மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரதிநிதிகள் சபையின் அமெரிக்கர்-அல்லாதவர்களின் நடவடிக்கை கமிட்டி மற்றும் ஜோசப் மெக்கார்த்தியின் நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க செனட் சபை கடந்த செவ்வாய்கிழமை அதன் மிகவும் அருவருப்பான காட்சியைக் கண்டது. கோவிட்-19 தடுப்பூசியை மறுப்பவரும் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் நோய்தொற்று ஏற்படுவதை ஆதரிப்பவருமான ராண்ட் பவுல் (Rand Paul), மில்லியன் கணக்கான உயிர்கள் பலியாவதற்கு இட்டுச் சென்றுள்ள கோவிட்-19 க்குக் காரணமான வைரஸை மரபணுரீதியில் வடிவமைக்க உதவியதாக, அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான அமைப்பின் இயக்குனர் ஆண்டனி பௌஸி (Anthony Fauci) மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
'ஒரு பெருந்தொற்றால் உலகெங்கிலும் நான்கு மில்லியன் பேர் உயிரிழப்பதற்கு பௌஸியே பொறுப்பு' என்று பவுல் குற்றஞ்சாட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'அதுவொரு ஆய்வகத்திலிருந்து வந்ததை எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. உங்களையும் சேர்த்து அந்த ஆய்வகத்திற்கு நிதி வழங்கியவர்கள் எல்லோரும் இதில் பொறுப்பாகிறார்கள்,” என்றார். வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகம் (WIV) 'மனிதர்களில் மிக அதிகளவில் பரவும்' வகையில் விலங்கு வைரஸ்களை உருவாக்கியதாகவும், அதற்கு நீங்கள் நிதியளித்தீர்கள், இந்த உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்,” என்றவர் அவர் வாதிட்டார்.
பெருந்திரளான படுகொலைக்கு அரை-வேக்காட்டு முட்டாளால் பொய்யாக குற்றஞ்சாட்டப்படும் பௌஸி, மட்டுப்பட்டதாக இருந்தாலும் கூட, ஒரு பொருத்தமான பதிலை வழங்கினார்: “செனட்டர், நீங்கள் இப்போது பரப்பும் பொய்யை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன்” என்றார். “நாங்கள் என்ன செய்தோமோ அதுதான் மக்கள் மரணத்திற்குக் காரணம் என்பதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நான் இதை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்… செனட்டர் இங்கே நீங்கள்தான் பொய்யுரைக்கிறீர்கள்,” என்றார்.
ஒரு பகுத்தறிவார்ந்த சமூகத்தில், பவுலின் சீற்றம் ஆழ்ந்த தேசிய சீரழிவின் ஒரு தருணமாக பார்க்கப்பட்டிருக்கும். பவுலின் நடவடிக்கைகள் அவரது சக செனட்டர்களாலும் ஊடகங்களாலும் உரத்த குரலில் கண்டிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் செனட் சபையில் வெறும் வெட்டுக்கிளிகள் தான் இருந்தன. அடுத்து பேசிய ஜனநாயகக் கட்சியின் மின்னிசொடா செனட்டர் டினா ஸ்மித் எதுவும் நடக்காததைப் போல அவர் தயாரித்து வந்திருந்த கருத்துக்களை உளறிக் கொட்டினார். ஒரேயொரு செனட்டர் கூட பௌஸியைப் பாதுகாக்க முன்வரவில்லை, காப்பாற்ற வந்த ஒருவரைப் போல வந்த பாப் கேசி ஜூனியர், பௌஸி மீதான குற்றச்சாட்டு மீது எந்தக் கருத்தும் கூட கூறாமல், வெறுமனே பௌஸியின் 'நாணயத்தை' “இருகட்சியினரும்' ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். பவுல் சாட்சியம் கூறும் கமிட்டியில் உறுப்பினராக அமர்ந்துள்ள வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் அந்த விசாரணையிலேயே கலந்து கொள்ளவில்லை என்பதோடு, இப்போது வரையில் அதுகுறித்து ஒன்றுமே கூறவில்லை.
செனட்தான் வாய்மூடி இருந்தது என்றால், ஊடகமோ பவுலின் விகாரமான காட்சிப்படுத்தலுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்தது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அதுவே தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாடுகளைப் பரப்பும் மையமாக விளங்கும் நிலையில், அது 'அனுசரிப்பு இல்லை' என்றும், பவுலுடனான அவரின் கருத்துப் பரிவர்த்தனைகளில் 'முரண்பட்ட நலன்களை' கொண்டிருப்பதாகவும் பௌஸியைக் குற்றஞ்சாட்டியது.
'அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் WIV க்கு நிதியுதவி வழங்கியதால், அதில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி குறித்து [பௌஸிக்கு] ஏதோ தெரியும்,” என்று ஜேர்னல் அறிவித்தது. “கோவிட்-19 இன் தோற்றுவாய் மீதான நிஜமான விசாரணைக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்குமென யாரும் எதிர்பார்க்க வேண்டாம்,” என்று அந்த பத்திரிகை எழுதியது. “அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாதிருப்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது, இவர்களின் முரண்பட்ட நலன்கள் மீது இன்னும் அதிக விசாரணை தேவைப்படுகிறது,” என்றது.
அதிவலது செய்தி பத்திரிகையே கூட விஞ்ச முடியாதளவுக்கு, வாஷிங்டன் போஸ்ட் சீன-விரோத பிரச்சாரகர் ஜோஷ் ரோகினின் ஒரு வாசகர் தலையங்கத்தைப் பிரசுரித்து பவுலின் பக்கம் தரப்பெடுத்தது. “அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மையில் பவுலுக்குத் தெரியும்,” என்று ரோகின் தீர்மானிக்கிறார்.
மரபணுரீதியில் வடிவமைப்பதில் பாஸிக்குப் பொறுப்பிருப்பதாக வாதிடுவதில், பவுல், ரோகின் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் குழுவும் நிக்கோலஸ் வேட் முன்வைத்த சதிக் கோட்பாட்டின் மீது தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.
உலகின் இரண்டு முன்னணி நுண்கிருமியியல் ஆராய்ச்சியாளர்களான ரால்ப் பாரிக் (Ralph Baric) மற்றும் ஷி ஜெங்-லி (Shi Zheng-li) இருவரும் 'மற்ற உயிரினங்களைத் தாக்க வௌவால் கொரோனா வைரஸ்களை வடிவமைக்கும் முறையை' உருவாக்கியதாக வேட் வாதிட்டார். வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தின் இந்த வேலைக்கு 'அமெரிக்க தேசிய உடல்நல அமைப்புகளின் (NIH) பாகமாக உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான ஆய்வகம் நிதி வழங்கி' இருந்தது என்று வேட் குற்றஞ்சாட்டுகிறார்.
விஞ்ஞானிகள் வௌவால் கொரோனா வைரஸ்கள் மீது ஆராய்ச்சி மேற்கொண்டனர் என்ற வலியுறுத்தல்களின் அடிப்படையில், அந்த ஆராய்ச்சி தான் கோவிட்-19 ஐ உருவாக்கியதாக வேட் அபத்தமான ஊக பாய்ச்சலை எடுக்கும் அதேவேளையில், அது 'நடந்திருக்கலாம்' என்ற உண்மைக்கு அப்பால் அவர் வலியுறுத்தல்களை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை.
மொத்தம் மூன்று முக்கிய அமெரிக்க பத்திரிகைகளும் அவரது பொய்களை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கவில்லை என்றால், வேடின் அபத்தமான ஊகங்கள் அவை இருக்க வேண்டிய இடமான குப்பைத்தொட்டியில் கிடந்திருக்கும். வேடின் எழுத்துக்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் தலையங்கத்திலும், நியூ யோர்க் டைம்ஸில் பல வாசகர் தலையங்களிலும், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் பல்வேறு வாசகர் தலையங்கங்களிலும் நன்மதிப்புடன் மேற்கோளிடப்பட்டன. இனவாத போலி-விஞ்ஞானத்தை ஊக்குவிப்பதற்காக அவரது பல ஆண்டுகளாக திட்டமிட்ட பொய்மைப்படுத்தல் முன்வரலாறை விளங்கப்படுத்தாமலேயே அந்த பத்திரிகைகள் தெரிந்தே மற்றும் மீண்டும் மீண்டும் வேட் எழுத்துக்களை மேற்கோளிட்டன.
'பிரதான' அமெரிக்க பத்திரிகைகள் வூஹான் ஆய்வகம் மீதான பொய்யைத் தழுவுவது, இந்த பெருந்தொற்றுக்காக ஓராண்டுக்கும் மேலாக சீனா மீது பழி சுமத்த முனைந்துள்ள, பாசிசவாத முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ராண்ட் பவுல் மற்றும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை ஆதரிக்கும் ஏனைய வலதுசாரி ஆதரவாளர்கள் பயணிக்கும் திசைக்குச் சாதகமாக அமைகிறது.
ஒரு காலத்தில் 'சுதந்திரக் கொள்கை ஆதரவாளராக' தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பவுல், இப்போது குடியரசுக் கட்சியின் பாசிச பிரிவின் பகுதியாக உள்ளார். 2020 தேர்தல் 'பல வழிகளில் களவாடப்பட்டது' என்று கூறிய பவுல், தலைமைச் செயலகம் மீதான பாசிசவாத தாக்குதலுக்குத் தீனி போட்ட ஜனவரி 6 பேரணியில் கலந்து கொண்ட குழுவான, அமெரிக்கா முதலில் பெண்கள் குழு, அடுத்த மாதம் ஏற்பாடு செய்திருக்கும் அமெரிக்காவைக் காப்பாற்று உச்சி மாநாட்டை ஆமோதித்துள்ளார்.
பவுலின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுத்து ஜனநாயகக் கட்சி முற்றிலுமாக பௌஸியைப் பாதுகாக்க தவறியதால் ஊக்குவிக்கப்பட்ட பவுல், திங்கட்கிழமை அந்த விஞ்ஞானியை குற்றகரமாக நீதித்துறைக்கு பரிந்துரைத்து, 'நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சிக்கு (gain of function research) அவர் நிதியளித்தாரா இல்லையா என்பது குறித்து அவர் பொய்யுரைக்கிறார், ஆம், அவர் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று அறிவித்தார்.
'வூஹான் ஆய்வக' இட்டுக்கட்டல் சம்பந்தமாக பௌஸி மீதான தாக்குதல் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளால் உந்தப்படுகிறது. முதலாவதாக, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்ச மட்டங்களுக்கு அதிகரித்து வந்தாலும் அந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அமெரிக்கா கைவிடும் நிலையில், விஞ்ஞானிகளை அச்சுறுத்தி, மிரட்டி, பீதியூட்டுவதை அது நோக்கமாக கொண்டுள்ளது.
கட்டுப்பாடுகளை நீக்குவதை பௌஸி விமர்சித்துள்ளார் என்பதோடு இந்த பெருந்தொற்றின் பெரும் ஆபத்தைக் குறித்து எச்சரித்தும் உள்ளார் என்பதற்காக, அவர் பாசிச வலதின் மைய இலக்காக மாறியுள்ளார்.
மார்ச் மாதம், பௌஸிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கொலை மிரட்டல்களைச் சுட்டிக்காட்டினார். '’முகக் கவசம் கட்டாயம் அணிவதை நீங்கள் நீக்கக்கூடாது’ என்பது யாருக்கோ பிடிக்கவில்லை என்று என்னால் கூற முடியும், நீங்கள் கூறுவது பிடிக்கவில்லை என்றால் பின்னர் மொத்தத்தில் திடீரென உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வரும்,” என்றார்.
இரண்டாவது, உண்மையில் நிதிய தன்னலக்குழுவினது கொள்கைகளின் விளைபொருளான இந்த பாரிய மரணத்திற்குச் சீனாவைக் குற்றஞ்சாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பவுலின் பாசிசவாத சீற்றங்களை ஜனநாயகக் கட்சி விமர்சிக்க மறுப்பது, ட்ரம்புடன் அதற்கு என்னதான் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெருந்தொற்று மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் மற்றும் சீன-விரோத பிரச்சாரத்தை தொடர்வதற்கும் பாதுகாவலனாக நின்று, அவ்விரு முகப்பிலும் அதே அடிப்படை கொள்கையை பைடென் நிர்வாகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையுடன் பிணைந்துள்ளது.
'விஞ்ஞானத்தைப் பின்பற்றுவதாக' பைடென் உறுதியளித்தாலும், அவர் நிர்வாகம் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதுடன், முகக்கவசங்கள் அணிவதை ஊக்குவிப்பதில்லை என்பதோடு, நேரடி பள்ளி வகுப்புகளை முழுமையாக மீண்டும் திறக்க கோரி வருகிறது. இந்த நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களுக்கு எதிராக அமெரிக்காவை நிறுத்துகிறது.
உண்மையில் அமெரிக்காவில் பாரிய இறப்பு எண்ணிக்கைக்கான பொறுப்பு அமெரிக்க முதலாளித்துவத்தையே சாரும். பல மாதங்களாக, ட்ரம்ப் நிர்வாகமும் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்த பெருந்தொற்றால் ஏற்படும் ஆபத்துக்களை மூடி மறைத்தனர், அதை இனியும் மூடிமறைக்க முடியாது என்று ஆனவுடன், காலத்திற்கு முந்தியே பெருவணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க முனைந்தனர், இது தற்போது மீண்டும் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது.
வர்க்க நனவுபூர்வ தொழிலாளர்கள் அனைவரும் இந்த வலதுசாரி வேட்டையாடலை எதிர்க்க வேண்டும் என்பதோடு, இதற்கான பழியை அதற்குரிய இடத்தில் சீனா மீதள்ள, விஞ்ஞானிகள் மீதல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் மீது சுமத்த வேண்டும்!
மேலும் படிக்க
- JDE இல் தொழிற்சங்கத்தின் சரணடைதல் ஒப்பந்தத்தை நிராகரிக்கவும்: எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்கவும்!
- பிரெஞ்சு யூத இனப்படுகொலையிலிருந்து உயிர்பிழைத்தவர் அதிவலதின் தடுப்பூசி-எதிர்ப்பு போராட்டங்களைக் கண்டிக்கிறார்
- அரிசோனா பேரணியில் ட்ரம்ப் பாசிச அழைப்புகளை தீவிரப்படுத்துகின்றார்