பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் கோவிட்-19 நோயால் 500,000 புதிய இறப்புகள் ஏற்படும் என WHO எச்சரித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவுக்கான இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்: ஐரோப்பாவும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளும் இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளன. ஏற்கனவே இறந்த 1.4 மில்லியனைத் தாண்டி, அடுத்த மூன்று மாதங்களில் ஐரோப்பாவில் மேலும் 500,000 கொரோனா வைரஸ் இறப்புகள் இருக்கலாம் என்று க்ளூக் எச்சரித்தார்.

நவம்பர் 4, 2021 வியாழன் அன்று குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் (AP Photo/Darko Bandic)

'இன்று, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள ஒவ்வொரு நாடும் COVID-19 மீளெழுச்சியின் உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது, அல்லது ஏற்கனவே அதை எதிர்த்துப் போராடுகிறது,' என்று அவர் கூறினார். 'ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தின் 53 நாடுகளில் பரவும் தற்போதைய வேகம் மிகுந்த கவலை அளிக்கிறது. COVID-19 தொற்றுக்கள் மீண்டும் சாதனை அளவை நெருங்கி வருகின்றன, மேலும் பரவக்கூடிய டெல்டா மாறுபாடு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பரவுவதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

அவர் தொடர்ந்தார், கடந்த வாரம், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 1.9 மில்லியனுக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் மற்றும் 24,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகியவை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், முறையே 6 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கடந்த 5 வாரங்களில், ஐரோப்பாவில் COVID-19 தொற்றுக்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த வாரம், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா அனைத்து உலகளாவிய தொற்றுக்களில் 59 சதவிகிதமும், பதிவான இறப்புகளில் 48 சதவிகிதமும் ஆகும்.

'ஒரு நம்பகமான கணிப்பின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான COVID-19 இறப்புகளைக் காணலாம், மேலும் 'எங்கள் பிராந்தியத்தில் உள்ள 43 நாடுகள் அதே காலகட்டத்தில் ஒரு கட்டத்தில் மருத்துவமனை படுக்கைகளில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும்.' என்று க்ளூக் கூறினார்.

குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட கிழக்கு ஐரோப்பாவில் இறப்பு விகிதங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஏழு நாட்களில், ரஷ்யாவில் 8,000 பேரும், உக்ரேனில் 3,800 பேரும், 20 மில்லியனுக்கும் குறைவான மக்கள் வாழும் ருமேனியாவில் 3,000 பேரும் உயிரிழந்துள்ளனர். இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட லாட்வியா, வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கையாக தோராயமாக 250 ஐ பதிவு செய்கிறது. இது அமெரிக்காவின் அளவிலான ஒரு நாட்டில் வாராந்திர 43,000 இறப்புகளுக்கு சமம். 2.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட லிதுவேனியாவில் கடந்த வாரத்தில் 250க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

இங்கிலாந்தில் கடந்த வாரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஜேர்மனி மற்றும் போலந்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி மற்றும் சேர்பியாவில் 200 க்கும் மேற்பட்ட வாராந்திர இறப்புகள் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

WHO ஆல் நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய 14-நாள் ஒட்டுமொத்த COVID-19 வழக்கு அறிவிப்பு விகிதம் கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி சிவப்பு அல்லது கடும் சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது, அதாவது 100,000 பேருக்கு முறையே 200 - 500 தொற்றுக்களின் எண்ணிக்கை. கடும் சிவப்பு என்பது மிக உயர்ந்த அவசர குறிகாட்டியாகும்.

ஐரோப்பாவில் 14 நாள் கோவிட்-19 தொற்று அறிவிப்பு விகிதம், நவம்பர் 4 அன்று புதுப்பிக்கப்பட்டது. கடும் சிவப்பு என்பது அதிகபட்ச அவசர விகிதத்தைக் குறிக்கிறது, 100,000 பேருக்கு 500க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்.

கடந்த வாரத்தில் ஐரோப்பா முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது, க்ளூக் கூறினார்: “38 வாரத்திலிருந்து [நான்கு வாரங்களுக்கு முன்பு] முதியவர்களிடையே விரைவான அதிகரிப்பு மிகவும் கவலை அளிக்கிறது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்”.

பொதுவாக COVID-19 இன் கொடிய பருவத்தில், வடக்கு அரைக்கோளம் குளிர்காலத்தில் நுழைவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 250,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் மற்றும் ஒரு நாளைக்கு 3,000 முதல் 4,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் குளிர்ந்த காலநிலை மக்களை மூடிய இடைவெளிகளில் வீட்டிற்குள் ஒன்றுசேரத் தூண்டுகிறது, அங்கு வைரஸ் எளிதில் பரவுகிறது. மேலும், ஐரோப்பாவில் காய்ச்சல் அலை இந்த குளிர்காலத்தில் வடக்கு அரைக்கோளத்திற்கு பரவும் ஒரு அலையின் தொடக்கமாக இருக்கலாம்.

வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், மற்றொரு கொடிய குளிர்காலத்தைத் தடுக்கவும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று க்ளூக் வலியுறுத்தினார். நவம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, ஐரோப்பாவின் COVID-19 இறப்பு எண்ணிக்கை 300,000 க்கும் குறைவாக இருந்து 1,000,000 ஆக உயர்ந்துள்ளது. க்ளூக் கூறினார்: 'நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப்போன்று ஐரோப்பா மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் உள்ளது. இப்போது உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாம் அதிகம் அறிந்திருக்கிறோம், மேலும் நம்மால் செய்ய முடியும்.

'நாங்கள் எங்கள் தந்திரோபாயங்களை மாற்ற வேண்டும் மற்றும் COVID-19 வெடிப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதில் இருந்து முதலில் அவை நிகழாமல் தடுக்க வேண்டும்' என்று க்ளூக் முடித்தார். “COVID-19 இன் பரவலான மீளெழுச்சியுடன், இந்த தருணத்தில் நடவடிக்கைகளை தளர்த்துவது அல்லது நீக்குவது குறித்து கவனமாக மறுபரிசீலனை செய்யுமாறு ஒவ்வொரு சுகாதார அதிகாரியையும் நான் கேட்டுக்கொள்கிறேன்… இறுதியில், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த தொற்றுநோயிலிருந்து நாம் வெளியே வருவோம்.'

தொற்றுநோயை தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் - பூட்டுதல், தொடர்புத் தடமறிதல், தடுப்பூசி மற்றும் வைரஸ் பரவலை அகற்றுவதற்கான பிற பொது சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவையாக அறியப்படுகிறது. சீனா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல ஆசிய-பசிபிக் நாடுகள் தொற்றுநோய்களின் போது மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கள் பிராந்தியங்களில் வைரஸை வெற்றிகரமாக அகற்றியுள்ளன. உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டால், இத்தகைய கொள்கைகளால் வைரஸ் பரவுவதை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

எவ்வாறாயினும், க்ளூக்கின் அழைப்புகள் செவிட்டு காதுகளில் விழுகின்றன. கடந்த வசந்த காலத்தில் தொற்றுநோய் ஐரோப்பாவைத் தாக்கியபோது, முதலாளித்துவ அரசாங்கங்கள் கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான பூட்டுதல்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: இத்தாலியில் இருந்து ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் வேலைநிறுத்தங்களின் அலை பரவியது, அத்தியாவசியமற்ற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கும் உரிமையை கோரினர். கடுமையான கட்டுப்பாடுகள் தொற்றுக்குகளை குறைந்த நிலைக்குக் கொண்டு வந்தாலும், வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் போதே இந்த பூட்டுதல்களை முன்கூட்டியே முடிந்துவிட்டன மற்றும் தொடர்புத் தடமறியும் நடைமுறைகள் அமைக்கப்படவில்லை.

வங்கிகளுக்கு நிலையான இலாபத்தை உறுதி செய்வதற்காக தொழிலாளர்களை வேலையிலும், இளைஞர்களையும் பள்ளியில் வைத்திருப்பதன் மூலம் ஐரோப்பிய அரசாங்கங்கள் வைரஸின் தொடர்ச்சியான புழக்கத்தின் அரசியல் குற்றவியல் கொள்கையை மேற்பார்வையிட்டன. ஐரோப்பாவில் இப்போது வெளிவருவது இந்த சமூக படுகொலைக் கொள்கையின் விளைபொருளாகும். தடுப்பூசிகள் மற்றும் வெப்பமான வானிலை 2021 வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் மெதுவாக தொற்றுநோய்களுக்கு வழிவகுத்தது. இப்போது ஒரு புதிய, இன்னும் பெரிய எழுச்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போதிலும், COVID-19 இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட வேகமாக அதிகரித்து வருகின்றன. ஐரோப்பாவின் COVID-19 இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் 2020 நவம்பர் 11 வரை 50,000 ஆக உயர்ந்து, 250,000 இலிருந்து 300,000 ஆகியுள்ளது, இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஐரோப்பா இன்னும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளைப் பதிவு செய்யும் பாதையில் உள்ளது.

தொற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கிய கருவி தடுப்பூசி என்று ஐரோப்பிய அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தாலும், தடுப்பூசி போடாத குழந்தைகளை பள்ளிகளுக்கும், தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும்போதும், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் வெடிக்கின்றன. பிரான்சில், தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 10,000 ஐ எட்டியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் சமீபத்தில் லிபரேஷன் பத்திரிகையுடன் பேசினார். தடுப்பூசிக்கு நன்றி, அதனால் கோவிட்-19 வழக்குகளின் அதிகரிப்பு குறித்து அவர் கவலைப்படவில்லை என்று கூறினார்.

அவர் மேலும் கூறினார்: 'நாங்கள் இதை மிகவும் நெருக்கமாகப் பின்பற்றுகிறோம், நிச்சயமாக. இந்த உயர்வு ஐரோப்பா முழுவதும் நடைபெறுகிறது, ஆச்சரியப்படத்தக்க வகையில், காலநிலை நிலைமைகள் சுவாச வைரஸ்கள் பரவுவதற்கு சாதகமாக இருப்பதை நாம் அறிவோம். எவ்வாறாயினும் தடுப்பூசிகள், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரமான தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுவாக மட்டுப்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே இன்று, நான் கவனமாகப் பார்ப்பது, வைரஸ் பரவல் மற்றும் நிகழ்வு விகிதங்களுக்கு அப்பால், பெரும்பாலும் முக்கியமாக மருத்துவமனைகள் மீதான அழுத்தம், இது அடிப்படைக் குறிகாட்டியாகும்.

பிரிட்டனில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் இழிவான முறையில் அறிவித்தார், 'இனி பூட்டுதல்கள் வேண்டாம், உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்', COVID-19 இறப்புகள் வாரந்தோறும் 1,000 அல்லது வருடத்திற்கு 52,000 ஐத் தாண்டினால் மட்டுமே கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் கூறியது. இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது, ஆனால் அரசாங்கம் இன்னும் குறிப்பிடத்தக்க புதிய பொது சுகாதார நடவடிக்கைகள் எதையும் முன்மொழியவில்லை.

ஜேர்மனியில், தினசரி நோய்த்தொற்றுகள் 35,000 ஆக உயர்ந்துள்ளன, சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் சமீபத்தில் 'தேசம் தழுவிய தொற்றுநோய் நிலைமை' பற்றிய சட்டபூர்வமான கண்டுபிடிப்பை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்தார். COVID-19 க்கு எதிரான சுகாதார நடவடிக்கைகளுக்கான சட்டபூர்வ அடிப்படையை இது முடிவுக்குக் கொண்டுவருகிறது. ஸ்பெயினில், தொற்றுநோயைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்று நீதி அமைப்பு பலமுறை தீர்ப்பளித்துள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்ட கருத்தரங்கங்களில் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளபடி, கொரோனா வைரஸை ஒழிப்பது ஒரு யதார்த்தமான மற்றும் அடையக்கூடிய கொள்கையாகும். உண்மையான மகத்தான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கு, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு நனவான, சர்வதேச இயக்கத்தை அணிதிரட்டுவதும், ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களை எதிர்த்தும், வைரஸை ஒழிப்பதற்கும் சோசலிசத்திற்காகவும் நனவுபூர்வமாக போராடுவதும் தேவைப்படுகிறது.

Loading