மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஈக்குவடோர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை நீக்கியது. இந்த நடவடிக்கை விக்கிலீக்ஸ் நிறுவனரின் ஜனநாயக உரிமைகள் மீதான மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதல் ஆகும். இது, உளவுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான தயாரிப்புடன் செய்யப்பட்டதாகும். அவர் தற்போது நிலுவையில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கிற்காக இங்கிலாந்தின் அதிகபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சர்ச்சைக்குரிய நிர்வாக விஷயங்களுக்காக குடியுரிமையை இரத்து செய்யும் முடிவை பிச்சிஞ்சா (Pichincha) நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றத்தில், ஒரு நீதிபதி ஈக்குவடோர் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுக்களை ஆதரித்தார். அசாஞ்சின் குடியுரிமை கடிதத்தில் முரண்பாடுகள், வெவ்வேறு கையொப்பங்கள் மற்றும் மாற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளதுடன், மேலும் கட்டணம் செலுத்தப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அசாஞ்சின் வழக்கறிஞரான கார்லோஸ் போவேடா, 'முற்றிலும் அரசியல்' முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். இது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் வாதிட்டார். அவர் கருத்து தெரிவிக்கையில், 'குடியுரிமைக்கான முக்கியத்துவத்தை விட, இது உரிமைகளை மதிப்பது மற்றும் குடியுரிமையை திரும்பப் பெறுவதில் உள்ள உரிய நடைமுறையைப் பின்பற்றுவது தொடர்பானது' என்றார்.
இந்த வழக்கில் அசாஞ் ஆஜராக முடியவில்லை. அதற்கு தயாரிக்க தேவையான பத்திரங்கள் கொடுக்கப்படவுமில்லை. போவேடா, 'ஜூலியன் சட்டபூர்வமாக விசாரணைக்கு வரவழைக்கப்படவில்லை என்று முதல் விசாரணையிலிருந்தே நாங்கள் கூறினோம். ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவருடைய மொழி ஆங்கிலம் மற்றும் அது அனைத்து ஆவணங்களிலும் மதிக்கப்படவில்லை' என விளக்கினார்.
அவர் தனது வாடிக்கையாளரை இணைய தொடர்பு மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க கேட்டபோது, ஈக்குவடோர் அதிகாரிகள் ஒரு URL இனை அனுப்பியதால், கணினி மற்றும் இணைய அணுகல் மறுக்கப்பட்ட அசாஞ்சுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.
ஆகஸ்ட் 2012 இல் அவருக்கு புகலிடம் வழங்கிய பின்னர், ஈக்குவடோர் டிசம்பர் 2017 இல் அசாஞ்சிற்கு குடியுரிமையை வழங்கியது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அசாஞ்ச் ஈக்குவடோருக்கு பாதுகாப்பாக செல்வதற்காக அனுமதிக்குமாறு ரஃபைல் கொர்ரியாவின் அரசாங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, ஈக்குவடோரின் தூதரகத்தின் இராஜதந்திர அந்தஸ்தை இரத்து செய்து கட்டிடத்தை முற்றுகையிடும் என்று லண்டன் அச்சுறுத்தியது. அப்போதிருந்து, அசாஞ்சே தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையால் கண்டிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்டார்.
இந்த நேரத்தில், ஈக்குவடோர் அரசாங்கம் அமெரிக்காவின் கணிசமான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டது. லெனின் மோரேனோவின் 2017 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வலதுசாரிப்பக்கம் திரும்பியதன் மூலம், தூதரகத்தில் அசாஞ்சின் நிலைமை மேலும் மேலும் பலமற்றதாகிவிட்டது.
மார்ச் 27, 2018 அன்று, அமெரிக்க தெற்கு கட்டளையின் ஒரு குழு ஈக்குவடோர் சென்றது. இந்த விவாதங்களின் நோக்கம் 'பாதுகாப்பு ஒத்துழைப்பு' மற்றும் 'கருத்துக்களை பரிமாறிக்கொள்வது மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கான அமெரிக்க உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துதல்' என்று கூறப்பட்டது.
ஒரு நாள் கழித்து, ஈக்குவடோர் அதிகாரிகள் அசாஞ்ச் மீது தகவல் தொடர்பு முடக்கத்தை விதித்து, வெளி உலகத்துடனான இணையம் அல்லது தொலைபேசி தொடர்புகளைத் தடுத்து, அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரைப் பார்க்கவிடாமல் தடுத்தனர்.
அவரது தொலைத்தொடர்புகள் அக்டோபர் 2018 இல் கடுமையான, ஜனநாயக விரோத நிபந்தனைகளின் கீழ் ஓரளவு மீட்கப்பட்டன. 'மற்ற அரசுகளின் உள் விவகாரங்களில் அரசியல் மற்றும் தலையீடாகக் கருதப்படும் அல்லது வேறு எந்த அரசுகளுடனும் ஈக்குவடோரின் நல்ல உறவுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகள் 'மீதான' தடையை அசாஞ் கவனமாக கடைபிடிக்க வேண்டும். அவரது பார்வையாளர்கள் ஈக்குவடோர் அதிகாரிகளுக்கு அடையாள விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களை கையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நடைமுறையானது அசாஞ்சின் வழக்கறிஞர்கள் உட்பட அவரது நண்பர்களை அமெரிக்க பின்னணியுடன் கண்காணிக்க உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டது.
அதே மாதத்தில், அமெரிக்க காங்கிரஸ் வெளியுறவு விவகாரக் குழு மோரேனோவுக்கு, 'ஜூலியன் அசாஞ் லண்டனில் உள்ள உங்கள் தூதரகத்தில் தொடர்ந்து இருப்பது மற்றும் கடந்த ஆண்டு ஈக்குவடோர் குடியுரிமை பெற்றதில் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்' என ஒரு கடிதத்தை அனுப்பியது.
'பொருளாதார ஒத்துழைப்பு' முதல் 'ஈக்குவடோருக்குக்கான சர்வதேச மேம்பாட்டு பணிக்கான ஒரு அமெரிக்க அமைப்பு திரும்புவது வரையிலான' பல்வேறு பிரச்சனைகளில் அமெரிக்கா உங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில் முன்னேற அசாஞ்சை கைவிடுவது அவசியம் என்று கடிதம் தெளிவுபடுத்தியது.
மார்ச் 2019 இல், ஆழ்ந்த நிதி நெருக்கடி மற்றும் ஈக்குவடோரின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் மோரேனோ சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 4.2 பில்லியன் டாலர் கடனைப் பெற்றார். முன்னாள் ஈக்குவடோர் வெளியுறவு மந்திரி ரிக்கார்டோ பாட்டினோ பின்னர் கருத்து தெரிவிக்கையில், “அசாஞ்சை கைது செய்வது சர்வதேச நாணய நிதியத்துடனான லெனின் மோரேனோவின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்” என்றார். இந்த மதிப்பீட்டை அமெரிக்காவின் கடற்படை அகாடமியின் ஜான் போல்கா-ஹெசிமோவிச் எதிரொலித்தார். அவர் 'தொழில்நுட்ப உதவி, சர்வதேச கடன்கள் மற்றும் அமெரிக்காவுடன் அதிக பாதுகாப்பு மற்றும் வணிக ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான மொரேனோவின் திறனை அசாஞ் தடைசெய்கின்றார்' என விபரித்தார்.
ஏப்ரல் 2019 இல், ஈக்வடோர் அதிகாரிகள், பிரிட்டிஷ் காவல்துறையை லண்டனில் உள்ள தூதரகத்திற்குள் நுழைந்து அசாஞ்சைக் கைது செய்ய அனுமதித்தனர், அவருடைய புகலிட கோரிக்கையை இரத்து செய்து அவரது குடியுரிமையை நிறுத்தினர். முன்னாள் வெளியுறவு அலுவலக மந்திரி சேர் ஆலன் டங்கனின் பின்னர் வெளியிடப்பட்ட நாட்குறிப்பில், சர்வதேச சட்டத்தை மதிக்காதிருப்பது 'பல மாதங்களான பொறுமையான பேச்சுவார்த்தைகளின்' விளைவாகும் மற்றும் 'வெளியுறவு அலுவலகத்தின் உயர்மட்டத்தின் செயல்பாட்டு அறையிலிருந்து' கைதுசெய்யப்பட்டதை நேரடியாகப் பார்த்தனர் எனக் குறிப்பிட்டார்.
இரண்டு வருட பரிகாசமான சட்டவிவாதங்கள் ஊடாக இழுத்துச் செல்லப்பட்ட அசாஞ், இந்த ஜனவரி மாதம் தனது மனநலம் காரணமாக “அழுத்தத்திற்குள்” இருக்கலாம் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதைத் நீதிபதி தடுத்தபோது ஒரு போலி அவகாசம் வழங்கப்பட்டது. இது அசாஞ்சினை பாதுகாப்பினை உறுதி செய்வதன் அடிப்படையில் அமெரிக்காவின் மேல்முறையீட்டுக்கு கதவை அகலமாக திறந்து வைத்தது. இதை உயர் நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. நாடுகடத்துவதது தொடர்பான நிபுணர் நிக் வாமோஸ் மேல்முறையீடு வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார். குடியுரிமை இரத்து செய்யப்பட்டதை உறுதி செய்வதன் மூலம், ஈக்குவடோர் மற்றொரு சாத்தியமான சிக்கலை நீக்கியுள்ளது.
அசாஞ்சின் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளின் ஜனநாயக பாசாங்குகளை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச சட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக உரிமையையும், கொள்கையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் இலக்கைப் பின்தொடர்வதில் சாத்தியமான ஒவ்வொரு விதமான அச்சுறுத்தல் மற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு எதிராக எவ்விதமான எதிர்ப்பும் இல்லை. சுவீடனின் போலியாக உருவாக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை விசாரணை மற்றும் பிரிட்டன் ஒரு சிறைக் காவலராக பணியாற்றுவது, ஆஸ்திரேலியா தனது சொந்த குடிமகனை கைவிடுவது மற்றும் இப்போது ஈக்குவடோவர் புகலிடம் மற்றும் குடியுரிமையை திரும்பப் பெறுவது வரை அமெரிக்காவிற்கு உதவ அரசாங்கங்கள் அணிவகுத்துள்ளன.
அடுத்தடுத்து பதவிக்குவந்த அமெரிக்க அரசாங்கங்களும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரேமாதிரியான ஆதரவை நம்ப முடிந்தது. ஒபாமாவின் கீழ் தொடங்கி, ட்ரம்பால் அதிகரித்த அசாஞ் மீதான வேட்டை பைடென் நிர்வாகத்தால் தடையின்றி தொடர்கிறது. இது இந்த திங்கட்கிழமை சர்வதேச மன்னிப்புசபை தாமதமாக ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
நீண்டகால விக்கிலீக்ஸ் ஆதரவாளரான ஸ்டெஃபானியா மௌரிட்சியுடன் பேசுகையில், சர்வதேச மன்னிப்புசபையின் ஜூலியா ஹால் பின்வருமாறு விளக்கினார், “ஜனவரி மாதத்தில் பைடென் நிர்வாகம் முதன்முதலில் பொறுப்பேற்றபோது எங்களுக்கு சில நம்பிக்கை இருந்தது. மேலும் இந்த வழக்கு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நாங்கள் உண்மையில் நினைத்தோம் ...பின்னர் மேல்முறையீட்டைப் பார்த்தோம். இது மிகவும் ஏமாற்றமளித்தது. ஏனென்றால் அங்கு ஒரு பாதை இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நிர்வாகம் இதுவரை அதுபற்றி சரியாக எதையும் வெளிப்படுத்தாத காரணங்களினால், அவர்கள் முன்னையதையே தொடர முடிவு செய்துள்ளனர் என்பது தெரிகின்றது.
உண்மையில், அமெரிக்கா அதன் காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளது: அசாஞ்சின் அழிவு ஏகாதிபத்திய குற்றங்களை அம்பலப்படுத்தி எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையும், முன்னுதாரணமுமாகும்.
அசாஞ்சின் நிலைப்பாட்டின் தீவிர ஆபத்தை எடுத்துக்காட்டி, அசாஞ் நன்றாக நடத்தப்படுவார் என்ற அமெரிக்காவின் வாக்குறுதிகளை பற்றி ஹால் பின்வருமாறு கூறினார்: நீங்கள் அவர்களின் உத்தரவாதங்களைப் பார்க்கும்போது, அவரை அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் வைத்திருப்பதற்கான அல்லது அவர் மீதான சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் உரிமையை அமெரிக்க அரசாங்கம் வைத்திருப்பதைக் காணும்போது, சித்திரவதை முழுமையாக தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டில் நீங்கள் இருக்கவில்லை'.
அவர் தொடர்ந்தார், 'மற்ற அரசாங்கங்கள் அவ்வாறான உத்தரவாதங்களை வழங்குவதை இலகுவாக்குகின்றது. ஆனால் இது உண்மையில் செய்வது சித்திரவதை மீதான சர்வதேச தடையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்.'
இந்த நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்னவென்றால், அசாஞ்சின் சுதந்திரத்தை வெல்ல எந்த அரசாங்கத்திலும் அல்லது அரசு நிறுவனத்திலும் நம்பிக்கை வைக்க முடியாது. இந்தப் பணியானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அதனது வளர்ந்துவரும் போராட்டம் மட்டுமே அசாஞ்சின் பாதுகாப்பு மற்றும் பொதுவாக ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க முடியும்.