மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மற்ற வகைகளை விட அதிவேகமாக பரவக்கூடியதும் மற்றும் தடுப்பூசிகளுக்கே கட்டுப்படாமல் மிகவும் கொடியதாக இருக்கக் கூடியதுமான ஓமிக்ரோன் (Omicron) எனப் பெயரிடப்பட்ட கோவிட்-19 இன் புதிய வகை வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
கோவிட்-19 இன் இந்த புதிய வகை உருவாகி இருப்பது, அமெரிக்காவும் ஐரோப்பாவும் முன்மாதிரியாக இருக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்திய கொள்கையின் நாசகரமான வெளிப்பாடாகும், இவை இந்த நோய் பரவலைத் தடுக்க அவசியமான பொது முடக்கங்கள் மற்றும் பிற முக்கிய பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கின்றன.
கோவிட்-19 ஐ அகற்றாமல் மற்றும் முற்றிலும் ஒழிக்காவிட்டால், எப்போதும் வேண்டுமானாலும் புதிய மற்றும் ஆபத்தான புதிய வகைகள் பரிணமிக்கலாம் என்று உலக சோசலிச வலைத் தளமும் முன்னணி விஞ்ஞானிகளும் பலமுறை எச்சரித்துள்ளனர்.
இந்தாண்டு ஆகஸ்ட் 20 இல், உலக சோசலிச வலைத் தளம்எழுதியது, 'இந்த வைரஸ் பரவி வரும் வரையில், அது மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அதிகளவில் பரவக்கூடிய, ஆபத்தான, தடுப்பூசிக்கே கட்டுப்படாத, புதிய வகைகளாக தொடர்ந்து உருமாறக்கூடும். உலகளவில் அது ஒழிக்கப்படாவிட்டால், கோவிட்-19 இன் நெருப்புத் தழல்கள் தொடர்ந்து எரிந்து, இந்த வைரஸ் புதிதாக பற்றி எரிவதற்கான நிலைமைகளை உருவாக்கும்,' என்று குறிப்பிட்டது.
இந்த எச்சரிக்கைகள் பெரும் கேடான விளைவுகளோடு நிரூபணமாகி உள்ளன.
இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் பலத்துடன் உருமாறி இருக்கும் இந்த ஓமிக்ரோன் வகை, முன்பில்லாத வேகத்தில் மற்ற வகைகளைப் பிரதியீடு செய்து தென்னாபிரிக்கா எங்கிலும் பரவலாக பரவி உள்ளது.
வெள்ளிக்கிழமை நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஐரோப்பிய மையங்கள் அறிவிக்கையில், ஐரோப்பா முழுவதும் 'டெல்டா வகை மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ஒரு சூழ்நிலையில்' '#OmicronVariant வந்திருப்பதும் கூடுதல் வேகத்துடன் பரவக்கூடிய சாத்தியக்கூறின் தாக்கமும் மிகவும் அதிகமாக இருக்கலாம்,' என்று எச்சரித்தது. 'ஐரோப்பிய ஒன்றியம்/ ஐரோப்பிய பொருளாதார மண்டலத்திற்கான ஒட்டுமொத்த அபாய மட்டம்... அதிகம் என்பதிலிருந்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது,” என்று கூறி அது நிறைவு செய்தது.
இந்த புதிய வகை 'மீண்டும் நோய்தொற்று ஏற்படுவதற்கான அதிக அபாயத்தை' முன்னிறுத்துவதாகவும், 'கிட்டத்தட்ட தென்னாபிரிக்காவின் எல்லா மாகாணங்களிலும்' அது அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது. இந்த வகை வைரஸ் 'நோய்த்தொற்று ஏற்படுத்துவதில் முந்தைய அதிகரிப்புகளை விட வேகமான விகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இது வளரக்கூடிய அனுகூலத்தைக் கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.”
அண்மித்து இரண்டு தசாப்தங்களாக பெருந்தொற்றைக் குறித்து ஆய்வு செய்து வரும் சிக்கலான அமைப்புமுறை இயற்பியலாளர் டாக்டர் யானீர் பர்-யாம், “புதிய வகை = புதிய பெருந்தொற்று' என்று எழுதினார். “இன்று நமக்குத் தெரிய வரும் நோய்தொற்றுக்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னரோ அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னரோ ஏற்பட்டவை. இன்று ஏற்படும் நோய்தொற்றுக்கள் ஒரு சில நாட்களுக்குப் பின்னரோ அல்லது இப்போதிருந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ மட்டுமே தெரிய வரும்.” நிஜமான வைரஸ் திரிபை விட இந்த புதிய வகை ஆறு மடங்கு அதிகமாக நோய்தொற்று ஏற்படுத்தக்கூடியது என்பதோடு எட்டு மடங்கு அதிகமாக கொடியது என்றவர் கணக்கிட்டார்.
இந்த நோய் எவ்வளவு வேகமாக பரவி வருகிறது என்பதை வைத்துப் பார்த்தால், அது இப்போதே உலகெங்கிலுமான நாடுகளில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். “பெல்ஜியத்தில் சமூக பரவல் இருக்கலாம்,” என்று கூறிய நுண்கிருமியியல் நிபுணர் அங்கேலா ராஸ்முசென், “மற்ற இடங்களிலும் சமூக பரவல் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது,” என்றார்.
இந்த ஓமிக்ரோன் வகையின் எழுச்சி, இந்த குளிர்காலத்தில் கோவிட்-19 இன் டெல்டா வகை பேரழிவுகரமாக எழுச்சி பெற்றிருப்பதன் பின்புலத்தில் வருகிறது. உலகெங்கிலும், நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் ஒரு மாதத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜேர்மனியில் மாறிக் கொண்டே இருக்கும் ஏழு நாள் சராசரி நோயாளிகளின் எண்ணிக்கை 55,000 ஐ எட்டியுள்ளது, இது முன்னெப்போதும் பதிவு செய்யப்படாத அளவுக்கு அதிகபட்ச மட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில், ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், மிச்சிகன், மின்னிசொடா மற்றும் பிற மாநிலங்களில் தடுப்பூசிகள் இருந்தாலும் கூட, முன்பில்லாதளவில் புதிய நோயாளிகளின் அதிகபட்ச மட்டங்களை அவை பதிவு செய்து வருகின்றன.
திங்கட்கிழமை பேசிய பைடென், தென் ஆபிரிக்காவுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தவிர, இந்த புதிய வகை வைரஸிற்கு விடையிறுப்பாக வேறெந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிவித்தார். “விஞ்ஞானம் மற்றும் எனது மருத்துவக் குழு என்ன ஆலோசனை வழங்குகிறார்களோ நாங்கள் அதன் வழியே தொடர்வோம்,” என்றவர் அறிவித்தார்.
இது ஒரு பொய். பைடென் விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி நடக்கவில்லை —அவரின் கொள்கைகள் பெருந்தொற்றின் மீளெழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் எச்சரித்துள்ளனர்— மாறாக, அவர் வோல் ஸ்ட்ரீட்டின் இலாப நலன்களின் ஆலோசனைப்படி நடக்கிறார்.
அவருக்கு முன்பிருந்த ட்ரம்பின் உள்நாட்டுக் கொள்கையைப் போலவே, பள்ளிகளை மீண்டும் திறப்பதே பைடெனின் மிக முக்கிய உள்நாட்டு கொள்கையாக உள்ளது, மிச்சிகனின் கோவிட் ஹாட்ஸ்பாட் புள்ளிவிபரங்கள்படி இதுவே வெடிப்புக்களுக்கான மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டியதில்லை என்று இந்த கோடையில் வலியுறுத்திய பைடென் நிர்வாகம், குழந்தைகளுக்கு கோவிட்-19 ஏற்படாது மற்றும் அவர்கள் மூலமாக பரவாது என்ற பொய்யை ஊக்குவித்தது.
ட்ரம்ப் தலைமையிலான பாசிச வலது, சர்வதேச அளவில் அவரின் சமதரப்புடன் சேர்ந்து, பொது சுகாதார நடவடிக்கைகளைக் கைவிடக் கோரியதுடன், சூழ்ச்சித் தத்துவங்களை ஊக்குவித்தது மற்றும் இந்த பெருந்தொற்றைத் தடுக்க போராடுவதில் ஒரு முக்கிய அம்சமாக உள்ள தடுப்பூசி செலுத்துவதை அவமதிக்க முனைந்தது.
பைடெனுக்கும் பிற மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களுக்கும் அதிவலதுடன் என்ன கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் செல்வவளத்தில் கை வைக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்ற மிகவும் அடிப்படையான கேள்வியில் உடன்படுகின்றனர். இந்த பெருந்தொற்றைத் தடுப்பூசி மூலமாக மட்டுமே நிறுத்தி விட முடியும் என்ற அவர்களின் விஞ்ஞானபூர்வமற்ற வாதம் ஓமிக்ரோன் வகையின் வெளிப்பாட்டால் அம்பலமாகி உள்ளது.
அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலக் குழுவுக்காக பேசும் முக்கிய அமெரிக்க பத்திரிகைகள், ஓமிக்ரோன் வகையின் வெளிப்பாட்டுக்குப் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கொண்டு விடையிறுத்துள்ளன. “அமெரிக்கர்களும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் எப்போதும் உருமாறிக் கொண்டிருக்கும் ஒரு வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று எழுதிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “மிகப் பெரிய அபாயமே கூடுதல் அரசாங்க பொது முடக்கங்கள் தான்,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.
“அமெரிக்கா —பொது முடக்கங்களுக்குச் செல்லாமல்— இந்த ஓமிக்ரோன் வகையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் மீகன் மெக்ஆர்த் இன் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது.
'மேற்கொண்டு அடைப்புகள் இருந்தால்' 'உணவுமுறை ஒழுங்கின்மைகள் மற்றும் அதிகளவில் ஓபியோய்ட் பயன்பாடு முதல் சிறு-வணிகங்களின் தோல்விகள் மற்றும் பள்ளிகள் பின்தங்குவது வரை” “அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” “...முடிந்தவரை அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்காத கோவிட்-தடுப்பு நடைமுறைகளை ஏற்கும் விதத்தில், நம் கொள்கைகளை தேர்ந்தெர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று மெக்ஆர்த் அறிவித்தார்.
இவை அனைத்தும் சமூக வளங்களை அணிதிரட்டுவதன் மூலம் தடுக்கக் கூடிய இத்தகைய விளைவுகளை, மில்லியன் கணக்கான மக்களின் மரணங்களுடன் எப்படி ஒப்பிடுவது? உண்மையில் மெக்ஆர்டி, போஸ்ட் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும், பங்குச் சந்தைகள் முடிவின்றி அதிகரிப்பதை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்பதையே அர்த்தப்படுத்துகின்றனர்.
வாஷிங்டன் போஸ்ட், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் பிற ஊடகங்களும் கோவிட்-19 அதுவாகவே நீங்கிவிடும் என்றோ அல்லது அதுவொரு சாதாரண சளிக்காய்ச்சலாக மாறி வருகிறது என்றோ காரசாரமாக பேசலாம், ஆனால் இது நிஜ வாழ்க்கை, இந்த நோய் அவர்களின் பொய்களைக் கருத்தில் கொள்ளவதில்லை.
தொழிலாளர்கள் தங்கள் விடையிறுப்பை ஆளும் வர்க்கத்தின் சுய-சேவைக்குரிய இந்த ஏமாற்றும் பொய்கள் மீது வைக்கக் கூடாது, மாறாக இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானபூர்வ யதார்த்தத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்து, அகற்றும் மற்றும் முற்றிலுமாக ஒழிக்கும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான முக்கிய அவசர நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோர வேண்டும். இதற்கு பின்வன செய்ய வேண்டியுள்ளது:
- நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை அத்தியாவசியமற்ற அனைத்து உற்பத்தியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எல்லா தொழிலாளர்களுக்கும் தொலை தூரத்தில் இருந்து வேலை செய்தாலும் 100 சதவீத சம்பளம் வழங்கப்பட வேண்டும், அல்லது தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வது சாத்தியமில்லை இல்லாத போதும், அவர்கள் இழக்கும் வருமானம் அவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
- சுய-தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லா வியாபார ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கும் இன்றியமையா உற்பத்தியை நிறுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு மொத்தமும் முழுமையாக நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும்.
- நேரடி வகுப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, தொலைதூர கல்விமுறையைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் இளம் மாணவ-மாணவியரும் அவருக்கென சொந்த நவீன மடிக்கணினி மற்றும் உயர்வேக இணைய சேவையைப் பெறுவதையும், அத்துடன் பாதுகாப்பான, இடவசதியுடன் வீட்டில் வசதியாக படிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்த பில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
- பொது சுகாதாரத் துறை பாரியளவில் விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் பத்தாயிரக் கணக்கான பொது சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்நோயால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், அல்லது நோய்தொற்று ஏற்படக்கூடியவர்களும் உடனடியாகவும் உரிய நேரத்திலும் பொது சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை அணுகும் வசதி இருக்க வேண்டும், இவர்கள் அவர்களின் அறிகுறிகளைக் கண்காணித்து மற்றவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக அவர்களைத் தனிமைப்படுத்த உதவ முடியும்.
- ஓர் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை உருவாக்க ட்ரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கும் தீர்மானத்துடன், தடுப்பூசிகளின் வினியோகங்களை விஞ்ஞானிகளும் பொது சுகாதார வல்லுனர்களும் நிர்வகிக்க வேண்டும்.
இந்த அவசர கால திட்டத்திற்கான ஆதாரவளங்கள் உள்ளன. இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க பில்லியனர்கள் 60 சதவீதம் கூடுதலாக செல்வசெழிப்பாகி உள்ளனர், பெடரல் ரிசர்வின் பாரியளவிலான பண பட்டுவாடாக்களால் அவர்களின் சொத்துக்கள் அதிகரித்தன. 2020 இன் தொடக்கத்தில் 30 பில்லியன் டாலராக இருந்த எலோன் மஸ்க்கின் செல்வவளம் மட்டுமே இப்போது 300 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கொள்கை மலையென பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்று முதன்முதலில் வெளிப்பட்டதில் இருந்து இப்போது வரை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆளும் வர்க்கம் அச்சுறுத்தலின் யதார்த்தத்தையும் மற்றும் தேவைப்படும் நடவடிக்கைகளையும் மறுத்து அதன் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உள்ளது.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர் விசாரணையை முன்னெடுத்துள்ளன. என்ன நடந்துள்ளது, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு புரிதலை அபிவிருத்தி செய்வதன் ஓர் இன்றியமையா பாகமாக, கடந்த இரண்டாண்டுகளில் அரசாங்கங்களாலும் ஊடகங்களாலும் ஊக்குவிக்கப்படும் அனைத்து பொய்களையும் இந்த விசாரணை ஆய்வு செய்து மறுத்தளிக்கும். உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் இருந்து சாட்சியங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு வேலையிடத்திலும் அண்டைப் பகுதிகளிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன சக்தியாக அணிதிரட்டுவது மற்றும் ஒழுங்கமைப்பதுடன் இந்த விசாரணை இணைக்கப்பட வேண்டும். உலகளவில் அகற்றும் மற்றும் முற்றிலுமாக ஒழிக்கும் ஒரு மூலோபாயத்தைக் கோருவதற்கான ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கம் இல்லாமல் ஒரு கொள்கை மாற்றம் ஏற்படாது.
தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் மோதுவதற்கான அவசியத்தை எழுப்புகிறது. பெருநிறுவன மற்றும் நிதியத் தன்னலக் குழுக்களின் கொள்கை ஒரு பேரழிவை உண்டாக்கி உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்காக போராட வேண்டும்.