மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான புதிய அரசாங்கம், 16 ஆண்டுகளாக கூட்டாட்சி சான்சிலராக இருந்த கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி அங்கேலா மேர்க்கெலுக்குப் பதிலாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உழைக்கும் மக்கள் மீதான போருக்கு அறிவித்துள்ளது.
சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் (FDP) ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'போக்குவரத்து விளக்கு' கூட்டணி புதனன்று அதன் அரசாங்க திட்டத்தை முன்வைத்தது. அதேவேளை ராபர்ட் கோச் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கின்படி கோவிட்-19 இறப்புக்கள் 100,000 ஐ தாண்டியுள்ளது. இந்த கொடூரமான நிகழ்வுப் பொருத்தம் பெரியளவில் நிகழக்கூடிய ஒன்றை குறித்துக் காட்டும் சக்தியைக் கொண்டிருந்தது.
அரசாங்கம் விஞ்ஞான ஆலோசனைகளை பின்பற்றியும், மற்றும் தடுப்பூசி, பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பூட்டுதல்கள், அனைத்து தொழிற்சாலைகளையும் மற்றும் பள்ளிகளையும் மூடுதல், தனிமைப்படுத்துதல் போன்ற அனைத்து கிடைக்கக்கூடிய வழிகளையும் பயன்படுத்தி கோவிட்-19 ஐ ஒழிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தால், பெரும்பாலான இறப்புக்கள் தடுக்கக்கூடியதாக இருந்திருக்கும்.
ஆனால் மேர்க்கெல் அரசாங்கம், ஜேர்மனியின் மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து, பெருநிறுவனங்களின் இலாபங்களுக்காக மில்லியன் கணக்கானவர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய ஒரு நனவான முடிவை எடுத்திருந்தது. வெடிக்கும் சூழ்நிலை உருவான பின்னரே அது வைரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, பின்னர் பொது சுகாதார நடவடிக்கைகளை மிக விரைவில் நீக்கியது. அத்தியாவசியமற்ற வணிகங்கள் ஒருபோதும் மூடப்படவில்லை. குழந்தைகள் மத்தியில் வைரஸ் வெடித்துப் பரவும், மற்றும் கணக்கிட முடியாத நீண்டகால சேதத்தை விளைவிக்கும் இந்த சூழலில், இன்றுவரை பள்ளிகள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மில்லியன் கணக்கானவர்கள் நோய்தொற்றுக்கு ஆளாகியும், வேலைகள், வருமானங்களை இழந்தும், மற்றும் மருத்துவமனைகளில் அசாதரண நிலைமைகளில் உயிர்களை காப்பாற்ற சேவையில் ஈடுபட்டும் வந்த அதேவேளை, பெருநிறுவன உயரடுக்கும் மற்றும் பெரும் பணக்காரர்களும் நோய்தொற்று காலத்தின்போது பேராவலுடன் இலாபமீட்டிக் கொண்டிருந்தனர். தொற்றுநோயின் முதல் ஆண்டில் 100 பணக்கார ஜேர்மனியர்களின் செல்வம் மட்டும் 606 பில்லியன் யூரோவில் இருந்து 722 பில்லியன் யூரோவாக உயர்ந்தது.
அதன் விளைவுதான் தற்போதைய பேரழிவாகும். புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வந்த நிலையில், புதன்கிழமை அது உச்சபட்சமாக 76,000 ஐ எட்டியிருந்தது. மனம் சோர்ந்து செய்வதறியாதிருந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும், 350 பேர் கோவிட்-19 ஆல் இறக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் வரம்பு மீறப்பட்டுவிட்ட நிலையில், அவை யாருக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்ற சோதனைக்கு ஆளாகி வருகின்றன. நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையானால், இறப்புக்களின் எண்ணிக்கை வசந்த காலத்தில் 200,000 ஆக இரட்டிப்பாகும்.
ஆனால் புதிய அரசாங்கம் பழைய அரசாங்கத்தை விட இன்னும் மனிதாபிமானமற்ற வகையிலும், குற்றகரமாகவும் செயல்பட்டு வருகின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு, சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவை, பூட்டுதல்கள் மற்றும் அதையொத்த நடவடிக்கைகளுக்கு சட்ட அடிப்படையை வழங்கும் கோவிட்-19 அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையைப் பயன்படுத்தின.
புதன்கிழமையன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஷோல்ஸின் தோற்றம், ரோம் நகரம் தீப்பற்றி எரிகையில் இழிபுகழ் பெற்ற பேரரசர் நீரோ ஃபிடில் வாசித்ததை நினைவூட்டுவதாக இருந்தது. ஷோல்ஸூம் அவரது கூட்டணி பங்காளர்களும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டாடினர், ஆனால் தடுப்பூசிகளுக்கான பொதுவான முறையீடு மற்றும் அதிபர் மாளிகையில் ஒரு நெருக்கடிக் குழுவை அமைப்பது தவிர, நோய்தொற்றுக்கு எதிராக வேறெந்த நடவடிக்கைக்கும் அவர்கள் முன்மொழியவில்லை.
மேலும் பிரதான ஊடகங்கள் கூட பாரிய மரணங்கள் குறித்த அரசாங்கத்தின் அலட்சியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளன. “தற்போதைய முடிவுகள், ஒரு வெள்ளப் பேரழிவின்போது அதிக நீச்சல் பயிற்சி பெற்ற பயிற்றுனர்களை நியமிப்பதற்கும், ஒரு ஜோடி கைப்பட்டைகள் மற்றும் குளியல் வாத்துக்களை விநியோகிப்பதற்கும் அறிவிப்பது போல் உள்ளது” என்று Suddeutsche Zeitung கருத்து தெரிவித்தது.
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் அவமதிக்கும் போக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் வியாபித்துள்ளது, அதை நாம் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) பகுப்பாய்வு செய்தோம். ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கேள்வியும், இலாபத்தை மேம்படுத்துதல், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை நசுக்குதல் என்ற கோணத்தில் இருந்து அணுகப்படுகிறது.
இந்த வேலைத்திட்டம் ஒரு ஜேர்மன் பெரும் சக்தி கொள்கையை குறிவைக்கிறது, அணுசக்தி தடுப்பை ஆதரிக்கிறது மற்றும் சீனா, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போர் முன்னணியில் இணைகிறது. இது ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் இரகசிய சேவைகளுக்கு விரைவான மறுசீரமைப்பை வழங்குகிறது. இது அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களுக்காக கடன் வாங்குவதைத் தடுக்கும் கடன் தடையைத் தக்க வைத்துக் கொள்கிறது, மேலும் பணக்காரர்களுக்கான வரி அதிகரிப்பை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இது கெர்ஹார்ட் ஷ்ரோடரின் சிவப்பு-பச்சை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட இழிவான திட்டநிரல் 2010 இல் இருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது, மேலும் ஊதியங்கள், சமூக உரிமைகள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான அதன் தாக்குதல்களை மேலும் அதிகரித்து வருகிறது.
2005 இல் ஷ்ரோடர் இராஜினாமா செய்த பின்னர், சமூக ஜனநாயகக் கட்சி (SPD), கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் / கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் இளைய பங்காளியாக இந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்றியது. ஷோல்ஸ் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மேர்க்கெலின் துணை சான்சிலராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தார். இப்போது பசுமைக் கட்சியினரும் கூட்டாட்சி அரசாங்கத்திற்குத் திரும்புகின்றனர்.
1968 மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்களால் 1980 களின் முற்பகுதியில் பசுமைக் கட்சி நிறுவப்பட்டது. அவர்கள் முன்னாள் மாவோயிஸ்டுகள், அராஜகவாதிகள், இளம் சோசலிஸ்டுகள், அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மற்றும் அமைதி ஆர்வலர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பதாகையின் கீழ் ஒன்றுதிரட்டினர். அவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்னவென்றால், பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவ தத்துவங்களின் அடிப்படையில் மார்க்சிசத்தையும், தொழிலாள வர்க்கத்தையும் அவர்கள் நிராகரித்ததாகும்.
1998 கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, பசுமைவாதிகள் தங்களை அமைதிவாதிகளாகவும், “இடதுசாரிகளாகவும்” காட்டிக் கொண்டனர். ஆனால் அவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தில் இருந்தபோது உடனடியாக தங்களின் உண்மையான முகத்தை காட்டினர். முன்னாள் குடியேற்றக்காரரும் தெருப் போராளியுமான ஜோஷ்கா பிஷ்ஷர், வெளியுறவு அமைச்சராக, யூகோஸ்லாவியாவில் போருக்குப் பின்னைய ஜேர்மன் இராணுவத்தின் முதல் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டிற்கு ஏற்பாடு செய்தார். 2010 திட்டநிரலின் கீழ் செயல்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் மீதான சமூகத் தாக்குதல்களுக்கு பசுமைவாதிகளின் தடையற்ற ஆதரவு கிடைத்தது.
இப்போது பசுமைவாதிகள் ஆக்கிரமிப்பு போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஆக்கிரோஷமான கட்சியாக கூட்டாட்சி அரசாங்கத்திற்கு திரும்புகின்றனர். நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களுக்கு ஏற்றவகையில் அவர்கள் தங்களின் அடையாள முத்திரையான காலநிலை பாதுகாப்பையும் கீழ்ப்படுத்துகிறார்கள். கூர்ந்து கவனித்தால், இது பொருளாதாரத்திற்கான மாபெரும் மானியம் மற்றும் செறிவூட்டல் திட்டமாக மாறிவிடும், மற்றும் அவசரமாக தேவைப்படும் காலநிலை பாதுகாப்புத் திட்டங்களையும் கீழறுக்கும். தாராளமய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் செல்வந்தர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கட்சி, வளர்ந்து வரும் வர்க்கப் பதட்டங்களின் தாக்கத்தின் கீழ் தீவிரமாக வலது பக்கம் மாறி, இப்போது FDP இன் நிதி மூலதனத்தின் வெளிப்படையான பிரதிநிதிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
இது வெளிப்படையான வர்க்க மோதலை தவிர்க்கமுடியாததாக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வெகுஜனங்களின் மனநிலை உத்தியோகபூர்வ அரசியலின் இடது பக்கமாக உள்ளது. கொலைகார கோவிட்-19 கொள்கை மீதான கோபமும், ஊதிய வெட்டுக்கள், அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் ஆட்குறைப்பு ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது, மேலும் பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 6 சதவீதமாக இருப்பதால் அது இன்னும் தொடர்ந்து உயரும். குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்களும் மற்றும் போராட்டங்களும் ஏற்கனவே இரயில்வே துறை, மருத்துவமனைகள், பொதுத்துறை மற்றும் பல எஃகு நிறுவனங்களில் நடந்துள்ளன.
இந்த மனநிலைகள், உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமைப்பில் இனி எந்த வெளிப்பாட்டையும் காணப்போவதில்லை. தொழிலாளர்களின் நலன்களை சிறிய அளவிலாவது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு ஸ்தாபக கட்சியும் இல்லை. கூட்டாட்சி பாராளுமன்றத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆகிய மூன்று வலதுசாரி எதிர்க்கட்சிகள் உள்ளன, ஆனால் இடது கட்சியின் தொடரும் வதந்தி தவிர, போக்குவரத்து விளக்குக் கூட்டணியின் இடதுபுறத்தில் பெயரளவில் கூட எந்தக் கட்சியும் இல்லை. இடது கட்சி, கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது. இது SPD மற்றும் பசுமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து நான்கு கூட்டாட்சி மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.
இந்த சூழ்நிலை ஜேர்மனியில் மட்டும் இல்லை. உலகெங்கிலும், பெயரளவிலான இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தடுப்புக்களுக்கு மறுபுறம் நின்று தங்கள் முதுகில் குத்துவதை தொழிலாளர்கள் அறிந்து கொண்டுள்ளனர். கிரேக்கத்தில், போலி-இடது சிரிசா கட்சி ட்ரோய்காவின் (முக்கூட்டு - ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்) கடுமையான சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தியது. ஸ்பெயினில், சோசலிஸ்ட் கட்சியும் (PSOE) மற்றும் பொடேமோஸ் கட்சியும் கொலைகார கோவிட்-19 கொள்கையைப் பின்பற்றுவதுடன், காடிஸில் உலோகத் தொழிலாளர்களை கலகப் பிரிவு பொலிசாரைக் கொண்டு ஒடுக்குகின்றன. பிரிட்டனில், கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சி வலதுபுறத்தில் இருந்து டோரிக்களை விஞ்ச முயற்சிக்கிறது. அமெரிக்காவில், போலி-இடது 'அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள்' (DSA) ஜனாதிபதி பைடெனை ஆதரிக்கிறது. அவர், பாசிசத்தை நோக்கி நகரும் குடியரசுக் கட்சியினரை தழுவுகிறார்.
இந்த குற்றவியல் கொள்கையின் விளைவாக, ஐரோப்பா தொற்றுநோயின் மையமாக மாறியுள்ளது. செவ்வாயன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), தற்போதைய போக்குகள் தொடருமானால், அடுத்த ஆண்டு வசந்த காலத்திற்குள் ஐரோப்பாவில் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை தற்போதைய 1.5 மில்லியனில் இருந்து 2.2 மில்லியனாக உயரும் என்று, அதாவது கூடுதலாக 700,000 இறப்புக்கள் நிகழும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டத்தின் வெடிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால் இவற்றிற்கு தயாரிப்பு செய்யப்பட வேண்டும் என்பதுடன், அதற்கு ஒரு அரசியல் முன்னோக்கும் தேவைப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei-SGP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் தலைமையாக தங்களை கட்டமைக்க வேண்டும்.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தொற்றுநோயிலிருந்து வெளிவர முடியும் என்று வலியுறுத்தும் SGP மட்டுமே பிரதான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டை எதிர்க்கும் ஒரே கட்சியாக உள்ளது.
ஆளும் உயரடுக்கு ஒரு சோசலிச முன்னோக்கின் சக்தியை அறிந்து அஞ்சுகிறது. அதனால்தான் ஜேர்மனியின் இரகசிய சேவை Verfassungsschutz, SGP ஐ “இடதுசாரி தீவிரவாத” அமைப்பாகக் கண்டித்து, கண்காணிப்பதன் மூலம் அதனை மௌனமாக்க முயல்கிறது, மேலும் இதனால்தான் பேர்லின் நிர்வாக நீதிமன்றம் கருத்துச் சுதந்திரம் மீதான இந்தத் தாக்குதலுக்கு அதன் ஒப்புதல் முத்திரையை வழங்கியுள்ளது என்பதையும் இது விளக்குகிறது.
மே 1 அன்று, ICFI, “முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களின் கொலைகார கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலைத் தொடங்கவும்” மற்றும் “ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிராக வெவ்வேறு பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நாடுகளில் நடந்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க” ஒரு வழியை உருவாக்கவும் அதன் ஸ்தாபகப் பிரகடனம் அறிவித்தபடி, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) உருவாக்க அழைப்புவிடுத்தது.
ICFI, தொற்றுநோய்க்கான அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், மற்றும் ஊடகங்களின் பேரழிவுகரமான பதிலை ஆராய்வதற்கும், மேலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்ற கொள்கைகளின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார சக்திகள் மற்றும் நலன்களை அம்பலப்படுத்துவதற்கும் என கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
IWA-RFC மற்றும் உலகளாவிய தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவளிக்குமாறும், ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சிகளில் இணையுமாறும் உலக சோசலிச வலைத் தள வாசர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.
மேலும் படிக்க
- நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையில், ட்ரொட்ஸ்கிசத் தலைவர் ஜேர்மன் அரசு நாஜிகளின் வடிவத்தில் சோசலிச எதிர்ப்புச் சட்டங்களுக்கு புத்துயிரளிப்பதை குற்றஞ்சாட்டினார்
- ஐரோப்பா முழுவதும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பரவுவதால் ஆஸ்திரியா மீண்டும் பகுதியளவு பூட்டுதலை விதிக்கிறது
- ஐரோப்பாவில் பெரும் தொற்றுநோய்க்கான பாசிசக் கொள்கை: மக்கள் “தடுப்பூசி போடுவார்கள், மீட்கப்படுவார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்” என்கிறார் ஜேர்மன் சுகாதார அமைச்சர்