PSOE-பொடேமோஸ் அரசாங்கம் ஸ்பானிய உலோகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, தெற்கு ஸ்பானிய நகரம் காடிஸில், 22,000 க்கும் மேற்பட்ட உலோகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியும், ஆலை மூடல்களை எதிர்த்தும் நடத்தி வரும் வேலைநிறுத்தம் அதன் இரண்டாவது வாரத்திற்குள் நுழைகையில், சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியும் (PSOE) மற்றும் “இடது ஜனரஞ்சக” பொடேமோஸ் கட்சியும் அதன் மீது பொலிஸ் ஒடுக்குமுறையை தொடங்கின. அதற்கு அவர்கள் ஆயிரக்கணக்கான கலகப் பிரிவு பொலிசாரையும், 15-டன் கவச BMR (Blindado Medio sobre Ruedas, or Medium Armoured Vehicle on Wheels) வாகனத்தையும் காடிஸில் கட்டவிழ்த்துவிட்டனர்.

செவ்வாய்க்கிழமை, சுமார் 5,000 உலோகத் தொழிலாளர்களும் மற்றும் ஆதரவாளர்களும் காடிஸ் நகரில் அணிவகுத்துச் சென்றனர். பிரதான ஆர்ப்பாட்டத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பிரிந்து காரன்சா (Carranza) பாலத்தை தடுப்புக்களுடன் முற்றுகையிட முயன்றனர். பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களால் தொழிலாளர்களை தாக்கினர். மேலும், பொது ஒழுங்கின்மை குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது ஒரு எதிர்ப்பாளர் கைது செய்யப்பட்டார். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், “போலீசார் கொல்கிறார்கள்!”, “நாங்கள் தொழிலாளர்கள், குற்றவாளிகள் அல்ல!” என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு பரவலான ஆதரவு உள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் உயர்நிலை வரையிலான சுமார் 200 உள்ளூர் மாணவர்கள் செவ்வாயன்று பள்ளி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர், பின்னர் தங்கள் பள்ளிகளுக்கு வெளியே மறியலில் ஈடுபட்டு, உலோகத் தொழிலாளர்களின் போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் Puerta del Mar மருத்துவமனையை கடந்து செல்கையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர், அப்போது சுகாதாரப் பணியாளர்கள் கரகோஷம் எழுப்பி வேலைநிறுத்தக்காரர்களுக்கும் மாணவர்களுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

நவம்பர் 23, 2021 அன்று, தெற்கு ஸ்பெயினின் காடிஸ் நகரில் உலோகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் (AP Photo/Javier Fergo)

தாக்குதலுக்கு 15-டன் கவச BMR வாகனத்தை பயன்படுத்தியது குறித்து காடிஸ் குடியிருப்பாளர்கள் கடும் சீற்றமடைந்தனர், அத்தகைய இரண்டு வாகனங்களில் ஒன்று ஆயுதப் படைகளில் இருந்து ஓய்வுபெற்று 2017 இல் ஸ்பானிய தேசிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெயினில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக BMR ஏவிவிடப்பட்டது இதுவே முதல் முறையாகும். BMR, San Pedro மற்றும் Bazan பகுதிகளின் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களுக்கும் மற்றும் உள்ளூர் பள்ளிகளுக்கு அருகிலும் சென்றது, வீதிகளில் இருந்த தடைகளை தகர்த்து நொறுக்கியது. பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் பால்கனிகளில் நின்றவாறு BMR ஐ கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

காடிஸூக்கு ஒரு இராணுவ வாகனத்தை அனுப்புவது இந்த சக்திவாய்ந்த வேலைநிறுத்தத்திற்கு எதிரான ஒரு அவநம்பிக்கையான அச்சுறுத்தலாகும், மேலும் PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு விரிவான அம்பலப்படுத்துதலாகும். கோவிட்-19 சுகாதாரக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது முதல் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வன்முறை கொள்கைகளைச் செயல்படுத்துவது வரை பாசிச வோக்ஸ் கட்சியின் கொள்கைகளை அப்படியே தொடர்ந்து ஏற்றுக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் உள் விரோதத்தை ஏற்கனவே அது நிரூபித்துள்ளது. பொடேமோஸை தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கும் வர்க்கப் பிளவை மறுக்க முடியாத வகையில் தெளிவுபடுத்தி, அது இப்போது தொழிலாள வர்க்கத்தை இராணுவமயமாக்கப்பட்ட வன்முறை கொண்டு அச்சுறுத்துகிறது.

வேலைநிறுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து, PSOE-பொடேமோஸ் அரசாங்கம் ஸ்பெயின் முழுவதும் கலகப் பிரிவு பொலிஸை அணிதிரட்டி, மிளகுத்தூள், தடியடி மற்றும் இரப்பர் தோட்டாக்கள் கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நகரின் தொழில்துறை மாவட்டம் மற்றும் பிற முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் வழியை மறித்து தடுப்புக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் பதிலடி கொடுத்தனர்; மேலும், பொலிசார் அந்த பகுதிகளை அணுகவிடாமல் தடுக்க வாகனங்கள், தொட்டிகள் மற்றும் இரயில் தண்டவாளங்களை அவர்கள் எரித்தனர். வேலைநிறுத்தக்காரர்கள் சாலையை மறித்து கற்களை வீசியதையடுத்து, கருங்காலிகளை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முயன்ற பேருந்துகள் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

PSOE-பொடேமோஸ் அரசாங்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு பரந்தளவிலான உழைக்கும் மக்களின் ஆதரவு வெளிப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினில் ஒரு வெடிக்கும் அரசியல் சூழ்நிலை உருவாகி வருகிறது. 'தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடுகிறது!' என்பது போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காடிஸ் நகரில் உலோகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெரியளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், அண்டலூசியா பிராந்தியத்தின் மற்ற நகரங்களிலும் ஒற்றுமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அவற்றை வாரம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திங்களன்று, பெரிய காடிஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான அல்ஜெசிராஸ் நகர்ப்புறத்தில் சுமார் 4,000 தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒன்றுதிரண்டு, வேலைநிறுத்தம் செய்யும் உலோகத் தொழிலாளர்களுக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திங்களன்று அருகிலுள்ள ஹூல்வா நகரத்தில் மேலும் ஒரு ஒற்றுமைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில் காடிஸில் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில், அண்டலூசிய பிராந்திய அரசாங்கத்தின் இருக்கையான செவில் இல் உள்ள Palacio de San Telmo மாளிகை முன்பாக சுமார் 300 எதிர்ப்பாளர்கள் ஒன்றுதிரண்டனர்.

பொடேமோஸ் கட்சியின், மற்றும் Unidas Podemos தேர்தல் கூட்டணியின் ஒரு பகுதியாக ஆளும் ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCE) உறுப்பினர்கள், செவில் இல் கூடியிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பேச முயன்றபோது கேலிக்குள்ளானார்கள். ஒரு PCE பிரதிநிதி, “நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம், ஆனால் அதிகாரத்தில் இல்லை” என்று நகைப்புக்குரிய வகையில் கூறி, கட்சியை பாதுகாக்க முயன்றார், ஆனால் தொழிலாளர்கள் மேலும் கூச்சலிட்டு பதிலளித்தனர்.

ஸ்பானிய எஃகுத் தொழிலாளர்களைப் போல, பொடேமோஸ் மற்றும் PSOE க்கு எதிராக காடிஸில் வேலைநிறுத்தம் செய்பவர்களின் சர்வதேச அளவிலான சிறந்த கூட்டாளிகளும் கூட, உண்மையான ஊதிய வெட்டுக்கள், தொழில்துறை மற்றும் பொருளாதார இடம்பெயர்வு, மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றை உத்தியோகபூர்வமாக குற்றகரமாக கையாண்டதன் விளைவால் ஏற்பட்ட பாரிய மரணங்கள் ஆகியவற்றுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

காடிஸ் வேலைநிறுத்தம், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் எழுந்துள்ள வர்க்கப் போராட்டத்திற்கு மத்தியில் நடக்கிறது. இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பல்பொருள் அங்காடி தொழிலாளர்களினது வேலைநிறுத்தங்கள் உட்பட, பல வேலைநிறுத்தங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த ஸ்பெயினில் திட்டமிடப்பட்டுள்ளது. அண்டை நாடான போர்ச்சுகலில், இரயில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மற்றும் சிறைக் காவலர்கள் உட்பட, பல தொழில்கள் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வேலைநிறுத்தம் செய்தனர்.

அமெரிக்காவில், தச்சர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், செவிலியர்கள், திரைப்படத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மற்றும் விமானக் குழுத் தொழிலாளர்கள் உட்பட, பொருளாதாரத்தின் பல துறைகளில் அக்டோபர் மாதத்திலிருந்து டஜன் கணக்கான வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன.

உலகெங்கிலும், கொரோனா வைரஸ் நோய்தொற்றால் உருவான மோசமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளுக்கு எதிரான இந்த வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்கள் நிறுவனங்களுடன் மட்டும் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தும் நிலையை ஏற்படுத்தவில்லை, மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும், மற்றும் பெயரளவில் செயல்படும் “இடது” முதலாளித்துவ அரசாங்கங்களுடனும் தொடர்ந்து மோத வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஸ்பெயினில், பொடேமோஸ் கட்சி இழிவான முறையில், வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு அனுதாபப்படுவதாகவும், மேலும் அவர்களுக்கு எதிராக கவச வாகனங்களை பயன்படுத்தியதற்கு வருத்தப்படுவதாகவும் காட்டிக்கொள்ள முயற்சித்தது. அதே நேரத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு கோருகிறது. வேலைநிறுத்தக்காரர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில், பொடேமோஸ் இன் துணைப் பிரதமரும் தொழில்துறை அமைச்சருமான Yolanda Diaz, “தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் நன்மைக்காகவும், மற்றும் காடிஸின் நன்மைக்காகவும், தொழிற்சங்கங்களும், நிறுவனங்களும் முடிந்தளவிற்கு விரைவில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கோரினார்.

தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, அவை அரசியல் கட்சிகளுடன் நீண்டகால அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. தொழிலாளர் கமிஷன்கள் (CCOO), PCE மற்றும் பொடேமோஸ் போன்ற ஸ்ராலினிச இயக்கங்களுடன் இணைந்துள்ளன, அதேவேளை பொது தொழிலாளர் சங்கம் (General Workers Union-UGT) வரலாற்று ரீதியாக PSOE உடன் பிணைக்கப்பட்டுள்ளது. PSOE-பொடேமோஸ், கலகப் பிரிவு காவல்துறையாக அதே அடிப்படை நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் கருவிகளாக அவர்கள் தங்கள் பங்கை முழுமையாகச் செய்கிறார்கள்: அதாவது, தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை உடைத்து, அவர்களை மனச்சோர்வடைய வைக்க முயற்சிக்கின்றனர்.

நவம்பர் தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் அடையாள போராட்டத்தால் உலோகத் தொழிலாளர்களின் கோபம் தணியாது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொண்டதன் பின்னர், காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, CCOO உம் UGT உம் எதிர்ப்பை சீர்குலைத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து பாடுபடுகின்றன.

கடந்த வாரம், UGT மற்றும் CCOO தேசிய கூட்டமைப்புகள் வேலைநிறுத்தக்காரர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுப்பதை நிறுத்த வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டன. “இந்த மோதலை நாம் நன்றாக நிர்வகிக்க வேண்டும்,” “ஏனென்றால் முக்கிய பணியிடங்களின் உள்ளீடுகள் குறித்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நெடுஞ்சாலைகளை திறந்து விடுமாறு நாங்கள் கேட்கிறோம்” என்று அவை அறிவித்தன.

CCOO இன் பிராந்திய செயலர், பெர்னாண்டோ கிரிமால்டி கூட, வேலைநிறுத்தத்தின் போதான தொழிலாளர்களின் போர்க்குணமிக்க நடவடிக்கைகளை தொழிற்சங்கம் எதிர்ப்பதை தெளிவுபடுத்தியதுடன், “மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர்; இதை எப்படி கட்டுப்படுத்துவது என நாங்கள் பார்க்கப் போகிறோம்” என்று கூறினார். கலகப் பிரிவு பொலிசாரை நெருங்கவிடாமல் தடுக்கும் தடுப்புக்களுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் தீ வைப்பதைக் கண்டித்து, “அந்த வகை நடவடிக்கைகளுக்கு நான் சிறிதும் உடன்படவில்லை” என்று அறிவித்தார்.

வெள்ளியன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், UGT தொழில்துறையின் தலைவர் ஜோஸ் மானுவல் ரோட்ரிக்ஸ் சாசெடோ, உலோகத் தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தால் காடிஸ் குடியிருப்பாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்துவதாக மீண்டும் விமர்சித்தார். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பொதுவாக “நியாயமாக நடந்துகொண்டனர்” என்றாலும், “அங்கு இணை சேதங்கள் ஏற்பட்டுள்ளன, நாங்கள் ஏற்படுத்திய இந்த குழப்பத்திற்காக காம்போ டி ஜிப்ரால்டரின் குடிமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

காடிஸ் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், PSOE-பொடேமோஸ் அரசாங்கத்திற்கு எதிரான, மற்றும் அதனுடன் இணைந்த UGT மற்றும் CCOO தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான ஒரு அரசியல் போராட்டமாக அவர்களது வேலைநிறுத்தத்தை நடத்துவதாகும். வொல்வோ, ஜோன் டீர் மற்றும் சர்வதேச பள்ளிகளில் நடக்கும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களை தொழிலாள வர்க்கத்தின் பரந்த, சர்வதேச அளவிலான இயக்கத்துடன் இணைக்க முயற்சிப்பது போல, இங்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதே முன்னோக்கிச் செல்லும் வழியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) உருவாக்குவதற்கான அழைப்பை முன்னெடுத்துள்ளது. இத்தகைய அமைப்பால், சர்வதேச அளவில் பெரிய நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதற்கும், பொலிஸ்-அரசு அடக்குமுறைக்கான முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கும், மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பாரிய நோய்தொற்றுக்களை விளைவித்த முதலாளித்துவக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் என தொழிலாள வர்க்கத்தின் பரந்த தொழில்துறை சக்தியை ஒருங்கிணைக்க முடியும்.

Loading