அமெரிக்க இராணுவம் வெளியேற்றங்களை தொடரும் நிலையில், காபூல் விமான நிலைய தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 170 ஆக அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வியாழக்கிழமை நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை வெள்ளிக்கிழமை கணிசமாக 160 க்கு மேலாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மும்மடங்காகியுள்ளது, அதேவேளை அமெரிக்க பாதுகாப்புத்துறை கூடுதலாக ஒரு சேவை உறுப்பினர் இறுந்துள்ளதையும் உறுதிசெய்தமை அமெரிக்க இராணுவத்தினரின் மொத்த இறப்புக்களை 13 ஆக அதிகரிக்கிறது.

ஆகஸ்ட் 26, 2021 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த கொடூரமான வெடிகுண்டு வெடிப்பில் காயமடைந்த ஆப்கானியர்கள் மருத்துவமனை படுக்கைகளில் படுத்துள்ளனர். (AP Photo/Mohammad Asif Khan)

இந்த தாக்குதலை ஒரேயொரு தற்கொலை குண்டுதாரி மட்டுமே நடத்தியுள்ளார் என்று மேஜர் ஜெனரல் ஹாங்க் டெய்லர் வெள்ளிக்கிழமை காலை நடந்த பாதுகாப்புத் துறை செய்தியாளர்கள் சுருக்கக் கூட்டத்தில் தெரிவித்தார். இரண்டாவது வெடிகுண்டு அருகிலுள்ள ஹோட்டலில் வெடித்ததாக அறிக்கைகள் முதலில் சுட்டிக்காட்டின. விமான நிலையத்தின் அபே கேட்டில் பயணம் செய்ய காத்திருந்த ஒரு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, இஸ்லாமிய அரசின் கோரசான் (Islamic State-Khorasan) தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். மேலும், அந்த பகுதியில் கூட்டத்தைக் கலைக்க அமெரிக்க துருப்புக்களும் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டு தசாப்த கால புதிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள், அத்துடன் ஆப்கானிய ஒத்துழைப்பாளர்கள் என அனைவரது வெளியேற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது எனவும் டெய்லர் தெரிவித்தார். முன்னைய 24 மணி நேரத்தில் காபூலில் இருந்து 89 விமானங்கள் சுமார் 12,500 பேரை ஏற்றிச் சென்றதாக அவர் கூறினார். அவர்களில் 300 அமெரிக்கர்களும் இருந்தமை, தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளியேறிய அமெரிக்கர்களின் மொத்த எண்ணிக்கையை 5,100 க்கு அதிகமாக்கியது. காயமடைந்த 18 அமெரிக்க சிப்பாய்களுடன் இரண்டு விமானங்கள் ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமானப்படை தளத்திற்கு பறந்தன.

ஆகஸ்ட் 14 இல் வெளியேற்றம் தொடங்கியதிலிருந்து, சுமார் 111,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 5,400 பேர் விமான நிலையத்திற்குள் வெளியேறக் காத்திருப்பதை டெய்லர் உறுதிப்படுத்தினார்.

அந்த நாளில் பின்னர் நடந்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சுருக்கக் கூட்டத்தில், வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki), பைடென் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு குழு, அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றவும் திரும்பப் பெறவும் “பெரும்பாலும்” நிர்ணயித்துள்ள ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு முன்னர் இன்னும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று நம்பியதை உறுதிப்படுத்தினார். விமான நிலையத்தில் “உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்” எடுக்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதால், வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை வரவிருக்கும் நாட்களில் கூர்மையாக குறையும் என்பது இரண்டு செய்தியாளர்கள் கூட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டது. எவ்வாறாயினும், “இறுதிவரை” மக்களை வெளியேற்ற முடியும் என்று டெய்லர் அறிவித்தார்.

விமான நிலையத்தின் சில பகுதிகளை அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை மாலை கூறினார். பென்டகன் இந்த அறிக்கையை உடனடியாக மறுத்தாலும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை சில மணி நேரங்களில் தாலிபான்களிடம் ஒப்படைப்பார்கள் என்ற செய்தியை தற்போது காபூலில் இருக்கும் BBC இன் சர்வதேச தலைமை நிருபர் லைஸ் டவுசெட் (Lyse Douset) க்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

வாஷிங்டன் அதன் படைகளை திரும்பப் பெறுவதற்கான இறுதிக் கட்டங்களில் தாலிபான்களின் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் சார்ந்திருந்த அளவு, காபூலில் அதன் கைப்பாவை ஆட்சி வீழ்ந்து போனதால் அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோட்டிட்டுக் காட்டுகிறது. பைடென் நிர்வாகத்தின் அதிகாரிகள் கூட, எஞ்சியிருந்த பணியை தாலிபான்களின் கணிசமானளவு உதவியுடன் தான் முடிக்க முடிந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தாலிபான்களுடனான ஒருங்கிணைப்பு என்பது, பல மோசமான தெரிவுகளில் சிறந்த ஒன்றாக இருந்ததா, அல்லது ஒரே தெரிவாக இருந்ததா, என கேட்கப்பட்டதற்கு “ஒருவேளை இரண்டும் பொருந்தலாம்” என்று சாகி வெளிப்படையாக பதிலிறுத்தார். ஆப்கானிஸ்தானின் “பரந்த பகுதிகளும்” மற்றும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், “வேறு வழியின்றி, அது எங்கள் தெரிவாகிவிட்டது,” என்றும் அவர் கூறினார். வரவிருக்கும் நாட்கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் “நாளது தேதியில் மிகுந்த ஆபத்தான காலமாக” இருக்கலாம் என்பதையும் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆகஸ்ட் 31 க்குப் பின்னர் காபூலில் அமெரிக்கா ஒரு இராஜதந்திர பிரசன்னத்தை தக்கவைத்துக் கொள்வது குறித்து தாலிபான்கள் அவர்களது பங்கிற்கு, வாஷிங்டனின் வேண்டுகோளுக்கு ஒரு ஆலிவ் கிளையை வழங்குவதாகத் தெரிகிறது என்று வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது. தாலிபான் இயக்கம், உஸ்பெக் மற்றும் தாஜிக் சிறுபான்மையினரைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட, “உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை” அமைப்பதற்கு அறிவிக்க திட்டமிட்டுள்ளது என அதன் செய்தித் தொடர்பாளர் அல்-ஜசீரா செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.

வியாழக்கிழமை தாக்குதலுக்கு தாலிபான்கள் உடந்தையாக இருந்தனர், அல்லது பொறுப்பாளியாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் போக்கில் பாதுகாப்புத் துறையும் வெளியுறவுத் துறையும் இருந்தது குறித்து விசாரணை செய்ததில், அதன் பின்னணி மர்மமாகவே உள்ளது.

இஸ்லாமிய அரசின் ஒரு பிராந்திய இணைப்பு என்று கூறும் ISIS-K அமைப்பு, அமெரிக்க ஆதரவு கைப்பாவை ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தின. ஆப்கானிஸ்தானில் 2,000 க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்த அமைப்பு தற்போது எதனுடன் இணைந்திருந்தாலும், இஸ்லாமிய அரசு மற்றும் தாலிபான்கள் தொடர்புபட்ட அனைத்து இஸ்லாமிய போராளிகளும், ஆப்கானிஸ்தானும் அதன் பரந்த பகுதியும் நான்கு தசாப்த கால அமெரிக்க ஏகாதிபத்திய சூழ்ச்சி மற்றும் கொடூரமான நவகாலனித்துவ போர் போன்ற சோகமான சுற்றிவளைப்பு தாக்குதல்களை எதிர்கொண்ட விளைவால் உருவானவர்களே என்பதே நிரந்தரமான உண்மையாகும்.

வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளுக்கு இந்த கொள்கைகளின் பேரழிவுகர விளைவை அடிக்கோடிட்டுக் காட்டி, பைடெனின் தீவிர விமர்சகர்களில் சிலர் கூட அமெரிக்கா படைகளை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டனர். முன்னைய நாளின் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில், சட்டசபையின் சிறுபான்மை தலைவர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), பைடென் “பலவீனமானவர் மற்றும் திறமையற்றவர்” என்பதையும், “தாலிபான் உத்தரவிட்ட காலக்கெடுவை” அவர் ஏற்றுக்கொண்டார் என்பதையும் கண்டனம் செய்தார். ஆனால் அவரது மாற்று நடவடிக்கை பற்றி விளக்க முற்பட்டபோது, இரகசிய புலனாய்வு விளக்கத்தை பெறுவதற்கும், “ஒவ்வொரு அமெரிக்கரும்” வெளியேற்றப்படும் வரை அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதைத் தடுக்கும் ஒரு மசோதாவை ஏற்றுக்கொள்வதற்கும், சபையை மீண்டும் கூட்டுவதற்கு அவரால் அழைப்பு விடுக்க முடிந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் ஒரு அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் இல்லையென்றாலும் பத்தாயிரக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். பைடெனும் அவரது வெளியுறவுக் கொள்கையும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் இதை நிராகரித்து விட்டனர், ஏனென்றால், இராணுவம் மற்றும் நிதி வளங்களை இவ்வாறு செலவழிப்பது ரஷ்யாவிற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிற்கும் எதிரான அவர்களது முக்கிய மோதல்களிலிருந்து திசைதிருப்புவதாக இருக்கும் என்று பார்க்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் துருப்புக்களை ஆப்கானிய மக்களை காட்டுமிராண்டித்தனம் மற்றும் மரணத்திலிருந்து மீட்பதற்கு விரையும் மீட்பர்களாக சித்தரிக்கும் ஊடக வெளியீடுகள், இந்த புவிசார் மூலோபாய கருத்தாக்கங்களை மூடிமறைத்துவிட்டன. அமெரிக்க சிப்பாய்கள் “தங்களால் முடிந்தவரை ஏராளமானவர்களை காப்பாற்றுகிறார்கள்,” என்பதுடன் ஒரு “உன்னதமான பணியில்” அவர்கள் ஈடுபட்டனர் என்று வெள்ளிக்கிழமை நடந்த பென்டகன் செய்தியாளர்கள் சுருக்கக் கூட்டத்தில் டெய்லர் அறிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஊடகங்களாலும் அரசியல் ஸ்தாபகத்தாலும் இந்த இராணுவவாத ஆரவார வார்த்தையாடல் மீண்டும் மீண்டும் அபத்தமாக விளம்பரப்படுத்தப்பட்டது. சுமார் 300 சிப்பாய்களுடன் ஜேர்மனி தனது வெளியேற்றும் பணியை முடித்தபோது, ஊடகங்கள் நாடு திரும்பும் படையினர் பற்றி இடையறாது செய்திகள் வெளியிட்டன. படையினர் “ஆயிரக்கணக்கான மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாக்க வெளியே அழைத்து வந்தமைக்கு,” “நமது நாடு பெருமை கொள்கிறது” என்று ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைய்ன்மயர் எழுதினார்.

உண்மையில், அமெரிக்க படையினரும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர், இப்போரில் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள், இரவுநேர தாக்குதல்கள், சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் நூராயிரக்கணக்கான ஆப்கானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

“போர் செலவு திட்டம்” மதிப்பிட்டுள்ளதாவது, 2019 ஆம் ஆண்டில் மட்டும் 700 பொதுமக்கள் கூட்டணி வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர், இது போர் தொடங்கப்பட்டதற்கு பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும். தாலிபான்களுடன் ட்ரம்ப் நிர்வாகம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் 2020 இல் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் குறைக்கப்பட்டாலும், வெடிமருந்து மற்றும் பராமரிப்பிற்காக அமெரிக்காவை முழுமையாக நம்பியிருக்கும் ஆப்கானிஸ்தான் விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டவை அதிகரித்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் நடந்த மோதலில் சுமார் 3,000 பொதுமக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான நிலைமைகளுக்குத் தலைமை தாங்கிய ஏகாதிபத்திய ஆதரவு கைக்கூலி ஆட்சி ஊழலில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி 150 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அதேவேளை, ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இரண்டு தசாப்த கால அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கு குறைந்த வருமானத்தில் தான் வாழ்கின்றனர்.

காபூல் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள ஒரு சில மக்களின் நிலை குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு சுருக்கக் குறிப்பில், உணவு நெருக்கடியால் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியுள்ளது. தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், மக்கள்தொகையில் பாதி பேருக்கு சில வகை மனிதாபிமான உதவி தேவைப்பட்டது என்பதுடன், ஐந்து வயதிற்குட்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் பாதி பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

காபூல் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள ஒரு சில மக்களின் நிலை குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு சுருக்கக் குறிப்பில், உணவு நெருக்கடியால் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியுள்ளது. ஐ.நா.வின் கூற்றுப்படி, தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மக்கள்தொகையில் பாதி பேருக்கு சில வகையான மனிதாபிமான உதவி தேவைப்பட்டது மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, 560,000 பேர் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர், இது 2020 இறுதிக்குள் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 2.9 மில்லியன் பேருடன் சேர்ந்து கொள்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.

Loading