வைரஸ் வல்லுநர்களைக் கொல்ல திட்டமிட்ட பெல்ஜிய நவ-நாஜி அதிகாரியை வலைவீசித் தேடுவது தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெல்ஜியத்தில் ஒரு இராணுவ அதிகாரியும் வலதுசாரி தீவிரவாதியுமான ஜூர்கன் கோனிங்ஸ் (Jürgen Conings) ஐ தேடுதல் வேட்டை செய்வது தொடர்கிறது, அவர் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொரோனா வைரஸ் வல்லுநர்களை படுகொலை செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

46 வயதான கோனிங்ஸ் திங்களன்று காணாமல் போனார், அவர், அவரது காதலிக்கும் மற்றொன்று பொலிசுக்குமாக இரண்டு குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். கடிதங்களில், அவர் "எதிர்ப்பில் நுழைவதாக" அறிவித்ததாகவும், அவர் விரும்பியபடி தனது "இறுதி நாட்களை" வாழ்வதாகவும் கூறப்படுகிறது. அவரது காதலி பகிரங்கமாக அவரை திரும்பிவருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெல்ஜியத்திலுள்ள அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஒரு ஆயுதமேந்திய நபரை தேடுகின்றனர், அவர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ளார், அவர் அதிவலது அனுதாபியும் மற்றும் பலரை அச்சுறுத்தியவருமாவார் (Belgian Federal Police via AP)

இந்த மனித வேட்டையானது நெதர்லாந்தின் எல்லைக்கு வெகு அருகிலுள்ள லிம்போர்க் பிராந்தியத்தில் குவிந்துள்ளது. கோனிங்ஸ் பெரிதும் ஆயுதங்களை தரித்துள்ளதாகவும் மற்றும் குறிபார்த்து சுடுவதில் ஒரு நிபுணராக புகழ்பெற்றவர் என்றும் கருதப்படுகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை, அவர் இராணுவத்தில் ஆயுதசேகரிப்பு இடத்தை அணுகக்கூடிய ஒரு இராணுவ பயிற்றுவிப்பாளர் என்ற தனது பதவியை ஒரு ஆயுத சேகரிப்பை தயாரிப்பதற்கு பயன்படுத்தினார். கோனிங்கின் கைவிடப்பட்ட விளையாட்டு ரக காரிற்குள், டாங்கி எதிர்ப்பு ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் துப்பாக்கிக்கான ரவைகளும் கண்டுபிடித்ததாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் அறிவித்தனர். அவர் "அநேகமாக இன்னும் இலகுரக ஆயுதங்களை வைத்திருக்கிறார்," என்றும் அவர்கள் கூறினர்.

வெள்ளியன்று, பெல்ஜிய நீதித்துறை அமைச்சர் வன்சென்ட் வான் குயிக்போர்ன் திங்களன்று காணாமல் போன அன்று மாலை, கோனிங்ஸ் "ஒரு தாக்குதல் இலக்கின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக" கழித்ததாக அறிவித்தார், ஆனால் தாக்குதல் இலக்கு யார் என்பதைக் குறிப்பிட மறுத்துவிட்டார். பெல்ஜிய அரசாங்கத்தின் முன்னணி சுகாதார செய்தித் தொடர்பாளரும், கொரோனா வைரஸ் பொதுமுடக்கங்களை கண்டிக்கும் தீவிர வலதுசாரி குழுக்களின் இலக்காக மார்க் வான் ரான்ஸ்ட்டின் வீடு அதுவென்று ஃபிளெமிஷ் மொழி தொலைக்காட்சி நிலையம் VRT தெரிவித்தது. அவர்கள் கொரோனா வைரஸானது அதுவே ஒரு சதி என்று கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை வரை, மனித வேட்டையானது ஓட் காம்பின் (Haute Campine) தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் குவிந்திருந்தது. தேசிய பூங்காவை எல்லையாகக் கொண்ட E314 விரைவு மோட்டர் சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டது. 12,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட காடுகள் மற்றும் நிலங்களை சோதனையிட, 250 போலீசார், 150 இராணுவத்தினர் மற்றும் ஜேர்மனி, நெதர்லாந்தின் பிரதிநிதிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.

வெள்ளியன்று அரசாங்கமானது தேசிய பூங்காவில் மனித வேட்டை முடிவுக்கு வரும் என்று அறிவித்தது. "பயங்கரவாத படுகொலை முயற்சி" மற்றும் "பயங்கரவாத உள்ளடக்கத்தில் ஆயுதங்களை வைத்திருந்தது" என்ற கோனிங்ஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.

கோனிங்ஸின் சாத்தியமான தாக்குதல் இலக்குகள் யார் என்பது தெளிவாக இல்லை. ஓட் காம்பின் பூங்காவைச் சுற்றியுள்ள மசூதிகள் உச்சகட்ட கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது, மற்றும் அண்டை நகராட்சிகளான மாஸ்மெக்செலனிலுள்ள பல மசூதிகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக தங்கள் கதவுகளை மூடிவிட்டன என்று ஹெட் நியுவ்ஸ்ப்ளாட்(Het Nieuwsblad)பத்திரிகைகூறியது. வைரஸ் வல்லுநர் வான் ரான்ஸ்டின் குடும்பம் திங்களன்று முதல் போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்க உறுப்பினர்களைக் கொன்றுவிடுவதாக கோனிங்ஸ் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் சமூக இடைவெளி நடவடிக்கைகள் எதையும் கண்டிக்கும் பாசிச பிரச்சாரத்தால் அவர் உற்சாகமளிப்படுகிறார் என்பதை கோனிங்ஸின் கடிதங்கள் தெளிவுபடுத்துகின்றன. "நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை முடிவு செய்யும் மக்களின் பொய்களுடன் நான் தொடர்ந்து வாழ முடியாது," என்று அவர் எழுதுகிறார். "அரசியல் உயரடுக்கு மற்றும் இப்போது வைரஸ் வல்லுநர்கள் நீங்களும் நானும் எப்படி வாழ்வது என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் வெறுப்பு மற்றும் விரக்தியை விதைக்கின்றனர் ..."

அவர் ஒரு உந்துதலின் பேரில் செயற்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார், மேலும் தனது தாக்குதலை நீண்ட காலத்திற்கு முன்பே தயார் செய்துள்ளார். "நான் அரசின் எதிரியாக மாறுவேன் என்று எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத் தேடி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் என்னைக் கண்டுபிடிப்பார்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக, எல்லாம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது, நான் என்னை தயார் செய்துவிட்டேன்."

கோனிங்ஸின் பயங்கரவாத சதியால் எழுப்பப்படும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன.

முதலாவதாக, தீவிர வலதுசாரி அனுதாபங்கள் கொண்ட இராணுவத்தின் உறுப்பினர் என்ற முறையிலும், பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடிய ஒரு சாத்தியமானவர் என்ற முறையிலும் அவர் உளவுத்துறை அமைப்புகளால் மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கூட அத்தகைய ஒரு நபர் பெல்ஜிய இராணுவத்தில் ஒரு இராணுவ பயிற்சி அதிகாரியாக ஒரு மூத்த பதவியில் எவ்வாறு வைக்கப்பட்டார் என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை, மேலும் அவர் ஆயுதக் கிடங்கிற்கு அணுகல் வழங்கப்பட்டது என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை.

பெயரிடப்படாத பெல்ஜிய அரசாங்க ஆதாரங்களை மேற்கோளிட்டு France Info ஊடகமானது, கோனிங்ஸ் தற்போது தீவிர வலதுசாரிகளுடன் "அனுதாபங்களை" கொண்டிருந்ததற்காக கண்காணிப்பிலுள்ள பெல்ஜிய இராணுவத்தின் "சுமார் 30" உறுப்பினர்களில் ஒருவர் என்று தெரிவித்தது.

அதே காரணத்திற்காக, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய பகுப்பாய்வுக்கான பெல்ஜிய உளவுத்துறை அமைப்பான OCAM ஆனது, கடந்த மூன்று மாதங்களாக அவரை ஒரு அச்சுறுத்தலாக அதன் கோப்பில் வைத்துள்ளது என்று பெல்ஜிய பிரதம மந்திரி அலெக்சாண்டர் டு க்ரூ கூறினார்.

பாதுகாப்பு மந்திரி லுடிவைன் டெடோண்டர் பெல்ஜிய பாராளுமன்றத்தில், பேஸ்புக்கில் "இனவாத கருத்துக்கள்" மற்றும் "அச்சுறுத்தல்களை" தெரிவித்த பின்னர், 2020 இல் இராணுவ உயர்மட்டத்திலிருந்து கோனிங்ஸ் உத்தியோகபூர்வ ஒப்புதலைப் பெற்றதாக ஒப்புக்கொண்டார். ஒரு இராணுவ மேஜர் ஜெனரல் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார், பின்னர் அவை கைவிடப்பட்டன என்று டெடோண்டர் கூறினார்.

கோனிங்ஸுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதை அரசாங்கம் வெறுமனே பாதுகாப்பில் ஒரு முறிவு என்று விளக்க முயற்சித்துள்ளது. அதன்படி, டு க்ரூ தீவிரவாத கருத்துக்களைக் கொண்ட தனிநபர்களுக்கு இராணுவத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆயினும் இது மிகவும் குறைவாகவே விளக்குகிறது. கோனிங்ஸ் இராணுவத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் ஆட்சேர்ப்புக்கான இராணுவ பயிற்றுவிப்பாளரின் பதவியில் வைக்கப்பட்டார். மேலும், அவர் தனது நிலையை எவ்வாறு பயன்படுத்தி பரந்த அளவிலான ஆயுதங்களைப் பெற முடிந்தது என்பது இன்னும் விளக்கப்படவில்லை. மற்றய இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்படாமல், கோனிங்ஸ் தனியாக செயற்படுகிறார் என்ற உத்தியோகபூர்வ விளக்கம் மிகவும் பலவீனமானது. ஆயுதக் குவியலைக் கண்காணிப்பதற்கான நெறிமுறைகள் அடிப்படையில் இல்லை என்று அது அர்த்தப்படுத்தும்.

ஒரு மாற்றீடு, மற்றும் இன்னும் நம்பத்தகுந்த விளக்கம் என்னவென்றால், கோனிங்ஸ் இராணுவத்திற்குள் ஒரு அதிவலது வலையமைப்பின் ஒரு பகுதியாக, குறைந்தபட்சம் ஒரு கட்டத்தில் செயற்பட்டார்.

இது மற்றய மேற்கு ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக ஜேர்மனி, அத்துடன் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் அத்தகைய வலைப்பின்னல்கள் இருப்பது பற்றி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளவற்றுடன் ஒத்திருக்கிறது.

ஜேர்மனியில், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட நவ-நாஜி வலைப்பின்னல்கள் ஜேர்மனிக்குள் உள்ளன, சிறப்புப் படைகள் மற்றும் அரசு எந்திரம். "எக்ஸ் நாள்" என்று கூறப்படுவதற்காக படுகொலை செய்யப்பட வேண்டிய இடதுசாரி அரசியல் எதிரிகளின் கொலைப் பட்டியல்கள் பயங்கரவாத பிரிவுகளால் தயாரிக்கப்பட்டு, ஒரு நீண்ட உள்நாட்டுப் போருக்கான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை சேமித்து வைத்தமை பற்றி பல அறிக்கைகள் வந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, 2018 இல், ஒரு ஜேர்மனிய செய்தி இதழின் விசாரணை இவ்வாறு விளக்கியது: "பல விசாரணைகள் அரசியல் எதிரிகளை வேண்டுமென்றே கொல்வதிலிருந்து வெட்கப்படக்கூடாது என்று கருதப்படும் ஒரு சதிகார துருப்புக்களின் சித்திரத்தை வரைகின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, உயரடுக்கு போராளிகள் ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்துடனான ஜேர்மனிய எல்லையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் இரகசிய தேக்கங்களையும் அமைத்திருந்தனர்."

பிரான்சில், ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஒரு அதிவலது வலைப்பின்னல் நவபாசிச இதழான Valeurs Actuelles ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது, பிரான்சில் அதிகரித்து வரும் இஸ்லாமிய அச்சுறுத்தல் மற்றும் "இறப்புக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்" ஒரு சாத்தியமான உள்நாட்டுப் போரை ஒடுக்குவதற்கு ஒரு இராணுவ திடீர் சதிக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர். இந்த மாதம் வெளியிடப்பட்ட பின்னர், வந்த இன்னொரு கடிதம் மற்றும் 2,000 பணியிலிருக்கும் இராணுவத்தினர் கையெழுத்திட்டதாக கூறப்படும் தளபதிகளின் கடிதத்தை ஆதரித்தனர்.

ஸ்பெயினில், ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள் மார்ச் 2020ல் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களை கண்டனம் செய்துள்ளனர். ஸ்பெயின் மக்களில் பாதிப்பேர் வரை படுகொலை செய்ய வேண்டியிருக்கலாம் என்று அவர்கள் அறிவித்தனர்.

பெல்ஜியத்தில் நவ-நாஜி வலைப்பின்னல்களுடன் கோனிங்ஸின் ஆவணப்படுத்தப்பட்ட உறவுகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்படத் தொடங்கியுள்ளன. இந்த வார இறுதியில் பெல்ஜிய போலீசார் கோனிங்ஸை தேடுவதன் ஒரு பகுதியாக அதிவலது குழுக்களின் அறியப்பட்ட உறுப்பினர்களின் பல வீடுகளை சோதனையிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ஃபிளெமிஷ் பாசிச "இரத்தமும் மண்ணும் கெளரவமானது, விசுவாசத்தில் இருக்கிறது" (Blood, Bodem, Eer en Trouw) என்ற இயக்கத்தின் முன்னாள் தலைவரான தோமஸ் புட்டான்சும் அடங்குகிறார். அவருக்கு 2014 இல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஒரு ஆண்டில் சிறைத்தண்டனை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

Loading