மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கையிலிருந்து குடியேறிய இளம் தொழிலாளி விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க மார்ச் 6 ஆம் தேதி ஜப்பானின் ஐச்சி பிராந்தியத்தில் உள்ள நகோயா உள்ளூர் குடியேற்ற சேவை பணியகத்தில் காலமானார். அப்போது அவருக்கு வெறும் 33 வயது மட்டுமே.
கொழும்பு புறநகர்ப் பகுதியான கடவத்தாவில் உள்ள இம்புல்கோடாவில் வசித்த சந்தமாலி, இலங்கையில் தனது க.பொ.தர உயர்தர பரீட்சையில்தேர்ச்சி பெற்று, 2017 ல் மாணவர் விசாவில் ஜப்பானுக்கு சென்றார்.
ஜப்பானில் உயர்கல்வியை தொடர்வதற்குப் பதிலாக, நல்ல ஊதியம் பெறும் வேலை கிடைக்கும் என்று அவர் நம்பினார். இருப்பினும், ஜப்பானில் மாணவர் விசாவில் இருப்பவர்கள் வாரத்தில் 28 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய முடியும், எனவே நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறுவது கடினம் என்று அவர் கண்டார்.
சந்தமாலி ஒரு கல்வி நிறுவனத்தில் ஜப்பானிய மொழியைக் கற்கத் தொடங்கினார், ஆனால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் வெளியேறியதோடு, பின்னர் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டார்.
கடந்த ஆகஸ்டில் அவருடன் வசித்து வந்த ஒரு இளைஞரால் துன்புறுத்தப்பட்டதால், அவர் போலீசில் புகார் அளிக்க முயன்றார். சந்தமாலியின் புகாரை பொலிசார் புறக்கணித்தனர், அதற்கு பதிலாக, விசா காலாவதியான பின்பு கூடிய நாட்கள் தங்கியதற்காக கைது செய்து பின்னர் நாகோயா தடுப்பு முகாமில் சிறையில் அடைத்தனர்.
இலங்கைக்கு திரும்புவதற்கு பணம் செலுத்த முடியாமல், அவர் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்பட்டு, ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது உட்பட ஏழு மாதங்கள் மிருகத்தனமான நிலையில் இருந்தார்.
குடியேற்ற அதிகாரிகள் தனக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்று சந்தமாலி எதிர்பார்த்தார், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. START அதிகாரி, யசுனோரி மாட்சுய் கூறுகையில், அவர் டிசம்பரில் நோய்வாய்ப்பட்டார் மற்றும் இரத்த வாந்தியெடுத்தார், ஜனவரி மாதத்திற்குள் நடக்க முடியவில்லை. START என்பது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கு உதவி வழங்கும் ஒரு ஆதரவு குழு.
சுமார் 20 கிலோ இழந்த சந்தமாலி, சக்கர நாற்காலியால் மட்டுமே நகர்த்தக்கூடிய அளவுக்கு பலவீனமடைந்து, இலங்கைக்குத் திரும்புவதற்கு உடல்நிலை சரியில்லாமல் போனார். குடியேற்ற அதிகாரிகள் அகதி அந்தஸ்துக்கான அவரது விண்ணப்பத்தையும் நிராகரித்ததோடு, மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக அவருக்கு தற்காலிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஜப்பானிய உதவி வழங்குநர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்தனர்.
சந்தமாலியின் தங்கை ரிட்மா ரத்நாயக்க கடந்த வாரம் டோக்கியோவிலிருந்து உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார்.
மே 16 அன்று தகனம் செய்யப்பட்டபோது, 200 க்கும் மேற்பட்ட ஜப்பானிய மக்கள் தனது சகோதரிக்கு இறுதி மரியாதை செலுத்தியதாகவும், மே 29 அன்று டோக்கியோவில் நடந்த நினைவு நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதாகவும் ரிட்மா கூறினார்.
"ஜப்பானிய அரசாங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்று ரிட்மா கூறினார். “என் சகோதரி இறக்கும் போது, அவளுக்கு சிறிது உணவு கொடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அவளுக்கு அதிக அளவு வலி நிவாரணி மருந்துகளும் தூக்க மாத்திரைகளும் கொடுக்கப்பட்டதால் அவளால் விழுங்க முடியவில்லை. அவளது வாழ்க்கையின் கடைசி சில நாட்களில் எந்த வைட்டமின்களோ அல்லது சேலைன் (saline) கூட கொடுக்கப்படவில்லை.”
ரிட்மா ஊடாக பேசிய சந்தமாலியின் தாய் கூறினார்: “என் மகள் ஒரு மிருகத்தைப் போல நடத்தப்பட்டாள். விலங்குகள் கூட இதை விட சிறந்த கவனிப்பைப் பெற்றிருக்கும்.”
இளம் பெண்ணின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விளக்கவும், காவலில் வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை வெளியிடவும் சந்தமாலியின் உறவினர்கள் ஜப்பானிய நீதித்துறை அமைச்சர் யோகோ காமிகாவா க்கு முறையிட்டுள்ளனர். இது மாநில பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் இளம் பெண்ணின் "கண்ணியத்தை" சமரசம் செய்யும் என்ற அபத்தமான மற்றும் இழிந்த அடிப்படையில் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ரிட்மா WSWS இடம் தனது சகோதரியின் உடல் ஒரு வயதான நபரின் உடல் போல இருந்ததாக கூறினார்.
சந்தமாலியின் நாட்குறிப்பில் உள்ள சுருக்கமான குறிப்புகள், கொடூரமான மற்றும் சட்டவிரோதமான வழிமுறைகளாலேயே அவரது மரணம் நிகழ்ந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர், “என்னால் சாப்பிட முடியாதுள்ளது. இது, பதற்றம் காரணமாக என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் அவர்களின் காவலில் இருக்கையிலும் அவர்கள் என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில்லை. உடல்நலமடைய எனக்கு உதவுங்கள்” என எழுதியுள்ளார்.
2007 முதல் ஜப்பானில் காவலில் இறந்த 18 வது புலம்பெயர்ந்தவர் சந்தமாலி, கடந்த 13 மாதங்களில் ஒரு தடுப்பு மையத்தில் அழிந்த நான்காவது நபருமாவர். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், விண்ணப்பதாரர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே ஜப்பானில் அகதிகள் அந்தஸ்து அல்லது புகலிடம் வழங்கப்படுவதாகக் காட்டுகின்றன. 2019 ல் ஜப்பானில் கோரப்பட்ட 10,375 அகதிகள் விண்ணப்பங்களில் 44 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய தடுப்பு மையங்களில் தற்போது தடுத்துவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஆகும், COVID-19 வெடிப்பதற்கு முன்னர், ஒசாகா, நாகசாகி மற்றும் இபராகி மாகாணம் உட்பட 16 மையங்களில் 20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதை தொடர்ந்து, கைதிகளுக்கான எந்தவொரு மருத்துவப் பொறுப்பையும் தவிர்ப்பதற்காக, ஜப்பானிய அதிகாரிகளால் அவர்களுக்கு குடியிருப்போ அல்லது வேலை செய்யும் உரிமையோ வழங்கப்படாமல் விடப்பட்டுள்ளனர்.
வறுமை, குறைவூதியம் மற்றும் வேலையின்மை ஆகியவை தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கான இளைஞர்களை மத்திய கிழக்குக்கும் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற முன்னேறிய முதலாளித்துவ பொருளாதாரங்களுக்கும் வேலை தேடி குடியேற கட்டாயப்படுத்துகின்றன. இந்த நாடுகளுக்குள் நுழைய முயற்சிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களிலும் மற்றும் பிற ஆபத்தான பயண முறைகளிலும் துன்பகரமாக தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.
இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, இளைஞர்களிடையே உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 2020 ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்தது. 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலையின்மை விகிதம் 26.4 சதவீதமாகவும், அதே வயதில் உள்ள பெண்களுக்கு 36.3 சதவீதமாகவும் இருந்தது. பெண்களுக்கான வேலையின்மை, 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில், 18.9 சதவீதமாகவும், ஆண்களுக்கு 7.1 ஆகவும் இருந்தது.
மற்ற நாடுகளைப் போலவே, ஜப்பானிய ஆளும் உயரடுக்கும் அதன் குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்குவதன் மூலம் COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார நெருக்கடிக்கு பதிலளித்துள்ளது. பிரதம மந்திரி யோஷிஹைட் சுகாவின் அரசாங்கம் சமீபத்தில் நாட்டின் குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகள் அங்கீகார சட்டத்தில் திருத்தம் செய்ய முயன்றது, அது புகலிடம் கோருவோரை திருப்பி அனுப்ப அதிகாரிகள் அனுமதிக்கிறது.
தற்போதைய சட்டங்களின் கீழ், புகலிடம் கோருவோர் தஞ்சம் பெறுவதற்கு வரம்பற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பு மையங்களில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதை எளிதாக்கும் வகையில், சுகா அரசாங்கம் இந்த எண்ணிக்கையை மூன்றாகக் குறைக்க விரும்புகிறது.
மே 18 அன்று, சுகா அரசாங்கம் பரவலான எதிர்ப்பை எதிர்கொண்டது, பல நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் உட்பட, பல பங்கேற்பாளர்கள் சந்தமாலியின் துயர மரணம் குறித்து சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததால், அதன் ஜனநாயக விரோத திருத்தங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்த மசோதாவை முற்றிலுமாக விலக்க மாட்டேன் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியது, ஆனால் அதை எதிர்காலத்தில் ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மூலம் அமுலாக்க முயற்சிக்கிறது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சகமும் டோக்கியோவில் உள்ள அதன் தூதரகமும் சந்தமாலியின் உயிரைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை, அவரது மிருகத்தனமான சிகிச்சை குறித்து ஒரு எதிர்ப்பை எழுப்பவேண்டும் அல்லது ஜப்பானிய அரசாங்கம் அவர் எப்படி, ஏன் இறந்தார் என்பதை விளக்க வேண்டுமென கோரியிருக்க வேண்டும்.
கொழும்பின் இந்த அமைதி தற்செயலானதல்ல. வளர்ச்சியடையாத பிற நாடுகளின் ஆளும் உயரடுக்கைப் போவே, இலங்கை முதலாளித்துவ வர்க்கமும் வெளிநாட்டில் பணிபுரியும் குடிமக்களின் சுரண்டலைக் குறைக்க எதையும் செய்ய விரும்பவில்லை, ஏனெனில் இலங்கைக்கு மீண்டும் பாயும் மில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாட்டு பணத்தில் இடையூறு ஏற்படுகிறது.
அதைப்போலவே, COVID-19 அல்லது வேலையின்மையால் பாதிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களுக்கு வீடு திரும்ப தீவிரமாக முயலும் மற்ற நாடுகளில் இன்னும் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்களின் அவலநிலை குறித்தும் இராஜபக்ஷ அரசாங்கம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது.
மேலும் படிக்க
- 50 க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கிப்போன நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக் கடல் குடியேற்றக் கொள்கையை ஐ.நா. கண்டிக்கிறது
- மொரோக்கோவின் எல்லையைத் தாண்டி தப்பித்து வரும் அகதிகளுக்கு எதிராக ஸ்பெயின் இராணுவத்தை நிறுத்துகிறது
- தஞ்சம் கோருவோர் முறையான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாமல் இங்கிலாந்திலிருந்து அகற்றப்பட்டனர்