இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் தேசிய பாதுகாப்புச்சபையில், பெருந்தோட்டங்களில் உள்ள “பாதுகாப்பு பிரச்சினைகள்” குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று முன்னாள் ரியர் அட்மிரலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர கடந்த வார இறுதியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். தோட்டங்களில் தொழிலாளர்கள் 'வன்முறையை' கட்டவிழ்த்து விடுவதாக தோட்ட உரிமையாளர்களும் பொலிசாரும் கூறிக்கொள்வதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்து இருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்புச் சபையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முக்கிய அமைச்சர்கள், ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினதும் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பிற முன்னணி அரச அதிகாரிகளும் உள்ளனர். தோட்டப்புறத்தில் வன்முறைகள் என்று கூறப்படுவதை பற்றி பாதுகாப்புச்சபை முதன்மையானதாக கலந்துரையாடுவது, சம்பள அதிகரிப்பு, சமூக நிலைமைகளில் முன்னேற்றம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நீண்ட மற்றும் கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான கடுமையான அச்சுறுத்தலாகும்.
மார்ச் 3 அன்று, தோட்டத் தொழிலாளர்களின் சரீர தாக்குதல் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக, ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சியும் கொடுக்குமாறு கோரி நூற்றுக்கணக்கான தோட்ட முகாமையாளர்கள் ஹட்டன் நகரில் ஒரு ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இலங்கை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே, “பாதுகாப்பு விவகாரங்கள்” குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் ஒரு கூட்டதை நடத்த தனது அமைப்பு விரும்புகிறது என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 'போதுமான பாதுகாப்பை வழங்கவும், முடிந்தால், தோட்டங்களில் ரோந்து செல்லவும்' அவர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொழிலாளர்கள் மத்தியில் அதிக அமைதியின்மையை உருவாக்கக் கூடிய காரணத்தால், அரசாங்கம் முகாமையாளர்களுக்கு ஆயுதங்களை வழங்காது என்று வீரசேகர சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறினார். எவ்வாறாயினும், பாதுகாப்புச் சபையின் கூட்டம், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் [ஆர்.பி.சி.] கவலைகளை கவனத்தில் 'எடுத்துக் கொள்ளும்' என்றும் 'தோட்ட நிர்வாகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும்' என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மஸ்கெலியாவில் ஓல்டன் தேயிலை தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணனுக்கு எதிரான வன்முறை என்று கூறப்படுவதற்கு பிரதிபலிக்கும் விதமாகவே தோட்ட உரிமையாளர்கள் மார்ச் 3 அன்று போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாராயணனை தொழிலாளர்கள் குழுவினர் உடல் ரீதியாக தாக்கியதாக தோட்ட உரிமையாளர்கள் கூறினர். மேலும் இரண்டு தோட்டங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தோட்ட உரிமையாளர் சங்கம் குற்றம் சாட்டியது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அதிகாரிகளின் நேரடி உதவியுடன், 10 ஓல்டன் தொழிலாளர்களை பொலிஸ் கைது செய்துள்ளது. பெப்ரவரி 23 அன்று எட்டு பேரும் மார்ச் 1 அன்று மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இ.தொ.கா., இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகும். இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார். இ.தொ.கா. மற்றும் ஏனைய அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்துடனும் பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பொலிசுடனும் ஒத்துழைக்கும் நீண்ட மற்றும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளன.
மார்ச் 3, கைது செய்யப்பட்ட 10 ஓல்டன் தொழிலாளர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, தோட்ட உரிமையாளர்களின் சட்டத்தரணி, அவர்கள் மீது வன்முறை குற்றச்சாட்டைச் சுமத்தினார். “பயங்கரவாதம் இப்படித்தான் தலைதூக்குகிறது” என்று அவர் அறிவித்தார். இந்த மூர்க்கத்தனமான கூற்றை நிராகரித்த தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர்கள், இது கடின உழைப்பாளிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அவமதிப்பாகும் என்று விவரித்தனர்.
பிணை வழங்க மறுத்த நீதவான், கைது செய்யப்பட்டவர்களை மார்ச் 10 வரை கண்டி சிறையில் அடைத்தார். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் கம்பனியும் பொலிசும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான தனது துரோகத்தை தீவிரமாக்கிய இ.தொ.கா. மேலும் 16 தொழிலாளர்களை ஹட்டன் நீதவான் முன் கொண்டுவருவதாகக் கூறியுள்ளது. இ.தொ.கா. சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை, தொண்டமானின் அறிவுறுத்தலின் பேரில், இந்த தொழிலாளர்களை மார்ச் 10 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவார், என்று மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார். குறித்த ஒன்றியமானது தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக செயல்படும் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஆகும்.
இந்த புதிய 16 'சந்தேக நபர்களும்' சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஓல்டன் தொழிலாளர்களும், தோட்டத்தில் பெப்ரவரி 2 அன்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக தோட்டக் கம்பனியும் பொலிசும் கூட்டாக தீட்டிய சதித்திட்டத்திற்கு பலியானவர்கள் ஆவர். ஓல்டன் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், முதல் நாள், உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை தோட்டத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதைத் தடுத்தனர். இதன் போது ஒரு முகாமையாளர் ஓல்டன் தொழிலாளர்களை அடித்து, ஒரு பெண் தொழிலாளியை காயப்படுத்தினார். நீண்டகால கோரிக்கையான 1,000 ரூபாய் (5.12 டொலர்) தினசரி அடிப்படை ஊதியம் கோரி, இ.தொ.கா. பெப்ரவரி 5 அன்று தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் தேசியளவிலான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ஓல்டன் வேலைநிறுத்தம் தொடங்கியது.
தொழிற்சங்கத்தின் தேசிய வேலைநிறுத்தம், வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் கோபத்தை கலைக்கும் முயற்சியாகும். 1,000 ரூபாய் நாள் சம்பளக் கோரிக்கை, 2015 இல் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே முதலில் எழுப்பப்பட்டது. ஆனால் இ.தொ.கா.வும் ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களும், இந்த விவகாரத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுத்து வந்துள்ளன.
பெப்ரவரி 17, ஓல்டன் தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தை குழப்பும் முகாமையாளரின் நடவடிக்கைக்கு எதிராக அவரது பங்களாவுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையே தோட்டத் தொழிலாளர்கள் 'வன்முறையில்' ஈடுபட்டதாக கம்பனி குற்றம் சாட்டுகிறது.
மார்ச் 1 அன்று, தோட்டத் தொழிலாளர்களால் வெகுஜன போராட்டங்கள் வெடிக்கக் கூடும் –ஏனைய தொழிலாள வர்க்கப் பிரிவினர் வேலை நிறுத்தம் செய்யக் கூடும்- என பீதியடைந்த இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. அதாவது 900 ரூபாய் அடிப்படை ஊதியமும் 100 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவும் ஆகும்.
எவ்வாறாயினும், இந்த அற்ப அதிகரிப்புக்கு கூட பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, குறைந்தபட்ச வருமானத்திற்கு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை வழங்குவதற்கு உத்தரவாதமளிக்கும் உட்பிரிவுகள் உட்பட, முந்தைய கூட்டு ஒப்பந்தங்களை இரத்து செய்வதாக கம்பனிகள் அச்சுறுத்தியுள்ளன.
பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதால் தங்களால் ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்று பெருந்தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன. சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கப்பதோடு ஏனைய செலவுகளை வெட்டிக் குறைக்க வேண்டும் ஏன அவை வலியுறுத்துகின்றன.
“பெருந்தோட்ட வன்முறை” என்ற குற்றச்சாட்டுகளதும் மற்றும் இதை ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முடிவினதும் பின்னணி இதுவே ஆகும். தோட்டத் தொழிலாளர்களின் அமைதியின்மையை நசுக்குவதற்கும், “உற்பத்தி செய்யாத” தோட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட தோட்ட உரிமையாளர்களின் கோரிக்கைகளை சுமத்துவதற்கும், இன்னும் கூடுதலான அடக்குமுறை நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படும்.
சமீபத்திய நாட்களில், ஒரு பொலிஸ் ஜீப் ஓல்டன் தோட்டத்தில் ரோந்து சென்று வருகிறது. இது தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின்றி, வன்முறை நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கான முன்னறிவிப்பாகும்.
இந்த முன்நகர்வுகள் சோசலிச சமத்துவக் கட்சி மார்ச் 1 வெளியிட்ட அறிக்கையில் விடுத்த எச்சரிக்கைகளை நிரூபிக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்! கம்பனி-பொலிஸ் சதியில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாத்திடு!
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரவும், அனைத்து தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான வர்க்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடவும், தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, சுயாதீனமாக தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த அறிக்கை வலியுறுத்தியது.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இப்போது கட்டவிழ்த்து விடப்படுகின்ற முதலாளிமார்-அரச மற்றும் தொழிற்சங்க சதி, முழு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாகும். இது, கொவிட்-19 தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள கூர்மையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் சிக்கன தாக்குதல்களுக்கு எதிரான சகல எதிர்ப்பையும் நசுக்க இராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிக்கும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.
முதலாளித்துவ வர்க்கத்திற்கு இலாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியையும், அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடனின் சுமையையும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்துவதாகவும் உறுதியளித்தே ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த திட்ட நிரலை முன்னெடுப்பதற்காக, அது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத இன மற்றும் மத பதட்டங்களைத் தூண்டிவிடுவதுடன் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்கும் தயாரிக்கிறது.
சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே இந்த தாக்குதலை தோற்கடிக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்குக்காகவே போராடுகிறது.
மேலும் படிக்க
- சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்! கம்பனி-பொலிஸ் சதியில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாத்திடு!
- இலங்கையில் தொழில்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
- இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகளதும் தொழிற்சங்கங்களதும் சம்பளப் பிரேரணையை நிராகரி!உயர்ந்த ஊதியம் மற்றும் தொழில் உரிமைகளை வெல்ல சோசலிச முன்னோக்குக்காகப் போராடு! நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!