முன்னோக்கு

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் வெடித்து எண்பத்தைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 17, 1936 அன்று, ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான ஸ்பெயினின் இராணுவம் ஸ்பெயினின் இரண்டாவது குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாசிச சதித்திட்டத்தைத் தொடங்கியது. ஸ்பெயின் முழுவதும் உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆயுதமேந்திய கிளர்ச்சியுடன் பதிலளித்தனர். அவர்கள் தொழிற்சாலை குழுக்களை அமைத்து, பாசிச துருப்புக்களை எதிர்த்துப் போராடுவதற்கு போராளிக்குழுக்களை அமைத்தனர். 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போர் தொடங்கியது.

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் என்பது 20 ஆம் நூற்றாண்டில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஐரோப்பிய பாசிசத்திற்கும் இடையிலான பெரும் போர்களில் ஒன்றாகும். நாஜி ஜேர்மனியும் பாசிச இத்தாலியும் பல்லாயிரக்கணக்கான படையினரை பிராங்கோவின் தரப்பில் சேர அனுப்பினர். பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் தலையீடு செய்யாத கொள்கையை கடைப்பிடித்து, குடியரசிற்கு இராணுவ உதவியைத் தடுத்தாலும், பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சிக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் பாரிய அனுதாபம் இருந்தது. பிராங்கோவை எதிர்த்துப் போராட பல்லாயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்குப் பயணம் செய்தனர். பாசிச எதிர்ப்பு சர்வதேச படைப்பிரிவுகள் 53 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60,000 தன்னார்வலர்களைக் கொண்டிருந்தன.

ஜூலை 19, 1936 அன்று பார்சிலோனாவில் நடந்த பிராங்கோ சார்பு இராணுவ கிளர்ச்சியைத் தோற்கடித்து பார்சிலோனாவில் உள்ள தொழிலாளர்கள் தெருக்களில் கொண்டாடுகிறார்கள்

ஸ்பானிய உள்நாட்டுப் போரின் விளைவு ஸ்பெயினினது தலைவிதி மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் உலகத்தின் தலைவிதியும் தங்கியிருந்தது. பிரான்சில், பிரதம மந்திரி லியோன் புளூம் (Léon Blum) இன் மக்கள் முன்னணி அரசாங்கம் (Popular Front government) மே-ஜூன் 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறையை முடுக்கிவிட்டது. அதே நேரத்தில் அமெரிக்காவில் ஒரு சக்திவாய்ந்த வேலைநிறுத்த இயக்கம் விரிவடைந்து பாரிய தொழில்துறை தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது. ஸ்பெயினில் ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சி, சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஊக்குவித்திருக்கும்.

எவ்வாறாயினும், இதன் விளைவாக பாசிச சக்திகளை வலுப்படுத்திய தொழிலாள வர்க்கத்தின் தோல்வியானது, பிராங்கோவின் ஏப்ரல் 1, 1939, வெற்றி உரையின் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் ஹிட்லரின் ஆட்சி ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரைத் தொடங்க வழி வகுத்தது. இந்தப் போர் யூதப்படுகொலைகளால் நாஜிகளால் கொலை செய்யப்பட்ட ஆறு மில்லியன் யூதர்கள் உட்பட 75 மில்லியன் உயிர்களை பலிகொண்டது.

அதன் 23.6 மில்லியன் மக்கள்தொகையில், ஸ்பெயினிலேயே 500,000 மக்கள் உள்நாட்டுப் போரில் இறந்தனர். அரை மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 150,000 தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் பாசிசவாதிகளால் கொல்லப்பட்டனர். போர் முடிவடைந்த பின்னர், குடியரசுக்கு ஆதரவான 20,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மற்றும் 300 வதை முகாம்களிலும் சிறைகளிலும் ஒரு மில்லியன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பிராங்கோவின் ஆட்சி நான்கு தசாப்தங்களாக நீடித்து, 1978 இல் பாரிய எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களினால் மட்டுமே வீழ்ச்சியடைந்தது.

தொழிலாள வர்க்கத்தின் தோல்வி தவிர்க்க முடியாதது அல்ல. எவ்வாறாயினும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான சமரசமற்ற மோதலைப் பற்றி விவாதிக்காமல் இந்த தோல்வியைப் பற்றி விவாதிப்பது சாத்தியமற்றது.

உள்நாட்டுப் போர் வெடித்தவுடன், அக்டோபர் புரட்சியின் லெனினுடன் இணைத் தலைவரும், செம்படையின் தளபதியுமான ட்ரொட்ஸ்கி, தொழிலாளர்கள் ஆட்சியை கைப்பற்றி, புரட்சிகர வழிமுறைகள் மூலம் பிராங்கோவுக்கு எதிரான போரைத் தொடர்ந்தால் வெற்றி சாத்தியமாகும் என்று விளக்கினார். மேலும், இந்த மூலோபாயம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக போராட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தினை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நான்காம் அகிலம் போரின் போது, செப்டம்பர் 1938 இல் பாரிஸில் நிறுவப்பட்டது.

ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஸ்ராலினிசத்தின் எதிர் புரட்சிகர பங்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளுக்கு ஒரு பேரழிவுகரமான நிரூபணத்தை வழங்கியது. அக்டோபர் புரட்சியின் எஞ்சியிருக்கும் பழைய போல்ஷிவிக் தலைவர்களைக் கொல்வதற்கான ஒரு சாக்குப்போக்காக சோவியத் அதிகாரத்துவம் பெரும் களையெடுப்புக்களைத் தயாரித்த வேளையில் ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1936 இல், முதல் மாஸ்கோ வழக்குகளின் பொய்குற்றச்சாட்டுகளை அக்டோபர் புரட்சியில் தப்பியிருந்த தலைவர்களை கொல்வதற்கான போலிச்சாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயினில், சோவியத் அதிகாரத்துவமும் மற்றும் ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் (PCE) புரட்சிக்கு எதிராக இரத்தக்களரியான போராட்டத்தை நடத்தியது.

ஸ்பெயினின் குடியரசை ஆயுதபாணியாக்கும்போது, தாராளவாத முதலாளித்துவ, சமூக-ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் அராஜகவாத சக்திகளின் ஆளும் மக்கள் முன்னணி கூட்டணியை தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கிரெம்ளின் கோரியது. தொழிற்சாலை மற்றும் விநியோக குழுக்கள் போன்ற தொழிலாளர் அமைப்புகளை கலைக்கவும், பாசிச எதிர்ப்பு போராளிகளை முதலாளித்துவ அரசுக்கு அடிபணியவும் இது செயல்பட்டது. ஆகஸ்ட் 20, 1940 அன்று மெக்ஸிகோவின் கொயோகானிற்கு நாடுகடத்தப்பட்ட ட்ரொட்ஸ்கியை ரமோன் மெர்காடர் படுகொலை செய்ததில் உச்சக்கட்டத்தை அடைந்த, அக்டோபர் புரட்சியின் எஞ்சிய தலைவர்களை ஸ்ராலினின் இரகசிய பொலிஸ் கொலை செய்தபோது, இது ஸ்பெயினில் புரட்சியாளர்களை திட்டமிட்டு சித்திரவதை செய்து கொலை செய்தது.

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கை எதிர்மறையாக உறுதிப்படுத்துவதோடு, புரட்சிகர தலைமையின் முக்கிய பங்கையும் உறுதிப்படுத்துகிறது. உள்நாட்டுப் போரின் படிப்பினைகள் சமகாலத்திற்கு மிகவும் பொருத்தத்தை கொண்டது. மீண்டும், ஆளும் வர்க்கம் வெளிப்படையாக பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி திரும்புகிறது. ஸ்பெயினில் நவ-பிராங்கோவாத அதிகாரிகளின் சதி அச்சுறுத்தல்கள் முதல், ஐரோப்பா முழுவதும் நவ-பாசிச இயக்கங்களின் எழுச்சி, ட்ரம்ப்பின் கீழ் குடியரசுக் கட்சியின் முன்னொருபோதுமில்லாத வெளிப்படையான பாசிச அமைப்பாக மாற்றமடைவதை காண்கின்றோம்.

பிராங்கோவின் சதியும் தொழிலாளர்களின் கிளர்ச்சியும்

பிராங்கோவின் ஆட்சி கவிழ்ப்பு என்பது தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் புரட்சிகர இயக்கம் மீதான ஒரு முன்கூட்டியே தாக்குதலாகும். 1930களின் பெரும் மந்தநிலை மற்றும் ஒரு இராணுவ கிளர்ச்சியால் ஏற்பட்ட சமூக நெருக்கடி 1931 இல் முடியாட்சியை வீழ்த்தி, ஸ்பெயினின் இரண்டாவது குடியரசை நிறுவியது. இது வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை தீவிரப்படுத்தி, 1934 இல் அஸ்டூரியாவில் சுரங்கத் தொழிலாளர்கள் கிளர்ச்சி வேலைநிறுத்தத்தை வெடிக்க செய்தது. வேலைநிறுத்தத்தை இரத்தத்தில் மூழ்கடிப்பதில் பிராங்கோ இராணுவத்தை இறக்கியதில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டு, மேலும் 30,000 கைது செய்யப்பட்டு மற்றும் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சமூக சீர்திருத்தத்திற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில், ஸ்பானிய மக்கள் முன்னணி பெப்ரவரி 1936 தேர்தலில் வெற்றி பெற்றது. மக்கள் முன்னணியானது முதலாளித்துவ குடியரசுக் கட்சியினர், சமூக-ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (PSOE), ஸ்பெயினின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCE) மற்றும் இடது-மத்தியவாத மார்க்சிச ஒருங்கிணைப்பு தொழிலாளர் கட்சி (POUM) ஆகியவற்றின் கூட்டணியாக இருந்தது. இது, வெளியிலிருந்து அராஜகவாத-சிண்டிக்கலிச தேசிய தொழிலாளர் கூட்டமைப்பால் (anarcho-syndicalist - CNT) ஆதரிக்கப்பட்டது. மக்கள் முன்னணி வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது, மக்கள் முன்னேறி தொழிற்சாலைகளையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து, அரசியல் கைதிகளை விடுவித்து, வறுமை ஊதியங்களுக்கு எதிராக வேலைநிறுத்த அலைகளைத் தொடங்கினர்.

அதன் சலுகைகள் மற்றும் இலாபங்களை இழந்துவிடவேண்டியிருக்கும் என்ற பயம் ஆளும் வர்க்கத்தை பற்றிக்கொண்ட நிலையில், வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தை இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க படைகளின் அதிகாரிகளின் பிரிவுகள் ஒரு சதித்திட்டத்தை தொடங்கின. ஜூலை 17, 1936 காலை, ஆபிரிக்காவில் 30,000 பேர் கொண்ட ஸ்பானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டை எடுக்க ஃபிராங்கோ மொராக்கோவுக்கு பறந்தார். பின்னர் அவர் ஸ்பெயினின் பிரதான நிலப்பகுதியில் உள்ள படையினருக்கு ஒரு அறிக்கையை வானொலியில் அனுப்பி, நகரங்களை கைப்பற்றுமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

மக்கள் முன்னணி அரசாங்கம் ஆட்சி சதி பற்றி முன்னரே அறிந்திருந்தது. அது மொராக்கோ மற்றும் வடக்கு ஸ்பெயினில் சில வாரங்களுக்கு முன்னரான அசாதாரண இராணுவ பயிற்சிகள் குறித்து எச்சரிக்கையடைந்திருந்தது. எவ்வாறாயினும், அது வெகுஜனங்களின் புரட்சிகர இயக்கத்தை தூண்டிவிடும் என்ற கவலையில் தொழிலாளர்களிடமிருந்து இந்த தகவலை மறைத்து வைத்திருந்தது. ஆட்சி சதிக்குப் பின்னர், பாசிச கிளர்ச்சியை எதிர்கொள்ள ஆயுதங்களைக் கோரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது.

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் வேட்டைத் துப்பாக்கிகள் அல்லது கத்திகளை மட்டுமே கொண்டிருந்த தொழிலாளர்கள், சதித்திட்டத்தை எதிர்த்து அணிதிரண்டனர். ஸ்பெயினின் மிகவும் தொழில்மயமான நகரங்களில் ஒன்றான பார்சிலோனாவில், தொழிலாள வர்க்கம் ஆயுதமேந்திய பாதுகாப்புக் குழுக்களாக தன்னை ஒழுங்கமைத்து, ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுடன் இராணுவத்தை எதிர்கொண்டது. தங்கள் அதிகாரிகளின் உத்தரவுகளை மறுக்குமாறு படையினருக்கும் தொழிலாளர்கள் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்தில், பார்சிலோனா தொழிலாளர்கள் கட்டலோனியாவில் பிராங்கோ சார்பு படைகளைத் தடுத்து நிராயுதபாணியாக்கினர்.

மாட்ரிட், வலென்சியா, பில்பாவ் மற்றும் கிஜான் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தொழிலாளர்கள் பார்சிலோனா தொழிலாளர்களின் தலைமையை பின்பற்றினர். அஸ்டூரியன் சுரங்கத் தொழிலாளர்கள் 5,000 டைனமைட் நிபுணர்களை மாட்ரிட்டுக்கு உதவிக்காக அனுப்பினர். மலகாவில், ஆரம்பத்தில் ஆயுதங்களைக் கொண்டிருக்காத தொழிலாளர்கள் இராணுவ முகாம்களைச் சுற்றியுள்ள தடுப்புகளுக்கு தீ வைக்க பெட்ரோலைப் பயன்படுத்தினர். ஸ்பானிய மாலுமிகள் தங்கள் பல மேலதிகாரிகளை சுட்டுக் கொன்று, மாலுமிகளின் குழுக்கள் ஸ்பானிய குடியரசுக் கடற்படையின் போர்க்கப்பல்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் மீது விரைவான இராணுவ வெற்றியை எதிர்பார்க்கும் பாசிஸ்டுகள், உண்மையில் ஒரு புரட்சிகர பதிலைத் தூண்டினர். தொழிலாளர் குழுக்கள் மற்றும் போராளிகள் நகரங்களிலும், முன் வரிசையிலும் செயல்பட்டு வருவதால், ஒருபுறம் இந்த அமைப்புகளுக்கும் மறுபுறம் மக்கள் முன்னணி அரசாங்கத்தின் தலைமையிலான முதலாளித்துவ அரசிற்கும் இடையே இரட்டை அதிகாரத்தின் நிலைமை தோன்றியது.

குடியிருப்பு குழுக்கள், பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர் கட்டுப்பாட்டுக் குழுக்கள் பார்சிலோனாவையும், கட்டலோனியாவின் பெரும்பகுதியையும் உண்மையில் ஆட்சி செய்தன. இந்த தொழிலாளர்களின் அமைப்புகள் தொழிற்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் நிலங்களை கையகப்படுத்தின. ஒழுங்கமைக்கப்பட்டு, ஆயுதமேந்தப்பட்டும் போராளிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பாசிச ஆத்திரமூட்டல்காரர்களுக்கு எதிராக ரோந்து அமைத்தது; மேலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் தொடங்கியது மற்றும் கோரப்பட்ட கார்கள், லாரிகள் மற்றும் உணவுகளை கையகப்பட்டுத்தினர். ஜோர்ஜ் ஓர்வெல் தனது புகழ்பெற்ற Homage to Catalonia இல் புரட்சிகர சூழ்நிலை பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:

தொழிலாள வர்க்கம் தலைமையில் இருந்த ஒரு ஊரில் நான் இருப்பது இதுவே முதல் முறை. நடைமுறையில் எந்தவொரு அளவிலும் உள்ள ஒவ்வொரு கட்டிடமும் தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்டு, சிவப்புக் கொடிகளால் அல்லது அராஜகவாதிகளின் சிவப்பு மற்றும் கறுப்பு கொடியால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுவரும் சுத்தி மற்றும் அரிவாள் மற்றும் புரட்சிகர கட்சிகளின் முதலெழுத்துகளால் வரையப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட எல்லா தேவாலயங்களிலும் சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன, புனித உருவங்கள் எரிக்கப்பட்டன. தொழிலாளர்கள் குழுக்கள் தேவாலயங்களை முறையாக இடிப்பதை இங்கேயும் அங்கேயும் பார்த்தோம். ஒவ்வொரு கடையும், உணவகங்களும் கூட்டுறவுமயப்படுத்தப்பட்டதாக ஒரு கல்வெட்டு இருந்தது; காலணி மெருகூட்டுபவர்கள் கூட கூட்டுறவுமயமாக்கப்பட்டு அவர்களின் பெட்டிகள் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டன.

பாசிச ஆட்சி கவிழ்ப்பு அதன் அசல் நோக்கங்களில் தோல்வியுற்றது மற்றும் ஆரம்பத்தில் மேலாதிக்கத்தை கொண்டிருக்கவில்லை. இது பெரும்பாலும் பெரிய தொழிற்துறைகள் இல்லாத விவசாய பகுதிகளான வடக்கில் பழைய காஸ்டில் மற்றும் கலீசியா, தெற்கின் சில பகுதிகள் செவில், ஸ்பானிஷ் மொராக்கோ மற்றும் பலேரிக் தீவுகள் ஆகியவற்றை கொண்ட ஸ்பெயினில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. அதன் இராணுவம் பலாத்காரமாக அணிதிரட்டப்பட்ட விவசாயிகளையும் மற்றும் ஸ்பானிய ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்பட்ட மொராக்கோ குடிமக்களையும் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், பிராங்கோ உள்நாட்டு யுத்தம் “மிகவும் கடினமானதாகவும், இரத்தக்களரியாகவும் இருக்கும்” என்று அவநம்பிக்கையுடன் குறிப்பிட்டார். “எங்களிடம் ஒரு பெரிய இராணுவம் இல்லை, சிவில் காவலரின் (Civil Guard) தலையீடு கேள்விக்குரியதாகத் தெரிகிறது, மேலும் பல அதிகாரிகள் நிறுவப்பட்ட அதிகாரத்துடன் இருப்பார்கள்.” என்றார்.

'சுரண்டல்காரர்களின் இராணுத்திற்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெகுஜனங்களின் வெற்றிக்கான நிலைமைகள் சாராம்சத்தில் மிகவும் எளிமையானது' என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். பாசிசம், 'முதலாளித்துவ எதிர்வினையின் ஒரு வடிவம்' என்று அவர் குறிப்பிட்டார். முதலாளித்துவ பிரதிபலிப்பிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்தை பாட்டாளி வர்க்க புரட்சியின் சக்திகள் மற்றும் வழிமுறைகளால் மட்டுமே நடத்த முடியும். ”முந்தைய தசாப்தத்தில் முடிவடைந்த ரஷ்ய உள்நாட்டுப் போரின் படிப்பினைகளின் அடிப்படையில், ட்ரொட்ஸ்கி 'உள்நாட்டுப் போரின் மூலோபாயம், இராணுவக் கலையின் விதிகளை சமூகப் புரட்சியின் பணிகளுடன் இணைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். அவர் பின்வருமாறு விளக்கினார்:

புரட்சிகர இராணுவம் அவர்கள் வென்ற மாகாணங்களில் சமூகப் புரட்சியை பற்றி அறிவித்ததோடு மட்டுமல்லாமல், மிக முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கையிருப்பிலுள்ள உணவுப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் மற்றும் பிறவற்றை கையகப்படுத்துதல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மாற்றுவது; உழைப்பாளர்களின் மற்றும் குறிப்பாக போராளிகளின் குடும்பங்களின் நலன்களுக்காக தங்குமிடம் மற்றும் வீட்டுவசதி மறுவடிவமைப்பு; விவசாயிகளின் நலன்களுக்காக நிலம் மற்றும் விவசாய சரக்குகளை பறிமுதல் செய்தல்; முன்னர் அதிகாரத்துவம் இருந்த இடத்தில் உற்பத்தி மீது தொழிலாளர் கட்டுப்பாட்டையும் சோவியத் அதிகாரத்தையும் ஸ்தாபிக்கவேண்டும்.

பிராங்கோவின் இராணுவத்தின் விசுவாசத்தை எளிதில் அசைக்க முடியும். ஆபிரிக்க இராணுவத்தில் உள்ள 30,000 மொராக்கியர்கள் ஸ்பெயினின் ஏகாதிபத்தியத்திற்காக போராடுவதில் எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை. ஸ்பெயினின் விவசாயிகளைப் பொறுத்தவரை, ஏப்ரல் 1931 இல் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்தே அது நிலத்திற்காக போராடி வருகின்றது. 2.5 ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்திருக்கும் சுமார் 1.5 மில்லியன் சிறு கிராமப்புற உரிமையாளர்கள் இதனால் பெரிய தோட்டங்களில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதற்கு நேர்மாறாக, ஸ்பெயினின் மொத்த பிராந்தியத்தில் பாதிக்கும் மேற்பட்ட விளைநிலங்களை 500 நிலப்பிரபுத்துவத்தின் உறுப்பினர்கள் வைத்திருப்பதுடன், 10,000 நில உரிமையாளர்கள் 250 அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர்களை வைத்திருக்கின்றனர். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் நிலமற்றவர்களாக இருப்பதுடன் மற்றும் பெரிய தோட்டங்களில் வேலை செய்தனர்.

எவ்வாறாயினும், மக்கள் முன்னணி அரசாங்கம் விவசாயிகளுக்கு நிலத்தை வழங்க மறுத்துவிட்டதுடன், மொராக்கோவில் உள்ள ஸ்பெயினின் காலனிக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்கவும் மறுத்துவிட்டது.

போல்ஷிவிசம் எதிர் மக்கள் முன்னணி

மக்கள் முன்னணி கட்சிகள் சோவியத் அதிகாரத்துவத்துடனான தங்கள் உறவுகளை அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியம் மற்றும் தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்ட முன்வந்தன. ஆனால் அவர்கள் உண்மையில் ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு சமரசமற்ற முறையில் விரோதப் போக்கைக் கொண்டிருந்தனர். 1931 க்குப் பின்னர் ஸ்பெயினில் வெடித்த வர்க்கப் போராட்டங்களின் புரட்சிகர தீர்வைத் தடுத்த அவர்கள், பிராங்கோவுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் நடத்திய புரட்சிகர போராட்டத்திற்கு எதிராக வன்முறையில் திரும்பினர்.

பெப்ரவரி 1917 இல் ஜார் தூக்கியெறியப்பட்ட பின்னர் ரஷ்யாவில் தோன்றிய முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கும் ஸ்பெயினின் மக்கள் முன்னணிக்கும் இடையில் ட்ரொட்ஸ்கி ஒரு சமாந்திரத்தை வரைந்தார். இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்த மற்றும் அதிகாரத்தை மாற்றுவதை எதிர்த்த மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களை எதிர்ப்பதில் லெனினும் ட்ரொட்ஸ்கியும் போல்ஷிவிக்குகளை வழிநடத்தினர். தொழிலாளர்கள் மற்றும் படையினரின் சபைகளுக்கு (சோவியத்துகள்) ஆகஸ்ட் 1917 இல் ஜெனரல் லாவர் கோர்னிலோவின் தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு இடைக்கால அரசாங்கம் உடந்தையாக இருந்தபின், போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தை அக்டோபரில் தூக்கியெறிய தலைமை தாங்கினர்.

பிராங்கோ தனது சதித்திட்டத்தைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, ட்ரொட்ஸ்கி ஸ்பானிய மக்கள் முன்னணி மற்றும் POUM பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டார், 1917 ரஷ்ய புரட்சியின் அனுபவத்தை நோக்கி திரும்பிய அவர் பின்வருமாறு எழுதினார்:

உண்மையில், இந்த சகாப்தத்திற்கான பாட்டாளி வர்க்க வர்க்க மூலோபாயத்தின் முக்கிய பிரச்சினை மக்கள் முன்னணியாகும். போல்ஷிவிசத்திற்கும் மென்ஷிவிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டிற்கான சிறந்த அளவுகோலையும் இது வழங்குகிறது. மக்கள் முன்னணியின் மிகப் பெரிய வரலாற்று உதாரணம், பிப்ரவரி 1917 புரட்சி என்பது பெரும்பாலும் அடிக்கடி மறக்கப்பட்டுவிடுகின்றது. பிப்ரவரி முதல் அக்டோபர் வரை “கம்யூனிஸ்டுகள்” [அதாவது ஸ்ராலினிஸ்டுகள்] மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோருக்கு இணையான ஒரு நல்ல இணையை பிரதிநிதித்துவப்படுத்தும் மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்கள் மிக நெருக்கமான கூட்டணியில் இருந்தனர். மற்றும் அவர்களுடன் பல தடவை தொடர்ச்சியான கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கிய கடேடட்டுகளின் முதலாளித்துவ கட்சியுடன் நிரந்தர கூட்டணியில் இருந்தனர். மக்கள் முன்னணி என்பதன் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படையினர் குழுக்கள் உள்ளடங்கலான பாரிய மக்கள் தொகை இருந்தது. இந்த குழுக்களில் போல்ஷிவிக்குகள் கலந்துகொண்டாலும் அவர்கள் மக்கள் முன்னணிக்கு எவ்விதமான விட்டுக்கொடுப்பையும் செய்யவில்லை. அவர்களின் கோரிக்கை இந்த மக்கள் முன்னணியை உடைக்க வேண்டும், கடேட்டுகளுடனான கூட்டணியை அழிக்க வேண்டும், உண்மையான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். [“டச்சு பிரிவும் அகிலமும்,” ஜூலை 15-16, 1936]

1933 ஆம் ஆண்டில் ஜேர்மன் முதலாளித்துவம் ஹிட்லரை ஆட்சியில் அமர்த்திய பின்னர் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் அகிலம் தீவிரமாக வலதுபுறம் திரும்பியது. இந்த பேரழிவு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) வகித்த பங்கினாலேயே சாத்தியமானது. இது குற்றவியல்தன்மையுடன் சமூக-ஜனநாயகத்தை இலகுவாக நிராகரித்து அதன் தொழிலாளர்களை 'சமூக பாசிஸ்டுகள்' என்று கூறி, நாஜி ஆட்சியின் ஆபத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அவர்கள் நிராகரித்தனர். ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபின் நாஜி ஜேர்மனியிலிருந்து பெருகிவரும் இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொண்டு இந்தக் கொள்கையை கைவிட்ட ஸ்ராலின் இப்போது முதலாளித்துவ எதிர்ப்புரட்சி தரப்பினரும் கூட அரசியல் உறவுகளை ஏற்படுத்த முயன்றார்.

பாசிச ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற “ஜனநாயக” ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த ஸ்ராலின், கம்யூனிஸ்ட் கட்சிகளை அதற்கு ஆதரவளிக்கும்படி கட்டளையிட்டு, முடிந்தவரை தாராளவாத முதலாளித்துவ தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கங்களில் இணையுமாறும் கூறினார். அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், 'பாசிச எதிர்ப்பு' என்று அடையாளம் காட்டப்பட்ட முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்குவதற்கான பணியை ஏற்றுக்கொண்டன.

ஆகஸ்ட் 1936 இல், ஸ்ராலினிச ஆட்சி முதல்கட்ட மாஸ்கோ வழக்குகளை ஆரம்பித்து, முன்னணி பழைய போல்ஷிவிக்குகளான கிரிகோரி சினோவியேவ் மற்றும் லெவ் காமெனேவ் ஆகியோரை நாடுகடத்தப்பட்ட ட்ரொட்ஸ்கியுடன் இணைந்து ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டியது. அனைத்து பிரதிவாதிகளும் பொய்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு மற்றும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சோவியத் ஒன்றியத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் பிரதிநிதிகளுக்கு எதிராக இயக்கப்பட்ட அரசியல் இனப்படுகொலையை உள்ளடக்கிய பெரும் களையெடுப்பின் ஆரம்பமாகும். இதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

ட்ரொட்ஸ்கி, மக்கள் முன்னணியை, இரத்தக்களரியான ஸ்ராலினிச இரகசிய பொலிஸான GPU உடன் முதலாளித்துவ தாராளவாதத்தின் கூட்டணி என்று சுருக்கமாகக் கூறினார். வளர்ந்து வரும் புரட்சியை கழுத்தை நெரிக்கவும், அதன் முன்னணி பிரதிநிதிகளை கொலை செய்யவும், தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கும், அதன் போராட்டங்களை ஒரு முழுமையான நனவான புரட்சிகர வடிவத்தை பெறுவதிலிருந்து தடுக்கவும் சோவியத் அதிகாரத்துவமும் மக்கள் முன்னணியும் ஸ்பெயினில் தலையிட்டன.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை மக்கள் முன்னணி நாசப்படுத்துகிறது

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் முழுவதும், ஏகாதிபத்திய ஜனநாயகங்கள் குடியரசை தனிமைப்படுத்தியதால், ஸ்பானிய குடியரசிற்கு சோவியத் ஒன்றியம் மட்டுமே ஆயுதங்களை வழங்கியது. கிரெம்ளின் தங்கம் அல்லது மூலப்பொருட்களில் வடிவத்தில் பணம் செலுத்தக் கோரி, தரமற்ற ஆயுதங்களை வழங்கியது. குடியரசுக் கட்சி அரசாங்கத்தின் மீதான அதன் செல்வாக்கின் மூலம், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் போன்ற சோவியத் பொருட்கள் ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு மையங்களுக்கு மட்டுமே அனுப்பப்படுவதை உறுதிசெய்தது. இது தொழிலாளர்கள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரகோன் போர் முன்னணி போன்ற பிற முக்கிய பகுதிகளின் இழப்பில் இடம்பெற்றது.

CNT மற்றும் POUM போராளிகளை நாசப்படுத்த ஸ்ராலினிஸ்டுகள் அரசாங்கத்தில் தங்கள் நிலையைப் பயன்படுத்தி, அவர்களை மிகவும் கடினமான முனைகளுக்கு மாற்றி, அதன் விளைவாக ஏற்பட்ட தோல்விகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் போராளிகளைக் கலைக்கவும், மக்கள் முன்னணி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரிவுகளாக அவற்றை மாற்றவும் அழைப்பு விடுத்தனர். ஸ்பெயினில் புரட்சியும் எதிர்-புரட்சியும் என்ற தனது நூலில், ட்ரொட்ஸ்கிச எழுத்தாளர் பீலிக்ஸ் மோரோ, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு கொடிய போராட்டத்தை நடத்தியபோது, மக்கள் முன்னணி எவ்வாறு போர் முயற்சியை நாசப்படுத்தியது என்பதை பின்வருமாறு விளக்கினார்:

ஜெனரல் போசாஸ் (Pozas) ஜூன் மாதத்தில் ஒரு பொதுவான பாரிய தாக்குதலைத் தொடங்கினார். பல நாட்கள் பீரங்கி மற்றும் வான்வழி மோதல்களுக்குப் பின்னர், 29 வது பிரிவு (முன்னர் POUM இன் லெனின் பிரிவு) மற்றும் பிற அமைப்புகளுக்கு முன்னேறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் முன்கூட்டியே அதைப் பாதுகாக்க பீரங்கிகளோ விமானப்படையோ வழங்கப்படவில்லை… போசாஸ் விமானப் படைகள் பில்பாவோவை காத்துக்கொண்டதால் தான் அவ்வாறு செய்யவில்லை என்று பின்னர் கூறினார். ஆனால் முன்னேற கூறிய நாள், பிராங்கோ பில்பாவோவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததற்கு மூன்று நாட்களுக்கு பின்னராகும். அவர்கள் வேண்டுமென்றே ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டதை POUM இன் போர்வீரர்கள் முழுமையாக உணர்ந்தனர்

தொழிலாளர் குழுக்களுக்கு எதிராக போராடுமாறு சோவியத் அதிகாரத்துவம் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தியது. 'முதலில் போரை வெல்லுங்கள், பின்னர் புரட்சியை உருவாக்குங்கள்' என்ற முழக்கத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் தடுக்கும் பொருட்டு, ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி சட்டம் மற்றும் ஒழுங்கின் மிகவும் ஆர்வமுள்ள பாதுகாவலர்களாக மாறியது.

ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாளர்களை மனச்சோர்வடைய செய்வதற்கும், புரட்சியாளர்களை கொலை செய்வதற்கும் அழைப்பு விடுத்து வதந்திகளை பரப்பினர். POUM மற்றும் CNT (தேசிய தொழிலாளர் கூட்டமைப்பு) ஆகியவற்றுள் பாசிச முகவர்கள் ஊடுருவியுள்ளதாக அவர்கள் கூறினர். இருதரப்பினரும் 'புறநிலை ரீதியாக பாசிஸ்டுகள்' என்று அறிவித்தனர். ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜோஸ் டயஸ் “எங்கள் பிரதான எதிரிகள் பாசிஸ்டுகள்” என்று எழுதினார்:

“எங்கள் முக்கிய எதிரிகள் பாசிஸ்டுகள். இருப்பினும், இது பாசிஸ்டுகளின் கேள்வி மட்டுமல்ல, அவர்களுக்காக வேலை செய்யும் முகவர்களும் அடங்குவர்… சிலர் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அழைக்கிறார்கள்… அனைவருக்கும் இது தெரிந்தால், அரசாங்கத்திற்கு தெரிந்தால், அது ஏன் அவர்களை பாசிஸ்டுகளைப் போல நடத்துவதில்லை, அவர்களை ஏன் இரக்கமின்றி அழிக்கவில்லை?” என்று எழுதினார்.

இந்த எதிர்ப்புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டில், சோசலிச புரட்சிக்கு தீவிரமாக அஞ்சிய பணக்கார சமூக அடுக்குகளிடையே ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சமூக தளத்தை உருவாக்கியது. 1991 ஆம் ஆண்டு எழுதிய ஸ்பானிய உள்நாட்டுப் போர்: புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற படைப்பில், வரலாற்றாசிரியர் பேர்னெட் பொல்லோட்டன் (Burnett Bolloten) பின்வருமாறு எழுதுகிறார்,

ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி நகர்ப்புற நடுத்தர மற்றும் விவசாய வர்க்கங்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் உயிர்ப்புச்சக்தியின் சக்திவாய்ந்த உட்செலுத்தலைக் கொடுத்தது… இந்த புதியவர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளால் அல்லாது மாறாக பழைய சமூக அமைப்பிலிருந்து எதையாவது காப்பாற்றும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டனர். […] ஆகவே, ஆரம்பத்தில் இருந்தே, கலக்கமடைந்த நடுத்தர வர்க்கங்களுக்கு முன்பாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பாதுகாவலராக மட்டுமல்லாமல், குடியரசிற்காக போராடுபவராகவும், அரசாங்கத்தின் ஒழுங்கான செயல்முறையாளனாகவும் தோன்றியது.

ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன், தொழிலாளர் போராளிகளை கலைக்கவும், குடியரசுக் கட்சியை பலப்படுத்தவும், பத்திரிகைத் தணிக்கையை மீண்டும் நிலைநாட்டவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் கைப்பற்றப்பட்ட பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளை முதலாளித்துவத்திற்கு ஒப்படைக்கவும் மக்கள் முன்னணியால் முடிந்தது.

ஸ்ராலினிசம் அதன் எதிர் புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கூடியதாக இருந்ததற்கு, பெரிய தொழிலாளர் அமைப்புகள் எதுவும் மக்கள் முன்னணியை எதிர்க்காததும், ஒரு புரட்சிகர கொள்கைக்காக போராடாததும் காரணமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்ட்ரேயோ நின் (Andreu Nin) தலைமையிலான மத்தியவாத POUM இற்கு இதற்கான பொறுப்பு உள்ளது.

மக்கள் முன்னணிக்கு எதிராக ஒரு திட்டமிட்ட போராட்டத்தை நடத்தவோ அல்லது மக்கள் முன்னணி அரசாங்கத்தின் போது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர முன்னோக்கை முன்னெடுக்கவோ POUM மறுத்துவிட்டது. நின் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கியை அறிந்திருந்ததுடன், மேலும் நான்காம் அகிலத்தின் முன்னோடியான இடது எதிர்ப்பாளர்களை சேர்ந்தவராவார். நான்காம் அகிலத்தை நிறுவுவதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்துடன் அவர் POUM ஐ இணைக்க முயன்றிருந்தால், அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளித்திருக்கும்.

அதற்கு பதிலாக, நின் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து POUM உறுப்பினர்களைத் துண்டித்து, தந்திரோபாய தேசிய நோக்கங்களின் அடிப்படையில் சந்தர்ப்பவாத கூட்டணிகளை உருவாக்கினார். இந்த நோக்குநிலை அவரை மக்கள் முன்னணி மற்றும் முதலாளித்துவ அரசு அமைப்பின் முகாமுக்கு இட்டுச் சென்றது.

ஜனவரி 1936 இல் POUM மக்கள் முன்னணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிராங்கோவின் ஆட்சி சதிக்கு எதிராக தொழிலாளர்கள் கட்டலோனியாவில் எழுச்சியுற்றபோது, நின் 1936 செப்டம்பரில் கட்டலான் பிராந்திய மக்கள் முன்னணி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக சேர்ந்து, மற்றும் தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்திற்கு அடிபணியச் செய்ய முயன்றார். POUM உறுப்பினர்கள் தலைமையிலான நகரத்தின் தொழிலாளர் குழுவைக் கலைக்க நின், லெய்டா நகரத்திற்கு கூட சென்றார்.

அந்த நேரத்தில் நின் எதிர்ப் புரட்சிக்கான தனது நோக்கத்தை நிறைவேற்றினார். ஆனால் ஒரு ஸ்ராலினிச பிரச்சாரம் POUM ஐ ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று கண்டித்த பின்னர், POUM அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. எவ்வாறாயினும், இதற்குப் பின்னரும், POUM, முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் தன்னை அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது.

கட்டலோனியாவில் 1937 மே நாட்கள்

1937 மே நாட்களில், ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவுடன், கட்டலான் பிராந்திய அரசும், மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகளும், 1936 ஜூலை முதல் தொழிலாளர்கள் ஆக்கிரமித்திருந்த பார்சிலோனா தொலைபேசி பரிமாற்ற நிலையத்தின் மீது இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், நின் இனது மக்கள் முன்னணி நோக்குநிலையின் திவால்நிலை மீண்டும் அம்பலமானது. வளர்ந்து வரும் பசி, வீட்டுவசதி இல்லாமை மற்றும் சந்தை சார்பு கொள்கைகள் ஆகியவற்றில் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தின் பின்னணியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஒரு புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் கிளர்ச்சியை தூண்டியது.

புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கம் தன்னிச்சையாக எழுந்து, ஸ்ராலினிச மற்றும் குடியரசுக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மையத்தில் ஒரு சிறிய பகுதியைத் தவிர நகரத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது. நான்கு நாட்கள், தொழிலாளர்கள் பார்சிலோனாவை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினர். தொழிலாள வர்க்கம் பார்சிலோனாவில் ஆட்சியைப் கைப்பற்றி ஸ்பெயின் முழுவதும் புரட்சிகர அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போராடியிருக்க முடியும்.

எவ்வாறாயினும், மீண்டும் இங்கு தோன்றிய முக்கியமான பிரச்சினை புரட்சிகர தலைமை பற்றியதாகும். நிகழ்வுகளால் ஆச்சரியப்பட்ட POUM மற்றும் தேசிய தொழிலாளர் கூட்டமைப்பு (CNT) தலைவர்கள், ஒரு வார தெரு சண்டைக்கு பின்னர் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, தடுப்புகளை அகற்றுமாறும் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். நான்காம் அகிலத்துடன் இணைந்த போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் சிறிய குழு மட்டுமே, POUM இன் சில சாமானிய உறுப்பினர்களும், அவர்களுடன் டுருட்டியின் (Durruti) அராஜகவாத நண்பர்களும் சேர்ந்து, தொழிலாளர்கள் அதிகாரத்தை கையிலெடுக்க அழைப்பு விடுத்துடன், ஒரு போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளையும் எதிர்த்தனர்.

தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மக்கள் முன்னணி ஆட்சியை அகற்றுவதற்கும் அழைப்பு விடுத்து, சமரசமற்ற புரட்சிகர கொள்கையை POUM ஏற்றுக்கொண்டிருந்தால், அதன் 40,000 உறுப்பினர்களும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை எடுத்திருப்பார்கள். மே தின எழுச்சியின் மூலம், சுயாதீனமான தொழிலாளர் அமைப்புகளின் புதிய உருவாக்கம் மற்றும் அதிகாரத்திற்கான போராட்டத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர கொள்கைக்கான அதன் தயார்நிலையை அடையாளம் காட்டியது. அதற்கு பதிலாக POUM, தன்னை மக்கள் முன்னணியின் இடது பிரிவாக மாற்றியது. பின்னர் அதனால் அவ்வாறு செய்ய முடியும் என்று கண்டவுடன் மக்கள் முன்னணி POUM உடன் கொடூரமாக கணக்குத்தீர்த்துக்கொண்டது.

மே நாட்களுக்குப் பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டவுடன், மக்கள் முன்னணி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புரட்சிகர வன்முறையை திருப்பியது. POUM சட்டவிரோதமாக்கப்பட்டதுடன், அதன் தலைமை கைது செய்யப்பட்டது. நின்னும் கடத்தப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு, உயிருடன் தோலை உரித்து சோவியத் GPU முகவர்களால் கொல்லப்பட்டார்.

ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியால் இயக்கப்படும் தற்காலிக இரகசிய சிறைகளில் ஆயிரக்கணக்கான போராளி தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் சுமார் 20,000 கைதிகள் கடூழிய முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். ட்ரொட்ஸ்கியின் செயலாளர் எர்வின் வொல்வ், ட்ரொட்ஸ்கிச ஹான்ஸ் டேவிட் பிராயண்ட் (Hans David Freund), POUM உறுப்பினர் குர்ட் லாண்டவு (Kurt Landau) மற்றும் தேசிய தொழிலாளர் கூட்டமைப்பு (CNT) ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதை விமர்சித்த தேசிய தொழிலாளர் கூட்டமைப்பு அராஜகவாதிகளும் கொல்லப்பட்டனர். வரலாற்றாசிரியர் அகுஸ்டின் கில்லாமோன் கிளர்ச்சி: பார்சிலோனாவில் மே 1937 இன் இரத்தக்களரி நிகழ்வுகள் (2020) என்பதில் பின்வருமாறு எழுதுகிறார்:

1938 அளவில், புரட்சியாளர்கள் மண்ணின் கீழ், சிறையில், அல்லது தலைமறைவாக இருந்தனர். சிறையில் பாசிச எதிர்ப்பாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். பசி, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஸ்ராலினிச அடக்குமுறை ஆகியவை பார்சிலோனாவில் முக்கியமானதாகவும் மற்றும் எஜமானர்களாகவும் இருந்தது. போராளிக் குழுக்களும் பணிகளும் இராணுவமயமாக்கப்பட்டன. ஸ்பெயின் முழுவதிலும், பிராங்கோவாத முகாமிலும், குடியரசுக் கட்சியிலும் முதலாளித்துவ ஒழுங்கு நிலவியது. புரட்சி ஜனவரி 1939 இல் பிராங்கோவால் நசுக்கப்படவில்லை. நெக்ரீனின் குடியரசு அதற்கு பல மாதங்களுக்கு முன்பே அதைச் செய்திருந்தது.

போர் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தது. ஆனால் மக்கள் முன்னணி அரசாங்கம் பிராங்கோவிடம் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கையில், பிராங்கோவின் படைகளின் தடையற்ற முன்னேற்றத்தை கொண்டிருந்தன. எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாமல் பார்சிலோனா வீழ்ந்தது. மார்ச் 1939 இல், தளபதி செகிஸ்முண்டோ காசாடோ குடியரசுக் கட்சி பிராந்தியத்திற்குள்ளேயே ஒரு சதித்திட்டத்தை தொடங்கி பாசிஸ்டுகளுடன் சமாதான உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். எவ்வாறாயினும், பிராங்கோ நிபந்தனையற்ற சரணடைதலை மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தார். அடுத்த மாதம் பிராங்கோவின் துருப்புக்கள் மாட்ரிட்டிற்குள் அணிவகுத்துச் சென்று உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டுவந்தன.

தொழிலாள வர்க்கம் ஒரு வீரமிக்க போராட்டத்தை நடத்தியது. ஆனால் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியும் மத்தியவாதமும் ஒரு பாசிசத்தின் வெற்றிக்கு வழியைத் திறந்தது. இந்த தோல்விக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது குற்றம் சாட்டியவர்களை ட்ரொட்ஸ்கி மறுத்தார். ஆகஸ்ட் 1940 இல் மெர்காடரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கொயோகானில் உள்ள அவரது மேசையில், “வர்க்கம், கட்சி மற்றும் தலைமை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காணப்பட்டது. ஒரு பிரெஞ்சு ஸ்ராலினிச பத்திரிகையான Que faire இல்தொழிலாள வர்க்கத்தின் முதிர்ச்சியற்ற தன்மை, விவசாயிகளிடமிருந்து சுயாதீனமாக இல்லாமை' ஆகியவற்றை தோல்விக்கான காரணமாக குற்றம்சாட்டியதற்கு அக்கட்டுரையில் பதிலளித்த ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதியிருந்தார்:

ஸ்பெயினின் தோல்விக்கான பொறுப்பு உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது மற்றும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை முடக்கிய அல்லது வெறுமனே நசுக்கிய கட்சிகள் அல்ல என்பதில் வரலாற்று பொய்மைப்படுத்தல் அடங்குகின்றது. POUM இன் ஆதரவாளர்கள் தலைவர்களின் பொறுப்பை வெறுமனே மறுக்கிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பிலிருந்தும் தப்பிக்கிறார்கள். பிரபஞ்ச நிகழ்வுகளின் சங்கிலியில் தோல்விகளை ஒரு அவசியமான இணைப்பாக காட்ட முற்படும் இந்த பலவீனமான தத்துவம், தோல்வியின் அமைப்பாளர்களாக இருந்த வேலைத்திட்டங்கள், கட்சிகள், ஆளுமைகள் போன்ற உறுதியான காரணிகள் பற்றிய கேள்வியை முன்வைப்பதற்கு முற்றிலும் இயலாமல் இருப்பதுடன், மறுக்கிறது. தலைவிதிவாதம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் இந்த தத்துவம் புரட்சிகர நடவடிக்கைக்கான கோட்பாடான மார்க்சிசத்திற்கு முற்றிலும் நேர்எதிரானது.

ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் படிப்பினைகள்

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் தொடங்கி எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அக்டோபர் புரட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும், இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் சமகால அரசியலுடன் நேரடியாகப் பொருந்துகின்றன. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், 20 ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் எழுச்சிக்கு காரணமாக இருந்த முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. தொழிலாள வர்க்கம் இன்னும் பொருளாதார நெருக்கடிகள், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அதிகரிக்கும் பொலிஸ் ஆட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை எதிர்கொள்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பெரிதும் துரிதப்படுத்தப்பட்ட இந்த பிரச்சினைகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பதில், 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிசத்தின் அரசியல் பாரம்பரியத்தை நோக்கி திரும்புவதாகும்.

இது, பல அமெரிக்க வலதுசாரி தீவிரவாதிகள், அமெரிக்க அரசு மற்றும் குடியரசு கட்சியினரின் ஒரு பிரிவினரது ஆதரவுடன் வாஷிங்டன் டி.சி. காங்கிரஸினுள் ஊடுருவியபோது, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் ஜனவரி 6 ஆம் திகதி நடாத்தப்பட்ட சதியில் அதன் தெளிவான வெளிப்பாட்டை கண்டது. கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் மார்க் மில்லி சமீபத்தில் இது 'ஒரு ரைஸ்டாக் தருணம்' என்று விவரித்தார். அவர் அவ்வாறு குறிப்பிட்டது, 1933ல் ஜேர்மனியின் ரைஸ்டாக் தீவைக்கப்பட்டதை குறிக்கிறது. இது ஹிட்லர் சர்வாதிகார அதிகாரங்களை ஏற்றுக்கொள்வதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாரிய பயங்கரவாதத்தை சுமத்துவதற்கும் ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த சதி வெறுமனே ட்ரம்பின் மோசமான குணநலன்களின் விளைவு அல்ல. ஆனால் இது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியில் வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு ஏகாதிபத்திய ஆளும் வர்க்கமும் தீவிர வலது பக்கம் திரும்புகின்றன. ஜேர்மனிய அரசியல் ஸ்தாபகம் தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AFD) கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக உயர்த்தியுள்ளது. நாஜிசத்தின் குற்றங்களை குறைத்து மதிப்பிடும் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்களுக்கு நிதியுதவியை பொழிகிறது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இரண்டிலும், தீவிர வலதுசாரி அதிகாரிகளின் குழுக்கள் இராணுவ சதித்திட்டத்திற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதுடன், வெகுஜன படுகொலைகளுக்கு அழைப்பும் விடுக்கின்றன.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போருக்கு எதிரான போராட்டத்திற்கும் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் இரத்தக்களரி தோல்வியின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. இவைதான் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கான ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலாகும். அதாவது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் அனைத்து வகையான முதலாளித்துவ தேசியவாதம், ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு சமரசமற்ற எதிர்ப்பாகும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாக மட்டுமே முன்னேற முடியும். இதற்கு மக்கள் முன்னணியின் அரசியல் சந்ததியினருடன் சமரசமற்ற விரோதத்துடன் ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் முன்னணியை ஆளும் வர்க்கம் பல தசாப்தங்களாக 'இடது' என்று பொய்யாக ஊக்குவிக்கின்றது. அவர்களின் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அரசியல் மூதாதையர்கள் தொழிலாள வர்க்கத்தில் கொண்டிருந்த சமூக அடித்தளத்தை முற்றிலுமாக இழந்துவிட்டாலும், தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச புரட்சிக்கு அவர்களின் வன்முறை விரோதம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது.

ஸ்பெயினில், 1978 ஆம் ஆண்டில் பிராங்கோவாத ஆட்சி மற்றும் சான்டியாகோ கரிய்யோவின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCE) ஆகியோரால் முடிச்சுப்போடப்பட்ட பாராளுமன்ற-ஜனநாயக ஆட்சியின் விரைவான சரிவு, போலி-இடது பொடேமோஸ் கட்சியை அம்பலப்படுத்தியுள்ளது. இது இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளதுடன், வங்கி பிணையெடுப்பு, ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் அகதிகளுக்கான வதை முகாம்களை உருவாக்குதல் போன்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை செயல்படுத்த உதவி, உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஸ்பெயினில் 100,000 இறப்புகளுக்கும் ஐரோப்பா முழுவதும் 1.1 மில்லியனுக்கும் வழிவகுத்தது.

இந்த இழிந்த வரலாறு, மக்கள் முன்னணிவாதத்தின் (Popular Frontism) பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில், முன்னாள் பொடேமோஸ் தலைவர் பப்லோ இக்லெசியாஸ் 2012 இல் கரிய்யோவின் மரணத்திற்கு சற்று முன்புவரை அவருடன் மிக பரிச்சயமானவராக இருந்தார். உள்நாட்டுப் போரின்போது ஒரு ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் தலைவரான கரிய்யோ, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான எதிர் புரட்சிகர வன்முறையில் முக்கிய பங்கு வகித்தார். '1930 களில், ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்ய எந்த கம்யூனிச போராளியிடமும் கேட்டாலும் அவ்வாறு செய்ய மறுத்திருக்க மாட்டார்கள்' என்று இறப்பதற்கு முன்னர் பெருமை பேசிக்கொண்டார். Público இதழில் கரிய்யோவின் அனுதாப இரங்கலுரையில் இக்லெசியாஸ் பின்வருமாறு எழுதினார்: 'எல்லாவற்றையும் மீறி, இப்பொழுதும் எப்பொழுதுமே சான்டியாகோ எங்களுள் ஒருவராவர்'.

ஆச்சரியப்படத்தக்க வகையில், பொடேமோஸ் ஸ்பானிய உள்நாட்டுப் போரை குறைத்து மதிப்பிடுகின்றது. “ஸ்பெயினின் உள்நாட்டுப் போரினை நினைவுக்குத் திரும்பக் கொண்டுவருவது” பற்றிய பொது விவாதத்தை தான் எதிர்ப்பதாக அதன் இணை நிறுவனரான இனிகோ எர்ரேகோன் (Iñigo Errejón) கூறினார்… “இது வயதானவர்களைப் பயமுறுத்தும் மற்றும் இளைஞர்களுக்கு அவ்வளவு அர்த்தமற்ற ஒரு நிகழ்வாகும். அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒன்று. அத்தகைய விவாதத்தில் நாம் எந்தப் பக்கத்தை எடுப்போம் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தாலும், கடந்த காலத்தின் உணர்ச்சிபூர்வமான நினைவு போர்களை வெல்லாது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் தோல்விகள் துரதிர்ஷ்டவசமாக எப்போதும் தோல்விகளே”. உண்மையில், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அது ஸ்ராலினிச எதிர்புரட்சியின் பக்கத்தை எடுக்கும் என்பதில் பொடேமோஸ் தெளிவாக உள்ளது.

1930 களின் பாடங்கள் கற்கப்பட வேண்டும். பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் இன்றைய முக்கியமான பணி, தீவிர வலது மற்றும் போலி-இடது ஆகிய இரண்டிற்கும் எதிராக சோசலிசப் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தைத் தொடர ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவதாகும். இதன் பொருள் சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) பிரிவுகளை கட்டியெழுப்புவதாகும்.

Loading