இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜூலை 14 அன்று நடக்கவிருந்த, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணையை அக்டோபர் 27 வரை ஹட்டன் நீதவான் ஒத்திவைத்தார். இந்த வழக்கு முதலில் மே 28 நடக்கவிருந்த போதிலும் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தாமதமானது.
24 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இரண்டு இளைஞர்களுக்கும் எதிரான வழக்கு கம்பனியினாலும் பொலிசாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா) உடந்தையுடன் சோடிக்கப்பட்ட வழக்காகும். தோட்டத்தின் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை தொழிலாளர்கள் உடல் ரீதியாக தாக்கியதாக தோட்ட நிர்வாகமு பொலிசும் பொய்யாகக் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
ஓல்டன் தோட்டம் மத்திய இலங்கையில் மஸ்கெலியாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹேலீஸ் நிறுவனத்தின் கீழ் உள்ள ஹொரன தோட்டக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
விசாரணையை மீண்டும் ஒத்திவைக்கக் கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியே காரணம் காட்டப்படுகிறது. எவ்வாறாயினும், அதிகாரிகள் முன்கூட்டியே தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால், நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணைக்கு வரமாட்டாது என்பதைக் அறிந்துகொள்வதற்கு மட்டும் தொழிலாளர்கள் ஜன நெருக்கடியான பஸ்களில் 12 கிலோமீட்டர் பிரயாணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சோடிக்கப்பட்ட வழக்கில், மார்ச் 10 அன்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் தொழிலாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், பொலிசார் இன்னமும் குற்றப்பத்திரிகைகளை முன்வைக்கவில்லை என்று தொழிலாளர்களை பாதுகாக்கும் வழக்கறிஞர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.
குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதில் பொலிசார் காட்டும் தாமதம், குற்றச்சாட்டுகளின் புனையப்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுவதோடு, இது தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்மான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். விசாரணையை எதிர்கொள்ளும் 26 பேர் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். பிணை நிபந்தனைகளின் கீழ் அவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒரு பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பெப்ரவரி 2 அன்று, சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் போராட ஆரம்பித்ததை அடுத்தே இந்த வேட்டையாடல் நடவடிக்கை தொடங்கியது. வறிய மட்டத்திலான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைகைக்காக போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்வராத சூழலில், தொழிலாளர்களின் பரவலான கோபத்தையும் விரக்தியையும் தணிப்பதற்காக, இ.தொ.கா. 1,000 ரூபாய் (5 அமெரிக்க டாலர்) நாட் சம்பளம் கோரி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது, இதில் ஏறக்குறைய 150,000 தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
தோட்ட நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல்களை எதிர்த்து ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மேலும் 47 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெப்ரவரி 17 அன்று, தொழிலாளர்கள் இந்த துன்புறுத்தலுக்கு எதிராக தோட்ட முகாமையாளரின் வீட்டிற்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, பொலிசும் ஹொரன பெருந்தோட்டக் கம்பனியும், தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரை தாக்கியதாக குற்றம் சாட்டின.
மார்ச் மாதத்தில், நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் 24 தொழிலாளர்கள் உட்பட 38 ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள், அவர்கள் முகாமையாளரை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் இல்லாமல், மேன் முறையீடு செய்வதற்கு உரிமை இல்லாமல், தோட்ட நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். வருமானம் இல்லாத இந்த தொழிலாளர்கள், ஓல்டன் தோட்ட நிர்வாகத்தால் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய தோட்டங்களில் வேலை தேடுவதில் இருந்தும் தடுக்கப்படுகின்றனர்.
கடந்த மே மாதம், இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 12 பேருக்கு ஓல்டனில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லக்கம் தோட்டத்தில் தற்காலிகமாக வேலை வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், ஜூன் மாதத்தில், அவர்கள் லக்கம் தோட்டத்திற்கு பயணித்த வேனை மஸ்கெலியா பொலிசார் தடுத்து நிறுத்தியதோடு கொவிட்-19 சுகாதார விதிமுறைகளால் வாகனம் முன்செல்ல முடியாது என்று பொலிசார் தொழிலாளர்களுக்குத் தெரிவித்தனர். பொலிசார் வான் சாரதியின் சாரதி உரிமை பத்திரத்தையும் அபகரித்துக்கொண்டனர். அதில் பெரும்பாண்மையோர் பெண் தொழிலாளர்களே இருந்தனர். பொலிசார் லக்கம் தோட்டத்திற்கு மீதமுள்ள 10 கிலோமீட்டர் தூரத்தையும் நடந்து செல்லுமாறு பணித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் ஓல்டன் தோட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டிருப்பதாக தாம் நம்புவதாக ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். “நாங்கள் ஓல்டன் தோட்டத்திலிருந்து புறப்படும்போது, ஒரு மேற்பார்வையாளர் எங்கள் வாகனத்தின் எண்ணைக் குறிப்பதைக் கண்டோம். அவர் பொலிசாருக்கு தகவல்களை வழங்கினார் என்பது எனக்குத் தெரியும். பொலிஸ் நிலையத்திற்கு வெளியே இருந்த பொலிஸாரால், நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போது, ஓல்டன் தோட்ட உதவி முகாமையாளரை பொலிஸ் நிலையத்தின் உள்ளே பார்த்தோம்.”
காலை 8.30 மணியளவில் பொலிசார் வாகனத்தை நிறுத்தியதாகவும், அதன் பின்னர் லக்கம் தோட்டத்திற்கு நடந்து செல்ல 11 மணியாகியதாகவும் அவர் விளக்கினார். 'இதன் பின்னர் 5 கிலோ தேயிலை கொழுந்து மட்டுமே பறிக்க முடிந்தது, அன்றைய தினம் 200 ரூபாய் [1 அமெரிக்க டாலர்] மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு லக்கம் தோட்டத்தின் உரிமையாளர் எங்களுக்கு மேலும் வேலை கொடுக்க மறுத்துவிட்டார்,” என அவர் விளக்கினார். தோட்ட நிர்வாகமும் பொலிசாரும் தங்களை பயங்கரவாதிகளைப் போலவே நடத்துகின்றன, தங்களைப் பட்டினி போட முயற்சிக்கின்றன, என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆத்திரமூட்டும் வகையில் ஓல்டன் தோட்டத்தை பார்வையிட்டார், அதன் கலாச்சார மண்டபத்தை தோட்டத்திற்குள் ஒரு பொலிஸ் பொலிஸ் நிலையத்தை அமைக்க பயன்படுத்த முயன்றார். இதை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்த்தபோது, தோட்டத்தின் எல்லையில் உள்ள சிறிய நகரத்தில் பொலிஸ் நிலையத்தை நிறுவ பொலிசார் முடிவு செய்ததாக அறியப்படுகின்றது.
வறுமை மட்டத்திலான சம்பளம், வேலை சுமை அதிகரிப்பு மற்றும் மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளுக்கும் எதிராக தொழிலாளர் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பாகமே, தோட்ட நிர்வாகமும் பொலிசும் இ.தொ,கா.வின் உதவியுடன், ஓல்டன் தோட்டத்தில் முன்னெடுத்து வரும் வேட்டையாடலாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாட்டை தொழிற்சங்கங்கள் இழக்கக்கூடும் என்று கவலை கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, 900 ரூபாய் அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவு உட்பட 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமன், இது தொழிலாளர்களின் வெற்றி என்று பொய்யாகக் கூறிக்கொண்டார். இ.தொ.கா. இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகும், அதில் தொண்டமான தோட்ட உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சராவார்.
சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தோட்டக் கம்பனிகள், அதற்கு பதிலாக வேலைச் சுமையை அதிகரித்துள்ளன. சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிப்பதுடன் சம்பளத்தை வெட்டிக் குறைக்கின்றன. ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய தினசரி தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு 18 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளி அந்த இலக்கை அடையத் தவறினால், அவனுக்கு அல்லது அவளுக்கு அந்த நாளில் 500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏப்ரல் முதல், அதிகரித்த வேலைச்சுமை மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக பெருந்தோட்டங்களில் ஒன்றன்பின் ஒன்றாக போராட்டங்கள் வெடித்தன. நுவரெலியா மாவட்டத்தில் டிரேடன் தோட்டம், கொட்டியாகலலை, பொகவந்தலாவா, மஸ்கெலியா, லங்கா மற்றும் கிளனுகி தோட்டங்களில் தொழிலாளர்கள் சமீபத்திய வாரங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
தோட்ட ஊதியப் பிரச்சினையை தான் தீர்த்ததாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜனாதிபதி இராஜபக்ஷ, ஊதியக் குறைப்பு மற்றும் அதிகரித்த வேலைச்சுமை குறித்து முற்றிலும் மௌனமாக இருக்கிறார். இ,தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய அனைத்து பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும், தோட்டக் கம்பனிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன, தொழிலாளர்களின் போராட்டங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் போதுமான ஊதியத்தை வெல்லவும், அவர்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னெடுக்க வேண்டிய ஒருங்கிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில். போராடுவதன் ஊடாக மட்டுமே, அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் அடக்குமுறையை தோற்கடிக்க முடியும்.
ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (AWAC) இந்த ஐக்கியத்துக்காகப் போராடுவதுடன் 24 ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கும் எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் கோருகிறது. ஓல்டன் தோட்டத்தில் தற்து முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறை முடிவுக்கு வர வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சினதும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவினதும் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து கடிதங்களையும் இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள்: wswscmb@sltnet.lk