மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்கா முழுவதும் பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறப்பதற்கான முனைப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு பற்றிய அனைத்து விஞ்ஞான தரவுகளும் இந்த கொள்கை கட்டுப்படுத்த முடியாத பேரழிவாக இருக்கும் என்பதை நிரூபிக்கின்றன. இது, சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவான குழந்தைகளிடையே நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புக்களின் கொடூரமான எழுச்சியை ஆழப்படுத்தும் என்பதோடு, நாடு முழுவதும் பரவலான சமூகப் பரவலை மேலும் அதிகரிக்கும் என்ற நிலையில், இது அனைத்து வயதினர் மத்தியிலும் ஏராளமான இறப்புக்களையும் விளைவிக்கும்.
புளோரிடா, டெக்சாஸ் மற்றும் குடியரசுக் கட்சி தலைமையிலான ஏனைய மாநிலங்கள் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கான எந்தவித உத்தரவுகளையும் தடை செய்வதுடன், அதற்கு இணங்காத மாவட்டங்களுக்கு நிதி வழங்கலை குறைக்கின்றன என்பதால், மீண்டும் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில் முகக்கவசம் அணிவது தேவையா இல்லையா என்பதுதான் உத்தியோகபூர்வ விவாதத்தின் மையமாக உள்ளது.
ஆனால் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தாலும் அணியாவிட்டாலும், மிகுந்த பரவும் தன்மையுள்ள டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் உடனடியாக பரவும். கடந்த கோடையில், 36,000 அமெரிக்க பள்ளிகள் பழமையான காற்றோட்ட அமைப்புக்களைக் கொண்டிருந்தன, அவற்றில் பெரும்பாலானவை கடந்த ஆண்டில் புதுப்பிக்கப்படவில்லை. கோவிட்-19 தொற்றுநோய் குறித்து மட்டுமல்லாமல், தொற்றும் தன்மையுள்ள அனைத்து நோய்களின் தொகுப்பைப் பொறுத்த வரை, பள்ளிகள் பொதுவாக நோய் பரிமாற்ற சங்கிலியின் மிக முக்கியமான இணைப்புக்களில் ஒன்றாக நீண்டகாலமாக அடையாளம் காணப்படுகின்றன.
தற்போது, நாட்டின் கிட்டத்தட்ட 13,800 பள்ளி மாவட்டங்கள் அனைத்தும் வரவிருக்கும் வாரங்களில் நேரடி கற்பித்தலுக்கு பள்ளிகளை முழுமையாக மீளத்திறக்க திட்டமிட்டுள்ளன, பெரும்பாலான மாவட்டங்களில் மிகவும் ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தொலைதூரக் கற்றலை வழங்குகிறார்கள் அல்லது இல்லை. இதன் பொருள் தோராயமாக 40 மில்லியன் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் 25, 30, 40 அல்லது அதற்கு மேற்பட்ட சகாக்களுடன் ஒரே காற்றை சுவாசித்துக் கொண்டு காற்றுவழி கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகிறார்கள்.
ஒரு சமுதாயத்திற்கு அதன் குழந்தைகளை பாதுகாப்பதை விட பெரிய பொறுப்பு எதுவும் கிடையாது, ஆனால் முதலாளித்துவ அமைப்பின் கீழ் அவர்களின் உயிர்களும் ஆரோக்கியமும் அனைத்து இடங்களிலும் தியாகம் செய்யப்படுகின்றன. தற்போது அமெரிக்கா முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெரும் ஆபத்திற்குட்படுத்தும் கையறு நிலைக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது கவலையளிப்பதாக உள்ளது.
குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை மிகைப்படுத்த முடியாது. கடந்த வாரத்தில், அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், குழந்தை நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிப்புக்களும் கடுமையாக அதிகரித்தமையால் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து புள்ளிவிபரங்கள் உச்சபட்சத்தை எட்டின. குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலை (American Academy of Pediatrics) கடந்த வாரம் 93,824 குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டிருப்பதை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளதாக அறிவித்தது. வைரஸ் பாதிப்புடன் ஒவ்வொரு நாளும் சராசரியாக 225 குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள், இது கடந்த வாரத்தை விட 27 சதவீதம் அதிகமாகும். மொத்தமாக, கடந்த வாரம் 813,000 அமெரிக்கர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டது, மேலும் தற்போது நாளாந்தம் அண்ணளவாக 10,000 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள், இது செப்டம்பர் தொடக்கத்தில் தினமும் 30,000 க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கணிப்புக்களையும் உருவாக்குகிறது.
இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் (Office of National Statistics-ONS) மிக சமீபத்திய தரவு, 2 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 10 சதவீதம் பேரும், 12 முதல் 16 வயதுகுட்பட்டவர்களில் 13 சதவீதம் பேரும், பல அங்க அமைப்புக்களை பலவீனப்படுத்தி பாதிப்படைய வைக்கும் அறிகுறிகள் உட்பட, கோவிட்-19 தொற்று ஏற்பட்டு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் கூட குறைந்தது ஒரு நீடித்த அறிகுறியை கொண்டுள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது. உலக அளவில், மில்லியன் கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கூட இத்தகைய நோயறிகுறிகளால் பாதிக்கப்படலாம்.
லான்செட் மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் “கணிசமான” அறிவாற்றல் செயல்திறன் பற்றாக்குறையுடன் இருப்பதைக் கண்டறிந்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டவர்கள் ஏறக்குறைய ஏழு நுண்ணறிவுப் புள்ளிகளை (IQ) இழந்தனர், அதே நேரத்தில் இக்கருவி பொருத்தப்படாதவர்கள் நான்கு புள்ளிகளை இழந்தனர். சுவாசக் கோளாறினால் சிரமப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத கணிசமானோர் ஒன்று மற்றும் இரண்டு IQ புள்ளிகளை இழந்தனர், இது விஷம் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கிட்டத்தட்ட சமமானதாகும்.
இந்த நிலைமைகளின் கீழ், ஆசிரியர் சங்கங்களின் பதிலிறுப்பு குற்றத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என விவரிக்க முடியும். அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பின் (American Federation of Teachers-AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன் (Randi Weingarten), ஞாயிறன்று, “குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு திரும்ப வைப்பதே முதல் முன்னுரிமை வாய்ந்தது” என்று அறிவித்தார்.
என்னவொரு வெறுக்கத்தக்க அறிக்கை! குழந்தைகளை பாதுகாப்பதற்கும், தொற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னுரிமைகள் எதுவும் இதில் இல்லை.
வைன்கார்டன் AFT இல் உள்ள 1.7 மில்லியன் சந்தா செலுத்தும் கல்வியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, பெருநிறுவன அமெரிக்காவைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் ஒருபுறம், வருமானம் மற்றும் பங்கு அளவுகளால் சமூகத்தின் உயர்மட்ட முதல் இரண்டு சதவீதத்தினருக்குள் அடங்கும் அவரது சமதரப்பாளரான தேசிய கல்வி சங்கத்தின் (National Education Association-NEA) தலைவர் பெக்கி பிரிங்கிள் (Becky Pringle), உடனும் மற்றும் ஏனைய நூற்றுக்கணக்கான தொழிற்சங்க அதிகாரிகளுடனும், வைன்கார்டன் அரசு எந்திரத்திற்குள் ஐக்கியப்பட்டு போனதுடன், பெரும் துன்பத்தையும் மரணத்தையும் விளைவித்த கொள்கைகளைப் பின்பற்றியதால் குற்றவாளியாகவும் இருக்கிறார்.
ஆசிரியர் சங்கங்கள், பைடென் நிர்வாகத்தின் பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறப்பதற்கான அழுத்தத்திற்கு எளிதாக்கும் முக்கிய முகவர்களாக உள்ளன. “விஞ்ஞானத்தை பின்பற்றுவேன்,” என பைடென் அறிவித்த பின்னரே பத்து மில்லியன் அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்தனர், ஆனால் குளிர்காலத்தில் தொற்றுநோய் உச்சகட்டத்தில் இருந்தபோது பள்ளிகளை மீளத்திறக்க அவர் அழுத்தம் கொடுத்த நிலையில் உடனடியாக இது ஒரு மோசடி என்பது அப்பட்டமானது. கோவிட்-19 ஆல் ஒரே நாளில் 1,830 அமெரிக்கர்கள் இறந்துபோன பிப்ரவரி 16 அன்று, பைடென், “கோவிட் அடிக்கடி வரக்கூடியது தான் என்றாலும் குழந்தைகளுக்கு அது தொற்றாது. இது நிகழ்வது அசாதாரணமானது” என்றும், “உங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு அம்மா அல்லது அப்பாவுக்கு இந்த நோய்தொற்றை நீங்கள் பரப்ப வாய்ப்பில்லை” என்றும் CNN டவுன் ஹால் நிகழ்ச்சியில் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவியிடம் பொய் கூறினார்.
செப்டம்பர் 6 கூட்டாட்சி வேலையின்மை சலுகைகள் வெட்டப்பட்டதற்கு ஒருங்கே நிகழும் பள்ளிகளை மீளத்திறப்பதற்கான பிரச்சாரத்தின் பின்னணியில், பெருநிறுவன இலாபங்களை பெருக்கும் வகையில் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு பெற்றோர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவது மிக முக்கியமானதாகவுள்ளது. பைடெனின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் பிரையன் டீஸ் (Brian Deese) கடந்த மாதம் கூறியது போல, தற்போதைய “தொழிலாளர் பற்றாக்குறையின்” பின்னணியில் உள்ள முக்கிய உந்துசக்திகளில் ஒன்றாக “குறிப்பாக பள்ளி வயது குழந்தைகளை உடைய பெற்றோருக்கு, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பள்ளிகளின் பற்றாக்குறை நிலவுவது” உள்ளது.
குழந்தைகளின் கற்றலுக்கு உதவுவதே தங்களது நோக்கம் என்பதான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அனைத்து கூற்றுக்களும் போலித்தனத்துடன் பிணைந்தவையே. ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் குழந்தைகளை அனுப்பும் அதே ஊழல்வாத ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர், பல தசாப்த கால வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களையும், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களையும், மற்றும் பொதுக் கல்விக்கான நிதியை இலாப நோக்கம் கொண்ட பட்டயப் பள்ளிகளுக்கு வாரி வழங்கப்பட்டதையும் மேற்பார்வை செய்துள்ளன.
தொற்றுநோயியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் ஜனவரி முதல் மார்ச் 2020 வரையிலான முக்கியமான காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால், தொற்றுநோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இரு கட்சிகளிலும் உள்ள நன்கு அறிந்த அரசியல்வாதிகளும், மற்றும் பெருநிறுவன ஊடகங்களும், ஆபத்துக்களை குறைத்துக் காட்டி, வைரஸை பரவ அனுமதித்தனர். மார்ச் 2020 இல் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஒவ்வொரு மாநிலத்தாலும் முட்டுக்கொடுக்கப்பட்ட ட்ரம்ப் நிர்வாகம், அத்தியாவசியமற்ற பணியிடங்களையும், பின்னர் பள்ளிகளையும் மீண்டும் திறக்கத் தொடங்கியது, இந்த நடைமுறை பைடெனின் கீழும் தொடரப்படுகிறது. இதன் விளைவாக, 18 மாதங்களுக்குப் பின்னர், உத்தியோகபூர்வமாக 634,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், ஆனால் உண்மையான எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான பூட்டுதல், பயணக் கட்டுப்பாடுகள், பரவலான பரிசோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துதல், இவற்றுடன் பாரிய தடுப்பூசி வழங்கல் திட்டம் போன்ற ஜனவரி 2020 இல் விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்ட கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான அதே நடவடிக்கைகள் மட்டும் தான் நோய்தொற்று பரவுவதைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்குமான ஒரே வழியாகும். ஆனால், வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki), “நமது பொருளாதாரத்தையோ அல்லது பள்ளிகளையோ நாங்கள் மூடப்போவதில்லை. நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் பின்னோக்கி திருப்பப் போவதுமில்லை!” என்று கூறியது உட்பட, இந்த நடவடிக்கைகள் முதலாளித்துவ உயரடுக்கின் கேள்விக்கு அப்பாற்பட்டவையே.
தொற்றுநோயின் ஒவ்வொரு கட்டத்திலும், கொள்கையை தீர்மானித்த நலன்களே வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களாக இருந்தன. இது முடிவுக்கு வர வேண்டும்! தொழிலாள வர்க்கம் இதில் தலையிட்டு இலாபத்தை பாதுகாப்பதற்கு அல்லாமல், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, பள்ளிகளை மீறத்திறக்கும் முனைப்பை தடுத்து நிறுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த கொலைகார கொள்கையை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டம் அனைத்து தொழிலாளர்களின் நலனுக்கானதாகும். சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மற்றும் பணியிடத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்பது, தொற்றுநோயைத் தடுப்பதற்கான பரந்த கொள்கையுடன் பள்ளிகளை மீளத்திறப்பதற்கான எதிர்ப்பையும் இணைக்கிறது. இது, பணக்காரர்களின் செல்வத்தை பறிமுதல் செய்து, உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமானத்தை வழங்க கோருவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, எடுக்கப்படும் நடவடிக்கைகளின் தீவிர ஆபத்தை புரிந்துகொண்ட விஞ்ஞானிகளும் தொற்றுநோயியல் நிபுணர்களும் பேசுவதற்கும், மக்களுக்கு அதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உதவவும் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறது. தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் அபிவிருத்தி குறித்து என்ன நடக்கிறது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொழிலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியானது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பள்ளிகளையும், உலகப் பொருளாதாரத்தையும் மீண்டும் திறப்பதற்கான அதே வெறித்தனமான உந்துதல், பிரேசில், ஜேர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஒவ்வொரு கண்டத்திலும் வெளிப்படுகிறது. கடந்த வாரம், கனடாவின் ஒன்டாரியோவில் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கீரன் மூரே (Dr. Kieran Moore) “நமது பள்ளிகளில் கோவிட்-19 ஐ இயல்பாக்க வேண்டும்” என்று கூறினார். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் இதே பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர், இந்நிலையில் தொற்றுநோயை உலக அளவில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஒரு பொது தாக்குதலில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கூட்டு வலிமையை வெளிப்படுத்தவும், தொற்றுநோயின் போக்கை மாற்றவும் மற்றும் தேவையற்ற துன்பத்திற்கும் மரணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) தொடங்கியது. தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரை பள்ளிகளையும் அத்தியாவசியமல்லாத பணியிடங்களையும் மூடுவதற்கான அழைப்பு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழிற்சாலையிலும், பணியிடத்திலும், அமெரிக்காவின் அருகாமை பகுதிகளிலும் மற்றும் உலகளவிலும் பிரபலப்படுத்தப்பட வேண்டும். உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வேலைநிறுத்த இயக்கத்தில் ஒன்றிணைவதற்கு தேசிய அளவிலான பொது வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்த முன்னோக்குடன் ஒத்துப்போகும் அனைவரும் உங்கள் பணியிடத்தில் ஒரு சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுவை உருவாக்க இன்றே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.