மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெருநிறுவன ஆதரவு ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தினால் (UAW) பேசிமுடிக்கப்பட்ட இரண்டாவது விலைபேசல் ஒப்பந்தம் ஞாயிறன்று பாரிய எண்ணிக்கையில் மறுதலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேர்ஜீனியாவின் டப்ளின் நகரில் உள்ள வொல்வோ கனரக வாகன வட அமெரிக்க நியூ ரிவர் வலி (NRV) ஆலையில் 3,000 தொழிலாளர்கள் மீண்டும் முற்றுகைப் போராட்டத்திற்குத் திரும்பினர். வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்களின் போராட்டம் தேசிய ஊடகங்களில் மிகக் குறைந்தளவே செய்தியாக்கப்பட்டது, நடுத்தர-வர்க்க போலி-இடது அமைப்புகளின் வெளியீடுகளில் கிட்டத்தட்ட உதாசீனம் செய்யப்பட்டது என்கின்ற நிலையில், ஞாயிறு வாக்கெடுப்புக்கு இட்டுச்சென்ற நிகழ்வுகளைக் குறித்து ஒரு சுருக்கமான மீளாய்வை வழங்குவது அவசியமாயுள்ளது.
UAW இன் காட்டிக்கொடுப்பு
சுவீடனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த நாடுகடந்த நிறுவனத்திற்கு கடந்த நான்கு ஒப்பந்தங்களின் போது UAW ஆல் வழங்கப்பட்டிருந்த விட்டுக்கொடுப்புகளை திரும்பப் பெற்றாக வேண்டும் என்ற உறுதியுடன் வொல்வோ தொழிலாளர்கள் முதன்முதலில் ஏப்ரல் 17 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஏப்ரல் 30 அன்று, தொழிலாளர்கள் ஒப்பந்தத்தைப் பார்த்திருக்கவும் இல்லை வாக்களித்திருக்கவும் இல்லை என்ற நிலையில், ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் அறிவித்தது.
அவமதிப்பான விட்டுக்கொடுப்புகளால் நிரம்பியிருந்த இந்த உடன்பாட்டின் விபரங்கள் வொல்வோ சாமானியத் தொழிலாளர்கள் குழுவின் (VWRFC) முயற்சிகளால் கசிந்ததை அடுத்து, ஆலை முழுவதும் ஒரு கோபாவேசமான எதிர்ப்பலையின் சூறாவளி வீசியது. மே 16 அன்று நடந்த வாக்கெடுப்பில் வெறும் 9 சதவீதம் பேரே ஆதரவாய் வாக்களிக்க 91 சதவீத எதிர்ப்பு என்னும் மாபெரும் வித்தியாசத்தில் இந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது.
வேலைநிறுத்தத்தைத் தொடர மறுத்து, UAW இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றது. ஒரு வாரத்திற்கு அதிகம் மிகாதவொரு காலத்திற்குள்ளாக, தொழிற்சங்கம், ஒரு தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாய் அறிவித்தது. தொழிலாளர்களைப் பயமுறுத்தும் முயற்சியில் தொழிற்சங்கம், இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் உடன்பாட்டில் முன்னேற்றமின்றி இன்னொரு ஆறுமாத கால வேலைநிறுத்தத்தில் அது முடியும் என்று எச்சரித்தது.
இற்றுப்போன பழைய ஒப்பந்தத்தின் மொழியை மட்டுமே தொழிற்சங்கம் மாற்றிப் பயன்படுத்தியிருந்தது என்பது தெளிவான நிலையில், இந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், சாமானியத் தொழிலாளர்களது எதிர்ப்பு தீவிரமடைந்து, அதன் உச்சமாய் தொழிற்சங்கத்தின் விலைபேசல் ஒப்பந்தம் ஞாயிறன்று இரண்டாம் முறையாக நிராகரிக்கப்பட்டது. மறுபடியும், 90 சதவீத தொழிலாளர்கள் உடன்பாட்டிற்கு எதிராக வாக்களித்தனர்.
எதிர்ப்பைக் கட்டுப்படுத்த வழிதெரியாத நிலையில், UAW, கடைசியாக திங்கள் மதியம் வேலைநிறுத்தத்தை தொடர அங்கீகாரமளித்தது.
சாமானியத் தொழிலாளர்கள் கிளர்ச்சி
UAW வேலைநிறுத்தத்தை விலைபேச முனைந்ததை, தொழிற்சாலைத் தொழிலாளர்களின் ஒரு சக்திவாய்ந்த படையணி பெருவாரியான விதத்தில் நிராகரித்திருப்பதானது UAW மற்றும் AFL-CIO உடன் இணைந்த தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் எழுச்சியின் மிகசமீபத்திய வெளிப்பாடாய் இருக்கிறது.
சமீப மாதங்களில், பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இந்த அமைப்புகளை பகிரங்கமாக மீறி முன்னேறியுள்ளனர். அலபாமாவில் ஓராயிரத்துக்கும் அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் Warrior Met Coal நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 1 முதலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தினால் (UMWA) பேசிமுடிக்கப்பட்ட தற்காலிக ஐந்தாண்டு-கால ஒப்பந்தத்தை ஏப்ரல் 9 அன்று அவர்கள் 1,006க்கு 45 என்ற மலைப்பூட்டும் விகிதத்தில் மண்ணைக் கவ்வச் செய்தனர்.
இந்த அமைப்புகள் உண்மையாக எவையாக உள்ளனவோ அவ்வாறு தொழிலாளர்கள் இப்போது காணுகின்றனர்: அதாவது பெயரளவில் மட்டும் “தொழிற்சங்கங்களாக”, ஆறு இலக்க சம்பளங்களை வாங்கிக் கொண்டு, தாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிலாளர்களை நோக்கி உதாசீனத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்ற பொறுப்பற்ற மற்றும் செல்வச்செழிப்புமிக்க உயர்-நடுத்தர வர்க்க அதிகாரத்துவவாதிகளால் நடத்தப்படுகின்ற தொழிலாளர்-விரோத ஸ்தாபகங்களாக. இந்த “தொழிற்சங்கங்கள்” தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் அமைப்புகளாக செயல்படவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் பெருநிறுவனங்களின் நேரடியான மற்றும் ஊக்கமிக்க உடந்தையாளர்களாக செயல்படுகின்றன.
பெருநிறுவனங்களுடனும் அரசுடனுமான தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பானது, கடந்த 15 மாதங்களில் அமெரிக்காவில் 600,000 உயிர்களை காவு வாங்கியிருக்கும் ஒரு பெருந்தொற்றின் சமயத்தில் தொழிற்சாலைகளிலும், மற்ற பாதுகாப்பற்ற வேலையிடங்களிலும், அத்துடன் குறிப்பாக, பள்ளிகளிலும் தொற்று அபாயத்திற்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க மறுத்ததில், அதன் மிகவும் நச்சுத்தனமான வடிவத்தைக் கண்டுள்ளது. Randi Weingarten (இவரது வருட வருமானம் 500,000 டாலர்கள்) தலைமையிலான ஆசிரியர்கள் சங்கம் தான் ஆபத்தான “வேலைக்குத் திரும்புவோம்” (அதாவது சமூக நோயெதிர்ப்புசக்தி பெருக்க) பிரச்சாரத்தின் முன்முனையாக இருந்து வந்திருக்கிறது.
வரலாற்றுப் பின்புலம்
வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்களின் கலகம் மற்றும் சாமானியத் தொழிலாளர்களது போர்க்குணத்தின் பெருகும் அலை ஆகியவற்றின் முக்கியத்துவமானது ஒரு விரிந்த வரலாற்று உள்ளடக்கத்தில் அமர்த்திப் பார்க்கும்போது மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியும்.
தொழில்முறை விமான போக்குவரத்து கட்டுப்பாடாளர்கள் அமைப்பின் (PATCO) வேலைநிறுத்தம் தொடங்கி, வரும் ஆகஸ்டு 3 ஆம் தேதியுடன் நாற்பது ஆண்டுகள் ஆகிறது. வேலைநிறுத்தம் தொடங்கி சில மணி நேரங்களுக்குள்ளாக, ஜனாதிபதியாக இருந்த ரொனால்ட் ரேகன், அவருக்கு முன்பிருந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு நடவடிக்கை வேலைத்திட்டத்தை மெருகேற்றி, உடனடியாக வேலைக்குத் திரும்பும் உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாத கட்டுப்பாட்டு அலுவலர்களை பணிநீக்கம் செய்யப் போவதாகவும் அவர் மிரட்டினார். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களில் பெருவாரியானோர் ரேகனின் உத்தரவை மீறினர். ஆகஸ்டு 5 அன்று, ரேகன் நிர்வாகம் 11,345 PATCO உறுப்பினர்களை பணிநீக்கியது. முன்னணி தொழிற்சங்கப் போராளிகள் கைதுசெய்யப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தத்திற்கு சென்றதற்காக கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.
தொழிற்சங்க மற்றும் சாமானியத் தொழிலாளர்களின் மீது கூட்டரசாங்கத்தின் மூலமாக நடத்தப்பட்ட வரலாற்றில் முன்கண்டிராத இத்தகையதொரு தாக்குதல் வெற்றிகாண முடிந்தது என்றால் PATCOவை பாதுகாக்க வருவதற்கு தேசிய AFL-CIO ஒரேயடியாக மறுத்துவிட்டது என்பது மட்டுமே காரணமாய் இருந்தது. PATCO ஐ அழிப்பதை தடுக்கும் விதத்தில் செயல்பட மாட்டோம் என்று AFL-CIO விடம் இருந்து ரேகன் நிர்வாகம் உத்தரவாதங்களைப் பெற்றிருந்தது என்பதை PATCO போராளிகள் பரவலாகவும் சரியாகவும் புரிந்துகொண்டு விட்டிருந்தனர்.
AFL-CIO இன் துரோகத்திற்கும் கோழைத்தனத்திற்கும் எதிராக, வேர்க்கர்ஸ் லீக் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பு) PATCO வேலைநிறுத்தத்தில் பணயமாக இருந்தது என்ன என்பதை விளக்கியது. Bulletin இதழில் (உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோடி) 1981 ஆகஸ்டு 13 அன்று வெளியானதொரு அறிக்கையில், வேர்க்கர்ஸ் லீக் கூறியது:
தொழில்முறை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் 13,000 அலுவலர்கள் நடத்துகின்ற வேலைநிறுத்தம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக உள்ளது. ...
PATCO வேலைநிறுத்தத்தில் இருந்து முதன்மையாக தேற்றம் செய்யத்தக்க ஒரு அரசியல் முடிவு என்றால் அது இதுதான்: ஒரு தடம்புரள்வாகவோ அல்லது விதிவிலக்காகவோ இருப்பதெற்கெல்லாம் வெகுதூரத்தில், இது அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் உண்மையான சாரத்தை வெளிக்காட்டுவதாய் உள்ளது.
ஆளும் வர்க்கமானது சமூக சேவைகள், வேலைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், இப்போது தொழிற்சங்க ஒழுங்கமைப்புக்கான உரிமை ஆகிய தொழிலாளர்களின் அத்தனை அடிப்படை உரிமைகளின் மீதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதுடன் இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு அத்தனை ஒடுக்குமுறை சக்திகளுக்கும் முதலாளித்துவ அரசின் வன்முறைக்கும் அழைப்புவிடுக்கிறது. [PATCO வேலைநிறுத்தம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை]
வேர்க்கர்ஸ் லீக்கின் அறிக்கையானது நான்கு இன்றியமையாத புள்ளிகளை முன்வைத்தது:
முதலாவதாய், ரேகன் நிர்வாகத்தின் வன்மையான நடவடிக்கையானது அமெரிக்காவில் வர்க்க உறவுகளில் ஒரு அடிப்படையான மறுசீரமைப்பை அமல்படுத்துவதை, அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலில் ஒரு பாரிய அதிகரிப்புக்கும் ஆளும் உயரடுக்கிற்கு பாரிய அளவில் செல்வம் மாற்றப்படுவதற்குமான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதை, நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை அது வலியுறுத்தியது. PATCO அழிப்பானது தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுக்கு எதிராகவும் பெருநிறுவனங்கள் மூலம் ஒரு பொதுவான தாக்குதல் தொடுக்கப்படுவதற்கான சமிக்கையாக இருந்தது.
இரண்டாவதாய், தொழிலாளர்கள் மீதான ரேகன் நிர்வாகத்தின் தாக்குதலானது அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியைத் தலைகீழாக்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிமூலோபாய நலன்களுக்கு சர்வதேசத் தொழிலாள வர்க்கம் காட்டக்கூடிய எதிர்ப்பை பலவீனப்படுத்துவதற்கும் நோக்கம் கொண்டிருந்தது என்பதை அது விளக்கியது.
PATCO உறுப்பினர்கள் மீதான தாக்குதல் ரேகனின் உலகளாவிய எதிர்ப்புரட்சிக் கொள்கையில் இருந்து பிரிக்கவியலாததாய் இருந்தது. அரசியல்ரீதியாக சொல்வதானால், சொந்த நாட்டில் வர்க்க சமரசத்தைப் பராமரிக்கிற அதேநேரத்தில் வெளிநாடுகளில் ஆவேசமான எதிர்ப்புரட்சிக் கொள்கையைப் பின்பற்றுவது மற்றும், இராணுவ மற்றும் பாசிச சர்வாதிகாரங்களை ஸ்தாபிப்பது மற்றும் அவற்றுக்கு ஆதரவளிப்பது என அமெரிக்க முதலாளித்துவம் இனியும் இரண்டு வகை கணக்குப்புத்தகங்களை பராமரிக்க முடியாதிருந்தது.
மூன்றாவதாய், AFL-CIO, UAW, Teamsters மற்றும் பிற தொழிலாளர் அமைப்புகள் முதலாளித்துவத்திற்கும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் கீழ்ப்படிந்து செல்வதென்பது தொழிலாள வர்க்கத்தை ஒரேயடியாக பலவீனப்படுத்தி வரிசையான தோல்விகளுக்கு இட்டுச்செல்லும் என்று வேர்க்கர்ஸ் லீக் எச்சரித்தது.
நான்காவதாய், தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பிற்கு ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாயிருந்தது. வேர்க்கர்ஸ் லீக் எச்சரித்தது:
தொழிலாளர் அதிகாரத்துவம் காட்டிக்கொடுக்கும், காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டமானது முழுக்க போர்க்குணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது, மாறாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு அரசியல் மூலோபாயம் அவசியமாயுள்ளது.
PATCO வேலைநிறுத்தத்தின் காட்டிக்கொடுப்பு மற்றும் தோல்வியின் தேசிய மற்றும் சர்வதேசப் பின்விளைவுகள் தொடர்பாக வேர்க்கர்ஸ் லீக் செய்த பகுப்பாய்வு அடுத்துவந்த நிகழ்வுகளால் ஊர்ஜிதப்பட்டது. அமெரிக்காவிற்குள்ளாக, PATCO அழிப்பைப் பின்தொடர்ந்து வரிசையான வேலைநிறுத்த உடைப்புகளது ஒரு அலை —மிகப் பயங்கரமானவற்றை மட்டும் குறிப்பிடுவதானால் Continental Airlines இல், Phelps Dodge தாமிரச் சுரங்கங்களில், Hormel மாமிசம் பதப்படுத்தும் ஆலைகளில், மற்றும் AT Massey நிலக்கரிச் சுரங்கங்களில்— நடத்தப்பட்டு அது அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு நாசகரமான வீழ்ச்சியில் விளைந்தது.
ரேகனின் PATCO அழிப்பானது, அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால், உலகெங்குமான முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது தாக்குதல்களை அதிகப்படுத்துவதற்கு ஊக்குவித்தது. பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் 1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கொடூரமான விதத்தில் தோற்கடித்தமை அதற்கான உத்வேகத்தை ரேகனின் நடவடிக்கைகளில் இருந்தே பெற்றிருந்தது.
அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் நிலை அதீதமான அளவில் பலவீனப்படுத்தப்பட்டமையானது முதலாளித்துவ-ஆதரவு பிரச்சாரத்திற்கு புதிய நம்பகத்தன்மையை வழங்கியதோடு சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்த பிற்போக்கான ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் 1989க்கும் 1991க்கும் இடையில் முதலாளித்துவ மீட்சியை நடத்துவதற்கு வழிவகுத்த சமூக மற்றும் அரசியல் விரக்தியின் சூழ்நிலைக்கு கணிசமாக பங்களிப்பு செய்தது.
1980களின் தோல்விகளுக்குப் பின்வந்த தசாப்தங்களில், வேலைநிறுத்தங்கள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காணாமல்போயின. ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு உலகின் மிகவும் வன்மையான தொழிலாளர் யுத்தங்களைக் கண்டிருந்த ஒரு நாட்டில், வர்க்க-நனவான போராட்டத்தின் கிட்டத்தட்ட அத்தனை வெளிப்பாடுகளும் காணாமல் போயின.
இந்த நிகழ்ச்சிப்போக்கில், தொழிற்சங்க அதிகாரத்துவமானது அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்பட்டது. அது வர்க்கப் போராட்டத்துடன் எந்தவிதமான தொடர்புபடுத்தலையும் மறுதலித்தது; அரசாங்க-பெருநிறுவன-தொழிற்சங்க ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை முழுமையாக தழுவிக் கொண்டது; தொழிலாளர்களின் நலன்கள் மிகக்குறைந்த அளவில் பாதுகாக்கப்படுவதைக் காட்டிலும் இலாபங்களுக்கே முற்றிலுமாய் முன்னுரிமை அளிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டது.
நடைமுறையில் இந்த அமைப்புகள் தொழிற்சங்கங்களாக இருக்கவில்லை. 1937 இல் ட்ரொட்ஸ்கி ஒரு தொழிற்சங்கமாக கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பின் உண்மையான சமூக தன்மையை தீர்மானிக்கும் தகுதிவகையை இவ்வாறு மதிப்பிட்டார்.
தொழிற்சங்கத்தைப் போன்றதொரு தொழிலாளர் அமைப்பின் தன்மையானது தேசிய வருவாயின் விநியோகத்திற்கு அது கொண்டிருக்கும் உறவின் மூலமாகத் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன் [அப்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்] மற்றும் நிறுவனத்தினர் உற்பத்தி சாதனங்களில் தனியார் உடைமையைப் பாதுகாக்கின்றனர் என்ற உண்மையானது அவர்களை முதலாளித்துவத்தினராக குணாம்சப்படுத்துகிறது. இதற்கும் மேலாக இந்த கண்ணியவான்கள், தொழிலாளர்களின் தரப்பிலிருந்தான தாக்குதல்களில் இருந்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் வருவாயைப் பாதுகாப்பார்களேயானால்; வேலைநிறுத்தங்களுக்கு எதிராக, ஊதியங்களை உயர்த்துவதற்கு எதிராக, வேலைவாய்ப்பற்றோருக்கு உதவுவதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவார்களேயானால்; அப்போது நாம் பார்ப்பது ஒரு கருங்காலிகளது அமைப்பாகவே இருக்குமே அன்றி, ஒரு தொழிற்சங்கம் அன்று. [ஒரு தொழிலாளர் அரசும் இல்லை ஒரு முதலாளித்துவ அரசும் இல்லையா?]
ட்ரொட்ஸ்கி வகுத்தளித்த தகுதிவகையின் அடிப்படையில் பார்த்தால் —வேலைநிறுத்தங்களை, ஊதியங்களை உயர்த்துவதை, வேலைவாய்ப்பற்றோருக்கு உதவுவதை எதிர்ப்பது— AFL-CIO மற்றும் அதனுடன் இணைப்பு கொண்ட (UAW போன்ற) அமைப்புகளை தொழிற்சங்கங்களாய் நியாயப்படி விவரிக்கப்பட முடியாதவையாகும்.
முதலாளித்துவ பூகோளமயமாக்கமும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புத்துயிர்பெற்ற எழுச்சியும்
வரலாற்றில் பாவத்திற்கான தண்டனை என்ற ஒரு விடயம் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளின் காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அத்தனையும் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தி பரந்தளவில் தன்னை செழுமைப்படுத்திக் கொள்கின்ற அதே நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக, முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஒரு பரந்த விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை அது மேற்பார்வை செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் —விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திலான மலைப்பூட்டும் முன்னேற்றங்களால் செலுத்தப்பட்டு— மிக முக்கியமானதும் புரட்சிகரமானதுமான விளைமுடிவாய் இருப்பது உலகளாவிய தொழிலாள வர்க்கத்திலான பாரிய எண்ணிக்கைவளர்ச்சி ஆகும்.
அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ வர்க்கம் இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டங்களை தனக்கு அனுகூலமான விதத்தில் சுரண்டிக்கொள்ள முடிந்திருக்கிறது. உற்பத்தியின் உலகளாவிய ஒழுங்கமைப்பானது முதலாளிகள் ஒரு நாட்டின் தொழிலாளர்களை இன்னொரு நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராய் நிறுத்துவதற்கு வழிதந்தது. முதலாளிகளின் சர்வதேச மூலோபாயத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் முகம்கொடுத்த நிலையில், நிலவிய தொழிற்சங்கங்களோ, காலாவதியாகிப் போன நம்பிக்கையற்றதொரு தேசியவாத முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், ஒரு திறம்பட்ட எதிர் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய திறனற்றவையாக இருந்தன. தொழிற்சங்கங்களது கையாலாகாத்தனத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் தனிமனித கோழைத்தனம் மற்றும் ஊழலைக் காட்டிலும் இந்த தேசிய பிராந்தியவாதமே அதி பெரும் காரணியாக இருந்தது.
எனினும், இந்த நிகழ்ச்சிப்போக்கு எத்தனை கடினமானதாக, நீண்டநெடியதாக மற்றும் வலிமிகுந்ததாக இருந்தபோதும், அமெரிக்கத் தொழிலாள வர்க்கமானது பில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட ஒரு பாரிய எண்ணிக்கையிலான உலகளாவிய சமூக சக்தியின் பகுதியாக அது இருக்கிறது என்பதை முன்னெப்போதினும் தெளிவாகக் கண்டுகொள்ளும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அதுதவிர, சமீப தசாப்தங்களில் வளர்ச்சி கண்டிருக்கும் தகவல்பரிவர்த்தனை தொழில்நுட்பங்களானவை, தொழிலாளர்கள் அவர்களது தலைவர்களின் கலப்படத்தகவல்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு வழிதரக் கூடிய மதிப்புமிக்க தகவல்களுக்கு அவர்களுக்கு அணுகலை வழங்கியுள்ளன. வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் நடத்துவதிலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை இந்த தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களுக்கு கையளித்துள்ளன. அவர்கள் இப்போது தமது உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய சூழலைக் கடந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும் தமது போராட்டங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் முடிகிறது என்பது மட்டுமல்ல. ஒரு உலகளாவிய மட்டத்தில் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தொழிலாளர்களால் முடிகிறது.
வேர்ஜீனியா, டப்ளின் நகரின் வொல்வோ தொழிலாளர்களுக்கு, சுவீடனின் கோத்தேன்பேர்க்கில் தலைமையகத்தை கொண்டுள்ள நிறுவனமானது ஒவ்வொரு கண்டத்திலும் விரிந்திருக்கின்ற 18 வெவ்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் உற்பத்தி ஆலைகளில் சுமார் 100,000 தொழிலாளர்களை பணியமர்த்தியிருக்கிறது என்பது நன்கு தெரியும். இந்த ஆலைகளில் பலவும் பரஸ்பர சார்பு கொண்டவை, ஒரு ஆலையில் இருந்து இன்னொரு ஆலைக்கு பொருட்கள் சென்று சேருவதை அவசியமாகக் கொண்டவை. பெருநிறுவனங்களுக்கு எதிர்ப்பு காட்டுவது நம்பிக்கையற்றது என்ற அதிகாரத்துவத்தின் கூற்றுகளுக்கு நேரெதிர்விதத்தில், தொழிலாளர்கள், உலகளாவிய விதத்தில் தம்மை ஒழுங்கமைத்து நிலைநிறுத்திக் கொள்ளும்பட்சத்தில் தமது ஆற்றல்சாத்தியம் அளப்பரியது என்பதை உணர்ந்துள்ளனர்.
ஆகவே, வொல்வோ தொழிலாளர்களுக்கும், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கும், இன்றியமையாத பிரச்சினையாக இருப்பது முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமை குறித்த பிரச்சினையாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் சாமானியத் தொழிலாளர் குழுக்களுக்கான போராட்டமும்
தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதினும் விரிந்துபரந்த பிரிவுகளுக்குள்ளாக, நிலவும் தொழிற்சங்கங்களின் மீதும் அவற்றை நடத்துகின்ற அதிகாரத்துவவாதிகள் மீதும் குரோதத்தின் விளிம்பில் நிற்கின்ற ஒரு பெருகிய வெறுப்பு இருக்கிறது. வேலைநிறுத்தங்களின் திசைவழியும் முடிவு மேற்கொள்ளும் நிகழ்முறையும் சுய-நல அதிகாரத்துவ ஒட்டுண்ணிகளது கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்படாத வரையில், பெருநிறுவனங்களுக்கு எதிரான எந்த போராட்டமும் வெற்றிகாண இயலாது என்பதை தொழிலாளர்கள் அறிந்துள்ளனர். ஒருமுனையில் பெருநிறுவனங்களுக்கு எதிராகவும், இன்னொரு முனையில் பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்கங்களின் எந்திரத்தில் உள்ள அவற்றின் கையூட்டு பெற்ற முகவர்களுக்கு எதிராகவும் என இரண்டு முனைகளில் போராடத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர்.
வர்க்கப் போராட்டத்தின் புறநிலையான அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்களின் பெருகிச் செல்லும் போர்க்குணம் ஆகியவற்றுக்கான பதிலிறுப்பில், சோசலிச சமத்துவக் கட்சியானது, பெருநிறுவன-ஆதரவு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சுயாதீனமான விதத்திலும் அதற்கு வெளியிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிப்பதில் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக நாடெங்கிலும் உள்ள ஆலைகள் மற்றும் வேலையிடங்களில், தொழிலாள வர்க்கத்தின் பல்தரப்பட்ட பிரிவுகள் —சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் முதல், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் குமாஸ்தா தொழிலாளர்கள் வரை— மத்தியில் பொறுமையாகவும் தளர்ச்சியில்லாமலும் வேலை செய்து வந்திருக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலையை ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கிறது
ஆகவே தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் தொடக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பான சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஸ்தாபிக்கப்படுவது அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் அத்தியாவசியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
IWA-RFC இன் இலக்குகள் 2021 ஏப்ரல் 23 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான ICFI இன் ஒரு அறிக்கையில் பின்வருமாறு துல்லியமாக சூத்திரமாக்கப்பட்டிருந்தன:
தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களின் புதிய, சுயாதீன, ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க நிறுவனங்களுக்கான கட்டமைப்பை சர்வதேச அளவில் உருவாக்க, சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி (IWA-RFC) செயல்படும். தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அடக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கோருவதற்கும், பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல் மற்றும் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான பிற அவசர நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கோருவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான அவசியமானதொரு சாதனமாக அது திகழும்.
இந்த கூட்டணியை உலக அளவில் உருவாக்குவதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு முன்னெடுக்கின்றது, இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி இதுவே. நான்காம் அகிலம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் அரசியல் உதவியுடன், சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி (IWA-RFC) உலகளாவிய பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராடும். இது முதலாளித்துவ அரசாங்கங்களையும் தேசிய, இன, பேரினவாத மற்றும் அடையாள அரசியல் போன்ற எண்ணற்ற பிற்போக்கு கருத்தியல்களால் தொழிலாளர்களை எதிரெதிரான முகாம்களில் நிறுத்த முயலும் அதன் ஆதரவாளர்களின் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்க்கிறது.
இயல்பாகவே, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள், பிராந்தியத்திற்கு பிராந்தியத்தியமும், நாட்டிற்கு நாடும் வேறுபடுகின்றன. ஆனால் இவை எவ்வாறான தந்திரோபாயங்களை தேர்ந்தெடுப்பதில் என்பதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் எல்லா நாடுகளிலும், தற்போதுள்ள தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்கள், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பொலிஸ் படையாக செயல்படுகின்றன என்பதும், ஆளும் உயரடுக்கினதும் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் பெருநிறுவன மற்றும் நிதிய நலன்களால் பெருகிவரும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக பாதுகாக்க உறுதியாக உள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
வெகுஜன போராட்டத்திற்கான புதிய பாதைகளை உருவாக்க வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன்னர், வரலாற்றில் ஒரு கட்டத்தில், தற்போதுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் சீரழிவு இன்றைய காலத்தை விட மிகவும் குறைவாக இருந்த ஒரு வரலாற்றுப் புள்ளியில், உலக சோசலிசப் புரட்சியின் மிகப் பெரிய மூலோபாயவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் பணி, “சாத்தியமான அனைத்து நிகழ்வுகளிலும், முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிரான வெகுஜன போராட்டத்தின் பணிகளுக்கு மிகவும் நெருக்கமாக பொருத்தமான சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புகளை உருவாக்குவதே. இது தொழிற்சங்கங்களின் பழைமைவாத அமைப்புகளுடன் ஒரு நேரடியான உடைவிற்கு இட்டுச்சென்றாலும் கூட அதையிட்டு பின்வாங்கக்கூடாது” என்று எழுதினார்.
இந்த குழுக்களின் வளர்ச்சியானது, இளைஞர்கள் மற்றும் வேலையற்றோர் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஆதரவை தவிர்க்க முடியாமல் ஈர்க்கும்.
தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் எழுச்சியானது தொழிலாளர்கள் அவர்களது ஆலைகளிலும் வேலையிடங்களிலும் எதிர்கொள்கின்ற நிலைமைகளில் இருந்து மட்டும் செலுத்தப்படுவதாய் இருக்கவில்லை. 2020 தொடக்கம் முதலாகவே, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் கோவிட்-19 பெருந்தொற்றின் கொடுங்கனவின் ஊடாக கடந்து வந்து கொண்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வேலையிடங்களில் உடன்பணிபுரிவோர் மற்றும் சகாக்கள் நோய்வாய்ப்படுவதையும் இன்னும் மரணிப்பதையும் கூட அவர்கள் பார்த்து வந்திருக்கின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் கல்நெஞ்சம், நோய்ப்பரவலைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவுமான திறம்பட்ட நடவடிக்கைகளை எடுக்க இரண்டு அரசியல் கட்சிகளையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மறுத்தமை, மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் ஆரோக்கியத்தை தக்கவைப்பதற்கும் உயிர்பிழைத்திருக்கவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய மற்றும் சுயநலமான உயரடுக்கினருக்குள்ளாக செல்வம் ஆபாசமான மட்டத்திற்கு அவலட்சணமான விதத்தில் திரண்டு சென்றமை ஆகியவற்றை தொழிலாளர்கள் கண்டிருக்கின்றனர்.
இவைதவிர, நெருக்கடியின் சர்வதேசப் பரிமாணங்களைக் குறித்தும், பெருந்தொற்று அத்தனை நாடுகளிலும் ஒழிக்கப்படாமல் தனியொரு நாட்டிற்குள்ளாக அது திட்டவட்டமாகவும் பாதுகாப்பாகவும் தடுத்து நிறுத்தப்பட முடியாது என்பதிலும் தொழிலாளர்களை அது விழிப்படையச் செய்துள்ளது.
அமெரிக்க தொழிலாள வர்க்கம் புரட்சியைக் கண்டு மிரள்வதும் இல்லை. அல்லது அது சோசலிசத்திற்கு எதிரானதும் இல்லை. ஒரு தீர்வாக அது என்ன முன்வைக்கிறது என்பதையும் அது எப்படி அடையப்பட முடியும் என்பதையும் அது புரிந்துகொள்வது அவசியமாயுள்ளது, அவ்வளவே. எவ்வாறு முதலாம் உலகப் போர் தொழிலாளர்களின் ஒரு முந்தைய தலைமுறையை தீவிரமயப்படுத்தி அவர்களை சோசலிசத்தை நோக்கி திருப்பியதோ, அதைப் போலவே, சமகால சமூகத்தின் நெருக்கடியை தீவிரப்படுத்தி விட்டிருக்கின்ற பெருந்தொற்றானது, முதலாளித்துவ சமூகத்தின் வெளிப்பட்ட தோல்வி மற்றும் அநீதிக்கு புதிய பதில்களைத் தேட வேண்டியதன் அவசியத்தின் மீது தொழிலாள வர்க்கத்திற்கு உறுதியை கூட்டியுள்ளது.
இதுவே, தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்டு, அமெரிக்கா முழுவதும் திரண்டுவரும் சமூக போர்க்குணத்தின் புதிய அலையினது அத்தியாவசிய உள்ளடக்கமாக உள்ளது.