முன்னோக்கு

தடுப்பூசிக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்தை எதிர்ப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெருந்திரளான மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் வலதுசாரித்தனமானதாகும், இது உலகெங்கிலுமான தொழிலாளர்களால் எதிர்க்கப்பட வேண்டும். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் (உண்மையில் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்) உயிரிழந்துள்ள ஒரு கொடிய வைரஸின் உலகளாவிய பெருந்தொற்று நிலைமைகளின் கீழ், பெருந்திரளான மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவது பொது சுகாதாரத்திற்கான அடிப்படைத் தேவை என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் சுய-பாதுகாப்பும் ஆகும்.

இந்த பிரச்சினையைக் 'கட்டாய தடுப்பூசிகளில்' ஒன்றாக காட்டுவதும் கூட அடிப்படையிலேயே தவறாகும், ஏனெனில் அது ஒருவகையில் 'தனிப்பட்ட சுதந்திரத்தை' மீறுவதாக தடுப்பூசி பிரச்சினையை கையாள்கிறது. உண்மையில் மற்றவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்துவதற்கும் மற்றும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதற்கும் யாருக்கும் 'உரிமை' இல்லை.

A health worker administers a dose of Janssen Johnson & Johnson COVID-19 vaccine. (AP Photo/Leo Correa)

ஒரு வெகுஜன சமூகத்தில் பொது சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் என்பது ஒட்டுமொத்த நெறிமுறைகளின் தொகுப்பைச் சார்ந்துள்ளது: அதாவது, வாகனத்தில் இருக்கைப் பட்டை அணிவது மற்றும் வேகக் கட்டுப்பாடுகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கும் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்குமான கட்டுப்பாடுகள், கட்டிடங்களில் அதிகபட்சம் எத்தனை பேர் குடியிருக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள், ஊனமுற்றோர் வாகன நிறுத்துமிட விதிமுறைகள் மற்றும் இன்னும் பல விதிமுறைகளின் ஒட்டுமொத்த தொகுப்பைச் சார்ந்துள்ளது. இதையடுத்து நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலை மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடை போன்ற தொழிலாள வர்க்கத்தின் கடுமையான போராட்டத்தின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட சாதனைகளும் உள்ளன (இவை எல்லா இடங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன).

'தனிநபர் உரிமைகள்' என்ற பதாகையை எழுப்புவதன் மூலம், அதுவும் இதில் 'இலாபத்திற்கான உரிமை' என்ற மிகவும் இழிவார்ந்த பதாகையை உயர்த்துவதன் மூலம், சமூக உரிமைகளின் பாதுகாப்பை எப்போதுமே மிகவும் வலதுசாரி சக்திகளே எதிர்கின்றன.

தடுப்பூசிகளைப் பொறுத்த வரை, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் செல்லும் நாடுகளின் நோய்களில் இருந்தும், அது மட்டுமின்றி காசநோய் மற்றும் மலேரியா போன்ற பரந்த நோய்களுக்கு எதிராகவும் கூட தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இது இப்போது வெளிநாட்டுப் பயணத்திற்கான வழக்கமான தேவையாக உள்ளது. இவை இறப்பு மற்றும் கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்புகளாகும், 'தனிநபர் சுதந்திரம்' மீதான மீறல்கள் அல்ல.

இதே போல, 'வாக்சர்-எதிர்ப்பு' (anti-vaxxer) குழுக்களின் குற்றகரமான பொறுப்பற்ற முயற்சிகளுக்கு மத்தியிலும், MMR, போலியோ மற்றும் பிற நோய்களுக்கு எதிராக உட்பட, குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு முன்னதாக 'அவர்களுக்குரிய தடுப்பூசிகளை' செலுத்தி இருக்க வேண்டும் என்பது பொதுவாக உள்ளது. குழந்தைகளுக்கு பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் பதிப்பு உருவாக்கப்பட்டவுடன், அனேகமாக இது வெறும் இன்னும் ஒருசில மாதங்களில் கிடைக்குமென நம்பப்படுகின்ற நிலையில், அதுவும் பள்ளியில் வருகை தருவதற்கான ஒரு கட்டாய அவசியப்பாடாக ஆக்கப்பட வேண்டும்.

'கட்டாய தடுப்பூசி' க்கு எதிரான பிரச்சாரத்தில் குறைந்தபட்சம் கூட முற்போக்குத்தன்மை இல்லை. அது அறியாமை, அச்சம் மற்றும் விஞ்ஞான-விரோத தப்பெண்ணங்களுக்கான முறையீடுகளின் அடிப்படையில் உள்ளது. அவை சகிக்க முடியாதளவில் தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி, தடுப்பூசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், அராஜகவாதத்தையும் சுதந்திரவாதத்தையும் பரப்புகின்றனர், இதற்கும் தொழிலாள வர்க்க நலன்களுக்கும் பொதுவானது எதுவும் இல்லை.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாத தொழிற்சங்கங்களும், இந்த பிரச்சாரத்தில் இணைந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கடந்த ஆண்டு மருத்துவமனைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் நோய்தொற்றுகளின் அலையை எதிர்த்துப் போராட மறுத்த சர்வதேச சேவைத்துறை பணியாளர்கள் சங்கம் (Service Employees International Union) சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்களுக்கான கட்டாய தடுப்பூசிக்கு எதிராக நியூ யோர்க் நகரில் கடந்த வாரம் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. இந்த பெருந்தொற்று இருந்தாலும் பரவாயில்லை பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க கோரியுள்ள அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ராண்டி வைய்ன்கார்டன், “ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணர்ந்து அவர்களின் வேலையிடங்களுக்கு வருவது' அவசியப்படுவதால் தடுப்பூசி அவசியப்பாடுகளுக்கு எதிரான வார்த்தைகளைக் கூறாமல் வாய்மூடிக் கொண்டார்.

ஒரு நெரிசலான வேலையிடத்திலோ, பள்ளி அல்லது மருத்துவமனையிலோ பணிபுரியும் நோய்தொற்று ஏற்பட்ட ஒருவரால் ஏற்படும் பாதிப்புகள் பேரழிவுகரமாக இருக்கும் என்பதைக் கொண்டு பார்க்கையில், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது அவசியம் என்பது முற்றிலும் நியாயமாகவும் அவசியமாகவும் உள்ளது.

தடுப்பூசி பெறக்கூடிய நிலையில் இருந்து, ஆனால் அதைப் பெற மறுக்கும் எவரையும் மற்றவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த நபருக்கு இடைக்கால விடுப்பு வழங்கப்பட வேண்டும், அவர்கள் தடுப்பூசி செலுத்திய உடனே அதை முடிவுக்குக் கொண்டு வரலாம். இது, கோவிட்-19 க்கு எதிராக பாதுகாக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அற்ப அபாயங்களை விளங்கப்படுத்த, மருத்துவ வல்லுனர்கள் மற்றும் சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்கள் தலைமையில், ஒரு திட்டமிட்ட பொதுக் கல்வி பிரச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

ஆனால் பிரச்சினையை தனிப்பட்ட ஒருவரின் கவனக்குறைவாக முன்வைப்பது அடிப்படையிலேயே தவறாகும். கோவிட்-19 பேரழிவுகரமாக பரவுவதற்குத் தொழிலாளர்கள் பொறுப்பல்ல, மாறாக ஆளும் வர்க்கமே பொறுப்பாகும். மில்லியன் கணக்கானவர்கள் சம்பந்தப்பட்ட பொது மனோநிலையில் ஓர் உண்மையான மாற்றம் என்பது, இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் நிதிய தன்னலக்குழுவின் ஒட்டுமொத்த கொள்கைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் இயக்கம் இருக்கும் நிலைமைகளின் கீழ் மட்டுமே சாத்தியமாகும்.

இந்த பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான எல்லா நடவடிக்கைகளுக்குமான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பில் இந்த 'கட்டாய தடுப்பூசிக்கு' எதிரான பிரச்சாரம் சமீபத்திய கட்டமாகும். தடுப்பூசி போடத் தவறியதன் மூலம், இந்த பிரச்சாரத்தில் சிக்கிக் கொண்டவர்களில் பலர், அவர்களின் சொந்த வாழ்வையும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக தொழிலாளர்களின் வாழ்வையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்துவது உண்மையிலேயே துயரகரமானது.

தடுப்பூசியை ஊக்குவிப்பதற்கான வெகுஜன கல்வி பிரச்சாரம் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, பிற்போக்குத்தனமான விஞ்ஞான-எதிர்ப்பு கருத்துருக்கள் நீண்டகாலமாக ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளதுடன் சேர்ந்து, இந்த தொற்றுநோய் நெடுகிலும் ஆளும் வர்க்கத்திடமிருந்து ஒரு திட்டமிட்ட தவறான கல்வி பிரச்சாரம் இருந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டதில் இருந்து, இந்த பெருந்தொற்று பரவிக் கொண்டிருந்த போதே கூட தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்கான முயற்சிகள் வரையில், இந்த பாரிய மரணத்திற்குப் பொறுப்பு நோய்தொற்றைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளை எடுக்க மறுத்த முதலாளித்துவ தன்னலக்குழு அல்ல, மாறாக சீனா தான் பொறுப்பு என்று பொய்யாக வாதிட்டது வரை, இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த விடையிறுப்பும் ஏமாற்றுத்தனத்துடனும் குற்றகரமாகவும் செய்யப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளைக் கட்டியெழுப்பி வரும், பைடென் நிர்வாகத்தின் கொள்கைகள், ஏறக்குறைய வேண்டுமென்றே பொதுமக்களிடையே ஐயறவுவாதத்தை எரியூட்டும் வகையில் கணக்கிடப்பட்டதாக தெரிகிறது. ட்ரம்ப்பும் அவரது பாசிசவாத ஆதரவாளர்களும் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் கண்டித்ததுடன், சமூக அடைப்புகளைத் தாக்கி, மட்டுப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இருந்த பிற மாநிலங்கள் மற்றும் 'மிச்சிகனை விடுவிக்க' சூளுரைத்தனர். குடியரசுக் கட்சி ஆளும் மாநிலங்கள் இப்போதும் கூட கேடு விளைவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதில் குறைந்த விகிதங்களுடன், டெல்டா வகை வைரஸ் காட்டு த்தனமாக பரவி வரும் நிலையிலும் தொற்று விகிதங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அலபாமா ஆளுநர் கே ஐவே இப்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மீது பழிசுமத்தி வருகிறார், ஆனால் அவரின் சொந்த கட்சி தான் அந்த பெருந்தொற்று அச்சுறுத்தலைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்நின்று நடத்தியது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், பைடென் நிர்வாகம், பெற்றோர்களை தொழிற்சாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் திரும்ப அனுப்புவதற்காக, நேரடி வகுப்பறைகளை மீண்டும் திறப்பதையே அவரின் முன்னுரிமையாக அமைத்துள்ளளது. இந்த பெருந்தொற்று திறம்பட முடிந்துவிட்டது என்ற பைடென் நிர்வாகத்தினது கூற்றைத் தொடர்ந்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கட்டாயம் முகக்கவசம் அணிவதற்கான அதன் நெறிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் டெல்டா வகை வைரஸின் வெடிப்பார்ந்த அதிகரிப்பு தவிர்க்க முடியாமல் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால் மட்டுமே, அது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் முகக்கவசம் அணிய வற்புறுத்தி பகுதியாக பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த மக்களும் பாதுகாப்பாக ஆக்கப்படும் வரையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, பாரியளவில் பரிசோதனைகள் மற்றும் அத்தியாவசியமில்லா உற்பத்தியை நிறுத்துதல் ஆகியவை மூலமாக, இந்த வைரஸை ஒழிப்பதற்கான ஓர் உலகளாவிய முயற்சியாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களுக்குத் தடுப்பூசி என்பது ஒரு அம்சம் மட்டுமே ஆகும். பெரும் செல்வந்தர்கள் குவித்து வைத்துள்ள ட்ரில்லியன்களைக் கொண்டு நிதி ஒதுக்க வேண்டிய இத்தகையவொரு முயற்சிக்கு முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு தேவைப்படுகிறது, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு ஒவ்வொரு தருணத்திலும் மனித உயிர்களை விட இலாபங்களுக்கும் மற்றும் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த தேவைகளை விட எதிர்விரோத போட்டி தேசிய-அரசுகளின் நலன்களுக்குமே முன்னுரிமை அளிக்கிறது.

தொழில்துறைமயப்பட்ட உலகில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் நடைமுறையளவில் முழு விநியோகத்தையும் பதுக்கி வைத்துள்ளதால், உலகளவில், மனிதகுலத்தின் பாரிய பெரும்பான்மையினருக்கு இதுவரையில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. ஆபிரிக்க மக்களில் வெறும் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் விகிதங்களும் அப்படியொன்றும் சிறப்பாக இல்லை. ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பரந்த சமூக துருவமுனைப்பாடு நிலவுவதால், இது செல்வந்தர்களும் உயர்மட்ட நடுத்தர வர்க்கமும் தடுப்பூசியை எளிதாக பெற முடிகிறது என்பதையும், ஆனால் ஏழைகளுக்கு நடைமுறையளவில் எதுவும் கிடைப்பதில்லை என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.

இந்த உண்மை பணக்கார நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்காவில், நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் சரி கிராமப்புற தனிமையில் வசிப்பவர்களுக்கும் சரி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வறுமை ஒரு பெரிய தடையாக உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின்படி, தடுப்பூசி இட்டுக் கொள்ளாத அமெரிக்கர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் ஆண்டுக்கு 50,000 டாலருக்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களில் வாழ்வதாக சமீபத்தில் ஒரு ஆய்வு கண்டறிந்தது. போதுமான தடுப்பூசி வினியோகம் இருந்தும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததைக் குறித்து விவரிக்கையில், “அரசியலை விட வேலை நேரங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவையே ஏமாற்றுவதற்கான மிகப்பெரிய காரணிகளாக இருக்கக்கூடும்' என்று அந்த ஆய்வை எழுதியவர்கள் குறிப்பிட்டனர்.

தொழிலாள வர்க்கத்தின் கொள்கை ஆணித்தரமான அரசியலையும் பொறுமையான விளக்கத்தையும் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய பாதுகாப்பு குழுக்களை அமைப்பதன் மூலம், ஒரு வர்க்க நனவுபூர்வ தொழிலாளர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது, தொழிலாளர்களுக்கு, குறிப்பாக சுகாதார கவனிப்பில் இருக்கும் தொழிலாளர்கள், தடுப்பூசியின் அவசியத்தைக் குறித்த அரசியல் பிரச்சாரத்தில் இருப்பவர்களுக்கு உதவும் என்பதோடு, இந்த பெருந்தொற்றின் உயிராபத்தான ஆபத்திலிருந்து அவர்கள் வர்க்கத்தைக் காப்பாற்றும்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் வெறுமனே ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல. அதற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. பொது சுகாதார நலன்களின் அடிப்படையில் இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுக்க ஓர் உலகளாவிய திட்டமும் உலகளாவிய ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது, இது ஒரு சர்வதேச புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலமும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமும் மட்டுமே சாத்தியமாகும்.

Loading