இலங்கை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரைகளை இங்கு காணலாம்.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயாணப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ எதேச்சதிகாரமாக தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நெல் வயல்கள், பண்ணைகள் மற்றும் வீதிகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் நெல், காய்கறிகள், தேயிலை மற்றும் பழங்கள் உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்ட அதே வேளை, 'இரசாயன உரங்கள் மீதான தடையை உடனடியாக நீக்கு!', 'சுபீட்ச நோக்கு-விவசாயிகள் வீதியில்!', 'விவசாய நிலங்களை கூட்டுத்தாபனங்களுக்கு காவுகொடுக்காதே' போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும், பதாதைக்களும் இந்த பிரச்சாரத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்ய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி வந்தாலும், விவசாயிகள் அதை அலட்சியம் செய்து தொடர்ந்து போராடுகிறார்கள். அதற்கு சமாந்தரமாக, எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மீனவர்களின் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இந்த போராட்டங்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் மீனவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட பகுதியினர் மத்தியில் இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வரும் கிளர்ச்சியையே குறிக்கின்றன.

தங்களது வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் போராட்டத்தில் இறங்கும் தொழிலாள வர்க்கமானது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பிற்காக முன்வந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்னிலை வகிக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கோரிக்கை விடுக்கின்றது.

இந்த பருவகாலத்திற்கு உரங்களை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்த போதிலும், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இரசாயன அல்லது இயற்கை உரங்களோ கிடைக்கவில்லை. உரங்கள் மற்றும் விவசாய வேதிப்பொருட்களின் பற்றாக்குறையால் பயிர்களை அழித்து, அவர்கள் இன்று பொருளாதார படுகுழியில் விழுந்து கொண்டிருக்கின்றர். கொரோனா தொற்றுநோய்க்கு சமாந்தரமாக ஏற்பட்டுள்ள இந்த பயிர் அழிவு காரணமாக, பஞ்சம் தோன்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், இரசாயன உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, 'யார் எதிர்த்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து தான் பின்வாங்க மாட்டேன்' என்று சபதம் செய்கிறார்.

தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்காக அநேகமானவை செய்யப்பட்டுள்ள காரணத்தால், எந்தவொரு விவசாயியும் தனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய 'நியாயமான உரிமை' இல்லை என்று, ஜூன் 1 அன்று, அரச சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இராஜபக்ஷ மேலும் தெரிவித்தார. அவரது அந்த கருத்து விவசாயிகளுக்கு எதிரான ஒரு மறைமுக அச்சுறுத்தலாகும்.

ஒரு கிலோ நெல்லின் உத்தரவாத விலை ரூ .40க்கும், 50 க்கும் இடைப்பட்டது என்றாலும், உற்பத்தி செலவு அதற்கு சமமானதாகும். கடந்த சில பருவங்களின்போது, குறிப்பாக கொவிட் தொற்றுநோயுடனான காலகட்டத்தில், காய்கறிகளையும் பழங்களையும் விற்க முடியாத விவசாயிகள் அவற்றை அழிக்கத் தள்ளப்பட்டனர். இலவசமாக வழங்கப்பட்ட உரமும் கூட, ஒரு விவசாயிக்கு 20-30 கிலோ என்ற மிகக் குறைந்த அளவே ஆகும்.

உரத் தடைக்கு எதிரான விவசாயிகளின் பிரச்சாரத்துக்கு 'சதி' என்று முத்திரை குத்திய இராஜபக்ஷ அரசாங்கம், அரசாங்கத்தின் தீய கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் வெகுஜன எதிர்ப்பைத் தடுக்கும் பொருட்டு, விவசாயிகளின் எதிர்ப்பு உட்பட அனைத்து அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்ய தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது.

உரத் தடை என்பது, நச்சு கலந்த 'விஷ உணவு' உற்பத்தியை நிறுத்துவதையும், விவசாய இரசாயணப் பயன்பாடு காரணமாக விவசாயிகள் 'சிறுநீரக நோய்க்கு இரையாவதை' தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக இராஜபக்ஷ போலி தர்க்கத்தை புணைந்துள்ளார். அதற்கு மாறாக, உரத் தடைக்கு பின்னால் உள்ள உண்மையான நோக்கம் என்னவெனில், அரசாங்கத்தின் அந்நிய செலாவணி இருப்புக்கள் வற்றிப் போகும் சூழ்நிலையில், நாட்டில் இருந்து பணம் வெளியேறுவதைக் குறைப்பதே ஆகும். உரத்தை மட்டும் இறக்குமதி செய்ய ஆண்டுக்கு 400 மில்லியன் டொலர் செலவாகும் என்று அரசாங்கம் கூறுகிறது.

கொரோனா தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், அதில் இருந்து தலை தப்புவதற்கான அவநம்பிக்கையான முயற்சியின் ஒரு பகுதியாக, உரங்களுக்கு மேலாக இன்னும் ஒரு தொகை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

எந்தவொரு எதிர்ப்பையும் மீறி, உரத் தடையை மட்டுமல்லாமல், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நாசப்படுத்தும் கொடூரமான கொள்கையை முன்னெடுப்பதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் உறுதியாக உள்ளது.

விவசாயிகளின் பிரச்சாரங்களின் உடனடி நோக்கம், உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களை பெறுவதாக இருந்தபோதிலும், அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் பல தசாப்த கால பொருளாதார சீர்திருத்தங்களால் உருவாக்கப்பட்ட தீவிர வறுமை மற்றும் பாரிய வேலையின்மை காரணமாக, போன்ற கஸ்ட்டங்களை அவர்களால் சமாளிக்க முடியாத நிலையிலேயே இந்த போராட்டங்கள் வெடித்தன.

மேற்கண்ட பொருளாதார சீர்திருத்தங்களின் போது, விவசாய மானியங்கள் குறைக்கப்பட்டதுடன் விதைகள் மற்றும் விவசாய இரசாயானப் பொருட்களின் அதிக விலைகள், உற்பத்திக்கான நியாயமற்ற விலைகள், மற்றும் இடைத்தரகர் சுரண்டல் மற்றும் நில பற்றாக்குறை போன்ற நீண்டகால பிரச்சினைகள் உக்கிரமடைந்தன. கொரோனா தொற்றுநோய் அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் படுகுழிக்குள் தள்ளிய காரணத்தால், முதலாளித்துவ ஆட்சியின் மீது விவசாயிகள் மத்தியில் வளர்ந்து வரும் கோபமும் அமைதியின்மையும் கூர்மையாக வளர்ந்து வருகின்றன.

ஏழை விவசாயிகளின் போராட்டமானது இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு மத்தியிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் வளர்ந்து வரும், சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்களுடனும் இணைந்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள ஏழ்மையான விவசாயிகளின் போராட்டங்களுடனும் இணைந்துகொள்கிறது. விவசாய துறையில் செயற்படும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை கட்டுப்படுத்தவும், உற்பத்தி மற்றும் விலைகளை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கும் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக, இந்தியாவில் மில்லியன் கணக்கான விவசாயிகள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிராக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரத் தடைக்கு எதிராக விவசாயிகளிடையே அதிகரித்து வரும் பலத்த கோபத்தை சுரண்டிக்கொள்வதற்காக, பல்வேறு கூட்டங்களையும் பிரச்சாரங்களையும் ஏற்பாடு செய்து வரும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்படட முதலாளித்துவ கட்சிகள், விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் ரீதியாக திசைதிருப்பிவிட முயல்கின்றன.

ஜே.வி.பி. தலைமையிலான அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் மற்றும் ஏனைய விவசாய அமைப்புகளின் வகிபாகம், இந்த முதலாளித்துவக் கட்சிகளுக்குப் பின்னால் விவசாயிகளை முடிந்துவிடுவதும், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைச் சூழ அவர்கள் அணிதிரட்டப்படுவதை தடுப்பதும் ஆகும்.

கிராமப்புற ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை அழிவுக்குள் தள்ளுவது சம்பந்தமாக, ஜனாதிபதி இராஜபக்ஷவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளைப் போலவே, ஐ.ம.ச., ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் பொறுப்பாளியாகும்.

சோசலிச வாய்ச்சவடால்களை வீசி, கிராமப்புற ஏழை விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சியான ஜே.வி.பி. இன்று முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்த ஒரு முதலாளித்துவக் கட்சியாகும். அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியை வகித்த, அதன் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் செயல்படுத்தப்பட்ட விவசாய மானியங்களை வெட்டித் தள்ளியது உட்பட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த நேரடியாக ஆதரவளித்தார்.

ஒரு போலி இடது கட்சியான முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் அதன் விவசாய அமைப்பும், விவசாயிகளின் போராட்டத்துக்குள் நுழைந்துகொண்டு அதை கரைத்துவிடுவதற்கு முயற்சிக்கின்றன. அதன் தலைவர்கள், ஜே.வி.பி. உடன் இருந்த போது, குமரதுங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தனர். இந்த முதலாளித்துவ கட்சிகள், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை.

1906 இல் நிரந்தர புரட்சியின் கோட்பாட்டை விவரித்த லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவ கட்சிகளானவை விவசாயிகளை தங்கள் கட்சிகளின் 'அரசியல் அடிமைகளாக' கருதுகின்ற அதே நேரம், அவர்களை 'சர்வதேச மூலதனத்தின்' அடிமைமகளாக்கி வருகின்றன, என்று விளக்கினார். ட்ரொட்ஸ்கி கூறியதாவது:

'கிராமப்புறங்கள், இறுதியாக மூலதனத்தின் அடிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டன. அதே போல், விவசாயிகள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் அரசியல் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இந்த கட்சிகள், பாராளுமன்ற அரசியலினுள் நிலப்பிரபுத்துவ முறையை புதுப்பித்தன. விவசாயிகளை முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு வாக்குகளை சேகரித்துக்கொள்வதன் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக இது முன்னெடுக்கப்பட்டது. நவீன முதலாளித்துவ அரசு, அதன் வரிக் கொள்கைகள் மற்றும் இராணுவமயமாக்கல் மூலம், விவசாயிகளை வட்டிக்கார முதலாளித்துவ மூலதனத்தின் பிடிக்குள் அடிபணியச் செய்கின்ற அதே நேரம், அரசு மத குருமார்கள், அரச கல்லூரிகள் மற்றும் ஒழுக்க வாழ்க்கை முறைமை மூலம் வட்டிக்காரர்களின் அரசியலுக்கு பலிகடாக்களாக ஆக்கப்பட்டனர். (நிரந்தரப் புரட்சி: முடிவுகளும் வாய்ப்புகளும் -1906).

1948 சுதந்திரம் என்று அழைக்கப்பட்டதிலிருந்து கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதில், முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ள வரலாற்று இயலாமையை தெளிவாக நிரூபித்துள்ளன. தங்களது எரியும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு மாறாக, அவை மேலும் மேலும் ஆழமடைந்த நிலைமைகளுக்குள், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக கிராமப்புற இளைஞர்களின் மத்தியில் வளர்ந்து வந்த போர்க்குணத்தை, அரசியல் ரீதியாக திசைதிருப்பி 1971 மற்றும் 1988-89 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முதலாளித்துவ அரசாங்கங்களால் நசுக்கப்பட்டன.

கிராமப்புற விவசாய ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனில், உரங்கள் உட்பட விவசாய இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நிறுவனங்களின் பிடியிலிருந்து ம்ற்றும் கொடூரமான கடன் சுழற்சியில் சிக்க வைத்திருக்கும் வங்கி முறைமையில் இருந்தும் அவர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டின் மூலம், பெரிய நிறுவனங்கள் கையில் இருக்கும் உற்பத்தி சாதனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக மட்டுமே இதைச் செய்ய முடியும். முதலாளித்துவ ஆட்சி மற்றும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். அந்த போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் அதன் கூட்டாளிகளான ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.

கடந்த சில தசாப்தங்களாக இடம்பெற்ற சர்வதேச மூலதனத்தின் நுழைவு மற்றும் விவசாயிகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொண்ட, அத்தகைய சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான புறநிலை அடித்தளம் மிகவும் வலுவடைந்துள்ளது. கிராமப்புற ஏழைகளில் பெரும் பகுதியினர் அரை தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வேலை தேடி நகரங்களுக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் குடிபெயர்ந்த இலட்சக் கணக்கான கிராமப்புற இளைஞர்கள், தொழிலாள வர்க்கத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, விவசாயிகள், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் அவற்றுடன் கட்டிப்போடுதவற்கு செயற்படும் போலி-இடது கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளில் இந்தும் சுயாதீனமாகி, தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களை அந்த நடவடிக்கை குழுக்களை சூழ அணிதிரட்டுவதற்கான போராட்டத்தில், ஒரு சோசலிச பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம், இராஜபக்ஷ அரசாங்கத்தின் தலமையிலான இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை பதிலீடு செய்ய வேண்டும். இது உலக முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ இலாப முறைமையையும் தூக்கி வீசுகின்ற அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும்.

தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் கீழ், வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவது நிராகரிக்கப்பட்டு, பெரிய நிலங்கள், வேளாண் வணிகங்கள் மற்றும் முதலாளித்துவ வங்கிகள் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். இதன் கீழ், விவசாயிகளின் கடனை ஒழித்தல், மலிவான கடன்களை வழங்குதல், விதைகள், உரங்கள் மற்றும் விவசாய சாதனங்களை மலிவு விலையில் வழங்குதல் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கான சந்தையில் தனியார் ஏகபோகத்தை ஒழிக்கின்ற உழவர் கூட்டுறவு திட்டத்தை ஸ்தாபிப்பதையும் நடைமுறைப்டுத்த முடியும். சிறிய நிலத் துண்டுகளில் தனி விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு மாறாக, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள அதிக உற்பத்தி செய்யும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெரிய அளவிலான கூட்டு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த திட்டத்துக்காகப் போராடும் சோசலிச சமத்துவக் கட்சியை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப, அதில் சேருமாறு தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading