தமிழ்நாடு மாநிலத்தின் புதிய அரசு இந்தியாவின் பேரழிவு தரும் தொற்றுநோய் கொள்கையை பேணுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 6 தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், இந்த மாதம் தமிழ் தேசியவாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆட்சிக்கு வந்துள்ளது. COVID-19 பெருந்தொற்று நோய்க்கு தினமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலைமையிலும், தேர்தலில் தோல்வியுற்ற அதன் தமிழ்-தேசியவாத போட்டியாளரான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) வறுமைக்கும் அதிகபடியான மரணங்களுக்கும் வழிவகுத்த அதே கொள்கைகளையே செயல்படுத்த திமுக அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) கூட்டு ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஇஅதிமுக மீதான பரந்துபட்ட மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் தீர்ப்பதற்கு இலாயக்கற்றவராக தி.மு.கவின் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியின்கீழ் வறுமை, வேலையின்மை, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறை என்பன அதிகரித்திருந்தன. கோவிட் பெருந்தொற்று நோய்க்கு அஇஅதிமுக ஒரு "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்" (“herd immunity” ) கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தது. தொழிலாளர்களை அத்தியாவசியமற்ற உற்பத்தியில் ஈடுபட வைத்ததால், வைரஸ் மிகப்பரந்தளவில் பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டடிருந்தது.

2021 ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாக்களிக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டுகிறார் (AP Photo / R.Parthibhan)

இதன் விளைவாக, 28,798 நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள இந்திய மாநிலமாக நேற்று தமிழகம் இருந்தது, இதுவரை மொத்த பாதிப்புகள் 2 மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்கின்றது. மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 22,000 ஆக இருக்கின்றது.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 450 க்கும் அதிமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள், இந்தியாவில் மொத்தம் 171,000 புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 3,617 பேர் இறந்துள்ளதாக நேற்று பதிவாகியிருக்கின்றன - இது உலகின் எந்தவொரு நாட்டிலும் ஏற்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். எவ்வாறாயினும், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை ஐந்து முதல் 10 மடங்கு அதிகமாகும் . ஏனெனில் பெரும்பாலான நோயாளிகள் இந்தியாவின் அதிக சுமை நிறைந்த சுகாதார அமைப்பில் கவனிப்பை பெறமுடியாமல் இருக்கின்றனர்.

இந்த தேர்தலில், அஇஅதிமுக கட்சியானது பாஜக மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகள் உட்பட எட்டு கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. அஇஅதிமுக, 1972 இல் திமுகவிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். இந்திய முதலாளித்துவத்தின் நீண்டகால கருவிகளாக இருக்கும் இவ்விரு கட்சிகளும் 1967 ல் இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை இழந்ததிலிருந்து ஆட்சிக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.

அஇஅதிமுக மற்றும் பாஜகவுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பைப் சுரண்டிக்கொள்ள திமுக 13 கட்சிகளுடன் ஒரு “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை” உருவாக்கியது. இந்த கூட்டணியில் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் பல்வேறு சாதிய அடிப்படையிலான கட்சிகள் அடங்கியிருந்தன.

திமுகவை "மதசார்பற்ற" கட்சி என்று அழைப்பது பாசாங்குத்தனமானது மற்றும் தவறானது. 1999 இல் பாஜகவுடன் ஒரு தேர்தல் கூட்டணியை திமுக வைத்திருந்ததோடு, 1999 ல் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மூன்று மந்திரி பதவிகளையும் பெற்றுக்கொண்டது. உண்மையில், திமுகவின் இந்த தேர்தல் வெற்றி காண்பிப்பது அதன் திவால்நிலையைத்தான். பாஜகவின் வன்முறையான பிற்போக்குத்தனக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு ஸ்ராலினிச கட்சிகள், அவர்களின் தேசிய கூட்டாளியான காங்கிரஸ் கட்சியையும் அல்லது அவர்களின் பல்வேறு பிராந்திய மற்றும் உள்ளூர் கூட்டாளிகளையும் நம்பியிருக்கின்றது.

திமுக தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 10 பில்லியன் ரூபாய் (138 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவழித்த பின்னர்தான் வெற்றியடைந்துள்ளது. இது சிபிஐ கட்சிக்கு 15 கோடி ரூபாயும் சிபிஎம் கட்சிக்கு 10கோடி ரூபாயும் என மொத்தமாக 40 கோடி ரூபாய்க்களுக்கு மேல் அதன் அனைத்து கூட்டணி பங்காளிகளுக்கும் நன்கொடையாக அளித்துள்ளதாக தி.மு.. தேர்தல் ஆணையத்திடம் கணக்கு கொடுத்துள்ளது. ஸ்ராலினிச கட்சிகளுக்கு மேலும் பல மில்லியன் ரூபாய்களைக் கொடுத்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. திமுகவின் தேர்தல் மூலோபாயத்தை வகுத்த I-PAC நிறுவனத்துக்கு (Indian Political Action Committee ) ரூபாய் 350 கோடிக்கு மேல் தி.மு.க வழங்கியுள்ளது.

இந்த அளப்பரிய தேர்தல் செலவினத்திற்குப் பிறகு, தி.மு.க ஒரு கோவிட்-19 பொது நிவாரண நிதியை அமைக்கவேண்டிய கட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. "பொருளாதாரத்தை மீட்க போராடுகையில், இந்த பேரழிவைச் சமாளிக்க நமது அரசாங்கம் அதிக வளங்களை செலவிட வேண்டும்", இந்த பணம் மருத்துவமனை வசதிகளுக்காகவும் “கோவிட் நோயுடன் போராடுவதற்காகவும்” பயன்படுத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதற்கு தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களிடமும், தனி நபர்களிடமிருந்தும் ஸ்டாலின் நிதி திரட்டி வருகின்றார்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் இழப்பில் தமிழகத்தின் பில்லியனர்களின் செல்வத்தை ஸ்டாலின் பாதுகாப்பதற்கான ஒரு இழிந்த மறைப்பு இது. டி.ஆர். பாலு, ஜே.ஜெகதரட்க்ஷகன், கே.என். நேரு, துரைமுருகன் போன்ற தி.மு.. தலைவர்கள் மற்றும் மு.. ஸ்டாலின் மகன் உதயநிதி (எம்.எல்.), சகோதரி கனிமொழி (எம்.பி.), மருமகன் தயாநிதி மாறன் (எம்.பி.) மற்றும் மருமகன் சப்ரிசன் ஆகியோர் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை கொண்டுள்ளார்கள்.

ஜெகதரட்க்ஷகன் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டையில் 3.85 பில்லியன் டாலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட ஏராளமான தொகையை முதலீடு செய்துள்ளார். ஸ்டாலினின் மருமகன் கலாநிதி மாறனின் சொத்துக்களின் (தயாநிதி மாறனின் சகோதரர்) நிகர மதிப்பு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் இந்தியாவின் 18வது கோடீஸ்வரராக இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் அதிகளவு செல்வத்தைக் கொண்டிருக்கிற 10 கோடீஸ்வரர்கள் 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான செல்வங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்திய கோடிஸ்வரர்களின் செல்வம் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதுடன் வறுமையில் வாழ தள்ளப்பட்டிருக்கின்றனர்.மேலும் நூறாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனுக்களாக வாங்கிய ஸ்டாலின் 100 நாட்களுக்குள் அவற்றை தீர்ப்பதாக உறுதியளித்தார். இப்போது அவர் அந்த வாக்குறுதிகளை குப்பையில் எறிந்துள்ளார்.

கோடீஸ்வரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், மே மாதம்வரை முழு ஊரடங்கை அறிவித்திருக்கும் ஸ்டாலின், குடும்பங்களுக்கு மிகக் குறைந்த தொகையாக 2,000 ரூபாய் (27 அமெரிக்க டாலர்கள்) மட்டுமே வழங்கியுள்ளார். ஒரு மாதத்திற்கு குடும்பத்தை தனித்து விட்டிருக்கும் நிலையில் இந்தப் பணம் ஒரு குடும்பத்திற்கு மூன்று நாட்களுகே போதாது. இது மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை மோசமான வறுமையில் தள்ளியுள்ளதோடு, பலரை தொடர்ந்தும் வேலைக்கு செல்ல நிர்பந்தித்துள்ளது. இதனால், தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் கொரோனா வைரஸ் பரவுவது இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கைகளை பாஜக அரசும் மற்றும் இந்தியாவின் மாநில அரசுகளாலும் இழிவாக புறக்கணிக்கப்பட்டன. மக்களைப் பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுக்கவில்லை.

மாறாக, மோடி அரசாங்கம் மாநிலங்களில் அதன் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக அரசியல் சூழ்நிலையை விஷமாக்கி, சட்டசபை தேர்தலையும், கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளையும் நடத்தியது. கும்பமேளாவில் பங்கேற்க இந்து மத வெறியர்கள் கடந்த மாதம் இமயமலை நகரமான ஹரித்வாரில் இலட்சக்கணக்கில் கூடினர். இதேபோல் கடந்த மார்ச் மாதம், எந்த விதமான சமூக இடவெளியும் கடைப்பிடிக்கப்படாமல் திருச்சியில் திமுக ஏற்பாடு செய்த ஒரு தேர்தல் மாநாட்டுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 200,000 பேர் கலந்து கொண்டனர். இந்த அனைத்து நிகழ்வுகள் மூலம் பெருமளவில் வைரஸை பரவியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

இதன் விளைவாக, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 315,235 ஆகவும் 27,369,093 நபர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. . கொரோனா வைரஸின் தொற்று மற்றும் ஆபத்தான இந்தியாவில் திரிபடைந்த வைரஸ் மற்றும் ஆபத்தான இரண்டாம் நிலை நோய்த்தொற்றான "கருப்பு பூஞ்சை" இரண்டும் வேகமாக பரவுகின்றன.

இந்தியாவில், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பொது சுகாதாரம் மற்றும் ஆரம்ப பராமரிப்பு வசதிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். தமிழகம் முழுவதும், மருத்துவமனைகள், மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் போன்றவற்றுக்கான பற்றாக்குறைகள் மிக அதிக அளவில் உள்ளது. நீண்ட வரிசையில், மக்கள் மருத்துவமனைகளுக்கு முன்னால் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எரிக்கப்பட வேண்டிய இறந்தவர்களின் உடல்களால் மாயானம் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே பலர் இறந்துவிடுகின்றனர்.

திமுக அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் தொழிலாளர்களை, முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தியாகம் செய்ய நிர்ப்பந்திக்கிறது. சென்னையில் உள்ள ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் முழுஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 150,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற இடங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் கூறியது போல்: “முதலாளித்துவ தேசிய அரசு முறையை ஒழிப்பதன் அவசியத்தை இந்த பெருந் தொற்றுநோய் நிரூபித்திருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை உட்பட அதன் மிக அடிப்படையான உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் பிடியிலிருந்து விடுபட்டு, தனது வர்க்க நலன்களை பாதுகாத்து போராட நடவடிக்கை குழுக்கள் என்ற புதிய சுயாதீன அமைப்புகளை நிறுவ வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) “கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஒரு சோசலிச மூலோபாயத்தின் தேவை” குறித்த இணையவழி பொதுக் கூட்டத்தை மே 30 ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய இலங்கை நேரம் 6 மணிக்கு நடத்துகிறது. இக்கூட்டம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். அனைத்து உலக சோசலிச வலைத் தள (wsws.org) வாசகர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading