மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சுவிஸ் வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமை முஸ்லீம் பெண்கள் தங்கள் முகங்களை பொதுவில் மறைப்பதற்கும், நிகாப் அல்லது புர்கா அணிவதற்கும் தடை விதிக்கும் முக்காடு தடைக்கு ஒப்புதல் அளித்தனர்.
மொத்தம் 1.43 மில்லியன் பேர் தடைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது நாட்டின் 8.7 மில்லியன் மக்களில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. இந்த 8.7 மில்லியன் மக்களில் 2.2 மில்லியன் மக்கள் சுவிஸ் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை, 1.7 மில்லியன் வயது குறைந்தர்களாவர். ஆனால் வெறும் 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்களிப்புடன், தடையை 51.2 சதவீத வாக்குகளுடன் சட்டத்தை ஏற்றுக்கொள்ள இது போதுமானதாக இருந்தது.
இந்த அரசியலமைப்புரீதியான முன்முயற்சியும் அதற்கான பிரச்சாரமும் இனவெறி மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்டுவதற்கு உதவியது. ஆய்வுகளின் படி, சுவிட்சர்லாந்து முழுவதும் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிகின்றார்கள். மேலும், அரபு நாடுகளைச் சேர்ந்த பல நூறு பெண் சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். புர்கா அணியும் பெண்கள் யாரும் இல்லை.
இந்த வாக்கெடுப்பு Egerkingen குழு என்று அழைக்கப்படுவதால் முன்னெடுக்கப்பட்டது. இதில் வலதுசாரி ஜனரஞ்சக சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) அரசியல்வாதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்டுகள் பலமாக உள்ளனர். Neue Zcherrcher Zeitung பத்திரிகையின் (NZZ) படி, 4,500 க்கும் மேற்பட்ட அனுதாபிகளைக் கொண்ட இந்த குழு, ஏற்கனவே 2009 இல் சுவிட்சர்லாந்தில் மசூதிகள் கட்டுவதைத் தடைசெய்யும் சட்ட முன்னெடுப்பில் வெற்றியடைந்தது.
Egerkingen குழுவின் நிர்வாக இயக்குனரான 31 வயதான அனியன் லைப்ரண்ட் (Anian Liebrand), தன்னை ஒரு "நம்பிக்கைமிக்க மனிதர்" என்று வர்ணிக்கிறார். அவர் 16 வயதில் சுவிஸ் மக்கள் கட்சியில் சேர்ந்ததுடன், மேலும் நாட்டில் "இடதுசாரி பிரதான நீரோட்டத்தை" முறியடிப்பது எனக்கூறப்பட்ட இலக்கைப் பின்தொடர்ந்தார். "வலதுபுறம் திரும்பும் வகையில் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்துவது எனது மிகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்றாகும்" என்று அவர் NZZ இடம் கூறினார்.
சுவிஸ் மக்கள் கட்சியின் இணைய தளத்தில் இளம் இடதுசாரி அரசியல்வாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டதற்காகவும், அவர்களை "கோழைத்தனமான குழப்பவாதிகள்", "மோசமான நபர்கள்" மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் எனக் கண்டித்ததற்காகவும் பல தடவை குற்றத்தண்டனைக்கு உள்ளாகியவராவார். ஒரே பாலின திருமணம் மற்றும் பள்ளிகளில் பாலியல் கல்விக்கு எதிரான முயற்சிகளிலும் அவர் தீவிரமாக உள்ளார். "வெளிநாட்டு ஊடுருவல் மற்றும் சுவிஸ் குழந்தைகளின் பிறப்பு மிகக் குறைவு" என்பதால்" சுவிஸ் இறந்து கொண்டிருக்கிறது என்பது அவரது மிகப்பெரிய பயம் என NZZ எழுதுகிறது, "அவர் யூதப் படுகொலை நினைவு தினத்தை ஒரு "குற்ற உணர்ச்சித் திட்டம்" என அழைத்து, சுவிஸ் பள்ளிகளில் இதுபற்றி "எதிர்மாறாக கற்பிக்க" வேண்டும் எனக் கருதுகின்றார்.
பாசிச கருத்துக்களை வெளிப்படுத்தும் Egerkingen குழுவின் முன்னணி உறுப்பினரில் லைப்பிராண்ட் மட்டுமல்ல. சுவிஸ் மக்கள் கட்சியின் உறுப்பினரான இருபத்தி நான்கு வயது நில்ஸ் ஃபைச்செட்டர் (Nils Fiechter), ஒரு அழற்சி சுவரொட்டியை வடிவமைத்ததற்காக இன பாகுபாடு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். "கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அழுக்கு, கழிவு, சத்தம், திருட்டு போன்றவற்றுக்கு மில்லியன் கணக்கான செலவுகள்” “வெளிநாட்டு நாடற்றவர்களுக்கான தற்காலிக இடமாக மாற்ற வேண்டாம் என்று நாங்கள் கூறுகிறோம்!" என்ற பதாகையை வெளியிட்டதற்காக இவர் குற்றம் சாட்டப்பட்டார். புர்கா தடைக்கான பிரச்சாரத்தில், அவர் புர்காவின் கீழ், வெடிக்கும் பெல்ட் தரித்த தற்கொலை குண்டுதாரி போல் தோன்றினார்.
நாஜி பிரச்சாரத்தை நினைவூட்டுகின்ற பிரச்சார சுவரொட்டிகளின் மாதிரி வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில், சிவப்பு பின்னணியில் ஒரு கறுப்பு நிகாப் அணிந்து ஆபத்தான தோற்றமுடைய இரண்டு கண்கள் பார்ப்பதுபோல் காட்டி, "தீவிரவாதத்தை நிறுத்து!" என எழுதப்பட்டுள்ளது.
Egerkingen குழுவில் சுவிஸ் மக்கள் கட்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் முந்தைய இனவெறி பிரச்சாரங்களின் பல முன்னைய அங்கத்தவர்களும் உள்ளனர். அதன் தலைவர் தேசிய ஆணையாளரான (சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் உறுப்பினர்) வால்டர் வோப்மேன் (Walter Wobmann) ஆவார். அவர் சுவிஸ் மக்கள் கட்சியின் வலதுசாரிகளின் பிரிவில் இருக்கிறார். சுவிஸ் மக்கள் கட்சி பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி, அதில் சில வெற்றிகளையும் பெற்றுள்ளது.
கடைசியாக அது வெற்றிபெற்றது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாரிய குடியேற்ற முயற்சி என்று அழைக்கப்பட்டதிலாகும். இது மிகவும் குறுகிய பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனிநபர்கள் சுதந்திமாக நடமாடுவது தொடர்பான ஒப்பந்தத்தை மூன்று ஆண்டுகளுக்குள் மறுபரிசீலனை செய்ய சுவிஸ் அரசாங்கத்தை அது கட்டாயப்படுத்தியது. அப்போதிருந்து, இது தொடர்புடைய முயற்சிகள் தோல்வியடைந்த்துடன், மேலும் சுவிஸ் மக்கள் கட்சியின் செல்வாக்கு ஓரளவு குறைந்துவிட்டது. வலது தீவிரவாதிகளுடன் பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கிய சில தாராளவாதிகளினதும் மற்றும் பெண்ணியவாதிகளின் ஆதரவே புர்கா தடை முயற்சி இப்போது மீண்டும் வெற்றிபெற்றதற்கான காரணமாகும்.
எடுத்துக்காட்டாக, புர்கா முயற்சிக்கு ஒரு பெண்கள் குழு அமைக்கப்பட்டது. எழுத்தாளர் கிசெலா விட்மர் (Gisela Widmer), அவருக்கு இந்த முன்னெடுப்பாளர்களிடம் எந்த அனுதாபமும் இல்லை, ஆனால் ஆம் என்று வாக்களிப்பேன் என Tages-Anzeiger பத்திரிகைக்கு தெரிவித்தார். இது அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பற்றியது அல்ல, ஆனால் “‘முக்காடு தடை, ஆம் அல்லது இல்லை?” என்ற கேள்வி மட்டுமே என்றார். ஒரு இடது-தாராளவாதி இந்த கேள்விக்கு உறுதியுடன் பதிலளிக்க வேண்டும். ஏனெனில் நிகாப் “அரசியல் இஸ்லாத்தின் பழக்கவழக்கமாகும்”. Terre de femmes இன் முன்னாள் ஊழியர் ரெஜினா புரோப்ஸ்ட் (Regina Probst), ஆம் என்று வாக்களிப்பதாக Der Spiegel இடம் கூறினார்.
ஏற்கெனவே அகதிகள் நெருக்கடியில் முஸ்லீம் ஆண்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜேர்மன் பெண்ணியவாதி அலிஸ் ஸ்வாட்சர் (Alice Schwarzer), NZZ இடம் மற்றும் இந்த முயற்சியை ஆதரித்து கருத்து தெரிவித்தார். “200 வருட அறிவொளி மற்றும் 50 ஆண்டுகளுக்கு சம உரிமைகளுக்காகப் போராடிய பின்னர், ஆண்களின் கண்களில் இருந்து பெண்கள் மறைந்திருப்பதுதான் எங்களுக்குத் தேவையா? என அவர் கேட்டார்.
எவ்வாறாயினும், பிரச்சாரத்தின் இனவெறியைக் கண்டிக்கும் மற்றும் மத மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமை மீதான தாக்குதல் என்று இத்தடையை கண்டிக்கும் பல குரல்கள் இருந்தன. இது தாமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ அதை மீறினால் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டை காட்டுகிறது.
புர்கா தடைக்கு வாக்களித்த அனைவருமே ஒரு உறுதியான வலதுசாரி தீவிரவாதியாக இல்லாவிட்டாலும், இந்த ஜனநாயக விரோத மற்றும் பாரபட்சமான முன்முயற்சியை ஏற்றுக்கொள்வது சுவிட்சர்லாந்து கூட பாசிச நீரோட்டங்கள் திரும்புவதில் இருந்து விடுபடவில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் அவரைப் பின்பற்றுவோர், ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), ஸ்பெயினின் Vox மற்றும் பல நாடுகளில் உள்ளோரைப்போல் தம்மை காட்டிக்கொள்கின்றனர்.
சுவிட்சர்லாந்து பெரும்பாலும் பாசிசம் மற்றும் நாஜிசத்திற்கு எதிரான ஜனநாயகத்தின் சோலையாக எப்போதும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இது உண்மை இல்லை. 1930 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்திலும் ஒரு விரிவான Frontenbewegung (முன்னணி இயக்கம்) உருவாக்கப்பட்டது. இது மக்கள்வாத (சுவிஸ்-இன), யூத எதிர்ப்பு மற்றும் பாசிச இலக்குகளை ஆதரித்தது. இது தேசிய முன்னணி கட்சிக்கு வழிவகுத்தது, இது 1935 இல் 9,000 உறுப்பினர்களுடன் உச்சத்தை எட்டி மற்றும் சுவிஸ் பாராளுமன்றத்தில் அதன் சொந்த பிரதிநிதிகளுடன் பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது.
ஒரு நேரடித் தொடர்பு தேசிய முன்னணியில் இருந்து Egerkingen குழுவுக்கு செல்கிறது. Egerkingen குழுவின் இணை நிறுவனரும், மசூதிகளுக்கு எதிரான முன்முயற்சியின் பொறுப்பாளராக இருந்த அனியன் லைப்ராண்டின் அரசியல் ஆதரவாளரான உல்ரிச் ஷூலெர் (Ulrich Schlüer) 1970 களில் ஜேம்ஸ் ஸ்வார்சன்பேர்க்கின் (James Schwarzenbach) செயலாளராக பணியாற்றினார். சுவிஸ் தேசிய குழுவின் உறுப்பினரான ஸ்வார்சன்பாக், 1968 ஆம் ஆண்டில் "மக்கள் மற்றும் தாயகத்தை அந்நியப்படுத்துவதற்கு எதிரான தேசிய நடவடிக்கையை" தொடங்கினார். இது ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிநாட்டினரின் விகிதத்தை அதிகபட்சமாக 10 சதவீதமாகக் குறைக்க முயன்றது. கசப்பான வாக்கெடுப்பு பிரச்சாரத்திற்குப் பின்னர் அதனுடன் தொடர்புடைய முயற்சி 54 சதவிகிதத்தால் நிராகரிக்கப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், 300,000 முதல் 400,000 பேர் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
அவரது இளமை பருவத்தில், ஸ்வார்சன்பாக் ஸ்பானிய சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவைப் பாராட்டினார். மேலும் தேசிய முன்னணியின் கட்சித் தலைவராகவும் உறுப்பினராகவும் பின்னர் இருந்தார். நவம்பர் 1934 இல், அவர் Pfeffermühle நாடக இசைக்குழு மீதான தாக்குதலில் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்டார். பிரபல எழுத்தாளர் தோமஸ் மான் (Thomas Mann) இன் பிள்ளைகளான எரிக்கா மற்றும் கிளவுஸ் மான் ஆகியோரால் இந்த நாடக இசைக்குழு மூனிச் நகரில் நிறுவப்பட்டது. இவர்கள் நாஜிகளின் துன்புறுத்தலால் சூரிச் சென்றனர். விருந்தோம்பல் உரிமையை துஷ்பிரயோகம் செய்தால் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இடமில்லை என்று குடியேறியவர்களுக்கும் யூதர்களுக்கும் காட்ட வேண்டிய நேரம் இது என்று ஸ்வார்சன்பாக் இத்தாக்குதலை நியாயப்படுத்தினார்.
இந்த பாசிச சக்திகளின் வருகை முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் ஒரு பிரதிபலிப்பாகும். இது சுவிட்சர்லாந்தையும் விட்டுவைக்கவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் அளவிடப்படும்போது இந்நாடு உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது வேறு எந்தவொரு நாட்டையும் போலவே உலகப் பொருளாதாரத்தை அதிகம் சார்ந்து இருக்கின்றது. பெரிதாக்கப்பட்ட வங்கித் துறை, உயர் வகுப்பினருக்கான சுற்றுலா மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழிற்துறை ஆகியவை பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மிகவும் உணர்திறனுடன் பதிலளிக்கின்றன.
ஒரு இழிந்த பணக்கார உயர் வர்க்கம் முதல் நிரந்தர வதிவிட நிலை இல்லாத பருவகால தொழிலாளர்களை கொண்டு கூர்மையான சமூக துருவமுனைப்புடன் இணைந்து வளர்ச்சியடையாத நலன்புரி அமைப்பும் உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி இந்த முரண்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. அதிக தொற்று விகிதங்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் பொருளாதாரத்தின் நலன்களை மக்களின் வாழ்க்கையை விட மேலானதாக முன்வைக்கிறது. தொழிற்சாலைகளைப் போல பனிச்சறுக்கு தங்குமிடங்களும், உல்லாச விடுதிகள் மற்றும் உணவகங்கள் பெரும்பாலும் திறந்த நிலையில் உள்ளன. இதன் விளைவாக, 565,000 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் ஜேர்மனியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அத்துடன் 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
உலகில் மற்ற எல்லா இடங்களையும் போலவே, ஆளும் வர்க்கமும் பாசிச சக்தியை ஊக்குவிப்பதன் மூலம் சுவிட்சர்லாந்தில் கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
மேலும் படிக்க
- உலகளாவிய தொற்றுநோயும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான உலகளாவிய போரும்
- ஜேர்மன் அரசு புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்களை விரிவாக்க புதிய சட்டம் நிறைவேற்றுகிறது
- பாரிஸில் புலம்பெயர்ந்தோர் கூடார முகாம்கள்: அகதிகளுக்கு எதிரான பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் போரில் பாதிக்கப்பட்டவர்கள்
- சென்னையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WSWS உடன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பேசுகிறார்கள்