மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
COVID-19 இயற்கையாக உருவானது என்ற ஒருமித்த உலகளாவிய விஞ்ஞான கருத்துக்கு முன்னால், பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் இந்த நோய் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து விடுவிக்கப்பட்டது என்ற பொய்யை இரட்டிப்பாக்கியுள்ளன.
இந்த கூற்றில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இந்த தொற்றுநோய் உருவான விதம் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு (WHO) குழு உறுப்பினர்களிடமிருந்து மிக சமீபத்தில், இதற்கு மிகவும் கடுமையான மறுப்பு வந்தது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நோய் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அவ்விதமான எந்தவொரு விசாரணையையும் WHO கைவிடுவதாக அவர்கள் அறிவித்தார்கள்.
WHO பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் லியாங் வேனியன், அந்த “வைரஸ் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டது” என்ற தத்துவம் “ஏற்கனவே உலகெங்கிலுமான ஒட்டுமொத்த விஞ்ஞான சமூகத்தினராலும் மறுக்கப்பட்டுள்ளது” என்பதை தெளிவுபடுத்தினார்.
அந்த வைரஸ் ஓர் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளிப்பட்டது என்ற கூற்றை பொறுத்தவரை, லியாங் தொடர்ந்து கூறுகையில், “வூஹானின் எந்த ஆய்வகங்களிலும், SARS-CoV-2 இன் வைரஸ் இல்லை. இந்த வைரஸ் இல்லை என்றால், இதை தொடர்புபடுத்துவதற்கும் எந்த வழியும் இருக்க முடியாது,” என்றார்.
WHO உணவு பாதுகாப்பு நிபுணர் பீட்டர் பென் எம்பரேக், 'இந்த குறிப்பிட்ட வைரஸ் முன்னதாக எங்கேயும் ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை அல்லது அறியப்படவில்லை' என்பதையு சேர்த்துக் கொண்டார்.
உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளின் திட்டவட்டமான முடிவுகள், பைடென் வெள்ளை மாளிகையிடமிருந்து ஓர் ஆவேசமான விடையிறுப்பைத் தூண்டியது. 'COVID-19 விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் கொண்டு செல்லப்பட்ட விதம் குறித்தும் அவற்றை எட்ட பயன்படுத்தப்பட்ட செயல்முறை மீதான கேள்விகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்,” என்று வெள்ளை மாளிகை பெப்ரவரி 13 அறிக்கையில் எழுதியது.
இது, COVID-19 சீன ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்ட “ஆயுதமயப்படுத்தப்பட்ட” வைரஸ் என்று பரவலாக கருதப்பட்ட ட்ரம்ப் சதி கோட்பாடுகளின் மிகவும் அபத்தமான மற்றும் வினோதமான கருத்தை பைடென் நிர்வாகம் பகிரங்கமாக அரவணைத்ததை குறித்தது. இது வெள்ளை மாளிகை வர்த்தகத்துறை ஆலோசகர் பீட்டர் நவார்ரோ மற்றும் தலைமை மூலோபாயவாதி ஸ்டீவ் பானன் போன்ற அதிவலது சித்தாந்தவாதிகளால் ஊக்குவிக்கப்பட்டது.
COVID-19 “வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா” என்று வினவிய போது, மே மாதம் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, “இது எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன” என்றார். ஜூனில், நவார்ரோ குறிப்பிடுகையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி தான்… இந்த வைரஸை உருவாக்கியது” என்று அறிவித்ததுடன், இந்த நோயை “ஆயுதமயப்படுத்தப்பட்ட வைரஸ்” என்றவர் அழைத்தார்.
உலக சுகாதார அமைப்பை விமர்சித்த பைடென் வெள்ளை மாளிகையின் அறிக்கையைப் பற்றிக் கொண்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான ஒரு வடிகாலாக சேவையாற்றி உள்ள அது, 'உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய பயணம் பெய்ஜிங்கிற்கான பிரச்சார சதித்திட்டத்துடன் முடிந்தது,' என்று குறைகூறி, உலக சுகாதார அமைப்பு பிரதிநிதிகள் குழு விஞ்ஞானிகளை தனிப்பட்ட முறையில் தாக்கும் அளவுக்குச் சென்றது.
அக்குழுவில் மிகவும் வெளிப்படையாக பேசும் உறுப்பினர்களில் ஒருவரான உலக சுகாதார அமைப்பின் விலங்கியல் நிபுணர் பீட்டர் தாஸ்ஜாக் கண்டனத்தையும் அது விட்டு வைக்கவில்லை. சீன அதிகாரிகள் மூடிமறைத்தனர் என்று பொய் குற்றஞ்சாட்டியதற்காக சமீபத்தில் நியூ யோர்க் டைம்ஸைக் கண்டித்திருந்த அவர், “வூஹான் ஆய்வக” சதிக் கோட்பாடு வலதுசாரி தீவிரவாத Falun Gong இயக்கம் மற்றும் அதன் வெளியீடான Epoch Times ஆல் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது என்பதை சரியாக சுட்டிக்காட்டி இருந்தார்.
உலகளவில் ஒருமித்த விஞ்ஞான கருத்துக்கு மத்தியிலும், அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் ஏன் இந்த அபத்தமான சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்கின்றன?
சமீபத்திய காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் சீனாவை வெறுக்குமாறு செய்யும் ஒரு முயற்சியில், மற்றும் அதன் நீட்சியாக, சீன மக்களும் அமெரிக்காவை வெறுக்குமாறு செய்யும் ஒரு முயற்சியில் அமெரிக்கா ஒரு பிரச்சாரம் மாற்றி ஒரு பிரச்சாரத்தை ஒன்றன்பின் ஒன்றாக செய்து வந்துள்ளது. வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டிற்கு முன்னர், சீனா அதன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை' மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதற்கு முன்னதாக திபெத் இருந்தது; அதற்கு முன்னதாக தைவான் இருந்தது.
COVID-19 முதன்முதலில் சீனாவில் தோன்றிய போது, வெகுஜன மரணம் மற்றும் நோயின் காட்சிகள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நல்லெண்ண வெளிப்பாடுகளைத் தூண்டின. அமெரிக்கர்கள் தானாக முன்வந்து சீனாவுக்குப் பொருட்களை அனுப்பினர். அதன் மருத்துவப் பணியாளர்களுக்கு சிம்பொனி இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகளை அர்ப்பணித்தன.
மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் அவர்களின் துன்பத்திற்கு உதவுவதற்கான இந்த மனிதநேய உணர்வு, தனது உலக மேலாதிக்கத்திற்குச் சீனாவை ஒரு பெரியத் தடையாக பார்க்கும் அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கங்களைக் குறுக்காக வெட்டுகிறது.
இதனால் தான், COVID-19 “சீன வைரஸ்”, அது வேண்டுமென்றே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் உலகில் பரப்பப்பட்டது என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் பெரிய பொய் மேலுயர்த்தப்பட்டது. இந்த வெடிப்பார்ந்த கூற்று, மக்கள் நனவைத் தரம் குறைத்து, சீனாவை 'எதிரியாக' மனிதநேயமற்று ஆக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது.
புதிய ஜனாதிபதி அவருக்கு முன்பிருந்தவரின் இனவெறி, வெளிநாட்டவர் விரோத மனப்பான்மை மற்றும் இராணுவவாதத்தை நிராகரிப்பார் என்ற நம்பிக்கையில் தான் மில்லியன் கணக்கான மக்கள் பைடெனுக்கு வாக்களித்தார்கள். இந்த நம்பிக்கைகள் தவறாக இருந்தன. ட்ரம்பைப் போலவே பைடெனும், தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுக்க தீர்மானகரமாக உள்ள ஓர் அமெரிக்க நிதிய தன்னலக்குழுவிற்காக பேசுகிறார், அதை பாதுகாப்பதற்காக தான் அது எண்ணற்ற போர்களை நடத்தியது—மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது.
மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டில் கொள்வதற்கான பல தசாப்த காலப் போர்களுக்குப் பின்னர், அமெரிக்கா, ட்ரம்ப் நிர்வாகம் எதை “வல்லரசு மோதல்” என்று குறிப்பிட்டதோ, அதை நோக்கி, குறிப்பாக சீனாவுடனான போர் தயாரிப்புக்கு திரும்பி உள்ளது.
'வெறுக்கப்படும் மற்றொரு நாட்டை அல்லது நாடுகளைப் பூதாகரமாக காட்டுவதும் மற்றும் இழிவுபடுத்துவதும், எதிரியை முகமற்ற பொருளாக ஆக்குவதும் பிரச்சாரகரின் பழைய தந்திரமாகும்,” என்று பிரச்சார நுட்பங்கள் விசயத்தை எழுதும் ஓர் எழுத்தாளர் எழுதினார். 'இதைச் செய்வது எதிராளியைக் காயப்படுத்துவதை எளிதாக்குகிறது.'
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒரு போரில் மில்லியன் கணக்கானவர்களின் மரணம் ஏற்படும். அந்த அளவிலான ஓர் இரத்தக்களரிக்கு, மக்கள் 'அந்த எதிரியை' வெறுக்க தள்ளப்படும் வரையில், பொய்களின் குவியல் மீது அமைக்கப்பட்ட, பல ஆண்டுகால தயாரிப்பு தேவைப்படுகிறது.
இந்த பொய்யின் அபத்தமும் பொய்யின் அளவும் இறுதியில் முக்கியத்துவமற்றவையாக இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிலர், அல்லது உண்மையில் பலரும், இதை நம்புவார்கள். மக்கள் கருத்து விஷமாக்கப்பட்டு, வழமையான காலங்களில் பாரிய படுகொலை என்று அழைக்கப்படுவதை தற்காப்பு என்று முன்வைக்க முடியும்.
இவ்விதத்தில் தான், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக “அதிர்ச்சியூட்டி அச்சுறுத்தும்” குண்டுவீச்சு நடவடிக்கை நடத்தப்பட்டு, அது உடனடி அணு ஆயுத அச்சுறுத்தலிலிருந்து தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக மக்களிடையே விற்கப்பட்டது. யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா என ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் மீண்டும் மீண்டும் இதே உத்தி தான் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் போர் பெரியதாக இருக்கையில், அதை நியாயப்படுத்த பொய்யும் பெரிதாக தேவைப்படுகிறது, மேலும் சீனாவுடனான ஒரு போர் என்பது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய போராக இருக்கும். இதற்காக தான், “கோவிட்-19 தொற்றுநோய் உருவானது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஒரு வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை முறையாகத் தடுத்துள்ளது”, இதனால் தான் “கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் இறந்து விட்டார்கள்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.
சீனாவிற்கு எதிரான பொதுமக்கள் கருத்தில் நஞ்சூட்டும் இந்த முயற்சி உள்நாட்டு தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதோடு நெருக்கமாக பிணைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் இந்த தொற்றுநோய் குறித்து மக்களை எச்சரிக்க மறுத்து, பரிசோதனைகளை வீணடித்து, பின்னர் பங்குச் சந்தையை உயர்த்தும் நோக்கில் வணிகங்கள் மற்றும் பள்ளிகளை உரிய காலத்திற்கு முன்னரே மீண்டும் திறந்துவிட்டதால், அமெரிக்காவில் 500,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, சீனா பொது வளங்களை மருத்துவக் கவனிப்புக்கு அதிகரித்ததுடன், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை பள்ளிகள் மற்றும் வணிகங்களை அடைத்தது. இதனால் தான், சீனாவில் இந்த தொற்றுநோய் காலம் முழுவதிலும் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளது.
சீனாவை அரக்கர்களாக்கும் பிரச்சாரத்தின் தர்க்கம், 'அமெரிக்காவின் சிறந்த நன்நம்பிக்கை சீனா தான்' என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜனன் கணேஷால் உச்சரிக்கப்பட்டது. 'சீறுவதற்கு ஒரு வெளிப்புற எதிரி இல்லையென்றால், தேசம் தன்னை நோக்கி திரும்புகிறது,' என்று முடித்த அவர், 'ஒரு வெளிப்புற எதிரி' மட்டுமே 'முரண்பாட்டின் சகாப்தத்தை' முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஆனால் கணேஷ் 'தேச ஒற்றுமைக்கான' வேட்கையை பட்டவர்த்தனமாக முன்வைக்கின்ற நிலையில், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த வரலாறும், குறிப்பாக வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக, போர்களை ஊக்குவிப்பது, எப்போதும் மிகவும் கொடூரமான இனவெறி வடிவங்களுடன் சேர்ந்திருப்பதைக் காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவைத் துண்டாடியதையும், அடிபணிய செய்ததையும் நியாயப்படுத்த, 'மஞ்சள் அபாயத்தின்' (yellow peril) இனவெறி புராணம் பயன்படுத்தப்பட்டது.
'குங் காய்ச்சல்' மற்றும் 'சீன வைரஸ்' என்பதை ட்ரம்ப் கையிலெடுத்த போது, ட்ரம்பில் இருந்து, சீனாவுக்கு எதிரான பிரச்சாரம் ஒரு வெளிப்படையான இனவெறி வடிவத்தை எடுத்தது. எவ்வாறிருப்பினும் பைடெனின் அரசியல் கூட்டாளிகளும் இனவாத பேச்சுக்களையும் உருவங்களையும் பயன்படுத்துகின்றனர். 2019 இல், வாஷிங்டன் போஸ்ட் ஹூவர் பயிலகத்தின் ஓர் அறிக்கையை ஊக்குவித்தது, 'ஒட்டுமொத்தமாக உலகளவில் வெளிநாடு வாழ் சீனர்கள்' இன அடிப்படையில் பெய்ஜிங்கிற்கு விசுவாசத்தைக் காட்ட கடன்பட்டிருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டி, அந்த அறிக்கை சீன அமெரிக்கர்களை 'மஞ்சள் பேரரசின் மகன்கள் மற்றும் மகள்கள்' என்று குறிப்பிடுகிறது.
இரு கட்சிகளிடமிருந்தும் இத்தகைய அருவருக்கத் தக்க கருத்துக்கள் வெளிவருவதால், ஆசிய எதிர்ப்பு இனவெறி அதிகரித்து வருவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா? சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியூ யோர்க் நகரில் மட்டும் ஆசிய வெறுப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 867 சதவீதம் அதிகரித்துள்ளது. 2006 இல் இருந்து, சீனா மீதான எதிர்மறையான கருத்துக்கள் அமெரிக்க மக்களிடையே இரு மடங்கு அதிகரித்துள்ளதாக பியூ ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.
கணேஷ் தேடும் 'தேச ஒற்றுமை', இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய அமெரிக்கர்களைச் சிறையில் அடைத்தமை உட்பட, ஆசிய-விரோத பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி மற்றும் ஒடுக்குமுறையின் களங்க வரலாறு கொண்ட ஒரு நாட்டில் அருவருக்கத்தக்க இனவாத பிரச்சாரத்தைப் பின்தொடர்ந்திருக்கும்.
'ஜேர்மன் தேச மக்களை' ஒன்றிணைக்க, ஜேர்மன் முதலாளித்துவமும் கூட, ஒரு எதிரியை விரும்பியது. அது, நாஜிக்களின் கீழ், யூதர்களில் இதுபோன்ற ஒரு எதிரியைக் கண்டது. அது யூத இன ஒழிப்பில் அழிந்து போன ஆறு மில்லியன் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்திற்கும் படுபயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
கடந்த காலப் படிப்பினைகளை மறந்து விட முடியாது. வெளிநாட்டவர் மீதான விரோத மனோபாவம் மூலமாகவும், தேசிய இனங்களையும் இனக்குழுக்களையும் பூதாகரமாக காட்டியதன் மூலமாகவும் தான் மனித வரலாற்றின் மிகப் பெரிய பேரழிவுகளுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டன.
இவ்விதமாக பூதாகரமாக்குவது வரலாறால் ஏற்கனவே அழிந்துபோன மூர்க்கமான ஆளும் வர்க்கங்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் அதன் குற்றங்களுக்குப் பதிலளித்தாக வேண்டும். அமெரிக்காவில் அரை மில்லியன் மக்கள் இறந்ததற்குக் காரணமானவர்கள், சீனாவின் தொழிலாளர்கள் அல்ல, மாறாக அமெரிக்காவின் முதலாளித்துவவாதிகள் ஆவர்!
மேலும் படிக்க
- விஞ்ஞானிகள் ‘வூஹான் ஆய்வக’ சதிக் கோட்பாட்டை மறுத்த பின்னர் WHO இன் கண்டுபிடிப்புகளை வெள்ளை மாளிகை கண்டிக்கிறது
- அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது
- அமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது
- மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது
- ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தடையாணைகளை விதிக்க அமெரிக்கா களம் அமைக்கிறது