ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேற்றம் அதன் முடிவை அண்மிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காபூல் விமான நிலையத்தை அவர்கள் ஆக்கிரமித்த கடைசி இரண்டு நாட்களில், அமெரிக்க இராணுவப் படைகள் பெரிதும் தங்களை வெளியேற்றுவதில் மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டதாக பென்டகன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஏறக்குறைய 6,000 அமெரிக்க துருப்புக்களில் அங்கு 2,000 பேர் இப்போது வெளியேறியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் விமானங்களில் ஏற விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை Fox News இடம், இன்னும் 300 அமெரிக்க குடிமக்கள் வெளியேற்றப்படுவதற்கு காத்திருக்கிறார்கள், மேலும் வெளியேற்றுவதில் பெரிய பங்கை வகிக்கும் மிகப்பெரிய சி-17 போக்குவரத்து ஜெட் விமானங்களில் அவர்களை வெளியே கொண்டு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

ஒரு தனி சி-17 இல் மீதமுள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் எளிதில் இடமளிக்க முடியும். மேலும் இப்போது வெளியே எடுக்கப்படவேண்டிய இராணுவ உபகரணங்களுக்கும் இன்னும் அங்கு இடம் உள்ளது. கடந்த வாரம் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விமானத்தில் 640 ஆப்கானிஸ்தான் பெரியவர்கள் மற்றும் 183 குழந்தைகள் என மொத்தம் 823 பேர் திணித்து ஏற்றப்பட்டிருந்தனர்.

டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்தில், காபூல் விமான நிலையத்தின் தாக்குதலின் போது கொல்லப்பட்ட கடற்படை அங்கத்தவரின் உடல்பகுதிகள் அடங்கிய பெட்டியை கடற்படை குழு நகர்த்துவதை ஜனாதிபதி ஜோ பைடென் பார்வையிடுகின்றார். (AP Photo/Manuel Balce Ceneta)

பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தங்கள் குடிமக்கள் மற்றும் படையினர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்ததுடன் வெளியேற்றம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியமுள்ளதால், அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களை விமான நிலையத்தின் வாயில்களை விட்டு விலகி இருக்குமாறு அமெரிக்க இராணுவ கட்டளையகம் அறிவித்துள்ளது.

13 அமெரிக்க படையினர் மற்றும் குறைந்தது 160 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்ட வியாழக்கிழமை தாக்குதல் குறைந்தது ஒரு விளைவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் 'தடையின்றி' தங்கள் பணியைத் தொடர்வதாக அறிவித்த போதிலும், குண்டுவெடிப்பிற்கு பின்னர் வெளியேற்றங்கள் ஒரு குறைந்தமட்டத்தை அடைந்துவிட்டன. வியாழக்கிழமை வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்னும் பின்னும் 13,400 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 6,800 ஆகவும் சனிக்கிழமை 2,900 ஆகவும் குறைந்தது. அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சுமார் 1,400 பொதுமக்கள் பரிசோதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதற்காக விமான நிலையத்தில் தங்கியுள்ளனர்.

சமூக வலைத் தளமான Kabul Lovers இல் வியாழக்கிழமை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்கள் பலர் உண்மையில் குண்டுவீச்சிற்கு பின்னர் கூடியிருந்தோரை அகற்றுவதற்காக வாயிலுக்கு வெளியே உள்ள கூட்டமான சதுக்கத்திற்குள் அமெரிக்க துருப்புக்கள் சுட்டபோது கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வந்தன.

ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொலைக்காட்சி வலைப்பின்னல்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் குண்டுவீச்சுக்காரரின் மற்றும் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அவர்களின் கூட்டாளிகளின் கொடூரமே அனைத்து ஆப்கானிஸ்தானியர்களின் இறப்புகளுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டினர். அனைவரும் ISIS-K (இஸ்லாமிய அரசு-கோரசன்) இன் கட்டளைப்படி செயல்படுகிறார்கள் என அந்த குழுவின் சார்பாக பேசுவதாகக் கூறி ஒருவர் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. ஆனால் அவ்வமைப்பின் தோற்றம் மற்றும் இருப்பு மிகவும் தெளிவற்றது.

தாலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை நடந்த எந்தவொரு மரணத்திற்கும் அமெரிக்க துருப்புக்கள் பொறுப்பு என்று கருத்து தெரிவிக்கவில்லை. தாக்குதலின் சூழலை முழுமையாக ஆராய்வதற்கான உறுதிமொழியுடன் அவர்கள் தங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர்.

காபூலில் இருந்ததாகக் கூறப்படும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகளால் வலுப்படுத்தப்பட்டது. காபூலில் உள்ள ISIS-K வாகனம் மீது அமெரிக்கப் படைகள் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. 'ஹமத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் மீதான உடனடி ISIS-K அச்சுறுத்தலை இது நீக்குகிறது' என்று அமெரிக்க மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொண்ட ஒரு முழு குடும்பமும் அழிந்துவிட்டதாக காபூலில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர். இது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்மூடித்தனமான போரின் சமீபத்திய உதாரணம் மட்டுமே.

காபூலில் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதல் ஆப்கானிஸ்தானுக்குள் வியாழக்கிழமை விமான நிலையத்தில் குண்டுவெடித்த பின்னர் அமெரிக்க தளபதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும். ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நுழைவாயிலாக இருக்கும் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் வெள்ளிக்கிழமை ட்ரோன் ஏவுகணை ஒரு வாகனத்தைத் தாக்கியது. இரண்டு ISIS-K தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அவர்கள் 'திட்டமிடுபவர்' மற்றும் 'வழிநடத்துபவர்' என்று விவரிக்கப்பட்டனர். இருப்பினும் அவ்விருவரும் காபூல் குண்டுவெடிப்பில் நேரடியாக எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையில் அமெரிக்க அரசு, அதன் முக்கிய கூட்டாளிகள் மற்றும் தலிபான்களுக்கு இடையே தீவிர இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 98 நாடுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பின்னர் கடைசி அமெரிக்கப்படையினர் நாட்டைவிட்டு வெளியேறி காபூல் ஆப்கானியர்களின் கட்டுப்பாட்டிற்கு திரும்பக் கொடுத்த பின்னர் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தடையின்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் தலிபான்களுடனான ஒப்பந்தத்தை அறிவித்தது.

'அனைத்து வெளிநாட்டினரும், எங்கள் நாட்டிலிருந்து பயண அனுமதி பெற்ற எந்த ஆப்கானிஸ்தான் குடிமகனும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் வெளியேறும் இடங்களுக்குச் சென்று நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்' என்று தலிபான்களிடமிருந்து எங்களுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.

'நாங்கள் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பயண ஆவணங்களை தொடர்ந்து வழங்குவோம், மேலும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கலாம் என்ற தெளிவான எதிர்பார்ப்பும் அர்ப்பணிப்பும் எங்களுக்கு உள்ளது. இந்த புரிதலை உறுதிப்படுத்தும் தலிபான்களின் பொது அறிக்கைகளை நாங்கள் கவனிக்கிறோம்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஆப்கானிஸ்தானில் பெரும் ஏகாதிபத்திய சக்திகள் சந்தித்த தோல்வியின் அளவை மட்டுமே இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு அவர்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு நாட்டின் எல்லைப்புறங்களில் மட்டுமே இருந்த அவர்கள் இப்போது ஐந்து மில்லியன் மக்கள்தொகையுடன் காபூல் உட்பட ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அதன் பிடியை பலப்படுத்தியுள்ளனர்.

தாலிபானின் ஒரு தலைவரும் முல்லா அப்துல் கனி பரதாரின் துணைவருமான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் சனிக்கிழமையன்று ஒரு ஒளிப்பதிவு செய்தியை வெளியிட்டார். அதில், அமெரிக்கர்களை முழுமையாக வெளியேற அனுமதிக்குமாறு ஆப்கானியர்களை கேட்டுக்கொண்டதுடன், ஆகஸ்ட் 31க்கு பின்னர் ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் காபூல் விமான நிலையத்தைப் பயன்படுத்துவது உட்பட அதை புதிய அரசாங்கம் தடுக்காது என்று அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை திங்கள்கிழமை கூடுகிறது. மேலும் காபூலில் ஐ.நா மேற்பார்வையிடும் மண்டலத்தை அமைக்க கோரும் பிரெஞ்சு-பிரிட்டிஷ் தீர்மானத்தை அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும். அம்மண்டலத்தில் புதிய ஆட்சியை எதிர்க்கும் ஆப்கான் குடிமக்கள் தங்கியிருந்து நாட்டை விட்டு வெளியேற ஏற்பாடு செய்யலாம். ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை மீறல் போன்ற இவ்வாறான ஒரு முயற்சியை தலிபான்கள் எதிர்ப்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமெரிக்கா ஒரு இராஜதந்திர பணியை பராமரிக்க தலிபான் முன்வந்துள்ள நிலையில், பைடென் நிர்வாகம் அதை நிராகரித்ததாக தெரிகிறது. இருப்பினும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை நிர்வாகம் இக்கோரிக்கையை 'தீவிரமாக விவாதிக்கின்றது' என்று கூறினார். காபூலில் உள்ள அனைத்து அமெரிக்க இராஜதந்திரிகளும் விமான நிலையத்தில் உள்ளனர் மற்றும் மீதமுள்ள அமெரிக்க துருப்புக்களுடன் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading