தொழிற்சங்க நடவடிக்கையை குற்றமாக்குவது தொடர்பாக இலங்கை தொழிற்சங்கங்கள் மயான அமைதியைக் கடைப்பிடிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மே 27 அன்று, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, துறைமுகம், பெட்ரோலியம், எரிவாயு, இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறைகள் மற்றும் மாவட்ட அளவிலான அரச நிர்வாக அலுவலகங்களில், அரச வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் சுங்கம் தொடர்பான சேவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்காக அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை (அ.பொ.சே.ச.) பயன்படுத்தினார்.

ஜூன் 2, ஒன்பது மாகாண சபைகளில் உள்ள சுகாதார சேவை, அரச நுகர்வோர் பொருட்கள் விநியோக நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களையும் உள்ளடக்கி இன்னொரு அத்தியாவசிய சேவைகள் கட்டைளையை பிறப்பித்தார்.

நுவரெலியா ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் [Photo Credit: K. Kishanthan]

இந்தத் துறைகளில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் அல்லது வேலைநிறுத்தத்தையும் முன்னெடுத்தால், அவர்கள், ஒரு நீதவான் முன்நிலையில் நடத்தப்படும் சுருக்கமான விசாரணையைத் தொடர்ந்து, "இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனையை மற்றும் 2,000 முதல் 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும்" எதிர்கொள்வர். குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்கள் எந்தவொரு எதிர்கால வேலைவாய்ப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்படுவதோடு அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்தையும் பறிமுதல் செய்யலாம்.

"எந்தவொரு உடல் ரீதியான செயல் அல்லது எந்தவொரு பேச்சு மூலம் அல்லது எழுத்தின் மூலமும்" தொழிற்சங்க நடவடிக்கையை "தூண்டுதல் அல்லது ஊக்குவித்தலில்" ஈடுபடுவது இதேபோன்ற தண்டனைக்கு உரிய செயலாகும். இது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதல் ஆகும். இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கை, இலக்கு வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஊழியர்கள் மீதான நேரடி தாக்குதல் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்குமான அச்சுறுத்தலாகும்.

இந்த தாக்குதலின் பாரதூரத் தன்மை இருந்தபோதிலும், ஒரு தொழிற்சங்கம் கூட, தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் ரீதியாக தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுப்பது ஒரு புறம் இருக்க, இந்த ஆணைகளின் பாரதூரமான உள்ளர்த்தங்களை உறுப்பினர்களுக்கு விளக்கவில்லை அல்லது அதை உடனடியாக இரத்துச் செய்யக் கோரவில்லை. கிட்டத்தட்ட இலங்கை தொழிற்சங்கங்கள் அனைத்தினதும் கொடிய மௌனமானது இந்த பிற்போக்கு சட்டங்களுக்கு அவற்றின் மறைமுக ஒப்புதலைக் காட்டுகின்றது.

இராஜபக்ஷவின் மே 27 ஆணைக்கு உடனடியாக பிரதிபலித்த, கிராம அலுவலர்கள் சங்கம், மறுநாள் அது திட்டமிட்டிருந்த அதன் 12,000 உறுப்பினர்களின் வேலைநிறுத்தத்தை இரத்து செய்தது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அது எதுவும் கூறவில்லை. ஆசிரியர்கள், தபால் ஊழியர்கள் மற்றும் சுகாதார சேவையின் ஒரு பிரிவின் தொழிற்சங்க முன்னணியைச் சேர்ந்த அதிகாரத்துவத்தினர், தடைகள் குறித்து தங்களது “வருத்தத்தை” தெரிவிக்கும் வகையில் ஒரு அக்கறையில்லாத அறிக்கையை வெளியிட்டனர்.

கண்டி மருத்துவமனை ஊழியர்கள் [WSWS Media]

அரசாங்க சார்பு தொழிற்சங்கமான அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது "கவலைகளை" வெளியிட்டு, இராஜபக்ஷக்கு ஒரு கடிதம் அனுப்பியது. தொழில்துறை தடைகள், "ஒரு நெருக்கடி நிலைமைக்கு வழிவகுக்கும்" என்றும் "சந்தர்ப்பவாத குழுக்கள் அதை [அ.பொ.சே.ச.] உள் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும்" என்றும் அது அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தொழிற்சங்கம் கவலைப்படுவது அடக்குமுறை சட்டங்கள் பற்றி அல்ல, மாறாக வெகுஜன தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடித்தால் அரசாங்கம் எதிர்கொள்ளும் "நெருக்கடி நிலைமை" பற்றியே அது கவலை கொண்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயும் கடந்த 18 மாதங்களாக அதன் பரவலும், உலக முதலாளித்துவ நெருக்கடியை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்பட்டிராத அளவிற்கு உக்கிரமாக்கியுள்ளது.

எந்தவொரு பொது முடக்கத்தையும் அமுல்படுத்துவதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கமும் ஆளும் உயரடுக்கினரும், கடந்த மார்ச் 20 வரை காத்திருந்தனர். பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில், பெருவணிக கோரிக்கைகளின் பிரதிபலிப்பாக பொருளாதாரத்தை மீண்டும் திறக்க உத்தரவிட்டனர். தனது உலகளாவிய சமதரப்பினருடன் இணக்கமாக, மக்கள் "புதிய இயல்புடன்" வாழ வேண்டும் என்று இராஜபக்ஷ அறிவித்தார். இது மனித உயிர் வாழ்வை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் "சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல்" என்ற குற்றவியல் கொள்கை ஆகும்.

கடந்த ஆண்டு தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களை மீண்டும் திறக்க இலங்கை தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆதரவளித்தன. சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை வணிக ஊழியர் சங்கம் உட்பட ஆறு தொழிற்சங்கங்கள் 2020 ஆம் ஆண்டு இராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில், “பொருளாதாரத்தைத் தக்கவைக்க” மீண்டும் நாட்டைத் திறந்து விடுவது அவசியம் என்று அறிவித்திருந்தன. தொழிற்சாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றிய தொழிற்சங்கங்களின் “அனுபவத்தை” சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தக் கடிதம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தது.

பின்னர் தொழிற்சங்க அதிகாரிகள், தொழில்துறை அமைச்சர் மற்றும் தேசிய தொழில் ஆலோசனைக் குழுவின் (என்.எல்.ஐ.சி) பிரதிநிதிகளைச் சந்தித்து, முதலாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஊதியம் மற்றும் வேலை வெட்டுக்களை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றியும் கலந்துரையாடி இருந்தனர்.

கடந்த நவம்பரில், துறைமுகத் தொழிலாளர்கள் மீது இராஜபக்ஷ ஒரு அத்தியாவசிய சேவை உத்தரவை விதித்தது, வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடைசெய்த போதும் கூட இலங்கை தொழிற்சங்கங்கள் வாயை மூடிக்கொண்டே இருந்தன.

அரசாங்கத்தின் சமீபத்திய அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பானது, அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடனான அவற்றின் ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. தொழிற்சங்கங்கள் பெருவணிக மற்றும் முதலாளித்துவ அரசின் கருவிகள் என்பதற்கு இது இன்னொரு சான்று ஆகும்.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகள் இராஜபக்ஷவின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அம்பாறை சுகாதார ஊழியர்கள் கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி நடத்திய போராட்டம் [Source; Facebook]

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு “அனைத்து கட்சி மாநாட்டை” நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதே வேளை, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தொற்றுநோயை சமாளிக்க ஒரு பரந்த “பொறிமுறையை” உருவாக்க கோருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, சுகாதார அவசரகால சட்டங்களை உருவாக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சிறிய தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த கட்சிகள் அரசாங்கத்துடன் ஏறத்தாழ ஒரு கூட்டணியில் உள்ளன.

அதேபோல், போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி, இராஜபக்ஷவின் வேலைநிறுத்த தடைகள் குறித்து மௌனமாக உள்ளது. கடந்த மாதம் அது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கோவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதிக்கும் கடிதம் எழுதி, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒரு திட்டம் தேவை என்று அவர்களுக்கு அறிவுறுத்தியது.

இலங்கை முதலாளித்துவத்தின் அதிகரித்துவரும் நெருக்கடிக்கு தொழிலாளர்களும் ஏழைகளும் விலை கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி இராஜபக்ஷ உறுதியாக இருக்கிறார். அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கைகள் காரணமாக, தினசரி இறப்பு எண்ணிக்கை சுமார் 100 ஆக உயர்ந்துள்ளதுடன், தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 3,000 ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடப்படுபவை ஆகும்.

கடந்த இரண்டு மாதங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்த போதிலும், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான திட்டங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்யும்படியும் “பாதிக்கப்பட்ட ஒரு நபர் கண்டறியப்பட்டால்” உடனடியாக பொது முடக்கம் செய்யக் கூடாது, என்றும் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத் தலைவர்களுக்கு இராஜபக்ஷ கடந்த வாரம் உத்தரவிட்டார்.

கடந்த வாரம் இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தினருக்கு முன்னால் உரையாற்றிய இராஜபக்ஷ “இலங்கை அரசாங்கம் செயல்திறன் மிக்கது மற்றும் வணிக சார்புடையது… நாங்கள் முதலீட்டை மிகவும் சாதகமாகப் பார்ப்போம்” மற்றும் “கொள்கை ஸ்திரத்தன்மையை” வழங்குவோம் என்று அறிவித்தார்:

இராஜபக்ஷவின் அத்தியாவசிய சேவைகள் வேலைநிறுத்தத் தடையானது அவருடைய அரசாங்கம் வர்க்கப் போராட்டங்களை ஈவிரக்கமின்றி அடக்குவதோடு அவர்களின் இலாபங்களையும் பாதுகாக்கும் என்ற செய்தியை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய அவரது நகர்வுகளில் இது மற்றொரு கட்டமாகவும் அமைகிறது.

இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல்களை பிரதான நிர்வாக பதவிகளில் அமர்த்தியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், நாட்டின் 25 மாவட்டங்களில் ஆயுதப்படை அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து, "சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல்" என்ற பெயரில் படையினரை தயார் நிலையில் வைத்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்களைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும், முதலாளித்துவ வர்க்கமும், தொற்றுநோயால் உருவாகும் பேரழிவு நிலைமைகளை சவால் செய்யும் வகையில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களால் பீதியடைந்துள்ளன.

இலங்கை சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து அரசாங்கத்தின் வேலைநிறுத்த தடைகளை மீறி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வேலை பாதுகாப்பு மற்றும் உயர்ந்த கொடுப்பனவுகளை கோருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதன்கிழமை, சுகாதாரப் பணியாளர்களில் மற்றொரு பிரிவு மதிய உணவு நேர ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கியது. அதே நாளில், தினசரி ஊதியம் பெறும் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று பல்லாயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஐந்து மணி நேர தேசிய வெளிநடப்பை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத் துறை தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பின் அறிகுறியாகும்.

ஜூன் 7 அன்று WSWS முன்னோக்கு குறிப்பிட்டது போல்: “அரசாங்கம் இதுவரை தனது புதிய கொடூரமான அதிகாரங்களை அரசாங்க ஊழியர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முற்படவில்லை.… ஆனால் ஒரு பக்கம் இலங்கை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரச எந்திரத்திற்கும் மறுபுறம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற உழைப்பாளர்களுக்கும் இடையிலான ஒரு மோதல் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இருக்கின்றது."

முன்னோக்கு விளக்கியது போல, தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக எதிர் தாக்குதலுக்கு தயாராக வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முஸ்லீம்-விரோத மற்றும் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களைத் தூண்டுவதற்கான இலங்கை ஆளும் உயரடுக்கின், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மற்றும் அவர்களின் இனவெறி கூட்டாளிகளின் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்பதாகும். முன்னோக்கிச் செல்வதற்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றுக்கு எதிராகவும் வேலைத் தளங்களில் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

இந்த குழுக்களை ஸ்தாபிப்பது, இலங்கையிலும் சர்வதேச அளவிலும், பொதுவான பிரச்சினைகளையும் பொதுவான எதிரிகளையும் எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு அனைத்து தொழில்கள் மற்றும் துறைகளில் இருந்து ஒன்றிணைவதற்கான அடிப்படையை வழங்குகிறது. நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக! நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏப்ரல் 23 விடுத்த அழைப்பின் அடித்தளம் இதுவே ஆகும்.

முழு அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகின்ற, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுகின்ற ஒரே அமைப்பு இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.

Loading