இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இராஜபக்ஷ அரசாங்கம் கடந்த வாரம் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு எதிராக பொலிஸ் ஒடுக்குமுறைக்கு களம் அமைத்தது.
* ஜூன் 7 அன்று, சமூக ஊடகங்களில் பரவும் 'போலி செய்திகளை' அடையாளம் காண்பதற்காக குற்ற விசாரணை பிரிவின் (சிஐடி) கீழ் ஒரு சிறப்பு குழு நிறுவப்படும் என பொலிஸ் ஊடக பேச்சளார் தெரிவித்தார்.
* 'ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் வலைத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் தொடுக்கப்பட உள்ளதாக' முகநூலில் செய்தி வெளியிட்டதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் யசிரு குருவிடகே குற்ற விசாரணைப் பிரிவினரால் ஜூன் 7 அன்றே கைது செய்யப்பட்டார். அவர் மீது நிச்சயமான குற்றச்சாட்டை கூட தாக்கல் செய்ய பொலிசாருக்கு முடியாமல் போனதோடு அவர் ஜூன் 9 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
* ஜூன் 08 அன்று, 'இணையத்தில்' போலி செய்திகளை பரப்பியவர்கள் எனப்படுவோர் மீது சிஐடி மற்றும் பொலிஸ் கணினி குற்றப்பிரிவு, சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
* ஜூன் 8 அன்றே, பொலிஸ் தலைமையகம் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டு, இணையத்தில் 'பொய் பிரச்சாரம்' பரவுவதைத் தடுப்பதன் கீழ், பிடி ஆணை இல்லாமல் கைது செய்யப்படலாம் என்று அறிவித்தது. தவறான தகவல்களை பரப்பியவர்கள், தண்டனைச் சட்டம், சிவில் அரசியல் உடன்படிக்கை, கணினி குற்றச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஆபாசப் படங்களை வெளியிடுதலை தடுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் பொய் தகவல்களை பரப்புபவர்கள் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் தகவல், புகைப்படங்கள், யூ டியூப் வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த சட்டங்கள், அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்), தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஆகியவை இது சம்பந்தமாக பேர் போனவை ஆகும்.
இணையத்தின் மீதான இந்த ஜனநாயக விரோத தலையீடு, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக ஜனாதிபதி இராஜபக்ஷ திட்டமிட்டு வரும் சர்வாதிகார பொறிமுறையின் ஒரு பகுதியாகும். அதே போல் இது, இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு உள்ள உரிமை மீதான அரசாங்கத்தின் நீண்டகால ஒடுக்குமுறையினை மேலும் புதிய மட்டத்துக்கு விரிவாக்குவதும் ஆகும்.
அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு தடை விதிக்கும் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை அரசாங்கம் ஏற்கனவே விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, சுகாதார ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடுக்கும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இணையத்தின் மீதான பொலிஸ் பாய்ச்சல் இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களின் மிக சமீபத்தியது ஆகும்.
இந்த தாக்குதல் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்படும் கடுமையான எச்சரிக்கையாகும். இணையத்தில் தங்களுக்கு எதிராக வெளியிடப்படும் அரசியல் விமர்சனங்களையும், மற்றும் தொழிலாள ஒடுக்ப்பட்ட மக்களின் எதிர்ப்பையும் இணையத்தில் வெளிப்படுத்தும் எந்த ஒன்றையும், 'போலி செய்தி' என்று முத்திரை குத்தி, அதை வெளியிட்டு பகிர்ந்துகொண்டவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது, இணையத்தில் கருத்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
'போலி பிரச்சாரத்தின் காரணமாக பொது மக்கள் மத்தியில் அமைதி சீர்குலையும் மற்றும் இனங்களுக்கு இடையிலான மத பிளவுகளுக்கும்' வழிவகுக்கும் என்று பொலிஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுமக்கள் அமைதி குலைதல் பற்றிய குற்றச்சாட்டு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முறியடிக்க அடிக்கடி முதலாளித்துவ அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு கொடூரமான போரை நடத்திய ஒரு ஆட்சி, இனப் பிளவுகளில் அக்கறை காட்டுவதானது முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும்.
இந்த அடக்குமுறை கொள்கைகளை செயல்படுத்த அரசாங்கம் கொரோனா தொற்றுநோயைப் சுரண்டிக்கொள்கின்றது. போலி பிரச்சாரத்தின் காரணமாக தொற்றுநோயை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாக, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் உண்மையில், நோயாளிகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை மூடிமறைப்பதன் மூலமும், பொய்யான தகவல்களைப் பரப்புவதன் மூலமும், பொதுமுடக்கம் போன்ற அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிராகரிப்பதன் மூலமும் தொற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விஞ்ஞானப்பூர்வமான வேலைத் திட்டத்திற்கு எதிராக அரசாங்கமே முன்நிற்கின்றது. குறித்த தகவல்கள் 'போலியானவையா' இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது என்பதே மையப் பிரச்சினை ஆகும். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுப்படி, அவற்றை சிஐடி தீர்மானிக்கின்றது. அரசாங்க அடக்குமுறையின் நேரடி கருவியான இது, முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு எதிரான தகவல்களையே பொய்யான தகவல்களாக முத்திரை குத்தும் என்பது உறுதி.
அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை சம்பந்தமாக சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே கணிசமான எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்றது. ஜூன் 9 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, உரிமைகளுக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு, “சமூக ஊடக பாவனையாளர்களை அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது” என்று கூறியது.
எவ்வாறாயினும், தொற்றுநோயால் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்துக்கு, எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான அடக்குமுறை எந்திரத்தை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் பேசிய அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல, 'சமூக ஊடகங்களில் தகவல்களை பரப்புவதை அரச அதிகாரத்தின் கீழ் ஒழுங்குபடுத்தும்' ஒரு 'சட்ட ஆட்சியை' நிறுவ அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறினார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். நாட்டில் எந்தவொரு சட்டத்தின் கீழும், 'பொய்யான தகவல்களை' வெளியிடுவது 'குற்றம்' அல்ல. கடந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்க காலத்தில், அதை ஒரு சட்டமாக மற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியடைந்தன.
இருப்பினும், தற்போதுள்ள சட்டத்தின் கீழ், 'பொய்யான தகவல்களை' பரப்பிய குற்றச்சாட்டில், ஒருவர் தண்டிக்கப்படலாம் என்ற சமிக்ஞை, யசிரு குருவிடகேவுக்கு பிணை வழங்கும் போது பிரதான நீதவான் வெளியிட்ட அறிக்கையில் அடங்கி உள்ளது. பேச்சு சுதந்திரத்திற்கு 'வரம்புகள்' இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தவறான மற்றும் பொய்யான கருத்துக்களை விநியோகிக்க இதைப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியதாக அத தெரன செய்தி தெரிவித்தது.
அரசாங்கம் உட்பட முழு முதலாளித்துவ அரச ஸ்தாபனமும், இணையத்தில் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக ஒரு போரை முன்னெடுத்து வருவதையே இது காட்டுகிறது. இந்த அனைத்து பிரிவுகளும், வெகுஜனங்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பு, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக வளரும் என்று அஞ்சுகின்றன. இந்த வெகுஜன எதிர்ப்பு இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்பட்டு, போராட்ட அலைகளைத் தூண்டிவிடும் என்று அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.
அதனாலேயே, அதை வேரோடு ஒழிப்புக்கான அடித்தளத்தை அமைப்பதற்கு அரசாங்கம் வேகமாக நகர்கிறது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவும் அரசாங்கத்திற்கு உள்ளது. ஈவிரக்கமற்ற அத்தியாவசிய சேவை உத்தரவுகளைப் பற்றிய அவர்களின் மௌனம் இதற்கு சாட்சியமளிக்கிறது.
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் சமூக ஊடகங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் 10.1 மில்லியன் இணைய பயனர்களில் 63 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுவதாக டிஜிடல் சந்தைப்படுத்தல் ஆசிய பசிபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தகவல்களை மிகவும் விரைவாக அனுப்பவும், தகவல்தொடர்புக்கு வசதி செய்யவும் கூடிய சமூக ஊடகங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த துறையாக மாறியுள்ளன.
2011 எகிப்திய புரட்சி போன்ற சர்வதேச நிகழ்வுகளிலும், 2018 இல் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்திற்கு ஆதரவாக கிட்டத்தட்ட 5,000 இளைஞர்களால் கொழும்பில் காலி முகத்திடலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் போன்ற தேசிய நிகழ்வுகளிலும் சமூக ஊடகங்கள் ஆற்றிய மகத்தான பங்கை அறிந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், தமது எதிர் தாக்குதலை கூர்மைப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் தொற்றுநோய் பற்றிய உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் ரெபேக்கா ஜோன்ஸின் ட்விட்டர் கணக்கு, கடந்த ஜூன் 7 இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவில் சமூக ஊடகங்களில், கொரோனா தொற்றுநோய்க்கு இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்பை விமர்சிக்கும் பதிவுகள் தணிக்கை செய்யப்படுகின்றன.
கூகிள் தேடுபொறியில் மற்றும் சமூக ஊடகங்களில் உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியான தணிக்கைக்கு உட்படுத்துவது இந்த தாக்குதலின் பிரதான இலக்காக இருப்பதை காட்டுகிறது.