ஐரோப்பாவில் வெள்ள பேரழிவும் முதலாளித்துவத்தின் திவால்நிலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இறப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தற்போதைய வெள்ளம் 1962 ஆம் ஆண்டில் வட கடல் கடற்கரையில் புயல் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து ஜேர்மனியில் மிக மோசமான வெள்ள பேரழிவாகும். உத்தியோகபூர்வமாக, இதுவரை 180 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களில் குறைந்தது 159 பேர் ஜேர்மனியிலும் பெல்ஜியத்தில் 31 பேரும் அடங்குவர், ஆயிரக்கணக்கான மக்களை இன்னுமும் காணவில்லை.

ஆஹ்ரில் உள்ள நகரங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின

உலகெங்கிலும் உள்ள மக்கள், வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் திகிலடைந்துள்ளனர். ட்ரோன் வீடியோ மற்றும் அதற்கு முன்னும் பின்னும் படங்கள், அழிவின் அளவை வெளிப்படுத்துகின்றன. அதிக நீர் ஐபிள் பிராந்தியத்தில் குறிப்பாக பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆஹ்ர், எர்ஃப்ட் மற்றும் ரூஹர் போன்ற சிறிய நதிகளிலும் அவற்றின் துணை நதிகளிலும் உள்ள கிராமங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டன.

முழு வீதிகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன; பாதைகள், இரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், மேலும் சில இடங்களில் முற்றாக அழிக்கப்பட்டன. பல துணை மின்நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிகமாக மின்சார விநியோகத்தை இழந்தனர். சில பிராந்தியங்களில், கைதொலைபேசி தொடர்புகள் மற்றும் குடிநீர் வசதிகள் துண்டிக்கப்பட்டன.

ஜூலை 17, 2021 சனிக்கிழமையன்று ஜேர்மனியின் பாட் நொயூனாஹர்-ஆஹ்ர்வைலரில் ஆஹ்ர் ஆற்றின் மீது ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. (AP Photo/Michael Probst)

எவ்வாறாயினும், வெள்ளத்தின் மிக மோசமான விளைவு என்னவென்றால், இறப்புகளின் எண்ணிக்கை, இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆஹ்ர்வைலர் மாவட்டத்தில் மட்டும், ஷூல்ட் (660 குடியிருப்பாளர்கள்) மற்றும் சிறிய நகரமான சின்சிக் (17,642 குடியிருப்பாளர்கள்) சமூகத்தில் குறைந்தது 28 பேர் உட்பட 110 பேர் உயிரிழந்துள்ளனர். தனிநபர்களின் தலைவிதியை விவரிக்க வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது கடினம். மக்கள் பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குழந்தைகளை இழந்தனர். சின்சிக் இறப்புகளில் ஊனமுற்றோருக்கான ஒரு காப்பகத்தில் வசிப்பவர்கள் 12 பேர் இருந்தனர், அது சரியான நேரத்தில் வெளியேற்றப்படவில்லை.

இதேபோன்ற துன்பியலான நிலைமைகளால் பவேரியா, சாக்சோனி மற்றும் ஆஸ்திரியாவின் சில பகுதிகள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுகின்றன. சனிக்கிழமை இரவு முதல், கனமழை தென்கிழக்கு நோக்கி நகர்ந்து, டானூப், இசார், எல்பேவின் துணை நதிகளிலும் நீர் நிலைகளை உயர்த்தியுள்ளது. பவேரியாவில், பாஸாவ் மற்றும் பீர்ச்டெஸ்கடென் நகரங்கள் மற்றும் சாக்சோனியில், பாட் ஷாண்டாவ் மற்றும் கிரிப்பன் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ள பேரழிவு முதலாளித்துவத்தின் திவால்நிலையையும் அதன் அரசியல் பிரதிநிதிகளையும் பல வழிகளில் அம்பலப்படுத்துகிறது.

முதலாவதாக, இது முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பினால் ஏற்படும் காலநிலை நெருக்கடியின் நேரடி விளைவாகும், இது இன்னும் தீவிரமான முறையில் கடுமையான வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. 'ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், காலநிலை மாதிரிகள் பலத்த மழைப்பொழிவு அடிக்கடி நிகழும் என்று கணித்துள்ளன, அதே சமயம் இலேசான மழை பெய்யும் நாட்கள் குறைவாகவே இருக்கும்' என்று Potsdam Institute for Research into the Consequences of Climate Change பேராசிரியர் ஸ்டெஃபான் ரான்ஸ்டோர்ஃப் கருத்து தெரிவித்தார். வெப்பமயமாதலின் ஒவ்வொரு அளவிற்கும், 'காற்று 7 சதவிகிதம் அதிகமான நீராவியை உறிஞ்சி பின்னர் மழையாக கொட்டும்.'

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நீண்ட காலமாக அறியப்படுகின்றன. புவி வெப்பமடைதல் வெள்ள பேரழிவுகளையும் வறட்சியையும் ஏற்படுத்துவதாகவும், இறுதியில் கிரகத்தின் உயிர்வாழ்வையும் மனிதகுலத்தையும் அச்சுறுத்துகிறது என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆளும் வர்க்கம் தீவிரமான காலநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இயலாதது மற்றும் விரும்பவில்லை, ஏனெனில் இது அவர்களின் இலாபம் ஈட்டுதல் மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். காலநிலை மாற்றம் குறித்த வழக்கமான ஒப்பந்தங்கள், அவை எழுதப்பட்ட காகிதத்திற்கு உரிய மதிப்பும் இல்லாதவை.

இரண்டாவதாக, காலநிலை மாற்றத்தின் அபாயகரமான விளைவுகள், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு உடைக்கப்பட்ட உள்கட்டமைப்பின் விளைவாகும். இதில் தேவையான வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், செயல்படும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு மற்றும் நன்கு பொருத்தப்பட்ட மற்றும் பயனுள்ள பேரழிவு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை அடங்கும். இந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக அதிக இறப்பு விகிதங்கள் நேரடியாக இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'2021 ஆம் ஆண்டில், வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த எண்ணிக்கையிலான இறப்புகளை நாம் அனுபவிக்கக்கூடாது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இங்கிலாந்தில் உள்ள University of Reading இன் நீர்வளவியல் பேராசிரியர் ஹன்னா க்ளோக் கூறினார்.

பேராசிரியர் எச்சரிக்கை அமைப்புகளில் உள்ள சிக்கல்கள் குறித்து ZDF க்கு சுட்டிக்காட்டினார். 'பல நாட்களுக்கு முன்பே என்ன வரப்போகிறது என்பதை காண முடிந்தது.' ஐரோப்பிய வெள்ள எச்சரிக்கை அமைப்பு EFAS ஐ அமைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட க்ளோக்கின் கூற்றுப்படி, வானிலை சேவைகளிலிருந்து தேவையான அனைத்து எச்சரிக்கை செய்திகளும் வெளியிடப்பட்டன. 'ஆனால் எங்கோ இந்த எச்சரிக்கை சங்கிலி உடைந்துவிட்டது, இதனால் செய்திகள் மக்களை அடையவில்லை.'

இது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து WSWS பெற்ற அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. கிராமத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆஹ்ர்வைலரில் இருந்து பாதிப்புக்குள்ளான ஒருவர் தெரிவித்தார். அவர்கள் பெற்ற மணல் மூட்டைகள் நிரப்பப்பட்டிருக்கவில்லை. நெருங்கி வரும் நீர் பாய்ச்ல் காரணமாக, குடும்பத்தினருக்கு மணலைக் கண்டுபிடிப்பது இனி சாத்தியமில்லை. ஒரு கண் இமைக்கும் நேரத்திற்குள் அடித்தளமும் வீட்டின் கீழ் பகுதியும் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கின.

இது 'நம்பமுடியாத வெறுப்பாக இருந்தது,' ஜேர்மனியில் ஒவ்வொரு மட்டத்திலும் தோல்விகள் இருந்தன, என்று க்ளோக் கூறினார். ஒருபுறம், 'பல்வேறு சூழ்நிலைகளுக்கு வெவ்வேறு வெள்ளத் திட்டங்கள்' தேவைப்பட்டாலும், 'வெள்ள அபாயங்களுக்கு ஒருங்கிணைந்த நாடு தழுவிய அணுகுமுறை இல்லை'. மறுபுறம், 'உள்ளூர் அதிகாரிகளுக்கு பெரும்பாலும் சரியான முறையில் தயாரிக்க தேவையான ஆதாரங்கள் இல்லை.'

உண்மையில், ஜேர்மனியின் அடிப்படை சட்டத்தில் தொகுக்கப்பட்ட கடன் முறிவு காரணமாக ஏராளமான நகராட்சிகள் திவாலாகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவு பாதுகாப்புக்கான வரவு-செலவுத் திட்டங்களில் ஆழமான வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. இது அவசரகால மருத்துவமனைகளை கட்டியெழுப்புதல், பல்லாயிரக்கணக்கான தன்னார்வ சிவில் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களின் தேசிய கடைகளை பராமரித்தல் ஆகியவற்றுக்கு பொருந்தும். எச்சரிக்கை ஒலியெழுப்பும் சைரன்களின் வலையமைப்பும் பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மக்கள்தொகை பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகம் 344 ஊழியர்களை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் பரிதாபகரமான ஆண்டு வரவு-செலவுத் திட்டம் 250 யூரோக்களுக்கும் மில்லியனுக்கும் குறைவானது.

வெள்ளப் பாதுகாப்பில் தேவையான செலவுகள் செய்யப்படவில்லை. 'வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்துவது' 'நிதி ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளால் பலவீனமடைகிறது' என்று ஐரோப்பிய வெள்ள உத்தரவு அமல்படுத்துவது குறித்து 2018 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஆடிட்டர் நீதிமன்றத்தின் சிறப்பு அறிக்கையின்படி. உறுப்பு நாடுகளும் 'வெள்ளத்தின் அளவு, அதிர்வெண் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கணக்கிட' ஒரு நிலையில் இல்லை.

இப்போது பேரழிவு மண்டலங்களில் முதலை கண்ணீரைப் பொழிந்து, 'விரைவான மற்றும் அதிகாரத்துவமற்ற அவசர உதவி' என்று இடைவிடாது உறுதியளிக்கும் அதே அரசியல்வாதிகள்தான இந்த நிலைமைக்கு காரணம். சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வீசி எறிந்தனர் மற்றும் மீண்டும் மீண்டும் இராணுவச் செலவுகளை அதிகரித்தனர். அதே நேரத்தில், அவர்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் தள்ளிய செலவுக் குறைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆளும் வர்க்கம் தொற்றுநோயை சுரண்டி, அதன் மறுபங்கீடு கொள்கையை கீழிருந்து மேல் நோக்கி தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அவசரகால பிணை எடுப்பு பொதிகள் என்று அழைக்கப்படும் கட்டமைப்பிற்குள், ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களை செலுத்துவதை ஆதரித்தன. அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நிதி தன்னலக்குழுவின் இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வைரஸை பரப்ப அனுமதிக்கின்றன, அதே நேரத்தில் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து விஞ்ஞான நடவடிக்கைகளையும் நிராகரிக்கின்றன. இதன் விளைவாக உலகெங்கிலும் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர், இதில் ஐரோப்பாவில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் மற்றும் ஜேர்மனியில் 91,000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.

தற்போதைய வெள்ள பேரழிவில் மனித வாழ்க்கையிலும் மக்களின் நல்வாழ்விலும் அதே மனிதாபிமானமற்ற அலட்சியம் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. வட-ரைன் வெஸ்ட்பாலியாவின் பிரதமரும், சான்சிலருக்கான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஆர்மின் லாஷெட் (Armin Laschet) பேரழிவு பகுதிகளில் ஒன்றில் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையும் சிரிப்பும் இதற்கு மிகவும் அருவருப்பான எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

ஆரம்ப அதிர்ச்சிக்குப் பின்னர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அனுபவங்களிலிருந்து நீண்டகால தாக்கங்களைக் கொண்ட முடிவுகளை எடுக்கத் தொடங்குவார்கள்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம், பாசிசம் மற்றும் போரின் ஆபத்து போன்றே காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டமும் ஒரு அரசியல் கேள்வியாகும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் பற்றிய கேள்வியாகும். உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் புவி வெப்பமடைதலின் விளைவுகளின் சுமையை சுமக்கின்றனர். அதே சமயம், அது போராட்டத்திற்குத் தள்ளப்பட்டு, ஒரு சர்வதேச வர்க்கமாக புறநிலையாக தன்னை வரையறுத்துக்கொண்டிருக்கிறது, அதன் அடிப்படை நலன்கள் முதலாளிகளின் உற்பத்தி வழிமுறைகளின் தனியார் உரிமையுடன் பொருந்த முடியாதவை.

'வங்கிகளையும் நிறுவனங்களையும் கையகப்படுத்தாமல் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் எந்தவொரு சமூகப் பிரச்சினையும் தீர்க்கப்பட முடியாது' என்று சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) தேர்தலுக்கான அறிக்கை கூறுகிறது. 'அவர்களின் இலாபங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், கடந்த ஆண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட டிரில்லியன்கள் மீட்கப்பட வேண்டும். உலக பொருளாதாரம் ஒரு விஞ்ஞான மற்றும் பகுத்தறிவார்ந்த திட்டத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.'

கடந்த சில நாட்களின் முக்கியமான பாடம் இதுதான். சமுதாயத்தின் ஒரு சோசலிச மறுசீரமைப்பின் மூலம் மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தையும் மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான எதிர்காலத்தையும் வெல்ல முடியும்.

Loading