முன்னோக்கு

கையகப்படுத்துவதற்கான காரணங்கள்: தொற்றுநோயின் முதலாண்டில் பில்லியனர்களின் செல்வவளம் 60 சதவீதம் அதிகரித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலகளாவிய பில்லியனர்களின் ஆண்டு பட்டியலின்படி, உலகின் பில்லியனர்களது நிகர செல்வவளம் கடந்தாண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமாக, 8 ட்ரில்லியன் டாலரில் இருந்து 13.1 ட்ரில்லியன் டாலராக, அதிகரித்துள்ளது.

"கொடூரமான துன்பம், பொருளாதார வலி, புவிசார் அரசியல் பதட்டங்கள் — மேலும் மனித வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் செல்வவள அதிகரிப்பையும் கோவிட்-19 கொண்டு வந்தது" என்று ஃபோர்ப்ஸ் எழுதுகிறது.

முன்பில்லாத அதிகபட்ச மொத்த எண்ணிக்கை மற்றும் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பாக, உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 660 அதிகரித்து 2,775 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய பில்லியனர் உருவாகியிருந்தார்.

அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் மற்றும் டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகாரி எலோன் மஸ்க் ஆகியோர் முறையே 177 பில்லியன் டாலர் மற்றும் 151 பில்லியன் டாலருடன் முன்னணியில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH இன் பேர்னார் ஆர்னோ மற்றும் அவரது குடும்பத்தினர் (150 பில்லியன் டாலர்), மைக்ரோசாப்ட் இணை-நிறுவனர் பில் கேட்ஸ் (124 பில்லியன் டாலர்) மற்றும் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் (97 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.

சக்கர்பேர்க் கடந்தாண்டு 50 பில்லியன் டாலர் எவ்வாறு “சம்பாதித்தார்”, எலோன் மஸ்க் 130 பில்லியன் டாலர்களை எவ்வாறு "சம்பாதித்தார்" என்பதை பத்திரிகை அறிக்கைகள் விவாதிக்கின்றன. ஆனால் அந்த வார்த்தையே அபத்தமாக உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமான ஒரு தொகையை ஒருவரால் "சம்பாதிக்க" முடியாது.

அந்த செல்வம் சமூகரீதியில் அபகரிக்கப்பட்டதாகும். முதலாவதாக, அது உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டியதன் மூலமாக கொள்ளையடிக்கப்பட்டது.

இரண்டாவதாக, பெடரல் ரிசர்வின் பண உதவிப்பொதி மற்றும் சுரண்டலுக்காக முடிவின்றி மலிவு உழைப்பு வினியோகிப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து இவற்றின் கலவையால் பங்குச் சந்தையின் தொடர்ச்சியான அதிகரிப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அரசு கொள்கையின் விளைவாக அந்த செல்வம் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. இதன் விளைவாக, எஸ்&பி 500 பங்குச்சந்தை குறியீடு அதன் மார்ச் 2020 சரிவுக்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

ஆக்ரோஷமான தொற்றுநோய்க்கு மத்தியில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஒவ்வொரு நாடும், நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறி அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்த மறுத்துள்ளன. மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு வழிவகுத்த இந்தக் கொள்கை, வேண்டுமென்றே நிதிய தன்னலக் குழுவின் செல்வ வளத்தை விரிவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒவ்வொரு மரணத்திலும், பில்லியனர்களின் நிகர மதிப்பில் சராசரியாக 1.7 மில்லியன் டாலர் சேர்ந்தது. உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கானவர்கள் வேலையில் நோய்வாய்ப்பட்டார்கள் அல்லது வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். நூறு மில்லியன் கணக்கானவர்கள் பட்டினிக்குச் சென்றார்கள். ஆனால் செல்வந்தர்களின் பங்கு இலாகாக்கள் மட்டும் முன்பினும் அதிக உயரங்களுக்குச் சென்றன.

150 ஆண்டுகளுக்கு முன்னர் மூலதனம் படைப்பில் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, “ஆகவே ஒரு துருவத்தில் செல்வவளம் குவிகிறது, அதேநேரத்தில் எதிர் துருவத்தில் ஏழ்மை, துயரகரமான அடிமைத்தனத்தின் மரண வேதனை, அறியாமை, காட்டுமிராண்டித்தனம், உளவியல் சீரழிவு குவிகிறது,” இது முதலாளித்துவத்தின் அடிப்படை விதியாகும்.

சமூகத்தின் உச்சியில் அளப்பரிய தொகைகள் மலை போல் குவிவது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளைப் பொருளாதாரரீதியில் வறுமைப்படுத்துவதால் சாத்தியமாகிறது.

2020 மார்ச்சில் உலகளாவிய சந்தைகள் வேகமாக சரிந்த போது, அமெரிக்க அரசாங்கமும் பெடரல் ரிசர்வும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளுடன் சேர்ந்து, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் வாராக் கடன்களை ஏற்றுக் கொள்ளவும் மற்றும் சந்தைகளுக்கு முட்டுக் கொடுக்கவும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களுடன் களத்தில் இறங்கின. தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் மற்றும் நிலைமைகளை அழித்து மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளத்தை விரிவாக்கிய அதேவேளையில், தொழிலாள வர்க்கத்திற்கு உத்தரவாதமளிக்கும் எந்த செலவும் செய்யப்படவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசு கடன்களைப் பாரியளவில் உருவாக்குவதை அரசே மேற்பார்வையிட்டது, சந்தைகளின் இயங்குமுறை மூலமாக, நிதிய தன்னலக் குழுவின் தனியார் சொத்துக்களுக்குள், இந்த தொகைகள் பரிமாறப்பட்டன.

பிணையெடுப்புகள் கிடைத்த உடனே, பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடுவதற்கும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தொழிலாளர்களின் தன்னிச்சையான வெளிநடப்புகளால் கட்டாயமாக ஏற்படுத்தப்பட்டிருந்த சமூக அடைப்புகள் மற்றும் ஏனைய அடிப்படை பொது மருத்துவ நடவடிக்கைகளை நீக்குவதற்கும் அழுத்தம் வந்தது.

நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் ஃப்ரீட்மன் முதலில் முன்வைத்த தொனியையே எதிரொலித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “குணப்படுத்துதல், நோயை விட மோசமாக இருந்துவிடக்கூடாது,” என்று அறிவித்தார். மீண்டும் இலாபமீட்ட தொடங்குவதற்காக, தொழிலாளர்கள் மீண்டும் உயிராபத்தான தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர், குழந்தைகள் பள்ளிகளுக்குள் அடைக்கப்பட்டனர். இந்த தொற்றுநோய்க்கான முழுச் செலவையும் தொழிலாள வர்க்கமே செலுத்துவதை உறுதி செய்வதில் முதலாளித்துவவாதிகள் உறுதியாக இருந்தனர்.

வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிரிழப்பைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய, சீனா மற்றும் நியூசிலாந்து போன்ற சில நாடுகள் பயன்படுத்திய நடவடிக்கைகளைச் செயல்படுத்த நடைமுறையளவில் உலகெங்கிலும் ஒவ்வொரு அரசாங்கமும் மறுத்தன. என்ன தேவைப்படுகிறது என்றால் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளின் அடைப்பு நீடிக்கப்பட வேண்டும், கடுமையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும், பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தொற்றின் தடம் அறிதல் ஆகியவை அவசியப்படுகிறது, இது மிகவும் வெளிப்படையாக உள்ளது.

இதுபோன்ற தீவிரமான மற்றும் விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும் நிதிய தன்னலக்குழுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தைப் பாதிப்பதால், அவை நிராகரிக்கப்பட்டன. உயிர்களைக் காப்பாற்றுவதையும், மக்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக, பெருந்திரளான மக்களின் —அதாவது தொழிலாள வர்க்கத்தின்— நலன்கள், சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன் ஒத்திசைந்துள்ளது. ஆனால் இலாமீட்டுதவற்காக, குழந்தைகளின் பெற்றோர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்ய அந்த குழந்தைகளைப் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு திரும்ப செய்வதற்காக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை அதிகரிப்பதும் மற்றும் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் சரக்கு கிடங்குகளை விரைவாகவும் முழுமையாகவும் மீண்டும் திறந்துவிடுவதும் முதலாளித்துவ வர்க்க பொருளாதார நலன்களுக்கு தேவைப்படுகிறது.

பெஸோஸூம் மஸ்க்கும் அவர்களின் ஆலைகளில் தொழிலாளர் சக்தியைப் பாதுகாக்கவும் மற்றும் வைரஸ் பரவலைக் குறைப்பதற்குமான எந்தவொரு தீவிர சுகாதார பாதுகாப்புகளையும் நிராகரித்ததற்காக மிகவும் குறிப்பிடத்தக்க வெகுமதி பெற்றவர்களில் உள்ளடங்குகிறார்கள். பொது சுகாதாரத்துறை உத்தரவுகளை மீறி கலிபோர்னியாவின் அவரது ஃப்ரீமாண்ட் டெஸ்லா வாகன ஆலையை மஸ்க் கடந்த மே இல் மீண்டும் திறந்தார், இதன் விளைவாக 440 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானார்கள். அமசன் உலகெங்கிலுமான அதன் ஆலைகளில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டதையும் மற்றும் அங்கே தொழிலாளர் இறப்புகளையும் மூடிமறைக்க முயன்றது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 20,000 அதன் பணியாளர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருந்ததை இறுதியில் அந்த நிறுவனம் நவம்பரில் ஒப்புக் கொண்டது. இந்த நோய்தொற்றுக்களின் விளைவாக எத்தனை தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பது இதுவரையில் வெளியிடப்படவில்லை.

CARES சட்ட பிணையெடுப்பு மற்றும் ட்ரம்பின் 2017 வரி வெட்டுக்களில் இருந்த வரி குறைப்புகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும், FedEx, Nike மற்றும் Salesforce.com உட்பட அமெரிக்காவின் மிகப்பெரிய பெருநிறுவனங்களில் 55 நிறுவனங்கள் 2020 இல் பெடரலுக்கான வருமான வரியைச் செலுத்தவில்லை, இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் நிதிச் சலுகைகளையும் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசிடமிருந்து 3.5 பில்லியன் டாலர் வரிச்சலுகைகளைப் பெற்றிருப்பதாக மொத்தத்தில் கூறப்பட்டது.

இந்த தொற்றுநோய் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாக, உலகெங்கிலும் நோய்தொற்றின் நான்காம் அலை அதிகரித்து வருகையில் மற்றும் தடுப்பூசி விநியோகம் மட்டுப்பட்டு இருக்கின்ற நிலையில், ஆளும் அவர்க்கம் அதன் இலாப உந்துதலைத் பூர்த்தி செய்வதற்காக இன்னும் மில்லியன் கணக்கானவர்களை மரணங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளது என்பது என்னவோ அதிகரித்தளவில் தெளிவாக உள்ளது.

செல்வந்த தன்னலக் குழுவின் கைகளில் அபாயகரமாக செல்வவளம் திரள்வதை நிறுத்துவது, உலக மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு அதிமுக்கியமாகும். இந்த தொற்றுநோய் பரவலும் அதிலிருந்து நிதிய தன்னலக்குழுக்கள் செழிப்பாவதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதிருப்பதைப் போலவே, இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதும் செல்வந்த தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாகும். நிதிய உயரடுக்கு குவித்துக் கொண்டுள்ள பாரிய செல்வவளம், இந்த வைரஸ் பரவலைத் தடுத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகெங்கிலுமான தொழிலாளர்கள் சமூகப் போராட்டத்திற்குள் நுழைகின்ற இந்த வேளையில், தனியார் இலாபத்திற்காக அல்ல சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் சோசலிச வேலைத்திட்டத்தின் ஒரு தூணாக, இந்த நிதிய தன்னலக் குழுக்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்தவற்கான கோரிக்கையைத் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

Loading