முன்னோக்கு

வூஹான் ஆய்வக சதிக் கோட்பாடு: அமெரிக்க முதலாளித்துவத்தின் "மிகப்பெரும் பொய்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரத்திலிருந்து, அமெரிக்க அச்சு மற்றும் ஒலி/ஒளிபரப்பு ஊடகமும், பைடென் நிர்வாகமும் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளும், கோவிட்-19 சீன ஆய்வத்தில் தோன்றியதென்ற அந்த சொல்லாடலை உயிர்ப்பிக்கும் நோக்கில் ஒரு வெறித்தனமான பிரச்சார நடவடிக்கையைத் தொடங்கி உள்ளன.

A lab at the Wuhan Institute of Virology [Credit: Chinatopix via AP] [AP Photo/Chinatopix via AP]

இந்த பொய், மேலதிக விஞ்ஞான ஆதாரங்களையும் மற்றும் மார்ச் இறுதியில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பு (WHO) விசாரணையின் கண்டுபிடிப்புகளையும் உதறி விடுகிறது. இது, மனித வரலாற்றிலேயே தரந்தாழ்ந்த மிகப் பெரிய பொய்களில் ஒன்றாக இருக்கும்—ஈராக்கின் "பேரழிவு ஆயுதங்கள்" பற்றி புஷ் நிர்வாகத்தின் பொய் கூற்றுக்களையும் விட இதுவொரு மிக பிரமாண்ட பொய்யாக இருக்கும்.

இந்த வைரஸ் ஒரு சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற கூற்றுக்கு எந்த விஞ்ஞான அடித்தளமோ அல்லது உள்ளபடியே நிஜத்திற்கான அடித்தளமோ இல்லை. வூஹான் நுண்கிருமியியல் பயிலக பணியாளர்கள் 2020 இன் இறுதியில் நோய்வாய்பட்டார்கள் என்பதே இன்றுவரையில், வெள்ளை மாளிகை, அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் முன்வைக்கும் ஒரே ஆதாரமாக உள்ளது, அதுவும் அந்த பணியாளர்களின் நோய் அறிகுறிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையே "பொதுவான பருவகால நோய்களுடன் … ஒத்துப் போவதாக" ஒப்புக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்த, ஓர் "ஆயுதமயமாக்கப்பட்ட வைரஸை" பயன்படுத்தி இந்த தொற்றுநோயை வேண்டுமென்றே பரப்பியதற்கு சீனா தான் பொறுப்பு என்று வாதிடுவதற்கு, முன்னதாக ட்ரம்ப் நிர்வாகம் தான் வூஹான் பயிலகத்தில் ஏற்பட்ட அந்த நோய்களைச் சுட்டிக்காட்டியது. இப்போது இது பிரதான ஊடக நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பைடென் நிர்வாகத்தால் சட்டப்பூர்வமாக்கப்படுகின்றன.

வியாழக்கிழமை அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் எழுதுகையில், அமெரிக்காவின் "உளவுத்துறை சமூகம்" "இரண்டு சாத்தியமான சூழ்நிலைகளைச் சுற்றி கவனம் செலுத்துகிறது: ஒன்று, அது நோய்தொற்றிய விலங்குகளுடன் ஏற்பட்ட மனித தொடர்பிலிருந்து இயற்கையாக ஏற்பட்டது, அல்லது அதுவொரு தற்செயலான ஆய்வக விபத்தால் ஏற்பட்டது,” என்று எழுதினார். கோவிட்-19 "இயற்கையாக வெளிப்படவில்லை" என்றால், அந்த நோய், ஜனவரியில் ட்ரம்ப் வெளியுறவுத்துறை வலியுறுத்தியவாறு, உயிரி-பொறியியல் மூலமாக உருவாக்கப்பட்டது.

கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணை தெளிவுபடுத்தியதைப் போல, கோவிட்-19 ஐ போன்ற பல எண்ணற்ற வைரஸ்கள் வௌவால்களில் காணப்படுகின்றன, இதில் 96.2 சதவீதம் கோவிட்-19 ஐ வைரஸான Sars-COV-2 போலவே உள்ள RaTG13 என்பதும் உள்ளடங்கும். 2003–2004 SARS வெடிப்பை ஏற்படுத்திய Sars-COV-1 வௌவாலில் இருந்து வந்த கொரோனா வைரஸ் ஆகும்.

கோவிட்-19 உயிரி-பொறியியல் உருவாக்கம் என்ற வாதம் மீது ஏதேனும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், அந்நோயைக் குறித்து ஏதேனும் அல்லது அதன் தோற்றுவாய்களில் ஏதேனும் இயற்கையாக தோன்றும் ஏனைய வைரஸ்களுடன் பொருத்தமின்றி இருக்க வேண்டும். ஆனால் இதை எடுத்துக்காட்ட அங்கே எதுவும் இல்லை. அந்நோயின் தோற்றுவாய் குறித்து உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கையின்படி, கோவிட்-19 “வேண்டுமென்றே செய்யப்பட்ட உயிரி-பொறியியல்" உருவாக்கம் என்பது "மரபணு பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து … நிராகரிக்கப்பட்டது."

ஆய்வக-உருவாக்க கோட்பாட்டை ஊக்குவிப்பதன் பின்னணியில் உள்ள உந்து சக்தி, அரசியல் நிலைமைகள் மற்றும் சமூக நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது, இது இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய நோக்கங்களால் தூண்டப்படுகிறது.

முதலாவதாக, பாரியளவில் மரணங்களுக்கு இட்டுச் சென்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் ஏனைய அரசாங்கங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதை அது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயின் பெரும் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், இவ்வளவு பேர் ஏன் இறந்தார்கள் என்ற விளக்கங்களுக்கான கோரிக்கைகளும், இதற்கு பொறுப்பானவர்களைக் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழும்.

ஆரம்பத்தில் இருந்தே, அனைத்து பிரதான முதலாளித்துவ சக்திகளின் அரசாங்கங்களும் இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பை பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கும், முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பேராசைக்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நோக்கங்களுக்கும் கீழ்படிய செய்தன. அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தி அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிதிய உதவிகள் வழங்குவது உட்பட, அனைத்து விஞ்ஞானிகளும் தொற்றுநோய் நிபுணர்களும் ஒப்புக் கொண்ட அவசியமான நடவடிக்கைகள், நிதிய சந்தைகளையும் பணக்காரர்களின் நலன்களையும் கீழறுத்ததால் அவை நிராகரிக்கப்பட்டன.

இதன் ஒரு நேரடி விளைவாக, அமெரிக்காவில் மட்டும் 600,000 க்கும் அதிகமானவர்கள் உள்ளடங்கலாக, உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்களிடையே அந்நோய் பரவுவதற்காகவே ஆலோசகர்கள் "நோய் பரப்பும் விருந்துகள்" (chicken pox parties) நடத்த அறிவுறுத்திய நிலையில், போரிஸ் ஜோன்சனின் பிரிட்டன் அரசாங்க முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸின் இவ்வார விளக்கவுரை, அரசாங்கம் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயத்தை முன்னெடுத்ததைத் தெளிவுபடுத்தியது. இந்தக் கொள்கையால் 800,000 பேர் கொல்லப்படுவார்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது.

பிரேசிலில், மரண எண்ணிக்கை அதிகபட்சமாக 1.4 மில்லியனை எட்டும் என்று அனுமானித்து (இப்போது அது 450,000 ஆக உள்ளது), ஜயர் போல்சொனாரோ அந்த வைரஸ் தங்குதடையின்றி பரவ அனுமதிக்கும் ஒரு கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றியதை இந்த தொற்றுநோய் மீதான செனட் விசாரணைகள் கூடுதலாக எடுத்துக்காட்டின.

அமெரிக்காவில், 2020 மார்ச்சில் சமூக அமைதியின்மை எழுச்சியைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட பகுதியான ஆரம்ப கட்டுப்பாடுகளுக்கு பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் "குணப்படுத்துதல், நோயை விட மோசமாக இருந்துவிட கூடாது,” என்ற முழக்கத்தின் கீழ், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த மனிதப் படுகொலைக் கொள்கை மிகத் தெளிவாக ட்ரம்பால் எடுத்துக்காட்டப்பட்ட போதினும், அது ஊடக ஆதரவைப் பெற்றதுடன், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இரண்டு கட்சிகளது மாநில அரசாங்கங்களாலும் செயல்படுத்தப்பட்டன.

முதலாளித்துவ அரசாங்க தலைவர்களின் கரங்கள் இரத்தத்தால் நனைந்துள்ளன, அவர்கள் சீனாவைப் பலிக்கடா ஆக்க பார்க்கிறார்கள்.

இரண்டாவதாக, சீனாவுடன் பொருளாதார மற்றும் சாத்தியமான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்யும் பைடென் நிர்வாகத்தின் மத்திய மூலோபாய நோக்கத்தை ஆதரிக்க வூஹான் ஆய்வக பொய் தேசியவாத வெறுப்பை முடுக்கிவிட முனைகிறது.

பைடென் நிர்வாகம் பதவியேற்றதில் இருந்தே, அமெரிக்கா ஒரு "திருப்புமுனையில்" இருப்பதாகவும், சீனாவுக்கு எதிராக "21 ஆம் நூற்றாண்டை வெல்வதற்கான" ஒரு போராட்டத்தை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்க ஊடகமோ, சீனா அதன் வீகர் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி வருவதாக, உளவுத்துறை அமைப்புகள் முடுக்கிவிட்ட கூற்றின் மீது மக்கள் ஆர்வத்தைத் தூண்ட முயன்று தோல்வியடைந்துள்ளன. ஆனால் அதன் பிரச்சாரம், இன்று வரையில் அதன் உத்தேசிக்கப்பட்ட நோக்கத்தை எட்டவில்லை.

ஆகவே, கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தெரிந்த யாரேனும் ஒருவரைக் கொன்றுள்ள இந்த கொடிய தொற்றுநோய்க்கு சீனா தான் பொறுப்பு என்று இன்னும் அதிக ஆழமான மற்றும் ஆபத்தான பொய் அதற்கு அவசியப்படுகிறது.

ஈராக் படையெடுப்புக்குச் சாக்குப்போக்காக சேவையாற்றிய "பேரழிவுகரமான ஆயுதங்களை" ஈராக் மறைத்து வைத்திருப்பதாக புஷ் நிர்வாகத்தின் இட்டுக்கட்டப்பட்ட கூற்றுக்கள் தான் வூஹான் ஆய்வக பொய்யை ஊக்குவிப்பதற்கான மிக நேரடி முன்னுதாரணமாக உள்ளது. அந்த அணுகுமுறை துல்லியமாக இதே போல தான் இருந்தது. மழுப்பலான வார்த்தைகளுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் விசாரணை முடிவுகள், ஊடகங்களால் "அநாமதேய ஆதாரநபர்கள்" மூலமாக பாய்ச்சப்பட்டு, அத்துடன் நிர்வாக அதிகாரிகளின் பகிரங்கமான பொய் அறிக்கைகளுடன் சேர்ந்து—ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்ற ஒரு போருக்குச் சாக்குப்போக்கு ஜோடிக்கப்பட்டது.

"வூஹான் ஆய்வக" சதிக் கோட்பாட்டின் கட்டமைப்பும் வழிமுறைகளும், அரசியல் நோக்கங்களுக்காக ஊக்குவிக்கப்பட்ட மற்ற சதிக் கோட்பாடுகளுடன் அதிகளவில் ஒத்திருக்கின்றன, இவற்றுடன் வாஷிங்டன் மற்றும் ஏனைய உலக தலைநகரங்களிலுள்ள பிரச்சாரகர்கள் மிகவும் பரிச்சயமானவர்கள். "ரஷ்ய தவறான தகவல்களின் கைரேகைகள்: எய்ட்ஸ் முதல் போலி செய்திகள் வரை," என்ற தலைப்பில், டிசம்பர் 2017 இல், நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டது, அது சோவியத்தும் கிழக்கு ஜேர்மன் உளவுத்துறை அமைப்புகளும் HIV இன் தோற்றுவாய்கள் குறித்து ஒரு சதிக் கோட்பாட்டை உருவாக்கியதாக வாதிட்டது.

"ஆபரேஷன் Infektion என்றழைக்கப்படனும் கிழக்கு ஜேர்மனிய வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளின் நடவடிக்கை," என்ற தலைப்பில் டைம்ஸ் எழுதியது, "1980 களின் தவறான தகவல் பிரச்சாரம், எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ் அமெரிக்காவால் நடத்தப்பட்ட உயிரி ஆயுத பரிசோதனைகளின் விளைவு என்று ஒரு சதிக் கோட்பாட்டை விதைத்தது."

"இந்த நோய் அமெரிக்க இரகசிய சேவைகள் மற்றும் பென்டகனின் இரகசிய சேவைகளின் விளைவு, புதிய வகை உயிரி-ஆயுதங்கள் கட்டுப்பாட்டை மீறி வெளிவந்துள்ளன" என்ற கண்ணோட்டத்தை சோவியத் உளவுத்துறை அமைப்பு பரப்ப முயன்று வருவதாக 1985 இல் KGB இன் உள்அலுவலக ஆவணம் ஒன்று குறிப்பிட்டது. “எய்ட்ஸ் இந்தியாவுக்குள் நுழையலாம்: அமெரிக்க பரிசோதனைகளால் தோற்றுவிக்கப்பட்ட மர்ம நோய்" என்று தலைப்பிட்டு KGB இந்திய பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை வெளியிட்டது, அது மேரிலாந்து, ஃபோர்ட் டெட்ரிக் அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் அந்நோய் தோன்றியதாக வாதிட்டது.

இந்த தவறான தகவல் பிரச்சாரத்தின் விளைவாக, 2005 இல் ராண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஓரேகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வில், கிட்டத்தட்ட 50 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் எய்ட்ஸ் நோய் மனிதரால் உருவாக்கப்பட்டதென கருதியதை வெளிப்படுத்தியது. உலகெங்கிலும் இந்த சதிக் கோட்பாட்டின் பரவல், சோவியத் ஒன்றியத்திலேயே உள்ளடங்கலாக எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய்க்கு ஒரு விஞ்ஞானபூர்வ விடையிறுப்பை தொடங்குவதை மிகவும் கடினமாக்கியது.

“போதுமான சேற்றை அள்ளி வீசுங்கள், யாராவது சிக்குவார்கள்,” என்ற தவறான தகவல் பரப்பும் உத்தியை விளக்குவற்கு டைம்ஸ் வரலாற்றாளர் தாமஸ் போகார்ட் ஐ மேற்கோளிட்டது.

டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏனைய பிரதான செய்தி ஊடக நிறுவனங்களும், பைடென் நிர்வாகத்துடன் சேர்ந்து, வூஹான் ஆய்வக பொய்யைப் பரப்ப இந்த உத்தியைத் தான் பயன்படுத்தி வருகின்றன.

டைம்ஸ் கட்டுரை, "ரஷ்ய தலையீடு" என்ற "பொய் செய்தி" கதையாடலை ஊக்குவிக்க நோக்கம் கொண்டிருந்தாலும், உண்மை என்னவென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கம் தான் இப்போது "பொய் செய்திகளின்" மிகப்பெரிய பிரச்சாரகராக உள்ளது.

வூஹான் ஆய்வக பொய்யைச் சட்டபூர்வமாக்குவது அமெரிக்காவிற்குள் கணக்கில்லா அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

தீவிர வலதுசாரிகளால் ஊக்குவிக்கப்படும் "ஆயுதமயமாக்கப்பட்ட வைரஸ்" என்ற இந்த கூற்று இப்போது சட்டபூர்வமானால், ஒபாமா ஓர் அமெரிக்க பிரஜை இல்லை என்று "பிறப்பு சம்பந்தமான" ட்ரம்பின் கூற்று, உயர்மட்ட ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர்கள் குழந்தை விபச்சார வளையத்தில் ஈடுபட்டனர் என்ற “pizzagate” சதிக் கோட்பாடு, அனைத்திற்கும் மேலாக, ஜனவரி 6 பாசிச கிளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த, 2020 தேர்தல் களவாடப்பட்டது என்ற கூற்று என ட்ரம்ப் நிர்வாகம் ஊக்குவித்த மற்ற பொய்கள் மற்றும் சதிகள் குறித்து என்ன சொல்வது.

குறிப்பாக, செய்தி ஊடகம் இப்போது கொரோனா வைரஸின் தோற்றுவாய்கள் மீதான "விவாதத்தில்" ஒரு முக்கியமான குரலாக உள்ள அர்கன்சாஸ் செனட்டர் "அதிநவீன" பாசிச டாம் காட்டனைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. வூஹான் ஆய்வகக் கோட்பாட்டை ஊக்குவித்ததற்காக "வரலாற்று புத்தகங்கள் மதிப்பளிக்கும்" என்று வாஷிங்டன் போஸ்ட் இன் முன்னணி உண்மை-சரிபார்ப்பாளர் கிளென் கெஸ்லர் அறிவித்தார்.

போலீஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களை நசுக்க "துருப்புக்களை அனுப்ப" ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுத்து ஜூலை 2020 இல் காட்டன் இழிவார்ந்த ஒரு துணை தலையங்கம் வெளியிட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்ற பொய்க்கு முன்னணி ஆதரவாளராக உள்ள அவர், தலைமை செயலகத்தை அடித்து நொறுக்கிய குண்டர்களுடன் ஒருங்கிணைந்து ஜனவரி 6 இல் தேர்வுக் குழு வாக்குகளை அங்கீகரிப்பதை நிராகரித்தார்.

இந்தப் பொய், உள்நாட்டில், மக்கள் எதிர்ப்பைச் சட்டபூர்வமற்றதாக ஆக்கும் விளைவைக் கொண்டிருக்கும், மேலும் பாரிய தணிக்கைக்கான அடித்தளங்களை தயார் செய்யும், அத்துடன் அரசாங்கக் கொள்கையை விமர்சிக்கும் அனைவரும் சீனாவின் முகவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை வாஷிங்டன் போஸ்ட் ஊக்குவிப்பதை அம்பலப்படுத்தி உலக சோசலிச வலைத் தள கட்டுரை ஒன்று ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு பேஸ்புக்கில் தணிக்கை செய்யப்பட்டது, அதை பகிர்ந்து கொள்ள முயன்ற கணக்குகள் இடைநிறுத்தம் செய்யப்படுதவற்கும் இது வழிவகுத்தது. இதற்கிடையே, அந்த வைரஸ் ஒரு சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்ற சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்கும் பதிவுகளை பேஸ்புக் இனி முடக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த பொய் அமெரிக்காவின் அரசியல் இரத்த ஓட்டத்தில் நுழைந்தவுடன், அது நச்சார்ந்த மற்றும் கட்டுப்படுத்தவியலா விளைவுகளைக் கொண்டிருக்கும். அது விஞ்ஞானிகளுக்கு எதிராகவும், ஆக்ரோஷமாக அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்க்கு ஒரு விஞ்ஞானபூர்வ விடையிறுப்புக்கு அழைப்பு விடுக்கும் அனைவருக்கு எதிராகவும் பழிவேட்டைகளையும், அச்சுறுத்தல்களையும் மற்றும் வன்முறையான மிரட்டல்களையும் தூண்டிவிடும். ஆசிய-எதிர்ப்பு வன்முறை சம்பவங்கள் ஏற்கனவே அதிகரித்து கொண்டிருக்கின்றன.

சீன அரசாங்கம், அதன் பங்கிற்கு, இந்தப் பொய் ஊக்குவிப்பை போருக்கான தயாரிப்பாக விளங்கிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதோடு, தீவிரப்பாட்டை இன்னும் சாத்தியமானளவுக்கு அதிகப்படுத்தி, ஒரு பயங்கர இராணுவவாத சுழற்சியை உருவாக்கும் விதத்தில் விடையிறுத்து வருகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்கள் மற்றும் இராணுவங்களான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதல், மனிதகுலம் மொத்தத்திற்கும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தால் பரப்பப்படும் இந்த பெரும் பொய்யை அனைத்து தொழிலாளர்களும், விஞ்ஞானிகள் மற்றும் அறிவுஜீவிகளும் எதிர்க்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. பொதுமக்களுக்குக் கல்வியூட்டவும், விஞ்ஞானத்தில் வெளிநாட்டவர் விரோத வக்கிரத்தை எதிர்க்கவும் விஞ்ஞானிகளுக்குக் கடமை உள்ளது. இந்த பொய்யை ஊக்குவித்து பரப்பும் முயற்சிகளைப் பத்திரிகையாளர்கள் தீவிரமாக விசாரித்து அம்பலப்படுத்த வேண்டும்.

உழைக்கும் மக்கள், உண்மையான கணக்கெடுப்பைக் கோருவதன் மூலமாக, முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் இந்த பொய்யை எதிர்க்க வேண்டும். “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையிலிருந்து இலாபமடைந்த பெருநிறுவன செயலதிகாரிகளுடன் சேர்ந்து, அக்கொள்கைக்குப் பொறுப்பானவர்கள் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கு சீனாவின் காலடியில் பழி போட ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பலரைக் கொன்றுள்ள இந்த தொற்றுநோயை தொழிலாளர்கள் நிறுத்த வேண்டுமானால், அவர்கள் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் உலகின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் மூலமாக தேசியவாத வெறுப்பு, அறியாமை மற்றும் வன்முறையைத் தூண்டும் முதலாளித்துவவாதிகளின் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும்.

Loading