மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஜூன் 19, "ஜூன்டீன்த்" தினத்தை, அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவு கட்டப்பட்டதை நினைவுகூரும் கூட்டாட்சியின் விடுமுறை தினமாக நிறுவும் சட்டத்தில் கடந்த வியாழனன்று கையெழுத்திட்டார். இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ஜூன் 19 வாரயிறுதியாக வந்ததால், அந்த விடுமுறை முதலில் அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமையே குறிக்கப்பட்டது.
வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் அமெரிக்கப் புரட்சி என்று பொருத்தமாக அழைக்கும் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டமான அடிமைகளின் இறுதி விடுதலையின்போது, —இதை வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் அமெரிக்கப் புரட்சி என்று பொருத்தமாக அழைக்கின்றனர்—இவற்றில் 350,000 க்கும் அதிகமான ஒன்றிய சிப்பாய்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கில் அடிமை தன்னலக்குழு அழிக்கப்பட்டமை, அமெரிக்கருக்கு மட்டுமல்ல, மாறாக உலக வரலாற்றிற்கும் அளப்பரிய ஒரு முற்போக்கான முக்கியத்துவமான நிகழ்வாக இருந்தது.
விடுமுறை உத்தியோகபூர்வமாக குறிக்கப்பட்டதைப் பற்றிய முடிவில்லா ஊடக வர்ணனைகள் இருந்தாலும், அவற்றில் 1865 இல் அடிமைகளின் விடுதலை அல்லது நிகழ்காலத்தின் மீதான அதன் புரட்சிகர தாக்கங்கள் பற்றி எந்த தீவிரமான வரலாற்று ஆய்வும் இருக்கவில்லை.
1865 இல் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கறுப்பின மக்கள் அவர்கள் விடுவிக்கப்பட்டதை அறிந்த தினமே ஜூன்டீன்த் என்று கொண்டாடப்படுகிறது. இது ராபர்ட் ஈ. லீ இன் கூட்டு படைகள் தொலைதூர வேர்ஜீனியாவில் Appomattox வளாகத்தில் யூலிஸீஸ் எஸ். கிரான்ட் (ulysses s. grant) வசம் சரணடைந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வந்தது, இதற்கு ஒரு சில நாட்களுக்குப் பின்னர் ஆப்ரஹாம் லிங்கன் வாஷிங்டன் டி.சி. இல் தெற்கின் இனவாத அனுதாபி ஜோன் வில்கெஸ் பூத்தால் படுகொலை செய்யப்பட்டார். சட்டரீதியான அர்த்தத்தில், அடிமைகளின் விடுதலை விடுதலை பிரகடனத்தின் மூலமாக அதற்கு முன்னரே வந்திருந்தது, அந்த பிரகடனம் ஜனவரி 1, 1863 இல் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிராந்தியத்திலிருந்து அடிமைகளை விடுவித்து நடைமுறைக்கு வந்தது. ஜனவரி 31, 1865 இல் காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட மற்றும் டிசம்பரில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிமூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், அமெரிக்க ஒன்றியத்தில் ஒவ்வொரு இடத்திலும் அடிமைமுறையை ஒழித்தது.
இவை அனைத்தையும் குறித்து அடிமைகள் எதையும் தெரிந்துகொள்ளாமலிருக்க இந்த எஜமானர்கள் முயன்றனர். ஆனால் ஜூன் 19, 1865 காலை, ஒன்றிய மேஜர் ஜெனரல் கோர்டன் கிராஞ்சர் (Gordon Granger), டெக்சாஸின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை விடுவித்து மற்றும் அடிமைமுறையிலிருந்து கூட்டாட்சி அரசுக்கு அதிகாரத்தைச் சமாதானமாக கைமாற்றுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,000 க்கும் மேற்பட்ட ஒன்றிய துருப்புகள் மீது கட்டுப்பாட்டை ஏற்க டெக்சாஸின் கால்வெஸ்டன் வந்தடைந்தார். பொது ஆணை எண்.3 என்ற அவர் அறிவிப்புடன், கிராஞ்சர் அடிமைமுறை நடைமுறையளவில் எஞ்சியிருந்த கடைசி கூட்டாட்சி மாநிலத்திலும் அதை கலைத்தார்.
அந்த ஆணை பின்வருமாறு குறிப்பிடுகிறது:
அமெரிக்க நிர்வாகத்தின் ஒரு பிரகடனத்தின்படி, அடிமைகளும் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது டெக்சாஸ் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இது முன்னாள் எஜமானர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சொத்துரிமைகளின் முழுமையான சமத்துவத்தை உள்ளடக்கியது, மேலும் இப்போதிருக்கும் அவர்களுக்கு இடையிலான தொடர்பு இனிமேல் முதலாளிக்கும் கூலிக்கமர்த்தப்பட்ட உழைப்புசக்திக்கும் இடையிலானதாக மாறுகிறது.
இத்தகைய விடயத்தை தெளிவுபடுத்தும் சொற்களுடன் அந்த ஒன்றிய ஜெனரல் உள்நாட்டு போரின் புரட்சிகர உள்ளடக்கத்தையும் —அதாவது, ஒட்டுமொத்த சமூக ஒழுங்கை ஒழித்து அடிமைகளை விடுதலைப்படுத்தியதையும்— மாறாக புதிய ஒழுங்கின் கூர்மையான யதார்த்தத்தையும் தெளிவுபடுத்தினார். நான்கு மில்லியன் தொழிலாளர்கள் இனி மற்றவர்களின் சொத்தல்ல, ஆமாம், ஆனாலும் அவர்களுக்கும் சொந்தமாக சொத்துக்கள் இல்லை. அவர்கள் இப்போது, அவர்களின் முன்னாள் எஜமானர்களுக்கே கூட, அவர்களின் உழைப்பு சக்தியை விற்க சுதந்திரமாக இருந்தனர்.
கிராஞ்சரின் அறிவிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்த போதிலும், கால்வெஸ்டனில் முன்னாள் அடிமைகள் அதைக் கொண்டாடினர். ஒன்றியத்தின் படை வலிமையின் முனையில் அடிமைத்தனம் முறிக்கப்பட்டது ஒரு மகத்தான முன்னேற்றமாக இருந்தது, அதை அடிமைகள் அறிந்திருந்தார்கள். இந்த "விடுவிக்கப்பட்டவர்கள்" (freedmen), இவ்வாறு தான் அவர்கள் அழைக்கப்பட்டார்கள், இனவாத அரசியலின் சமகால விற்பனையாளர்களைப் போல உள்நாட்டுப் போரையோ அல்லது லிங்கனையோ ஏளனம் செய்யவில்லை. ஜூன் 19, 1866 இல், அந்த அறிவிப்புக்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த விடுவிக்கப்பட்டவர்கள் அந்நாளை முதல்முறையாக ஒழுங்கமைத்தார்கள், அதுதான் இப்போது பொதுவாக ஜூன்டீன்த் என்று அழைக்கப்படும் "ஜூபிலி தினம்" இன் வருடாந்திர கொண்டாட்டமாக மாறியது. பின்னர் அந்த அடிமைகளின் மகன்களும் மகள்களும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகர்ந்து, பங்கு வேளாண்மையிலிருந்து கூலி உழைப்புக்கு மாறிய நிலையில் அவர்களுடன் சேர்ந்து அந்த விடுமுறை தினமும் கிராமப்புற கிழக்கு டெக்சாஸிற்கு வெளியே நகர்ந்தது.
ஜூன்டீன்த் முக்கியத்துவம் வர்ணனையில் இந்த பிரச்சினைகள் எதுவுமே பேசப்படவும் கூட இல்லை. இன அடையாளம் ஊடுருவியுள்ள ஓர் அரசியல் சூழ்நிலையில், இந்த ஜூன்டீன்த் சந்தர்ப்பம் இந்த விடுமுறையை இனவாத பொருள்விளக்கங்களை முன்னெடுக்க கைப்பற்றப்பட்டுள்ளது.
நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் Jamelle Bouie ஓராண்டுக்கு முன்னர் வெளியிட்ட, “ஜூன்டீன்த் ஏன் முக்கியமானது,” என்ற ஒரு கட்டுரையில் ஜூன்டீன்த்தைச் சுற்றி ஊக்குவிக்கப்பட்டு வரும் கருத்துருக்களைத் தொகுத்து வழங்கி இருந்தார். Bouie இன் கூற்றுப்படி, "கறுப்பின அமெரிக்கர்கள் தான், 'சுதந்திரத்தின் புதிய பிறப்பு" என்ற லிங்கனின் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள்.” அவர் எழுதுகிறார், “ஆபிரகாம் லிங்கனோ அல்லது குடியரசுக் கட்சியோ அடிமைகளை விடுவிக்கவில்லை... அடிமைகளை யார் விடுவித்தது? அடிமைகளே தான் அடிமைகளை விடுவித்தார்கள்." விடுதலை மற்றும் மக்கள் உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தைக் கறுப்பின அமெரிக்கர்கள் "தனியாகப் போராடினார்கள்" என்று மதிப்பிழந்த 1619 திட்டத்தின் முக்கிய கட்டுரையில் நிக்கோல் ஹன்னா-ஜோன்ஸ் குறிப்பிட்டதை முட்டுக்கொடுப்பதே Bouie கட்டுரையின் நோக்கமாக இருந்தது.
அதே கருப்பொருள் மீதான ஒரு சமீபத்திய கருத்துரை Atlantic இதழில், "கறுப்பினத்தவர் சுதந்திரம் பற்றிய உண்மை" என்ற தலைப்பில், ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று முறை தலைவர் டயானா ரமே பெர்ரியின் (Daina Ramey Berry) ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது. "ஜூன்டீன்த் என்பதன் அர்த்தம் என்ன?" என்ற கேள்விக்கு பதிலளித்து, சுதந்திரப் பிரகடனம் மற்றும் பதின்மூன்றாவது திருத்தத்தின் முக்கியத்துவத்தை குறைத்து பெர்ரி பதிலளிக்கிறார். "சுய-விடுதலை பெற்ற" கறுப்பின மக்கள் "ஒவ்வொரு வரலாற்று தருணத்திலும், எப்போதும் அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களின் இயக்கங்களுக்கு முரண்பட்டு முன்னுக்குப் பின் முரணாக முன்நகர்ந்து, தொடர்ந்து அவர்களின் சுதந்திரத்திற்காக உரிமை கோரினார்கள்,” என்றவர் வாதிடுகிறார்.
அடிமைகள் "தங்களைத்தாங்களே விடுவித்துக் கொண்டனர்" என்ற கூற்று உள்நாட்டுப் போரின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியாததாக ஆக்குகிறது. அடிமைகளால் சர்வசாதாரணமாக தங்களை விடுவித்துக் கொள்ள முடிந்தது என்றால், அவர்கள் 1863–1865 க்குப் பதிலாக, சொல்லப் போனால், ஏன் 1750 இலேயே அதை செய்யவில்லை? உள்நாட்டுப் போரே ஏன் அவசியப்பட்டது? உள்நாட்டுப் போர் என்பதே "சகோதரர்களுக்கு" இடையே நடத்தப்பட்ட ஒரு பிழையான போராட்டம், அதில் அடிமைமுறை ஒன்றையொன்று சார்ந்து தொடர்புபட்டிருந்தது என்ற பழைய "இழந்த நம்பிக்கை" (Lost Cause) கட்டுக்கதையை Berry மற்றும் Bouie நம்புகிறார்களா? மேலும், அடிமைகள் தங்களைத்தாங்களே விடுவித்துக் கொண்டார்கள் என்றால், அப்போமாடோக்ஸ் சம்பவத்திற்கு (Appomattox) சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், Bouie அபத்தமாக குறிப்பிடுவதைப் போல, “அந்த செய்தியைத் தெரிவிப்பதற்காக" ஜெனரல் கிராஞ்சர் ஓர் இராணுவத்துடன் கால்வெஸ்டனில் நுழைய வேண்டிய அவசியம் என்ன?
அடிமைகள் தங்களைத்தாங்களே விடுவித்துக் கொண்டனர் என்று கூறுவது, அதிர்ச்சியூட்டும் அளவிற்கு வன்முறையைக் கொண்டிருந்த பண்டைய அடிமைமுறையின் கொடூரங்களையே ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. அந்த முறையை ஒழிப்பதற்கு ஓர் உள்நாட்டு போர் தேவைப்பட்டது, லிங்கன் அவரது இரண்டாவது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டவாறு, “இந்த கசையடியில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் பிறகு வாளால் உருவிஎடுக்கப்பட்ட வேறொருவரால் விலை செலுத்தப்படும்,” என்று கூறுமளவுக்கு, அந்த உள்நாட்டு போர் நூறாயிரக் கணக்கானவர்களைப் பலி கொண்டது.
மனிதகுலத்தின் தளைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்புவிடுத்த அரசியல் கட்சியின் தலைவராக லிங்கனின் வெற்றி இல்லாமல், யதார்த்தத்தில், அடிமைமுறையைத் தக்க வைத்திருந்த மிகவும் சக்தி வாய்ந்த அந்த செல்வந்தர்களின் தோல்வியை நினைத்தும் பார்க்க முடியாது. லிங்கனின் வெற்றியும், அது அடிமைத்தனத்திற்கு முன்வைத்த அச்சுறுத்தலும், உண்மையில் சொல்லப் போனால், அதற்குப் பின்னர் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் கூட்டமைப்பு அரசியலமைப்பிலும் உச்சரிக்கப்பட்டவாறு, தென் மாநிலங்கள் பிரிந்ததற்கு காரணமாக இருந்தது. இன்னும் முக்கியமாக, வடக்கில் இருந்த வெகுஜன ஆதரவு, ஒன்றிய இராணுவத்தின் நிதானம், தெற்கில் அடிமைகளின் எதிர்ப்பு, வரலாற்றாசிரியர் விக்டோரியா பைனம் (Victoria Bynum) மற்றும் ஏனையவர்களும் எடுத்துக்காட்டியதைப் போல, பிரிந்து செல்வதற்கு அடிமைகளை வைத்திருக்காத வெள்ளையினத்தவர்களின் எதிர்ப்பு ஆகியவை இல்லாமல் ஒன்றியத்தின் வெற்றியை நினைத்தும் பார்க்க முடியாது. அந்நேரத்தில் மார்க்ஸ் விளக்கியதைப் போல லிங்கன் பிரகடனம் தான், அந்த மோதலுக்குத் திட்டவட்டமான சமூகப் புரட்சிகரத் தன்மையைக் கொடுத்தது.
உள்நாட்டுப் போரின் போது உயிருடன் இருப்பவர்களைப் போலவே, நாமும் ஒரு சமரசமற்ற மோதல் காலத்தில் வாழ்கிறோம். இரத்தந்தோய்ந்த நான்காண்டு கால மோதலில் ஒன்றிய மற்றும் கூட்டமைப்பு சிப்பாய்கள் எத்தனை பேர் உயிரிழந்தார்களோ அந்தளவிலான தொழிலாளர்கள் ஒரேயாண்டில் கோவிட்-19 இல் இறந்திருக்கிறார்கள். இதற்கிடையே தான், பங்குச் சந்தைகள் தொடர்ந்து அதன் முன்சாதனைகளை முறித்து வருவதுடன் பணக்காரர்களோ அவர்களின் செல்வவளம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்வதைக் காண்கிறார்கள்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் மனக்கண் முன் நிழலாடும் வெடிப்பை நினைத்து பீதியுற்று, கடந்த காலத்தைப் போலவே அதேயளவுக்கு இப்போதும் அஞ்சி நடுங்குகிறது. அமெரிக்க வரலாற்றை திரித்து எழுதுவதற்கான தற்போதைய பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமே, “வெள்ளையினத்தவர்கள்” "கருப்பினத்தவர்களை" ஒடுக்குபவர்கள் என்பதை தவிர வேறெதுவுமாக இருக்கமுடியாது என்ற ஓர் இனரீதியிலான விளக்கத்தைக் கொண்டு வர்க்க இயக்கவியல் மற்றும் வர்க்க மோதலை —முடிவாக, அடிமைமுறையே உழைப்பு சுரண்டலின் ஓர் அமைப்புமுறை தான்— பிரதியீடு செய்வதும், இந்த "புதிய சொல்லாடலில்,” வெள்ளையின ஒன்றிய சிப்பாய்களுடன் சேர்ந்து, லிங்கனின் பாத்திரமும் குறைக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.
1776 அமெரிக்கப் புரட்சியைப் போலவே, உள்நாட்டுப் போரில் அடிமைகளின் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான நனவான தொழிலாளர்கள், நான்கு மில்லியன் அடிமைகளின் விடுதலையின் புரட்சிகர முக்கியத்துவத்தை முதலாளித்துவத்தின் பாதுகாப்பிற்காக அபகரித்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.
மேலும் படிக்க
- கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்பு நெப்போலியன் மற்றும் பிரெஞ்சு புரட்சியுடன் போருக்கு செல்கிறது
- நியூ யோர்க் டைம்ஸூம் நிக்கோல் ஹான்னா-ஜோன்ஸூம் 1619 திட்டத்தின் முக்கிய வாதங்களை நிராகரிக்கின்றனர்
- இன-வகுப்புவாத அரசியலும், ஆப்ரகாம் லிங்கனின் இரண்டாவது படுகொலையும்
- வாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் கிராண்ட் ஆகியோரின் நினைவுச் சின்னங்களில் கைவைக்காதீர்!