இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில், ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள், ஹட்டன் நீதவானின் உத்தரவின் பேரில், மார்ச் 3 வரை கண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 18 அன்று பொலிசார் அவர்களை கைது செய்தனர்.
ஓல்டன் தோட்டமானது மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியாவின் சாமிமலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்கின்ற சுமார் 500 தொழிலாளர்கள், பெப்ரவரி 2 முதல் சம்பள அதிகரிப்பு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களில் ஏழு பேர் பெண்களாவர்: எஸ். புவனேஸ்வரி, கணபதி தேவி, ஜி. சதீஸ்வரி, பிரான்சிஸ் திரேசம்மாள், மாரிமுத்து தமிழ்செல்வி, யோகசக்தி, எம்.கே. சாந்தினி மற்றும் ஆண்டிமுத்து விஸ்வகேது ஆகியோரே அவர்கள்.
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருக்காத அதே வேளை, தொழிலாளர்கள் “சட்ட விரோதமாக” ஒன்று கூடினார்கள் மற்றும் தோட்ட முகாமையாளர் சுபாஸ் நாராயணன் “கடுமையாக துன்புறுத்தப்பட்டார்” போன்ற குற்றச்சாட்டுக்களை தொழிலாளர்கள் மீது பொலிசார் முன்வைத்துள்ளனர். பொலிசாரின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ள தொழிலாளர்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கு, தோட்டக் கம்பனியும் பொலிசும் தீட்டிய சதி திட்டத்துக்குப் பலியானவர்களாவர்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டிப்பதோடு, ஓல்டன் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோருகின்றன. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் இந்த கொடூரமான ஜனநாயக விரோத தாக்குதலைத் தோற்கடிப்பதற்காக, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் அறைகூவல் விடுக்குமாறு தோட்டத் தொழிலாளர்ளை கேட்டுக்கொள்கின்றன.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சகாக்களை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள அதேநேரம், சோ.ச.க.வின் வழிகாட்டலில் ஒரு நடவடிக்கைக் குழுவையும் அமைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள் மீது, இதேபோன்ற நிலைமைகளையே எதிர்கொள்ளும் அந்தப் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பரவலான அனுதாபம் அதிகரித்துள்ளது. நடவடிக்கைக் குழுவானது, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரதும் ஆதரவைத் திரட்டி, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக வேண்டும்.
பெப்ரவரி 24 அன்று, எட்டு தொழிலாளர்களின் வழக்கறிஞர்கள் பிணை கோரி, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் 18 தொழிலாளர்களை கைது செய்வதற்கு தேடுவதாக அறிவித்த பொலிசாரின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, நீதவான் பிணை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.
தொழிலாளர்கள் முகாமையாளரைத் தாக்கியதைக் காட்டுவதாக கூறப்படும் சந்தேகத்திற்குரிய ஒரு வீடியோவையும் பொலிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அனைத்து தோட்ட தொழிலாளர்களையும் அச்சுறுத்தும் ஒரு மோசமான முயற்சியின் பாகமாக, சட்டப்பூர்வமாக சர்ச்சைக்குரிய அந்த வீடியோ சமூக ஊடகங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், எட்டு தொழிலாளர்களும் இலங்கை சட்டத்தின் கீழ், "கடுமையான துன்புறுத்தல்" செய்தமைக்காக ஏழு ஆண்டுகளுக்கும், "சட்டவிரோதமாக ஒன்று கூடியமைக்காக" ஆறு மாதங்களுக்கும் சிறையில் அடைக்கப்படலாம்.
பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து, தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள், ஓல்டன் தோட்ட நிர்வாகம், பொலிசாரின் உதவியுடன் தங்கள் பழிவாங்கலை எவ்வாறு தயாரித்தது என்பதைக் காட்டுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இந்த தாக்குதலுக்கு உதவி செய்து உடந்தையாக இருந்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1,000 ரூபாய் (5.19 டொலர்) அடிப்படை நாள் சம்பளக் கோரிக்கையை பெறுவதற்கு கம்பனிகளுக்கு "அழுத்தம் கொடுப்பதற்காக", பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. 2015 இல் இருந்தே இந்த கோரிக்கைக்காக தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த பல வேலைநிறுத்தப் போராட்டங்களை இ.தொ.கா.வும் ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும் தொடர்ந்து காட்டிக் கொடுத்து வந்துள்ளன.
இ.தொ.கா., தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள கடும் கோபத்தைக் தணிப்பதற்காக இந்த ஒரு நாள் எதிர்ப்புக்கு அழைப்பு விட்டபோதிலும், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள், இந்த தேசிய வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.
ஏனைய தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன், ஓல்டன் தொழிலாளர்களும் பெப்ரவரி 2 அன்று, முன்னதாகவே வேலைநிறுத்தம் செய்வதற்கு முடிவு செய்தனர். அவர்கள் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை துளை தோட்டத்திலிருந்து வெளியேகொண்டு செல்வதை எதிர்த்தனர். முகாமையாளர், இந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்காக பொலிசாரை அழைத்தார். இந்த தாக்குதல் தொடர்பாக தொழிலாளர்களின் கோபத்திற்கு பிரதிபலித்த ஒரு இ.தொ.கா. பிரதேச சபை தலைவர், இதில் தலையிட்டு தேயிலை கொண்டு செல்லும் லொரியைத் திருப்பி அனுப்பினார்.
அன்று, முகாமையாளர் தொழிலாளர்களை உடல் ரீதியில் தாக்கியதனால், பெண் தொழிலாளி ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில், பொலிசார் இந்த தாக்குதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்த போதிலும், தொழிலாளர்கள் கோபத்துடன் கோரிக்கை விடுத்த நிலையில், முகாமையாளரை கைது செய்ய பொலிசார் தீர்மானித்தனர். நீதவான் முன்நிலையில் முற்படுத்தப்பட்ட அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், பெப்ரவரி 5 வேலை நிறுத்தத்தை அடுத்து, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் மற்றும் உடனடியாக 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை வழங்குமாறும் கோரி வேலை நிறுத்தத்தை தொடர்வதற்கு முடிவு செய்தனர்.
பெப்ரவரி 7, சுமார் 50 தொழிலாளர்கள் இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமானை அவரது கொட்டகல தொழிற்சங்க அலுவலகத்தில் சந்தித்து, தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டனர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் தொண்டமான், அதை முற்றாக மறுத்துவிட்டார்.
ஓல்டன் தொழிலாளர்களை இ.தொ.கா. துரோகத்தனமாக தனிமைப்படுத்தியதால் ஊக்குவிக்கப்பட்ட தோட்ட நிர்வாகம், பெப்ரவரி 15 அன்று வேலைநிறுத்தத்தை தகர்க்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை தோட்டத்தின் ஒரு பிரிவில் இருந்து, முச்சக்கர வண்டியின் மூலம் மற்றொரு தோட்டத்திலுள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அது முயன்றது. இதனால் கோபமடைந்த வேலைநிறுத்தக்காரர்கள், தலையிட்டு முயற்சியைத் தோற்கடித்தனர்.
பெப்ரவரி 17 அன்று, தொழிலாளர் குழு ஒன்று, தோட்ட முகாமையாளரின் பங்களாவுக்கு வெளியே, அவரது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இப்போது, நிர்வாகம் இந்த சம்பவத்தையே தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.
அடுத்த நாள், பெருந்தோட்ட உரிமையாளர் சங்க செயலாளர் லலித் ஒபசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதினார். ஓல்டன் வேலைநிறுத்தத்தைப் பற்றி சுட்டிக் காட்டிய அவர் குறிப்பிட்டதாவது: "ஆர்.பி.சி. இன் [பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள்] தேயிலை உற்பத்தியை நாசமாக்குவதற்காக தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அல்லாதவர்களைத் தூண்டிவிடும் குண்டர்களால், திட்டமிட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுவதாக நாங்கள் கவலைப்படுகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்றைய தினம், பொலிசார் தாங்கள் கைது செய்ய வேண்டிய எட்டு தொழிலாளர்களைத் தேடி தோட்டத்திற்கு வந்தனர். தொழிலாளர்கள் எதிர்த்து நின்றதால், பொலிசாரினால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.
இருப்பினும், இ.தொ.கா. பிரதேச தலைவர்களான கனகராஜ், ராஜராம் மற்றும் செண்பஹவல்லி ஆகியோர் அந்த எட்டு தொழிலாளர்களையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குமாறு கூறினர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று தொழிற்சங்க அதிகாரிகள் பொய்யாகக் கூறினர். ஆனால், பொலிஸ் அவர்களை உடனடியாக கைது செய்தது. பின்னர், நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைத்தார்.
இ.தொ.கா.வின் உதவி மற்றும் உடந்தையுடன் நடத்தப்படும் இந்த கம்பனி-பொலிஸ் சதி திட்டத்தை, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதுமான ஒரு கடுமையான தாக்குதலாக தொழிலாளர்கள் கருத வேண்டும். எந்தவொரு தோட்டத் தொழிற்சங்கமும் இந்த கைதுகளை கண்டிக்கவுமில்லை அல்லது தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கவுமில்லை. தோட்டக் கம்பனிகளின் இந்த கொடூரமான ஜனநாயக-விரோத தாக்குதலானது, கௌரவமான சம்பளம், தொழில்கள் மற்றும் ஏனைய சமூக உரிமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்ட இயக்கத்தை முறியடிக்கும் முயற்சியாகும்.
சமீபத்திய மாதங்களில், வாழ்க்கை நிலைமைகள், தொழில் மற்றும் ஊதியங்கள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் பெருவணிக நிறுவனங்களினதும் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு விரோதமாக வளர்ந்து வரும் எதிர்ப்புக்களுடன் கார்ட்மோர், மொக்கா மற்றும் ஏனைய தோட்டங்களிலும் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த போராட்டங்கள், கொவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட ஆழமான நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையிலும் உலகம் முழுதும் வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இலங்கை பொருளாதாரமானது பாரிய கடன்கள், ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டின் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியிலும் மூழ்கிப் போயுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அதிகரித்துவரும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய இராஜபக்ஷ அரசாங்கம், பெப்ரவரி 12 அன்று தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தது. எவ்வாறாயினும், பெருகிவரும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யாத இந்த அற்ப அதிகரிப்பை கூட தோட்ட நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
இந்த தொகையை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டால், செலவினங்களைக் குறைப்பதற்காக வேலை நாட்களை குறைப்பதாகவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கப்போவதாகவும், ஓய்வூதியங்களைக் குறைக்கப் போவதாகவும், தங்களது தோட்டங்களில் ஏனைய அற்ப சமூக செலவினங்களையும் ரத்து செய்யப் போவதாகவும் தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ளன. ஆனால், அரசாங்கம் இன்னமும் கம்பனிகளுடன் "கலந்துரையாடல்களில்" ஈடுபட்டுள்ளது.
தொழிலாளர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் அதிகரித்துவரும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அது, தனது கொடூரமான சிக்கன நிகழ்ச்சி திட்டத்துக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை அடக்குவதாற்காக, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்கு தன்னை தயாரிக்கின்றது. கொழும்பு அரசாங்கம், துறைமுகத் தொழிலாளர்கள் மீது அத்தியாவசிய சேவை உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், கடந்த வாரம் சுகாதார ஊழியர்களின் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தங்களை முறியடிக்க இராணுவத்தை அனுப்பியது. தோட்டங்களில் அதன் அடக்குமுறை நடவடிக்கைகள், இந்த பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தொழிலாளர்கள் ஒரு மாற்று வேலைத் திட்டத்தை பின்பற்ற வேண்டும். அரசு மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகளாக மாறிப் போயுள்ள தொழிற்சங்கங்களை அவர்கள் நம்ப முடியாது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க, தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் ஐக்கியப்படுத்த தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆவதோடு, பெருந்தோட்டங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது உட்பட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான, தொழிலாளர் – விவசாயிகள் அரசாங்கத்துக்கான போராட்டமாக மாற வேண்டும்.
இந்த சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்த முன்னோக்குக்காகப் போராடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கையில் கம்பனியும் பொலிசும் கூட்டாக நடத்திய தாக்குதலில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
- இலங்கை: மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
- இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகளதும் தொழிற்சங்கங்களதும் சம்பளப் பிரேரணையை நிராகரி!உயர்ந்த ஊதியம் மற்றும் தொழில் உரிமைகளை வெல்ல சோசலிச முன்னோக்குக்காகப் போராடு! நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!