மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மக்ரோன் அரசாங்கம் தொடர்ச்சியான ஜனநாயக விரோத சட்டங்களை இயற்றி, முஸ்லீம்-விரோத வெறியை ஊக்குவித்து வரும் நிலையில், பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன், அல்சாஸ்-லொரைன் பிராந்தியத்தில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஒரு மசூதி கட்டுவதற்கு எதிராக ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
மார்ச் 22 அன்று, பசுமைக் கட்சி மேயர் ஜென் பார்சேகியான் தலைமையிலான ஸ்ட்ராஸ்பேர்க் நகர சபையானது எய்யூப் சுல்தான் மசூதி கட்டுவதற்கு 2.5 மில்லியன் யூரோக்கள் மானியத்திற்கு ஒப்புதல் அளிக்க வாக்களித்தது.
அடுத்த நாள், டார்மனன் ஒரு ஆத்திரமூட்டும் ட்டுவீட்டை வெளியிட்டார், அதாவது "பிரான்சில் இஸ்லாத்தின் கோட்பாடுகளின் சாசனத்தில் கையெழுத்திட மறுத்த ஒரு அரசியல் இஸ்லாத்தை பாதுகாக்கும் ஒரு அமைப்பு". அவர் BFMTV இல் இவ்வாறு கூறினார்: "ஸ்ட்ராஸ்பேர்க்கின் மேயரிடம் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது ... பிரெஞ்சு நலன்களுடன் இந்த நட்பை நாங்கள் காணவில்லை, குறைந்தபட்சம் சொல்லலாம்."
மக்ரோன் அரசாங்கத்தின் தலையீடானது முஸ்லிம்கள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும், இது ஒரு தீவிர-வலது இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசு தற்போது மதசார்பின்மையை பாதுகாக்கும் சாக்குப்போக்கில், சங்கங்கள் மற்றும் மதங்கள் மீது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கட்டுப்பாட்டை வழங்கும் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை நிறைவேற்ற முயன்று வருகிறது.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதியாக இருக்கவுள்ளதை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் 1990களில் தொடங்கப்பட்டன. மிக சமீபத்தில், பசுமைக்கட்சி பெரும்பான்மை மேயர் அலுவலகமானது மசூதி கட்டுவதற்கு 2.5 மில்லியன் யூரோக்களை வழங்கியது, இதன் மொத்த செலவு 31 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2008 ல் இருந்து, நகரம் ஏற்கனவே பல்வேறு மதங்களுக்கு மத கட்டிடங்களுக்கு நிதியளிப்பதற்காக 22 மில்லியன் யூரோக்களை செலவழித்துள்ளது. முஸ்லீம் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவினம் மற்றய மதங்களை விட குறைவாகவுள்ளது.
அல்சாஸ்-மோஸெல்லில், பொது அதிகாரமானது சட்டபூர்வமாக மத கட்டிடங்கள் கட்டுவதற்கான மொத்த செலவில் 10 சதவீதம் வரை பொது மானியங்களை வழங்க முடியும். இது 1905 சட்டத்தால் பிரான்சில் வேறு எந்த இடத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் 1905 சட்டத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டபோது ஜேர்மனியின் ஒரு பகுதியாகயிருந்த அல்சாஸில் இது பயன்படுத்தப்படவில்லை.
கட்டுமான திட்டத்தின் பின்னணியிலுள்ள Milli Görüs இன் இஸ்லாமிய கூட்டமைப்பானது (Islamic Confederation of Milli Görüs - CIMG) டார்மனனின் கருத்துப்படி, "பிரான்சில் இஸ்லாமிய கோட்பாட்டுச் சாசனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது மற்றும் ... ஒரு அரசியல் இஸ்லாமை பாதுகாக்கிறது."
பிரான்சில் இஸ்லாத்தின் "கோட்பாடுகளின் சாசனம்" என்பது முஸ்லீம் விசுவாசத்தின் பிரெஞ்சு கவுன்சில் (CFCM) தயாரித்த ஒரு ஆவணம் ஆகும், ஆனால் அதன் உள்ளடக்கம் மக்ரோன் மற்றும் டார்மனன் ஆகியோரால் சுமத்தப்பட்டது, இது தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதை தெளிவாக மீறுகிறது. CFCM இன் தலைமை, பிரெஞ்சு இமாம்களையும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களையும் கலந்தாலோசிக்காது அவசரமாக ஆவணத்தைத் தயாரித்தது. இது CFCM க்குள் ஒரு நெருக்கடியைத் தூண்டியுள்ளதோடு, ஒரு பிளவுக்கான வாய்ப்புமுள்ளது, ஏனெனில் பல உறுப்பினர்கள் சாசனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
மக்ரோன் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, "சாசனம்" என்பது முஸ்லிம்களுக்கான சமத்துவம் என்ற கோட்பாட்டின் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் ஒரு இழிந்த முயற்சியாகும், அதே நேரத்தில் அவர்களின் உரிமைகளைக் குறைக்கிறது. இது முஸ்லிம்கள் மீது ஒரு கருத்தை திணிக்கவும், அவர்களின் அரசியல் கருத்து சுதந்திரத்தை அகற்றவும் காவல்துறையை அனுமதிக்கிறது. அது கூறுகிறது: "ஒரு மத மற்றும் நெறிமுறை கண்ணோட்டத்தில் இருந்து, முஸ்லீம்கள் ... ஒரு உடன்படிக்கையின் மூலம் பிரான்சுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் தேசிய ஒருங்கிணைப்பு, பொது ஒழுங்கு மற்றும் குடியரசின் சட்டங்களை மதிக்க அவர்களை உறுதிபூண்டுள்ளது."
சாசனத்தின்படி, அரசு மீதான முஸ்லிம்களின் கடமைகள் அவர்களின் மனசாட்சியை விட முன்னுரிமை பெறுகின்றன: "குடிமக்களின் கடமைகளைத் தவிர்ப்பதற்கு எந்த மத நம்பிக்கையும் பயன்படுத்தப்படாது."
"கோட்பாடுகள் சாசனம்" வழிபாட்டுத் தலங்களில் அரசியல் விவாதத்தை தடை செய்கிறது: அதாவது "அரசியல் சொற்பொழிவுகளைப் பரப்பவோ அல்லது உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் மோதல்களை இறக்குமதி செய்யவோ வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. எங்கள் மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பிரார்த்தனை மற்றும் மதிப்புகள் பரிமாற்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது ..." இது ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ போர்கள் மற்றும் பிரான்சிற்குள் போலீஸ் அடக்குமுறையை விமர்சிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது, ஏனெனில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏற்கனவே இருக்கும் சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ளன.
மக்ரோன் அரசாங்கமானது ஒரு வெளிநாட்டவர்கள் விரோத சூழ்நிலையை தூண்டிவிட முயன்று வருகிறது. மசூதி கட்டுவதை குறிப்பிட்டு, டார்மனன் தனது எதிர்ப்பை "குறிப்பாக ஸ்ட்ராஸ்பேர்க்கில் ... நமது நாட்டில், குறிப்பாக துருக்கியால் தலையிடுவதற்கான மிக வலுவான முயற்சிகளுக்கு .... துருக்கிய அரசாங்கம் பிரெஞ்சு விவகாரங்களில், குறிப்பாக மத விவகாரங்களில் தலையிட விரும்புகிறது என்பதற்கான பல அறிகுறிகள் எங்களிடம் உள்ளன" என்று அறிவித்தார்.
ஆயினும் கூட பிரெஞ்சு அரசாங்கம்தான் வெளிநாடுகளில் "தலையீடு செய்வதற்கு" பொறுப்பாக உள்ளது. 2011ல் இருந்து, மொம்மர் கடாபியின் அரசாங்கத்தை தூக்கியெறிய நேட்டோவுடன் சார்க்கோசி லிபியாவில் ஒரு போரை தொடங்கியதிலிருந்து, அடுத்தடுத்து வந்த பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஆயுதந்தரித்த இஸ்லாமிய குடிப்படைகள் நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இது லிபியாவின் முழு சமுதாயத்தின் உடைவிற்கு வழிவகுத்தது.
சிரியாவில், பிரான்சும் அமெரிக்காவும் இதே நடைமுறையைப் பின்பற்றி, பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்க இஸ்லாமிய போராளிகளுக்கு ஆதரவளித்தன. இந்தப் போர் பிராந்தியம் முழுவதும் ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டியது, கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்களைக் கொன்றது மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது.
அல்சாஸில் டார்மானின் தலையீடு, முஸ்லீம் உரிமைகளுக்கு எதிரான மக்ரோன் அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 2022 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, மக்ரோன் அரசாங்கம் மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணியை (RN) விட வலதுசாரித்தனத்தில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
பெப்ருவரியில், டார்மானன் லு பென்னுடன் ஒரு விவாதத்தில் பங்கேற்றார், அந்த நேரத்தில் டார்மானன், வழிபாட்டுத் தலங்களை மூட அனுமதித்த 2017 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற "சட்டங்களுக்கு வாக்களிக்கவில்லை" என்று பிந்தையவரை விமர்சித்தார். லு பென்னை வலதுபுறத்தில் இருந்து தாக்கிய டார்மனன், "லு பென், "தனது கட்சியை அரக்கத்தனமற்றதாக சித்தரிக்க முயற்சிக்கும் போது, மென்மையுடன் செயற்பட்டு வந்துள்ளார்" என்று கூறினார். நீங்கள் வைட்டமின்களை எடுத்துக் கொள்ள வேண்டும், நீங்கள் போதுமான கடுமையானவராக இல்லை என்று நான் காண்கிறேன்!" என்றார்.
20 அக்டோபர் 2020 அன்று, டார்மானின் கோஷர் மற்றும் ஹலால் பிரிவுகள் பல்பொருள் அங்காடிகளில் இருப்பதை கண்டனம் செய்தார். "நான் எப்போதும் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து சில சமூகத்திற்கு ஒருபுறமும் மறுபுறம் வேறு சிலவற்றிற்கும் உணவு வகைகளில் ஒரு இடைவெளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் ஹலால், கோஷர் மற்றும் மததேவைகளை பூர்த்தி செய்யும் பிற உணவுகளைக் குறிப்பிட்டுக் கூறினார். "இப்படித்தான் வகுப்புவாதம் தொடங்குகிறது" என்றார்.
யூத-எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளுக்கு இந்த மெல்லிய மறைக்கப்பட்ட முறையீடு பிரிக்கப்பட்ட பல்பொருள் அங்காடி அலமாரிகளின் தட்டுக்கள் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு பங்களிக்கமுடியும் என்பதைக் காட்டுகிறது.
அதிவலது முடியாட்சி ஆதரவுக் கட்சியான L’action française (AF) உடன் டார்மானன் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். 2008 இல், அவர் மாதாந்திர La restauration nationale பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதினார் (இது AF க்கு நெருக்கமாக உள்ளது) மற்றும் ஒரு முடியாட்சி ஆதரவுக் கட்சியின் கோடை முகாமில் பங்கேற்றார். அரசியலில் அவரது ஆரம்ப நாட்களில், டார்மனன் ஒரு பாரம்பரிய கத்தோலிக்க சித்தாந்தத்தை பாதுகாத்தார் மற்றும் AF இனால் ஈர்க்கப்பட்டார், இது 20 ஆம் நூற்றாண்டில் யூத விரோத அரசியல் மற்றும் பிரெஞ்சு பாசிசத்தின் மையமாக இருந்தது. அவர் டூர்கோயிங் (Tourcoing) உள்ளூராட்சி அரசாங்கத்தில் தனது பதவிக்காலத்தில் ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளுவதை மறுத்தார், மேலும் "அனைவருக்கும் திருமணம்" இரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்.
"பொது பாதுகாப்பு" (“global security”) சட்டம் உட்பட ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் சட்டங்களை இயற்றும் அரசாங்கத்தின் முயற்சியானது ஏற்கனவே "மஞ்சள் சீருடை" எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்க்கள் உட்பட மூன்று ஆண்டுகளாக வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவரும் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி பற்றிய அச்சத்தால் உந்துதல் பெற்றுள்ளது. பொலிசாரை புகைப்படம் எடுப்பதை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்ட "பொது பாதுகாப்பு" சட்டமானது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் சபையால் கண்டிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் முழுக்காலமும் மக்ரோன் தனது முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார், இது தொழிலாள வர்க்கத்தின் உயிர்களின் மீதான அரசாங்கத்தின் கொலைகார அலட்சியத்தை அம்பலப்படுத்தியுள்ளது. மக்கள் தொகை முழுவதும் வைரஸ் பரவ அனுமதித்த அதன் கொள்கையானது பிரான்சில் கிட்டத்தட்ட 100,000 மக்கள் இறப்பிற்கு காரணமாக உள்ளது. அதன் முஸ்லீம்-விரோத வெறியை தூண்டுவது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் அதன் கொடிய கொள்கைக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.