வீகர் மக்கள் தொடர்பாக சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வெள்ளியன்று பைடென் நிர்வாகம், சீனாவின் ஜின்ஜியாங்கில் சிறுபான்மை வீகர் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக, சீனாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளை சுமத்தியது. இந்த தண்டனை நடவடிக்கைகள் சீனாவுடனான அமெரிக்க மோதலின் ஒரு பகுதியாகும். இதில் பொய்கள் மற்றும் திரிப்பு பிரச்சார நடைவடிக்கைகள், பெய்ஜிங்கிற்கு எதிராக இடைவிடாத ஒரு இராணுவ கட்டமைப்போடு சேர்ந்து வருகிறது.

அமெரிக்க வர்த்தகத்துறையானது அதன் நிறுவனங்கள் பட்டியலில் 34 நிறுவனங்களை சேர்த்துக் கொண்டது, இது அமெரிக்க குடிமக்கள் அல்லது பெருநிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் வணிக பரிவர்த்தனை செய்வதை தண்டனைக்குரியதாகச் செய்கிறது. அவைகளில் 14 நிறுவனங்கள் ஜின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் 'அடக்குமுறை, பாரிய தடுப்புக்காவல் மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு' நடைவடிக்கையை செயற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் சீன நிறுவனங்களாகும்.

லேசர்கள் மற்றும் போர் மேலாண்மை முறைகள் தொடர்பான சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களை ஆதரிப்பதற்காக மேலும் ஐந்து சீன நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதைத் தவிர, ஈரானுக்கு அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியதற்காக எட்டு நிறுவனங்களும், 'ரஷ்ய இராணுவத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடும்' என்ற அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்கு உதவியதற்காக மேலும் ஆறு நிறுவனங்களும் மேற்கோளிடப்பட்டன.

வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Creative Commons / கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் பணியகம்)

வாஷிங்டனின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளின் பரந்த தன்மையானது வர்த்தகத் துறையின் அறிக்கையால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது, அது அந்த நிறுவனங்கள் 'அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அல்லது அதில் ஈடுபடும் அபாயத்திற்காக' பட்டியலில் சேர்க்கப்பட்டன என்று அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருளாதாரத் தடைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேலும் அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன. குற்றவியலான ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடங்குவதற்கான தயாரிப்பில், நாடுகளை இலக்கு வைக்க போலியான 'மனித உரிமைகள்' பிரச்சாரங்களை இழிந்த முறையில் சுரண்டுவது இதில் அடங்கும் 'அல்லது இதில் ஈடுபடும் ஆபத்து' என்ற சொற்றொடர் அமெரிக்கா அதன் தண்டனை நடவடிக்கைகளை மிகவும் பலவீனமான நியாய அடிப்படையில் திணிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

மீண்டும், ஒரு சிறு ஆதாரத்தையும் வழங்காமல், அமெரிக்காவானது வீகர்களை நடத்துவதில் சீனா 'இனப்படுகொலை' மற்றும் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' செய்ததாக குற்றம் சாட்டியது. பெய்ஜிங் ஆட்சியானது சந்தேகத்திற்கு இடமின்றி ஜின்ஜியாங்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது என்றாலும், 'இனப்படுகொலை' என்ற அமெரிக்காவின் கூற்றுக்கள் ஒரு அப்பட்டமான பொய்யாகும். மேலும், 'மனித உரிமைகள்' துஷ்பிரயோகங்கள் பற்றிய அதன் குற்றச்சாட்டுக்கள் வலதுசாரி கல்வியாளர்கள் மற்றும் அமெரிக்க சார்பு வீகர் நாடுகடந்து செயற்படும் அமைப்புகளின் (exile organisations) மிகவும் கேள்விக்குரிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

அதன் நலன்களுக்கு பொருத்தமாக இருக்கும் போது அமெரிக்கா வாடிக்கையாக அதன் நட்பு நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற மூலோபாய பங்காளிகளின் மனித உரிமை மீறல்கள் மீது கண்ணை மூடிக் கொண்டு இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அதன் சட்டவிரோத மற்றும் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு புஷ் நிர்வாகம் சீன ஆதரவைக் கோரியபோது, ஜின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் சொந்த 'பயங்கரவாதத்தின் மீதான போரை' அது அங்கீகரித்தது. இப்போது அது சீனாவுடன் ஒரு மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கையில், ட்ரம்பின் கீழ் உள்ளதைப் போலவே, பைடனின் கீழுள்ள அமெரிக்காவும், உய்குர்கள் பிரச்சினையில் திடீரென நேருக்கு நேர் சீன ஆட்சி மீதான அதன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று, அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஏழு வீகர் நாடுகடந்து வாழ்பவர்களை சந்தித்தார். வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்துப்படி, செயலாளர் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அவர்களின் கதைகளை கேட்க விரும்பினார், 'ஜின்ஜியாங்கில் நடந்து வரும் அட்டூழியங்கள் மற்றும் ஒரு மில்லியன் வீகர்கள் காவலில் வைக்கப்பட்டது பற்றிய அவர்களின் தடுப்புக்காவல் தொடர்பாக நேரடியாக கேட்க விரும்பினார்.'

உண்மையில், பெய்ஜிங் 'மறுகல்வி' மற்றும் 'பயிற்சி' மையங்கள் என்று அழைக்கும் இடங்களில் வீகர்கள் தெளிவாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வீகர் தடுப்புக் காவல்களின் அளவு பற்றிய நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. சந்தேகத்திற்குரிய இரண்டாம் தர தகவல்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்ட ஒரு மில்லியன் என்ற எண்ணிக்கை, அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஒரு நிறுவப்பட்ட உண்மை போல் முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் சமீபத்திய சுற்று, பைடென் நிர்வாகம் அதன் பிரச்சாரப் போரை தீவிரப்படுத்த விரும்புகிறது என்பதற்கான மேலும் ஒரு அறிகுறியாகும். அலாஸ்காவிலுள்ள உயர்மட்ட சீன தூதர்களுடன் பிளிங்கன் தனது முதல் நேருக்கு நேர் சந்திப்பை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர், மார்ச் மாதம் சீன அதிகாரிகள் மீது முந்தைய சுற்று பொருளாதாரத் தடைகளை அது ஆத்திரமூட்டும் வகையில் விதித்தது. அலாஸ்காவிலுள்ள அவரது சீன சகாக்களுக்கு முன்னர் சீனாவை அவர் அப்பட்டமாக கண்டித்தது தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னர் ஒரு இராஜதந்திர பூசலை உருவாக்கவும், அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் கணக்கிடப்பட்டது.

ட்ரம்பை விட, பைடென் சீனாவிற்கு எதிரான விரைவுபடுத்தப்பட்ட போர் உந்துதலில் அமெரிக்க நட்பு நாடுகளையும் பங்காளிகளையும் சேர்த்துக் கொள்ள முயன்று வருகிறார், மேலும் வீகர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுவது உட்பட வாஷிங்டனிலிருந்து வெளிப்படும் பிரச்சாரத்தை அவர்கள் கிளிப்பிள்ளையாக இருப்பதை உறுதி செய்ய முயன்றுள்ளார். அலாஸ்காவில் உச்சிமாநாட்டை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் கனடாவுடன் இணைந்து, சீனா மீது, குறிப்பாக வீகர்கள் தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்தது- அவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தால் அங்கீகரிக்கப்பட்டன, ஆனால் செயற்படுத்தப்படவில்லை.

கடந்த மாதம், ஒரு ஆஸ்திரேலிய பாராளுமன்றக் குழு, கட்டாய உழைப்புடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு உலகளாவிய தடையை ஏற்க பரிந்துரைத்தது. சுயாதீன செனட்டர் ரெக்ஸ் பேட்ரிக் ஜின்ஜியாங்கிலிருந்து பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குழு விசாரணை நடந்தது. குறிப்பாக ஜின்ஜியாங்கில் பருத்தி உற்பத்தியில் வீகர்களின் கட்டாய உழைப்பை சீனா பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக ஜின்ஜியாங்கிலிருந்து பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. குழுவின் அறிக்கையானது இந்த சட்டத்தை அங்கீகரித்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவுடன் இணைந்து சீனாவிற்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

பிரிட்டனில், பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு கடந்த வாரம் ஒரு அறிக்கையைக் கொண்டுவந்தது. ஜின்ஜியாங்கிலிருந்து சீன பருத்தி மற்றும் சூரிய சக்தி பேனல்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது உட்பட, வீகர்களின் துஷ்பிரயோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்கில் எந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், வீகர் தஞ்சம் கோருவோருக்கு சிறப்பு விரைவு அமைப்புமுறைகளை செய்ற்படுத்தமாட்டார்கள் என்றும், ஜின்ஜியாங்கில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு உபகரணங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இறக்குமதிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அது அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

இது யுரேசியா முழுவதும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன்களை வழங்கி, ஜின்ஜியாங்கில் அட்டூழியங்களுக்கு எதிராக பேசவேண்டாம் என்று பல இஸ்லாமிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற அறிக்கையானது சீனா அதன் ஒரே சாலை ஒரே இணைப்பு முன்முயற்சியைப் (Belt and Road Initiative) பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது. இது சீன-விரோத பிரச்சாரத்திற்கு இணங்க, கொடுமைப்படுத்தும் மற்றும் வலுவான ஆயுத நாடுகளை மிரட்டும் அமெரிக்க தலைமையிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். முஸ்லீம் வீகர்கள் மீது சீன துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க கண்டனங்களில் முஸ்லீம் நாடுகள் முக்கியமாக சேரவில்லை என்பது வாஷிங்டனின் ஒரு பின்னடைவு என்றும், அது சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் தெளிவாகக் கருதப்படுகிறது.

வீகர் இனப்படுகொலை என்ற பொய்யை பிரச்சாரம் செய்வதில் முக்கியமாக இடம்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கடந்த வாரம் பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி இம்ரான் கான், வீகர்கள் தொடர்பான சீனாவின் கொள்கைக்கு ஆதரவாக நிற்பதற்காக குற்றம் சாட்டியது. 'சீனாவுடன் நாங்கள் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளோம்... சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிப்பட்டதிலிருந்து அவர்கள் அதைப்பற்றி சொல்கிறார்கள்”. அவர் மேலும் கூறுகையில், “மற்ற மனித உரிமை பிரச்சினைகள் அதே கவனத்தை ஈர்க்கவில்லை என்பது பாசாங்குத்தனம்” என்றார்.

ஞாயிறன்று, சமீபத்திய அமெரிக்க தடைகளுக்கு விடையிறுக்கும் வகையில், சீன வர்த்தக அமைச்சகம் வாஷிங்டனின் நடவடிக்கையை 'சீன நிறுவனங்களை நியாயமற்ற முறையில் நசுக்குதல் மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளை கடுமையாக மீறுதல்' என்று முத்திரை குத்தியது. 'சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும்' என்று அது குறிப்பாக குறிப்பிடாமல் எச்சரித்தது.

கோவிட்-19 ஆனது சீன நகரமான வுஹானிலுள்ள ஒரு வைராலஜி ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டது என்ற பொய்யுடன், அமெரிக்கா அதன் சீன-விரோத பிரச்சாரத்தின் மையக் கூறாக வீகர்கள் மீதான அதன் போலியான 'மனித உரிமைகள்' பிரச்சாரத்தை சுரண்ட விரும்புகிறது. ஜின்ஜியாங் மீது அதன் கவனம் தற்செயலானது அல்ல. இந்த பிராந்தியம் மத்திய ஆசியாவிற்கு அருகில் இருப்பதால் சீனாவிற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அதன் ஒரே இணைப்பு ஒரே சாலை முன்முயற்சிக்கு (Belt and Road Initiative) முக்கியமானதாகும். ஜின்ஜியாங்கில் ஏற்படும் குழப்பங்கள் சீனாவை பலவீனப்படுத்தும் மற்றும் எரிசக்தி வளம் மிக்க மத்திய ஆசியாவில் அமெரிக்க நலன்களை முன்னேற்றும் என்று வாஷிங்டன் கணக்கிடுகிறது.

Loading