்டினும் முயற்சி செய்ததை குறித்துக் காட்டியது.
டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் “அமெரிக்கா திரும்பி வருகிறது” என்று என்னதான் கூறப்பட்டாலும், மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையும் மற்றும் சீனா மற்றும் ரஷ்யா உடனான “பெரும் சக்தி” மோதலுக்கான தயாரிப்புக்கள் தொடர்புபட்ட மூலோபாய மாற்றத்தையும் பின்பற்றச் செய்த அதே அத்தியாவசிய கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா இக்கூட்டத்தை பயன்படுத்தியது, தொற்றுநோயின் காரணமாக இந்த கூட்டம் பாதுகாப்பான காணொளி கூட்டமாக நடத்தப்பட்டது.
இது, ஒபாமாவிலிருந்து ட்ரம்ப், அடுத்து பைடென் காலம் வரை தொடர்ந்து நிலைத்திருக்கும் தேவையாகவுள்ள அமெரிக்க தயாரிப்பு வன்பொருட்களை (hardware) வாங்குவது உட்பட, இராணுவ செலவினங்களுக்கு என ஐரோப்பிய சக்திகள் அவர்களது வரவு செலவுத் திட்டங்களின் ஒரு பெரும் பங்காக அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பங்களிக்க வாஷிங்டன் தொடர்ந்தும் வற்புறுத்துவதுடன் இணைந்திருந்தது.
நேட்டோ எதிர்கொள்ளும் மிகுந்த அழுத்தம் நிறைந்த உடனடி பிரச்சினையான ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள 10,000 நேட்டோ மற்றும் கூட்டணி துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு காலக்கெடுவான மே 1 ஆம் தேதியை நிர்ணயிப்பது தீர்க்கப்படாமல் விடப்பட்டதுடன், வாஷிங்டனில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு காத்திருக்கிறது.
இந்த காலக்கெடு அமெரிக்காவுக்கும் தாலிபானுக்கும் இடையே கடந்த ஆண்டு கட்டாரில் கையொப்பமிடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது, இது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது தாக்குதல் நடத்த முனையும் அல்கொய்தா அல்லது வேறு ஏதேனும் சக்திகள் ஆப்கான் மண்ணை பயன்படுத்துவதை மறுப்பதற்கான தாலிபானின் உறுதிப்பாட்டை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் ஏனைய வெளிநாட்டு துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு பிரதியீடாக எட்டப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து, நாட்டில் ஒரு அமெரிக்க சிப்பாயும் கூட கொல்லப்படவில்லை.
தற்போது, நாட்டிலுள்ள “வன்முறையின்” அளவு அது முன்னோக்கிச் செல்வதை சாத்தியமற்றதாக்குகிறது என்று பென்டகன் கூறுகிறது. காபூலில் கைப்பாவை அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு பாதுகாப்புப் படையினர் முக்கிய பிராந்திய தலைநகரங்களை சுற்றி வளைத்துள்ள தாலிபான்களின் படைத் தளங்களையும் மற்றும் சோதனைச் சாவடிகளையும் கைவிட்டு தோல்வியை எதிர்கொண்டு வருகின்றனர். கிளர்ச்சி இயக்கத்தின் பாரம்பரிய வசந்தகால தாக்குதல் இன்னும் தொடங்கப்படவில்லை.
வெளிநாட்டு துருப்புக்களில் பெரும்பான்மையாகவுள்ள ஐரோப்பிய படைகள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளன. இந்நாட்டில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக 2,500 சிப்பாய்களை மட்டுமே நிலைநிறுத்தியுள்ளது என்றாலும் இந்த ஆக்கிரமிப்பு அமெரிக்க விமானப்படை, விநியோக வழிகள் மற்றும் தளவாட உதவியை முழுமையாக சார்ந்துள்ளது.
வாஷிங்டன் மே 1 அன்று படைகளை திரும்பப் பெற முன்வந்திருக்குமானால், இரண்டு தசாப்தங்களாக நீடிக்கும் போரின் போது கட்டமைக்கப்பட்ட விரிவான அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்பை மூடுவதற்கும், மற்றும் இந்த வறிய நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த ஏராளமான இராணுவ வன்பொருள்களை மீளப் பெறுவதற்கும் ஏற்கனவே உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கும். அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட போர் தொடரவிருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் காணப்படுகின்றன.
இதற்கிடையில், நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், ஈராக்கில் தற்போதுள்ள 500 “பயிற்சியாளர்கள்” அடங்கிய இராணுவக் குழுவை 4,000 ஆக அதிகரித்து, கூட்டணியின் இராணுவ பிரசன்னத்தை பெரியளவில் விஸ்தரிக்க அறிவித்துள்ளார். இங்கு 2,500 சொந்த துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா, எர்பில் இல் ஒரு அமெரிக்க இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு தெளிவாக குறிப்பிடப்படாத பதிலடி கொடுக்க இந்த வாரம் அச்சுறுத்தியது, இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டார் என்பதுடன், ஒரு அமெரிக்க சிப்பாய் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு சிறிதளவு அறியப்பட்ட ஒரு குழு உரிமை கோரியது.
ஈராக்கில் தனது பிரசன்ன அதிகரிப்பு ISIS சுன்னி இஸ்லாமிய குடிப்படைகளின் மீள்எழுச்சி பற்றிய கவலையால் ஊக்குவிக்கப்பட்டதாக நேட்டோ தெரிவித்தாலும், பிராந்தியம் முழுவதும் உள்ளது போல, இந்த நாட்டிலும் அமெரிக்க தலைமையிலான நடவடிக்கைகளின் முக்கிய கவனம் என்பது ஈரானின் செல்வாக்கை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதாகும்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பல தசாப்த கால போர்களில் இது மூழ்கியிருந்தாலும், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் பலத்தை திருப்பிவிடும் நோக்கில் பென்டகனின் “உலகளாவிய தோற்றப்பாங்கை” மீளாய்வு செய்ய பைடென் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜேர்மனியிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ட்ரம்பின் உத்தரவை பைடென் ஏற்கனவே தடுத்து நிறுத்தியதுடன், நோர்வேக்கு B-1 ரக குண்டுவீசி விமானங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அமைச்சர்களின் மாநாட்டிற்கு முன்பாக, பென்டகனின் உயர்மட்ட அதிகாரி ஒருவர், “அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ கூட்டணி நாடுகளையும் அது அச்சுறுத்துவதாக” கூறி ரஷ்யாவுக்கு எதிரான போர்க்குணமிக்க அமெரிக்கக் கொள்கை ஒன்றை முன்வைத்தார். மேலும், வாஷிங்டனின் தனியுரிமையுள்ள பிரத்தியேகமான அதன் சொந்த “இராணுவப் படையை மாஸ்கோ தனது இலட்சியங்களை அடையப் பயன்படுத்துவதாகவும்,” மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த “விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை குறைமதிப்பிற்குட்படுத்துவதாகவும்” அவர் குற்றம்சாட்டினார்.
நேட்டோ பொதுச் செயலர் ஸ்டோல்டென்பேர்க், முக்கியமாக ரஷ்யாவையும் சீனாவையும் எதிர்கொள்ள 2010 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதான கூட்டணிகளின் “மூலோபாய கருத்தை” திருத்தியமைப்பதற்கு பரிந்துரைக்க அவர் விரும்பினார் என்பதை காணொளி கூட்டத்தின் முதல் நாளுக்குப் பின்னர் தெரிவித்தார்.
ஸ்டோல்டென்பேர்க், கூட்டணியின் பாதுகாப்புச் சுற்றுசூழல் “அடிப்படையில் மாறிவிட்டது” என்று வாதிட்டு, “உதாரணமாக, தற்போதைய மூலோபாய கருத்தின் படி, அதிகார சமநிலை நீக்கப்படுவது மற்றும் சீனாவின் எழுச்சியால் நிகழும் பாதுகாப்பு விளைவுகள் பற்றி நாம் கவனம் செலுத்துவதில்லை. … மீண்டும் 2010 இல், ரஷ்யாவுடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை என்று நாம் நினைத்ததை நிறைவேற்ற நாம் பணியாற்றி வந்தோம். அப்போதிருந்து, கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்து கொண்டது உட்பட, அண்டை நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பெறுப்பேற்பதை நாம் கண்டோம், மேலும் விடயங்கள் அடிப்படையில் மாறிவிட்டன” என்று தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலர் ஆஸ்டின் தனது பங்கிற்கு, பென்டகனை பொறுத்தவரை, “சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் அட்லாண்டிக்கிற்கு இடையிலான பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவிலான கொள்கைகள் முன்வைக்கும் தற்போதைய சவால்களையும், மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான நோக்கத்தையும் அங்கீகரித்த நேட்டோ கூட்டணிகளை அவர் வரவேற்றதாக” நேட்டோ அமைச்சர்களிடம் தெரிவித்தார்.
இதன் முடிவில், வாஷிங்டனும் அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் முதல் அதன் முஸ்லீம் மக்களுக்கு எதிரான “இனப்படுகொலை” வரை அனைத்திற்கும் சீனா தான் பொறுப்பு என்று அதை அரக்கத்தனமானதாக சித்தரிக்க இடைவிடாத பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த பிரச்சாரம், சமூக சமத்துவமின்மை மற்றும் தொற்றுநோய்க்கு ஒரு புதிய வெளிப்புற எதிரியை காரணமாக்கி பேரழிவுகரமாக அதனை கையாளுவது குறித்து அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை திசைதிருப்பும் அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
அத்தகைய திட்ட நிரலை அடிப்படையாகக் கொண்டு நேட்டோவின் ஒற்றுமை உறுதி செய்யப்பட முடியாது. ட்ரம்பின் “அமெரிக்கா முதல்” என்ற கொள்கையின் தரங்குறைந்த தன்மையையும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி நேட்டோவை வெளிப்படையாக அவமதித்தது ஆகியவற்றால் கிட்டத்தட்ட 75 ஆண்டுகால கூட்டணிக்குள் மோதல்களும் சிரமங்களும் அதிகரித்தன என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அவை ட்ரம்புக்கு முன்னரே இருந்து வந்துள்ளதுடன், மேலும் அதன் வேர்கள் மிகவும் ஆழமானவை. “தொனி”யின் ஏற்படும் மாற்றத்தினால் அவற்றை கடக்க முடிவது கடினம்.
1949 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கிற்கு இடையிலான இராணுவ கூட்டணி உருவாக்கப்பட்டபோது, அமெரிக்க ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உலகின் மீது ஆதிக்கம் செலுத்தியது. இந்த கூட்டணி, இரண்டு அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான 40 ஆண்டுகால பனிப் போரில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பூகோளரீதியான பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய, குறிப்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, அதிகரித்தளவில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துகிறது, இது மூன்று தசாப்தங்களாக தொடர்ச்சியான போர்களுக்கு வழிவகுத்தது.
மேற்கு ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸும், பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ உடனான வாஷிங்டனின் மோதல்களில் பகடைக்காய்களாக வைக்கப்படுவதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டின் இறுதியில், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் ஆட்சேபனைகள் தொடர்பாக சீனாவுடன் ஒரு பெரும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை எட்டியது. மேலும் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி வர்த்தக பங்காளியாக இருந்த அமெரிக்காவை சீனா முந்திக்கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இதற்கிடையில், ஜேர்மன் அரசாங்கம் Nord Stream 2 எரிவாயு குழாய் திட்டத்திற்கான தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க அச்சுறுத்தல்களும் பொருளாதாரத் தடைகளும் ஒருபுறம் இருந்தாலும், இந்த குழாய்வழி, உக்ரேனைத் தவிர்த்து, நேரடியாக ஜேர்மனிக்கு அதிகளவு ரஷ்ய வாயுவை விநியோகிக்கும்.
கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் முடுக்கிவிடப்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆழம், அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையில் மட்டுமல்லாமல், நேட்டோ நாடுகளுக்கு இடையிலும் மோதல்களுக்கு எரியூட்டுகின்றது, நேட்டோ அங்கத்துவ நாடுகள் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை ஒன்றுக்கொன்று எதிராக உலகப் போர்களில் ஈடுபட்டன.
வெளிநாட்டு உறவுகள் குழிவில் (CFR) இந்த மாதம் “அமெரிக்கா, சீனா மற்றும் தைவான்: போரைத் தடுப்பதற்கான ஒரு உத்தி” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு அறிக்கை, “சீனாவுடனான போரில் தனது முந்தைய நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு வாஷிங்டனின் ஆதரவை நம்பமுடியாது என்று எச்சரிக்கிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் முதல் ஹாங்காங்கை சீனா கையாளுவது பற்றிய விமர்சனங்கள் வரையிலான விடயங்களில், அமெரிக்காவின் வாயடிப்புகளும் நடவடிக்கைகளும் மிகவும் ஆத்திரமூட்டுவதாக கருதப்படும் போது அல்லது அதற்காக அதிக பொருளாதார விலைகளை செலுத்தவேண்டி வருகையில், அமெரிக்க நட்பு நாடுகள் சில நேரங்களில் வாஷிங்டனை ஆதரிக்க தயங்குகின்றன,” என்று CFR தெரிவிக்கிறது. “பிரான்சும் ஜேர்மனியும் 2003 வளைகுடா மோதலில் அமெரிக்காவை ஆதரிக்க மறுத்துவிட்டன. அமெரிக்கா-சீனா போரில், ஜப்பான் அதன் உள்நாட்டு அரசியல் மற்றும் அரசியலமைப்புத் கட்டுப்பாடுகளை மீறி இணைந்து கொள்ளாது என்றாலும், அமெரிக்கா தனியாக போராட முடியும் என்பது அதன் கூட்டணி அமைப்பை சிதைக்கிறது.”
அத்தகைய மோதல்களின் விளைவுகள் குறித்து அறிக்கை ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை விடுக்கின்றது. “மனித வரலாற்றில் இரண்டு அணுவாயுத நாடுகளுக்கு இடையிலான முதல் போரில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இறக்கக்கூடும். அமெரிக்கா-சீனா போரின் விளைவுகள் குறித்த 2015 RAND Corporation ஆய்வு, இராணுவ இழப்புக்களை மதிப்பிடுவது ‘மிகவும் கடினம்’ என்று தீர்மானித்தது. எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போரில் கடைசியாக ஒரு பெரிய போர்க்கப்பலை இழந்தபோதிலும் மற்றும் இன்னொரு கப்பல் மூழ்குவது வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகக் கொடிய இராணுவ இழப்பு நிகழ்வாக மாறக்கூடும்.