மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதே நாளன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவிலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் (புதுச்சேரி) தேர்தல் நடைபெறுகின்றது. அதேவேளை கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மார்ச் 27 முதல் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 2 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக இந்தியாவின் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் சீனாவுடன் வளர்ந்து வரும் போர் பதட்டங்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுகின்றன. பெரும் வேலை இழப்புக்கள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை உயர்த்தியிருப்பதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங்கின் முதலீட்டாளர் சார்பு வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக 2014 இல் இந்திய முதலாளித்துவம் நரேந்திர மோடி தலைமையிலான இந்து-மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது. ஸ்ராலினிச ஆட்சி 1991 இல் சோவியத் ஒன்றியத்தை கலைத்த சமயத்தில், 1990 களில் கட்டுப்பாடற்ற மற்றும் தடையற்ற சந்தைக் கொள்கைகளின் கட்டமைப்பாளர்களில் ஒருவராக மன்மோகன் சிங் இருந்தார். பாஜக, காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் ஸ்ராலினிச மற்றும் பிராந்தியவாத கட்சிகள் அனைத்தும் தொற்றுநோய்களின் போது, இன்று இறப்பு எண்ணிக்கை 158,642 ஆக உயர்ந்துள்ள போதிலும் கூட. பொருளாதாரத்தை மீண்டும் திறக்க முன்வந்துள்ளன.
இந்தியா உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருப்பதற்கு கடந்த தசாப்தங்களாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகளின் விளைவுகளாக இருக்கின்றன. இந்திய சமுதாயத்தில் முதல் ஒரு சதவிகிதத்திலுள்ளவர்கள், கீழுள்ள 70 சதவிகிதத்தை விட நான்கு மடங்குக்கதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். மில்லியன் கணக்கான மக்கள் வறுமை, கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் வாழ்கின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வாஷிங்டனின் சீனாவிற்கு எதிரான மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைக்க பாஜகவும் காங்கிரசும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த குறிக்கோளின் முடிவில் பாஜக தனது போர் விமான மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு திறந்துவிட்டுள்ளது. கூடுதலாக, இது வாஷிங்டனின் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் இராணுவ-பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இது அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான போரின் விளிம்பிற்கு ஆசியாவைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பிராந்தியவாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அஇதிமுக) அரசாங்கம் இந்த பிராந்தியத்தில் பாஜகவின் கூட்டாளியாக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள இந்திய பெருவணிக மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நலன்களுக்காக சேவையாற்றுகிறது. தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை மிருகத்தனமாக சுரண்டுவதற்கு உதவுகின்றது. இது பாஜக மற்றும் சாதிவாத பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பா.ம.க) ஒரு தளர்வான தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
பிராந்தியவாத, தமிழ்-தேசியவாத, திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) பரவலாகக் கிடக்கும் உத்தியோகபூர்வ ஊழலுக்கு எதிராக இயங்குவதாகக் கூறிக்கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக தேர்தலில் போட்டியிடுகிறது, அது. திமுக வுக்குள் ஏற்பட்ட பிளவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் திரைப்பட நட்சத்திரம் எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையில் அஇஅதிமுக வெளியே வந்தது என்பதைக்கொண்டு பார்க்கையில் அஇஅதிமுக ஊழலை அடிப்படையாக எதிர்க்கிறது என்ற திமுகவின் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை.
மதிப்பிழந்த திமுக மற்றும் அஇஅதிமுக, அல்லது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு ஒரு தெளிவான முற்போக்கான மாற்று இல்லாததை சுரண்டுவதற்காக நாம் தமிழர் கட்சி மற்றும் பிற தமிழ் தேசியவாதிகளும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டை இன ரீதியாக தமிழர்கள் ஆள வேண்டும் என்று கூறி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த நாம் தமிழர் கட்சி முயற்சி செய்கிறது, மேலும் அரசுத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதுடன், பொதுவாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் இனரீதியாக தமிழர் அல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் -இந்திய-கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் சாதிவாத விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) அனைத்தும் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன.
தொழிலாளர்களை அரசியல் ரீதியாக சோர்வுறச் செய்யும் முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணியை நாட வேண்டும் என்று இந்திய ஸ்ராலினிச கட்சிகள் வரலாற்று ரீதியாக கோரி வந்துள்ளன. “மதச்சார்பின்மை” க்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு அவர்கள் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்கின்றனர். காங்கிரஸை அதன் இடதுபுறத்திலிருந்து எதிர்க்கும் ஒரு இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்திற்குள், காங்கிரஸ் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் மீதான விரக்தியைப் சுரண்டிக்கொள்ள தமிழ்நாட்டில் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளை அவைகள் அனுமதித்துள்ளன.
தொழிலாளர்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை 1967 ல் காங்கிரஸ் கட்சி இழந்ததிலிருந்து அதிகாரத்தில் மாறி மாறி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகியவைகளை கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாதவைகளாக கொண்டிருக்கின்றனர். உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதன் மூலம் வாக்குகளை வெல்ல முடியாமல், தங்களை வாக்காளர்களுக்கு சந்தைப்படுத்துவதற்காக ஐபேக் (I-PAC - Indian Political Action Committee ) அல்லது ஓஎம்ஜி (OMG - One Mind Generation) போன்ற தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வழங்குபவர்களை நியமித்திருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் நேரடியாக பிணைந்திருக்கின்ற பெரும் ஊடக வணிக நிறுவனங்களை இயக்கும் கோடீஸ்வரர்களுக்காக இரு கட்சிகளும் பேசுகின்றன, மேலும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மிருகத்தனமாக நசுக்க உதவியுள்ளனர். 1999 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது, திமுக அரசாங்கம் 652 தொழிலாளர்களைக் கைது செய்து திருச்சியில் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். திமுக அரசாங்கத்தின் போலீசார் அவர்களைத் தாக்கி 17 பேரை ஆற்று நீரில் மூழ்கடித்துள்ளனர். அது தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலையாக வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு-உருக்கும் ஆலையில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் அஇஅதிமுக அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இந்தத் தூத்துக்குடி படுகொலையில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவத்தால் பின்பற்றப்படும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) கொள்கைகள் சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் வர்க்கப் பதட்டங்களை பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளன. தொற்றுநோய்களின் போது அகில இந்திய அளவில் இரண்டாவது மோசமான பொருளாதார வீழ்ச்சியை தமிழ்நாட்டில் பார்க்க முடிந்தது.
கடந்த மாதம், அஇஅதிமுக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22 நிதியாண்டிற்கான குறுகியகால வரவு செலவு திட்ட அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாடு தற்போது ரூ.4.85 லட்சம் கோடி (74.1 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனைக் கொண்டுள்ளது, இது அடுத்த ஆண்டு ரூ.5.70 லட்சம் கோடியாக (87.6 பில்லியன் அமெரிக்க டாலர்) உயரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன்களுக்கான வட்டியாக நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நிதி நெருக்கடியின் ஆழத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அரசாங்கம் அதன் வட்டியை செலுத்துவதற்காக புதிய கடன்களை வாங்கி வருகிறது.
பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்து பின்னர் 2019 ல் மறுதேர்தலிலும் வெற்றி பெற்றதிலிருந்து, அது இடைவிடாமல் தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவதுடன், ஒரு பிற்போக்குத்தனமான தேசிய வரி முறையை கொண்டுவந்தது, முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) திணித்தது, மேலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. தொழிலாளர் சட்டம் மற்றும் விவசாய சட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில் முதலாளித்துவ வர்க்கம் பின்பற்றும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் தொழிலாளர் எதிர்ப்பு செயல் திட்டங்களுக்கு மாற்றாக இந்திய மற்றும் உலக தொழிலாள வர்க்கத்திற்குள் இயக்கம் வளர்ந்து வருகிறது. 2020 வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வேலைநிறுத்தப் போராட்ட அலைகள் வந்துள்ளன. இந்தியாவில், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள், முஸ்லீம்-விரோத CAA க்கு எதிரான பெருந்திரளான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் ஆகியவை தொற்றுநோய்க்கு முன்னரான காலத்திலும் நடைபெற்றுள்ளன.
மூன்று ஆண்டுகளாக தாமதமாகிவிட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. வரவிருக்கும் மாநிலத் தேர்தல் விளம்பரங்களுக்கு மில்லியன் கணக்கான பொது நிதியை பயன்படுத்தி தங்கள் ஆட்சியை மீட்டெடுப்பதற்கான அஇஅதிமுக அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக பரவலாக சீற்றம் எழுந்துள்ளது, அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்க மறுத்து அவர்களை வறுமைக்குள் தள்ளுகின்றது.
COVID-19 தொற்றுநோய் காட்டுவது என்னவென்றால் முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக விரோத கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், வைரஸுக்கு எதிராக விஞ்ஞான ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கும் உலகெங்கிலும் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தொழிலாள வர்க்கத்துக்குள் வளர்ந்து வரும் சர்வதேச இயக்கம் எதிர்கொள்ளும் பணியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் ஊக்குவிக்கப்படும் தேசியவாத கருத்துக்களுடன் முறித்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு ட்ரொட்ஸ்கிச தலைமையை உருவாக்குவதே அதற்கு தேவையான போராட்டமாக இருக்கிறது. அது இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியால் இந்திய துணைக் கண்டம் முழுவதும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க
- தமிழ்நாட்டில் மருத்துவ வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது
- தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்
- தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்
- இந்திய தேசிய தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் தமிழ் நாட்டு வாக்காளர் வாக்களிக்க செல்கின்றனர்
- தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது
- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்ற நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி நெருக்குகின்றது